Feb 23, 2008

அரட்டை மடங்களும், சில அதிர்ச்சி தகவல்களும் -ஜெஸிலா!



செய்வதையும்செய்து விட்டு இப்படி எழுத என்ன அருகதை இருக்கிறது என்பவர்களுக்கு முதலிலேயே ஒரு விசயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். இதைச் சொல்லும் தார்மீக உரிமை கூட எனக்குக் கிடையாது என்பதை உணர்ந்த பிறகே இதனை எழுதுகிறேன். ஆனால், நடந்த உண்மைகளுக்கு சாட்சியாக இருக்க நேர்ந்ததால் அதனை வெளிப்படுத்தவே இதனை இங்கே பதிவாக்குகிறேன்.

அரட்டை அரங்கத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். எனக்கும் அப்படித்தான். தொலைக்காட்சியில் அவரவர் பிரச்சனையைப் பேசுவதும் அதற்கு உதவி பெறுவதுமாக இருக்கும் அரட்டை அரங்கத்தைக் கண்ணீர் மல்கப் பார்த்திருக்கிறேன். பேச்சுத்திறனை வியந்திருக்கிறேன். 'வாய் பார்க்காதே' என்று அதட்டும் அம்மாவும் கூட என்னைப் பார்க்க அனுமதித்ததாலோ என்னவோ அந்த நிகழ்ச்சி பிடித்திருந்தது. ஆனால் சிலர் அதை வெறும் நடிப்பு என்று கிண்டல் செய்தபோது கொஞ்சம் யோசித்தாலும் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனுஷ்ய புத்திரனின் 'அரட்டையும் அரட்டலும்' கட்டுரையை வாசித்த போது அந்த நிகழ்ச்சியை பார்க்கும் கண்ணோட்டமே மாறிவிட்டிருந்தது. அதுவும் அவர் அந்தக் கட்டுரையில் எப்படி எல்லோரும் ஒரே மாதிரியான குரலில், பேசும்முறையில், முகபாவத்தில், உடல் அசைவில் பேச முடிகிறது. பல ஒத்திகை பார்த்து பிரச்சனையை கண்ணீருடன் எப்படி சொல்கிறார்கள் என்று எழுப்பிய கேள்வி சிந்திக்கத் தூண்டியது. அதன் பிறகு அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அதுவே ஒலித்துக் கொண்டும் இருந்தது.

துபாயில் அரட்டை அரங்கம் என்று அறிவிப்பைப் பார்த்தேன். ஆனால் கலந்துக் கொள்ள ஆவல் பெரிதாக வரவில்லை. பல நகைச்சுவைப் பட்டிமன்றங்களில் பேச்சுக்காக நகைச்சுவைக்காக எத்தனையோ தலைப்பை எடுத்துப் பேசியிருக்கிறேன். அது வெறும் பேச்சாகத்தான் இருக்குமே தவிர என் மனதின் கருத்தாக வாதமாக அமையாது. என் நோக்கமெல்லாம் பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதாகவும் என்னுடைய பொழுதுபோக்காகவும் மட்டுமே அமையும். அதனாலேயே இந்த 'சீரியஸ்' மற்றும் உருக்கமான அரட்டை விளையாட்டுக்குப் போகவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களே உங்களைப் போன்றவர்கள் நிகழ்ச்சிக்குத் தேவை என்று வீட்டில் சொல்லிவிட கலந்து கொள்ள நேர்ந்தது.

எந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டாலும் அதில் அக்கறை செலுத்தாத வீட்டினருக்கும் கூட இம்முறை நான் ஒவ்வொரு சுற்றில் தகுதி பெறும்போதும் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அவர்கள் 'இந்தச் சுற்றில் தேர்வாகிவிட்டாயா?' என்று கேட்கும் போதெல்லாம் ஏதோ புது பொறுப்பு வந்துவிட்டதாக பயம் மேலோங்கியது. கொடுக்கப்பட்ட தலைப்போ 'அமீரக வாழ்வில் யாருடைய பிரிவு அதிக வேதனை தருகிறது
1. குடும்பம்
2. காதலி
3. நண்பர்கள்
4. தாய்மண்
5. என்னத்த பிரிவு? இங்கு நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்'.

தலைப்பு வந்தவுடன் என்னை நன்றாகத் தெரிந்தவர்கள் அத்தனை பேரும் நான் 'நிம்மதியாக இருக்கிறோம்' என்று தான் பேசுவேன் என்று சரியாகச் சொல்லிவிட்டார்கள். நானும் எல்லாச் சுற்றிலும் நிம்மதியைப் பற்றிப் பேசியே தகுதியும் பெற்றேன். இறுதிச் சுற்றின் முடிவுக்கு எதிர்பார்த்திருந்த போது அழைப்பு வந்தது 'தேர்வாகிவிட்டீர்கள் ஆனால் எங்களுக்காக நீங்கள் வேறு தலைப்பில் பேச வேண்டும். உங்கள் பேச்சுத்திறனை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறோம்' என்று. எனக்குப் பேசக் கொடுத்த தலைப்பு 'தாய்மண் பற்றிய பிரிவு'. விரும்பிப் பேசுவது வேறு, அலங்காரப் பேச்சு வேறு - இதற்கு உடன்பட வேண்டாமென்று தோன்றினாலும் வீட்டில் உள்ளவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக ஒப்புக் கொண்டேன். யதார்த்தமில்லாது சோகம் கொட்டி நடிப்பது எனக்கு கடினமாகப்பட்டது.

ஆனால் 'முடியும்' என்று என் எண்ணத்தையே அதற்கேற்ப மாற்றிக் கொண்டு நாடகத்திற்கு தயாரானேன் அவர்களும் ஒரு சில விவரங்களையும் தந்து 'தயார்படுத்தினார்கள்'. என்னுடன் பேசியவர்களில் ஒரு பெண் அவர்களுக்கு 'brain tumor' இருந்த போது தன் குடும்பத்தினர் எப்படி ஒத்துழைத்தார்கள் என்று பேசி இதைவிட இந்த இடத்தில் இன்னும் உருக்கமாக்குவது எப்படி என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் ஒரு குழந்தையின் மரணத்தை பற்றி ஒத்திகையில் பேசி முடித்தவுடன் தேர்வுக்குழுவினரோ 'அந்த இடத்தில் இன்னும் உருக்கமாக இது போல் பேசுங்கள்' என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்படியாக ஒவ்வொருவருக்கும் எப்படி பேசுவதென்பது பற்றி குறிப்புகள் வழங்கப்பட்டபோதுதான். அரட்டை அரங்கம் என்பது 'நாடக அரங்கம்'தான் என்று தெள்ளத்தெளிவானது. இதனால்தான் எல்லோர் குரலும் ஒரே விதமாக ஒலிப்பதும் புரிந்தது.

நிகழ்ச்சி அரங்கேறியது சில வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு வேலை தினமாதலால் பார்க்கவுமில்லை அது குறித்து வீட்டாருக்கு நினைவுப்படுத்தவும் மறந்திருந்தேன். ஆனால், நான் பேசி முடிந்ததும் முகத்திற்கு வட்டம் போட்டு 'அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்' என்ற பாடலையும் ஒலிக்கச் செய்தார்களாம். ஒளிபரப்பிய நொடியிலிருந்து ஊரிலிருந்து சுற்றமும் நட்பும் அழைத்துப் பாராட்டு மழை பொழிந்தார்கள். என் வாப்பா என்னிடம் சரியாக பேசக் கூட முடியவில்லை காரணம் என் பேச்சைக் கண்டு கண் கலங்கி தொண்டையும் அடைத்துவிட்டிருந்தது. என் நடிப்புக்கு இவ்வளவு சக்தியா என்று நினைத்துக் கொண்டேன். எனது மாமியார் அழைத்து 'நீங்க பேசுனது சந்தோஷமா இருந்துச்சு ஆனா நீங்க பேசின விசயம் வேதனையா இருந்துச்சு. அங்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னா இங்கு வந்திடுங்க' என்று அப்பாவித்தனமாகச் சொன்னது மனதைச் சங்கடப்படுத்தியது. இதையெல்லாம் விட என் மாமா மகனுக்கு நிச்சயித்த பெண் இவனுக்கு துபாய்க்கு தொலைபேசி 'துபாய் மாப்பிள்ளைன்னு சொன்னதும் கல்யாணமாகி நானும் அங்க வரலாம்னு நினைச்சிருந்தேன். உங்க மச்சி பேசுனதப் பார்த்து அந்த ஆசையே போயிடுச்சு. உங்களுக்கெல்லாம் நம்ம நாட்ட பிரிஞ்ச ஏக்கம் இவ்வளவு இருக்குன்னா அங்க இருக்க வேணாம் வந்திடுங்க' என்று சொன்னார்களாம். அதை அவன் என்னிடம் சொல்லும் போது இந்த வருடத்தின் மிகப் பெரிய நகைச்சுவை என்றுதான் சிரிக்க முடிந்தது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுவதை அப்படியே நம்பி விடும் அளவுக்கு இதைக் கேட்கிறவர்கள் முட்டாள்களா, அல்லது அவர்களை முட்டாளாக்க முடிவு செய்து இப்படி வேஷம் போட்ட நாங்கள் முட்டாள்களா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இதைப் போல் எத்தனை பேர் நான் இப்படிப் பேசியதை உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பி 'உச்சு' கொட்டியிருப்பார்கள், கண்ணீர் வடித்திருப்பார்கள். அதற்கு நானும் காரணமானதை நினைத்து என்னை நானே நொந்துக் கொண்டேன். இந்த மாதம் நடந்த ஜெயா 'மக்கள் அரங்கத்தில்' அதனாலேயே கலந்துக் கொள்ளவில்லை.

அரட்டை அரங்கத்தில் என்னுடன் ஒருவர் 'இலங்கைத் தமிழர்' என்ற முகவுரையோடு ஆரம்பித்துப் பேசினார். ஆனால் அவர் பேச்சு எனக்கு இலங்கைத் தமிழாகத் தெரியவில்லை அதுவும் அவரை முதல் சுற்றில் சாதாரண தமிழில் பேசி பார்த்த நினைவும் இருந்ததால் அவரிடம் நான் கேட்டுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான் 'நீங்கள் இலங்கைத் தமிழராகப் பேசுங்கள் பிரச்சனையில்லை ஆனால் நீங்கள் பேசுவது மொத்த இலங்கைத் தமிழரின் பிரதிபலிப்பாகட்டும் என்றேன். "மற்றவர்களுக்கெல்லாம் தற்காலிக பிரிவுதான் ஆனால் தாய் மண்ணை மீண்டும் எப்போது பார்ப்போம் என்று தெரியாமல் தவிப்பவர்களின் குரலாக உங்களுடையது ஒலிக்கட்டும்" என்றேன். அவரோ 'நிம்மதி' என்ற தலைப்பிற்குப் பேசினார். இலங்கைத் தமிழராக பேசிய அதே நபர் மக்கள் அரங்கில் சாதாரண தமிழில் பேசி என் சந்தேகத்தை தீர்த்து விட்டார். நாடகத்தில் இது கேடுகெட்ட நாடகம் என்று நினைத்துக் கொண்டேன்.

இந்த அரட்டை அரங்கத்தில் / மக்கள் அரங்கில் எத்தனையோ பேர் பேசுகிறார்கள் ஆனால் ஒருவரும் நடப்பது நாடகம்தான் என்று மற்ற அப்பாவிகளுக்குச் சொல்லாமல் இருப்பது ஏன்? நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களே உண்மையை வெளியில் சொன்னால் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து அதில் ஏற்படும் பச்சாதாபம் குறையும்தானே? ஒத்திகை பார்த்து அழுதழுது சோகத்தை உள்ளிழுத்துப் பேசுகிறார்கள் சரி, ஆனால் ஒத்திகையில் கேட்டுவிட்ட அதே செய்தியை மீண்டும் நிகழ்ச்சியில் கேட்கும் போது எப்படித்தான் மடை திறந்த வெள்ளமாக டி.ஆருக்கும் சரி விசுவுக்கும் சரி தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறதோ தெரியவில்லை. சத்தியமா 'கிளிசரின்' போடாமல் இவ்வளவு கண்ணீர் வடிப்பதை முதல் முறையா பார்க்கிறேன்.

இந்த நிகழ்ச்சி மக்கள் அரங்கமாக, அரட்டை அரங்கமாக இன்னும் 'சன்', 'ஜெயா'வில் பல வருடங்களாக பல ஊர்களில் நடந்தவையாக ஒளிபரப்பிக் கொண்டிருப்பதற்கு காரணம் நம் மக்கள் இன்னும் முட்டாள்களாக இருப்பதுதான். மக்கள் விழித்துக் கொள்ள என் ஒரு பதிவு மட்டும் போதுமா என்ன?

நன்றி : ஜெஸிலா (பதிவிலிருந்து)

Feb 10, 2008

காவல் நிலையத்தில் கொள்ளை - தர்மபுரியில் அநியாயம்!

தர்மபுரி அருகே நள்ளிரவில் மர்ம மனிதர்கள் துணிகரம்

போலீஸ் நிலையத்தில் புகுந்து 6 துப்பாக்கிகள் கொள்ளை

- தினத்தந்தி, 10.02.2008


ஸ்காட்லாண்டு போலீசுக்கு அப்புறம், புத்திசாலித்தனத்தில், சுறுசுறுப்பில் தமிழ்நாடு போலீஸ் தானே இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள். இப்படி கண்ணும், கருத்துமாய் வேலை செய்யும், இவர்களை உற்சாகப்படுத்த, நிறைய பதக்கங்களும், பரிசுகளும் அரசுகள் அள்ளித் தருகின்றன.

"போலீஸ் நிலையத்தில் புகுந்து 6 துப்பாக்கிகள் கொள்ளை" என்று படித்ததும், எப்படியும் போலீசு தடுத்திருப்பார்கள். இரண்டு மணி நேரத்திற்காவது, துப்பாக்கி சண்டை நடந்திருக்கும். போலீசுக்கும், கொள்ளையருக்கும் நிறைய காயம் அடைந்திருப்பார்கள் என பில்டப்போடு, செய்தியை படித்தால்,

"நள்ளிரவு 12.30 மணியளவில் இவர்கள் கண் அயர்ந்த வேளையில் மர்ம மனிதர்கள் சிலர் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தனர். "லாக்-அப் அறையின் பூட்டை கடப்பாரை மற்றும் கம்பிகளால் உடைத்து உள்ளே சென்றனர்"

- சப்பென்று போய்விட்டது.

கடப்பாரை வைத்து உடைத்து, உள்ளே நுழைந்திருக்கிறார்கள் என்றால், காவல் நிலையத்தில், போலீசு யாருமே இல்லை என்று தான் அர்த்தம்.

இந்த செய்தியையும், போலீசின் நடைமுறையையும் சேர்த்து யோசித்துப் பார்த்தால், இப்படியும் நடந்திருக்கலாம் என நினைக்க தோன்றுகிறது.

* இரண்டு நாளைக்கு முன்பு, ஒரு ஹெட் கான்ஸ்டபிள் ஒரு கைதியை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பான வேலை. நடந்தது என்னவோ, கான்ஸ்டபிள் செம போதையாகி, கைதி, கான்ஸ்டபிளை பொறுப்பாக நீதிமன்றத்துக்கு வந்து சேர்த்தார். பிறகு, நடக்கமுடியாமல் காக்கிசட்டையுடன் தரையில் கிடக்க பிறகு போலீஸ் போலீசை அள்ளிச்சென்றது.

- தர்மபுரியிலும், இப்படி போலீசு செம போதையில் எங்கோ விழுந்து கிடந்திருக்கலாம்.

* சில மாதங்களுக்கு முன்பு, லஞ்ச பணத்தை பங்கு போடுவதில், போலீசு இருவர் கட்டிபுரண்டு சண்டை போட்டனர்.

- தர்மபுரியிலும், இப்படி போலீசு போட்டி போட்டு, லஞ்ச பணத்தை வசூலிக்க சென்றிருக்கலாம்.

எனக்கென்னவோ, இது திடீரென்று நடந்ததாக தெரியவில்லை. பல நாட்கள் இப்படி யாரும் இல்லாமல் காவல் நிலையம் இருந்திருக்கிறது.

போலீசின் லஞ்சம் மற்றும் பொறுப்பற்ற நடைமுறையின் மீது வெறுப்படைந்த பொதுமக்களே, துப்பாக்கிகளை எடுத்து, பக்கத்தில் எங்காவது புதைத்து வைத்திருக்கலாம் என தோன்றுகிறது.

நன்றி : குருத்து