Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Sep 6, 2018

தூறல் நின்னுப் போச்சு (1982) - சில குறிப்புகள்

கடந்த வாரத்தில் கே தொலைக்காட்சியில் பார்த்தேன். எப்பொழுதும் எந்த காட்சி பார்த்தாலும், படத்தின் இறுதிவரை நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் வசீகரம் கொண்டது! பாக்யராஜின் முதன்மையான படங்களில் இது முக்கியமான படம்.

2563 இருக்கைககள் கொண்ட ஆசியாவின் பிரமாண்டமான முதல் திரையரங்கான மதுரை தங்கம் திரையரங்கில் உலகம் சுற்றும் வாலிபனுக்கு பிறகு அரங்கு நிறைந்த காட்சிகளாக நூறு நாட்கள் ஓடிய படம்!

படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, தெலுங்கிலும், இந்தியிலும் கூட எடுத்தார்கள். அந்தந்த மொழி, கலாச்சாரத்திற்கு ஏற்ப சின்ன சின்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். என்னென்ன என்று கவனித்தால் சுவாரசியமாக இருக்கிறது. தெலுங்கில் விஜயசாந்தி நடித்திருக்கிறார். இந்தியில் அனில் கபூர் நடித்திருக்கிறார். தமிழில் நாயகியின் அப்பா சாகிறார் அல்லவா! தெலுங்கில் நாயகியை அரளி விதையை சாப்பிட வைத்து, பிழைக்க வைத்திருக்கிறார்கள். இந்தியில் நம்பியார் பாத்திரத்தில் 'சோலே' அம்ஜத்கான், கத்திக் குத்தை வாங்கிகொள்கிறார். 
இந்த படத்தின் பாதிப்பில் இன்றைக்கு வரைக்கும் படம் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அப்பாஸ் – சிம்ரன் நடித்த “பூச்சூடவா” படத்தை உற்றுப் பாருங்கள். தூ. நி. போச்சு படம் தான் என பளிச்சென தெரியும். செந்தாமரை கதாபாத்திரத்தை கிரிஷ் கார்னட் செய்திருப்பார். இப்பொழுது சசிக்குமார் மீண்டும் எடுக்கப்போவதாக சொல்கிறார்கள்.

செந்தாமரையும், நம்பியாரும் அருமையாக செய்திருப்பார்கள். செந்திலுக்கு இந்தப்படம் தான் திருப்புமுனை என்கிறார்கள்.

ஏற்பாடு திருமணத்தில் வரதட்சணை பேசுவது ஒரு வியாபாரம் பேசுவது போல மிக கறாராக பேசுவார்கள். இந்த படத்தில் அதை சரியாக காட்டியிருப்பார்கள். படத்தில் இறுதியில் ஆணாதிக்கத்தை நன்றாகவே சாடியிருப்பார்கள். அதையெல்லாம் கேட்டு திருந்துவார்களா என்பது தான் எனக்கு ஆச்சர்யம்.

ஆறெல்லாம் வறண்டு, ஆற்று மணலை எல்லாம் அரசே முன்நின்று சூறையாடிய வேளையில், ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க போவது போல இப்பொழுது காட்சி வைக்க முடியுமா?

படத்தின் பலத்தில் இளையராஜாவும் ஒருவர். எல்லா பாடல்களும் இனிமையானவை. பின்ணனி இசையும் அசத்தியிருப்பார்.

படத்தலைப்புகளை ரெம்பவும் பாந்தமாக, மங்களகரமாக பெயரிடுவார்கள். ”தூறல் நின்னுப் போச்சு” என நெகட்டிவாக தைரியமாகவே வைத்திருக்கிறார் பாக்யராஜ்!

Aug 30, 2018

1084ன் அம்மா (1997) - இந்தி

1084ன் அம்மா (1997) - வங்க நாவல், இந்திப்படம், தமிழ் நாடகம்

1970களில் நக்சல்பாரி (Naxalbadi) எழுச்சி நாடு முழுவதும் சமூக மாற்றத்தை விரும்பிய இளைஞர்களை ஈர்த்தது. போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்தது. ஆளும் மத்திய, மாநில அரசுகள் நக்சல் இளைஞர்களை வேட்டையாட துவங்கியது. வங்கத்தின் தெருக்களில் துரத்தி, துரத்தி சுட்டுக் கொல்லப்பட்ட, அடித்தே கொல்லப்பட்ட பலநூறு இளைஞர்களில் ஒருவர் தான் பிரதி (Brati).

பிரதியின் குடும்பம் மேட்டுக்குடி குடும்பம். நக்சல் இயக்கத்தில் இணைந்து போராடியது அவர்களுடைய ’தகுதிக்கு’ இழுக்காக படுகிறது. ஆகையால் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரதியினுடைய தடயங்களை அரசாங்க ஏடுகளில் இருந்து முற்றிலுமாய் அழித்துவிடுகின்றனர்.

தனது பிரியத்துக்குரிய மகனின் தடயங்களை தேடிச் செல்கிறார் அம்மா. அதன் வழியே தன் மகனின் கனவுகளை, லட்சியங்களை காணுகிறார். உலகம் இரண்டாக இருப்பது முகத்தில் அறைகிறது.
****

இந்த நாவலை எழுதியவர் மகாசுவேதா தேவி. வங்கத்தைச் சேர்ந்தவர். சமூக செயற்பட்டாளர். சமீபத்தில் தான் இறந்தார். இந்த நாவல் தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு என இந்தியாவின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாவலை என் நண்பர் ஒருவர் பரிசளித்தார்.

இந்தியில் முக்கியமான இயக்குநரான இயக்குநர் கோவிந்த் நிஹாலனி இயக்கி #Hazaar_Chaurasi_Ki_Maa என்ற பெயரில் 1997ல் வெளியே வந்தது. ஜெயா பச்சன் 18 வருட இடைவெளிக்கு பிறகு பிரதான கதாபாத்திரத்தில் நடித்தார். பிரதியின் காதலியாக நந்திதாதாஸ் நடித்தார். படம் தேசிய விருது வென்றது. இப்பொழுதும் யூடியூப் தளத்தில் கிடைக்கிறது.

கடந்த சனி, ஞாயிறு இரண்டு நாள்களில் சென்னையில் இந்த நாவலை நாடகமாக ஒரு குழு மேடையேற்றினார்கள். 1 மணி நேரம் 20 நிமிடம். ஒரு நாவல் படித்து பத்து ஆண்டுகள் ஆனபின்பும், சில காட்சிகள் மனதில் நிரந்தரமாக தங்கிவிடும் அல்லவா! அப்படிப்பட்ட சில காட்சிகளை அழுத்தம் திருத்தமாக நாடகத்தில் கொண்டு வந்திருந்தார்கள். பிரதான கதாபாத்திரமான அம்மா பாத்திரத்தில் நாடகத்துறை சார்ந்த மங்கை அருமையாக நடித்திருந்தார்.

போலீசாக நடித்தவரும், காதலியாக நடித்தவரும் பாத்திரத்தில் பொருந்தியிருந்தார்கள்.செப்டம்பர் மாதம் சென்னையில் மீண்டும் போடுவதாக அறிவித்தார்கள். வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக பாருங்கள்!
***

மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்தால், தேசிய பாதுகாப்பு சட்டம், தடுப்பு காவல் சட்டத்தை போட்டு, அரசு சிறையில் தள்ளுகிறது. மீண்டும் மீண்டும் போராடினால் போலி மோதல் கொலைகள் என இப்பொழுதும் இந்த நாவலில் எழுப்பப்படுகிற கேள்விகள் சமூக நிலைமைக்கு பொருந்தி போகிறது. சமூகத்தில் அநீதிகள் நீடிக்கும் வரை பிரதிகள் உருவாகிக்கொண்டே தான் இருப்பார்கள். இருக்கிறார்கள். அதனால், இன்றைக்கும் நக்சல்கள் என்றால்...ஆளும் வர்க்கங்கள் குலைநடுங்கி போகின்றன.

”மரம் அமைதியை விரும்பினாலும் காற்று விடுவதில்லை!” 

குருத்து

Aug 3, 2018

ஆண்பாவம் - சில குறிப்புகள்

கொஞ்சம் சோர்வாக இருக்கும் பொழுது, பார்க்ககூடிய படங்களில் ஆண் பாவமும் ஒன்று!

படம் வந்து 33 வருடங்களுக்கு பிறகு...சமீபத்தில் இந்த படம் குறித்து ஒரு கூட்டம் நடத்தியுள்ளார்கள். பாண்டியராஜன் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார். (உபயம் : யூடியூப். படமும் கிடைக்கிறது!)

முதல்படம் கன்னிராசி. இது இரண்டாவது படம். ஒரு நபரை தேர்வு செய்து வைத்து, பிறகு தானே நடித்துவிடலாம் என முடிவெடுத்துள்ளார்.
கதாநாயகனுக்கான லட்சணத்தை, பாரதிராஜா, அவருடைய திரை வாரிசுகள் உடைத்துக்கொண்டே வந்திருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் ரேவதி ரெம்ப பிஸி. ஐந்து நாட்கள் தேதி கொடுத்து...எல்லா காட்சிகளையும் எடுத்திருக்கிறார்கள். மருத்துவமனை காட்சிகளிலெல்லாம் முகத்தை காட்டவேயில்லை. சில இடங்களில் வேறு பெண்ணை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தில் எல்லோரும் அவரவர் சொந்த பெயரிலேயே நடித்திருப்பார்கள்.
பாண்டியன் சீதாவை பெண் பார்க்கும் பொழுது, உயரம் அளவிடும் பொழுது, குதிகாலை உயர்த்தி தன் பிரியத்தை காட்டும் காட்சி மிக அழகு! சொன்னவர் - விஜய்சேதுபதி!

பாண்டியராஜன் சைதைக்காரர் என்பது ஒரு ஆச்சர்யம். மொத்தப் படத்தையும் அதிகபட்சமாக 40 நாட்களுக்குள் எடுத்துமுடித்திருக்கிறார். படம் வெளியாகும் வரை இயக்குநருக்கே நம்பிக்கை இல்லை. ஆனால்.. 230 நாட்கள் ஓடியிருக்கிறது!

தனது பிஸியால், படம் எடுத்தபிறகு, பாடல்கள் தந்திருக்கிறார் இளையராஜா.
இளையராஜாவின் அருமையான பிஜிஎம் படங்களில் இந்தபடமும் முதல் வரிசையில் வந்துவிடும்! இளையராஜா எளிய தயாரிப்பாளர்களும் அணுகும்படி இருந்திருக்கிறார். இந்த படமும் ஒரு சான்று!

படத்தில் ரேவதி நடத்தும் டியூசன் மிகப்பிரபலம். இன்றைக்கும் "ஆண்பாவம் டியூசன் இல்லையே" என பேசிக்கொள்கிறார்கள். - தீபா - ஆண்பாவம் சிறப்பு கூட்டத்தில்.. "படத்தில் மனிதர்கள் நடித்திருக்கிறார்கள். சரி. ஆனால், சிஜி இல்லாத காலத்தில், இறுதி காட்சியில் அந்த ஈயை எப்படி நடிக்கவைத்தீர்கள்?" என பேச்சாளர் கேட்டதற்கு, இயக்குநர் பாண்டியராஜன் பதில் சொல்லவில்லை அல்லது யூடியூப்பில் இல்லை.

எங்கள் வீட்டிலும் அண்ணன், தம்பி இருவர். படத்தில் வரும் நாயகர்களைப் போலவே அத்தனை பிரியங்களும், சிறுவயது சண்டைகளும்! அப்பாவும் வி.கே. இராமசாமி தோற்றம் கொண்டவர் தான்!




- குருத்து

Jun 13, 2018

இயக்குநர் மகேந்திரனின் நண்டு (1981)

உத்திரப்பிரதேசத்தில் நம்மூர் ஜமீன் குடும்பம் போல‌ ஒரு பணக்கார குடும்பம். நான் சொன்ன பொண்ணத்தான் கட்டணும்னு அப்பா அதிகாரமாய் சொல்ல, சுதந்திர சிந்தனை உள்ள நாயகன் வீட்டை விட்டு வெளியேறி நாயகன் சென்னைக்கு இன்ஜினியர் வேலைக்கு வருகிறார்.

சென்னையில் லைன் வீட்டில் குடியேறுகிறார். அங்கிருக்கும் குடும்பங்களில் நாயகியும் குடும்பமும் ஒன்று. கூடுதலாக நாயகி, நாயகன் அலுவலகத்திலேயே வேலை செய்கிறார்.

சிறுவயதிலிருந்தே நாயகன் ஆஸ்துமாவில் மிகுவும் சிரமப்படுகிறார். நாயகியின் குடும்பம் அவரை அக்கறையுடன் பார்த்துகொள்கிறது.

அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் காதுபடவே தப்பாக பேசுகிறார்கள். இந்த களேபரத்தில் நாயகன் விருப்பம் தெரிவித்து நாயகியை திருமணம் செய்துகொள்கிறார்.

நாயகனின் குடும்பம் அவர்களது திருமணத்தை ஏற்றுக்கொண்டதா? அவர்களுடைய வாழ்வில் மிகப்பெரிய அதிர்ச்சியை எதிர்கொள்ள நேரிடுகிறது. அது என்ன என்பது மீதி முழு நீளக்கதை!

****

'அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா', 'மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே', 'Kaise kahoon' - இந்தி பாடல் - இந்த படத்தின் மூன்று பிடித்த‌ பாடல்களையும் அவ்வப்பொழுது கேட்பதுண்டு! அதற்காகவே இந்தப் படத்தை பார்க்கவேண்டும் என நினைத்தேன். இளையராஜாவின் இசை படத்திற்கு பெரும்பலம். சிவசங்கரி எழுதிய நாவலை மகேந்திரன் படமாக்கியிருக்கிறார்.

படத்தில் வரும் எல்லா சிறு கதாபாத்திரங்கள் கூட மனதில் நிற்பது சிறப்பு. லயன் வீடுகளில் வரும் பாத்ரூம், தண்ணீர் பிரச்சனை, புறணி, வீட்டு சொந்தக்காரர் செய்யும் தொந்தரவுகள், ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்துகொள்வது என நன்றாக பதிவு செய்திருக்கிறார்.

சாதி மறுத்து செய்யப்படும் திருமணங்களில் பெரிய இடைஞ்சலாய் பெரும்பாலும் நிற்பது சம்பந்தகாரர்கள் தான். அதையும் நன்றாக பதிவு செய்திருக்கிறார்.

படத்தின் இறுதியில் சொல்லப்படும் அந்த 'செய்திக்காக'வா இப்படி ஒரு அதிர்ச்சி முடிவு!

நாயகன் சுரேஷின் பெயர் ராம் பிரசாத்.  நாயகி அஸ்வினியின் பெயர் சீதா.   இதில் ஏதும் காரணம் உள்ளதா என தெரியவில்லை

May 3, 2018

"நாட்டில இவ்வளவு செய்ய வேண்டியிருக்காப்பா?"

மே தின பேரணிக்கு போய் திரும்பும் வழியில் ஆறாம் வகுப்பு படிக்கும் என் பெண்ணிடம் பேசிக்கொண்டே வந்தேன்.

நாம் போராடி நாம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து... நீ முக்கிய பொறுப்புக்கு வந்தால்.. முதலில் என்ன செய்வாய்?

"பிச்சைகாரர்களுக்கு எல்லாம் வேலை கொடுப்பேன்!"

இதை தொடரலாமே என கேட்க துவங்கினேன்.

#மாணவர்களுக்கு?"

"எல்லோருக்கும் இலவச கல்வி கொடுப்பேன்"

"படிக்காத பசங்கள பார்த்திருக்கிறாயா?"

"இங்க பார்த்ததில்லை. கிராமத்தில் படிக்காம இருப்பாங்கல்ல! எல்லோரும் படிக்கனும்ல!"

#பெண்களுக்கு?"

"எல்லா இடத்திலும் சுத்தமான கழிவறைகள் கட்டுவேன்"

#விவசாயிகளுக்கு?"

"எங்கு எங்கு எவ்வளவு விளைவிக்க வேண்டுமென திட்டத்தை கொடுப்பேன்"

#குழந்தைகளுக்கு?"

"எல்லா குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கொடுப்பேன்" 


(பா. ஜனதா ஆட்சியை நன்றாக புரிந்திருக்கிறாள்!)

#இளைஞர்களுக்கு?"

"எல்லோருக்கும் வேலை கொடுப்பேன்"

#மீனவர்களுக்கு?"

"மீனவர்களுக்கு உரிய நேரத்தில் வானிலை தகவல் தருவேன்"

(ஒக்கி புயல் பாதிப்பு!)

திடீரென கொஞ்சம் நிறுத்தி....

"நாட்டில இவ்வளவு செய்ய வேண்டியிருக்காப்பா?"

- என்றாள் ஆச்சர்யமாய்!

பிறகு நான் கேட்பதை நிறுத்திவிட்டேன்.

"எல்லோருக்கும் இலவசமா மருத்துவம் கொடுக்கனும்!"

"வீடு இல்லாதவங்களுக்கு வீடு கட்டித்தரனும்!"

இன்னும் சொல்லிக்கொண்டே வந்தாள்!

அது முடிகிற பட்டியலா அது?

#நீ சீக்கிரம் வளர்ந்து களத்துக்கு வா தாயி!

Feb 20, 2018

பிச்சைக்காரர்

சென்னை மாநகராட்சியின்
எல்லையில் உள்ளது
எங்கள் நகர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு 
அது ஒரு எளிமையான 
கெங்கை அம்மன் கோவில்!

பக்தர்களிடம் வசூல் செய்து
உட்புறத்தில்
முருகன், பிள்ளையார்  அவதரித்தனர்!

பிரார்த்தனை செய்பவர்கள் அதிகரித்ததும்
அய்யர் தோன்றினார்.
இன்னும் அதிகமானதும்
இன்னொரு அய்யரும் ஐக்கியமானார்.

கடவுள் நம்பிக்கையுள்ள 
என் அத்தையிடம்
புதிதாய் விரதநாட்கள் முளைத்தன!

பிரதோஷம், கிருத்திகை என
சிறப்பு பூஜைகள்
தவறாமல் நடைபெற்றன!
மார்கழி முழுவதும்
காலையில் பக்தி பாடல்கள் ஒலித்தன!


கடவுளுக்கு 
அசையும் சொத்துக்கள்
அசையா சொத்துக்கள் அதிகமானதும்
பதினைந்து அடிக்கு சுற்றுப்புற சுவர் எழும்பியது!
நல்ல கனமான இரும்பு கேட் வந்தது!
பெரிதாய் பூட்டும் தோன்றியது

பூக்கடை வந்தது!
விபூதி, குங்குமம்,
பூஜை பொருட்கள் விற்க 
கடையும்  வந்து சேர்ந்தது!

அன்னதானம் போடும் பொழுது
பக்தர்கள் அலைமோதினார்கள்.


எல்லாம் இருந்தாலும்
ஏதோ ஒன்று குறைவது போல
மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது!


இன்று வெள்ளிக்கிழமை.
வாசலில் செருப்புகள் 
நிறைய இருந்தன.
தை மாத குளிரில்
கண்கள் உள்ளடங்கி
ஒரு வயதானவர்
பக்தர்களிடம் இரஞ்சி கொண்டிருந்தார்.

'முழுமை' பெற்றது போல இருந்தது
கோவில்!

படம் உபயம் : இணையம்

குருத்து

Feb 9, 2018

சர்க்கஸ்

”சனங்களைக் குஷிப்படுத்தி கைதட்டலைப் பெறத்தான் நீங்க சாகசம் செய்றீங்க, காசுக்காக அல்ல! அதனால ஆட்கள் நூற்றுக்கணக்கில் வந்தாலும் சரி, கொஞ்ச பேர் வந்தாலும் சரி, எப்போதும் அருமையாக செய்யனும்”


* பெண் சர்க்கஸ் கலைஞர் தன் பிள்ளைகளிடம்!!

சிறுவயதில் சர்க்கஸ் பார்க்க அத்தனை ஆர்வமாக இருக்கும். சிங்கம், புலி, யானை, குதிரை என மிருகங்களைப் பார்க்கவே உற்சாகமாக சர்க்கஸ் போவோம்.

மிருகங்களை பயன்படுத்தக்கூடாது என்ற தடைக்கு பிறகு வண்ண வண்ண கிளிகளை, நாய்களை பயன்படுத்தினார்கள். இப்பொழுதும் அவைகளுக்கும் தடை போட்டுவிட்டார்கள். எதுவும் இல்லை.

சுதந்திரத்திற்காக சிந்திக்கிற, செயல்படுகிற நாம் விலங்களையும். பறவைகளையும் கூண்டுக்குள் அடைத்து வைத்து வித்தை காட்ட வைப்பது அபத்தம் தான்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, என் பெண்ணுக்காக சர்க்கஸ் போயிருந்தேன். பார்த்த சர்க்கஸை என் பெண் மறந்துவிட்டபடியால், சமீபத்தில் ஜம்போ சர்க்கஸ் (சென்னை மூர் மார்க்கெட் அருகே ) போயிருந்தோம்.

முழுக்க மனிதர்களின் சாகசம் தான். 40 அடி உயரத்தில் பறந்த படி சாகசம், நீளத்துணியினால் ஒரு ஜோடி அந்தரத்தில் ஸ்டைலான சாகசம் என ஐந்தாறு வகைகள் மிக அருமையாக இருந்தன.


ஜோக்கர்கள் எப்பொழுதும் போரடிக்காமல் பார்த்துகொள்வார்கள். இப்பொழுதோ ஜோக்கர்களே ரெம்பவும் போரடிக்கிறார்கள்.

மற்றபடி, சர்க்கஸ் கலைஞர்கள் வண்ண வண்ண உடைகளில் பளபளப்பாக வந்தாலும், சர்க்கஸ் கலை வளரவில்லை என்பது அதன் வடிவத்திலேயே தெரிகிறது. செய்த சாகசங்களே செய்யப்படுகின்றன. அதே டெண்ட் கொட்டாய் தான். புழுதியில் தான் சேர்கள் போட்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் காலரி போடப்பட்டிருக்கும். கொஞ்சம் வசதியாக இருக்கும்.

கலைஞர்கள் முகத்தில் மலர்ச்சி இல்லாமல், ஒருவித இறுக்கத்துடன் தான் இருக்கிறார்கள். கனமான வெயிட்டை தூக்கி சாகசம் செய்த ஒரு கறுப்பின கலைஞன் கைதட்டை கேட்டு கேட்டு வெயிட்டை தூக்கி சாகசம் செய்தார். மார்கழி மாதத்திலும் அத்தனை வியர்வை!

சமீபத்தில் ஒரு சீனப் பெண்களின் ஐந்து நிமிட சர்க்கஸ் பார்த்தேன். அத்தனை துல்லியம். முகத்தில் மகிழ்ச்சி. பார்க்கவே அத்தனை சந்தோசமாக இருந்தது!
ஒருவேளை அரசு ஏதும் மானியம் கொடுத்தால் இந்த கலையை இன்னும் கொஞ்ச காலம் காப்பாற்றலாம். அரசு செய்யுமா? எல்லா பொறுப்புகளையும் கழட்டிவிட நினைக்கும் இந்த அரசு செய்ய வாய்ப்பேயில்லை.

மற்றபடி, புதிது, புதிதாய் இந்த மண்ணில் பிறக்கும், விழிகள் விரித்து ஆச்சர்யமாய் பார்க்கும் குழந்தைகள் தான் சர்க்கஸ் கலையை இன்னும் வாழவைக்கிறவர்கள் என சொல்லலாம்!
குருத்து

Dec 11, 2017

பருத்திப்பாலும் போலீசுகாரரும்!


பருத்திப்பால்.  மதுரை சிறப்புகளில் ஒன்று. பிரியா திரையரங்கு வாசலிலும், நடனா திரையங்கு (இப்பொழுது இல்லை) போகிற வழியிலும் இருவரும் விற்றுக்கொண்டிருப்பார்கள்.  அந்த பக்கம் போகும் பொழுதெல்லாம் தவறாமல் குடிப்பதுண்டு.
பருத்திவிதை, அரிசிமாவு, (மண்டை) வெல்லம், தேங்காய், ஏலக்காய், - கலவையில் அருமையாக இருக்கும்.  உடம்பு சூட்டை குறைக்கவல்லது. வயிற்றுப்புண்ணுக்கு நல்லது.
சென்னையில் அம்பத்தூரில் ஒரு பெரியவரும், பாடி பிரிட்டானியா அருகே ஒரு பெரியவரும் பருத்திப்பால் விற்றுவருகிறார்கள். எப்பொழுதும் இரண்டு, மூன்று பேர் குடித்துக்கொண்டிருப்பார்கள். தேநீர் குடித்து சோர்வானவர்கள் பருத்திப்பால் அருந்தி பாருங்கள். தொடர்ந்து அருந்துவீர்கள்.  

அது சரி! பருத்திப்பாலுக்கும் போலீசுகாரருக்கும் என்ன சம்பந்தம்?

பருத்திப்பால்காரரிடம் இன்னொருவர் பேசிக்கொண்டிருந்தார். 
”பைக்கில் வரும் போலீசு பெட்ரோலுக்கு அரசாங்கம் கொடுக்கிற காசு பத்தலையாம்.  அதனால், மாசம் 200 ரூபாய் மாமூல் கேட்டாங்க!”
“எங்க பகுதியில் மாசம் 300ரூபாய். நீங்க 200 ரூபாய் தான் தர்றீங்க! பரவாயில்லையே” என்று குறுக்கிட்டு சொன்னேன்..  
”அட போங்க தம்பி!  போகும் பொழுதும், வரும் பொழுதும், ஒரு நாளைக்கு மூணு, நாலு கப் (ஒருகப் 10ரூ) ஓசியில்ல குடிச்சுட்டு போயிராங்க.  கணக்குப்பார்த்தா அதுவே மாதம் ரூ. 1000’ வந்துரும்” என்றார்.
பெருகிவரும் குற்றங்களை குறைப்பதற்காகவும், மக்களுக்கும் காவல் துறைக்குமான ’இடைவெளியை’ குறைக்கிறதுக்கு தான் இவர்கள் என்று பீட் ஆபிசர்களை அறிமுகப்படுத்தும் பொழுது ரெம்ப கெத்தா சொன்னாங்க!
பார்த்தா பெட்ரோலுக்கு காசில்லைன்னு வியாபாரிகள் கிட்ட போலீசு பிச்சை எடுக்குதுக!  நமக்கு என்ன கவலைன்னா, நம்ம முதல்வர் எடப்பாடியும், துணைமுதல்வர் ஓபிஎஸ்யும் ரெம்ப மானஸ்தவர்கள் ஆச்சே!  மக்களுக்கு சேவை செய்ய, பெட்ரோலுக்கு காசில்லாம நம்ம போலீசு இப்படி மக்கள்கிட்டேயே பிச்சை எடுக்கிறது தெரிஞ்சா, நாண்டுகிட்டு செத்துறவாங்களேன்னு தான்!

Nov 17, 2017

தீரன் - ஒரு கேள்வி!

நெடுஞ்சாலையோரம் உள்ள தனியாக உள்ள வீடுகளில், கொடூரமாக கொலைகள் செய்து, கொள்ளையடிக்கிறது ஒரு கும்பல்.
ஒரு டிஎஸ்பி தனது குழுவினருடன் தொடர்ந்து உழைத்து கும்பலை பிடிப்பது தான் கதை.
நேர்த்தியான திரைக்கதை. எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.
என் கேள்வி. அந்த கொடூர கும்பல் தற்செயலாக, விசாரணயில் ஈடுபட்டிருக்கும் போலீசு வீட்டிலும் கொலை, கொள்ளை செய்கிறது.
ஒருவர் தன் கடைமையை விடாப்பிடியாக செய்வதற்கு, தன் சொந்த இழப்பு இருந்தால் தான் செய்யமுடியுமா என்ன? படத்தில் செண்டிமெண்டுக்காக இப்படி தொடர்ந்து செய்கிறார்கள்.
பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபடுகிற கதாபாத்திரங்களை கூட தனிப்பட்ட இழப்புகளின் பாதிப்பால் தான் செயல்படுகிறார்கள் என்கிற கருத்தை தொடர்ந்து திரைப்படங்களில் செய்து வருகிறார்கள். உதாரணமாக பல படங்களை சொல்லலாம்.

இப்படி சித்தரிப்பது மிக அபத்தம்!  சமூக ஏற்றத்தாழ்வுகளையும், கோளாறுகளையும்  புரிந்துகொண்டு அதை சரி செய்யும் நோக்கத்தில் பலர் சமூக செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.  அவர்களை எல்லாம் தனிப்பட்ட இழப்புகளினால் தான் இப்படி ஈடுபடுகிறார்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவைக்குமா? இல்லையா?  தொடர்ந்து திரைப்படங்களில் சித்தரிப்பு மூலம் சில விசயங்களை அபத்தமாக புரிந்துகொள்கிறோம் என்பதை படத்திலேயே ஒரு காட்சி வைத்திருப்பார்கள். 

Oct 21, 2017

தீப ஒளி : பலகாரங்கள் இனிப்பதில்லை!

ஐந்து குழந்தைகளுடன்
எப்பொழுதும்
பற்றாக்குறைகளுடன்
போராடும் அம்மாவுக்கு
பண்டிகை வந்தாலே பதட்டமாகிவிடும்!


பொறுப்பை தட்டிகழிக்கும் அப்பாவோ
"எல்லாவற்றையும்
துணைவியார் பார்த்துக்கொள்வாள்!" என
நழுவிக்கொள்வார்.

வாராவாரம் சிறுக சிறுக சேமித்து
கட்டிய பண்டுதான்
பலகாரங்களுக்கு பொருட்கள் தரும்!

குறைந்தபட்ச வட்டி கடனில்
சொசைட்டி தான் அனைவருக்கும்
துணி வழங்கும்!

தைக்க, இதர செலவுகளுக்கு
வட்டிக்கு வாங்கும் கடன் தான் சமாளிக்கும்!

எங்கு சென்றாலும்
அம்மாவுக்கு கடைக்குட்டி
நான் தான் துணை!

அம்மா எதிர்கொள்ளும் - அத்தனை
சங்கடங்களுக்கும்
சிரமங்களுக்கும்
கண்ணீருக்கும்
நானே மெளன சாட்சி!

பண்டிகையில் செய்யப்படும்
இனிப்புகள்
எப்போதும் அம்மாவிற்கு
இனிப்பதேயில்லை!
அம்மாவிடம் பட்டாசு கேட்க
வாய் வருவதேயில்லை

- குருத்து

Aug 1, 2017

யூ டர்ன் - ஒரு பார்வை!

பெங்களூரு பிரதான மேம்பாலத்தில் சுற்றிப் போவதற்கு சங்கடப்பட்டு, கற்களை நகர்த்தி யூ டர்ன் எடுத்து பறக்கிறார்கள் பைக்வாசிகள்.
விதிமீறும் இவர்கள் ஒவ்வொருவராக மர்மமாக மரணிக்கிறார்கள். ஏன் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லி இருக்கிறார்கள்.
'லூசியா' தந்து ஆச்சர்யப்படுத்திய கன்னட இயக்குநரின் இரண்டாவது படம்.
சுரங்கங்களை முழுங்குனவன், பல கோடிகளை லஞ்சம் வாங்குனவெல்லாம் வெள்ளையும் சொள்ளையுமா சுதந்திரமா சுத்தும் பொழுது, முதலாளி திட்டுவார் என அவசரமாய் செல்கிறவர்களை கொல்வது எல்லாம் ரெம்ப அக்கிரமம். நம்ம ஊர் சங்கர் சட்டியில் போட்டு வறுப்பார். இவர் டீஸண்ட். வலிக்காமல் கொன்றுவிடுகிறார்.
உண்மை சம்பவம் என படத்தின் இறுதியில் பாலத்தில் விதி மீறி செல்பவர்களை காட்டுகிறார்கள்.
பல உயிர்களை பலி வாங்கும் பாலத்தில் ஒரு அடி சுவர் எழுப்புவது அரசாங்கத்தின் வேலைதானே! அது என்ன தனிநபர் செய்கிற காரியமா? ஒரு இடத்திலும் இயக்குநர் வாயை திறக்கவேயில்லை

Jul 10, 2017

அத்தை

அத்தை!

ஒவ்வொரு அத்தைக்கும்
ஒவ்வொரு சிறப்புண்டு!

'என்ன மருமகனே!'
என அழைப்பதில்
அத்தனை அன்பு ததும்பும்!

"எனக்கு ஒரு பொண்ணு இருந்தா
உனக்குத்தாண்டா கட்டிக் குடுத்திருப்பேன்" 
எப்பொழுதும் வாஞ்சையுடன் சொல்வார்
ராக்கு அத்தை!

அத்தைகளின் அன்பை
இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே
எல்லா அத்தைகளின் பெண்களையும் 
கட்டிக்கொள்ளவேண்டும் என 
நினைத்த காலம் உண்டு! 😜

சொந்த ஊர் பாசத்தில்
அத்தைகளின் அளவில்லாத 
அன்பும் உண்டு!

எந்த அத்தை பெண்ணையும் கட்டாமல்
சாதி மறுப்பு திருமணம் செய்த பொழுதும்
வருத்தம் இருந்தாலும்
மாறாத அன்பு காட்டினார்கள்.

பிச்சை அத்தை கோரவிபத்தில் 
இறந்த பொழுது கலங்கிபோனேன்.
கால இடைவெளியில் 

அத்தைகள் மறையும் செய்திகள் 
வந்து கொண்டே இருக்கின்றன!
அத்தைகள் இல்லாத உலகத்தை
நினைத்துப் பார்ப்பது 
சிரமமாய் இருக்கிறது! 

Mar 5, 2017

விலையில்லா மின்விசிறி!

தரும் பொழுது பெட்டியில்
கெத்தாக தான் தந்தார்கள்.
எல்லா பாகங்களும் உள்ளே
தனித்தனியாக கிடந்தன.
மூன்றுமாதம் கிடப்பில் போட்டு - பிறகு
எலக்ட்ரிசன் உயிர் தந்தார்.

தொட்டா சிணுங்கி போல
அடிக்கடி சொணங்கி படுத்துக்கொள்ளும்!
மருத்துவருக்கு பீஸ் அழுதால் மீண்டும் ஓடும்!

மூலையில் கிடந்ததை பார்க்கும் பொழுதெல்லாம்
ரத்த அழுத்தம் எகிறும்!
ஜெ. செத்த பிறகு ...
தூக்கி எறிந்துவிடலாம் என முடிவு செய்தேன்.
எலக்ட்ரிசன், காயிலான் கடைக்காரர் இருவருமே
ஒற்றுமையாய் ரூ. 50 என்றன‌ர்.
விலையில்லா விசிறிக்கு
பணம் தருவது எவ்வளவு பெருந்தன்மை!
வாங்கிகொண்டு திரும்பி பார்க்காமல் வந்துவிட்டேன்!

Dec 20, 2016

கையெழுத்திட்டால் நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும்! - ஒரு கடிதம்


சென்னை மாநகராட்சிக்கு ஒரு பெற்றோரின் கடிதம்!


அனுப்புநர்

இலக்கியா,
5ம் வகுப்பு,
xxxx பள்ளி,
சென்னை

பெறுநர்

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அவர்கள்,
xxxx பள்ளி,
சென்னை
       
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம். சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களிடம் சுய உறுதிமொழி படிவம் ஒன்றை தந்து, மாணவர்களும், பெற்றோர்களும் வீட்டிலும், பொது இடங்களிலும் உள்ள சமுதாய கழிவறையை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என கையெழுத்திட சொல்லி உறுதிமொழி கேட்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சி நடத்திவரும் மாநகராட்சி பள்ளிகளில் சென்னையில் 10 மண்டலத்தில் 57 பள்ளிகள் இயங்கிவருகின்றன. தமிழக அரசாணை எண் : 270ன் படி , 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பறை, 50 மாணவர்களுக்கு ஒரு மலக்கழிப்பறை, கழிப்பறைகள் தண்ணீர் வசதியுடன் இருக்கவேண்டும்

ஆனால், 57 பள்ளிகளில் பல பள்ளிகளில் சிறுநீர் கழிப்பறைகள் இல்லை. மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப மல கழிப்பறைகள் இல்லாமல், மிக மிக குறைந்த அளவே உள்ளன. அதே போல தண்ணீர் வசதியும் போதுமானதாக இல்லை. ஒரு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருந்தாலும்  ஒரே ஒரு துப்புரவு பணியாளர் மட்டுமே உள்ளார்.

உதாரணமாக சைதாப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மேல்நிலை பள்ளியில், 1500 மாணவர்கள் படிக்கின்றனர். சிறுநீர் கழிப்பறை ஒன்று கூட இல்லை.  மலக்கழிப்பறை 8 மட்டுமே உள்ளன.  துப்புரவு பணியாளர் ஒருவர் மட்டுமே.

இது தொடர்பாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாணவர்களை திரட்டி போராடியதன் விளைவாக, மாநகரட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து, பள்ளி வாரியாக அறிக்கையை தயார் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசாணையின்படி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என  மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (எண் : W.P.11666/2014) தொடுத்தது.  நீதிமன்றமும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவு போட்டது. மாநகரட்சியோ கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தில் பல தவணைகளை கேட்டு, பள்ளிகளில் ஆமை வேகத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொண்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சியின் நேரடி கண்காணிப்பில் உள்ள  மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கே இந்த கதி என்றால், பொது இடங்களில் பெரும்பாலான இடங்களில் கழிப்பறை வசதி பற்றி சொல்லவே தேவையில்லை. ஒன்றரை கோடி பேர் வாழும் சென்னையில் பல பொது இடங்களில் கழிப்பறை வசதியே இல்லை. அப்படியே ஒன்றிரண்டு இருந்தாலும் முறையான பராமரிப்பு இல்லாமல் தான் இருக்கிறது.  இதனால் பொதுமக்கள் பலவித சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.

ஆகையால், சென்னை மாநகரட்சி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கழிப்பறை வசதிகளை ஏற்பாடு செய்து தந்துவிட்டு இப்படி கையெழுத்து கேட்பது தான் நேர்மையானது என கருதுகிறோம். இந்த படிவத்தில் கையெழுத்து போட்டால் அதற்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் ஆனால் அதை கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு சமூக சூழ்நிலை நிலவுவதால் கையெழுத்து இட முடியாத நிலையில் இருக்கிறோம். இந்த கடிதத்தை மாநகராட்சிக்கும் அனுப்பிவைக்கும்படி பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி.

இப்படிக்கு,

பெற்றோர்.