Showing posts with label செய்தி விமர்சனம். Show all posts
Showing posts with label செய்தி விமர்சனம். Show all posts

Jul 25, 2015

தொடரும் பள்ளி வாகன விபத்துக்களும், அருகமை பள்ளியும்!


(படம் : 1. விபத்துக்குள்ளான செட்டிநாடு பள்ளியின் பேருந்து!
2. இறந்து போன வேலம்மாள் பள்ளி மாணவன் திவாகர்!)

குறிப்பு : பள்ளி வாகனங்களை ஓட்டும் வாகன ஓட்டிகள் வேகமாகவும், குடித்துவிட்டும் பொறுப்பில்லாமல் ஓட்டுகிறார்கள். வாகன ஓட்டிகளை தனியார் பள்ளிகள் பொறுப்போடு தேர்ந்தெடுப்பதில்லை. அதனால், அரசு இதில் அக்கறை செலுத்தவேண்டும் என கீழே உள்ள கட்டுரையில் கோரிக்கை வைக்கிறார்.
கட்டுரையில் வரும் முதல் விபத்தில் திருப்பத்தூர் மானகிரியிலிருந்து கிளம்பிய பள்ளி பேருந்து சிங்கம்புனரிக்கு செல்லும் வழியில் விபத்து நடந்திருக்கிறது. இந்த இரண்டு ஊருக்கும் தொலைவு 50 கி.மீ. இவ்வளவு தூரம் பிள்ளைகள் தினமும் போய் வந்தால், குழந்தையின் உடல்நிலை என்னவாவது?

சில மாதங்களுக்கு முன்பு, நாலாவது படிக்கும் திவாகர் திருவள்ளூர் மாவட்டம் மதனஞ்சேரியிலிருந்து பொன்னேரி வேலம்மாள் பள்ளிக்கு தினமும் 55 கி.மீ தூரம் அதிகாலை 4.30க்கு கிளம்பி, இரவு 7.30 க்கு வீட்டுக்கு திரும்ப வருவான். அசதியில் பேருந்தில் தூங்குவது வழக்கம். அன்றைக்கும் தூங்கிய பொழுது, பள்ளத்தில் வேன் தடுமாறிய பொழுது, திவாகரின் கழுத்து வேனில் இருந்து வெளியே வந்த பொழுது, எதிரே வந்த இன்னொரு வண்டியில் இடித்து இறந்துபோனான். இதை விபத்து என்பீர்களா? தனியார்மய கல்வியால் நடந்த கொலை என்பது தான் சரி!

இன்னும் எத்தனை திவாகர்களை நாம் பலி கொடுக்கப் போகிறோமோ? அருகமை பள்ளி, தரமான பள்ளி, அரசு இலவச கல்வி என்ற கோரிக்கைகள் வலுப்பெறவேண்டும். இந்த திசை வழியில் நமது போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை

*******

போதையில் பறக்கும் பள்ளி வாகனங்கள்: பதறி தவிக்கும் குழந்தைகள்!
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று காசை பார்க்காமல் பெற்றோர்கள், பள்ளி வாகனத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், தற்போது பள்ளி வாகனங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருவது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பள்ளி வாகனங்களுக்காக தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், அரசு அதிகாரிகள் பள்ளி வாகன விசயத்தில் தொடர்ந்து காட்டி வரும் அலட்சியம்தான், இன்று பள்ளி வாகனங்களின் தொடர் விபத்துகளுக்கு காரணமாக அமைந்து வருகின்றன. கடந்த வாரம் மட்டும் காரைக்குடியில் பள்ளி வாகன விபத்தும், அதற்கு மறுதினம் பெரம்பலூரில் பள்ளி வாகன விபத்தும் நடந்து இருப்பது பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி அருகே உள்ள மானகிரியில் செயல்படும் 'செட்டிநாடு இண்டர்நேஷனல் பள்ளி'யில் பயிலும் மாணவர்களை ஏற்றிக் கொண்டு, சிங்கம்புனாரி என்ற ஊருக்கு அந்த பள்ளி வாகனம் சென்று கொண்டு இருந்தது. பள்ளி வாகனத்தை ரத்ன குமார் என்பவர் ஓட்டினார். பள்ளி வாகனத்தில் மொத்தம் முப்பத்தி ஐந்து குழந்தைகள் இருந்துள்ளனர்.
திருபத்துாரில் இருந்து சிங்கம்புனாரி செல்லும் வழியில் காரையூர் என்ற இடத்தில் அதிவேகமாக சென்ற பள்ளி வேன், கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அருகில் இருந்த மரத்தில் மோதி பலத்த சேதம் அடைந்தது. சம்பவ இடத்திலே ஓட்டுனர் ரத்னகுமார் மரணம் அடைந்தார். அந்த சம்பவத்தில் இருபத்தி ஐந்து குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அதில் நான்கு குழந்தைகள் நிலை இன்று வரை பரிதாபமாக உள்ளது. அதேபோல் அதற்கு மறுதினமே பெரம்பலுாரில் தனலெட்சுமி சீனிவாசன் பள்ளி வாகனம் சாலையில் கவிழ்து விபத்திற்குள்ளானது. அதுவும் அதிவேகமாக சென்றாதால்தான் இந்த விபத்து நிகழந்துள்ளது.

அதிவேகமாக பள்ளி வாகனங்களை இயக்கியதுதான் பெரிய தவறு என்று கூறப்பட்டாலும், காரையூர் விபத்தில் பள்ளி வாகன ஒட்டுனர் மது அருந்தி இருந்தது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளியில் மதிய ஒய்வு நேரத்தில் மது அருந்தி தூங்கியுள்ள ஓட்டுனர், அந்த போதையில்தான் வாகனத்தை இயக்கி, பிஞ்சு குழந்தைகளின் உயிரோடு விளையாடியுள்ளார். அதற்கு பின்தான் பள்ளி வாகன ஓட்டுனர்களை பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் உத்தரவிட்டனர்.
இ்ந்நிலையில், காரைக்குடியில் உள்ள லீடர்ஸ் பள்ளியின் வாகனம் ஒன்று நேற்று காரைக்குடி நகர் பகுதியில் அதிவேகமாக சென்றுள்ளது. சிக்னலில் கூட நிற்காமல் மாணவர்களை ஏற்றி கொண்டு சென்ற அந்த வானத்தை பார்த்த போக்குவரத்து காவல்துறையினர், அதனை விரட்டி பிடித்து ஓட்டுனரிடம் விசாரணை செய்ததில், அந்த ஓட்டுனர் மது அருந்தி இருப்பது தெரியவந்துள்ளது.

ராமு என்ற அந்த ஓட்டுனர் சில நாட்களுக்கு முன்தான் அந்த பள்ளியில் ஓட்டுனராக பணிக்கு சேர்ந்துள்ளார். அதற்கு முன்பு ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார். மதியம் ஓய்வாக இருந்த நேரத்தில் பள்ளி வாகனத்திலேயே மது அருந்திவிட்டு, மாலை அந்த வாகனத்தில் மாணவர்களை ஏற்றி வந்துள்ளார். அந்த ஒட்டுனரை கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். காவல்துறையினர் அந்த வாகனத்தை மடக்கி பிடித்த பொழுது, அந்த வாகனத்தில் பத்துக்கும் அதிகமான பள்ளி குழந்தைகள் இருந்துள்ளனர்.

பள்ளி வாகனங்களுக்கு ஓட்டுனர்களை நியமிக்கும் பொழுது அந்த ஓட்டுனர்களின் நன்னடத்தையை நிர்வாகம் பார்ப்பது இல்லை. அதோடு இளவயதுடைய ஓட்டுனர்களை நியமித்தால் அவர்கள் வேகத்தை கட்டுப்படுத்த விரும்புவதில்லை.பல பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுபாட்டு கருவியே செயல்படாமல் உள்ளது. அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அதன் விளைவாகத்தான் பள்ளி வாகனங்களின் விபத்து தற்பொழுது அதிகரித்து வர காரணமாகி வருகிறது.
இனிமேலும், அரசு அக்கறை காட்டாவிட்டால் இதனால் ஏற்படும் விபரீதம் காலத்தால் அழியாத சுவட்டை அரசுக்கு ஏற்படுத்திவிடும் என்பது மட்டும் நிதர்சனம்.

 - விகடன் - 21/07/2015

Jul 14, 2015

கிரிமினல்களே நிர்வகிக்கும் பொழுது....!

பீகார் மாநிலம்  கிஷ்ன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மத்திய சிறை சாலையில் துணை சிறை அதிகாரியாக இருப்பவர் கிரிபா சங்கர் பாண்டே.  இவர் சிறைகைதிகளுடன் இயற்கைக்கு மாறான வகையில் உறவு கொள்ளும் வீடியோ ஆபாச இணைய தளங்களில் பதிவேற்றம் செய்து, இப்பொழுது பரவலாக பரவிவருகிறது!

அதிகாரி கிரிபா சங்கரால் பாதிக்கப்பட்ட கைதிகள் வீடியோ எடுத்து வெளியில் விட்டதாக சந்தேகிக்கிறார்கள். ஏற்கனவே மேலதிகாரிகளுக்கு சில வீடியோக்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள். பீகார் தானே அப்படித்தான் இருக்கும் என நீங்கள் நினைத்தால்….

 சில ஆண்டுகளுக்கு முன், ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை என பெயர் பெற்ற சென்னை புழல் சிறையில் வரலாற்றில் முதன் முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை  எஸ்.பி, டி.எஸ்.பிக்கள் அடங்கிய 50 பேர்  கொண்ட குழு சோதனை நடத்தியது.

சிறையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான பீடி, சிகரெட், பான்பராக், குட்கா தாராளமாய் கட்டு கட்டாய் சிக்கின. கைதிகளுக்கான உணவு பொருட்கள் அதன் உண்மை இருப்பைக் காட்டிலும் மிக அதிகமாகவோ அல்லது மிக குறைவாகவோ இருந்தன.  வெளி மார்க்கெட்டில் நிறைய கடத்தி விற்பனை செய்கிறார்கள் என்று எழும் புகார் தனி.


இது தவிர... ஆபாச டிவிடிக்கள் நிறைய சிக்கியிருக்கின்றன. அதுவும் துணை ஜெயிலர் அறையில் 21 ஆபாச சிடிக்கள் கிடைத்திருக்கின்றன நான்கு கைதிகளின் அறையில் விதிமுறைகளை மீறி கேபிள் டிவி இணைப்புடன் தொலைக்காட்சி பெட்டிகள் இருந்திருக்கின்றன.


சிறை அதிகாரிகள், வார்டன்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை, கிளுகிளுப்பான படங்களை ஏன் கைதிகளுக்கு சப்ளை செய்கிறார்கள்? கைதிகள் மீது பாசமா? எல்லாம் பணத்திற்காக தான்.


சோதனையின் பொழுது.. சிறை அதிகாரிகள், வார்டன்கள், சிறை மருத்துவர் ஆகியோர்களிடம் சில ஆயிரம் லஞ்சப்பணம் சிக்கியிருக்கிறது.


வெளியே ஒரு சிகரெட் ரூ. 3 என்றால்.. சிறையில் ரூ. 10. வெளியே கஞ்சா பொட்டணம் ரூ. 5 என்றால்... உள்ளே பல மடங்கு. இது தவிர மருத்துவமனைக்கு போக வேண்டுமா? கறிக்கஞ்சி வேணுமா? மருத்துவருக்கு லஞ்சம் கொடுத்தால்... அவர் பரிந்துரைப்பார்.

ஏற்கனவே புழல் சிறையில் வழக்கமான துறை வாரியான சோதனையின் பொழுதே... 30க்கும் மேற்பட்ட செல்போன்கள், 2 பென்டிரைவர்கள், 12 கிலோ கஞ்சா சிக்கின. மேலும் ஆபாச டிவிடிக்கள் சிக்கியிருக்கும் பொழுது...டிவிடி பிளேயரும் மாட்டியிருக்க வேண்டும். சிறையில் சகல நடவடிக்கைகளிலும், சகல மட்டத்திலும் லஞ்சம் விளையாடும் பொழுது, பிடிபட்ட பொருள்களும், பணமும் குறைவாக இருக்கிறதே என யோசிக்கும் பொழுது, அதற்கும் பதில் இருக்கிறது.


லஞ்ச ஒழிப்புத்துறை மதியம் 1 மணிக்கு போய் அனுமதி கேட்டு, வேண்டுமென்றே அரை மணி நேரத்திற்கும் மேலாக இழுத்தடித்து தான் உள்ளே அனுமதித்து இருக்கிறார்கள். அரைமணி நேரத்தில் எவ்வளவோ மறைக்கலாமே!


சகல மட்டத்திலும் இப்படி லஞ்சம் விளையாடுவது அரசுக்கு தெரியாதா என்ன? எல்லாம் தெரியும். தெரிந்து... கண்டும் காணாமல் இருக்கிறது. சிறைக்கு வெளியே பத்திரிக்கைகள், பொதுமக்கள் என கண்காணிப்பு இருக்கும் பொழுதே சமூகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடும் பொழுது, சிறை காவல்துறையின் பேட்டை! அங்கு சொல்லவா வேண்டும்.


காசு கொடுத்தால் எல்லாம் கிடைக்கும் இந்த சிறையில் தான்.... அரசியல் ரீதியாக கைதாகும் முற்போக்கு மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்கள் சிறையில் இருக்கும் பொழுது, ஒவ்வொரு அடிப்படை உரிமைக்கும் போராடும் பொழுது, அங்கு நடக்கும் முறைகேடுகள் பற்றிய செய்திகள் வெளியே வருகின்றன.


குற்றங்கள் புரிந்து உள்ளே செல்லும் கைதிகளை சீர்ப்படுத்தி, திருத்தி அனுப்பும் வேலையை சிறை செய்வதாக சொல்கிறார்கள். கிரிமினல்களே நிர்வகிக்கும் பொழுது.... இது எப்படி சாத்தியப்படும்?

Jul 12, 2015

மாற்றம்! முன்னேற்றம்!

காலையில் எழுந்து தூக்க கலக்கத்தில் தினசரியைப் பார்த்தேன். முழுப் பக்கத்தில் அன்புமணி எங்கேயோ விட்டத்தைப் பார்த்து மிரள்வதாக தெரிந்தது. வீட்டில் பிள்ளைகள் பார்த்தால், பயப்படப்போகிறார்கள் என ஒளித்து வைத்தேன்.

 ஏதோ திரில்லர் படம். அன்புமணி நடிக்கப்போகிறார் என நினைத்தேன். அன்புமணி நம்ம நடிகர் அருண்பாண்டியன் போல! உணர்ச்சி செத்த முகமாயிற்றே! ’அதுக்கெல்லாம் இவர் சரிப்பட்டுவர‌மாட்டாரே!” என நினைத்தேன்.

கீழே சின்ன எழுத்தில் anbumani4cm.com என்றிருந்தது. தேர்தல் நெருங்குகிறது அல்லவா! இப்படி பல அதிர்ச்சிகளை காண மனதை தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என நினைத்தேன்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

Jul 2, 2015

சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறை!

மெட்ரொ ரயில் பணிகள் பல மாதங்களுக்கு முன்பே பணிகள் முடிந்துவிட்டன. “ஆத்தா’ ஜெயிலிருந்து வெளியே வந்து திறக்கும்வரை மக்கள் காக்கவேண்டியதாகிவிட்டது. இல்லையென்றால், ”மெட்ரோ ரயிலை ஓடவிடு” என ’மம்மி’ முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆட்சியிலே மக்கள் பெரும் போராட்டமே செய்யவேண்டிதிருக்கும்!

ஒருவழியாக மெட்ரோ ரயில் கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரைக்கும் ஓட ஆரம்பித்துவிட்டது. பயணக் கட்டணத்தை கேட்டாலே அலர்ஜியாக இருக்கிறது. 10 கி.மீக்கு ரூ. 40 கட்டணமாம். குறைந்தபட்ச கட்டணம் ரூ.10யாம். தலைநகர் தில்லியில் கூட இவ்வளவு கட்டணம் இல்லை. இந்த ஆட்சி பெரும்பான்மை மக்களை எல்லாம் மக்களாகவே மதிப்பதேயில்லை. நடைமுறையில் காசு இருப்பவனுக்கு ’தரமான’ கல்வி! என அமுல்படுத்துவதை போல காசு இருப்பவனுக்கு மெட்ரோ ரயில்! என புதிய மனுநீதியை அமுல்படுத்துகிறது!

மக்கள் நல அரசு என்றால் மெட்ரோ ரயிலை சேவையாக பார்க்கும். மக்கள் விரோத அரசு என்பதால், கல்லாவை நிரப்ப பார்க்கும் ஒரு முதலாளியை போல அரசு சிந்திக்கிறது. அதனால் தான், உலகின் பெரிய இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்க மத்திய அரசு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவருகிறது. அதை எதிர்த்து ரயில்வே தொழிலாளர்கள் போராடிவருகிறார்கள்.

ஓட்டுக்கட்சி தலைவர்கள் எல்லாம் நீண்ட அறிக்கை விடுப்பதோடு தங்கள் கடமை முடிந்துவிடுவதாக நினைத்துக்கொள்கிறார்கள். தங்களிடம் இருக்கும் “கோடிக்கணக்கான” அணிகளை கொண்டு போராட மறுப்பதேன்?

மக்களாகிய நாம் போராடுவதின் மூலம் தான் ரயில் சேவையை மக்கள் சேவையாக மாற்றமுடியும்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
90946 66320

Mar 23, 2015

பாலியல் பலாத்காரத்தை நிரூபிக்க நான்கு ஆண்கள் சாட்சியம் சொல்லவேண்டும்!




Rehana_jabbari
சமீபத்தில் உலக அளவிலும், இந்திய அளவிலும் நிகழ்ந்த பெண் சம்பந்தமான மூன்று நிகழ்வுகள் கவனிக்கத்தக்கவை

ஈரானைச் சார்ந்த ரெஹனா ஜாப்பரி என்ற 19 வயது இளம்பெண். தன்னை பாலியல் பலாத்காரம் செய்யவந்த பெண் பித்தனான முன்னாள் உளவுத்துறை உயரதிகாரியிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள போராடியபொழுது, அவன் செத்துபோனான்.  அரசோ “சதிகாரி, கொலைகாரி” என வழக்கை ஜோடித்து, 26வயதில் தூக்கிலேற்றி கொன்றுவிட்டார்கள்.  இறப்பதற்கு முன்பு தன் அம்மாவுக்கு பேசிய “நல்லதொரு நெறிக்காக ஒருவர் தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது பாடுபட வேண்டும் என்று சொல்லியிருந்தாயே அம்மா! அதைத்தானே செய்தேன்” என்று பேசுகிற ஒலிநாடா உரை உலகமெங்கும் பலரையும் உலுக்கிகொண்டிருக்கிறது 

சவுதி அரேபியாவில் ஒரு பெண் சந்தர்ப்ப சூழ்நிலையில் காரில் ஒருவனிடம் லிப்ட் கேட்க, அவன் தனது பொறுக்கி நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டான்.  அதனால் கர்ப்பமான அந்த பெண், கலைக்க முயன்று முடியாது போனதால், அரசுக்கு தெரியவந்தது. அவர்களின் சட்ட நடைமுறைப்படி தனக்கு நேர்ந்த துயரத்தை அந்த பெண் நிரூபிக்க வேண்டுமென்றால் நான்கு ஆண்கள் சாட்சி சொல்லவேண்டுமாம். அப்படி ’சாட்சிகளை’ வைத்து நிரூபிக்க தவறினால் அதற்கும் தண்டனை உண்டாம்.  இப்பொழுது அந்த பெண்ணுக்கு தகாத உறவால் வந்த கர்ப்பம் என ’கண்டுபிடித்து’ ஒரு ஆண்டு சிறைதண்டனையும், 100 கசையடிகள் என தீர்ப்பளித்தனர்.  தண்டனையை குழந்தை பிறப்பிற்கு பிறகு நிறைவேற்றலாம் என ‘கருணை’ காட்டியுள்ளனர் இஸ்லாமிய மதவெறி நீதியரசர்கள்.

சர்வதேச சூழ்நிலையில் பெண்களின் நிலை  இப்படி இருக்கிறது என்றால், இந்திய நிலையோ அதை விட மோசமாக இருக்கிறது.

தில்லி  மருத்துவகல்லூரி மாணவியை கொடூரமாக ஒரு பொறுக்கி கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, நடுத்தெருவில் அலட்சியமாக தூக்கி எறிந்துபோனதும், பிறகு நினைவு திரும்பாமலேயே இறந்துபோனதும் என்றென்றைக்கும் நம் மனதைவிட்டு அகலாதவை.  இப்பொழுது, அந்த பெண்ணை பற்றி, “இந்தியாவின் மகள்” என பிபிசி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.  அதில் மரணதண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ்சிங் "ஒரு கை ஓசை எழுப்ப முடியாது. இரண்டு கைகளும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை வரும். நாகரிகமான இளம்பெண் இரவு 9மணிக்கு வெளியில் சுற்றிக் கொண்டிருக்கமாட்டாள். எனவேதான் பலாத்கார விஷயத்தில் ஆணை விட பெண்ணுக்கே அதிக பொறுப்புள்ளது என்கிறேன். ஆணும் பெண்ணும் சமம் அல்லர். வீட்டுவேலைகள், வீட்டைப் பராமரிப்பதுதான் பெண்களின் வேலை. அரைகுறை ஆடை அணிந்துகொண்டு டிஸ்கோக்களுக்கும் பார்களுக்கும் இரவு நேரங்களில் சென்று தவறான செயல்களில் ஈடுபடுவது பெண்களின் வேலை இல்லை. வெறும் 20 சதவீத பெண்கள்தான் நல்லவர்களாக இருக்கின்றனர்.  

அந்த பெண்ணும், அவரது நண்பரும் எங்களை திருப்பி தாக்காமல் இருந்திருந்தால் நாங்கள் தாக்கியிருக்கமாட்டோம்.  நாங்கள் பாலியல் பலாத்காரம் செய்தபொழுது அமைதியாக அனுமதித்திருக்கவேண்டும். அனுமதித்திருந்தால் அவர்கள் தாக்கப்பட்டு இருக்கமாட்டார்கள். மேலும் எங்களை இந்த வழக்கில் தூக்கில் போட்டால், எதிர்காலத்தில் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்குதான் அதிக ஆபத்து ஏற்படும். மரண தண்டனைப் பெண்களுக்கு பிரச்சினையை மேலும் பயங்கரமாக்கி விடும். இதற்கு முன்பெல்லாம் பலாத்காரம் நடந்த போது அதில் ஈடுபட்டவர்கள், ‘அவளை விட்டுவிடு.. வெளியில் யாரிடமும் சொல்ல மாட்டாள்என்பார்கள். இனிமேல் பலாத்காரம் செய்தால், சம்பந்தப்பட்ட பெண்ணைக் கொன்று விடுவார்கள் என வக்கிரமாக பேட்டியளித்திருக்கிறான்.

முகேஷ்சிங் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்குரைஞர் ஏ.பி. சிங்கோ "என் மகளோ சகோதரியோ திருமணத்துக்கு முன்பு இதுபோல் வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்தால், பண்ணை வீட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்திருப்பேன்" என திமிராக பேட்டியளித்திருக்கிறார்.

ஏற்கனவே நிலவுடைமை ஆணாதிக்க பண்பாடு  மேலோங்கி நிற்கும் நமது சமூகத்தில், ஏகாதிபத்திய பண்பாட்டு சீரழிவு இணையும் பொழுது, கள்குடித்த குரங்காகிவிடுகிறது. குற்றவாளி முகேஷ்சிங்கும், வழக்குரைஞரும் இருவரும் இந்த சமூகத்தின் வகைமாதிரிகள்.  இந்த பின்னணியில் தான்,  இந்தியாவில் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை குறிப்பாக ஒடுக்கப்பட்ட, தலித் பெண்கள் மீது பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறார்கள். மாற்றுச் சாதியைச் சேர்ந்த இளைஞனை காதலித்த ”குற்றத்திற்கான” தண்டனையாக கிராம பஞ்சாயத்து மூலம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் ”தண்டனையை” நிகழ்த்துகிறார்கள்.

காவல்நிலையங்களில் பாலியல் குற்றங்களை பதிவு செய்யாமலே இழுத்தடிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளுடன் இணைந்துகொண்டு, மிரட்டுகிறார்கள்.  பெண்கள் விடுதலை முன்னணி நடத்திவரும் சென்னை வால்டாக்ஸ் ஜெயஸ்ரீ வழக்கே அதற்கு ஆதாரம்.
குடிமக்களை காக்கவேண்டிய நிலவுகிற அரசோ, மேலும் மேலும் சமூக விரோதமாகிவருகிறது. ஆளும் வர்க்கம் ஆளுகிற தகுதியை இழந்துவிட்டது. இந்த அரசமைப்பை  தூக்கியெறிந்து, அதிகாரத்தை பெரும்பான்மை உழைக்கும் மக்களே கையில் எடுக்கும் காலம் வந்துவிட்டது!  சமூகத்தில் சரிபாதி பெண்களான நாம் அமைப்பாகாமல் சாத்தியமில்லை! நம் உரிமைகளை மீட்பதும் சாத்தியமில்லை! அதனால் அமைப்பாவோம்! போராட்டங்களை கட்டியமைப்போம்! நமது உரிமைகளை மீட்டெடுப்போம்!

Aug 5, 2014

பெண் நீதிபதிக்கே இந்த கதி!



தில்லி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு பிறகு, நாடு முழுவதும் போராட்டங்களும் அதை தொடர்ந்து விவாதங்களும் நடைபெற்றன! கடுமையான சட்டங்கள் கூட இயற்றப்பட்டன.  ஆனால், சம்பவங்கள் குறைந்தபாடில்லை.  இதோ, குவாலியரில் பெண்கள் பாலியல் பிரச்சனையை விசாரிக்கும் விசாகா கமிட்டிக்கு பொறுப்பான பெண் நீதிபதியே பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டு, பணியை ராஜினாமாவும் செய்துள்ளார். 
****

மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக மாவட்டக் கூடுதல் நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவுக்கு, அவர் அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

குவாலியர் நீதித்துறை நிர்வாகத்தை கவனிக்கும் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி, எனது பணியின் மீது அதிக ஆர்வம் காட்டினார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நீதித்துறை அதிகாரி ஒருவரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன்.

அப்போது எனது மகள் முன்னிலையில் என்னைப் பற்றி அநாகரீகமான முறையில் பேசினார்மேலும், நீதித்துறை அதிகாரி ஒருவரின் மனைவி தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு, திரைப்படப் பாடல் இசைக்கு நான் நடனமாட வேண்டும் என்றும், அதைக் காண உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்வத்துடன் இருக்கிறார் என்றும் தெரிவித்தார். என்னை தனிமையில் தனது பங்களாவுக்கு வந்து சந்திக்கும்படி நீதிபதி தெரிவித்தார்.

ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதியின் விருப்பத்துக்கு நான் அடிபணியவில்லை. இதனால் குவாலியரில் இருந்து சித்திக்கு என்னை அந்த நீதிபதி இடமாற்றம் செய்ய வைத்தார்.

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்திக்க முயன்றும், என்னால் முடியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதியை நான் தொடர்பு கொண்டபோது, எனக்கு அவர் மிரட்டல் விடுத்தார்.

எனவே வேறு வழியின்றி கடந்த மாதம் 7ஆம் தேதி பதவியை ராஜிநாமா செய்து விட்டேன். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பெண் நீதிபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

லோதா கருத்து: இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதா, பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், "இது மிகவும் முக்கியமான விவகாரம் ஆகும். இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பு கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும்' என்றார்.

பொதுநல வழக்கு: இந்நிலையில், பெண் நீதிபதியால் குற்றம்சாட்டப்பட்ட மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்..ஆர்.) பதிவு செய்யவும், இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும், உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் மனோகர் லால் சர்மா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதேபோல், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் தலைமையில் பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதியை உயர் நீதிமன்றம் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

குற்றச்சாட்டு நிரூபணமானால் தண்டனைக்குத் தயார்: உயர்நீதிமன்ற நீதிபதி
 
பெண் நீதிபதி தெரிவித்துள்ள குற்றச்சாட்டு நிரூபணமானால் தூக்கு தண்டனையை ஏற்கவும் தயார் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. இது குறித்து சிபிஐ அல்லது எந்த அமைப்பின் விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதம், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமணி, 05/08/2014