Mar 23, 2015

பாலியல் பலாத்காரத்தை நிரூபிக்க நான்கு ஆண்கள் சாட்சியம் சொல்லவேண்டும்!




Rehana_jabbari
சமீபத்தில் உலக அளவிலும், இந்திய அளவிலும் நிகழ்ந்த பெண் சம்பந்தமான மூன்று நிகழ்வுகள் கவனிக்கத்தக்கவை

ஈரானைச் சார்ந்த ரெஹனா ஜாப்பரி என்ற 19 வயது இளம்பெண். தன்னை பாலியல் பலாத்காரம் செய்யவந்த பெண் பித்தனான முன்னாள் உளவுத்துறை உயரதிகாரியிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள போராடியபொழுது, அவன் செத்துபோனான்.  அரசோ “சதிகாரி, கொலைகாரி” என வழக்கை ஜோடித்து, 26வயதில் தூக்கிலேற்றி கொன்றுவிட்டார்கள்.  இறப்பதற்கு முன்பு தன் அம்மாவுக்கு பேசிய “நல்லதொரு நெறிக்காக ஒருவர் தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது பாடுபட வேண்டும் என்று சொல்லியிருந்தாயே அம்மா! அதைத்தானே செய்தேன்” என்று பேசுகிற ஒலிநாடா உரை உலகமெங்கும் பலரையும் உலுக்கிகொண்டிருக்கிறது 

சவுதி அரேபியாவில் ஒரு பெண் சந்தர்ப்ப சூழ்நிலையில் காரில் ஒருவனிடம் லிப்ட் கேட்க, அவன் தனது பொறுக்கி நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டான்.  அதனால் கர்ப்பமான அந்த பெண், கலைக்க முயன்று முடியாது போனதால், அரசுக்கு தெரியவந்தது. அவர்களின் சட்ட நடைமுறைப்படி தனக்கு நேர்ந்த துயரத்தை அந்த பெண் நிரூபிக்க வேண்டுமென்றால் நான்கு ஆண்கள் சாட்சி சொல்லவேண்டுமாம். அப்படி ’சாட்சிகளை’ வைத்து நிரூபிக்க தவறினால் அதற்கும் தண்டனை உண்டாம்.  இப்பொழுது அந்த பெண்ணுக்கு தகாத உறவால் வந்த கர்ப்பம் என ’கண்டுபிடித்து’ ஒரு ஆண்டு சிறைதண்டனையும், 100 கசையடிகள் என தீர்ப்பளித்தனர்.  தண்டனையை குழந்தை பிறப்பிற்கு பிறகு நிறைவேற்றலாம் என ‘கருணை’ காட்டியுள்ளனர் இஸ்லாமிய மதவெறி நீதியரசர்கள்.

சர்வதேச சூழ்நிலையில் பெண்களின் நிலை  இப்படி இருக்கிறது என்றால், இந்திய நிலையோ அதை விட மோசமாக இருக்கிறது.

தில்லி  மருத்துவகல்லூரி மாணவியை கொடூரமாக ஒரு பொறுக்கி கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, நடுத்தெருவில் அலட்சியமாக தூக்கி எறிந்துபோனதும், பிறகு நினைவு திரும்பாமலேயே இறந்துபோனதும் என்றென்றைக்கும் நம் மனதைவிட்டு அகலாதவை.  இப்பொழுது, அந்த பெண்ணை பற்றி, “இந்தியாவின் மகள்” என பிபிசி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.  அதில் மரணதண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ்சிங் "ஒரு கை ஓசை எழுப்ப முடியாது. இரண்டு கைகளும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை வரும். நாகரிகமான இளம்பெண் இரவு 9மணிக்கு வெளியில் சுற்றிக் கொண்டிருக்கமாட்டாள். எனவேதான் பலாத்கார விஷயத்தில் ஆணை விட பெண்ணுக்கே அதிக பொறுப்புள்ளது என்கிறேன். ஆணும் பெண்ணும் சமம் அல்லர். வீட்டுவேலைகள், வீட்டைப் பராமரிப்பதுதான் பெண்களின் வேலை. அரைகுறை ஆடை அணிந்துகொண்டு டிஸ்கோக்களுக்கும் பார்களுக்கும் இரவு நேரங்களில் சென்று தவறான செயல்களில் ஈடுபடுவது பெண்களின் வேலை இல்லை. வெறும் 20 சதவீத பெண்கள்தான் நல்லவர்களாக இருக்கின்றனர்.  

அந்த பெண்ணும், அவரது நண்பரும் எங்களை திருப்பி தாக்காமல் இருந்திருந்தால் நாங்கள் தாக்கியிருக்கமாட்டோம்.  நாங்கள் பாலியல் பலாத்காரம் செய்தபொழுது அமைதியாக அனுமதித்திருக்கவேண்டும். அனுமதித்திருந்தால் அவர்கள் தாக்கப்பட்டு இருக்கமாட்டார்கள். மேலும் எங்களை இந்த வழக்கில் தூக்கில் போட்டால், எதிர்காலத்தில் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்குதான் அதிக ஆபத்து ஏற்படும். மரண தண்டனைப் பெண்களுக்கு பிரச்சினையை மேலும் பயங்கரமாக்கி விடும். இதற்கு முன்பெல்லாம் பலாத்காரம் நடந்த போது அதில் ஈடுபட்டவர்கள், ‘அவளை விட்டுவிடு.. வெளியில் யாரிடமும் சொல்ல மாட்டாள்என்பார்கள். இனிமேல் பலாத்காரம் செய்தால், சம்பந்தப்பட்ட பெண்ணைக் கொன்று விடுவார்கள் என வக்கிரமாக பேட்டியளித்திருக்கிறான்.

முகேஷ்சிங் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்குரைஞர் ஏ.பி. சிங்கோ "என் மகளோ சகோதரியோ திருமணத்துக்கு முன்பு இதுபோல் வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்தால், பண்ணை வீட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்திருப்பேன்" என திமிராக பேட்டியளித்திருக்கிறார்.

ஏற்கனவே நிலவுடைமை ஆணாதிக்க பண்பாடு  மேலோங்கி நிற்கும் நமது சமூகத்தில், ஏகாதிபத்திய பண்பாட்டு சீரழிவு இணையும் பொழுது, கள்குடித்த குரங்காகிவிடுகிறது. குற்றவாளி முகேஷ்சிங்கும், வழக்குரைஞரும் இருவரும் இந்த சமூகத்தின் வகைமாதிரிகள்.  இந்த பின்னணியில் தான்,  இந்தியாவில் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை குறிப்பாக ஒடுக்கப்பட்ட, தலித் பெண்கள் மீது பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறார்கள். மாற்றுச் சாதியைச் சேர்ந்த இளைஞனை காதலித்த ”குற்றத்திற்கான” தண்டனையாக கிராம பஞ்சாயத்து மூலம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் ”தண்டனையை” நிகழ்த்துகிறார்கள்.

காவல்நிலையங்களில் பாலியல் குற்றங்களை பதிவு செய்யாமலே இழுத்தடிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளுடன் இணைந்துகொண்டு, மிரட்டுகிறார்கள்.  பெண்கள் விடுதலை முன்னணி நடத்திவரும் சென்னை வால்டாக்ஸ் ஜெயஸ்ரீ வழக்கே அதற்கு ஆதாரம்.
குடிமக்களை காக்கவேண்டிய நிலவுகிற அரசோ, மேலும் மேலும் சமூக விரோதமாகிவருகிறது. ஆளும் வர்க்கம் ஆளுகிற தகுதியை இழந்துவிட்டது. இந்த அரசமைப்பை  தூக்கியெறிந்து, அதிகாரத்தை பெரும்பான்மை உழைக்கும் மக்களே கையில் எடுக்கும் காலம் வந்துவிட்டது!  சமூகத்தில் சரிபாதி பெண்களான நாம் அமைப்பாகாமல் சாத்தியமில்லை! நம் உரிமைகளை மீட்பதும் சாத்தியமில்லை! அதனால் அமைப்பாவோம்! போராட்டங்களை கட்டியமைப்போம்! நமது உரிமைகளை மீட்டெடுப்போம்!

1 comment:

Elini Palanisamy said...

This is ridiculous rule sister