Showing posts with label படித்ததில் பிடித்தவை. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தவை. Show all posts

Feb 29, 2016

சீனாவில் காற்றை விற்று கல்லா கட்டும் கனடா முதலாளிகள்!



சாய்ஜிங் என்ற சீனப் பெண் இயக்குநர் இயக்கி வெளியிட்ட “மாடத்திற்குக் கீழே” (Under the Dome) என்ற ஆவணப்படம் அண்மையில் வெளியானபோது, அதனை ஐந்தே நாளில் ஐம்பது இலட்சம் பேர் பார்த்தார்கள்.

இந்த ஆவணப்படம் ஒரு தாய் தனது பள்ளி செல்லும் மகளை வீட்டை விட்டு வெளியில் விளையாட அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதன் காரணத்தை விளக்கும் போக்கில் விரிகிறது.

சீன நகரங்களில் எங்கும் பரவியிருக்கும் அடங்காத புழுதிப்படலங்கள் உள் இழுக்க தகுதியற்றவை, பல நோய்களை உருவாக்கும் ஆபத்து உண்டு என்பதால் தனது மகளை அத்தாய் வீட்டிற்குள்ளேயே பூட்டி வைக்கிறாள். இச்சிக்கல் பற்றி, அந்த ஆவணப்படம் விவாதிக்கிறது. (சீனாவின் புழுதிப்படலம் குறித்து இவ்விதழில் வேறொரு கட்டுரை விரிவாக விவாதிக்கிறது).

மக்கள் ஏதாவதொரு இன்றியமையாப் பொருள் கிடைக்காமல் திண்டாடினால், அந்தப் பற்றாக்குறைச் சூழலை தனது சந்தை வாய்ப்பாகக் கருதுவதுதான் முதலாளியம். மக்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு என்றால் அது தண்ணீர் முதலாளிகளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. முதலாளியத்தின் சந்தை விதி அது!

இருபது - இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் குடி தண்ணீர் ஓர் விற்பனைப் பொருளாகும் என்று நாம் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டோம். ஆனால், இன்று மாநகரங்கள், சிறு நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களில்கூட தண்ணீர் வணிகம் விரிவடைந்துவிட்டது. நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்க மக்களுக்கு மளிகைப் பொருள் பட்டியலில் குப்பித் தண்ணீரும் சேர்ந்துவிட்டது. வரும் 2018-க்குள் இந்தியாவில் நடைபெறும் குடி தண்ணீர் வணிகம் 9 இலட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயைத் தொடும் என அரசின் ஆய்வறிக்கைகளே கூறுகின்றன.

தண்ணீரைத் தொடர்ந்து இப்போது, சுவாசிக்கும் காற்றும் விற்பனைப் பண்டமாக மாறத் தொடங்கி விட்டது. இது மனித குலத்தைச் சூழ்ந்துள்ள மிகப்பெரிய ஆபத்தைக் குறிக்கிறது.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங் தொடங்கி அந்நாட்டின் பல்வேறு நகரங்கள் வாரக் கணக்கில் -- மாதக் கணக்கில், புழுதிப்படலத்தால் சூழப்பட்டு பகலிலேயே வாகனங்கள் விளக்கு வெளிச்சம் பாய்ச்சி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அங்குள்ள காற்று மூச்சுவிடத் தகுதியற்றதாக மாறிவிட்டது. மூக்கில் பாதுகாப்புக் கவசம் அணிந்து செல்வது என்பதையெல்லாம் தாண்டி, மிகப்பெரும் அளவிற்கு தூசுப்படலத்தின் அடர்த்தி அதிகரித்ததால்தான் கடந்த 24.12.2015 அன்று சீன அரசு அபாய அறிவிப்பை (Red Alert) வெளியிட்டது.

இந்த அபாய அறிவிப்பு கனடா நாட்டின் ஓர் நிறுவனத்தை மகிழ்ச்சிக் கூத்தாட வைத்தது. ‘வைட்டாலிட்டி ஏர்’ (Vitality Air) என்ற கனடா நாட்டின் தனியார் நிறுவனம் இதுவரை யாரும் நினைத்துப் பார்த்திராத ஒரு வணிகத்தில் இறங்கியது. அதுதான் காற்று வணிகம்!

அந்த நிறுவனத்தின் 2 முதலாளிகளில் ஒருவரான மோசஸ் லாம் சீன அரசின் அபாய அறிவிப்பு வந்த நாளில் இலண்டன் மாநகரத்தில் தி டெலிகிராப் என்ற இதழுக்கு அளித்த செவ்வியில், “சீன மாநகரங்களில் நீங்காமல் நின்று நிலைத்துவிட்ட புழுதிப்படலங்கள் எங்களுக்கு ஓர் புதிய சந்தை வாய்ப்பாக அமைந்தன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி எங்கள் நிறுவனம் ஏற்கெனவே ஓர் கப்பல் நிறைய காற்று புட்டிகளை (பாட்டில்களை) சீனாவிற்கு அனுப்பிவிட்டோம். அது விரைவாக விற்றுக் கொண்டிருக்கிறது. காற்று வணிகத்திற்கு சீனா மட்டுமின்றி இந்தியா, துபாய் ஆகிய நாடுகளும் விரிந்த சந்தை வாய்ப்பை எங்களுக்கு வழங்குகின்றன. விரைவில் அந்த நாடுகளுக்கும் நாங்கள் எங்கள் காற்று வணிகத்தை விரிவாக்குவோம்” என்றார்.

இந்த காற்று புட்டிகள் இயல்பிலேயே எடைக் குறைவானவை என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஒரு காற்று பாட்டில் எடை 15 கிராம்தான். எனவே, இந்த பாட்டில்களை இடுப்புப் பட்டையிலும் முதுகில் தொங்கவிட்டும் எளிதில் எடுத்துச் சென்றுவிடலாம். ஒரு காற்று பாட்டில் விலை இந்திய மதிப்பின்படி 1920 ரூபாய். “ஒரு பாட்டிலில் உள்ள தூயக் காற்றைக் கொண்டு 200 தடவை மூச்சு இழுக்கலாம்” என்று இந்த வைட்டாலிட்டி ஏர் நிறுவனத்தின் குப்பிகளில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு தடவை மூச்சு இழுக்க ரூ. 9. 60.
இது எவ்வளவு பெரிய உயிர் வணிகம்!

“இப்போதைக்கு, தண்ணீரைவிட 50 மடங்கு உயர் விலையில் எங்களது தூயக் காற்று விற்பனையாகிறது. தேவை உயரும்போது எங்கள் வாடிக்கையாளர்கள் விலை உயர்வைப் பொருட்படுத்தாமல் இதை வாங்குவார்கள் என்று நம்புகிறோம்” என்கிறார் மோசஸ்லாம்.

உண்மைதானே! மூச்சுவிடாமல் உயிர் வாழ முடியாதது தானே! அதற்கு உயிர் வாழ விரும்பும் யாரும் காசு கொடுத்துதான் ஆக வேண்டும் என்றால் கொடுத்துத்தானே தீர வேண்டும்.

அதன் மறுபக்கம் என்ன? காசு கொடுத்து காற்று வாங்க வழியில்லாதவர்கள் சாக வேண்டும் என்பதுதானே!

முதலாளியத் தொழில் வளர்ச்சியும், அது வளர்த்துவிட்டுள்ள “வளர்ச்சி வாதமும்” (Growthism) எவ்வளவுக் கொடூரமானவை, மனிதகுலத்திற்கு எதிரானவை என்பதை இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.
இது ஏதோ சீன நாட்டின் சிக்கல் மட்டுமல்ல. அது இந்தியாவையும் தமிழ்நாட்டையும் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனம் (WHO) 2015 தொடக்கத்தில் வெளியிட்ட அறிக்கை, உலகின் தூய்மைக் கேடான 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் இருக்கின்றன என்றும், இந்நகரங்களின் தூசுப் படலம் அபாய அளவைத் தாண்டிக் கொண்டிருக்கிறது என்றும் எச்சரித்தது.

காற்று மண்டலத்தின் தூய்மை அளவை கணக்கிடுவதில் தூசு அளவு ஓர் முக்கியக் காரணியாகக் கொள்ளப்படுகிறது. இந்த தூசுப்படலங்கள் அவற்றின் சுற்றளவை வைத்து இரண்டு வகையாகப் பிரிக்கப் படுகின்றன. மிதக்கும் தூசியின் சுற்றளவை வைத்து அவை PM 2.5, PM 10 என வகைப்படுத்தப் படுகின்றன. இதில், 2.5 என்பது 2.5 மைக்ரோ மில்லி மீட்டர் சுற்றளவுள்ள தூசுத் துகள்களைக் (Particulate Matter) குறிக்கும், 10 என்பது 10 மைக்ரோ மில்லிமீட்டர் சுற்றளவுள்ள தூசுத் துகள்களைக் குறிக்கும். (1 மைக்ரோ மில்லி மீட்டர் என்பது மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்கைக் குறிக்கும்).

இந்த இரண்டுவகை தூசுத் துகள்களும் ஆபத்தானவைதான் என்ற போதிலும், PM 2.5 தூசுகள் மிக எளிதாக மூச்சுக் காற்றுடன் கலந்து உள்ளிழுக்கப் பட்டுவிடும். இந்த தூசுக் காற்றை சில மாதங்கள் சுவாசித்தால் ஆஸ்துமா நோயும், தொடர்ந்து சுவாசித்தால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களும் ஏற்படும்.

நாம் சுவாசிக்கும் காற்றில் இந்த PM 2.5 தூசு ஒரு கன மீட்டர் காற்றில் 25 மைக்ரோ கிராம் அளவுக்குள் இருந்தால், மனித உடலின் எதிர்ப்பு சக்தியே அவற்றை சரி செய்து கொள்ளும். அதற்குமேல் போனால், ஆபத்துதான்!
ஆனால், சென்னையின் காற்றின் மாசுபாட்டை அளந்து கூறிய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை, சென்னையின் கத்திவாக்கம், அண்ணா நகர், வள்ளுவர் கோட்டம், தியாகராயர் நகர் ஆகிய அனைத்து மையங்களிலும் 2015 ஏப்ரல் தொடங்கி நவம்பர் முடிய இருந்த மொத்தமுள்ள 243 நாட்களில் 233 நாட்கள் அபாய அளவைத் தாண்டிய தூசு மாசோடுதான் சென்னையின் காற்று இருந்ததை அறிவிக்கிறது. அதாவது, அபாய அளவைத் தாண்டிய தூசுக் காற்றைத்தான் மிகப்பெரும்பாலான நாட்கள் சென்னை மக்கள் சுவாசித்திருக்கிறார்கள்.

இப்போது பெரு வெள்ளப் பேரிடர் தாக்கியப் பிறகு, திசம்பரில் தூசு அளவு பல மடங்கு உயர்ந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. அன்றாடம் சாலையில் பயணிப்போர் அனைவரும் உணரக்கூடிய பேரிடர் இது!
உலகின் தூசு மாசு நிறைந்த நகரங்களில் முன்னணி வரிசையில் உள்ள நகரம் தில்லி. இப்போது, அங்கு அடுக்குமாடி வீடு கட்டும் முதலாளிகள், “எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் மையப்படுத்தப்பட்ட காற்றுத் தூய்மையாக்கிகள் (Air Pàrifier) இணைக்கப்பட்டுள்ளன” என்று விளம்பரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். தூயக் காற்றுள்ள வீடு வேண்டுமானால் அதற்கு அதிக விலை கொடுத்தாக வேண்டும்.

உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் போன்றவற்றில் காற்றுத் தூய்மையாக்கிகள் பொருத்தப்பட்டு அதற்கு தனியாகக் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தில்லியில் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இது விரைவில் சென்னைக்கும் - தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் வந்துவிடும்.
இது கற்பனையல்ல! தமிழகத்தை நெருங்கி வரும் ஆபத்து இது!
கடந்த 21.12.2015 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நலவாழ்வுத்துறை சார்பில் முன்வைக்கப்பட்ட ஓர் அறிக்கையில், சென்னையில் கடந்த சில ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 863 பேர் மாசுபட்ட காற்றை சுவாசித்து, அதனால் ஏற்பட்ட நோயால் இறந்து வருகிறார்கள் எனக் கூறப்பட்டது. கடந்த ஆண்டில் மட்டும் மாசடைந்த காற்றை சுவாசித்ததனால் ஏற்பட்ட நோய்களுக்காக, சென்னையில் சிகிச்சைப் பெற்ற நோயாளிகளில் 4 இலட்சத்து 62 ஆயிரம் பேர் அபாய நோயாளிகள் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

ஏற்கெனவே முதுகில் தூக்கிச் செல்லக் கூடிய காற்றுத் தூய்மையாக்கிகள் சந்தைக்கு வந்துவிட்டன. இனி, வெளியில் செல்பவர்கள் கையில் ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வது போல், முதுகில் காற்றுத் தூய்மையாக்கிகளையும் சுமந்து செல்ல வேண்டும். எல்லாவற்றுக்கும் விலை உண்டு! அதுவும் காற்றின் விலை தண்ணீரைவிட பல மடங்கு அதிகமானது.
பணமுள்ளவர்கள் உயிர் வாழட்டும் என்ற கொடிய சந்தை வாழ்க்கையை வரவேற்கப் போகிறோமா அல்லது அதை மறுத்து வாழத் தகுந்ததாக நமது மண்ணைப் பாதுகாக்கப் போகிறோமா என்பதே நமது கழுத்தை நெருக்கிக் கொண்டிருக்கும் கேள்வி.

- Sivakumar Dasarathan (from Facebook)
FilmDirector

Sep 8, 2015

ஒன்றிரண்டு துயர நினைவு கூட இல்லை! – ஒரு கடிதம்!




சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. வழக்கம் போல் வாசகர் எழுதியல்ல.  வாசகரின் தந்தை எழுதியது.  தன்னை அறிமுகம் செய்துகொண்டார் அவர்.  மத்திய அரசில் ஆரம்பநிலை அதிகாரியாக இருந்தவர்.  இரண்டாம்நிலை அதிகாரியாக ஓய்வு பெற்றார்.  இருபிள்ளைகள் இருவருமே நன்றாகப் படித்து அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலுமாக வேலை பார்க்கிறார்கள்.  இவர் திருச்சியில் மனைவியுடன் வாழ்கிறார். அவரது பிரச்சனை தனிமை தான்.  மனைவிக்கு கடுமையான கீல்வாதம்.  ஆகவே குளிர்நாடுகளில் சென்று வாழமுடியாது.  அவருக்கு ஆஸ்துமா பிரச்சனை உண்டு.

பிள்ளைகள் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழ்கிறார்கள்.  அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட ஊருக்கு வருவதில்லை என்பதே அவரது மனக்குறை.  வந்தால் அதிகபட்சம் ஐந்து நாட்கள். உடனே கிளம்பிவிடுகிறார்கள்.  அந்த ஐந்து நாட்களிலும் மொத்தமாக ஐந்து மணி நேரம் பெற்றோரிடம் செலவழித்தால் அதிகம்.  ‘உங்கள் நூல்களை இங்கே வரும் பொழுது  என் இரண்டாவது மகன் கட்டுக்கட்டாக வாங்கிச் செல்கிறான்  நீங்கள் ஏன் இதை அவனிடம் பேசக்கூடாது? நீங்கள் பேசினால் அவன் கேட்பான்’ என்றார்.  அவர் இம்மாதிரி குடும்ப விசயங்களில் தலையிடக் கூடாதென்பது என் கொள்கை. ஆனால் அவர் மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பிய பொழுது அதை அவரது மகனுக்கு அப்படியே திருப்பி விட்டேன்.  அவர் மகன் ஒருவாரம் கழித்து மிக நீளமான ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.  என்னை பல கோணங்களில் சிந்திக்க வைத்த கடிதம் அது.

‘நான் திருச்சியில் இருபத்திரண்டு வருடம் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் திருச்சியுடன் எனக்கு மானசீகமாக எந்த உறவும் இல்லை. இருபத்திரண்டு வருடம் அப்பா அம்மாவுடன் வாழ்ந்தேன்.  ஆனால் அவர்களைப் பற்றி ஒரு நல்ல நினைவு கூட இல்லை’ என்றார் அவரது மகன்.  அவரது தந்தை அவரை ஒரு பொறியியலாளராக ஆக்க வேண்டும் என்பதைப் பற்றி மட்டும் தான் சிந்தனை செய்தார்.  அதுவும் அவர் எல்.கே.ஜியில் சேர்வதற்கு முன்னதாகவே, ஒவ்வொருநாளும் அவரே காலையிலும் மாலையிலும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார்.  அதைத்தவிர அவர்களின் அன்னையும் பாடம் சொல்லிக்கொடுப்பதுண்டு.  பள்ளிக்கூட படிப்பு, வீட்டில் படிப்பு தவிர இளமை நினைவுகள் என்று எதுவுமே இல்லை. 

ஞாயிற்றுக்கிழமைகள், விடுமுறை நாட்களில் முழுக்க முழுக்க பாடங்கள் தான்.  கோடைவிடுமுறை முழுக்க ஆங்கில மொழியறிவுக்கும், கணிதத் திறமைக்கும் வகுப்புகள்.  தீபாவளி, பொங்கள் தினங்களில் கூட கொண்டாட்டம் இல்லை. படிப்பு தான்.

’சில சமயங்களில் இரவில் படுத்து சிந்திப்பேன்.  இளமைக் காலத்தைப் பற்றிய ஒரே ஒரு மகிழ்ச்சியான நினைவாவது மனதில் எஞ்சியிருக்கிறதா என்று, எவ்வளவு நினைத்தாலும் ஒரு சிறிய நிகழ்ச்சி கூட நினைவுக்கு வரவில்லை.  பின்பு ஒருமுறை எண்ணிக்கொண்டேன். சரி, ஒன்றிரண்டு துயரமான நினைவாவது இருந்தால் நன்றாக இருக்குமே என்று. அந்த நினைவுகள் வழியாகக் கூட என் வீட்டுடனும் ஊருடனும் மானசீகமாக தொடர்புப்படுத்திக்கொ கொள்ளாலாமே என்று. அப்படியும் ஒரு நினைவு கிடையாது.  படிப்பு படிப்பு படிப்புதான்.

‘வீட்டை விட மோசம் என் பள்ளி’ என அவரது மகன் எழுதியிருந்தார். ’தனியார் பள்ளி அது. மிக உயர் மதிப்பெண்கள் பெற்றுத்தரும் செலவேறிய பள்ளி. அங்கே பிள்ளைகளை சேர்க்க வரிசையில் நிற்பார்கள். பள்ளிக்கு உள்ளே நுழைந்த கணம் முதல் வெளியே செல்லும் கணம் வரை கூடவே ஆசிரியர்கள் இருப்பார்கள்.  பேசவோ சிரிக்கவோ விளையாடவோ அனுமதி இல்லை.  படிப்பு மட்டும்தான்’ அந்தப் படிப்பிலும் எந்த சுவாரசியமும் இல்லை. ‘பள்ளிப்படிப்புக்கு வெளியே நான் எதையுமே வாசித்ததில்லை.  யாருமே இலக்கியத்தையோ கலைகளையோ அறிமுகம் செய்ததில்லை.  நானறிந்த படிப்பு என்பது புத்தகத்தில் உள்ளதை அச்சு அசலாக திருப்பி எழுவதற்கான பயிற்சி மட்டும் தான்’ என்று எழுதியிருந்தார்.

அப்படியே பொறியியல் படித்து வேலைக்காக அமெரிக்கா சென்ற போதுதான் அவருக்கு தெரிந்தது மனித வாழ்க்கை என்பது எவ்வளவு மகிழ்ச்சிகள் கொண்டது என்று. பயணங்கள், நண்பர்களுடனான சந்திப்புகள், இலக்கிய வாசிப்பு, இசை என நீண்டது.

அவர் எழுதினார் ‘எந்த இடத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அந்த இடத்தில் நம் மனம் படிந்துவிடுகிறது.  அதுதான் நமது ஊர் என்று நினைக்கிறோம்.  எனக்கு அமெரிக்காவின் நகரங்கள் தான் பிடித்திருக்கின்றன.  திருச்சி என்பது அன்னிய ஊராக தெரிகிறது. ஒருநாளுக்குள் சலித்துவிடுகிறது’ ‘என் பெற்றோர் மீது எனக்கு மரியாதையும் நன்றியும் உண்டு.  அவர்களை நான் புரிந்து கொள்கிறேன்.  அவர்களுடன் அரைமணி நேரம்  என்னால் பேசிக்கொண்டிருக்கமுடியாது.  இருபத்திரண்டு வருடம் படி படி என்று மட்டுமே சொன்ன இரண்டு வயோதிகர்கள் அவர்கள். அவ்வளவு தான்.

அவர்களை நான் நேசிக்க வேண்டும் என்றால் அவர்களை எனக்கு தெரிந்திருக்கவேண்டும். அவர்களின் மனம் எனக்குப் புரிந்திருக்கவேண்டும். எனக்கு அவர்கள் அன்னியர்கள் போல தெரிகிறார்கள்’ ‘இருபத்திரெண்டுவருடம் அவர்கள் எங்களிடம் பொதுவாக எதையும் உரையாடியதே இல்லை.  படிப்பையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலைகளை கொட்டிக்கொண்டே இருப்பார்கள். இப்போது அவர்கள் பேச நினைத்தாலும் பேசுவதற்கான தொடர்பு இல்லை.  இப்போது கூட நீ என்ன சம்பளம் வாங்குகிறாய். என்ன மிச்சம் பிடித்தாய் என்று பயம் காட்டமட்டுமே அவர்களால் முடிகிறது.  புத்தகம் வாங்காதே, பயணம் செய்யாதே என்று அவர்கள் வாழ்ந்தது போல என்னை வாழச் சொல்கிறார்கள்’ ‘நீங்களே சொல்லுங்கள், அரைமணி நேரம் கூட பேசிக்கொள்ள பொதுவாக ஏதும் இல்லாதவர்களிடம் நாம் எவ்வளவுதான் செயற்கையாக முயன்றாலும் பேசிக்கொண்டிருக்கமுடியுமா?   முற்றிலும் அன்னியமாக தெரியும் ஓர் ஊரில் எவ்வளவுநாள் வாழமுடியும்?  மரியாதைக்காகவோ நன்றிக்காகவோ ஐந்துநாள் இருக்கலாம்.  அதற்கு மேல் என்ன செய்வது?  என்று மகன் கேட்டார்.  ‘என் இளமைப் பருவம் முழுக்க வீணாகிவிட்டது என்றுதான் நினைக்கிறேன்’ 

அந்தக் கடிதத்தை அப்படியே அவரது தந்தைக்கு அனுப்பினேன்.  ‘இதைவிட தெளிவாக எதையும் நான் சொல்லிவிட முடியாது’ என்றேன்.  அவர் புரிந்து கொள்ளாமல் ‘நன்றி கெட்டத்தனம். பொறுப்பற்றத்தனம்’ என்று மகனை வசைபாடி ஒரு கடிதம் அனுப்பி எனக்கும் பிரதி அனுப்பியிருந்தார்.   மேலும் ஒரு மாதம் கழித்து ‘இந்த தீபாவளிக்கு அவனை வரச் சொல்லமுடியுமா?’ என கேட்டு ஒரு மின்னஞ்சல் எனக்கு அனுப்பினார்.

தீபாவளி என்பது இளைமையில் கொண்டாடபடவேண்டிய ஒரு பண்டிகை.  அன்று தான் அந்த உற்சாகம் இருக்கும்.  வளர்ந்தபின் அந்த நினைவுகளைதான் கொண்டாடிக்கொண்டிருப்போம்.  உங்கள் மகனுக்கு நினைவுகளே இல்லை என்கிறார். நீங்கள் அவருக்கு உரிமைப்பட்ட பண்டிகைக் கொண்டாட்டங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டுவிட்டீர்கள் என்கிறார்’ என நான் பதில் எழுதினேன். அவர் மீண்டும் பதில் போடவில்லை.

வாழ்க்கை என்பது எதிர்காலத்திற்கான போராட்டம் அல்ல. வாழும் தருணங்களை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வது தான்.  அதற்காகவே பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் நம் முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளன.

நாளை முக்கியம் தான். இன்று அதைவிட முக்கியம்!

-    நண்பர் அனுப்பிய வாட்ஸ் அப் செய்தியிலிருந்து….

Sep 7, 2015

வாழ்வை நேசிப்பவர்கள் இந்த வானவில்லை வாசியுங்கள்!



தியாகம்...
தன்னலம் கருதாது பிறர் நலம் பேணும் தகைமை..

தமது மண்ணுக்காக, மக்களுக்காக உயிரையும் துச்சமென மதித்துப் போராடும் வீரம்..

இலட்சியப் போராட்டத்தில் எதிர்ப்படும் இன்னல்களை துணிவுடன் எதிர்கொண்டு, துன்ப, துயரங்களால் வாடிவிடாத மனப்பாங்கு..

வார்த்தைகளில் வடித்தெடுக்கப்படவியலாத உணர்வு..
பேரன்பும், பெருங்கோபமும் உந்தித்தள்ளும் செயல்பாடு.
பாசத்தில், நேசத்தில் பெருக்கெடுக்கும் அன்பின் ஊற்று..
ஒன்று மற்றொன்றாய் மாறும் இரசவாதவித்தை..

அனைத்திற்கும் மேலாக.. அது துரோக இருள் கிழிக்கும் மின்னல் கீற்று;
வசந்தத்திற்குக் கட்டியம் கூறும் வானவில்....

நமது அனுபவத்தின் வீச்சு, அறிதலின் ஆழத்தைப் பொறுத்து விரிந்துகொண்டே செல்கின்றன தியாகத்தின் பரிமாணங்களும், பரிணாமங்களும்.

காற்றிலாடிய முல்லைக்குத் தேர்கொடுத்ததும், குளிரில் வாடிய மயிலுக்குப் போர்வை தந்ததும், மூப்புப் பிணியறுக்கும் அருநெல்லியை அருந்தமிழை வாழவைக்கும் ஒளவைக்கு அதியமான் ஈந்ததும்... சங்கப்பாடல்கள் தீட்டும் ஈகையின் சித்திரங்கள்.

வீரமங்கை வேலு நாச்சியார், தன்னுடலையே ஆயுதமாக்கி வெள்ளையனின் வெடிமருந்துக்கிடங்கைத் தகர்த்த போராளி குயிலி, ஜான்சிராணி இலட்சுமிபாய், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை சகோதரர்கள், தீரன் சின்னமலை, மருது சகோதரர்கள், மாவீரன் திப்புசுல்தான் .. ... வரலாறாய் நீள்கிறது வெள்ளையனின் ஆக்கிரமிப்புகளுக்கெதிராக, நம் மண்ணைக் காக்கப் போராடியவர்களின் படைவரிசை.

பிர்லா மாளிகையில் குடித்த ஆட்டுப்பாலும், கொறித்த வேர்க்கடலையும் செரிக்க உண்ணாவிரதமிருந்து நடைப்பயணம் செய்த, சுதந்திர வேட்கையில் பொங்கியெழுந்த மக்களை தனது தள்ளாத வயதுவரை கைத்தடியாலடித்து வதைத்த மகாத்மாக்களின் துரோகத் திரை கிழித்து நம் நாட்டின் விடுதலைப் போராட்ட வானில் சுடர் வீசும் நட்சத்திரங்களாகத் திகழும் பகத்சிங் மற்றும் தோழர்களின் தியாகம்.

அடிமைத் தளையுடைக்கும் சுதந்திரப் போரில் சிறைபட்டு, சித்திரவதைக்கு ஆளாகி, இன்னுயிர் நீத்த பல்லாயிரம் தியாகிகள்.

இப்படிப்பட்ட நம் முன்னோர்களின் மூச்சுக்காற்றில் பிறந்ததுதான் இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்று.

இங்கு மட்டுமல்ல.. உலகெங்கிலும் தனது மண்ணையும், மக்களையும் நேசித்த தியாகச்சுடர்களின் ஈகங்கள்தான் மக்களின் அடிமை விலங்கொடித்து, மனித சமூகம் புதுவாழ்வு காண வித்திட்டது.
******

பண்ணைகளின் கொடுங்கோன்மையையும், முதலாளித்துவச் சுரண்டலையும் போரிட்டு வீழ்த்தி, புதியதோர் உலகம் படைக்க, பொதுவுடைச் சமுதாயம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சோசலிச இரசியாவின் மீது வன்மத்துடன் போர்தொடுத்தான் பாசிச ஹிட்லர். அவனது ஆக்கிரமிப்புப் படையினரிடம் அகப்பட்டு மூச்சுத்திணறிக்கொண்டிருந்தது அந்தச் சிறு கிராமம்.

நாடெங்கிலும் ஹிட்லரின் பாசிச இராணுவத்தை முறியடித்து முன்னேறிக்கொண்டிருந்தது செம்படை. தனது ஊரை ஆக்கிரமித்திருந்த ஜெர்மானியப் படையினரை விரட்டியடிக்க அந்த செம்படை வீரர்களின் வருகையை எதிர்நோக்கி விடியலுக்காகக் காத்துக்கொண்டிருந்தனர் அந்தக் கிராம மக்கள்.

அவ்வூரை ஆக்கிரமித்திருந்த கொடூர மனம் படைத்த ஜெர்மானியப் படையதிகாரி நிகழ்த்திய அட்டூழியங்களால் சொல்லொணாத் துயருக்கு ஆளாயினர் மலைக்குன்றின் மேலிருந்த அந்தச் சிற்றூரின் மக்கள். பெண்களும், சிறுவர்களும், முதியோர்களும் மட்டுமே அவ்வூரில் இருந்தனர். ஆண்கள் எல்லோரும் செம்படையில் இணைந்து ஜெர்மானியர்களை விரட்டும் போர்முனைக்குச் சென்றிருந்தனர்.

அந்தப் போர்ச்சூழலில், அந்தச் சிற்றூரின் எளிய கிராம மக்கள் மேற்கொண்ட போராட்டத்தையும், பட்ட துன்பங்களையும், செய்த தியாகங்களையும், அவர்களது நாட்டுப்பற்று, மனிதநேயம், தாய்மையுணர்வு உள்ளிட்ட நற்பண்புகளையும் விவரமாக எடுத்துரைக்கிறது இந்த நாவல்.
தாய்மையை, அனைத்தையும் நேசிக்கும் அதன் பேருருவை, அதன் அளப்பரிய தியாக உணர்வை வெளிப்படுத்திய அற்புத முத்துக்களை, சோவியத்தின் பொதுவுடைமைப் பூமியில் பிரகாசித்த இரத்தினங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது "வானவில்" எனும் இந்த இரசிய நாவல்.
போரிலே மகன் மாண்டான் எனும் செய்தி கேட்டு போர்க்களத்திற்கு விரைந்துசென்றவள் குப்புறக்கிடக்கும் தனது மகனின் உடலைப் புரட்டிப்போடுகிறாள். மார்பில் விழுப்புண் பட்டு மல்லாந்துகிடக்கும் அவ்வுடலின்மீது வீழ்கின்றன அவளது கண்ணீர்த்துளிகள்; இழப்பின், மரணத்துயரின் வெளிப்பாடாக மட்டுமல்ல. தன் உயிரைக் கருவாக்கி, உதிரத்தை அமுதாக்கித் தான் வளர்த்த அருமை மகன் போரில் புறம் காட்டிய கோழையல்ல; மாறாக, மார்பில் வேல் தாங்கிய மறவன் என்கிற பெருமிதத்திலும் ஊற்றெடுத்த பன்னீர்த்துளிகள் அவை. இது புறநானூறு காட்டும் ஒரு வீரத்தாயின் சித்திரம்.

ஊருக்கு வெளியே, அருவிக்கரைப் புதரருகே உறைபனியில் விரைத்துக்கிடக்கிறது விடுதலைப் போரில் வீரமரணமடைந்த அன்பு மகனின் சடலம். ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடிக்க அவ்வூரைக் கடந்து செல்கையில் ஜெர்மானியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட செம்படை வீரர்களில் அவனும் ஒருவன். நாள்தோறும் அருவிக்கரைக்குத் தண்ணீர் எடுத்துவரச்செல்லும் தாயால் மகனின் முகத்தை வாஞ்சையுடன் பார்த்துவிட்டு வரமட்டுமே இயலுகிறது. வாரியெடுத்து, மார்போடணைத்து, வாய்விட்டுக்கதறியழ, நல்லடக்கம்செய்ய வாய்க்கவில்லை அந்தத் தாய்க்கு. இறந்து கிடப்பவன் அவ்வூரைச் சேர்ந்தவன் எனத் தெரிந்துவிட்டால் ஜெர்மானிய ஏவல் நாய்கள் எக்காளமிடும்; சடலத்தை ஊர்நடுவே மரத்தில் தொங்கவிட்டுச் சிதைக்கும்; குதூகலித்துக் கும்மாளமிடும். இந்தக் கோரக்காட்சியைக் காண விரும்பவில்லை அவள். எனவேதான் தாங்கமுடியாத அந்த வேதனையை மனதில் இருத்திக்கொண்டு விடுதலையை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கிறாள் அத்தாய்.

வயிற்றில் கருவைச் சுமந்துகொண்டே விடுதலைக்காகப் போரிட்ட வீரமங்கை, அவள் ஒரு கொரில்லாப்போராளி. பிரசவ நாள் நெருங்கியதால் வீடுதிரும்பியவளை மோப்பம் பிடித்துவிட்டது ஜெர்மானிய மிருகம். கொரில்லா வீரர்களின் நடமாட்டம் குறித்துத் தகவல்களைப் பெறுவதற்காக நிறைமாதக் கர்ப்பிணியென்றும் பாராமல் கொடூரமாகச் சித்திரவதை செய்கிறான். நல்வாழ்வு தருவதாக நயவஞ்சக நாடகமாடினான். அச்சுறுத்திப் பார்த்தான். அசையவில்லை அவள். கல்மனதையும் கரையச் செய்யும் கொடூரங்களைக் கட்டவிழ்த்து விட்டது அந்த ஜெர்மானிய மிருகம். நடுக்கும் குளிரை விரட்டியடிக்கவியலாத கந்தல் ஆடைகளுடன் வயிற்றுப் பாரம் தாளாமல் தள்ளாடியவளை நாள்முழுதும் சொட்டுத்தண்ணீர் கூடத் தராமல் நிற்கவைத்து வதைத்தது; மசியவில்லை அவள். உடைகிழித்து நிர்வாணமாக்கி ஊர்வலமாய் இழுத்துச்செல்லப்பட்டாள்; கத்தியாகக் குத்தும் பனிச்சிதிலங்களின் மீது தடுமாறி விழுந்தவளை துப்பாக்கிக் கட்டையாலும், கத்தியாலும் குத்துகின்றன அம்மிருகங்கள். எலும்பையே உறையவைக்கும் பனிக்காலம் அது. வெற்றுடம்பாய் வீசியெறியப்பட்டாள் கட்டாந்தரைமீது சிறைக்குள். நாவறண்டு, குளிரில் விறைத்து, நாடியொடுங்கிக் கிடந்தவள் உதவிக்கு யாருமற்ற நிலையில் ஆண் மகவைப் பெற்றெடுத்தாள்.

இரத்தவாடை பிடித்துவிட்ட ஓநாய் விழித்துக்கொண்டது. தாய்ப்பாசத்தைப் பகடையாக்கிப் பேரம் பேசினான். குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டாவது உண்மையைக் கூறும்படி கெஞ்சிப்பார்த்தான். ஆனால் தனது நாட்டு மக்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக விடுதலைப்போரில் தன்னையே கரைத்துக்கொண்டவள் அவள். ஈன்றெடுத்த மகவின் மீது மாளாத பாசம் கொண்ட அன்னைதான் அவள். அத்துடன் இளம்பருவத்திலேயே தாய்நாட்டு விடுதலைக்காகப் போரிடும் கொரில்லாப் படையின் வீரப் புதல்வர்களையும் தான் பெற்றெடுக்காத மக்களாகவே நேசித்தவள் அவள். எனவே, காட்டிக்கொடுக்க மறுத்துவிட்டாள். அடுத்த கணமே பிஞ்சுக்குழந்தையின் நெஞ்சிலே பாய்ந்தது வஞ்சகனின் துப்பாக்கிக் குண்டு. அழவில்லை அவள். சிலையாக நின்றவளை குழந்தையுடன் இழுத்துச் சென்று அருவியில் தள்ளிக் கொன்றனர் பாசிஸ்டுகள். அன்று பிறந்த மழலையைக் கொன்று வீசியது கண்டும் சித்தம் கலங்காமல் எஃகுறுதியுடன் எதிர்த்து நின்று தன் தாய்நாட்டு வீரர்களின் உயிர் காத்தாள் அந்தத் தாய்.

கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது அவ்வூரில். இரவில் யாரும் வெளியில் நடமாடக்கூடாது. மீறுபவர்கள்
சுட்டுத்தள்ளப்படுவார்கள். துணிந்து மீறினாள் ஒரு தாய். சிறைப்பட்டிருந்த கர்ப்பிணியின் கதறல் அவளை உந்தித்தள்ளியது. உணவும், தண்ணீரும் தரப்படாமல் நாள்முழுதும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டவளின் பசி தணிக்க ஒரு சிறிய ரொட்டித் துண்டினை தனது மகனிடம் கொடுத்தனுப்புகிறாள் சிறைக்கூடத்துக்கு, நள்ளிரவில். விதி மீறிய அச்சிறுவனை சுட்டுக்கொன்று சாக்கடையில் எறிந்தன பாசிச மிருகங்கள். யாருமறியாவண்ணம் ஊர்ந்து சென்று சாக்கடையில் கிடக்கும் தனது குழந்தையின் உடலை எடுத்து வந்து வீட்டுக்குள்ளேயே அடக்கம் செய்கிறாள் அத்தாய், தனது மற்ற குழந்தைகளின் கண்முன்பாகவே. இறந்தவன், விதி மீறத் துணிந்தவன் தனது மகன் என்பது விடியலில் அடையாளம் காணப்பட்டுவிட்டால் ஒட்டுமொத்தக் குடும்பமும் சுட்டுப்பொசுக்கப்படும். மகனை மண்ணிலும், துக்கத்தை நெஞ்சிலும் புதைத்துக்கொண்டாள் அந்தத் தாய்.

அந்தச்சிற்றூரிலிருந்த ஆடு,மாடு,கோழி அனைத்தையும் தின்றுதீர்த்துவிட்ட ஜெர்மானியர்களின் முன்னே வந்துநின்றது உணவுப் பஞ்சம். கிராம மக்களின் மீது வரி விதித்தனர். வரியாக ஒவ்வொரு குடும்பமும் தானியங்கள் தரவேண்டுமென நிர்ப்பந்திக்கப்பட்டது. தம்பிடி தானியமும் தங்களிடமில்லையெனக் கைவிரித்துவிட்டனர் மக்கள் எல்லோரும். ஊர் மக்களில் ஐந்துபேரைப் பணயக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டு மூன்று தினங்களுக்குள் தானியங்களைக் கொண்டுவராவிடில் அவர்களைக் கொன்றுவிடப்போவதாக மிரட்டினான் அதிகாரி. அடிபணிய மறுத்து உறுதியுடன் எதிர்த்து நின்றனர் மக்களனைவரும் ஒற்றுமையுடன். ஆனால், அவர்களிடம் நிறையவே தானியங்கள் இருந்தன. அவை, மண்ணைக்காக்கும் போரில் ஈடுபட்டுள்ள தனது மைந்தர்களுக்காக, செம்படை வீரர்களுக்கென அம்மக்களால் சேகரித்து வைக்கப்பட்டுள்ளவை; தனது மண்ணை ஆக்கிரத்துள்ள பாசிசப் பேய்களின் பசிபோக்க அல்ல.
இப்படிப் பலவாறாக, தியாகத்தின் சுவடுகள் இந்நாவல் முழுவதும் தடம் பதித்துச் செல்கின்றன.
************************************

கடும் இன்னல்களையும், கொடுந்துன்பங்களையும் எதிர்கொண்டபோதிலும் கொண்ட இலட்சியத்தில் பற்றுறுதியுடன் இருப்பதற்கு அதீத மனவலிமையும், அளப்பரிய தியாக உணர்வும் தேவைப்படுகிறது. இந்த உயரிய நற்பண்புகள் ஒருங்கே அமையப்பெற்ற கோடிக்கணக்கான மைந்தர்களைக் கொண்டிருந்தது அன்றைய சோவியத் இரசிய சமூகம். ஆண்களும், பெண்களும், சிறியோர் முதல் வயதானவர்கள் வரை, விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரும் திரண்டெழுந்து போராடினர். ஹிட்லரின் நாஜிப் படைகளை விரட்டியடித்துத் தாய் மண்ணை மீட்டனர். சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட இம்மாவீரர்களின் தியாகம்தான் உலக மக்களைப் பாசிசத்தின் கோரப் பிடியிலிருந்து விடுவித்துக் காத்தது.

மனிதன் இயற்கையின் அங்கம். மனித உணர்வுகள் சமூகக் கூறுகளின் பிரதிபலிப்புகள். வளமான மண்ணில்தான் நலம்காக்கும் பயிர், பச்சைகள் செழித்தோங்கி வளர்கின்றன. அன்றைய சோவியத் சமூகம் பண்பட்டிருந்தது. பொதுவுடைமைப் பண்பாடுகொண்ட அப்பூமிதான் உயரிய, நற்பண்புகளைக்கொண்ட மக்களை வளர்த்தெடுத்தது; உலகின் தலைசிறந்த இலக்கியங்களைப் பிறப்பித்தது. உழைக்கும் மக்களின் உயர்வுக்கு வழிகாட்டியது. அந்த வரிசையில் உதித்ததுதான் வானவில் எனும் இந்நாவல்.
நல்வாழ்வுக்கான தேடல்கள் நடப்பு நிலையை உற்று நோக்கவைக்கின்றன.

நீரின்றி வறள்கிறது நமது பூமி; நிலத்தைப் பறிக்கிறது அரசு; பயிர்வளர்த்தும் உயிர்வளர்க்க முடியாமல் மடிகிறான் விவசாயி. நவீன அடிமைப் பண்ணைகளாக வளர்கின்றன சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். தொழிலாளிகளின் உயிர் குடிக்கும் கொலைக்கூடங்களாகத் தொழிற்சாலைகள். வாழ்விடங்களிலிருந்து விரட்டப்படுகின்றனர் பூர்வகுடிகள். பட்டப்பகலில், பகிரங்கமாக, துப்பாக்கிமுனையில் கொள்ளையடிக்கப்படுகின்றன இயற்கை வளங்கள் யாவும். உலகமயத்தால் ஒட்டச்சுரண்டப்படுகிறது தேசம். வளர்ச்சியின் பலிபீடத்திற்கு இட்டுச்செல்லப்படுகிறது கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கை. ஜனநாயகப் பூங்காவில் கோலோச்சுகின்றனர் நவீன ஜார் மன்னர்கள். ஆட்சி பீடத்திலிருந்து பொங்கி வழிகின்றன அருளுபதேசங்கள் நாராசமாய். வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட மக்கள் தள்ளப்படுகின்றனர் போராட்டக் களங்களை நோக்கி.

நாடு காக்க, நல்வாழ்வு காண, அநீதிகளை, அவலங்களை ஒழித்துப் புதுயுகம் படைக்க, புதிய விடியலைக் காண விழைபவர்களுக்கு உணர்வூட்டும் ஆற்றலாக, போராட்டப்பாதையின் கைவிளக்காக இந்நூல்.

உண்மை.. உணர்வூட்டும்;
போராட்டம்... துரோக இருள் கிழிக்கும்;
தியாகம்... புதியதோர் உலகு செய்யும்;
வானவில்... வசந்த காலத்திற்குக் கட்டியம் கூறும்.
மண்ணை, மக்களை, வாழ்வை நேசிப்பவர்கள் இந்த வானவில்லை வாசியுங்கள். தொடுவானம் தொட்டுவிடும் தூரம்தான்.

- மருதமுத்து,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

ஆசிரியர் - வாண்டா வாஸிலெவ்ஸ்கா
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை ரூ. 125/-

Jul 1, 2014

'தோல்' - நாவல் - ஒரு பார்வை!



பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கையை பேசிய தொ.மு.சி. ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் துயர வாழ்க்கையைப் பேசிய டேனியலின் ’எரியும் பனிக்காடு’, உப்பளக வாழ்க்கைத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பகிர்ந்த ஸ்ரீதர கணேசனின் ‘உப்பு வயல்’,  திரையரங்கில் வேலை செய்யும் உதிரி பாட்டாளிகளான இளைஞர்களின் வாழ்க்கையைப் பகிர்ந்த பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’ என தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பேசிய தமிழ் நாவல்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதன் தொடர்ச்சியில் தோல் தொழிலாளர்களின் வாழ்க்கையை, இலக்கிய வரலாற்றில் ,முதன்முதலாகவும், அழுத்தமாகவும் பேசும் நாவல் செல்வராஜின் ’தோல் நாவல்’!

பர்ஸ், செருப்பு என தோலால் செய்த பொருட்கள் நம் எல்லோருக்கும் பிடித்தமானவை. காரணம் அவைகள் மிருதுவானவை. ஆனால், தோல் தொழிற்சாலையும், அதில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் மிக மிக கடினமானவை! துயரமானவை!

நாவல் சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் (1940 -1950) திண்டுக்கல்லை களமாக கொண்டு பயணிக்கிறது! தோல் தொழிற்சாலையில் தோல்களின் குடலைப் புரட்டும் நாற்றம்; சுண்ணாம்பு குழிக்குள் தோல்களை முக்கி நனைத்தெடுக்கும் பலமணி நேர வேலை; குறைவான கூலி! தொழிலாளர்கள் குறிப்பாக அருந்ததியர்களும், பறையர்களும் என தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதால், ஆண் தொழிலாளர்களுக்கு அடியும் உதையும், பெண் தொழிலாளர்களுக்கு  கூடுதலாக பாலியல் தொல்லைகளும், வன்முறைகளும் என நோய்களும், சாவுகளும், ஒடுக்குமுறைகளும் மிக மலிந்த வேலை! தொழிலாளர்களைப் பாதுகாக்க தொழிற்சங்கம் உருவாகிறது! முதலாளிகள் இன்னும் மோசமான ஒடுக்குமுறையை தொழிலாளர்கள் மீது ஏவுகிறார்கள்.

நடக்கும் வர்க்கப் போராட்டத்தில் தொழிலாளர்களுடன் இணைந்து போராடுகிற ஒவ்வொருவரும் வேறொரு வார்ப்பிற்கு ஆச்சர்யத்தக்க கையில் உருமாறுகிறார்கள். கந்துவட்டிக்காரனால் நடுத்தெருவில் அம்மணமாக்கப்படுகிற வீராயி, பின்னாளில் தொழிலாளிகளின் அணிக்கு தலைமை தாங்குகிறவராக மாறுகிறார். தொழிற்சங்க தலைவரை கொலை செய்ய அனுப்பப்படுகிற முதலாளியின் அடியாள் சந்தனத்தேவன் தொழிலாளர்களைப் பாதுகாக்கிற காவலராகிவிடுகிறார். பார்த்த பெண்களையெல்லாம் சூறையாடுகிற மேற்பார்வையாளன் முஸ்தபாவை அடித்து துவைக்கும் தொழிலாளி மாடத்தி!. தவறாக நடக்க முயன்ற முஸ்தாபாவை கொலை செய்துவிடுகிற தொழிலாளி சிட்டம்மா யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து நகர்ந்துவிடுகிறார். இந்த கொலையை தொழிற்சங்கவாதிகளை பழிவாங்க காவல்துறை முயலும் பொழுது, அவர்களை காப்பாற்றுவதற்காக தான் செய்த கொலையை ஒப்புக்கொள்கிற சிட்டம்மா!

மறுகாலனியாதிக்க சூழலில், மூலதனம் முன்பை விட மூர்க்கத்தனமாக தனது சுரண்டலை செய்துவருகிறது. தொழிலாளர்கள் சமரசமற்று போராடுகிற புரட்சிகர தொழிற்சங்கங்களில் இணைந்து போராடவேண்டிய நேரமிது! இந்த நாவல் வர்க்கப்போராட்டத்தின் பலன்களை நேர்மறையில் கற்றுத்தருகிறது! நம்பிக்கையை தருகிறது. நாவலில் நீதிமன்றம், நீதிபதிகள் குறித்து ஒரு நம்பிக்கையை ஆசிரியர் தருகிறார். கடந்த இருபது வருடங்களில் தொழிலாளர் விரோத, சமூக விரோத தீர்ப்புகளைத் தந்து நீதிமன்றங்கள் அந்த நம்பிக்கையை களைந்திருக்கிறார்கள்!

நாவலின் வடிவத்தை பொருத்தவரையில், பொதுவுடைமை இலக்கியவாதிகளின் பிரச்சார நெடிப்பற்றிய பிற இஸத்துக்காரர்கள் ‘கவலையை’ ஆசிரியர் தனது எழுத்தாற்றலால் போக்கியிருக்கிறார். நாவல் தொடங்கும் பொழுதே எத்தனை கதாபாத்திரங்கள், என்ன பாத்திரம் என வகைப்படுத்தி தந்திருக்கிறார். இவ்வளவு பெரிய நாவலில் ஓரிடத்தில் கூட புரிந்துகொள்வதில் எந்த சிக்கலும் இல்லை! நாவல் 2012ல் சாகித்திய அகாடமி விருதை வென்றிருக்கிறது! 

ஆசிரியருக்கு நமது வாழ்த்துக்கள்!

695 பக்கங்கள் 

விலை ரூ. 400 

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,

Dec 13, 2013

பிறந்த நாட்டுக்குக் கண்ணியமாக அழைத்துச் செல்வேன்!

ஆகஸ்டு, 9, 2002. அன்று தென்னாப்பிரிக்கப் பெண்கள் தினம். முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் முகத்தில் நீண்ட நாட்களாகக் காணப்பட்ட இறுக்கம் அன்று சற்றுத் தளர்ந்திருந்தது. பிரான்ஸ் அரசுடன் நடத்திவந்த போராட்டம் அன்று முடிவுக்கு வந்திருந்ததே அவரது நிம்மதிப் பெருமூச்சுக்குக் காரணம். நிறவெறி, இனவெறி, ஐரோப்பிய வெள்ளைத் திமிர், ஆணாதிக்கம் எனப்பல கொடுமைகளுக்கு 167 ஆண்டுகளுக்கு முன்னர் ஆளாகி, இப்படியும் நடக்குமா என்ற அளவுக்கு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டு, சிதைக்கப்பட்ட 25 வயது கருப்பினப் பெண்ணின் உடலின் எஞ்சிய பாகங்கள் மீட்கப்பட்டு, அன்றுதான் கிழக்கு கேப் நகரின் காம்டூஸ் ஆற்றங்கரையில் அரசு மரியாதையுடன் அடக்கம்செய்யப்பட்டது.

ஆப்பிரிக்காவில் உள்ள கிழக்கு கேப் பகுதியில் காம்டூஸ் ஆற்றங்கரை ஓரம் உள்ள ஒரு கிராமத்தில் 1789-ல் பிறந்தவர் சாரா பார்ட்மன். 

பிரிட்டிஷ்காரர்களால் கருப்பினத்தவர்கள் அடிமையாக்கப்பட்டு, நிறவெறிக்கு ஆளாக்கப்பட்டதுடன், அந்த இனத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டார்கள். தென்னாப்பிரிக்கப் பழங்குடி இனமான கோய்ஸன் என்ற இனத்தைச் சேர்ந்த சாரா, சிறு வயது முதல் கடுமையான உடலுழைப்புக்கு ஆட்படுத்தப்பட்டார். அவருக்கு 18 வயது இருக்கும்போது தென்னாப்பிரிக்கா வந்த இங்கிலாந்து கப்பலின் மருத்துவர் வில்லியம் டன்லப்பின் கண்களில் படுகிறார். 

வழக்கத்துக்கு மாறான உடல் அமைப்பைக் கொண்ட சாராவைப் பார்த்ததும் அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி வேலைக்காக இங்கிலாந்துக்குக் கப்பலில் அழைத்துச் செல்கிறார். அங்கே, சொன்னபடி அவர் நடந்து கொள்ளவில்லை. சாராவை ஆடையின்றிக் காட்சிப்பொருளாக்கி, ஊர் ஊராகக் கொண்டுசென்று கண்காட்சி நடத்திப் பணம் சம்பாதிக்கிறார். சாராவை ‘பூதாகரமான’பெண் என்று அவர் விளம்பரம் செய்தார். சாராவைப் பார்க்க மக்கள் குவிந்தனர். ஈவிரக்கம் இல்லாமல் அவள் உடலைத் தீண்டிப்பார்த்தார்கள். 

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் லண்டனிலிருந்து அவர் பிரான்ஸுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கும் காட்சிப் பொருளாக்கப்பட்டார். பிரான்ஸின் நகரங்கள் அனைத்துக்கும் கொண்டு செல்லப்பட்டார். இரக்கமற்றவர்கள் அவளைப் பாலியல் தொழிலிலும் தள்ளினார்கள். கடுமையான பாலியல் நோயின் விளைவால் தனது 25-வது வயதில் (1815-ல்) சாரா மரணமடைந்தார்.

சாரா இறந்த பிறகும் அவரது உடல் முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லை. ஜார்ஜியஸ் குய்வர் என்ற அறிவியலாளர் சாரா உடலமைப்பின் மீது ‘ஆர்வம்’கொண்டு அவர் உடலை ஆராய்ச்சி செய்ய விரும்பினார். பிளாஸ்டர் காஸ்ட் முறையில் பொம்மைபோல வடித்தார். பிறகு, அவரது உடலிலிருந்து மூளை, அந்தரங்க பாகங்கள் போன்றவற்றை எடுத்து பாரிஸ் நகரில் உள்ள மியூசியத்தில் காட்சிக்கு வைத்தார்.

சாரா இறந்த பிறகு, ஏறக்குறைய 160 ஆண்டுகள் அவரது உடல் உறுப்புகள் காட்சிப்பொருள்களாக இருந்தன. பலத்த எதிர்ப்பின் விளைவாக 1974-ம் ஆண்டில் பொதுமக்கள் பார்வைக்குத் தடை விதிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்காவின் அதிபராக ஆன நெல்சன் மண்டேலா, சாராவின் உடல் கண்ணியமான முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் உடலின் எஞ்சிய பகுதிகளைத் தரும்படி 1994-ல் பிரான்ஸிடம் கோரிக்கை வைத்தார். 

ஆனால், தமது நாட்டுச் சட்டப்படி அவ்வாறு தர இயலாது என பிரான்ஸ் கூறியது. ஏனென்றால், காலனி ஆட்சியின்போது பல நாடுகளிலிருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட பாரம்பரியப் புதையல்கள் ஏராளமாக பிரான்ஸ் வசம் இருந்தன. எனவே, அவற்றையெல்லாம் அரசுடைமையாக்கி பிரான்ஸ், சட்டம் இயற்றியிருந்தது. மண்டேலா கோரியபடி சாராவின் எஞ்சிய உடல் பாகங்களைத் திரும்பக் கொடுத்தால், மற்ற நாடுகளும் தம் நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பாரம்பரியச் செல்வங்களைத் திரும்பக் கேட்கலாம் என்று அஞ்சிய பிரான்ஸ் தர மறுத்துவிட்டது. 

ஆனாலும் மண்டேலா விடாமல் போராடியதாலும், மனித உரிமை அமைப்புகளும் பெண்கள் அமைப்புகளும் மண்டேலாவுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்ததாலும் பிரான்ஸுக்கு நெருக்கடி அதிகரித்தது. குறிப்பாக, கோய்ஸன் இனக் கவிஞரும், பெண் உரிமைச் செயல்பாட்டாளருமான டயானா ஃபெர்ரஸ் சாரா பார்ட்மன் குறித்து 1988-ல் எழுதிய ‘பிறந்த நாட்டுக்குக் கண்ணியமாக அழைத்துச் செல்வேன்’என்ற உருக்கமான கவிதை மனித உரிமையாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவைத் திரட்டியது. அதனால், தென்னாப்பிரிக்கக் கோரிக்கைக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து, புதிய சட்டம் இயற்றி பிரான்ஸ் அனுமதியளித்தது.

 சாராவின் எஞ்சிய உடல் பாகங்கள் 2002-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா வந்து சேர்ந்தது. அந்நாட்டின் பெண்கள் தினமான ஆகஸ்டு 9 அன்று அவரது எஞ்சிய உடல் பாகங்கள் அடக்கம் செய்யப்பட்டன. அந்தக் கல்லறை தேசியச் சின்னம் என்று மண்டேலா அன்றே அறிவித்தார். ஒரு மனித ஆயுட்காலத்தையும் கடந்து அவமதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடல் இனியாவது அமைதியாக உறங்கட்டும்.

பா.ஜீவசுந்தரி,
எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர்,
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

Dec 6, 2007

சாயம் பூசப்பட்ட குழந்தைகள் - விமர்சனம் - பாகம் 2



"படம் முடிந்துவிட்டது. இனி, இந்தியாவிற்கு வருவோம். இன்னும் பாதி விமர்சனம் இருக்கிறது. நாளை மீண்டும் தொடர்கிறேன்".
கடந்த பதிவின் தொடர்ச்சி இந்த பதிவு. இதைப் படித்தாலே விசயம் புரியும். ஆனால், அழுத்தம் உணரமுடியாது. ஆகவே, கொஞ்சம் சிரமம் பாராமல் கடந்த பதிவை படித்துவிட்டு, படித்தால் நலம்.

'அமெரிக்கத் தரம்' இல்லையென்றாலும், இந்திய கான்வென்டு பள்ளிகளில் மேற்கின் வார்ப்பில் நிறையவே அழகிப் போட்டிகள் நடக்கின்றன. இன்னும் இந்தி, தமிழ்ச் சினிமாக்களின் கொச்சை நடனங்கள் பள்ளி ஆண்டு விழாக்களை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன. ஏறக்குறைய அவிழ்த்துப் போட்டு தொப்புள் டான்ஸ் ஆடும் தமது குழந்தைகளை, அனைத்துப் பெற்றோர்களும் மெச்சிக் கொள்கின்றனர். இவர்களுடைய உலகிலிருந்து தான் குழந்தைகள் பற்றிய கவலையும் விதவிதமாக வெளிப்படுகிறது.

பாராளுமன்றம், பத்திரிக்கை, தொலைக்காட்சி, திரையுலகம், கல்வி நிறுவனங்கள் கவலைப்படும் இந்தியக் குழந்தைகளின் பிரச்சனைகள் பல. போலியோ சொட்டு மருந்து, சிவகாசி, மத்தாப்புக் குழந்தைகள், பீடி, தீப்பெட்டி - கைத்தறிக் குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தை விபச்சாரம்...என்று நீளுகிறது. மேலும், பீகாரின் நக்சல்பாரிக் கட்சி, ஈழத்து விடுதலைப் புலிகள் முதல் உலக நாடுகளின் பல்வேறு போராளிக்குழுக்கள் வரை - சிறுவர்களை போரில் ஈடுபடுத்திக் கொலை வெறியை வளர்க்கின்றனர் என்பதும் ஒரு முக்கியக் கவலை.

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்வோம். தீக்குச்சியை அடுக்க்ப் பீடி சுற்றி, துப்பாக்கியை ஏந்துவதற்குக் காரணம், அக்குழந்தைகளின் பெற்றோரோ, குறிப்பிட்ட சமூகமோ அல்ல. பொருளியலிலும், அரசியலிலும் அச்சமூகப் பிரிவினரை ஆதிக்கம் செய்கின்ற சக்திகளே அந்த குழந்தைகளின் வாழ்க்கையைப் பறித்தவர்கள். உலகின் பெரும்பான்மை நாடுகளும் மக்களும் ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கும் பொழுது, அம்மக்களின் குழந்தைகள் மட்டும் வயிறார உண்டு, கல்வி கற்பது எப்படி முடியும்? அடிமைத்தனத்தில் உழலும் ஒரு சமுகத்தின் குழந்தைகள் மட்டும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியுமா? கட்டுண்டு கிடக்கும் மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், குழந்தைகளுக்காக மட்டும் கண்ணீர்விடுவது அயோக்கியத்தனம்.

சிவகாசிக் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய குறும்படம் ஒன்றில் "பள்ளிக்குச் செல்லும் வயதில், பட்டாசுத் தொழிலுக்குச் செல்வது சரியா?" என்று ஒரு சிறுவனிடம் பேட்டியாளர் கேட்கிறார். "பட்டாசு செய்வதால் தான் ஒரு வேளையாவது பசியாற முடிகிறது" என்று பதிலளிக்கிறான் அச்சிறுவன். ஆசியாவைப் போன்ற சிறுமிகளோ, "நிறையப் பணம் வேணும்" என்பதற்காக அழகுப் போட்டிகளில் கலந்துகொள்கின்றனர்.

மேலும், "நிறையப் பணம் வேணும்" என்ற வெறிதான் பின்னாளில் கிரிமனல்களை உருவாக்குகிறது. பணம் குவிக்க எப்படியும் வாழலாம், என்ன வேலையும் செய்யலாம், எதையும் அவிழ்க்கலாம் என்பது அழகுப் போட்டிச் சிறுமிகள் கற்கும் அடிப்படைப் பாடம். ஆனால் துப்பாக்கி ஏந்தும் ஈழத்துச் சிறுவனுக்கு அமைதிப்படையின் ஆறாத வடுக்கள் காரணமாக இருக்கலாம். தன் மக்களைக் கொன்று குவிக்கும் ரன்வீர் சேனாவின் கொடுமை கண்டு ஒரு பீகார் சிறுவன் அரிவாளைக் தூக்கலாம். சிறுவயதானாலும், தன் மக்களின் அவலம் கண்டு ஆயுதம் தூக்கும் இவர்களிடம் கொலைவெறி வருவதில்லை. அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடும் விடுதலை உணர்வும் சமூகப் பற்றுமே ததும்பி நிற்கும். ஆனால் செலவழிக்கப் பணம் திருடும் மேட்டுக்குடிச் சிறுவர்கள் தான் கொடூரமாக கொலைகளைச் செய்கிறார்கள். இலட்சகணக்கிலும், கோடிக்கணக்கிலும் பரிசுத் தொகை கொண்டிருக்கும் பெரிய - சிறிய அழகுப் போட்டிகளில் வென்றவர் - தோற்றவர் மனநிலையும், குறுக்கு வழியில் முன்னேறத் துடிக்கும் ஒரு கிரிமினலின் மனநிலையும் ஒன்றுதான்.

தெருமுனையில் வித்தைக் காட்டும் கழைக்கூத்தாடி, தனது மகளுக்குப் பெண்கள் அணிவது போல மார்புக் கச்சையை அணிவித்து வேடிக்கை காட்டுகிறான். எவருக்கும் முதல் பார்வையிலேயே ஏனென்று விளக்காமலேயே இக்காட்சி கொடூரமாக இருக்கும். சிறுமியைக் கவர்ச்சிக் கன்னியாக உருவகப்படுத்தும் கழைக்கூத்தாடி, தனது வயிற்றுப்பாற்றுக்காக அப்படிச் செய்கிறான். அவளை வைத்துக் கோடம்பாக்கத்தையே ஒரு கலக்குக் கலக்கி கோடிசுவரனாக மாற வேண்டும் என்பதற்காக அல்ல. அந்தச் சிறுமிக்கும், ஆண்களை வீழ்த்தி, பிரபல நடிகையாக ஒரு சுற்று வரவேண்டும் என்ற கனவெல்லாம் கிடையாது. இரவு ஒரு வாய்க் கஞ்சி கிடைத்தால் பெரிய விசயம். ஆனால் தனது குழந்தைகள் மேடையில் ஆடை அவிழ்ப்பதையும், ஆபாச சினிமா நடனங்கள் ஆடுவதையும் கண்டு நடுத்தர வர்க்கம் பெருமிதம் கொள்கிறது. காரணம் அஸ்வர்யாராய்க் கனவுதான்.

பருவம் அடைந்த பெண்கள் ஒரு ஆணைக் கவருவதற்கான நடை, உடை, முகபாவனை, உடல் அளவு, காதல் குறித்த பொது அறிவு இவைதான் அனைத்து அழகுப் போட்டிகளுக்கும் அடிப்படை விதிகள். சிறுமிகளுக்கான போட்டியும் இதற்கு விதிவிலக்கு அல்ல - "ஆண்களைக் கவரும் கனவுக் கன்னி" என்ற ஒரு பாடலுக்கு ஆசியாவும், ப்ரூக்கியும் முகபாவனை செய்கிறார்கள்.

ஏற்கனவே இந்திய சமூகம் பெண் குழந்தைகளுக்கு நாணத்தையும், செப்பு வைத்துச் சமைப்பதையும், சிறுவயதிலேயே சேலை கட்டுவதிலிருந்து சமைப்பது வரை அனைத்து அடிமைத்தனங்களையும் நுணுக்கமாகக் கற்றுக் கொடுத்து வருகிறது. இப்போது மேற்கிலிருந்து வேறு வடிவில் அழகு, கவர்ச்சி, வியாபாரம், ஆதாயம் அனைத்தும் சுதந்திரமாய் வந்திருக்கிறது. தனது குழந்தையை சமூகத்திற்குப் பொறுப்புள்ள குடிமகனாய் வளர்க்க விரும்பும் பெற்றவர்கள் சிந்திக்கட்டும்.

- வேல்ராசன், புதியகலாச்சாரம்

Dec 5, 2007

'சாயம் பூசப்பட்ட குழந்தைகள்' - விமர்சனம்




சமீபத்தில், புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த திரை விமர்சனங்களை தொகுத்து, "சினிமா திரை விலகும் பொழுது" - என்ற புத்தகமாய் வெளியிட்டு இருந்ததை, படித்தேன். நல்ல தொகுப்பு.

அந்த தொகுப்பில், ஒரு விமர்சனம் தான் இந்த பதிவு. படித்ததை, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பி.பி.சி. செய்திப்படம் : "சாயம் பூசப்பட்ட குழந்தைகள்" - பிஞ்சுக் குமரிகள்

"சிவகாசி மழலையர் வாழ்வைப் பறிக்கும் பட்டாசுகளைக் கொளுத்தாதீர்கள்" என விழாக் காலங்களில் தன்னார்வக் குழுக்கள் ஊர்வலம் நடத்துகின்றன. நகரத்துக் குப்பைகளில் மக்காச் சோளத்தைப் பொறுக்கும் ஆப்பிரிக்க எலும்புக் குழந்தைகளைக் காண்பித்து இ.நா. யுனிசெப் நிறுவனம் இவர்களின் பசியைத் தணிக்க நன்கொடை திரட்டுகிறது. நமது நாட்டு ஏழைக் குழந்தைகளைப் பற்றி இவர்கள் அடையும் கவலைகள் ஒருபுறமிருக்கட்டும். மத்தாப்பூ தயாரிக்கும் ஏழ்மையோ, மக்காச்சோளம் பொறுக்கும் அவலமோ இல்லாத இவர்களுடைய அமெரிக்கக் குழந்தைகளைப் பற்றி நாம் கவலைப்படுவோம்.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரத்தில் சிறுமிகளுக்காக நடத்தப்படும் அழகிப் போட்டி ஒன்றைப் பற்றி, செய்தி படமொன்றை பி.பி.சி. ஒளிபரப்பியது. ஜேனே ட்ரேஸ் தயாரித்திருக்கும் இக்குறும்படத்தின் பெயர் "பெயின்டட் பேபீஸ்" (Painted Babies - சாயம் பூசப்பட்ட குழந்தைகள்).

பாடிக்கொண்டே, சுறுசுறுப்பாய் மூன்று சக்கர சைக்கிளை ஓட்டும் ஆசியா ஒரு 5 வயது சிறுமி. அட்லாண்டாவில், சதர்ன் சார்ம் நிறுவனம் நடத்தும் அழகிப்போட்டிக்குப் பயிற்சி எடுக்கும் அவளுக்கு இப்படி விளையாடுவதற்கான நேரம் கிடைப்பதே அரிது. அவள் மட்டுமல்ல மொத்த குடும்பமும் போட்டிக்கான ஆயத்தங்களில் மூழ்கியிருக்கிறது. சிறுமியின் பாட்டி மேரி பழைய பத்திரிக்கையின் அழகுக் குறிப்புகளைச் சேகரிக்க, தாய் கிம் மான்சூர் (முன்னாள் விளம்பர நடிகை)ஆடை ஆபரணங்களைச் சரிபார்க்க, இருவருக்கும் தந்தை ஃபூ மான்சூர் உதவி செய்கிறார். தேர்வுக்குக் கண்விழித்துப் படிக்கும் குழந்தைகளுக்கு, கண் விழித்து ஹார்லிக்ஸ் கொடுக்கும் நம்மூர் ஹார்லிக்ஸ் பெற்றோரை விட இக்குடும்பத்தின் 'தியாகம்' அளப்பரியது.

அன்ன நடைக்கான பயிற்சி, முகபாவனை, சிரிப்பு, பாட்டு என ஆசியாவின் ஒருநாள் என்பதே பல பயிற்சிகளின் அட்டவணை. ஊண், உறக்கம் மறந்து மகளுக்காக அம்மா படும் அவஸ்தையை என்னவென்பது? சாப்பாட்டு மேசையிலும் மகளுக்குப் பாட்டுப் பயிற்சியை நடத்தும் கிம் மான்சூரின் கண்களில் தெரியும் அந்த லட்சிய வெறி, நமக்குத் திகிலூட்டுகிறது. சிறுமி ஆசியாவிடம் பேட்டியாளர் கேட்கிறார், "நீ எதற்காகப் போட்டியில் கலந்து கொள்கிறாய், எதிர்காலத் திட்டம் என்ன? "நிறைய பணம் வேணும், கார் வேணும், பங்களா வேணும், இன்னும் நிறைய நிறைய பணம், அவ்வளவுதான்" ஒரு ஹாலிவுட் நடிகையைப் போல வேக வேகமாகப் பேசி முகமசைத்துக் கைவிரிக்கிறாள் அந்தச் சிறுமி.

ப்ருக்கி, ஆசியாவுடன் போட்டி போடும் மற்றொரு சிறுமி, ஏற்கனவே உள்ளூர்ப் போட்டியில் நான்கு இலட்சம் ரூபாய் வென்றவள், தேசியப் போட்டிக்குத் தயாராகிறாள். பாட்டி பாம் ப்ரட் வெல் நடத்தும் அழகு நிலையத்திலேயே பேத்தியும் அமெரிக்க பார்பி பொம்மையைப் போல மெருகேற்றப்படுகிறாள். மகளுக்குத் தெற்றுப்பல். அதனால் பல்லைக் காட்டாமலேயே இளிப்பதற்கு தாய் பயிற்சி கொடுக்கிறாள். பாடல் பயிற்சிக்காக மட்டும் வாரம் ஒருமுறை 500 கி.மீ. தொலைவில் உள்ள பாடல் ஆசிரியையிடம் பயிற்சி எடுக்கிறாள் ப்ரூக்கி.

போட்டிக்கு இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் தினசரி மூன்றுமுறை சகல பயிற்சிகளையும் செய்கிறாள். பதிவு செய்த வீடியோ கேசட் மூலம் திருத்தங்கள் செய்யப்படுகிறது. தோட்டத்தில் நீர் பாய்ச்சும் ப்ரூக்கியின் தந்தை, தனது சேமிப்புப் பணத்தை மகளின் கல்விக்காகச் செலவிட விரும்புகிறார். போட்டிக்கான உடையை மட்டும் 40,000 ருபாயில் தயாரித்திருக்கும் தாய், சேமிப்பை அழகுப் போட்டிகளுக்காகச் செலவிட விரும்புகிறார். பாட்டி, அம்மாவுடன் அட்லாண்டாவை நோக்கி விமானத்தில் பறக்கிறாள் ப்ருக்கி.

இப்படிக் கனவுகளோடும், குழந்தைகளோடும் அட்லாண்டாவில் வந்திறங்கும் தாய்மார்கள் பல விடுதிகளில் தங்குகின்றனர். வந்திருக்கும் பல அம்மாக்கள் போட்டி நடக்கும் மூன்று நாட்களிலும் பதட்டத்தோடு இருக்கின்றனர். போட்டி தவிர்த்த நேரங்களில் அழுகை, கோபம், விளையாட்டு, சாக்லெட் என்று குழந்தைகள் குழந்தைகளாக இருக்கின்றனர். ஒரு குழந்தைக்கு 15,000 ரூபாய் வசூலிக்கும் முகப்பூச்சுக் கலைஞர், போட்டிகளுக்கு இளம்பெண்களாகவே நடத்தி நிகழ்ச்சிகளைத் தொகுத்துரைக்கும் பாடகர் டிம்வெட்மர், போட்டியை நடத்தும் சதர்ன் சார்ம் நிறுவனத்தின் தலைவி... மொத்தத்தில் போட்டி தீவிரமடைகிறது.

ஆடை, அலங்காரத்தோடு, தோற்றத்தை மதிப்பிடும் அழகுப் பிரிவு, 'ஆண்களின் கனவுக்கன்னி' எனும் பாடலுக்கேற்ப அபிநயம் பிடிக்கும் 'கனவுக்கன்னி' பிரிவு, பாடல் பிரிவு, நீச்சல் உடை - நாகரீக உடை அணிவகுப்பு... அனைத்துப் போட்டிகளிலும் மேடையில் சிறுமிகள் செய்வதை, கீழே உள்ள தாய்மார்கள் கூடவே செய்து காட்டுகிறார்கள். ஆ...ஊ என கத்தி உற்சாகப்படுத்துகிறார்கள். பாடி முடித்து, 'நன்றி சீமான்களே, சீமாட்டிகளே' என்று பெரியவர்களின் தோரணையில் பேசி புன்னகைக்கிறாள் ப்ரூக்கி. கெளபாய் உடையில் நடக்கச் சிரமப்படுகிறாள் ஆசியா. கேள்விகளுகு ஒற்றை வார்த்தையில் திருத்தமாகப் பதிலளிக்கும் ப்ருக்கி போட்டி இடைவெளியில் கோபமாக இருக்கிறாள். சரளமாய்ப் பேசும் ஆசியா, வெறுத்துப்போன அன்றாட அழகுப் பயிற்சி அட்டவணையை மாற்றுமாறு தாயிடம் முணுகுகிறாள். ஒருவழியாய் போட்டி முடிந்து, அந்த ஆண்டின் பேரரசி யாரென அறிவிக்கும் தருணமும் வருகிறது.

தாய்மார்கள் பதட்டத்தின் உச்சியில் நகத்தைக் கடித்து, கைகளைப் பிசைந்து, கண்களை மூடுகின்றனர். முதல் மூன்று இடங்களுக்கான தகுதியை ஆசியாவும், ப்ருக்கியும் அடைகிறார்கள். முடிவில் ப்ருக்கி பேரழகியாக அறிவிக்கப்படுகிறாள். ஆசியாவுக்கு மூன்றாவது இடம் கிடைக்கிறது. பேரழகியின் தாய் ஆனந்தத்தில் கதறுகிறார். ஆசியாவின் தாய் அதிர்ச்சியில் கண்கள் பனிக்கிறார். வென்றவர்களும், தோற்றவர்களும் மீண்டும் அடுத்த ஆண்டு போட்டிக்கு வருவோம் என்கின்றனர். கவர்ச்சியான எதிர்காலக் கனவுகளோடு, அடுத்த ஆண்டு மட்டுமல்ல வாழ்க்கை முழுவதும் குழந்தைகளாய், தாய்களாய், பாட்டிகளாய் இறப்புவரை அவர்கள், வந்து கொண்டே இருப்பார்கள்.

*****

படம் முடிந்துவிட்டது. இனி, இந்தியாவிற்கு வருவோம். இன்னும் பாதி விமர்சனம் இருக்கிறது. நாளை மீண்டும் தொடர்கிறேன்.

May 27, 2007

பால் வெள்ளைக் காகிதம் - குட்டிக்கதை

காலைப் பனிப்போல் தூய்மையாக இருந்த ஒரு வெள்ளைக் காகிதம் 'நான் ரொம்ப சுத்தமானவனாக்கும்' என்று அலட்டிக்கொண்டது.

'நான் பிறக்கும்பொழுதே தூய்மையாகப் பிறந்தேன். காலம் முழுவதும், நான் நான் இவ்வாறே தூய்மையாக இருப்பேன்; என்னை எரித்துச் சாம்பலாக்கினாலும் பரவாயில்லை, பொறுத்துக் கொள்வேன். ஆனால் கறுமையின் இருள் கைகள் என்னைத் தொட அனுமதிக்கமாட்டேன், தூய்மையற்றவர்கள் யாரும் என் பக்கத்தில்கூட வரமுடியாது'.

இந்தப் பேச்சைக் கேட்ட மைப்புட்டி, குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது. அந்தக் காகிதத்தின் பக்கத்திலேயே செல்வதில்லை என்று முடிவுகட்டிக் கொண்டது.

பல வண்ண பென்சில்களும் இதைக் கேட்டன. அவையும், அந்தக் காகிதத்தை நெருங்கவில்லை.

ஆகவே, அந்த பால் வெள்ளைக் காகிதம், அதன் ஆசைப்படி, என்றென்றும் தூய்மையோடும், கற்போடும் வாழ்ந்தது.

வெறுமையாகவும்.

- கலீல் ஜிப்ரான் - மிட்டாய் கதைகளிலிருந்து