Showing posts with label ப.பி.புத்தகம். Show all posts
Showing posts with label ப.பி.புத்தகம். Show all posts
Nov 19, 2015
நான் நாத்திகன் - ஏன்? - பகத்சிங்
மனிதன் ஒரு சிந்திக்கத் தெரிந்த விலங்கு. சிந்திப்பதால் நாம் மனிதர்கள். சிந்தனை மனித இனத்தின் சிறப்பம்சம். சிந்தனையின் நீட்சி மாற்றத்திற்கு இட்டுச்செல்கிறது.
காடு, மலைகளில் இரை தேடி வாழ்ந்த ஆதி மனிதன் தன்னைச் சுற்றி நடப்பவற்றை உற்றுப் பார்த்துக் கற்றுக்கொள்ளத் தொடங்கியதிலிருந்து, இன்று அயல் கிரகங்களில் உயிர் வாழ்க்கைக்கான தேடல் வரை மனிதனின் சிந்தனை - தேடல், கற்றல், அனுபவம், அறிவு - படிப்படியாக வளர்ந்து இன்று பிரமிப்பூட்டும் உயரத்தில் உள்ளது.
ஆனால், மனித குலத்தின் இந்த அறிவு வளர்ச்சி அனைத்து மனிதர்களிடத்தும் சமமான அளவில் இல்லை; ஆதிக்க சக்திகளின் குரூர நோக்கங்களால் அறிவு அனைவருக்கும் பொதுவானதாக ஆக்கப்படவில்லை, அன்றிலிருந்து இன்றுவரை. பெரும்பான்மை மக்களை அறியாமை இருளில் அமிழ்த்தி வைத்திருப்பதில்தான் தங்களது வாழ்க்கையின் பிரகாசம் அடங்கியுள்ளது என்பதைப் புரிந்துகொண்ட ஆண்டைகளும், நிலப்பிரபுக்களும், முதலாளிகளும் காலங்காலமாக ஏழை, எளிய உழைக்கும் மக்களின் அறிவுக்கண்களை கனத்த திரையிட்டு மூடி மறைத்தே வந்துள்ளனர். கடவுள், மதம், சடங்குகள், சம்பிரதாயங்கள், கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம், கட்டுப்பாடு. .. ... இன்னும் பலவிதமாய், பல வண்ணங்களில், வடிவங்களில் தோன்றி, வளர்ந்து, நீடிக்கின்றன இத்திரைகள்... கால, தேச, வர்த்தமானங்களுக்கேற்றபடி.
********************************************
தேடல் வாழ்வின் உந்துசக்தி. சுகவாழ்வுக்கான நாட்டம் எல்லோருக்கும், எப்போதும் உண்டு. தேடல் புரிதலுக்கும், போராட்டத்திற்கும் வழிவகுக்கிறது; மாற்றத்தை இழுத்து வருகிறது.
வெள்ளையரின் கொள்ளை ஆட்சியின் கீழ் தன் நாட்டு மக்கள் படும் இன்னல் கண்டு, அவர்களின் அறியாமை, அடிமைத்தனம், கையறுநிலை கண்டு வேதனையில் துடித்தது பகத்சிங் எனும் இளைஞனின் இதயம். அவர்களின் விடுதலைக்கான தேடல் அவ்விளைஞனைப் போராட்டப்பாதைக்கு இட்டுச்சென்றது. வஞ்சிக்கப்பட்டு, வாழ்விழந்து, வறுமையில் உழலும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் விடியலைக்காண விழைந்த அவ்விளைஞனைப் புடம் போட்டு, புதிய மனிதனாக வார்த்தெடுத்தது போர்க்களம். அப்போராட்டப் பாதையில் தான் பெற்ற அறிவு வெளிச்சத்தை நமக்கு சிறு நூலாகத் தந்துள்ளார் தோழர் பகத்சிங்.. அதுவே இந்நூல் - நான் நாத்திகன், ஏன்?
தேடல்.. நிகழ்வுகளை உற்றுநோக்கி ஆராயச்சொல்கிறது; உண்மையை உணரவைக்கிறது. உண்மையின் பேரொளியில் மங்கி, மடிகிறது பொய்மை எனும் காரிருள்.
மதம் பிடித்த சமூகத்தின் பிறவிப் பெருஞ்சுமையாய் தொட்டுத்தொடரும் கடவுள் நம்பிக்கையை, மத மூடத்தனங்களைச் சுட்டுப் பொசுக்குகின்றன பகத்சிங்கின் தர்க்க வாதங்கள். அங்கிங்கெணாதபடி எங்கும் நிறைந்து, இறைநம்பிக்கையெனும் பெயரில் மனிதரின் அறிவுக்கண்களை மறைக்கும் சர்வவியாபக அறியாமை இருட்திரை கிழிக்கும் போர்வாளாகத் திகழ்கிறது இந்நூல்.
உழைக்கும் மக்களை ஒட்டச்சுரண்டி, கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, தனது பேராசையால் இவ்வுலகையே சூறையாடி அழித்துக்கொண்டிருக்கும் கும்பல் ஒருபக்கம்; அடக்கி, ஒடுக்கி சுரண்டப்பட்டு, மாடாக உழைத்து ஓடாகத்தேய்ந்தபின்னும் உண்ண உணவின்றி, வாழ வழியின்றி பஞ்சம், பசி. பட்டினியில் வாடி, ஆதிக்கப் போரில், கொள்ளை நோயில் மாண்டு, மடியும் கோடிக்கணக்கானோர் மறுபக்கம்.. என்பதாக இவ்வுலகைப் படைத்து, இரட்சித்து, மறுமைநாளில் பரலோகத்தில் தீர்ப்பெழுதுபவனைக் கடவுள் என்று கூற முடியுமா? இது கடவுளின் தீராத விளையாட்டு என்றால், ரோமாபுரி தீப்பற்றியெரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னனைவிடவும், போர் எனும் பெயரில் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்த செங்கிஸ்கானை விடவும் குரூர மனம் படைத்த கொடியவனல்லவா, இந்தக் கடவுள்? அப்படிப்பட்ட கடவுள் நமக்குத் தேவையா? வீழ்த்துங்கள் அவனை.. என்று அறைகூவுகிறார் புரட்சியாளர் பகத்சிங்.
**************************************
நாத்திகம்..
பகுத்தறிவின் விளைபொருள்.
அறியாமை இருள் அகற்றும் பகலவன்.
அது, வெறும் கடவுள்மறுப்புத் தத்துவம் மட்டுமல்ல. உண்மையின் ஒளியில் யதார்த்தத்தைப் பரிசீலிக்க உதவும் சுடர்விளக்கு.
நீங்கள் காண மறுத்தாலும் உங்களை உற்றுப்பார்த்துக்கொண்டுதானிருக்கின்றன உண்மைகள்.
இயற்கையின் புதிர் விளங்கா ஆதிமனிதனின் எளிய நம்பிக்கையாக முளைத்த ஆன்மிகம் இன்று சீமைக்கருவேலமரமாகக் கால்பரப்பி வீசும் காற்றில் கலந்த விசமாக மாறியுள்ளது.
இறைவணக்கத்திற்கான அடிப்படை நம்பிக்கை; அச்சத்தில் குடிகொண்டுள்ளது நம்பிக்கையின் வேர். கடவுளை அடிப்படையாகக் கொண்டவை மதங்கள். கடவுள்களின் மீதான மக்களின் எளிய நம்பிக்கைகளை மூலதனமாகக் கொண்டு கடை விரித்த மத பீடங்கள் இன்று மனித உயிர்களை அறுவடை செய்துகொண்டிருக்கின்றன. அன்பை, இரக்கத்தை, கருணையைப் போதிக்கும் மதங்கள் கொலைவெறிபிடித்தாடுகின்றன இன்று.
விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் ஆட்டங்காணத்தொடங்கிவிட்ட ஆன்மிகம் இன்று புதிது புதிதாய் வெளித்தள்ளுகிறது அவதாரங்களை. சாயிபாபா, நித்தியானந்தா, அஸ்ரம் பாபு, அமிர்தானந்தமயி, ராதாமாதே, ராம்தேவ், பங்காரு, கங்காரு .. ... கணக்கின்றி நீள்கிறது அவதாரங்களின் பட்டியல். காம வெறியர்களும், கருப்புப் பணத்தைப் பதுக்குகின்றவர்களும், கொலை, கொள்ளைக்கஞ்சாத பஞ்சமாபாதகர்களும் இன்று அவதார புருஷர்களாய் வலம் வருகின்றனர், ஆன்மிகத்தின் ஒளியில்.
மதங்கள் மனிதத்தை வளர்க்கவில்லை; மதவெறியைத்தான் வளர்க்கின்றன. ஆயிரக்கணக்கில் பிணந்தின்றும் அடங்காத கொலைவெறியுடன் திரிந்துகொண்டிருக்கின்றன மதம்பிடித்த கடவுள்கள்.
2002-ல் குஜராத் படுகொலைகள்; அவ்வப்போது அரங்கேற்றப்படும் மதக்கலவரங்கள் என்று கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுகிறார்கள் இசுலாமிய மக்கள், இந்து மதவெறியர்களால். கடவுளை, மதத்தை விமர்சிப்பவர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாக நீள்கிறது. பெருங்கருணை கொண்ட அல்லாவின் பெயரால் அரங்கேற்றப்படுகின்றன மனித குலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் படுகொலைகள், இசுலாமிய மண்ணிலும். சிலுவைப் போர்க் காலந்தொட்டு இம்மண்ணில் சிந்திக்கொண்டே இருக்கிறது மனித இரத்தம், மதங்களின் பெயரால்.
கோடிக்கணக்கான மக்களின் அவலமான வாழ்க்கைக்குக் காரணம், மனித உழைப்பையும், உலக வளங்களையும் ஒட்டச்சுரண்டும் முதலாளித்துவக் கும்பல்தான் என்பதைப் பெரும்பான்மை மக்கள் அறிந்துகொள்ள முடியாத வகையில் மதபோதையூட்டி அவர்களின் அறிவுக்குத் திரையிட்டு மறைக்கும் திருப்பணியைத்தான் அனைத்து மதங்களும் சிரமேற்கொண்டு செய்து வருகின்றன.
**********************************
அச்சமே இறை நம்பிக்கைக்கு அடிப்படை. நமது அறியாமையில்தான் வேர்விட்டு நிற்கின்றன அனைத்து மதங்களும்.
நம்முடைய வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தடையாயுள்ள அனைத்தையும் தூக்கியெறியச் சொல்கிறார், மாவீரன் பகத்சிங்.
இல்லாத கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி, மனித அறிவைப் பாழ்படுத்தி, நமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுகின்றன மதங்கள். எத்தனை காலம்தான் சுமந்துகொண்டிருப்பது .. .. ... தூக்கியெறியுங்கள் இந்தச் சனியனை.
-மருதமுத்து,
பொதுக்குழு உறுப்பினர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
வெளியீடு: கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை - 2.
விலை. ரூ.15/-
Labels:
அனுபவம்,
ப.பி.புத்தகம்,
பண்பாடு,
பொது,
போராட்டம்
Oct 6, 2015
தலைவாரிப் பூச்சூடி உன்னை...
முதல் ஆசிரியன் - நாவல் அறிமுகம்
தலைவாரிப் பூச்சூடி உன்னை...
பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை...
மலைவாழை அல்லவோ கல்வி...
நீ... வாயார உண்ணுவாய் போ என் புதல்வி.
- கவிஞர் பாரதிதாசன்
மனிதகுலம் தனது வாழ்க்கைத் தேவைகளுக்காக
இயற்கையுடன் நடத்திய போராட்டத்தினூடாக சேகரித்துள்ள அறிவுச் செல்வங்கள் ஏராளம்.
எண்ணும், எழுத்துமாகக் கொட்டிக்கிடக்கும்
அந்த அறிவுச் சாகரத்தின் நுழைவாயில் கல்வி.
அகர முதல எழுத்தென்று அணுவைப் பிளந்து
ஏழ்கடலைப் புகுத்திக் குறுகத் தரித்த குறள் தொட்டு, பேரண்டப் பிறப்பின் இரகசியம் தேடிக்
கருந்துளையிருட்டில் வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டிருக்கும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியென...
ஆழ்ந்து, அகன்று, விரிந்து, பரந்து, பெருகிக்கொண்டேயிருக்கிறது கல்வியின் விளைபொருள்.
இயற்கையின் புதிர்கண்டஞ்சிக் கிடந்தவர்களை
இன்று மருத்துவர்களாக, பொறியியல் வல்லுநர்களாக, ஆராய்ச்சியாளர்களாக, பல்துறை விற்பன்னர்களாகப்
பரிணமிக்கச் செய்துள்ளது கல்வி.
அறியாமை இருளகற்றும் கல்விப் பணியின் வாயிலாக,
நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி, வளமூட்டும் அறிவெனும் அகல்விளக்கேற்றியவர்களில் முதன்மையானவர்கள்
நம் ஆசிரியப்பெருமக்கள்.
ஏற்றுக்கொண்ட ஆசிரியப்பணியின் கடமை நிமித்தம்
என்றில்லாமல், கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சியை முன்னிட்டுத் தான் பிறந்து,
வளர்ந்த நகர்ப்புறம் விட்டுநீங்கி, நாகரிகத்தின் 'வளர்ச்சி' தீண்டியிராத அன்றைய சிற்றூர்களில்
சென்று தங்கி துள்ளி விளையாடும் பிள்ளைச் செல்வங்களின் மனதில் கல்வியின் விதைகளைப்
பதியமிட்டு வளர்த்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் பணி மகத்தானது.
உயிர்தந்து, உணவூட்டி, உடல்வளர்க்குந்
தாயினும் சாலப்பரிந்து கல்வி அமுதூட்டி நம் அறிவுப் பயிர் வளர்த்து, வாழ்க்கையில் ஒளியேற்றிய
இத்தகைய ஆசிரியப் பெருந்தகைகள் குறித்த நீங்கா நினைவுகள் இன்றும் நம்மில் பலரின் மனதிலும்
உண்டு.
இடம், பொருள், ஏவல் என்பதாக களத்தையும்,
காலத்தையும் பற்றி நிற்கின்றன மாமனிதர்களின் தோற்றங்களும், மனித சமூகத்தை மாற்றியமைத்த
வரலாற்றுச் சம்பவங்களும்.
********
அது 1924-ஆம் ஆண்டு. சோவியத் மண்ணில் பொதுவுடமைச்
சமூகம் கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருந்த காலம். தனது மக்களின் அனைத்துந் தழுவிய வளர்ச்சிக்கான
திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்திக் கொண்டிருந்தது பாட்டாளிகளின் அரசு. ஜார் மன்னனின்
கொடுங்கோல் ஆட்சியின்கீழ் கொடூரமாக வதைக்கப்பட்டு ஏழ்மையிலும், அறியாமையிலும் உழன்றுகொண்டிருந்த
மக்களை விடுவித்த கையோடு அவர்களது கல்வி வளர்ச்சியிலும் மும்முரமாக ஈடுபட்டது.
அன்றைய சோவியத் நாட்டின் கிர்கீஸியப் பகுதியில்
ஒரு மலையடிவாரத்திலிருந்தது குர்கூரெவு எனும் அந்தச் சிற்றூர். ஏழ்மையின் பிடியில்
வாடிய பல நாடோடிக் குடும்பங்கள் அங்கே வசித்தனர்.
அங்கிருந்த சிறுவர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுப்பதற்காக
சோவியத் அரசால் அனுப்பிவைக்கப்பட்டு அவ்வூருக்கு வந்து சேர்கிறான் துய்ஷேன் எனும் இளங்
கம்யூனிஸ்டுக் கழக இளைஞன். அவனும் அவ்வூரைச் சேர்ந்தவன்தான். ஆனால், முன்பு பஞ்சம்
நிலவிய காலத்தில் வேலைதேடி வெளியூர் சென்றவன்; இன்று, பள்ளியாசிரியனாகத் திரும்பி வந்துள்ளான்.
விவசாய வேலைகளைச் செய்வதற்குப் பள்ளிப்படிப்பெதற்கு?
என்று அறியாமையில் கேட்கும் அப்பாவி ஏழை மக்களிடம் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறான்,
துய்ஷேன்; ஏற்க மறுத்து எள்ளி நகையாடுகின்றனர் ஊர்மக்கள். சோர்ந்துவிடவில்லை அவ்விளைஞன்.
அந்தக் கிராமத்தினருகிலிருந்த குன்றின்மீது
சிதிலமடைந்த நிலையிருந்த - முன்பொரு காலத்தில் ஒரு பணக்காரனுக்குச் சொந்தமாயிருந்த
- குதிரைக் கொட்டடியைத் தனியொருவனாகச் செப்பனிட்டு பள்ளிக்கூடமாக மாற்றுகிறான். வீடு
வீடாகச்சென்று பெற்றோர்களிடம் பேசி, வற்புறுத்தி, சோவியத் அரசின் உத்தரவைக் காண்பித்து
பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்து வருகிறான். முன்பு பகல்வேளைகளில் வயலுக்குத் தேவையான
சாணத்தைப் பொறுக்குவதற்காக ஸ்டெப்பிப் புல்வெளிகளில் அலைந்து திரிந்த அக்குழந்தைகள்
துய்ஷேனின் வருகையால் புத்துலகைக் காணும் வாய்ப்பினைப் பெற்றனர்.
துய்ஷேன் ஆரம்பக் கல்வியினைக்கூட முறையாகக்
கற்றிருக்கவில்லை. ஓரளவு எழுதவும், எழுத்துக்கூட்டிப் படிக்கவும் மட்டுமே தெரியும்.
ஆயினும், தனக்குத் தெரிந்தவற்றையேனும் அக்குழந்தைகளுக்குக் கற்றுத் தந்துவிட வேண்டுமென்ற
ஆர்வமே உந்து சக்தியாக இருந்து அவனை இயக்கியது. முதல் தலைமுறையாகக் கல்வி கற்க வந்திருக்கும்
அவ்விளம் பிஞ்சுகளுக்குக் கல்வி புகட்டுவதில் பொறுமையுடனும், விடாமுயற்சியுடனும் ஈடுபட்டான்.
தங்களிடம் அன்பு பாராட்டி, இனிமையாகப் பழகிய அந்த இளம் ஆசிரியரிடம் பிள்ளைகளும் மிகுந்த
நேசத்துடன் பழகினர்; ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர்.
அல்தினாய் சுலைமானவ்னா - பெற்றோரை இழந்து
உற்றாரின் 'பராமரிப்பில்' வளரும் அவ்வூரின் ஏழைச் சிறுமி. கற்றுக்கொள்வதில் ஆர்வமிக்க,
துய்ஷேனின் அன்புக்குரிய மாணவி. அப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் வயதில் மூத்தவள்.
அனாதைக்குப் படிப்பெதற்கு? என்று அல்தினாயை
ஒரு வயதானவருக்கு இரண்டாம் தாரமாக மணம்செய்துவைக்க முடிவெடுக்கிறாள் அவளது வளர்ப்புத்
தாய். இதனால் அதிர்ச்சியுற்ற அல்தினாய்க்கு ஆறுதல் கூறி அவ்வூரிலிருந்த அவளது பாட்டியின்
வீட்டில் தங்கவைத்துப் பாதுகாக்கிறார், துய்ஷேன். ஆனால், குண்டர்களுடன் பள்ளிக்கூடத்துக்கே
வருகிறாள் அவளது சித்தி. அல்தினாயை அவர்களுடன் அனுப்ப மறுத்துப் போராடும் ஆசிரியரைக்
கடுமையாக அடித்து உதைத்து, கைகளை முறித்து, குற்றுயிரும், குலையுயிருமாக்கிவிட்டு அல்தினாயைத்
தூக்கிச் செல்கின்றனர் அம்முரடர்கள்.
சோவியத் செம்படை வீரர்களுடன் சென்று அல்தினாயை
மீட்டு வருகிறார் அவளது அன்பிற்குரிய ஆசிரியர் துய்ஷேன். அவளது பாதுகாப்புக்கருதியும்,
மேல்படிப்புக்காகவும் நகரத்துக்கு அனுப்பிவைக்கிறார். பாட்டாளிகளின் அரசு அந்த ஏழைச்சிறுமிக்குக்
கல்வியூட்டி வளர்த்தெடுக்கிறது. கற்பது மிகவும் சிரமமாக இருந்தபோதிலும் அல்தினாயின்
விடாப்பிடியான போராட்டம் அவளை மிகவும் உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்கிறது. தற்போது
அல்தினாய் சுலைமானவ்னா ஒரு பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்; தத்துவ விரிவுரையாளர்.
காலத்தின் கரங்கள் அவளது பிறந்த ஊரிலும்
மாற்றத்தைக் கொண்டுசேர்த்தது. அவ்வூரின் மக்கள் இப்போது கூட்டுப்பண்ணையின் உறுப்பினர்கள்.
துய்சேன் ஊன்றிய கல்வியின் விதைகள் நல்ல விளைச்சலை உண்டுபண்ணியிருந்தன. பள்ளிப் படிப்பும்,
உயர்கல்வியும் கற்றவர்கள் பலர் தற்போது அவ்வூரிலிருந்தனர்.
தனது ஊரில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த
பள்ளிக் கட்டிடத்தின் திறப்புவிழாவிற்கு விருந்தினராக வருகிறார் அல்தினாய். அப்போது
தபால்காரர் துய்ஷேன் பற்றிய பேச்சும் எழுகிறது, அவ்விருந்தில்.
ஆம். அவ்வூரின் முதல் ஆசிரியரான அதே துய்ஷேன்
தற்போது, தனது முதிய வயதிலும் கடமை தவறாத தபால்காரராகப் பணியாற்றி வருகிறார். இதை அறிந்துகொண்ட
அல்தினாய் மிகவும் வேதனைப்படுகிறார். கல்வியின் விதைகளை அவ்வூரில் முதன்முதலாகத் தூவிய
அந்த அற்புத மனிதனை இந்தப் புதிய கல்விக்கட்டிடத் திறப்பு விழாவிற்கு அழைத்து உரிய
மரியாதை செய்யத் தவறியது குறித்து அவரது மனம் வேதனைப்படுகிறது.
சீரழிவுக்குத் தள்ளப்பட்ட தனது வாழ்வை
மீட்டெடுத்துப் புத்துயிரூட்டிய தனது முதல் ஆசிரியன் குறித்த ஒரு பின்தங்கிய கிராமத்தின்
ஏழைச் சிறுமியின் நினைவுகளாக விரிகிறது இக்குறுநாவல்.
புறக்கணிப்பால் சோர்ந்துவிடாத செயலார்வம்;
இன்னல்களைக் கண்டு அஞ்சாமல் துணிவுடன் போராடும் வீரம்; குழந்தைகளின் மீதான நேசம்; அவர்களது
கல்வி வளர்ச்சியின்பால் கொண்டிருந்த அக்கறை; தனது போதாமை, குறைபாடு குறித்த கழிவிரக்கம்
ஏதுமின்றி மக்கள் நலன்பேணும் தனது அரசின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் காட்டிய இலட்சிய
உறுதி; பிரதிபலன் பாராமல் பணியாற்றும் கடமையுணர்வு; அனைத்துக்கும் மேலாக தனது வாழ்க்கையில்
ஒளியேற்றிய ஆசான்.. என்று மாமனிதராக உயர்ந்து நிற்கிறார் அல்தினாயின், குர்கூரெவு கிராமத்தின்
முதல் ஆசிரியன்.
மனிதர்கள் தமது உயரிய சிந்தனைகளால் சிறப்படைகிறார்கள்.
உயரிய சிந்தனைகள் உயர்வான சமூகத்தில் இயல்பாகவே உதித்தெழுகின்றன. பொதுவுடமையே அந்த
உயர்ந்த சமூகம். முதல் ஆசிரியன் எனும் இந்நூல் அதில் விளைந்துள்ள இலக்கிய முத்து.
*****
முதலாளித்துவத்தின் கோரப்பிடியில் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கிறது
இன்றைய நம் வாழ்க்கை. சந்தையின் விதிகள் சகலத்தையும் மாற்றியமைக்கின்றன. சரஸ்வதியும்கூட
ஒரு சரக்கு மட்டுமே.
முன்னாள் கள்ளச் சாராய ரவுடிகளும், திடீர்
பணக்கார, அரசியல் ரவுடிகளுமே கல்விக்கோயிலின் இந்நாள் தெய்வங்கள். காசுள்ளவன் பக்கம்
மட்டுமே திரும்புகின்றன கல்விக் கடவுளர்களின் கடைக்கண் பார்வைகள். உண்டியலில் கொட்டப்படும்
காணிக்கையின் அளவைப்பொருத்தே அமைகிறது கல்விச் சேவையின் தரம். கல்வி வள்ளல்களின் கருணையில்
பொங்கி வழிகிறது கல்வி வியாபாரம்.
மகத்தான ஆசிரியப்பணியின் மாண்புகள் கொடூரமாக
வெட்டி வீசப்படுகின்றன தனியார்மயக் கல்விக்கொள்ளையர்களால். மாணவச் செல்வங்களின் அறிவுக்கண்களைத்
திறப்பதல்ல; முதலாளித்துவச் சந்தையில் விலைபோகும் வண்ணம் பிராய்லர் குழந்தைகளை அடைகாப்பதே
வேலை என்பதாக மாற்றப்பட்டுள்ளது ஆசிரியப்பணியின் வரையறைகள். மெத்தப் படித்திருந்தும்
கல்வித்தந்தைகளின் பொறியில் -பொறியியல் கல்வி நிறுவனங்களில்- அகப்பட்ட கூலி அடிமைகளாக
உழல்கின்றனர் இன்றைய பேராசிரியர்கள்.
கல்விச்சேவையில் கைகழுவிக் கொண்டிருக்கின்றன
மத்திய, மாநில அரசுகள். ஆண்டுதோறும் வெட்டிக்குறுக்கப்படுகிறது கல்விக்கான மானியம்.
நாள்தோறும் இழுத்துமூடப்படுகின்றன அரசுப்பள்ளிகள். ஏழைகளின் எட்டாக்கனியாகத் தொலைவில்
செல்கின்றன அருகமைப்பள்ளிகள். நல்லாசிரியர் விருதுகளை எள்ளி நகையாடுகின்றன சில அரசுப்பள்ளி
ஆசிரியர்களின் சீரிய கந்துவட்டிப்பணி.
ஆதிக்கசாதி வெறியும், தனியார்மயக் கொள்ளையும்
நிரம்பி வழியும் முதலாளித்துவக் குப்பைக்கிடங்கில் பற்றியெரியும் பார்ப்பனியத்தீ இன்றைய
கல்விச்சூழலில் நச்சுக்காற்றைப் பரப்பிக்கொண்டிருக்கிறது. மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது
நம் குழந்தைகளின் கல்வி.
பல அல்டினாய்கள் பிஞ்சு வயதில்
கருகிகொண்டிருக்கின்றனர்.
முடைநாற்றமடிக்கும் இந்த விசக் காற்றைச்
சுவாசித்துக்கொண்டு அப்துல் கலாமின் வல்லரசுக்கனவில் மயங்கிக் கிடப்பதா? அல்லது, அழுகி
நாறும் இந்த சமூக அமைப்பைத் தூக்கியெறிந்து, நம் குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை
உருவாக்குவதற்கான போராட்டத்தை ஆசிரியர்கள், மாணவர்களுடன் இணைந்து முன்னெடுக்கப் போகிறோமா?
என்பதே இன்று நம்முன் உள்ள கேள்வி.
ஆசிரியர்: சிங்கிஸ் ஐத்மாத்தவ்
நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
பதிப்பகம் மற்றும் விற்பனையகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை
சென்னை – 600 002
Ph : 044 – 28412367
மருதமுத்து,
பொதுக்குழு உறுப்பினர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
Labels:
அனுபவம்,
ப.பி.புத்தகம்,
பண்பாடு,
போராட்டம்
Aug 26, 2015
போராடும் தருணங்கள்
மனிதப் பண்புகளுடன்தான் வாழ்கிறோமா?
மனிதனாகப் பிறக்கின்றோம்;
இயக்கமே வாழ்க்கை..
நொடிதோறும் கடந்துசெல்கின்றன
ஆயிரமாய் சம்பவங்கள் உலகெங்கிலும்;
அன்றாடம் அரங்கேறுகின்றன
ஆணவக்காரர்களின் அத்துமீறல்களும்,
அதிகாரத்திலுள்ளவர்களின் கொடுங்குற்றங்களும்..
நாம் கண்டும், கேட்டும், பார்த்ததுமாய் சிலவும்
அறியாமலே பலவும்.
வினையின் விளைவு எதிர்வினைதானே?
அப்படித்தான் நடக்கிறதா உலகமெங்கும்..
அப்படியேதான், சரியாகத்தான்
வினையாற்றுகின்றோமா, நாமும்?!
இல்லை.. ... எனில், ஏன்?
உண்மையைக் கண்டடையப்
பகுத்தறிவு தேவை.
உண்மை சுடும்
உணர்வூட்டும், அநீதிகளுக்கெதிராய் போராடத்தூண்டும்.
ஊழித்தீயாய் உருவெடுத்து உன்மத்தர்களைப் பொசுக்கிவிடும்.
அந்த அச்சத்தில்தான்,
அன்று
'மறை'பொருளாக வைக்கப்பட்டிருந்த
அறிவு, இன்று
ஆதிக்க சாதிவெறி, ஆட்கொல்லும் மதவெறி,
ஆபாசச் சீரழிவு, பிழைப்புவாதம் என்பனவாய்
புகைமூட்டத்தில் அமிழ்த்தி வைக்கப்பட்டுள்ளது
ஆளும் வர்க்கங்களால்..
உண்மையை உணர்ந்துகொள்ளவியலாதபடி...
இந்த நச்சுச் சூழலைத்
தகர்த்தெறியும் ஆயுதமாக,
இருளகற்றும் தீப்பந்தமாக,
புகையைவிலக்கி உண்மையைப்
பளிச்செனத் துலங்கச்செய்கின்றன
தோழர் மருதையனின் இந்த உரைவீச்சுகள்.
இவை..
கடந்த கால்நூற்றாண்டு காலத்தில்
இம்மண்ணில் அரங்கேறிய
சமூக அவலங்களின் மீதும்,
அடக்கி, ஒடுக்கி, சுரண்டப்படும்
ஏழை மக்களின்மீது நிகழ்த்தப்பட்ட
அரச பயங்கரவாத வன்முறை வெறியாட்டங்களின் மீதும்
விளாசப்பட்ட சாட்டையடிகள்.
****
சிறிதாய்க் களைகொல்லாததன் விளைவு
விஷ விருட்சங்களாய்க் கொல்கின்றன
மக்களை இன்று.
பாசிச இராஜீவுக்காக
அழச்சொன்னார்கள் அன்று
அரை வயிற்றுக் கஞ்சிக்கே
அல்லல் பட்டுக்கொண்டிருப்பவர்களை
வல்லரசுக் கனவுகானச் சொன்ன
ஆளும் வர்க்கக் கோமாளி
அப்துல் கலாமுக்கு
ஒப்பாரி வைக்கச்சொல்கிறார்கள் இன்றும்.
இலட்சக்கணக்கில்
ஈழத்து உறவுகள்
உயிர் நீத்தபின்னரும்
தாயகத்தில் குறையவில்லை
புலிவேடம் தரித்த
குள்ளநரிகளின் ஊளைச்சத்தம்.
வெட்டி வீழ்த்தப்படாத
ஆதிக்க சாதிவெறியின் கொடுங்கரங்கள்
படுகொலை செய்துகொண்டுதானிருக்கின்றன
இளவரசுகளையும், கோகுல்ராஜ்-களையும்;
தீக்கிரையாக்குகின்றன சேரிக்குடும்பங்களை
நாயக்கன்கொட்டாயிலும், சேஷசமுத்திரத்திலும்.
உலகளந்த பெருமாளையே
விஞ்சி நிற்கின்றன
உலகமயத்தின் நவீன அவதாரங்கள்.
அன்று
இறால் பண்ணைகள்
இன்று
தொழிலாளி வர்க்கத்தின் கொத்தடிமைப் பண்ணைகளாக
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.
இலட்சக்கணக்கில்
தற்கொலை செய்யப்படுகின்றனர் விவசாயிகள்.
வனங்களிலிருந்து, வாழ்விடங்களிலிருந்து
விரட்டப்படுகின்றனர் பழங்குடி மக்கள்.
கனிம வளங்கள் சூறையாடப்படுகின்றன
பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளால்.
ஆற்று மணலும், ஊற்று நீரும்,
கிரானைட்டும், தாதுமணலும்
பகற்கொள்ளையடிக்கப்படுகின்றன.
ஊழித்தாண்டவம் ஆடுகிறது முதலாளித்துவக் கும்பல்.
தொடர்கதையாய் நீள்கிறது
காஷ்மீரின் துயரம்.
நீதி கேட்டு அழுகின்றன
மும்பைக் கலவரத்திலும்,
குஜராத் படுகொலையிலும்
கொல்லப்பட்டவர்களின் ஆன்மா.
அப்சல் குரு, யாகூப் மேமன்களின்
உயிர் குடித்தபின்னும் பசித்துக் கிடக்கிறது
பார்ப்பன இந்துமதவெறி.
பொருளில்லார்க்கிவ் வுலகில்லை.
ஆம்.
நீதியும், நியாயமும் உனக்கில்லை
என்கிறது ஊழல் நீதிமன்றம்.
காவல் நாய்களின்
வன்புணர்ச்சி வக்கிரங்களும்,
கொட்டடிக் கொலைகளும்
கேள்வி கேட்பாரின்றித் தொடர்கின்றன.
தடியாலடித்துக்
குடிகாக்கிறது தாயுள்ளம் கொண்ட அரசு.
எழுதித் தீர்க்கவியலாவண்ணம்
நீண்டுகொண்டே செல்கிறது.. ... ........
இன்றைய அநீதிகளும், அவலங்களும்.
****
ஆயின்,
என்ன செய்ய வேண்டும்?
நமது அறிவுக்கண்ணை
அழுத்திக்கிடக்கும் அழுக்குகளை நீக்கி
உண்மையை உற்றுப் பார்த்து,
உணர்வுபெற்றுப்
போராட வேண்டிய தருணமிது என்பதை
உணர்த்துகின்றது இந்நூல்.
மனிதன் ஒரு சமூக விலங்கு..
மானிடவியலாளர்களின் கூற்று.
தலைமுறைகளின் சேகரமாய் நமது
மரபணுக்களில் ஊறிவந்த
அன்பு, கருணை, இரக்கம்,
அநீதிகண்டு பொங்கும் கோபம்,
பண்பு, பரிவு, பாசம்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் நேசம்,
நாட்டுப்பற்று, தியாகம், மனிதநேயம்...
பரந்து, விரிந்த மனப்பாங்கு,
அனைத்தையும் அரித்துத் தின்றுகொண்டிருக்கின்றன
சாதி-மதவெறி, சுயநலமோகம், நுகர்வுக்கலாச்சாரம்,
நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்தியக் கலாச்சாரச் சீரழிவுகள்...
உள்ளிட்ட இன்றைய சமூகக் கேடுகள்.
இயற்கையை அழித்து,
கோடிக்கணக்கான மக்களின்
வாழ்வைப் பறித்து,
உழைப்பைச் சுரண்டி,
உயிரைக்குடிக்கிறது ஆளும் வர்க்கம்.
மனிதர்களின்
சமூக உணர்வை, உறவைப் பறித்தெடுத்து
விலங்கின் நிலைக்குத் தாழ்த்துகிறது.
இந்த அநீதிகளை வீழ்த்த
ஒடுக்கப்படுவர்களும், உழைக்கும் மக்களும்
ஓரணியில் திரண்டு,
ஒன்றுபட்டுப் போராடவேண்டிய தருணம் இது.
இவ்வுண்மையை உணர
நாம் அனைவரும்
படிக்கவேண்டிய நூல் இதுதான்.
-மருதமுத்து,
உறுப்பினர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
வெளியீடு -
புதிய கலாச்சாரம்,
18, முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை - 600 083.
தொலைபேசி: 044-23718706
விலை ரூ. 40/-
Labels:
அரசியல்,
அனுபவம்,
சமூகம்,
ப.பி.புத்தகம்,
போராட்டம்
Jul 24, 2015
ஒரு மாவீரனின் வாழ்க்கைப் பயணம்!
வீரம் விளைந்தது - நாவல் அறிமுகம்!
மனித
வாழ்வின் வசந்தகாலம் என்று இளமைப்பருவத்தை வருணிப்பதுண்டு. எதிர்காலம் குறித்த கனவுகளும்,
நம்பிக்கையும், புதுமையின்மீது ஆர்வமும், செயல்துடிப்பும் பொங்கித் ததும்பும் காலம்
அது. வாழ்க்கையின் சுக, துக்கங்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, மனித வாழ்வின் இந்தப்
பொன்னான தருணத்தை தனது தாய்நாட்டு விடுதலைக்காக அர்ப்பணித்து இளமைக்குப் புதுப் பொலிவு
சேர்த்த ஒரு மாவீரனின் வாழ்க்கைப் பயணமே இந்த நாவல்.
அன்றைய
ரஷ்யாவில் ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டுக்கிடந்த ஏழை, எளிய மக்களும், விவசாயிகளும்,
தொழிலாளர்களும் கம்யூனிஸ்டுக் கட்சியின் கீழ் அணிதிரண்டு கொடுங்கோலன் ஜார் மன்னனின்
ஆட்சியைத் தூக்கியெறிந்தனர். 1917-ல், பூமிப்பந்தின் ஆறில் ஒரு பகுதியில் பொதுவுடைமை
ஆட்சி மலர்ந்தது. ஆயினும், நாட்டின் உட்பகுதிகளிலும், கிராமப் புறங்களிலும் நிலப்பிரபுக்களும்,
பண்ணையார்களும் அடங்கிய பிற்போக்கு சக்திகள்
கொட்டமடித்து வந்தனர். புதிதாக ஆட்சியிலமர்ந்த பாட்டாளிவர்க்கத்தின் செஞ்சேனை வீரர்கள்
அவர்களை அடக்கி, ஒடுக்குவதற்கான ஒரு கடுமையான உள்நாட்டுப் போரை நடத்திக்கொண்டிருந்தனர்.
வறிய,
ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன் பாவெல் கர்ச்சாகின். துடுக்குத்தனமும், பிடிவாதமும் அவனை
ஆரம்பப் பள்ளியைத் தாண்டவிடவில்லை. ஆனால்
கடின உழைப்பாளி. நேர்மையும், நெஞ்சுரமும் கொண்டவன்; அநீதிகளைக் கண்டு பொங்கி எழும்
குணம் படைத்தவன். எனவே, ஏழைகளைக் கசக்கிப் பிழிந்து உல்லாசமாக வாழும் ஊதாரிகளான பணக்கார
வர்க்கத்தை இயல்பாகவே வெறுத்தான். பணக்கார வர்க்கத்தின் கொள்ளைக்கூட்டப் படைகள் அவனது
ஊரையும் சீரழித்துச் சின்னாபின்னமாக்கியிருந்தன. கொதித்துக் கொண்டிருந்த அவ்விளைஞனை
செஞ்சேனை அரவணைத்துக்கொண்டது. தாய்நாட்டைக் கொள்ளையர்களிடமிருந்து விடுவிக்கும் பணியே
முதன்மையானது என்பதை உணர்ந்துகொண்டு தனது முழு ஆற்றலையும் மக்களின் எதிரிகளை வீழ்த்தும்
போரில் ஈடுபடுத்தினான். துப்பாக்கிக் குண்டுகள் அவனது உடலைத் துளைத்தன; பீரங்கிக் குண்டுத்
தாக்குதல் அவனை மரணத்தின் வாயிலில் கொண்டு நிறுத்தியது. ஆனால், இலட்சியத்தில் உறுதியும்,
போராட்டக் குணமும் கொண்ட அவ்விளைஞனை சாவின் கைகள் தொட மறுத்தன. புத்துயிர் பெற்ற போர்வீரனாக
மீண்டும் போர்க்களத்திற்குத் திரும்பினான்.
ஆயினும்,
போரில் ஏற்பட்ட காயங்களால் பாதிக்கப்பட்ட உடல் அவனது மனோ வேகத்திற்கு ஈடுகொடுக்க மறுத்தது.
கடுமையான உடல்வலியிலும், வேதனையிலும்கூட ஓய்வை நாடுவதை அவன் மனது வெறுத்தது. புதிய
சமூகத்தை நிர்மாணிக்கும் வேலையில் கடுமையாக ஈடுபட்டான். ஆனாலும் படிப்படியாக அவனது
உடல் செயலிழந்து கொண்டு வந்தது. இறுதியில்
கண்பார்வையையும் இழக்க நேரிட்டது. எத்தகைய அசாதாரண மன உறுதி படைத்த மனிதனையும்
வீழ்த்திவிடும் அந்த இக்கட்டான நிலையையும் பாவெல் துணிச்சலுடன் எதிர்கொண்டான். உடல்
உறுப்புக்கள் செயலிழந்து கண்பார்வையும் பறிபோன அந்த நிலையில் அவனது இலக்கிய மனம் விழித்துக்கொண்டது.
இந்த நாவல் பிறந்தது. ஆம்! இது கதையல்ல; தனது இளமையை, தனது வாழ்வை தாய்நாட்டின் சேவைக்கு அர்ப்பணித்த ஒரு மாவீரனின்
வாழ்க்கை.
மண்ணின்
ஈரமும், மக்களை நேசிப்பவர்களின் வீரமும்தான் இன்னும் இவ்வுலகில் உயிர்களைக் காத்துக்கொண்டிருக்கின்றன.
இந்த வீர உணர்வுதான் பகத்சிங்கையும், அவரது தோழர்களையும் வெள்ளையனுக்கெதிராகப் போராடத்
தூண்டியது. இரண்டாம் உலகப் போரில் கொடுங்கோலன் ஹிட்லரை வீழ்த்தி பாசிசத்தின் கோரப்பிடியிலிருந்து
உலகைக் காத்தது பொதுவுடைமைப் போர்வீர்ர்கள் கொண்டிருந்த மண்ணின், மக்களின் மீதான நேசம். .இன்றைய சூழலில்
பன்னாட்டு நிறுவனங்களாலும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளாலும் சூறையாடப்பட்டு தமது வாழ்க்கையை
இழந்து நிற்கும் மக்களும், தனது வளங்களை இழந்துகொண்டிருக்கும் நம் தேசமும் நம்மிடம்
கோரி நிற்பது இந்த உணர்வுகளையன்றி, வேறென்ன?
ஆசிரியர்
- நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி
கிடைக்குமிடம்
:
கீழைக்காற்று
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
044-28412367 10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
Labels:
அனுபவம்,
ப.பி.புத்தகம்,
பண்பாடு,
புத்தக அறிமுகம்,
போராட்டம்
Subscribe to:
Posts (Atom)


