Nov 23, 2014

புறக்கணிப்பின் ‘வலி’



சமீபத்தில் ‘வலி’ என்றொரு அருமையானதொரு குறும்படம் பார்த்தேன்.  ஒரு உணவகம். ஒரு காபி ஆர்டர் பண்ணி திருநங்கை காத்திருக்கிறார்.  அடுத்தடுத்து அங்கு வரும் ஆண், பெண், காதலர்கள் என எல்லோரும் அவர் அருகே அமர்வதை தவிர்க்கின்றனர். சக மனிதர்களின் புறக்கணிப்பு தந்த வலியால் மனம் உடைந்து அழுகிறார். தேவதை போல வரும் ஒரு பெண் குழந்தை, அவரை சக மனுசியாக பார்த்து சிநேகத்துடன் நடந்துகொள்கிறாள். நெகிழ்ந்து, கண்ணீர் வருவதுடன் படம் முடிகிறது!

படத்தின் இறுதிக்காட்சியில் நானும் அழுதேன். நம்மை போன்ற சக மனுசியான திருநங்கைகளை வீடும், சமூகமும் புறக்கணித்தால் அவர்கள் என்னதான் செய்வார்கள்? சம காலங்களில் திருநங்கை குறித்த நல்லவிதமான புரிதல்கள் ஏற்பட்டு வருவதை பார்க்கிறேன். இந்த படமும் அதற்கு உதவி செய்திருக்கிறது.

படத்தில் திருநங்கையாக நடித்தவர் பிரதீப். எங்கள் நண்பர்கள் குழாமில் அவரும் ஒருவர். ஏற்றுக்கொண்ட பாத்திரத்தின் உணர்வுகளை நன்றாக உள்வாங்கி நடித்துள்ளார்.  படத்தின் இயக்குநர் விக்டரை சந்தித்த பொழுது, “இது ஒரு உண்மைக்கதை.  ஒரு உணவகத்தில், நகர்ந்து போனவர்களில் நானும் ஒருவன். என் செய்கையின் நெருடலில் தான் இந்த படத்தை எடுத்தேன்” என்றார்.

படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

 படத்திற்கான சுட்டிக் கீழே!

https://www.youtube.com/watch?v=6WNPf5I6I_w 

நன்றி : குருத்து

ஒரு மருத்துவரின் மனப் போராட்டம்!



முன்னொரு காலத்தில் மக்களின் உயிர்காக்க தன்னலமற்று வேலை செய்த ஒரு மருத்துவ குழுவின் பெயர் தான் Apothecary.  ஆனால், முழுக்க முழுக்க கல்லா கட்டுவதிலேயே கவனமாய் இருக்கும் ரமணா டைப் மருத்துவமனைக்கு இந்த பெயரை வைத்திருக்கிறார்கள். படத்தின் பெயரும் அதுவே!

இந்த மருத்துவமனையில் சீனியர் நரம்பியல் மருத்துவராக பணிபுரிகிறார் சுரேஷ் கோபி. நல்லவர்.  நிர்வாகம் கொடுக்கும் தொடர் நெருக்கடியில் சில நோயாளிகளை வைத்து சிக்கலான ‘சில ஆய்வுகள்’ செய்ய ஒத்துழைக்கிறார்.  அந்த ஆய்வுகளின் விளைவாக சிலர் இறக்கிறார்கள். சிலர் நடைபிணமாகின்றனர்.

நாளாக, நாளாக மருத்துவருக்கு மன உளைச்சல் அதிகமாகிறது.  இறந்து போனவர்களும், உயிரோடிருப்பவர்களும் இவருடைய கண்களுக்கு மட்டும் தெரிந்து “தலைவலி எங்களை சித்திரவதை செய்கிறது. எங்களை கொன்றுவிடுங்கள் என கெஞ்சுகிறார்கள்”. இதன் தொடர்ச்சியில், ஒரு சாலை விபத்தில் சிக்கி கோமாவில் விழுகிறார்.

கனவில் ’ஆய்வில்’ இறந்து போனவர்கள் அவர்கள் தங்கள் உலகத்துக்கு மருத்துவரை தள்ளிக்கொண்டு போக பார்க்கிறார்கள். :) மருத்துவரால் உயிர் பிழைத்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, வாதாடி அவரை விடுவிக்கிறார்கள். மருத்துவர் கோமாவிலிருந்து விடுபடுகிறார்.

உடல் நலம் தேறிவந்து, நிர்வாகம் கோரும் பழைய ’ஒத்துழைப்பை’ தர மறுக்கிறார். நேர்மையாய் வாழ்வது தான் சிறந்தது என வாதாடி விடைபெறுகிறார்.
****

நமது ”மக்கள் நல அரசு” மக்களுக்கு சுகாதாரம் தருவது தனது கடமை இல்லை என கழட்டிவிட்டபிறகு, கடந்த 20 ஆண்டுகளில் புற்றீசல் போல நகர்ப்புறங்களில் மருத்துவமனைகள் பெருகிவிட்டன.

மதுரையில் மருத்துவர் ஒருவர் தற்கொலை முயற்சியில் விசம் குடித்து வரும் நோயாளிகளை தைரியமாக டீல் செய்வார். நிறைய மருந்து மாத்திரைகளை எழுதி வாங்கிக்கொண்டு,  காப்பாற்றிய பிறகோ அல்லது இறந்த பிறகோ மீதி இருக்கும் நிறைய மருந்துகளை மருந்து கடையில் கொடுத்து பணம் வாங்கிக்கொள்வார். மருந்து கடையில் வேலை செய்த என் தோழி இதை சொன்னார்.

இன்னொரு தோழி ஒருவர் மதுரையில் புகழ்பெற்ற ஸ்கேன் மையத்தில் வேலை செய்தார். அங்கு ஒரு ஸ்கேனுக்கு 5000 பணம் வாங்கினால், எழுதிக்கொடுத்த மருத்துவருக்கு ரூ. 2500யை கமிசனாக கொடுத்துவிடுவார்கள்.  இந்த கமிசன் குறித்து பேசி மருத்துவர்களை ஸ்கேன் எடுக்க சொல்லி அனுப்புவதற்கும், ஸ்கேன் எடுத்த பிறகு மாதம் ஒருமுறை பல ஆயிரங்கள் சேர்ந்த கமிசனை போய்க்கொடுப்பதற்கும் நிறைய பி.ஆர்.ஓக்கள் வேலை செய்தார்கள். அங்கு வேலை செய்த ஒரு மருத்துவர் இதையெல்லாம் பார்த்து மனம் வெறுத்து போய் எந்த நாட்டில் மருத்துவ துறையில் லஞ்சம் இல்லை என தேடினார்.  லண்டனில் போய் செட்டிலாகிவிட்டார். லண்டனில் அரசு இலவச மருத்துவம் தருகிறது.

மேலும், நம்மை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் தான் வளர்ந்த நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் நிறைய மருத்துவ ஆய்வுகளை செய்கிறார்கள். நம்மை சோதனை எலிகளாக பயன்படுத்துகிறார்கள். இதை அவர்கள் வெளிப்படையாக சொல்லி செய்கிறார்கள். கொடுமை.

படத்தில் காட்டப்படுகிற சுரேஷ்கோபி போன்ற நல்ல மருத்துவர்கள் அபூர்வமாகிவருகிறார்கள் என்பது யதார்த்த உண்மை.

சொர்க்க நாடாக சிலர் கருதும் அமெரிக்காவில் மருத்துவம் முழுக்க தனியார்மயம் தான். 2008ல் மிகப்பெரிய பொருளாதார மந்தம் ஏற்பட்ட பொழுது, 15% பேருக்கு வேலையில்லை. மொத்த மக்கள் தொகையான 30 கோடியில் 15 கோடி பேர் வேலை செய்கிறார்கள் என்றால் 15% என்றால் 2 கோடி பேருக்கு மேல் வேலையில்லை. அங்கு வேலை செய்கிற நிறுவனத்தினர் தான் இன்சூரன்ஸ் எடுத்து தருவார்கள். 2 கோடி பேருக்கு வேலை இல்லை. அப்படியென்றால், அடுத்து அவர்களுக்கு நோய் வந்தால் என்ன ஆவார்கள்? அவர்களின் கதி அதோ கதி தான். இதனால் தான் ஒபாமா பதவி ஏற்ற பொழுது வெளிப்படையாக ”நம் நாட்டில் மருத்துவம் என்பது எப்பொழுது வேண்டுமென்றாலும் வெடிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது” என்றார்.

இன்னும் மருத்துவத்துறை சீர்கேடுகளையும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். லாபம் என்று ஆனபிறகு, எல்லா கோளாறுகளும் தானாய் வந்துவிடும்.  கியூபா, கனடா, லண்டன் என இன்னும் சில நாடுகளில் இருப்பது போல அரசே மருத்துவம் தந்தால் தான், இந்த பிரச்சனைகளை தீர்க்கமுடியும்.
****

படத்தைப் பொறுத்தவரையில், இரண்டு மருத்துவர்கள் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அதற்காகவே பாராட்டலாம்.

எடுத்துக்கொண்ட தலைப்பில் சின்சியராக படம் எடுத்திருக்கிறார்கள். பாடல், சண்டை என்கிற வணிக அம்சங்கள் இல்லை.  படம் மெதுவாக நகருவது ஒரு குறை. தெளிவான ஒளிப்பதிவு.
மற்றபடி படத்தில் எல்லோரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
****

Nov 22, 2014

திரையரங்கிற்கு வராதே! டிவிடியில் பார்!



நேற்று வழக்கம் போல டிவிடி கடைக்கு போயிருந்தேன்.  எப்பொழுதும் டிவிடிக்களை வெளியே வைத்திருப்பவர்கள், உள்ளே வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். தெரிந்த பையன் என்பதால், ரைய்டா என்றேன். ஆமாம் என்றான்.

சமீபத்தில் விஷாலும், பார்த்திபனும் தங்கள் படங்கள் வெளியான பொழுது, அரசை நம்பாமல், அவர்களே தெருவில் இறங்கி டிவிடி விற்ற கடைகளில் ரைய்டு நடத்தி பிரச்சனை செய்தார்கள்.  இதனை தொடர்ந்து, திரையுலகமும் தங்கள் தொழில் நசிவதால், டிவிடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசை நிர்ப்பந்தித்து போராட இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார்கள்.

என்னைக் கேட்டால், திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பதை தடுப்பதே திரையுலகம் சார்ந்தவர்கள் தான் என்பேன். கடந்த கருணாநிதி ஆட்சியின் பொழுது, படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தாலே வரிவிலக்கு என அறிவித்தார்.  ஏற்கனவே திரையுலகம் கருப்பு பணத்தால் மூழ்கி திளைக்கும் பொழுது, இந்த வரிவிலக்கு எல்லாம் ரெம்ப அதீதம். 

இதில் இந்த வரிவிலக்கு சலுகைகளையெல்லாம் பொதுமக்களுக்கு கண்ணிலேயே காட்டுவதில்லை. இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் புதுமைப் பெண் போன்ற சில படங்கள் வரும் பொழுது, மக்கள் நிறைய பேர் பார்க்கவேண்டும் என்று அரசு வரிவிலக்கு தருவார்கள். 5ரூ டிக்கெட் விலை என்றால், வரிவிலக்கு படங்களுக்கு 1ரூ தான் விலை. மக்களும் கூட்டம் கூட்டமாக போய் பார்த்தார்கள் என என் அண்ணன் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்.

ஆனால், இப்பொழுது வரிவிலக்கு தந்தால், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு சார்ந்த ஆட்களே தின்று செரித்துவிடுகிறார்கள்.  இதைவிடக்கொடுமை என்னவென்றால், ரஜினி, கமல், விஜய் படங்கள் வெளியானால் விலையை கூடுதலாக வைத்தும் கொள்ளையடிக்கிறார்கள்.  திருட்டு டிவிடியினால் தாங்கள் பாதிக்கப்படுகிறோம் என பேசுபவர்கள் இதைப் பற்றியெல்லாம் வாயைத் திறப்பதில்லை.

மேலும் இப்பொழுதெல்லாம், பல திரையரங்குகளில் வெளியில் வாங்கும் தின்பண்டங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. ஆட்களை போட்டு, நன்றாக சோதனையிடுகிறார்கள். (இது குறித்து அரசின் வழிகாட்டுதல் இருக்கிறதா என தெரியவில்லை.  விவரம் அறிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்) ஆனால், உள்ளே அவர்கள் இரண்டு மடங்கு விலை வைத்து விற்கிறார்கள். ஒரு சின்ன பாட்டில் தண்ணீரின் விலை ரூ. 10 என்றால், சங்கம் திரையரங்கில் ரூ. 30 என விற்கிறார்கள். 200 % லாபம். இதை வியாபாரம் என சொல்லமுடியுமா? படம் பார்க்க வருகிறவர்களிடம் பணம் பறிப்பது என்று தான் சொல்லமுடியும்.

ஆக ஒரு குடும்பம் ஒரு படத்தை பார்க்க போனால், டிக்கெட் விலை, பார்க்கிங், ஸ்நாக்ஸ் என எல்லாவற்றையும் கணக்குப் பார்த்தால், ரூ1000 த்தை தொட்டுவிடுகிறது. அடுத்தப்படம் அடுத்த இரண்டு மாதத்திற்கு கிடையாது. விளைவு திருட்டு டிவிடியைத் தான் மக்கள் வாங்கிப் பார்க்கிறார்கள்.

நேற்று ஒரு நடுத்தர வயது அம்மா, மலையாளம், தமிழ் என ஒரே நேரத்தில் 6 டிவிடிக்கள் வாங்கினார்கள். எல்லாம் ரூ. 180 மட்டுமே.

ஆக, திரையுலகம் சார்ந்தவர்களால் தான் திரைத்தொழில் அழிக்கப்படுகிறது! அவர்கள் தங்கள் கொள்ளையை விடாதவரை, மக்கள் டிவிடியைத் தான் நாடுவார்கள் என்பது யதார்த்தம்.

யாராவது சொன்னால் நல்லது!

நேற்று மாலை சென்னை அண்ணாநகர் வளைவு அருகே சிக்னலுக்காக காத்திருந்தேன். இரண்டு வளைவுகளுக்கு நடுவில்  போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த காவல்துறைக்கென்று ஒரு அறை உண்டு.  அந்த அறைக்கு மேலே, அவசர உதவிக்கென்று 16 வகையான தொலைபேசி எண்கள் எழுதியிருந்தார்கள்.

1.அவசர உதவி காவல் 100
2. ஆம்புலன்ஸ் 108
3. குழந்தைகள் உதவி 1098
.....
அதில்
14. லஞ்ச ஒழிப்பு புகார் உதவி:

என எழுதி எந்ததொலைபேசி எண்ணும் எழுதாமல் இருந்தார்கள்.

தினம் மக்களை மறிச்சு, இதே இடத்தில் கல்லா கட்டுறோம்.  லஞ்ச ஒழிப்பு எண்ணை எழுதி வைச்சு, நம்ம பொழப்புல நாமே மண்ண அள்ளிப்போட்டுக்குவானேன் என எழுதாமல் விட்டுவிட்டார்கள்!

என்ன ஒரு சுதாரிப்பு!  காவல்துறைன்னா சும்மாவா? :)

Nov 21, 2014

ஒரு விபத்தும் சில ‘எருமைகளும்’!

மாலை 7 மணி.  ஆந்திராவை நோக்கி செல்லும் நீண்ட புறவெளி சாலை(Bypass)-யில் வாகனங்கள் வேகவேகமாய் கடந்து போய்க்கொண்டிருந்தன. ஓரிடத்தில், மனிதர்கள் சிறு கூட்டமாய் நின்று கொண்டிருந்தார்கள். 
ஒரு நாற்பது வயது கனத்த மனிதர் ரத்த வெள்ளத்தில் வானம் வெறித்து கிடந்தார்! கொஞ்சம் தள்ளி ஒரு எருமை கொஞ்சம் காயத்தோடு ஏற்கனவே விழுங்கி இருந்த உணவை மெல்ல அசுவாரசியமாய் மென்று கொண்டிருந்தது! அவர் வந்த பைக் (Hero Honda - Passion) சாலையின் ஓரத்தில் முட்டி கீழே கிடந்தது!
****

புறவெளிச் சாலையின் தடுப்புச் சுவர் ஓரிடத்தில் உடைந்து விழ, சில எருமைகள் சாலையில் ஏறியிருக்கின்றன.. வேகமாய் வந்த அவர் இருட்டில் நின்று கொண்டிருந்த மாடுகளை கவனிக்காமல் மோதிவிட்டார்.

108 ஆம்புலன்ஸ் வந்து பார்த்து, “இவர் அடிப்பட்ட மனிதர் இல்லை. பிணம்” என சொல்லிவிட்டு சென்றுவிட்டதாம். வீட்டிற்கு தெரிவித்து அவர்கள் வந்துகொண்டிருப்பதாக சொன்னார்கள்.
****

இறந்தவருக்கு இரண்டு பிள்ளைகள் என்றார்கள். இனி அவர்களின் எதிர்காலம்? யோசிக்கும் பொழுது கவலையாய் இருந்தது. முதல்நாள் இதே சாலையில் ஒரு அவசர வேலை காரணமாக 80 கி.மீ. வேகத்தில் கடந்து சென்றதும் நினைவுக்கு வந்தது! விபத்து நடந்து 10 நிமிடம் தான் ஆனது என்றார்கள். சிறிது நேரத்திற்கு முன்பு தான் ஓரங்கட்டி தொலைபேசியில் 10 நிமிடம் பேசிவிட்டு வந்ததும் நினைவுக்கு வந்தது.
****

மூன்று நாட்கள் கழித்து இன்றும் அதே சாலையில் வந்துகொண்டிருந்தேன். சரிந்து விழுந்த தடுப்புச் சுவரை இன்னும் எழுப்பவில்லை!

இன்னும் சில எருமைகள் வருவதற்கும், சில ‘விபத்துகள்’ நடப்பதற்கும் பொறுப்பாய் விட்டு வைத்திருக்கிறார்கள்.

மனித உயிர்கள் நம் நாட்டில் மலிவானவை!
****
அந்த டோல்கேட்டில் வரி கட்ட வண்டிகள் வரிசையாய் காத்திருந்தன.  கணக்காய் காசு வசூலித்து  கல்லா பெட்டி நிரம்புவதை சில ‘ஆபிசர் எருமைகள்’ ஆர்வமாய் கவனித்துக்கொண்டிருந்தன!
****
நன்றி : குருத்து