Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Nov 16, 2010

அயோத்தி தொடர்பான பதிவுகள்!

முன்குறிப்பு : அயோத்தி தொடர்பான செய்திகளை படிப்பதற்காக தேடும் பொழுது.. இந்த பதிவுகள் கண்ணில்பட்டன. ஒரு தொகுப்புக்காக இங்கே இணைப்புகள் தருகிறேன். தேவையுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

*****

Oct 27, 2010

அருந்ததிராயை ஆதரிப்போம்!


அருந்ததி ராயின் அறிக்கை :

நான் இதை காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகரிலிருந்து எழுதுகிறேன். காஷ்மீரைப் பற்றி அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்களில் நான் பேசியவற்றுக்காக நான் கைதுசெய்யப்படலாம் என இன்றைய செய்தித் தாள்கள் கூறுகின்றன. இங்கிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். பல்வேறு அரசியல் நோக்கர்களும் பல ஆண்டுகளாகச் சொல்லியும் எழுதியும் வருவதைத்தான் கூறினேன். நான் பேசியவற்றின் எழுத்து வடிவத்தைப் படிப்பவர்கள் அவை அடிப்படையில் நீதிக்கான அழைப்புகள் என்பதை உணர்வார்கள். உலகிலேயே மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பின்கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்;

தங்களது தாய்மண்ணிலிருந்து விரட்டப்பட்ட துயரத்தோடு காஷ்மீருக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் ; தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் குப்பைகளுக்குக் கீழே மறைந்துகிடக்கும் புதைகுழிகளைப் பார்த்தேனே காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் ராணுவ வீரர்கள், அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; இந்த ஆக்கிரமிப்புக்கான விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கும் , இப்போது போலீஸ் ராச்சியமாக மாறிவிட்ட நாட்டில் பயங்கரங்களுக்கிடையே வாழப் பழகிக்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றுதான் நான் பேசினேன்.

நேற்று தெற்கு காஷ்மீரில் இருக்கும் ஆப்பிள் நகரமான ஷோபியானுக்கு நான் போயிருந்தேன். அங்குதான் ஆசியா , நிலோஃபர் என்ற இரண்டு இளம்பெண்களின் சடலங்கள் அவர்களின் வீடுகளுக்கு அருகில் ஒரு ஓடையில் கண்டெடுக்கப்பட்டன . குரூரமாக அவர்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டில் நாற்பத்தேழு நாட்கள் அந்த நகரம் மூடப்பட்டுக் கிடந்தது. அவர்களைக் கொன்றவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. நிலோஃபரின் கணவரும் ஆசியாவின் சகோதரருமான ஷகீலை நான் சந்தித்தேன்.இந்தியாவிடமிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துபோன, சுதந்திரம் ஒன்றுதான் ஒரே நம்பிக்கை என்று கருதுகிற மக்கள் துக்கத்தோடும் கோபத்தோடும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிச் சூழ்ந்திருந்தார்கள்.

கல்வீசியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டு கண்களுக்கிடையே தோட்டாவால் துளைக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்தேன். என்னோடு பயணம் செய்த இளைஞர் ஒருவர் அனந்த்நாக் மாவட்டத்தில் இருக்கும் தனது நண்பர்களான ‘ டீன் ஏஜ்’ இளைஞர்கள் மூன்றுபேரை எப்படி விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள் கல் வீசியதற்காக அவர்களது விரல் நகங்கள் எப்படி பிடுங்கப்பட்டன என்பதை விவரித்தார்.

‘ வெறுப்பைக் கக்கும் பேச்சை நான் பேசியதாக நாளேடுகளில் சிலர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இந்தியா சிதைவதை நான் விருபுவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதற்கு மாறாக எனது பேச்சு அன்பிலிருந்தும் பெருமிதத்திலிருந்தும் வருகிறது. நாங்கள் எல்லோரும் இந்தியர்கள்தான் என அவர்களைப் பலவந்தப்படுத்திச் சொல்லவைக்கவேண்டும் என்பதற்காக அவர்களது விரல் நகங்களைப் பிடுங்கவேண்டாம்; கற்பழிக்கவேண்டாம் , படுகொலை செய்யவேண்டாம் என்ற உணர்விலிருந்து வருகிறது. நீதி விளங்கும் ஒரு சமூகத்தில் வாழவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து வருகிறது. தமது எண்ணங்களைப் பேசுகிற காரணத்தால் எழுத்தாளர்களை மௌனிகளாக்கி வைக்க இந்த தேசம் விரும்புகிறது என்பது பரிதாபகரமானது. நீதி கோருபவர்களை சிறையில் அடைக்க இந்த நாடு முயற்சிக்கிறது, ஆனால் மதவெறிக் கொலைகாரர்கள் ; இனப்படுகொலைகளைச் செய்தவர்கள் ; கொள்ளைக்காரர்கள்; கற்பழிப்பவர்கள் , ஊழல் செய்பவர்கள், ஏழைகளிலும் ஏழையான மக்களைச் சுரண்டுபவர்கள் போன்றவர்களெல்லாம் இங்கே சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அக்டோபர் 26, 2010

அருந்ததி ராய்

Oct 30, 2009

பத்து வருடங்களாகப் போராடும் ஐரோம் சர்மிளா!



நன்றி : போராட்டம்

வரும் நவம்பர் 2, 2009 அன்று, மணிப்பூரைச் சேர்ந்த கவிஞரும், செயல் வீரருமான ஐரோம் சர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டத்தின் பத்தாவது ஆண்டு துவங்குகிறது. இந்திய அரசின் ஆயுத படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் (AFSPA) திரும்பப் பெறக் கோரி, அவர் கடந்த பத்தாண்டுகளாக போராடி வருகிறார்.

1958-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சட்டத்தின்படி, வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும், எவரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களது வீடுகளில் புகவும், சந்தேகத்தின் பேரிலேயே கூட சுட்டுக் கொலை செய்யவும் இந்திய இராணுவத்திற்கு அதிகாரம் உண்டு. இதற்கெதிராக சட்டப்பூர்வமாக கூட இராணுவத்தை தண்டிக்க முடியாது.

இந்திய இராணுவப் படைகள், இச் சட்டத்தின் அரவணைப்பில், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், கொலைகள், கட்டாய ஆட்கடத்தல்கள் என அட்டூழியம் செய்து வருகின்றன. இதன் மூலம் நாட்டிற்கே தலைகுனிவையும், மணிப்பூர் மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தையும் கொடுத்து வருகின்றன. “இச்சட்டம் ஒடுக்குமுறையின் சின்னமாக மாறி விட்டது. மக்களின் வெறுப்பிற்குரிய சட்டமாகவும், எதேச்சதிகாரம் மற்றும் பாகுபாட்டின் கருவியாகவும் விளங்குகிறது” என அரசாங்கம் நியமித்த ஜீவன் ரெட்டி கமிசனே கூறியுள்ளது. இனப் பாகுபாட்டிற்கான ஐ.நா கமிட்டி இச்சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

நவம்பர் 2, 2000 அன்று, மணிப்பூரிலுள்ள மாலோம் எனும் இடத்தில் பத்து குடிமக்களை, இந்திய இராணுவம் படுகொலை செய்ததைக் கண்டித்து, கவிஞர் ஐரோம் சர்மிளா தனது உண்ணாவிரதத்தைத் துவங்கினார். இந்தியக் குற்றவியல் சட்டம் 307-ன் படி அவர் தற்கொலை செய்ய முயன்றார் என நான்கு நாட்களில் அவரை கைது செய்தது இந்திய அரசு. இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்தது. அவர் சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க மறுத்து விட்டார்.

நவம்பர் 21, 2000 அன்று, அவரது மூக்கில் பிளாஸ்டிக் குழாய் சொருகப்பட்டு, அவரது உடலில் திரவ உணவு வலுக்கட்டாயமாக செலுத்தப்பட்டது. கடந்தப் பத்தாண்டுகளாக இந்தத் திரவ உணவின் மூலமாகவும், உச்சகட்ட பாதுகாப்புடன் தனிமைச் சிறையில் வைத்து அவரது உயிரை இந்திய அரசு கையில் பிடித்து வைத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் அவர் விடுதலை செய்யப்படுவதும், உடனடியாக மீண்டும் கைது செய்யப்படுவதும் என தொடர் நிகழ்வாகியுள்ளது.

அவரது இடையறாத போராட்டத்திற்கு ஆதரவாக மணிப்பூர் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், கடந்த டிசம்பர் 10, 2008 முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவரது உறுதிமிக்க போராட்டத்தின் பத்தாண்டு துவக்கத்தை, “நம்பிக்கை, நீதி மற்றும் அமைதியின் திருவிழா” என மக்கள் மத்தியில் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளனர். எனவே, அமைதியிலும், நீதியிலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் அவரது போராட்டத்திற்கு ஆதரவளிப்பது அவசியமானதாகும்.

(‘மணிப்பூர் சுதந்திரம்’ இணையத் தளத்தில் வெளியாகியுள்ள அறைகூவலின் அடிப்படையில்)

தொடர்புடைய பதிவுகள்

மணிப்பூர் : வீரத்தின் விளைநிலம்

இப்படித்தான் நடக்கின்றன என்கவுன்டர்கள் - நன்றி - தெகல்கா