Showing posts with label நீதித்துறை. Show all posts
Showing posts with label நீதித்துறை. Show all posts

Jun 18, 2016

எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், ஜனநாயக சக்திகள் கருத்து சொல்லாமல் இருப்பது ஏன்?


நீதிபதிகளே 'தவறிழைக்கிற' வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்ற புதிய சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக்கோரி வழக்கறிஞர்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தமிழகம் தழுவிய அளவில் பேரணி, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், நீதிமன்ற புறக்கணிப்பு என‌ போராடி வருகின்றனர்.

வழக்கறிஞர்கள் இதுவரை ஈழப்பிரச்சனை, மாணவர்கள் பிரச்சனை, மீனவர் பிரச்சனை என பல பிரச்சனைகளிலும் தலையிட்டு, போராடி வந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பொதுமக்களில் உள்ள பல்வேறு வகையினர் அவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது தானே தார்மீக கடமை!

இதுசம்பந்தமாக கார்ட்டூனிஸ்ட் பாலா போராடும் வழக்கறிஞர்களுக்கு தனது ஆதரவினை தெரிவித்து கருத்து தெரிவித்திருந்தார். ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் ஆதரவு தெரிவித்து சென்னை முழுவதும் பரவலாக சுவரொட்டி ஒட்டியிருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு சிபிஐ எம்.எல். கட்சியின் தொழிற்சங்க அமைப்பு போராட்டத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம் செய்ததை பார்க்கமுடிந்தது!

வழக்கறிஞர்களின் இன்றைய போராட்டம். அவர்களின் தொழிற்சார்ந்தது மட்டுமல்ல! பெரும்பான்மையான வழக்காடிகளும், மக்களும் பாதிக்கப்படக்கூடிய விசயம். ஆகையால், வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரியுங்கள்! அல்லது உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். அமைதியாக இருப்பது மிகவும் அநியாயம்!

- செல்வம்

May 4, 2016

ஏவுகணைகளும் - கவண் கற்களும் !




அடாவடியான வழக்குரைஞர்களை கட்டுப்படுத்தி ஒழுங்கினை நிலைநாட்டவே பார்கவுன்சிலின் வழக்குரைஞர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை - திரைக்கதையின் பொய்மை அம்பலமாகியுள்ளது.

ஆறு மாதங்களாக வழக்கறிஞர்களின் சஸ்பெண்ட் நடவடிக்கையின் பின் நிற்பவர்கள் யார் என்று கழுதையாக கத்தும்போது கேட்க மறந்த காதுகளுக்காக மாண்புமிகு நீதிப்பிரபு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ”ஆமாம் நாங்கதான் செய்தோமென்று” வழக்கறிஞர்களின் மீதான சஸ்பெண்ட் உத்தரவு மண்டபத்தில் எழுதிக்கொடுத்த ‘தருமி’ யின் கவிதை என்பது எல்லோருக்கும் இலை மறை காயாக தெரிந்தாலும் அந்த “ஈசனே” எழுதியது யாம்தான் என்று சபையில் உரைப்பது தனிச்சிறப்பல்லவா?

" NO MAN SHALL BE JUDGE ON HIS OWN CASE" - இந்த ’மடத்தமான சட்ட மொழியை’ - குப்பையில் போடுங்கள். பதிவாளரை விட்டு புகார் கொடுத்து, பார்கவுன்சிலிடம் சொல்லி சஸ்பெண்ட் செய்து, சரியானதென்று தீர்ப்பும் சொல்லும் ‘சாணக்கிய நீதியை’ சட்டமாக்குங்கள். தசாவதாரம் கமலகாசனுக்கு மட்டும் சொந்தமா என்ன? யார் கேட்பது ‘ராமராஜ்ஜியத்தில்’ இதுபற்றி கம்பரே சொல்லியுள்ளாராம்.

தலைமை நீதிபதி வீட்டில் உச்சா போகும் ‘தொழிலுரிமையைப் பாதுகாப்பதுதான் பார்கவுன்சில் வேலையே தவிர, நீதித்துறை ஊழல் பற்றி பேசினால் எப்படி பொறுத்துக்கொள்வது? குவார்ட்டர் சரக்கும் கோழி பிரியாணியும் தந்து ஜெயித்தது இதற்காகவா?
ஒரு பிரச்சினையை தீர்க்க எளிமையான வழி அதைவிட பெரிய பிரச்சினையை ஏற்படுத்து. நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கேட்டு போராடுவார்களா? வாழ்வுரிமையைப் பறித்து தெருவில் விடுங்கள் சரியாகிவிடும். அற்புதமான உங்களின் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசெல்லாம் தூசு....

பார்கவுன்சில் செயலாளரை தாக்கிய, பார்கவுன்சில் தலைவர் பதவியை குத்தகைக்கு ஒப்பந்தம் செய்து, அதற்காக வழக்கும் போட்டவர் பார்கவுன்சிலின் தலைவர். அதற்காக ’வாதாடிய லூமினரி’ மூத்த வழக்குரைஞர். இன்னும் இன்னும் உங்கள் தகுதிக்கேற்ப கவனிப்பு....ஆமாம் ‘தகுதி’ மிக முக்கியம்.

போராடும் வழக்குரைஞர்களை எதிர்கொள்ள புரோக்கர் சங்கங்கள், பதவி ஆசை, மிரட்டல், நிர்பந்தம், செண்டிமெண்ட் - ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆ ’பன்முகத்தன்மை’ கொண்ட நீதிபதி வேலை செய்வது சும்மா இல்லை புரிந்து கொள்ளுங்கள்....

நம்மிடம் முழக்கமிட்டால பதில் முழக்கமிட ‘அணுகுண்டுகள்’ மட்டுமல்ல, அம்பலப்படுத்தினால் ‘போகாதே - போகாதே’ என்று ராகம் போட்டு பாட ’;உண்மையாகவே தொழில் செய்யும் வழக்கறிஞர்களும் (Real Practicing Lawyers) ’ இருக்கின்றனர். தெரிந்து கொள்ளுங்கள்...

வழக்கரிஞர்களின் மீதான குற்றச்சாட்டுகளை பார்கவுன்சில்தான் விசாரிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் சொன்னாலும் கேட்க வேண்டுமா? என்ன? திருநாவுக்கரசுை சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுக்கலாம், வழக்கறிஞர்களை ‘வர்ணங்களாக’ வகைப்படுத்தலாம், விசாரணை தொடங்குவதற்கு முன்பே நீ குற்றவாளி என்று முத்திரை குத்தலாம். புரிந்து கொள்ளுங்கள் விவசாயி கோபாலையும் - யோக்கியன் மல்லையாவும் ஒன்றாக பார்க்க முடியுமா? தேசத்துரோகி கண்ணையா குமார் மட்டுமல்ல. சென்னையிலும் இருக்கின்றனர்.

பாட்டியாலாவில் மூத்த வழக்குரைஞர்களை தாக்கிய வழக்குரைஞர்களின் மேல் எவ்வித நடவடிக்கையும் இல்லையென பேசுகிறார் ஒருவர். முட்டாள்தனமாக இல்லை, சென்னை வழக்குரைஞர்கள் பி.ஜே.பி.கட்சியாக அல்லது அவர்கள் பாரத் மாதா கி ஜே சொன்னார்களா? நாளையே கட்சியில் சேருங்கள். அப்புறம் பார்க்கலாம்.

உயர்நீதிமன்றம் அதிகாரப் பூர்வ விடை கொடுக்கும் முன்பே லூமினரி சங்கத்தில் பிரியா விடை பெறுவோம். மரபா? கிலோ என்ன விலை என்று கேட்போம். சென்னை வழக்குரைஞர்களை சமாளிக்க லோக்கல் லூமினரிகள், அகில இந்திய அளவில் லாபி செய்ய ஆல் இண்டியா லூமினெரி. என்ன இருந்தாலும் வரலாறு முக்கியமல்லவா? இதற்கு முன்னர் இவர்களை ஒழுங்கீனவர்கள் என்று நீங்களே பேசினீர்களே என்று நீங்கள் நிினைப்பது கேட்கிறது..அது வேற வாய்...

ஆனால் நீதிப்பிரபுவே துரதிருஷ்டம்.என்ன தெரியுமா?....வரலாறு பலம் கொண்டவன் மட்டுமே வெல்வான் என்பதை பொய்யென்றே பதிவு செய்துள்ளது. அதனால்தான் ஹிட்லரும், முசோலினியும் அடையாளமின்றி போனார்கள்.சூரியன் மறையா சாம்ராஜ்யம் வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசியெறிப்பட்டுள்ளது.

வ.உ.சி-யை தேசத்திரோகியென இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்த இதே மாண்புமிகு உயர்நீதிமன்ற தீர்ப்பினை இப்போது கொடுத்துப் பாருங்கள். கழிப்பறையில் எறிவார்கள்..ஆனானப்பட்ட வெள்ளைக்கார துரைக்கே இதுதான் நிலை..செண்பகராமனின் வெத்துகுண்டு சத்தம் கேட்டதும் ஆங்கிலத்தை விட்டு ஜெர்மனுக்கு தாவியவர்கள் எந்த மூலைக்கு.
ஆயுதம் கொண்டவன் சொல்வது நியாயமென்றால் அமெரிக்காதான் உலகிலேயே யோக்கியன்..அதுவா உண்மை..வியட்நாமில் செருப்படி பட்ட அமெரிக்க இன்று கூட ஈராக்கில் தினந்தோரும் கல்லடி பட்டுக்கொண்டிருக்கிறது.

நீங்கள் ஏவுகணைகளை உற்பத்தி செய்வது ஒருபுறம் இருக்கட்டும். துணிவாக வழக்கறிஞர் சங்கத்திற்கு வரத்தயங்கியது ஏனோ? ஒருவேளை உங்கள் நண்பர்கள் பதுங்குங்குழி வெட்டி வைக்கவில்லையோ? இல்லை தரைப்படைகள் வாடகைக்கு அனுப்பப்பட்டிருந்ததோ? அய்யகோ உங்கள் இரட்டை உங்கள் பேச்சுக்கு நான் பொறுப்பில்லை என்று நழுவுகிறார், உங்களுக்கு காவடி எடுத்தவர்கள் கூட தேவையா இவருக்கு என்று மழுப்புக்கின்றனர். 

கவண்கற்களிடம் ஏவுகணைகள் வீழ்ந்தே தீரும் என்பதுதான் வரலாறு..ஏனெனில் கவன் கற்கள் மக்களின் கைகளில், நியாயத்தின் பக்கத்தில் இருப்பதனால்... அதிகார மண்ணுக்குள் தனது தலையை புதைத்துக்கொண்டு நியாய உலகமே இருண்டு விட்டது என்று சொல்லும் நெருப்புக்கோழிகளை என்னவென்று சொல்வது..பெயரில் நெருப்பு இருப்பதனால் நெருப்புக்கோழிகள் பீனிக்ஸ் ஆகிவிட முடியாது என்பது தெரியுமா?

பாதுகாப்பாக இருந்து கொண்டு ஏவுகணைகளைச் செலுத்துங்கள்...நாங்கள் கவண் கற்களோடு காத்திருக்கிறோம்.......

சென்னையிலிருந்து தேசத்துரோகிகளில் ஒருவன்...

Apr 23, 2016

நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் சிந்தனைக்கு! சிறுவெளியீடு - பகுதி 2

தமிழக வழக்கறிஞர்கள் மீதான அடக்குமுறை -பின்னணி-சதி- என்ன?
பகுதி-2
-----------
வழக்கறிஞர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன?

ஹெல்மெட் பிரச்சனைக்காக மதுரை வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராடினார்கள்.ஊர்வலம் சென்றார்கள்.நீதிபதியை விமர்சித்தார்கள். தீர்மானம் நிறைவேற்றினார்கள்.தென் மாவட்ட வழக்கறிஞர்கள் நீதித்துறை ஊழலுக்கு எதிராக ஊர்வலம் சென்றார்கள்; ஊழல் நீதிபதிகள் பட்டியல் வெளியிட்டார்கள்.நீதிபதிகளின் ஊழலை நோட்டீசாக அடித்து மக்களிடம் விநியோகித்தார்கள்.தமிழுக்காக தலைமை நீதிபதி அறையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள்; நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது நீதிமன்ற அறைக்கு வெளியே முழக்கம் எழுப்பினார்கள்;கவர்னரிடம் ஊழல் நீதிபதிகள் தொடர்பாகப் புகார் அளித்தார்கள்.

வழக்கறிஞர்களின் இச்செயல்கள் நீதிபரிபாலனத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இவை வழக்கறிஞர்களின் தொழில் நெறிமுறைகளுக்கு எதிரானது. எனவே நடவடிக்கை எடுத்து வழக்கறிஞர்களிடம் ஒழுங்கை நிலைநாட்டுகிறோம் என்கிறது நீதித்துறையும்,பார்கவுன்சிலும்.

வழக்கறிஞர்களின் மேற்கண்ட நடவடிக்கைகள் அத்து மீறியதா? இல்லையா? கடும் நடவடிக்கைக்கு உரியதா? இல்லையா? இதன் மூலம் வழக்கறிஞர் தொழிலில் உள்ள கிரிமினல்கள்-புரோக்கர்கள் அகற்றப்பட்டு வழக்கறிஞர் தொழிலில் ஒழுங்கு நிலைநாட்டப்படுமா?
*****
ஹெல்மெட் பிரச்சனை என்றால் என்ன?

இரண்டு சக்கர வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்து இருப்போர், குழந்தைகள் , பெண்கள் ஆகியோர் கட்டாயம் ஜீலை1,2015 முதல் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.இத்தீர்ப்புக்கு எதிராக மதுரை வழக்கறிஞர்கள் போராடினார்கள் என்பதே பிரச்சனையின் தொடக்கம். 

மதுரை வழக்கறிஞர்களின் இப்போராட்டங்கள் தொடர்பாக மூன்று வழக்குகள் மதுரை அண்ணாநகர் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடுத்து நடந்து வருகிறது.

உண்மையில் மதுரை வழக்கறிஞர்கள் மக்கள் யாரும் ஹெல்மெட் அணியக் கூடாது என்று சொல்லவில்லை. மாறாக நீதிபதி கிருபாகரன், ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனத்தை, லைசென்சை பறிமுதல் செய்யுங்கள் என்று சட்டத்திற்கு விரோதமாக, அராஜகமாக உத்தரவிட்டதை எதிர்த்தும், தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நகரெங்கும் போலீசு கல்லா கட்டுவது,மக்கள் தவிப்பது என்பதை பார்த்துக் கொதித்தெழுந்துதான் வழக்கறிஞர்கள் போராடினார்கள்.ஹெல்மெட்டை அரசு, விழிப்புணர்வு மூலம் அமல்படுத்த வேண்டும்,ஒரே நாளில் திணிக்கக் கூடாது என்றார்கள்.இது கடும் குற்றமா? ஆனால், நீதிமன்றம் என்ன தீர்ப்புக் கொடுத்தாலும், அத்தீர்ப்பு சட்டப்படியானதோ? இல்லையோ? மக்களைத் துன்புறுத்துமோ? இல்லையோ? அதை யாரும் விமர்சிக்க, எதிர்க்கக் கூடாது என்பதே நீதித்துறை- பார்கவுன்சில் நிலைப்பாடு.சட்டப்படியும்-நியாயப்படியும் இது சரியா? இதற்குமுன் நீதிமன்றத் தீர்ப்புகள் விமர்சிக்கப்பட்டதில்லையா?

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு எதிரான நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு அ.தி.மு.க. வினரால் படுகேவலமாக விமர்சிக்கப்பட்டு, ஏராளமான வன்முறைப் போராட்டங்களும் நடத்தப்பட்டன.தமிழ்நாடே முடக்கப்பட்டது.இதேபோல் நீதிபதி குமாரசாமியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பும் நாடு முழுவதும் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இதற்கு முன்பாக காவிரி, முல்லைப்பெரியாறு தீர்ப்புகளை எதிர்த்து கர்நாடக, கேரள அரசியல்வாதிகள் போராடியபோதும் உச்சநீதிமன்றம் அமைதியாகத்தான் இருந்தது. சமீபத்தில் வந்த நீதிபதிகள் நியமன ஆணையத் தீர்ப்பை பா.ஜ.க வின் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ” தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் கொடுங்கோன்மை” என மிகக் கடுமையாக விமர்சித்தார். ஆக, நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது, எதிர்த்துப் போராடுவது புதிய ஒன்றோ, குற்றமோ அல்ல.அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமைக்கு உட்பட்டதுதான். கருத்துரிமையை அழிப்பது, அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதென்கிறார் டாக்டர் அம்பேத்கர்.தென்னாப்பிரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காந்தியே போராடியுள்ளார். வெள்ளையர்கள் காலத்தில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்பு நடந்துள்ளது.இதற்கும் மேலாக குற்ற வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு எனப் பல நடவடிக்கைகள் மதுரை வழக்கறிஞர்கள் மீது எடுக்கப்பட்டுவிட்டன எனும்போது சஸ்பெண்ட் நடவடிக்கை எதற்கு?

தொடரும்..

Mar 2, 2016

தமிழக வழக்கறிஞர்கள் மீதான அடக்குமுறை -பின்னணி-சதி- என்ன? - பகுதி-1

அன்பார்ந்த வழக்கறிஞர்களே மற்றும் நண்பர்களே!

தமிழகத்தில் இதுவரை 44 வழக்குரைஞர்களை தற்காலிகமாக தொழிற்செய்யமுடியாத அளவிற்கு நிறுத்திவையுள்ளனர். நாம் கொண்டுவந்திருக்கும் சிறுவெளியீடு நடந்த விசயங்களை தொகுத்து, யார் யார் இதன் பின்னணியில் உள்ளனர்? ஏன் வழக்குரைஞர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்? என்பதை சுருக்கமாக ஒரு வெளியீடாக கொண்டு வந்திருக்கிறோம்! அதை இன்று முதல் சிறுசிறு பகுதிகளாக பிரித்து தொடராக வெளியிடுகிறோம்.
.....

இந்துத்துவ மோடி அரசு வரலாற்றுத் துறை, தணிக்கைத் துறை, பள்ளி மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள், அறிவியல் கழகங்கள், நீதிமன்றங்கள் என அனைத்தையும் காவிமயமாக்கி வருகின்றனர். அதன் வெளிப்பாடாக கருத்துரிமைக்கு எதிராக பாசிச நடவடிக்கை தொடர்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி, ஹதராபாத் பல்கலைக்கழகம் அடுத்து இப்போது டெல்லி JNU வில் நடக்கும் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது.
தமிழகத்தில்தான், இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு வழக்கறிஞர்கள் போராடியிருக்கிறார்கள். ஈழத்து இனப்படுகொலைக்கு எதிராக, மூவர் தூக்குக்கு எதிராக, இந்தி-சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக, நீதிமன்றத்தில் தமிழ், காவிரி-முல்லைப் பெரியாறு பிரச்சனைகளுக்காக என்று பல பிரச்சனைகளுக்காகவும் தமிழக வழக்கறிஞர்கள் போராடியிருக்கிறார்கள்.

நீதிபதிகளின் நியமனத்தில் பார்ப்பன ஆதிகத்தையும் மற்றும் நீதித்துறை ஊழலையும் எதிர்த்திருக்கிறார்கள்.

தற்போது எப்படி கருத்துரிமைக்காக போராடிய JNU மாணவர்களை தேசதுரோகியாக சித்தரித்து குற்றவாளிகளாக மாற்றினார்களோ அதே போல்தான் சென்ற ஆண்டு போராடிய தமிழக வழக்கறிஞர்களை குற்றவாளிகளாக சித்தரித்தனர். தேசதுரோக வழக்கு பதிலாக 44 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு தொழில் செய்ய முடியாத படி
பொருளாதார ரீதியாக முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையை(CISF) நிறுத்தி வழக்கறிஞர்கள் தங்கள் ஜனநாயகமாக கருத்தினை வெளிப்படத்தாதவாறும் அச்சுறுத்தி வருகின்றனர்.

வழக்கறிஞர்களை ஒடுக்குவது தனிப்பட்ட ஓர் நிகழ்வல்ல.பெயரளவுள்ள ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பது.நீதித் துறையை-நாட்டை பாசிசமயமாக்குவது. மக்களை ஒடுக்குவது என்பதே பொருள்.
பாசிசம் வந்தபின் விழிப்பதை விட வரும்முன் விழிப்பதே சரி. இதனை அனைவரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழக வழக்கறிஞர்கள் மீதான அடக்குமுறை -பின்னணி-சதி காரணங்களை விளக்கி நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் சிந்தனைக்கு! என்ற சிறுவெளியீட்டினை மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு வெளியிட்டு் உள்ளது. தமிழகம் முழுவதும் இலவசமாக வழங்கிகொண்டிருக்கிறோம் . மேலும் எங்கள் முகநூல் பக்கத்தில் இன்று முதல் தொடராக பதிவிடுகிறோம்.

 இந்த சிறுவெளியீட்டை அனைவரிடம் பகிருங்கள் .சென்னையில் தேவைப்படுவோர் 90946 66320 எண்ணில் தொடர்பு கொள்ளவும்

தோழமையுடன்,
மில்ட்டன், வழக்குரைஞர்,
செயலர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்-சென்னை.
9094666320
*******

நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் சிந்தனைக்கு! சிறுவெளியீடு-பகுதி-1
தமிழக வழக்கறிஞர்கள் மீதான அடக்குமுறை -பின்னணி-சதி- என்ன?
-----------

மதிப்பிற்குரிய வழக்கறிஞர் பெருமக்களே!

தமிழக வழக்கறிஞர்கள் 44 பேர் தொழில் செய்யத் தடை விதிக்கப்பட்டு 140 நாட்களுக்கும் மேலாகிறது.மதுரை வழக்கறிஞர்கள் 13 பேர் மீதான வழக்கு கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டு மூன்று மாதகாலமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.சென்னை உயர்நீதிமன்றம் சி.அய்.எஸ்.எப் போலீசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு மக்கள் தொடர்பிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டுள்ளது.பெண் வழக்கறிஞரைப் படம் எடுத்த சி.அய்.எஸ்.எப் போலீசைக் கண்டித்த 8 சென்னை வழக்கறிஞர்கள் மீதான வழக்கும் கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. தொழில்தடை விதிக்கப்பட்ட மதுரை வழக்கறிஞர்களின் கிளர்க்குகள் இருவரின் உரிமங்களை ரத்து செய்து உயர்நீதிமன்றப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் எனது வழக்கை விரைந்து எடுங்கள் என்று கோரிய வழக்கறிஞர் நீதிமன்றத்தை தொந்தரவு செய்ததாகச் சொல்லி 200 ரூபாய் அபராதம் (அல்லது) ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் பேசக்கூடாது, துண்டறிக்கை விநியோகிக்கக் கூடாது, கூட்டம் நடத்தக்கூடாது, பார் கவுன்சில் மட்டுமல்ல காவல்துறையைக் கூட விமரிசிக்கக் கூடாது போன்ற தடைகள் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. உயர்நீதிமன்றம் உட்பட தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களை நீதிபதிகள் மிரட்டி அச்சுறுத்தி வருகிறார்கள்.வாதங்களில் இயல்பாகக் குரல் உயர்ந்தால் கூட, பார் கவுன்சிலிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கவா? எனப் பல மூத்த வழக்கறிஞர்கள்கூட மிரட்டப்படுகின்றனர். தமிழக நீதிமன்றங்களில் விரும்பத்தகாத மயான அமைதி நிலவி வருகிறது. பிரச்சனையைப் பேசி முடிக்கலாம் என்ற மூத்த வழக்கறிஞர்களின் குரலுக்கு நீதித்துறை செவிசாய்க்க மறுக்கிறது.எத்தனை முறை தலைமை நீதிபதியைச் சந்தித்து பிரச்சனையை பேசித்தீர்க்கக் கோரினாலும், வழக்கறிஞர்களின் கோரிக்கை அலட்சியப்படுத்தப்படுகிறது. ஒரு சில வழக்கறிஞர்களை வைத்து பொங்கல் விழா-இலக்கிய விழா-சட்டக் கருத்தரங்கம்-நூல் வெளியீட்டு விழா என நடத்தி நிலைமை சுமூகமாக உள்ளதாகக் காட்டும் முயற்சி நடக்கிறது.

மூத்த வழக்கறிஞர்கள் உட்பட பெரும்பான்மை வழக்கறிஞர்கள் நடந்து வரும் சம்பவங்கள் எல்லை மீறியது,வழக்கறிஞர்களின் சுயமரியாதைக்கு எதிரானது எனக்கருதினாலும் அமைதியாக உள்ளனர். மொத்தத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக வழக்கறிஞர்கள் மீது தொடுத்த நேரடியான தாக்குதலும்,உளவியல் ரீதியான யுத்தமும் வழக்கறிஞர்களின் எதிர்வினை இல்லாததால்,பயந்துவிட்டார்கள் எனக்கருதி முன்னிலும் மிகவும் தீவிரமடைந்துள்ளது. கடைசி எல்லைவரை வழக்கறிஞர்களை துரத்தித்-துரத்தி அடிக்கிறார்கள்.நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் மன்னிப்பு கேட்கிறோம் என்று மனுத்தாக்கல் செய்தாலும் வழக்கை நடத்துங்கள் என்கின்றனர்.

குறிப்பிட்ட சிலர்தான் பிரச்சனை என்று சொல்லி ஒட்டு மொத்த வழக்கறிஞர் சமூகத்தையும் அடிமையாக்கும் முயற்சி தீவிரமாக நடக்கிறது.
நீதித்துறையில் ஒழுங்கை நிலைநாட்டுகிறோம் என்ற சொல்லி ஒட்டுமொத்த நீதிபதிகளின் பேரால் குறிப்பிட்ட சில நீதிபதிகள் வழக்கறிஞர்களுக்கு எதிராக இந்தத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள். இதன் பின்னணி என்ன? இதன் சூத்திரதாரிகள் யார்? யாருடைய நலனுக்காக இது நடத்தப்படுகிறது? அவர்கள் நோக்கம் என்ன? என்பது பற்றியான புரிதல் வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல,நீதிபதிகளுக்கும் அவசியமாக உள்ளது.ஏனெனில் தமிழக நீதித்துறை வரலாற்றில் இன்று நடந்துவரும் பிரச்சனைகள் புதிது.

 தொடரும்...

Feb 27, 2016

அண்ணன் சதாசிவம் காட்டிய வழியில் தம்பி தத்து!




நேற்று கேரள கவர்னராக சதாசிவம்!
இன்று மனித உரிமை ஆணையத்தின் தலைவராக தத்து தேர்வு!

------
 

 பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி 2012-ல் எதிர்கட்சித் தலைவராக இருந்த பொழுது நீதிபதிகளும் தலைமை நீதிபதிகளும் அதிக சம்பளம், குறைந்த பொறுப்பு என கவுரவமிக்க பதவிகளை அரசிடமிருந்து பெற்றுவிடவேண்டும் என அரசுக்கு ஆதரவாகப் பல தீர்ப்புகளை அளிக்கத் தொடங்கிவிடுவார்கள்; நீதிபதிகளில் இரண்டு வகை. சட்டங்களை நன்றாக தெரிந்துவைத்திருப்பவர்கள். இன்னொரு வகை சட்ட அமைச்சரை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்கள்என கிண்டலடித்தார். ஜெட்லி சொன்னது இன்று நடைமுறை உண்மையாகி கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம், துளசிராம் பிரஜாபதி கொல்லப்பட்ட வழக்கில் பா.ஜ.கவின் தேசிய செயலராக இப்பொழுது இருக்கும் அமித்ஷாவை விடுவித்தார். அதற்கு பலனாக தான் அவருக்கு கேரள கவர்னர் பதவி கிடைத்தது என சர்ச்சையானது . மற்றொரு சர்ச்சை தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு தன்னை தலைவராக்க வேண்டும் என சதாசிவம் லாபி செய்தார் என பரவலாக பேசப்பட்டது!

இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றத்திலிருந்து தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து ஓய்வுபெற்ற பிறகு மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பிரமுகர் சதாசிவம்தான். கடந்த செப்டம்பரில்(2014ல்) அவருடைய நியமனம் நடைபெற்றபோது 2 முன்னாள் தலைமை நீதிபதிகள் அதை விமர்சித்தனர். அரசியல் நெருக்கடிக்கு ஆளாகாமல் நீதித் துறை செயல்பட வேண்டும் என்பதால், இது ஆரோக்கியமான முன்னுதாரணம் அல்ல என்றே கருதப்பட்டது.என வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹாவும் குறிப்பிடுகிறார்.

கேரள கவர்னராக நியமனம் குறித்து தனது அதிருப்தியை முன்னாள் கூடுதல் சொலிசிட் ஜெனரல் கே.வி. விஸ்வநாதன் திறந்த கடிதம் மூலம் சதாசிவத்திற்கு வெளிபடுத்தியுள்ளார். அந்த கடிதத்தில், அரசு நிர்வாகத்தில் மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களின் கரங்களுக்கிடையே இடைவெளி என்பது ஓய்வுபெற்ற பின்னும் தொடர்ந்து இருக்க வேண்டும். மாறாக கரங்கள் இடைவெளியை குறைத்து ஆரத்தழுவினால், அது பயங்கர ஆபத்துக்கான எச்சரிக்கை அறிகுறி என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் நீதிபதிகளான வி.என். கரே மற்றும் கே.டி. தாமஸ், சட்ட ஆனையத்தின் தலைவர் ஏ.பி. ஷா, மூத்த வழக்குரைஞர்கள் ராஜீவ் தவான் மற்றும் பாலி.எஸ்.நாரிமன் போன்றோர் சதாசிவத்தின் நியமனத்தை விமர்சித்து இருந்தனர். அனைத்திந்திய பார் அசோசியஷேனும் மற்றும் கேரள உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கமும் நியமனத்தை கண்டித்திருந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மீதோ ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்!
 
குஜராத் படுகொலைகள் வழக்கில் அமித்ஷா தொடர்பு குறித்து விசாரிக்க கோரிய சஞ்சீவ்பட் மனுவை தள்ளுபடி செய்தார்

மாயா கோத்னானிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனை குறைப்பு மற்றும் ஜாமீனை எதிர்த்து உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் நீதிபதி தத்து, மாயா கோத்னானிக்கு ஜாமீன் கிடைத்தே தீர வேண்டும் என்பது போல செயல்பட்டார் என மனித உரிமை செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த வருடம் ஜனவரியில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் மோடியை சிறந்த தலைவர், நல்ல மனிதர் மற்றும் தொலைநோக்கு பார்வை உடையவர் என்று மோடியை புகழ்ந்தார்

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை ஜாமினில் விடுதலை செய்து மற்றும் சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்ககால்குலேட்டர்புகழ் குமாரசாமியை பயன்படுத்தியவர்

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியதில் பெரிய ஊழல் நடந்திருப்பதாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் தத்துவிடம் புகார் அளித்தார்கள். அதற்கு, ’யாராவது ஒருவர் நான் 1000 கோடி ரூபாய் வாங்கி கொண்டு ஜாமீன் வழங்கினேன் என்று கூறுவார்கள். கவலைபடாதீர்கள், இந்த மாதிரி குற்றச்சாட்டுகளை எல்லாம் எதிர்கொள்ளும் அளவுக்கு எனக்கு தடித்த தோல் இருக்கிறதுஎன தேர்ந்த பிழைப்புவாதி போல் பதில் அளித்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியதில் தத்து எந்த விதிமுறையும் பின்பற்றவில்லை. அவர் அளித்த உத்தரவு முறைகேடனாது மற்றும் சந்தேகத்திற்கு உரியது அதனால் இந்த வழக்கை மேலும் அவரே விசாரிக்கக் கூடாது என்று தமிழகம் முழுவதும் 1000 வழக்குரைஞர்கள் கையெழுத்திட்ட மனுவை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் ஜனாதிபதியிடம் அளித்தனர்.

எச்.எல் தத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாவதற்கு முன் அவர் சட்ட விரோதமாக சொத்து குவித்தது தொடர்பான ஆவண ஆதாரங்களின் தொகுப்பு ஒன்று அப்போது ஊடக கவுன்சில் தலைவராக இருந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஊடகங்களுக்கு அனுப்பி இருந்தார். அதை ஊடகங்கள் வெளியிடாததை குறித்தும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்

மதுரையில் வழக்குரைஞர்கள் ரமணா படம் போல டாப் 5 ஊழல் நீதிபதிகளின் பட்டியலை வெளியிட்டபொழுது மிகவும் துடித்துப்போனவர் தத்து. நீதிபதி கர்ணன் குறித்த ஒரு வழக்கில், சம்பந்தமேயில்லாமல் வழக்குரைஞர்களால் நீதிபதிகள் பய உணர்வுடன் வழக்குகளை விசாரித்து வருகின்றனர் என்று அலறினார்

இப்படி பல குற்றச்சாட்டுகள் இருக்கும் பொழுது தான், தேசிய மனித உரிமை ஆணையர் பதவி கிடைத்திருக்கிறது.

நீதிபதிகள் இவ்வாறு பதவிகளை தேடி ஓடுவது என்பது நீதித்துறையின் சுதந்திரதன்மைக்கு ஆபத்தாகவே முடியும். அதற்கான மோசமான அடையாளங்கள் சதாசிவம் நியமனமும் அதன் பின் தொடரும் தத்துவின் நியமனமும்.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நேர்மையாக தீர்ப்பளித்த மைக்கேல் டி குன்ஹா தனது தீர்ப்பில் "ஊழல் என்பது தண்டனைக்குரிய குற்றம் மட்டுமல்ல. அது மனித உரிமைகளை மலினப்படுத்தி அவற்றை மீறுகிறது. கவனமாக செய்யப்படும் ஊழல் என்பது, மனித உரிமைகள் மீறல் மட்டுமல்ல, அது, தொடர்ந்த பொருளாதாரக் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது.என குறிப்பிட்டார்.

குன்ஹாவின் வரையறைப்படி, பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் தத்து மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு கொண்டவர். இன்றைக்கு அவரே மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய முரண் இது!

நிலவுகிற மோடி அரசு அறிவிக்கப்படாத நெருக்கடியை நிலையை நாடெங்கும் அமுல்படுத்திவருகிறது. தனது வானர கொலைகாரப் படைகளை காக்க காவி சிந்தனையுள்ள நீதிபதிகளை நீதித்துறைக்குள் நியமிக்க எல்லாவகையிலும் முயன்றுவருகிறது. அவர்கள் எதற்கு? நாங்களே நீங்கள் நினைப்பதை நிறைவேற்றி தருகிறோம் என்பதை தான் கவர்னர் பதவியும், மனித உரிமை ஆணையர் தலைவர் பதவியும் நிரூபிக்கின்றன.

இறுதிச்சுற்று படத்தில் ஒரு வசனம் வரும். ஊழல்வாதிகள் உங்களை நான் விசாரிக்கனும், ஆனால், நீங்க விசாரிக்கிற இடத்துல உட்கார்ந்து இருக்கீங்க! 

நேர்மையான வழக்குரைஞர்கள் நாம் இப்பொழுது கூண்டில் நிற்கிறோம். அவர்கள் நம்மை விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
நாம் ஒன்றிணைந்து நீதித்துறையில் ஊழல்வாதிகளை மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்தும் பொழுது மட்டும் தான் அவர்கள் பலம் இழப்பார்கள். இல்லையெனில், நம் அமைதியே அவர்களுக்கு கொண்டாட்டமாகிவிடுகிறது!

-
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

Feb 19, 2016

போஸ்டர்களை தின்னும் போலீசு!



பிப். 19 2009 சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள், நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தொடுத்தது. இன்றைக்கு வரைக்கும் நீதி கிடைக்கவில்லை.

இன்று விடிகாலை 4 மணியளவில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் உயர்நீதி மன்ற பகுதியை சுற்றி கண்டன சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்தார்கள். எப்படியோ மோப்பம் பிடித்து வந்த பூக்கடை காவல்நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் மோகன்ராஜ் சுவரொட்டியை ஒவ்வொன்றாக கிழித்துக்கொண்டிருந்தார். தூரத்திலிருந்து கவனித்த தோழர்கள், அருகில் சென்று "ஏன் கிழிக்கிறீர்கள்?" என்றதற்கு, 'சினிமா போஸ்டரை கிழிக்கிறோம்" என பம்மி பதில் சொன்னது. "கண்ணு தெரியலையா? படிக்க தெரியாதா?" என எகிறியதும் போலீசு பின்வாங்கியது.


வழக்குரைஞர்கள் ஒன்றிணைந்து போராடும் பொழுது தான் 2009 தாக்குதலுக்கு நீதி கிடைக்கும். சுவரொட்டியின் மீது கைவைக்க‌ பயமும் வரும்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

 

Feb 1, 2016

புறக்கணிப்பு போராட்டம் நடத்தலாமா?

வழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்குப் பதில்! – 8

மக்களைப் பத்தி இவ்வளவு அக்கறையாகப் பேசுபவர்கள். புறக்கணிப்பு போராட்டம் நடத்தலாமா என்று கேட்கிறார்களே?

ஒரு விசயத்தைப்புரிந்து கொள்ள வேண்டும். நீதிபதி முதல் நீதிமன்ற ஊழியர் வரை அனைவருக்கும் மாதச் சம்பளம் உண்டு. ஆனா வக்கீல்களுக்கு கேஸ் கிடைத்து ஃபீஸ் வந்தால்தான் வருமானம்,’போராட்டம்’ என்றால் வருமான இழப்பு வக்கீலுக்குதான். புறக்கணிப்பு போராட்டம் நடந்ததுனா, வழக்காடியை கூப்பிட்டு அவருடைய வழக்கின் நிலைமையையும் போராட்டத்தின் நியாயத்தையும் விளக்கி அவரை ஏற்கச் செய்கிறார்கள். இது வழக்காடிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையிலான விவகாரம்.
வழக்கு தேங்குவதை பற்றிக் கவலைப்படுபவர்கள் உண்மை நிலவரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அரசுக்கு எதிரான ஆகப் பெரும்பாலான வழக்குகளில் அரசு தரப்பு பதில் அளிப்பதே இல்லை. தொழிற்சங்க வழக்குகளில் கம்பெனி முதலாளிகள் தரப்பு வாய்தா வாங்கிக்கொண்டே இருக்கிறது. இவை ஒருபுறமிருக்க மிகச்சில நீதிபதிகள்தான் வழக்குகளை வேகமாக முடிக்க வேண்டும் என்று கடுமையாக வேலை செய்கிறார்கள். மற்றப்படி, வழக்குகள் தேங்கிக்கிடப்பது பற்றி நீதியரசர்கள் ஓய்வு பெற்றுப் போகும்போது உரையாற்றுவார்களே தவிர, பணியில் இருக்கும்போது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.

மிக அதிகமாக விடுமுறை எடுத்துக் கொள்ளும் துறை நீதித்துறை, வாரத்துக்கு 5 நாள் வேலை, நீதிபதிகளைப் பொருத்தவரை அவர்கள் நாளொன்றுக்கு இத்தனை மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இத்தனை வழக்குகளை முடிக்க வேண்டும் என்ற இலக்கும் கிடையாது, பேரன் பிறந்தநாள் விழா, பேத்தி நாட்டிய அரங்கேற்றம், இன்னும் ஆன்மீகம், இசை, இலக்கியம், சமூக சேவை என்ற பெயர்களில் காஸ்மோபாலிடன் கிளப் நண்பர்கள் அழைக்கும் விழாக்கள்....என்று எதாவது ஒரு காரணத்தைக் காட்டி, உரிய நேரத்துக்கு முன்பாகவே நீதிபதிகள் கிளம்புவாரகள். இதற்கு அவர்கள் யாரையும் கேட்கத் தேவையில்லை.

புறக்கணிப்பு போராட்டத்தினால் இழக்கப்பட்ட வேலைநாட்கள் எத்தனை, நீதிமன்றத்துக்கு மட்டுமேயான சிறப்பு விடுமுறை நாட்கள் எத்தனை? கோடை விடுமுறை 30 நாட்கள், கிறிஸ்துமஸ் விடுமுறை 10 நாட்கள் என்று ஆங்கிலேயன் அமல்படுத்திய விடுமுறைகளுடன் ஆயுதபூஜை விடுமுறை 10 நாட்கள், அப்புறம் தமிழ், தெலுங்கு ஆங்கில புத்தாண்டுகள் என்று அடுக்கடுக்காக விடுமுறைகள்! சிறப்பு விடுமுறைகள் எல்லாவற்றையும் ரத்து செய்யட்டும், ஒரு அரசு அலுவலகத்துக்கு என்ன விடுமுறை உண்டோ அவ்வளவுதான் என்று தீர்மானிக்கட்டும். நீதிபதிகள் வழக்கை முடிப்பதற்கான இலக்குகளைத் தீர்மானிக்கட்டும். அப்புறம் இவர்கள் புறக்கணிப்பு பற்றி கவலைப் படட்டும்.

 - ”அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள்!” – மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு வெளியிட்ட சிறு வெளியீட்டிலிருந்து....

Nov 25, 2015

அப்போ வக்கீல்னா எது வேணா செய்யலாமா? - பதில்

வழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்குப் பதில்! – 6

 அப்போ வக்கீல்னா எது வேணா செய்யலாமா? ‘ஒன்வே’ யில் போகலாம். ‘நோ பார்க்கிங்’ கில் நிறுத்தலாம். ஹெல்மெட் போடாமல் போகலாம். அவுங்க மேல நடவடிக்கை எடுக்க கூடாது அப்படித்தானே?

இது வழக்கறிஞர்களைப் பற்றி ஊடங்களில் வேண்டுமென்றே செய்யப்படும் பொய்ப் பிரச்சாரம். மதுரை வக்கீல்கள் தலைக்கவசம் போடாமல் சென்றதை ஒரு போராட்டமாகத்தான செய்தார்கள். ”வக்கீல்கள் ஹெல்மெட் போட வேண்டியதில்லை. நாங்கள் கேட்க மாட்டோம். போராட்டத்தை கைவிடுங்கள்” என்று மதுரை காவல்துறை அதிகாரிகள் கூறினர். “ இது மக்கள் பிரச்சினை என்ற அடிப்படையில்தான் போராடுகிறோமேயன்றி எங்களுக்கு சிறப்பு சலுகை கோருவதற்காக அல்ல” என்று கூறி மதுரை வழக்கறிஞர்கள் இதனை நிராகரித்து விட்டனர். இது நடந்த உண்மை.

“அட்வகேட்” என்று வண்டியில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு அடாவடித்தனம் செய்பவர்களே இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறார்கள். அத்தகையோர் எல்லாப் பிரிவினர் மத்தியிலும்தான் இருக்கிறார்கள். அவர்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும்.

ஆனால் போராட்டம் வேறு, அதிகார துஷ்பிரயோகம் வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக்கும் விசமத்தனமான பிரச்சாரத்தை ஊடகங்கள் செய்கின்றன. “காவல் துறை, தமிழ்நாடு அரசு, இந்திய அரசு, இந்தியன் ஆர்மி” என்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு அதிகார வர்க்கத்தினர் அடாவடி செய்வதும், அரசு வாகனங்களை தம் குடும்ப வாகனமாகப் பயன்படுத்துவதும் அன்றாடம் நடக்கும் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகங்கள்.

உரிமைகளுக்குப் போராடும் வழக்கறிஞர்கள் ஒரு போதும் இத்தகைய முறைகேடுகளிலோ, காலித்தனங்களிலோ ஈடுபடுவதில்லை. உண்மையில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் போலீசுடன் அங்காளி பங்காளியாக இருக்கும் வழக்கறிஞர்கள்தான். அத்தகையவர்களைப் பற்றி போலீசு ஒருபோதும் புகார் சொல்வதில்லை.

 - ”அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள்!” – மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு வெளியிட்ட சிறு வெளியீட்டிலிருந்து....

Nov 23, 2015

போராட்டமென்றாலும் நீதிமன்றத்தின் மாண்பைக் குறைப்பதாக இருக்க கூடாதல்லவா? - பதில்

வழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்குப் பதில்! – 5

போராட்டம் நடத்தினாலும் அது நீதிமன்றத்தின் மாண்பைக் குறைப்பதாக இருக்க கூடாதல்லவா? வாயில் கருப்புத்துணி கட்டிக் கொண்டு நீதிமன்ற அறையில் அமர்வதும் தாழ்வாரத்தில் முழக்கம் போடுவது சரியா?
ஒரு பிரச்சனையின் தீவிரம் என்ன என்பதும், அதற்காகப் போராடுபவர்கள் அதில் கொண்டுள்ள ஈடுபாடும், போராட்டம் நடக்கும் சூழ்நிலையும்தான் போராட்ட வடிவத்தை தீர்மானிக்கின்றன.

போலிசை எப்படியாவது தடியடி நடத்த வைக்க வேண்டும் என்றோ துப்பாக்கி சூடு நடத்தி யாரையாவது சாகக்கொடுக்க வேண்டும் என்றோ எண்ணி யாரும் போராடுவதில்லை. தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் தத்தம் வழியில் முயற்சிக்கிறார்கள். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை நொறுக்கி, தடியடிப்பட்டு சிறை சென்றார்கள். சசிபெருமாள் அமைதி வழியில் தன்னை அழித்துக்கொண்டார்,
சமீபத்தில் , போலி கல்வி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு எத்தனை முறை போராடியும் செவி சாய்க்கவே மறுக்கும் விழுப்புரம் கலெக்டரின் அலுவலக வாயிலில் அமர்ந்து எலி மருந்து குடித்தார்கள் மாணவர்கள். விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் முதல் வரிசையில் ஒரு விவாசாயியை பிணம் போல் அலங்கரித்து உட்காரவைத்து கலெக்டருக்குத் தங்கள் நிலையை உணர்த்தினார்கள். விவசாயிகள் தற்கொலை பற்றிக் கவலைப்படாத அரசு அதிகாரிகளுக்கு இந்த அவமதிப்பை பொறுக்க முடியவில்லையாம்.

“கோரிக்கை நியாயம்தான், ஆனால் போராட்ட முறை தவறு” என்று அறிவுரை சொல்பவர்கள், கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய மாற்றுப் போராட்ட முறை என்ன என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். மனநிலை பிறழ்ந்தவர்கள், நோக்கமே இல்லாமல் கரெண்டு கம்பத்தை சுற்றுவது போல, மக்கள் முடிவே இல்லாமல், கலெக்டர் ஆபீசையோ, நீதிமன்றத்தையோ சுற்றிக் கொண்டிருக்க முடியுமா?

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கும் கோரிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்காகப் பல ஆண்டுகளாகப் போராட்டம் நடந்து வருகிறது இந்தி பேசும் மாநில உயர் நீதிமன்றங்களில் இந்தி வழக்காடு மொழியாக இருக்கும் போது தமிழ்நாட்டில் தமிழும், கேரளத்தில் மலையாளமும் இன்ன பிற மாநிலங்களில் அவர்களது மொழியும் வழக்காடு மொழியாக ஏன் அங்கீகரிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு இதுவரை அரசோ நீதிமன்றமோ யோக்கியமாக எந்தப் பதிலும் கூறவில்லை.

தாய் மொழியில் வழக்காடும் உரிமையை மறுப்பது என்பது மக்களின் வழக்காடும் உரிமையை மறுப்பதாகும். தமிழில் விசாரணை நடக்குமானால், தனது வழக்கில் என்ன நடக்கிறது என்பதைக் தெரிந்து கொள்ள இயலாமல் மக்கள் வாயைப் பிளந்து கொண்டு நிற்கவேண்டிய தேவை இல்லை. கோயிலில் சமஸ்கிருத மந்திரம் போல, கோர்டில் ஆங்கிலம்! இது வக்கீல் தொழிலை உயர்சாதி மேட்டுக்குடி மட்டும் கைப்பற்றி வைத்துக் கொள்வதற்கான தந்திரம்.

உயர்நீதிமன்றத்தில் வேண்டுமென்றே தலைமை நீதிபதியாக வேறு மாநிலத்தவரை நியமிக்கிறார்கள். பிறகு அவருக்கு தமிழ் தெரியாது என்கிறார்கள். டீக்கடை வேலைக்கு வரும் பீகார் தொழிலாளி தமிழ் கற்றுக் கொள்ளும்போது நீதிபதி கற்றுக்கொள்ள முடியாதா?நீதிபதிக்காக மக்களா, மக்களுக்கா நீதிபதியா?

ஒரே ஒரு நாள் பத்து பேர் வாயைத் திறக்காமல் நீதிமன்ற அறையில் உட்கார்ந்திருந்தால் நீதிமன்றத்தின் மாண்பு போய் விட்டதாக கூறுகிறார்களே, தன்னுடைய வழக்கில் என்ன விவாதிக்கப்படுகிறது என்றே புரியாத நிலையிலும், இந்த நீதிமன்றதின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடக்கிறார்களே மக்கள், அவர்களுக்கு மட்டும் மாண்பு கிடையாதா?

என்ன பொல்லாத மாண்பு? சட்ட மன்றம் நாடாளுமன்றத்துக்கு மாண்பு கிடையாதா? அங்கே தினமும் கூச்சல் போடுகிறார்கள், ஏன் என்று கேட்டால் எங்களை பேச அனுமதிக்கவில்லை, அதனால்தான் முழக்கம் போடுகிறோம் என்று விளக்கம் சொல்கிறார்கள். நீதிமன்றத்தில் நடந்ததும் அதுதானே!
நீதிமன்றத்துக்குள் தமிழை விடவில்லை. எதிர்ப்பு தெரிவித்தார்கள். 16 ஆம் தேதியன்று அவமதிப்பு விசாரணை நடக்கும் நீதிமன்ற அறைக்குள் வழக்கறிஞர்களை அனுமதிக்கவில்லை. வழக்கறிஞர்கள் எதிர்த்து முழக்கம் போட்டார்கள்.

தமிழையும் வழக்கறிஞர்களையும் நீதிமன்றத்துக்கு வெளியே நிறுத்தியது சரியா என்ற கேள்விக்கு பதிலளிப்பதை விட்டுவிட்டு, நீதிமன்றத்தின் மாண்பை பாதுகாக்க சி.ஐ.எஸ்.எஃப்-ஐ கொண்டு வருகிறேன் என்கிறார் தலைமை நீதிபதி.

தலைமை நீதிபதியின் அறைக்குள்ளேயே நுழைந்து சத்தம் போட்டிருக்கிறார் ஒரு நீதிபதி. சேம்பரில் மது அருந்தும் நீதிபதிகள், ஊழியர் நியமனத்தில் ஊழல் செய்யும் நீதிபதிகள், சாதி உணர்வுடன் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள், காசு வராத வழக்குகளில் வாய்தா போடும் நீதிபதிகள்-இவர்களையெல்லாம் தடுத்தாட்கொண்டு நீதிமன்றத்தின் மாண்பை இவர்களுக்கு உணர்த்தப் போவது யார்?

பிறந்த வீட்டுப் பெருமையை உடன் பிறந்தவனிடம் அளந்த கதையாக, நீதிமன்றத்தின் மாண்பைப் பற்றி வழக்கறிஞர்களிடம் கதையளப்பதா?

 - ”அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள்!” – மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு வெளியிட்ட  புத்தகத்திலிருந்து...

தலைக்கவசம் போடாமல் ஊர்வலம் போவதெல்லாம் நீதிமன்றத்தை அவமதிப்பதாகாதா? - பதில்

வழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்குப் பதில்! – 4

ஒரு தீர்ப்பு சட்டப்படி தவறு என்றால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதுதானே முறை? தீர்ப்பை மீறி தலைக்கவசம் போடாமல் ஊர்வலம் போவதெல்லாம் நீதிமன்றத்தை அவமதிப்பதாகாதா?

வழக்கறிஞர்களில் சிலரே கூட இப்படித்தான் கருதுகிறார்கள். இந்த பிரச்சனையை வேறு விதமாக அணுகிப் பார்ப்போம். ஒரு வேளை கட்டாய ஹெல்மெட் என்பதை தமிழக சட்டமன்றம் ஒரு சட்டமாக கொண்டு வந்திருந்தால், அந்த சட்டத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகளும் மக்களும் போராட்டம் நடத்தியிருப்பார்களா இல்லையா? மோடி அரசு கொண்டு வந்த நிலப்பறி(அவசரச்) சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடவில்லையா?

“தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சட்டம் இயற்றுகிறார்கள் அதை எதிர்த்து போராடுவது, ஜனநாயகத்தையே அவமதிப்பாகும்” என்று சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா? தேர்ந்தெடுக்கப்படாத நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து போராடுவது மட்டும் எப்படி அவமதிப்பாக முடியும்?

மகாராட்டிர அரசு, ஜைன பண்டிகை ஒன்றுக்காக நான்கு நாட்களுக்கு மாநிலம் முழுவதும் எல்லா விதமான அசைவ உணவுக்கும் தடை விதித்தது. கறிக்கடை உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்தனர். தடையை நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. ஒருவேளை தடை சரிதான் என்று நீதிமன்றம் சொல்லி இருந்தால்? விரதம் இருக்க வேண்டியது தானா?

சமீபத்தில் நெய்வேலி தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தங்களுடைய வேலைநிறுத்த உரிமையில் அத்துமீறித் தலையிடும் நீதிமன்றத் தீர்ப்பை தொழிற்சங்கங்கள் மதிக்கவில்லை . வேலை நிறுத்தம் தொடர்ந்தது. இது நீதிமன்ற அவமதிப்பு என்று நிர்வாகம் கூச்சலிட்டது. தொழிலாளர்கள் அதனைப் பொருட்படுத்தவே இல்லை. மக்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பது அரசாங்கமாக இருந்தால் என்ன நீதிமன்றமாக இருந்தால் என்ன? இதில் முன் விட்டைக்கும் பின் விட்டைக்கும் என்ன வேறுபாடு?

- ”அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள்!” – மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு வெளியிட்ட சிறு வெளியீட்டிலிருந்து....

Nov 18, 2015

நீதிமன்றத் தீர்ப்பை வழக்கறிஞர்களே விமர்சிக்கலாமா? - பதில்

வழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்குப் பதில்! – 3

நீதிமன்றத் தீர்ப்பை வழக்கறிஞர்களே விமர்சிக்கலாமா?

நீதிமன்றத் தீர்ப்பை யாரும் விமர்சிக்கக் கூடாது என்பதே தவறான கருத்து. இப்படி ஒரு கருத்தை ஊடகங்களும் ஊழல் அரசியல்வாதிகளும் மக்களிடம் பரப்பி விட்டனர். ஊழல் குற்றச்சாட்டு பற்றி கேள்வி கேட்டால், “பிரச்சனை நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் நான் கருத்து சொல்லக்கூடாது” என்று சமாளிப்பார்கள். தண்டனை விதித்து தீர்ப்பு வந்துவிட்டால் “தீர்ப்பை பற்றி விமர்சிக்க கூடாது. நான் மேல்முறையீடு செய்யப்போகிறேன்” என்பார்கள்.
ஹெல்மெட் பிரச்சினையை விவாதிக்கும் ஊடக அறிவுக்கொழுந்துகளோ, “அதெப்படி வக்கீலாக இருந்துகொண்டு நீங்கள் தீர்ப்பை விமர்சிக்கலாம்” என்று சொல்லி கேட்கிறார்கள். “நாலும் மூணும் எட்டு” என்று குமாரசாமி போட்ட கூட்டல் கணக்கும், “பத்து சதவீதம் ஊழல் செய்யலாம்” என்று அவரது தீர்ப்பு வழங்கிய அனுமதியும் விமர்சனத்துக்கு உள்ளாகவில்லையா? தீர்ப்பை எல்லோரும் விமர்சிக்கலாம். சட்டம் தெரிந்த வழக்கறிஞர்கள்தான் தீர்ப்பைக் கூர்மையாக விமர்சிக்க முடியும். எனவே அவர்கள்தான் முதலில் விமர்சிக்க வேண்டும்.

தீர்ப்பு வழங்கப்பட்ட பின் அதன் அமலாக்கத்துக்கு நிர்வாக எந்திரம்தான் பொறுப்பு. ஒவ்வொரு தீர்ப்பும் அமலாகிறதா என்று நீதிமன்றம் கண்காணிப்பதில்லை. ஆனால் ஹெல்மட் தீர்ப்பின் அமலாக்கத்தை நீதிபதி கண்காணிக்கிறார். எத்தனை வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன என்று நீதிமன்றத்தில் புள்ளி விவரம் கொடுக்கிறது போலீசு. ஹெல்மெட் தீர்ப்பைக் கண்காணிக்கும் நீதிமன்றம், சட்ட விரோத டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு தான் அளித்த தீர்ப்புகள் அமலாகியிருக்கிறதா என்பதைக் கண்காணித்து அகற்றியிருந்தால், சசிபெருமாள் இறந்திருக்க தேவையில்லையே! இது விமர்சனத்துக்குரியது இல்லையா?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அருந்ததிராய்க்கு உச்சநீதிமன்றம் ஒரு நாள் சிறைத்தண்டனை விதித்த போது, “இந்த அரசமைப்பில் எஞ்சியிருக்கும் கடைசிப் புனிதப் பசுவான நீதித்துறையின் அச்சுறுத்தலை எதிர்த்து நாம் அனைவரும் பேச வேண்டும். நீதிமன்றத்தை இழிவுபடுத்திய குற்றத்துக்காக எல்லோரையும் சிறைக்கு அனுப்பட்டும்” என்று நீதிமன்றத்தை சாடினார் மறைந்த அவுட்லுக் பத்திரிக்கை ஆசிரியர் வினோத் மேத்தா.


தெல்லாம் இருக்கட்டும். இலக்கியமோ, திரைப்படங்களோ விமரிசனத்தை எதிர்கொண்டுதானே வளர்கின்றன். மக்கள் நம்பிக் கொண்டிருந்த சாதி ஆதிக்கம் முதல் புராணக் கதைகள் வரையிலான அனைத்தையும் அம்பேதக்ரும் பெரியாரும் விமரிசனத்துக்கு உள்ளாக்கவில்லையா? அவர்களைத் தாக்கினார்கள். எங்கள் மத உணர்வு புண்படுகிறது என்று வழக்கு தொடுத்தார்கள். இவற்றுக்கெல்லாம் அஞ்சாமல் அவர்கள் விமரிசித்த காரணத்தினால்தான், அடிமைத்தனத்துக்கு எதிரான விழிப்புணர்வு வந்தது.

ஒரு தீர்ப்பை விமர்சிப்பது என்பதன் பொருள் நீதிபதிகளின் கருத்தை மட்டுமல்ல, நீதிபதிகளையும் மக்களின் கண்காணிப்புக்கு உட்படுத்துவது என்பதாகும். அத்தகைய கண்காணிப்பும் கடுமையான விமரினமும் இல்லாத காரணத்தினால்தான், கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் கொள்ளையர்களுக்கு ஆதரவான தீர்ப்புகளை துணிச்சலாக நீதிபதிகள் வழங்க முடிந்திருக்கிறது. விமர்சனத்தின் மூலம் நீதிபதிகளின் இந்தத் ”துணிச்சலை” நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

- ”அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள்!” –  
 மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு வெளியிட்ட சிறு வெளியீட்டிலிருந்து....