அன்பார்ந்த வழக்கறிஞர்களே மற்றும் நண்பர்களே!
தமிழகத்தில் இதுவரை
44 வழக்குரைஞர்களை தற்காலிகமாக தொழிற்செய்யமுடியாத அளவிற்கு
நிறுத்திவையுள்ளனர். நாம் கொண்டுவந்திருக்கும் சிறுவெளியீடு நடந்த
விசயங்களை தொகுத்து, யார் யார் இதன் பின்னணியில் உள்ளனர்? ஏன்
வழக்குரைஞர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்? என்பதை சுருக்கமாக ஒரு வெளியீடாக
கொண்டு வந்திருக்கிறோம்! அதை இன்று முதல் சிறுசிறு பகுதிகளாக பிரித்து
தொடராக வெளியிடுகிறோம்.
.....
இந்துத்துவ மோடி அரசு
வரலாற்றுத் துறை, தணிக்கைத் துறை, பள்ளி மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள்,
அறிவியல் கழகங்கள், நீதிமன்றங்கள் என அனைத்தையும் காவிமயமாக்கி
வருகின்றனர். அதன் வெளிப்பாடாக கருத்துரிமைக்கு எதிராக பாசிச நடவடிக்கை
தொடர்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி, ஹதராபாத்
பல்கலைக்கழகம் அடுத்து இப்போது டெல்லி JNU வில் நடக்கும் நிகழ்வுகள் நமக்கு
உணர்த்துகிறது.
தமிழகத்தில்தான், இந்தியாவின் வேறு எந்த
மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு வழக்கறிஞர்கள் போராடியிருக்கிறார்கள்.
ஈழத்து இனப்படுகொலைக்கு எதிராக, மூவர் தூக்குக்கு எதிராக, இந்தி-சமஸ்கிருத
திணிப்புக்கு எதிராக, நீதிமன்றத்தில் தமிழ், காவிரி-முல்லைப் பெரியாறு
பிரச்சனைகளுக்காக என்று பல பிரச்சனைகளுக்காகவும் தமிழக வழக்கறிஞர்கள்
போராடியிருக்கிறார்கள்.
நீதிபதிகளின் நியமனத்தில் பார்ப்பன ஆதிகத்தையும் மற்றும் நீதித்துறை ஊழலையும் எதிர்த்திருக்கிறார்கள்.
தற்போது எப்படி கருத்துரிமைக்காக போராடிய JNU மாணவர்களை தேசதுரோகியாக
சித்தரித்து குற்றவாளிகளாக மாற்றினார்களோ அதே போல்தான் சென்ற ஆண்டு போராடிய
தமிழக வழக்கறிஞர்களை குற்றவாளிகளாக சித்தரித்தனர். தேசதுரோக வழக்கு பதிலாக
44 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு தொழில் செய்ய முடியாத படி
பொருளாதார ரீதியாக முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றத்தில்
மத்திய தொழிற் பாதுகாப்பு படையை(CISF) நிறுத்தி வழக்கறிஞர்கள் தங்கள்
ஜனநாயகமாக கருத்தினை வெளிப்படத்தாதவாறும் அச்சுறுத்தி வருகின்றனர்.
வழக்கறிஞர்களை ஒடுக்குவது தனிப்பட்ட ஓர் நிகழ்வல்ல.பெயரளவுள்ள ஜனநாயகத்தின்
குரல்வளையை நெறிப்பது.நீதித் துறையை-நாட்டை பாசிசமயமாக்குவது. மக்களை
ஒடுக்குவது என்பதே பொருள்.
பாசிசம் வந்தபின் விழிப்பதை விட
வரும்முன் விழிப்பதே சரி. இதனை அனைவரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழக
வழக்கறிஞர்கள் மீதான அடக்குமுறை -பின்னணி-சதி காரணங்களை விளக்கி
நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் சிந்தனைக்கு! என்ற சிறுவெளியீட்டினை மக்கள் உரிமை
பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு வெளியிட்டு் உள்ளது. தமிழகம் முழுவதும்
இலவசமாக வழங்கிகொண்டிருக்கிறோம் . மேலும் எங்கள் முகநூல் பக்கத்தில் இன்று
முதல் தொடராக பதிவிடுகிறோம்.
இந்த சிறுவெளியீட்டை அனைவரிடம் பகிருங்கள் .சென்னையில் தேவைப்படுவோர் 90946 66320 எண்ணில் தொடர்பு கொள்ளவும்
தோழமையுடன்,
மில்ட்டன், வழக்குரைஞர்,
செயலர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்-சென்னை.
9094666320
*******
நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் சிந்தனைக்கு! சிறுவெளியீடு-பகுதி-1
தமிழக வழக்கறிஞர்கள் மீதான அடக்குமுறை -பின்னணி-சதி- என்ன?
-----------
மதிப்பிற்குரிய வழக்கறிஞர் பெருமக்களே!
தமிழக வழக்கறிஞர்கள் 44 பேர் தொழில் செய்யத் தடை விதிக்கப்பட்டு 140
நாட்களுக்கும் மேலாகிறது.மதுரை வழக்கறிஞர்கள் 13 பேர் மீதான வழக்கு
கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டு மூன்று மாதகாலமாக அலைந்து
கொண்டிருக்கிறார்கள்.சென்னை உயர்நீதிமன்றம் சி.அய்.எஸ்.எப் போலீசின்
கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு மக்கள் தொடர்பிலிருந்து
அந்நியப்படுத்தப்பட்டுள்ளது.பெண் வழக்கறிஞரைப் படம் எடுத்த சி.அய்.எஸ்.எப்
போலீசைக் கண்டித்த 8 சென்னை வழக்கறிஞர்கள் மீதான வழக்கும் கர்நாடகாவுக்கு
மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. தொழில்தடை விதிக்கப்பட்ட மதுரை
வழக்கறிஞர்களின் கிளர்க்குகள் இருவரின் உரிமங்களை ரத்து செய்து
உயர்நீதிமன்றப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்ட நீதிமன்றத்தில்
எனது வழக்கை விரைந்து எடுங்கள் என்று கோரிய வழக்கறிஞர் நீதிமன்றத்தை
தொந்தரவு செய்ததாகச் சொல்லி 200 ரூபாய் அபராதம் (அல்லது) ஒரு மாத
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள
நீதிமன்ற வளாகங்களில் பேசக்கூடாது, துண்டறிக்கை விநியோகிக்கக் கூடாது,
கூட்டம் நடத்தக்கூடாது, பார் கவுன்சில் மட்டுமல்ல காவல்துறையைக் கூட
விமரிசிக்கக் கூடாது போன்ற தடைகள் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது.
உயர்நீதிமன்றம் உட்பட தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களை
நீதிபதிகள் மிரட்டி அச்சுறுத்தி வருகிறார்கள்.வாதங்களில் இயல்பாகக் குரல்
உயர்ந்தால் கூட, பார் கவுன்சிலிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கவா? எனப் பல
மூத்த வழக்கறிஞர்கள்கூட மிரட்டப்படுகின்றனர். தமிழக நீதிமன்றங்களில்
விரும்பத்தகாத மயான அமைதி நிலவி வருகிறது. பிரச்சனையைப் பேசி முடிக்கலாம்
என்ற மூத்த வழக்கறிஞர்களின் குரலுக்கு நீதித்துறை செவிசாய்க்க
மறுக்கிறது.எத்தனை முறை தலைமை நீதிபதியைச் சந்தித்து பிரச்சனையை
பேசித்தீர்க்கக் கோரினாலும், வழக்கறிஞர்களின் கோரிக்கை
அலட்சியப்படுத்தப்படுகிறது. ஒரு சில வழக்கறிஞர்களை வைத்து பொங்கல்
விழா-இலக்கிய விழா-சட்டக் கருத்தரங்கம்-நூல் வெளியீட்டு விழா என நடத்தி
நிலைமை சுமூகமாக உள்ளதாகக் காட்டும் முயற்சி நடக்கிறது.
மூத்த
வழக்கறிஞர்கள் உட்பட பெரும்பான்மை வழக்கறிஞர்கள் நடந்து வரும் சம்பவங்கள்
எல்லை மீறியது,வழக்கறிஞர்களின் சுயமரியாதைக்கு எதிரானது எனக்கருதினாலும்
அமைதியாக உள்ளனர். மொத்தத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக
வழக்கறிஞர்கள் மீது தொடுத்த நேரடியான தாக்குதலும்,உளவியல் ரீதியான
யுத்தமும் வழக்கறிஞர்களின் எதிர்வினை இல்லாததால்,பயந்துவிட்டார்கள்
எனக்கருதி முன்னிலும் மிகவும் தீவிரமடைந்துள்ளது. கடைசி எல்லைவரை
வழக்கறிஞர்களை துரத்தித்-துரத்தி அடிக்கிறார்கள்.நீதிமன்ற அவமதிப்பு
வழக்குகளில் மன்னிப்பு கேட்கிறோம் என்று மனுத்தாக்கல் செய்தாலும் வழக்கை
நடத்துங்கள் என்கின்றனர்.
குறிப்பிட்ட சிலர்தான் பிரச்சனை என்று சொல்லி
ஒட்டு மொத்த வழக்கறிஞர் சமூகத்தையும் அடிமையாக்கும் முயற்சி தீவிரமாக
நடக்கிறது.
நீதித்துறையில் ஒழுங்கை நிலைநாட்டுகிறோம் என்ற சொல்லி
ஒட்டுமொத்த நீதிபதிகளின் பேரால் குறிப்பிட்ட சில நீதிபதிகள்
வழக்கறிஞர்களுக்கு எதிராக இந்தத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள். இதன்
பின்னணி என்ன? இதன் சூத்திரதாரிகள் யார்? யாருடைய நலனுக்காக இது
நடத்தப்படுகிறது? அவர்கள் நோக்கம் என்ன? என்பது பற்றியான புரிதல்
வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல,நீதிபதிகளுக்கும் அவசியமாக உள்ளது.ஏனெனில்
தமிழக நீதித்துறை வரலாற்றில் இன்று நடந்துவரும் பிரச்சனைகள் புதிது.
தொடரும்...
No comments:
Post a Comment