Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Aug 5, 2016

மிதிவண்டியின் நினைவலைகளில்…



மிதிவண்டியில் முன்னாடி அமர்ந்து பயணிப்பது மிகுந்த நெருக்கத்தை உணரமுடியும்! அது நண்பனாலும், காதலியானாலும்!
***

ஒரு ஞாயிறு காலை. டீனேஜ் வயது. எங்கள் தெருவில் இருந்த ஈஸ்வரியை சைட் அடித்துக் கொண்டிருந்த காலம். பக்கத்து தெருவில் வண்டி பழகி கொண்டிருந்தாள்.

வண்டி பழகும் அழகை நானும் நண்பனும் கட்டிமுடிக்கப்படாத ஒரு கட்டிடத்தில் நின்று வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தோம். திடீரென எங்கள் இருவர் பக்கம் திரும்பி இங்கே வாருங்கள்! என அழைத்தாள். வேறு யாரையும் அழைக்கிறதா! என இருவரும் வேகமாய் திரும்பி பார்த்தோம். யாரும் இல்லை. நண்பன் வீட்டிற்கு பயந்து கொண்டு போகவில்லை. நான் தைரியமாய் போனேன்.

தம்பியாலும், தங்கையாலும் வண்டி ஓட்டும்பொழுது, வண்டியை பிடிக்கமுடியவில்லை. அதற்குத்தான் அழைத்திருக்கிறாள். ஈஸ்வரி வண்டியை ஓட்ட, நான் பிடித்துக்கொண்டேன். ஒரு மணி நேரம். கூச்சமாகவும், பதட்டமாகவும் இருந்தது.

அடுத்த நாள், என் அக்காவிடம் ஈஸ்வரிக்கு வண்டி ஓட்டக்கற்றுக்கொடுத்ததைப் பார்த்து வயித்தெரிச்சல் பட்டு, யாரோ போட்டுக்கொடுத்துவிட்டார்கள். "அந்த பொண்ணு யாருடா! நம்ம அத்தைப் பொண்ணா! மாமன் பொண்ணா! நீ சைக்கிள் சொல்லித்தர!" என ஒருமணி நேரம் திட்டு வாங்கியது தனிக்கதை!
***

16 வயதிலிருந்து ஆடல், பாடல் நிகழ்ச்சி, பட்டிமன்றம், சொற்பொழிவு, நாடகம், திரைப்படம், கலைவிழா, பொதுக்கூட்டம், விடிய விடிய நண்பர்களுடன் விவாதம் என பல இரவுகள் மதுரை தெருக்களில் சுற்றித் திரிந்த பயணம் எதுவும் மிதிவண்டி இல்லாமல் சாத்தியமாயிருக்காது!
***

சமீபத்தில் ஒரு உறவினர் வீட்டுக்கு போயிருந்தேன். அவரின் 6ம் வகுப்பு படிக்கும் பையன் வரைந்த ஓவியங்களை காண்பித்தார்கள்.

அதில் ஒரு ஓவியம். ஒரு பரபரப்பான மாநகர சாலை. சுற்றிலும் நிறைய கான்கிரீட் கட்டிடங்கள். சாலையில் நிறைய கார்கள் பயணிக்கின்றன. அவ்வளவு தான். பகீரென்று இருந்தது.

"தம்பி! இன்றைக்கும் நிறைய மனிதர்கள் நடந்துபோகிறார்கள். மிதிவண்டியில் பயணிக்கிறார்கள். கூட்டம் கூட்டமாய் பறவைகள் பறக்கின்றன. சாலையின் ஓரங்களில் மரங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் சேர்த்தால் ஓவியம் இன்னும் அழகாக மாறிவிடும்" என்றேன்.

புன்னகைத்து சரி என்றான்.

***

20 வயதில்... கோடைகாலத்தில், நானும், நண்பனும் தேநீர் கடையில் உலகத்தைப் பற்றி கவலை கொண்டு பேசிக்கொண்டிருந்தோம். :)
அப்பொழுது எங்களை மிதிவண்டியில் இளம்பெண் தென்றலாய் கடந்து சென்றாள். சாலையின் வளைவில் மண்ணின் சதியால் தொபுக்கடீர் என தவறி விழுந்தாள். பதறிப்போன நாங்கள் ஓடிப்போய் உதவி செய்தோம். பிறகு அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டே வீடு வரைக்கும் போய் பாதுகாப்பாக விட்டு வந்தோம்.
***

1990-களில் சிடி, டிவிடி வருவதற்கு முன்பு, வீடியோ கேசட்தான் பிரபலம். பொருளாதாரத்தில் வசதியானவர்களின் வீட்டில் தொலைக்காட்சியே இருக்கும். இன்னும் சொற்பமான நபர்களிடம் தான் பிளேயர் இருக்கும். திரையரங்கை விட்டால், படம் பார்ப்பது என்பது மிகவும் சிரமம். வருடம் ஒருமுறை கோயில் திருவிழாக்களில் ஒரு சாமிபடம், இரண்டு சமூகபடங்கள் என திரையிடுவார்கள். பாய்விரித்து படுத்துக்கொண்டெல்லாம் ஜாலியாய் பார்ப்பார்கள்.

நண்பர்களிடையே வசூலைப் போட்டு, பிளேயரை வாடகைக்கு எடுத்து பிடித்த படங்கள் போட்டு பார்க்கலாம் என முடிவுசெய்தோம். வாடகைக்கு எடுத்துவருகிற பிளேயரும், வீடியோ கேசட்டும் இல்லாத அழிச்சாட்டியெல்லாம் செய்யும். ஒருவழியாக போராடி மூன்று படங்கள் பார்த்து நண்பர்கள் எல்லாம் தூங்கி போக, காலை 5 மணிக்கு வெளியே வந்து பார்த்தால், என் குதிரையை காணோம். அதுதாங்க என் மிதிவண்டி! தொலைந்து போனதில் எனக்கு கூட பெரிய வருத்தம் இல்லை.எங்கம்மா தான் 1000 ரூ. வண்டி போச்சே!ன்னு மூன்று நாள் சோகமா இருந்தார்.
***

1990களில்மதுரை சோலைமலை திரையரங்கில், மிதிவண்டிக்கு தரும் டோக்கனுடன் ஒரு டிக்கெட்டையும் தந்துவிடுவார்கள். வரிசையில் மல்லுக்கட்டும் சிரமத்தை தரமாட்டார்கள். ஆகையால், புதுப்படங்களுக்கும், சனி, ஞாயிறுகளிலும் மிதிவண்டி இருந்தால் சோலைமலையை நம்பி படத்திற்கு போகலாம்! மிதிவண்டிக்கு மரியாதை! :)
***


சென்னையில் வாடகைக்கு மிதிவண்டி தருவதை பார்க்கமுடியவில்லை. 1980 வாக்கில் எங்கள் ஊரில் மிதிவண்டியை வாடகைக்கு தருவார்கள். 1 மணி நேரத்திற்கு 2 ரூ. 15 வயதில் காசு தட்டுப்பாடு அதிகம்.

அதனால் ஒரு மிதிவண்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, எல்லோரும் ஒல்லி என்பதால் ஒரே வண்டியில் 5 பேர் ஜாலியாய் 4 கிமீ தள்ளி இருக்கிற ஒரு பச்சைக் கிணற்றில் குளிக்க போவோம். 

20 அடி உயரத்தில் இருந்து தொபக்கடீர் என குளிர்ந்த நீருக்குள் குதித்து, 15 அடி ஆழம் வரை போய், வெளியே வருவது ஆனந்தமோ ஆனந்தம். இப்படி 3 மணி நேரமாவது நீரில் ஊறிக்கிடப்போம்! இப்படி அந்த ஆண்டு தண்ணீர் வற்றிய காலம்வரை, கிணற்றை பாடாய்படுத்தினோம்.


***

அறிந்தவர்கள் அபூர்வமாய் மிதிவண்டி கொண்டு வந்தால், வாங்கி கொண்டு ஒரு ஜாலி ரவுண்டு போய்விட்டு தந்துவிடுகிறேன்.

கடைசியாய் கொடைக்கானலில் வாடகைக்கு மிதிவண்டி வாங்கி, மெல்லிய மழைச் சாரலில் என் பெண்ணுடன் பயணம் போனது இன்னும் நினைவில் நிற்கிறது!

Selvam Ramki

May 8, 2016

அன்புமணி பேட்டி : எங்க தாத்தா ’யானை’ வச்சிருந்தார்!


ஒரு வீட்டில் நுழையும் பொழுதே கண்ணில்படும் உயரத்தில் ஒரு குச்சியை மாட்டி வைத்திருப்பார்களாம். வீட்டிற்கு வருப‌வர்கள் அதைப் பற்றி கேட்கும் பொழுது, ”எங்க தாத்தா ஒரு காலத்தில‌ யானைகள் வைச்சிருந்தார்னு அதை கட்டுப்படுத்துவதற்கான குச்சித்தான் இது!” என விலாவாரியாக 'பழம்பெருமை' பீத்துவார்களாம்.


இன்றைக்கு (08/05/2016) தமிழ் இந்துவில் வெளிவந்துள்ள அன்புமணியிடம் சமஸ் நிகழ்த்திய நீண்ட பேட்டியில், சாதி குறித்தான கேள்விகளில் அன்புமணியின் பதில்கள் அப்படித்தான் இருந்தன!

May 6, 2016

கட்டுப்படியான விலையில் உணவகம் அபூர்வம்!

என் எதிரே அமர்ந்தவரிடம் ’என்ன வேண்டும்?’ என கேட்டான் 18 வயதுள்ள‌ சர்வர் பையன். ’இரண்டு இட்லி’ என்றார். ‘நாலு இட்லி வாங்கிங்க’ என்றான் உரிமையுடன். ’சரி’ என்றார். சில நொடிகளில் ஒரு அக்கா வந்து, மீண்டும் முதலிலிருந்து ‘என்ன வேண்டும்’ என்றார். ஏற்கனவே ஆர்டர் சொல்லிவிட்டேன் என சொல்லாமல், அவரும் முதலிலிருந்து ‘இரண்டு இட்லி’ என்றார். கொஞ்ச நேரத்தில் நாலு இட்லிகளை வந்து தந்தான். (அக்காகிட்ட சொன்னது என்ன ஆச்சு?) இரண்டு வகை சட்னி இருந்தாலும், சாம்பார் தருவது மிக குறைவு. சர்வர் பற்றாக்குறை வேறு. மீண்டும் சாம்பார் என கேட்டால், தருவதற்கு நிறைய நேரம் இழுத்தார்கள். அவர் காத்திருந்து காத்திருந்து 'சர்வீஸ் சரியில்லைங்க' என என்னிடம் நொந்துகொண்டார்.

எதிரே அமர்ந்தவருக்கு ஏற்பட்ட நிலையை கண்டு சுதாரித்து, இரண்டு இட்லி, ஒரு தோசை என்றேன். வழக்கமாக உணவகங்களில் இட்லிகளை தான் முதலில் கொண்டு வருவார்கள். அப்படியே எதிர்ப்பார்த்திருந்தால்,  முதலில் தோசையை தந்தான். நன்றாக இருந்தது. இட்லியை சாப்பிடுவதற்கு வடகறியை ஆர்டர் செய்து வாங்கினேன். வடகறியோடு இட்லியை முழுங்க ரெம்பவும் சிரமப்பட்டேன். வடகறியின் சுவை எனக்கு பிடிக்கலை.

ஒருவழியாக சாப்பிட்டுவிட்டு வந்தால், கேசியரை சீட்டில் காணோம். ஆள் பற்றாக்குறையால், கேசியர் அக்கா பார்சல் கட்டிக்கொண்டிருந்தார். அக்கா வந்து பணம் வாங்கிக்க! என குரல் கொடுத்தான்.

ஆர்டர் எடுக்கும் பொழுது பொறுப்பாக ஒரு பெரிய நோட்டில் குறித்துக்கொண்டான் பையன். ஆனால், சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்கும் பொழுது ”நான் மறந்துட்டேன். என்ன சாப்பிட்டீங்க?” என்று திரும்பவும் என்னைக் கேட்டான். சிரித்துவிட்டேன்.

கடை துவங்கி சில காலம் ஆகியிருந்தாலும், இன்னும் இவ்வளவு குறைகள் இருப்பது ஆச்சர்யம் தான்! இன்னொருமுறை வெங்காய ரவா தோசை சாப்பிட்டேன். சுவையாக இருந்தது.

இப்படி சில குறைபாடுகள் இருந்தாலும், கோதுமை, ராகி, ரவா, நெய் தோசை என நிறைய வெரைட்டி வைத்திருக்கிறார்கள். சென்னையில் நமக்கு சுவையும், கட்டுப்படியான விலையும் அமைவது அபூர்வம் தான். இங்கு வடை ரூ.6. தோசை ரூ. 25 என விலையும் இருப்பது மகிழ்ச்சி! :)

Feb 2, 2016

நினைவோடை (inside out) ஒரு பார்வை!



அம்மா, அப்பா, பொண்ணு என அமெரிக்க நியூக்கிளியர் குடும்பம். அந்த பொண்ணுக்கு 11 வயது ஆகும் பொழுது பொருளாதார பிரச்சனையில் ஊரைவிட்டு, புதிய மாநிலத்திற்கு நகர்கிறார்கள்.  புதிய இடம், புதிய சூழல், நண்பர்களை இழந்த சோகம் என மிகவும் கவலைக்குள்ளாகிறாள். ஒரு சமயத்தில் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து கிளம்புகிறாள். மீண்டும் எப்படி பெற்றோரை வந்தடைகிறாள் என்பது கதை!

இந்த சாதாரண கதையை எப்படி சுவாரசியப்படுத்துகிறார்கள் என்றால் அந்த பெண்ணின் மூளைக்குள் சந்தோசம், துக்கம், கோபம், வெறுப்பு, பயம் என உணர்வுகளில் முக்கியமான ஐந்துக்கு உருவம் கொடுத்திருக்கிறார்கள்.  இந்த ஐவரும் மூளைக்குள் அடித்து பிடித்து அந்த பெண்ணின் உணர்வுகளை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை ஒரு வண்ணமயமான உலகத்தை உருவாக்கி அருமையான கற்பனையுடனும், நகைச்சுவையுடனும் சொல்லியிருக்கிறார்கள்.
குழந்தைகளோடு பெரியவர்களும் பார்க்கவேண்டிய படம்.  2015ல் ஜூனில் வெளிவந்து, இப்பொழுது சில பிரிவுகளில் ஆஸ்காருக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

சந்தோசமான உணர்வுகள் கூட நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவதில்லை.  ஆனால், காயம்பட்ட, சோக உணர்வுகள் சட்டென்று மேலெழும்பி வந்து, துக்கத்தில் ஆழ்த்திவிடுகின்றன.  சிலரை பார்க்கும் பொழுது, மீண்டும் மீண்டும் வாழ்வில் நடந்த, நடக்கிற அழுகாச்சி டேப்பை மனதில் சுழலவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

படம் தந்த பாடம் இது தான்.  சந்தோசமான தருணங்களை எல்லாம், கவனமாக சேகரிக்க வேண்டும். நாட்குறிப்பில் பதியுங்கள். புகைப்படங்களை எடுத்து, ஆல்பமாய் தயாரித்து வையுங்கள். பிளாக் ஒன்றை உருவாக்கிக்கொள்ளுங்கள். யாருக்கு எது சாத்தியமோ அதை செய்து கொள்ளலாம்.  நானோ, எனது பொண்ணோ கொஞ்சம் டல்லாக இருந்தால், நாங்கள் சுற்றுலா போய்வந்த ஆல்பங்களை ஒரு புரட்டு புரட்டினால் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்!

Jan 22, 2016

மறந்து போச்சு!

நல்ல தமிழ்படங்கள் பார்த்த நேரம் போக, வேற்றுமொழி படங்களும் பார்ப்பது வழக்கம்! பிற மொழிப்படங்களின் தரத்தை உரசிப் பார்க்க சமீப காலங்களில் IMDB உதவுகிறது.  10க்கு 7 மார்க் வாங்கினால், மினிமம் கேரண்டி கிடைக்கிறது. சில சமயங்களில் சொதப்பவும் செய்கிறது!

அப்படித்தான் நானி நடத்த தெலுங்கு படமான Bhale Bhale Magadivoy (You are a strange man) பார்த்தேன்.  நகைச்சுவை காதல் படம் என வகைப்படுத்தலாம்.

சிறு வயதிலிருந்தே நாயகனுக்கு மறதி ஒரு பெரும் பிரச்சனை.  ஒரு வேலையில் ஈடுபடும் பொழுது, வேறு ஒரு வேலை குறுக்கிட்டால் அதிலேயே மூழ்கிப்போவது!  உதாரணத்துக்கு உங்களுக்கும் சேர்த்து ஒரு படத்துக்கு டிக்கெட் எடுத்துவிட்டு,  வேறு வேலையில் மூழ்கி வராமல் போனால், திரையரங்கு வாயிலில் காத்திருக்கும் உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்?

திருமணம் என வரும் பொழுது சிக்கலாகிறது. அவமானப்படுத்தப்படுகிறான்.  இதற்கிடையில் காதலில் விழுகிறான். காதலியிடம் தனது பிரச்சனையை சொல்லாமல், மறைத்து தான் சொதப்பும் பொழுதெல்லாம் கதை சொல்லி தப்பித்து, இறுதியில் மாட்டி, அவனுடைய இயல்பான நல்ல குணத்தால் காதல் கல்யாணத்தில் முடிகிறது!

கொஞ்சம் மிகையாக தெரிந்தாலும், கற்பனையான பிரச்சனையல்ல!  ஒரு நேரத்தில் ஒரு வேலை செய்கிற நபர்களை சந்தித்திருக்கிறேன். இன்னொரு வேலை வந்தால், அதையும் திட்டமிட்டு நகர்த்தாமல், இரண்டு வேலைகளையும் குழப்பிக்கொள்கிற ஆட்கள் இருக்கிறார்கள். மருத்துவரீதியாக இது என்ன பிரச்சனை? எப்படி கையாள்வது என்பதை கொஞ்சம் விளக்கியிருக்கலாம். எதுவும் இல்லை!  நகர்த்தும் காட்சிகளில் கூட அத்தனை புதுமையில்லை. இந்தாலும் நானி ான் பத்ங்குகிறார்.

நீங்கள் இது மாதிரி ஆட்களை பார்த்திருக்கிறீர்களா? தெலுங்கில் நன்றாக ஓடிய படம் என்கிறார்கள்

Jul 20, 2015

ஆட்சியில் பங்கும் காங்கிரசு தொண்டனும்!


கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இயக்கப்பணி தொடர்பாக வீடு வீடாக, ரயில்களில், பேருந்துகளில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்திருக்கிறேன். மக்களில் நேற்று துவங்கிய கட்சிக்கு கூட தொண்டர்களை சந்தித்திருக்கிறேன். ஆனா பாருங்க இந்த காங்கிரசு தொண்டரை மட்டும் பார்த்ததேயில்லை. சக தோழர்களிடமும் அவ்வப்பொழுது கேட்பதுண்டு. அவர்களும் பார்த்ததேயில்லை என்பார்கள்!

என் வாழ்வில் இரண்டு காங்கிரசுகாரர்கள் கடந்து போயிருக்கிறார்கள். ஒருவர் என் அப்பா. பஞ்சாலை தொழிலாளியான அவர், தன் வாழ்வில் இறுதி ஆண்டுகளில் குடியில் காலம் கழித்தார். அதனால், அவ்வப்பொழுது வேலைக்கு போகமாட்டார். அங்கிருந்த காங்கிரசின் தொழிற்சங்கமான ஐஎன்டியூசி தான் அவ்வப்பொழுது வேலை போகாமல் காப்பாற்றியது. அதற்கு நன்றி பாராட்டும் விதமாக, வீட்டில் ஒரு இந்திரா படத்தை மாட்டி வைத்திருந்தார். மற்றபடி, காங்கிரசின் நடவடிக்கைகளை எப்பொழுதும், எவ்வளவு விமர்சனம் செய்தாலும், எதிர்த்து பேசமாட்டார். மெளனமாக இருப்பார்.

இன்னொரு காங்கிரசுகாரர். 1991ல் அப்பொழுதெல்லாம் ரெம்ப சின்ன பையன் நான். வீட்டு திண்ணையில் என் அப்பாவுடன் தூங்கிகொண்டிருந்தேன். திடீரென பெருங்குரலெடுத்து அழும் சத்தம் கேட்டு எழுந்தேன். பக்கத்து வீட்டில் குடியிருந்த 55 வயது பெரியவர் துக்கம் தாளாமல் விடிய விடிய அழுதார். என்னவென்று கேட்ட பொழுது ராஜீவ் கொல்லப்பட்ட விசயத்தை சொன்னார்கள்.

என் வாழ்வில் நான் சந்தித்த இந்த இரண்டு காங்கிரசுகாரர்களும் செத்துப்போய் 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. நிலைமை இப்படி இருக்கும் பொழுது, E.V.K.S இளங்கோவன் எந்த தைரியத்தில் ஆட்சியில் பங்கு கேட்கிறார்? சிரிப்பு சிரிப்பாக தான் வருகிறது! இவரே பங்கு கேட்கும் பொழுது, டாக்டர் அன்புமணிக்கு முதலமைச்சர் ஆசை வருவது எல்லாம் இயல்புதான் போல!
சாத்தியமில்லை தான். இருந்தாலும் சொல்லி வைக்கிறேன். உங்களில் யாராவது காங்கிரசு தொண்டரை பார்த்தால், என்னிடம் தெரிவியுங்கள். வாழ்வில் ஒருமுறையாவது நான் பார்த்துவிடவேண்டும் என ஆவலோடு இருக்கிறேன்.

 - குருத்து

Mar 2, 2015

டிராகுலா மகளின் காதல்!



மனிதர்களின் ரத்தம் குடிக்கிற, கொடூரமான ஆளாக நமக்கெல்லாம் அறிமுகமாயிருக்கிற டிராகுலா இந்த படத்தில் மனிதர்களைப் பார்த்து பயப்படுகிறவராக வருகிறார்.  அவளுக்கு ஒரு பெண்.  பொத்தி பொத்தி பாதுகாக்கிறார்.  தனது அன்பு மனைவியை ஈவிரக்கமின்றி மனிதர்கள் கொன்றதை (!) போல, தன் மகளையும் கொன்றுவிடக்கூடாது என பயப்படுகிறார்.

மனிதர்கள் வாசம் பட்டுவிடாத ஒரு தனிமையான காட்டிற்குள்  தன் மகளுக்காக ஒரு பிரம்மாண்டமான விடுதியைக் கட்டுகிறார்.  அதில், ஆண்டு தோறும் தன் மகளின் பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடுகிறார்.  இதற்காக தன் நூற்றுக்கணக்கான சொந்தங்களான மம்மி, ஓநாய்,  மான்ஸ்டர்கள் என எல்லோரையும் குடும்பத்துடன் வரவழைக்கிறார். சகல வசதிகளையும் செய்துகொடுக்கிறார்.

டிராகுலாவின் மகளுக்கோ இளவயது.  (அதிகமில்லை 118 தான்).  விடுதியில் எவ்வளவு பேர் இருந்தாலும், தனிமையை உணர்கிறாள்.  வெளிஉலகை காணவேண்டும் என துடிக்கிறாள்.

இந்த பிறந்தநாள் களேபேரத்தில் வழிதவறி வரும் ஒரு மனித இளைஞன் இந்த கூட்டத்தில் எதைச்சையாய் கலந்துவிட, இவன் தன் மகள் கண்ணில் பட்டுவிடக்கூடாதே என டிராகுலா அப்பா தவியாய் தவிக்கிறார். விதி (!) அவன் மகளின் கண்ணில்பட்டு, காதல் தீ பற்றிக்கொள்கிறது.  வழக்கமான அப்பா போல, மகளை நேசிக்கும் டிராகுலா அப்பாவும் காதலுக்கு தடைபோடுகிறார். இளைஞன் போய்விட, மகள் சோகத்தில் இருக்கிறாள். பிறகு சொந்தங்கள் எல்லாம் கட்டாயப்படுத்த, சில பல கலாட்டக்களுக்கு பிறகு காதலர்களை அப்பாவே சேர்த்து வைக்கிறார்.

எப்பொழுதும் நல்லவர்கள் பக்கமே கதை சொல்லாமல், ஒரு மாறுதலுக்காக எதிர்தரப்பில் நின்று கதை சொன்னால் எப்படி இருக்கும்? இந்த கதை அப்படிப்பட்டது தான்.  ஏற்கனவே The others என ஒரு அமானுஷ்ய படம் இதே வகையறா தான்!  நன்றாக இருந்தது.

துவக்கம் முதல் இறுதி வரை நல்ல கலகலப்பாக படம் போகிறது.  சொந்தங்கள் செய்யும் சேட்டைகள், டிராகுலா அப்பா இளைஞனை மறைப்பதற்கு செய்யும் செயல்கள் என நல்ல கலகலப்பு.

மக்களுக்கு “டிராகுலா ரத்தம் குடிக்கும்” என்பதை தவிர வேறு என்ன தெரியும்?  மனித ரத்தம் இருப்பதிலேயே மோசமானது தெரியுமா என டிராகுலா ஒரு இடத்தில் கேட்கும் பொழுது, சிரிப்பாக இருக்கும்.

Hotel Transylvnia 2012ல் வெளிவந்த குழந்தைகளுக்கான படம். படம் நல்ல வசூல் செய்துவிட்டது போல! இரண்டாவது பாகத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.