Feb 2, 2016

நினைவோடை (inside out) ஒரு பார்வை!



அம்மா, அப்பா, பொண்ணு என அமெரிக்க நியூக்கிளியர் குடும்பம். அந்த பொண்ணுக்கு 11 வயது ஆகும் பொழுது பொருளாதார பிரச்சனையில் ஊரைவிட்டு, புதிய மாநிலத்திற்கு நகர்கிறார்கள்.  புதிய இடம், புதிய சூழல், நண்பர்களை இழந்த சோகம் என மிகவும் கவலைக்குள்ளாகிறாள். ஒரு சமயத்தில் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து கிளம்புகிறாள். மீண்டும் எப்படி பெற்றோரை வந்தடைகிறாள் என்பது கதை!

இந்த சாதாரண கதையை எப்படி சுவாரசியப்படுத்துகிறார்கள் என்றால் அந்த பெண்ணின் மூளைக்குள் சந்தோசம், துக்கம், கோபம், வெறுப்பு, பயம் என உணர்வுகளில் முக்கியமான ஐந்துக்கு உருவம் கொடுத்திருக்கிறார்கள்.  இந்த ஐவரும் மூளைக்குள் அடித்து பிடித்து அந்த பெண்ணின் உணர்வுகளை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை ஒரு வண்ணமயமான உலகத்தை உருவாக்கி அருமையான கற்பனையுடனும், நகைச்சுவையுடனும் சொல்லியிருக்கிறார்கள்.
குழந்தைகளோடு பெரியவர்களும் பார்க்கவேண்டிய படம்.  2015ல் ஜூனில் வெளிவந்து, இப்பொழுது சில பிரிவுகளில் ஆஸ்காருக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

சந்தோசமான உணர்வுகள் கூட நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவதில்லை.  ஆனால், காயம்பட்ட, சோக உணர்வுகள் சட்டென்று மேலெழும்பி வந்து, துக்கத்தில் ஆழ்த்திவிடுகின்றன.  சிலரை பார்க்கும் பொழுது, மீண்டும் மீண்டும் வாழ்வில் நடந்த, நடக்கிற அழுகாச்சி டேப்பை மனதில் சுழலவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

படம் தந்த பாடம் இது தான்.  சந்தோசமான தருணங்களை எல்லாம், கவனமாக சேகரிக்க வேண்டும். நாட்குறிப்பில் பதியுங்கள். புகைப்படங்களை எடுத்து, ஆல்பமாய் தயாரித்து வையுங்கள். பிளாக் ஒன்றை உருவாக்கிக்கொள்ளுங்கள். யாருக்கு எது சாத்தியமோ அதை செய்து கொள்ளலாம்.  நானோ, எனது பொண்ணோ கொஞ்சம் டல்லாக இருந்தால், நாங்கள் சுற்றுலா போய்வந்த ஆல்பங்களை ஒரு புரட்டு புரட்டினால் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்!

No comments: