Dec 13, 2013

பிறந்த நாட்டுக்குக் கண்ணியமாக அழைத்துச் செல்வேன்!

ஆகஸ்டு, 9, 2002. அன்று தென்னாப்பிரிக்கப் பெண்கள் தினம். முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் முகத்தில் நீண்ட நாட்களாகக் காணப்பட்ட இறுக்கம் அன்று சற்றுத் தளர்ந்திருந்தது. பிரான்ஸ் அரசுடன் நடத்திவந்த போராட்டம் அன்று முடிவுக்கு வந்திருந்ததே அவரது நிம்மதிப் பெருமூச்சுக்குக் காரணம். நிறவெறி, இனவெறி, ஐரோப்பிய வெள்ளைத் திமிர், ஆணாதிக்கம் எனப்பல கொடுமைகளுக்கு 167 ஆண்டுகளுக்கு முன்னர் ஆளாகி, இப்படியும் நடக்குமா என்ற அளவுக்கு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டு, சிதைக்கப்பட்ட 25 வயது கருப்பினப் பெண்ணின் உடலின் எஞ்சிய பாகங்கள் மீட்கப்பட்டு, அன்றுதான் கிழக்கு கேப் நகரின் காம்டூஸ் ஆற்றங்கரையில் அரசு மரியாதையுடன் அடக்கம்செய்யப்பட்டது.

ஆப்பிரிக்காவில் உள்ள கிழக்கு கேப் பகுதியில் காம்டூஸ் ஆற்றங்கரை ஓரம் உள்ள ஒரு கிராமத்தில் 1789-ல் பிறந்தவர் சாரா பார்ட்மன். 

பிரிட்டிஷ்காரர்களால் கருப்பினத்தவர்கள் அடிமையாக்கப்பட்டு, நிறவெறிக்கு ஆளாக்கப்பட்டதுடன், அந்த இனத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டார்கள். தென்னாப்பிரிக்கப் பழங்குடி இனமான கோய்ஸன் என்ற இனத்தைச் சேர்ந்த சாரா, சிறு வயது முதல் கடுமையான உடலுழைப்புக்கு ஆட்படுத்தப்பட்டார். அவருக்கு 18 வயது இருக்கும்போது தென்னாப்பிரிக்கா வந்த இங்கிலாந்து கப்பலின் மருத்துவர் வில்லியம் டன்லப்பின் கண்களில் படுகிறார். 

வழக்கத்துக்கு மாறான உடல் அமைப்பைக் கொண்ட சாராவைப் பார்த்ததும் அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி வேலைக்காக இங்கிலாந்துக்குக் கப்பலில் அழைத்துச் செல்கிறார். அங்கே, சொன்னபடி அவர் நடந்து கொள்ளவில்லை. சாராவை ஆடையின்றிக் காட்சிப்பொருளாக்கி, ஊர் ஊராகக் கொண்டுசென்று கண்காட்சி நடத்திப் பணம் சம்பாதிக்கிறார். சாராவை ‘பூதாகரமான’பெண் என்று அவர் விளம்பரம் செய்தார். சாராவைப் பார்க்க மக்கள் குவிந்தனர். ஈவிரக்கம் இல்லாமல் அவள் உடலைத் தீண்டிப்பார்த்தார்கள். 

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் லண்டனிலிருந்து அவர் பிரான்ஸுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கும் காட்சிப் பொருளாக்கப்பட்டார். பிரான்ஸின் நகரங்கள் அனைத்துக்கும் கொண்டு செல்லப்பட்டார். இரக்கமற்றவர்கள் அவளைப் பாலியல் தொழிலிலும் தள்ளினார்கள். கடுமையான பாலியல் நோயின் விளைவால் தனது 25-வது வயதில் (1815-ல்) சாரா மரணமடைந்தார்.

சாரா இறந்த பிறகும் அவரது உடல் முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லை. ஜார்ஜியஸ் குய்வர் என்ற அறிவியலாளர் சாரா உடலமைப்பின் மீது ‘ஆர்வம்’கொண்டு அவர் உடலை ஆராய்ச்சி செய்ய விரும்பினார். பிளாஸ்டர் காஸ்ட் முறையில் பொம்மைபோல வடித்தார். பிறகு, அவரது உடலிலிருந்து மூளை, அந்தரங்க பாகங்கள் போன்றவற்றை எடுத்து பாரிஸ் நகரில் உள்ள மியூசியத்தில் காட்சிக்கு வைத்தார்.

சாரா இறந்த பிறகு, ஏறக்குறைய 160 ஆண்டுகள் அவரது உடல் உறுப்புகள் காட்சிப்பொருள்களாக இருந்தன. பலத்த எதிர்ப்பின் விளைவாக 1974-ம் ஆண்டில் பொதுமக்கள் பார்வைக்குத் தடை விதிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்காவின் அதிபராக ஆன நெல்சன் மண்டேலா, சாராவின் உடல் கண்ணியமான முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் உடலின் எஞ்சிய பகுதிகளைத் தரும்படி 1994-ல் பிரான்ஸிடம் கோரிக்கை வைத்தார். 

ஆனால், தமது நாட்டுச் சட்டப்படி அவ்வாறு தர இயலாது என பிரான்ஸ் கூறியது. ஏனென்றால், காலனி ஆட்சியின்போது பல நாடுகளிலிருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட பாரம்பரியப் புதையல்கள் ஏராளமாக பிரான்ஸ் வசம் இருந்தன. எனவே, அவற்றையெல்லாம் அரசுடைமையாக்கி பிரான்ஸ், சட்டம் இயற்றியிருந்தது. மண்டேலா கோரியபடி சாராவின் எஞ்சிய உடல் பாகங்களைத் திரும்பக் கொடுத்தால், மற்ற நாடுகளும் தம் நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பாரம்பரியச் செல்வங்களைத் திரும்பக் கேட்கலாம் என்று அஞ்சிய பிரான்ஸ் தர மறுத்துவிட்டது. 

ஆனாலும் மண்டேலா விடாமல் போராடியதாலும், மனித உரிமை அமைப்புகளும் பெண்கள் அமைப்புகளும் மண்டேலாவுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்ததாலும் பிரான்ஸுக்கு நெருக்கடி அதிகரித்தது. குறிப்பாக, கோய்ஸன் இனக் கவிஞரும், பெண் உரிமைச் செயல்பாட்டாளருமான டயானா ஃபெர்ரஸ் சாரா பார்ட்மன் குறித்து 1988-ல் எழுதிய ‘பிறந்த நாட்டுக்குக் கண்ணியமாக அழைத்துச் செல்வேன்’என்ற உருக்கமான கவிதை மனித உரிமையாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவைத் திரட்டியது. அதனால், தென்னாப்பிரிக்கக் கோரிக்கைக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து, புதிய சட்டம் இயற்றி பிரான்ஸ் அனுமதியளித்தது.

 சாராவின் எஞ்சிய உடல் பாகங்கள் 2002-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா வந்து சேர்ந்தது. அந்நாட்டின் பெண்கள் தினமான ஆகஸ்டு 9 அன்று அவரது எஞ்சிய உடல் பாகங்கள் அடக்கம் செய்யப்பட்டன. அந்தக் கல்லறை தேசியச் சின்னம் என்று மண்டேலா அன்றே அறிவித்தார். ஒரு மனித ஆயுட்காலத்தையும் கடந்து அவமதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடல் இனியாவது அமைதியாக உறங்கட்டும்.

பா.ஜீவசுந்தரி,
எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர்,
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

Nov 28, 2013

சொர்ணவல்லி மிஸ் - ஒரு நாளும் கோவித்ததில்லை!

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் 4 – அமிர்தா
டந்த இரண்டு நாட்களில், சொர்ணவல்லி மிஸ் பற்றிய நினைவுகளில் சில வருடங்களை எளிதாய் பின்னோக்கி போய்விட்டேன். பள்ளி முடிந்து நானும், என் தோழி காயத்ரியும் சொர்ணவல்லி மிஸ்ஸிற்காக வழக்கமாய் காத்திருப்போம். அவர் வந்ததும் அவருடன் உற்சாகமாய் கிளம்புவோம். பள்ளியிலிருந்து வீட்டிற்குமான இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை மிஸ்ஸை கேள்விகளால் துளைத்தெடுப்போம். கொஞ்சம் கூட சளைக்காமல் எங்களுக்கு பதிலளித்துக்கொண்டே வருவார். தெரியாத கேள்விகளுக்கு தெரியாது என்று சொல்லிவிடுவார். அந்த கேள்வியை நாங்களே அப்பொழுதே மறந்து போயிருப்போம். ஆனால், மிஸ்ஸோ அது குறித்து தேடிப் படித்து, அடுத்து வரும் நாட்களில் கேள்வியை நினைவுபடுத்தி, பதிலும் சொல்வார்.
ஆசிரியை
“பள்ளிகளில் ஒவ்வொரு மாணவியைப் பற்றிய குடும்ப சூழ்நிலை, தனித்திறன் குறித்தும் அறிந்து வைத்திருப்பார்.”
அவரை வீட்டில் விட்டு விட்டு, நேரே எங்கள் வீட்டுக்குப் போய் தலையை காட்டி விட்டு, நேரே புத்தகப் பையுடன் மிஸ் வீட்டிற்கே டியூஷனுக்காக போய் விடுவோம். எங்களுடன் 10 பேராவது அவர் வீட்டில் படிப்பார்கள். அதற்காக கட்டணம் எதுவும் கேட்க மாட்டார். ஏன் எனக் கேட்டால், பிள்ளைகள் வசதியில்லாமல் சிரமப்படக் கூடியவர்கள். அவர்களிடம் பணம் வாங்க மனம் வருவதில்லை என்பார். பாடத்தில் சந்தேகம் இருப்பவர்கள் யார் வேண்டுமென்றாலும் வீட்டிற்கு வந்து படிக்கலாம் என்பார். படிக்கிற பிள்ளைகள் எல்லோருக்கும் மணக்க மணக்க அருமையான காபி தருவார்.
இதில் குறிப்பிடத்தக்க முக்கிய விசயம் சொர்ணவல்லி மிஸ் எங்களுக்கு வகுப்பாசிரியர் கிடையாது. அதில் எங்களுக்கெல்லாம் மிகப் பெரிய வருத்தம். பள்ளியில் செஞ்சிலுவை சங்க வகுப்பு ஆசிரியர் அவர். பிடித்த ஆசிரியர் சொல்லித் தருவதால் என்னவோ, சில மனதில் ஆழமாய் பதிந்துவிடுகிறது. இன்றைக்கும் போகிற போக்கில் குப்பையை எங்கும் என்னால் போடமுடியாது. உரிய இடத்தில் தான் போடுகிறேன்.
அது பெண்கள் பள்ளி. பள்ளிகளில் ஒவ்வொரு மாணவியைப் பற்றிய குடும்ப சூழ்நிலை, தனித்திறன் குறித்தும் அறிந்து வைத்திருப்பார். பள்ளியிலும், சுற்று வட்டார பள்ளிகளிலும் பேச்சுப்போட்டி, நடனப்போட்டி, யோகாசனப் போட்டி, ஓவியப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி என எங்கு நடந்தாலும், மாணவிகளை சேரச்சொல்லி உற்சாகப்படுத்தி, கலந்து கொள்ள வைப்பார். இப்படி தொடர்ச்சியாய் கலந்துகொண்டு பல மாணவிகள் ஜெயித்து, பள்ளியும் பிரபலமானது. என்னிடம் உள்ள நிறைய சான்றிதழ்கள் எல்லாம் சொர்ணவல்லி மிஸ்ஸை தான் நினைவுப்படுத்துகின்றன.
ஆசிரியர்கள் பள்ளியிலிருந்து மாணவிகளை சுற்றுலா அழைத்துபோவதில் சில நடைமுறைச் சிக்கல்களை, சிரமங்களை பெரிய பாரமாய் நினைத்துக்கொண்டு எங்கும் அழைத்துப்போவதேயில்லை. சொர்ணவல்லி மிஸ் சுற்றுலாவின் முக்கியத்துவம் உணர்ந்து முன்முயற்சியுடன் ஏற்பாடு செய்தார். அப்படி ஜாலியாய் சென்று வந்த சுற்றுலாக்கள் இன்றைக்கு நினைத்தாலும் மறக்க முடியாதவை.
சொர்ணவல்லி மிஸ் யாரையும் அடிக்க மாட்டார். கோவித்துக் கொள்ள மாட்டார். கொஞ்சம் டல்லாய் இருக்கும் மாணவர்களிடம் கூடுதல் அக்கறை எடுத்து படிக்க வைப்பார். சொர்ணவல்லி மிஸ் என்றாலே மாணவர்களுக்கு அவ்வளவு பிடிக்கும். ஆசிரியர்கள் ஓய்வறையில் சொர்ணவல்லி மிஸ்ஸிடம் மட்டும் சந்தேகம் கேட்க என எப்பொழுதும் 5 அல்லது 6 பேர் அவரை சுற்றி இருந்து கொண்டே இருப்பார்கள்.
ஆசிரியர் என்றாலே படிப்பதை நிறுத்தியவர்களாகத் தான் பலரும் இருக்கிறார்கள். சொர்ணவல்லி மிஸ் நாங்கள் இருந்த பகுதியில் உள்ள எல்லா நூலகங்களிலும் உறுப்பினர். நான்கு நாட்களுக்கு ஒருமுறை நூலகங்களுக்கு புத்தகம் எடுத்து வருவார். எனது வாசிப்பு பழக்கம் கூட அவரிடமிருந்து துவங்கியது தான்.
அந்த பள்ளி அந்த பகுதியிலேயே முதலில் துவங்கிய உயர்நிலைப் பள்ளி. அரசு உதவி பெறும் பள்ளி. பெரும்பாலான ஆசிரியர்கள் வயதானவர்கள். சிடுமூஞ்சி ஆசிரியர்கள், கடனுக்கு வகுப்பு எடுப்பவர்கள் என பலரும் இருக்கிற வழக்கமான பள்ளிகளில் ஒன்றாக தான் பல காலம் இயங்கி வந்தது. சொர்ணவல்லி மிஸ்சும், சித்ரா மிஸ்சும் தான் இளவயது ஆசிரியர்கள். அதனால் நெருக்கமாக இருப்பார்கள். தலைமை ஆசிரியர் பள்ளியில் ஆண்டு விழாவோ, வேறு எந்த வேலை என்றாலும் சொர்ணவல்லி மிஸ்சை அழைத்துதான் செய்யச் சொல்வார். சொர்ணவல்லி மிஸ்ஸிற்கு மாணவர்களிடம், தலைமை ஆசிரியரிடம் இருக்கும் செல்வாக்கை பார்த்து, பல ஆசிரியர்கள் பொறாமையில் புறம் பேசினார்கள். சில இடைஞ்சல்களைக் கூட செய்தார்கள். இதையெல்லாம் தெரிந்தே அவர்களிடம் சிநேகமாகவும், பல உதவிகள் செய்யக் கூடியவராகவும் இருந்தார். நாளடைவில் அவர்களையும் கவர்ந்திருந்தார். சித்ரா மிஸ்சும் கூட வழக்கமான சிடுமூஞ்சி ஆசிரியராகத் தான் துவக்கத்தில் இருந்தார். சொர்ணவல்லி மிஸ்ஸிடம் இருந்த நட்பால், அவரும் ஒரு நல்ல ஆசிரியராக மாறத் துவங்கியிருந்தார்.
மாணவியர்
ஆசிரியர்கள் ஓய்வறையில் சொர்ணவல்லி மிஸ்ஸிடம் மட்டும் சந்தேகம் கேட்க என எப்பொழுதும் 5 அல்லது 6 பேர் அவரை சுற்றி இருந்து கொண்டே இருப்பார்கள்.
மாணவர்களிடம் அவர்களுடைய குறைகளை சுட்டிக்காட்டும் விதமே தனி. தேர்வுத் தாளை அடித்தல் திருத்தலோடு எழுதும் என்னிடம், ஒரு அடித்தல், திருத்தல் இல்லாமல், குண்டு குண்டாக எழுதும் ஒரு பெண்ணின் தாளை காட்டி “இது நல்லா இருக்குல்ல!” என்பார். ‘இது மாதிரி நீயும் எழுது” என்று கூட சொல்ல மாட்டார். குப்பைகளை கண்ட இடத்தில் போடாதே என அறிவுரை எல்லாம் சொல்ல மாட்டார். அவரே இயல்பாக செய்வார். எந்த காரியம் செய்தாலும் திருத்தமாக செய்வார். அவர் தான் மாணவிகளாகிய எங்களுக்கு முன்மாதிரி.
எங்கள் குடும்பத்தில் ஒருவராக சில மாதங்களில் மாறியிருந்தார். பெண் பிள்ளை என்பதால் எங்கள் வீட்டில் எங்கேயும் வெளியே விட மாட்டார்கள். சொர்ணவல்லி மிஸ் வீட்டிற்கு என்றால் எந்த மறுப்பும் சொல்ல மாட்டார்கள். வெளியூருக்கு அழைத்துச் செல்ல வேண்டி இருந்தால், அவர் வந்து நான் பார்த்துக் கொள்கிறேன் அனுப்பி வையுங்கள் என்றால், உடனே ஏற்றுக் கொள்வார்கள். அவர் மீது அவ்வளவு மரியாதை. அந்த வயதில் அழகு பற்றிய கருத்து ஆக்கிரமித்த பொழுது, மனிதர்களை நேசிப்பது; உதவுவது தான் அழகு என சொன்னது இன்றைக்கு வரைக்கும் நினைவில் நிற்கிறது.
தன்னிடம் படித்த மாணவிக்கு திருமணம் என்றால், தன்னை மதித்து திருமண பத்திரிக்கை தந்தால் தான் போக வேண்டும் என்ற ஈகோ இல்லாமல் யார் மூலமாக கேள்விப்பட்டாலே திருமணத்தில் கலந்துகொள்வார். கேட்டால், யாராவது தரக் கூடாது என நினைப்பார்களா! அதிகமான வேலைகளில் மறந்திருப்பார்கள் என்பார். என்னுடைய அக்கா திருமணம் சென்னையிலிருந்து 500 கிமீ தள்ளி ஒரு ஊரில் நடந்த பொழுதும், தவறாமல் கலந்து கொண்டார்.
இடைக்காலத்தில் ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக ஓர் ஆண்டு வேலை செய்தேன். ஆசிரியராக வேலை செய்த பொழுது, என் நடவடிக்கைகளை இப்பொழுது அசை போடும் பொழுது, சொர்ணவல்லி மிஸ்ஸை போல தான் நடக்க முயன்றிருக்கிறேன் என்பதை உணரமுடிகிறது. அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. சொர்ணவல்லி மிஸ் எவ்வளவு கடுமையாக உழைத்திருப்பார் என்பதையும் உணரமுடிந்தது. அவர் ஆசிரியர் பணியை மிகவும் விரும்பி செய்ததை இப்பொழுது உணர்கிறேன்.
பள்ளி துவங்கி, முதுநிலை படிப்பு வரை பல ஆசிரியர்களை கடந்து வந்திருந்தாலும், சொர்ணவல்லி மிஸ் தான் இன்றைக்கும் நினைவில் நிற்கிறார். இப்பொழுதும் தூங்குவதற்கு முன்பு, மாதத்தில் இருமுறையாவது சொர்ணவல்லி மிஸ்ஸைப் பற்றி என் பிள்ளைக்கு நினைவுபடுத்துகிறேன்.
வழமையான பள்ளியாக, கெட்டித்தட்டிப் போன ஒரு பள்ளியின் அகத்தையும், புறத்தையும் சில ஆண்டுகளில் மாற்றியமைத்தார். ’சாட்டை’ படம் பார்க்கும் பொழுது தயாளன் ஆசிரியர் சொர்ணவல்லி மிஸ்ஸாக தான் எனக்கு தெரிந்தார். ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியராலேயே இவ்வளவு செய்யமுடியும் என்றால், நாடு முழுவதும் பள்ளிகளில் சொர்ணவல்லி மிஸ் போல பரவியிருந்தார்கள் என்றால் எவ்வளவு அருமையான சமுதாயமாக மலரும் என நினைக்கையில் பிரமிப்பாக இருக்கிறது.
சொர்ணவல்லி மிஸ் துவங்கி வைத்த தேடுதலில் தான், தொடர்ச்சியாக பயணித்து சமூக மாற்றத்திற்கான பணியில் பெண்கள் விடுதலை முன்னணியை கண்டடைந்து வேலை செய்கிறேன். இந்த வயதில் நிதானித்து தொகுத்து பார்க்கும் பொழுது, சொர்ணவல்லி மிஸ் என் வாழ்வில் அகத்திலும், புறத்திலும் நிறைய நல்ல தாக்கத்தை ஆழமாய் என்னுள் பதிந்திருக்கிறார் என உணர்கிறேன்.. சொர்ணவல்லி மிஸ்ஸிற்கு எந்த காலத்திலும் இதுவரை நன்றி சொன்னதாக நினைவு இல்லை. இப்பொழுது அவருக்கு இந்த நாளில் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தோழமையுடன்,
அமிர்தா,
பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை.

Aug 17, 2013

ஏழு கடல் ஏழு மலை தாண்டி!

உள்ளே நுழைந்ததும் குடும்பமே முகமலர்ச்சியோடு வரவேற்றது. தம்பி தண்ணீர் தந்தார்."சாப்பிடும்மா" என்றார் அம்மா. "என் பெரிய பொண்ணு போல இருக்கம்மா! எப்ப வேணுமில்லாமலும் வா! போ! இது உன்வீடு போல! ஆனால் என் சின்னப் பொண்ணை மட்டும் அமைப்பு வேலைகளுக்கு அனுப்ப சொல்லாதே!' என்றார் கனிவோடு அப்பா!

கணவர் குடிகாரர். பொறுப்பாக எந்த வேலையையும் செயவதில்லை. சமைத்து இரண்டு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி பத்து கி.மீ. பாரிசுக்கு போய் கடுமையான வேலை பார்த்து இரவு திரும்பி, சமைத்து தூங்கும் பொழுது இரவு 11 மணியை தாண்டிவிடும்! துவைப்பதிலும், வீட்டை சுத்தப்படுத்துவதிலும் ஞாயிறுகள் கட்ந்துபோகும். கடுமையான உழைப்பாளி, தைரியமானவர், அமைப்பின் வேலை செய்ய ஆர்வம் இருந்தாலும், சூழல் இடம் தருவதில்லை.

திருமணம் முடிந்தவுடன் அணுகினால், ஓரிரு மாதங்களில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று, கொஞ்சம் வளர்த்து, வேலை செய்ய துவங்க 4 வருடங்கள் ஓடிவிடும். 4 வருடம் தான் இரண்டாவது குழந்தைக்கும் சரியான இடைவெளி.  மீண்டும் சுழற்சி துவங்கிவிடும்!

பெரும்பாலான வீடுகளில் அமைப்பில் இயங்குவதற்கு ஆர்வம் உள்ள பெண்ணுக்கு, அம்மா/அப்பா/அண்ணன்/தம்பி/கணவன் தனியாகவோ அல்லது கூட்டாகவோ அனுப்ப தடைபோடுகிறார்கள். சில சமயங்களில் காதலன் கூட‌ உரிமையுடன் தடைபோடுகிறார்.

அமைப்புத் தோழர்கள் அமைப்பில் வேலை செய்ய வீட்டில் உள்ள பெண்களுக்கு உற்சாகம் ஊட்டுவார்கள். அவர்களில் சிலருக்கோ சுத்தமாக அரசியல், அமைப்பு ஆர்வம் இருக்காது.

வாக்குரசியல் நடத்தும் பல கட்சிகள் போராட்டங்களுக்கு வர பணம் தருகிறாரகள். பலர் சுய உதவி குழுக்களில் பணம் கொடுப்பதும், வட்டி வாங்குவதுமாய் மும்முரமாக ஈடுபடுகிறார்கள். அமைப்பு, அரசியல் பேசினால், "வருகிறேன். எவ்வளவு தருகிறீர்கள்? என கேள்வி எழுப்புகிறார்கள். "எந்த பலனும் இல்லாமலா இவ்வளவு சிரமப்படுகிறீர்கள்?" என நம் நேர்மையின் மீது சந்தேக்கிறார்கள்.

சமூக அவலம் அறிந்த நடுத்தர வர்க்க பெண்களோ, புரட்சிகர அரசியல், அமைப்பு பற்றி தெரிந்துகொண்டு, 'இழப்பதற்கு' தங்களுக்கு ஒரு வாழ்க்கை இருப்பதால், வேலை செய்ய தயக்கம் கொள்கிறார்கள். 

ஆணை அரசியல்படுத்த வீட்டைவிட்டு அழைத்துவந்தால் போதுமானதாக இருக்கிறது. பெண்ணை அரசியல்படுத்த குடும்பதோடு ஐக்கியமாகி குடும்பத்தையே  அரசியல்படுத்த வேண்டியிருக்கிறது.

குடும்பம், குழந்தை பராமரிப்பு, ஆணாதிக்கம், பாதுகாப்பான வாழ்க்கை என எத்தனையோ விசயங்கள் பெண்களை பின்னுக்கு இழுக்கிறது.

இருப்பினும், எல்லாவற்றையும் தாண்டி பிற்போக்கு அரசும், மறுகாலனியாதிக்க கொள்கைகளும் சமூக கொடுமைகளை பெருக்கி வைத்துள்ளன. நாம் அவற்றையெல்லாம் விளக்குவதற்கு முன்னால், அவர்கள் அந்த கொடுமைகளை நித்தமும் அனுவிப்பதால் அவர்களே பட்டியலிடுகிறார்கள். களத்தில் போராட நம்மோடு கைக்கோர்க்கிறார்கள்.

அதனால் தான், குடும்பங்களை சீரழிக்கிற, "டாஸ்மார்க் கடையை  இழுத்துமூடுவோம்"   என்ற பெண்கள் விடுதலை முன்னணியின் சமீபத்திய  போராட்டத்தில் கைக்குழந்தையோடும், சிறுவர், சிறுமிகளோடும் 80 பெண்களோடு அரசை எதிர்த்து எழுச்சியுடன் முழக்கமிட்டு கொண்டிருந்தோம்.

Jul 31, 2013

எனது பார்வையில் வினவு!

வினவு குழுவினருக்கு, எனது தோழமை வணக்கங்கள். ஆறாம் ஆண்டு வாழ்த்துக்கள்.பல வாசகர்கள் வெளிப்படுத்திய உணர்வுகள் தான் என்னையும் எழுத தூண்டின. அவர்களுக்கு எனது நன்றிகள்.

புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் எனக்கு அறிமுகமான பொழுது அதன் காத்திரமான கட்டுரைகள் எனக்கு நல்ல சமூக புரிதலையும், அரசியலையும் உருவாக்கின. ஆனால், பல நடைமுறை விசயங்கள் குறித்து அறிய வேண்டுமென்றால், ஒரு மாதம் காத்திருக்க வேண்டும் என்பது பெரிய குறையாக இருந்தது. அதன் பக்க வரம்புக்குள் அடைபடாத பொழுது, பல விசயங்கள் விடுபட்டும் போயின. வினவு அந்த குறையை தீர்த்தது. தினந்தினம் எழும் பல நடப்பு நிகழ்வுகள் குறித்து அரசியல் புரிதலை மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள வசதியாய் இருக்கிறது. நாளும் எனது அரசியல் அறிவை வளர்த்துகொள்ள வினவு உதவுகிறது.

 இணைய வெளியில் பெண்களின் செயல்பாடு ஒப்பீட்டளவில் குறைவு. அப்படி இயங்கும் பெண்கள் மீது ஆணாதிக்க தாக்குதல் நடக்கும் பொழுது வினவு தலையிட்டு அவர்களுக்கு ஆதரவாக உடன் நின்று இருக்கிறது. வினவின் பங்களிப்பில் இது முக்கியமானது என கருதுகிறேன்.

நாம் பலரையும் சந்தித்து பேசும் பொழுது, நாம் எங்கோயோ ஒரு லெவலில் நின்று பேசுகிறோம். மக்கள் எங்கேயோ இருக்கிறார்கள். அதனால், நாம் எளிமையாக, பாலிஷாக பேசவேண்டும் என சிலர் சொல்லும் பொழுது, குழம்பி போயிருக்கிறேன். வினவு தனது கருத்துக்களை காத்திரமாக முன்வைத்து, இப்பொழுது எதிர்நிலையில் இருந்த பல வாசகர்களை வென்றெடுத்ததை பார்க்கும் பொழுது, எனக்கு இருந்த குழப்பம் நீங்கியுள்ளது. சமரச மற்றும், உண்மைகளை அழுத்தி சொல்லும் பொழுது அது நிச்சயம் ஜெயிக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்.

வினவு தளம் அரசியல், பொருளாதாரம், பண்பாடு என அனைத்து துறை சார்ந்த அளவில் கட்டுரைகள் வெளியிடுவது மிக சிறப்பு. நமக்கு எழும் எந்த கேள்வி என்றாலும், வினவில் கேட்டு ஒரு தெளிவை அடையலாம் என்ற நிலையை எட்டியிருக்கிறது.

பெண்கள் சம்பந்தபட்ட கட்டுரைகள், கதைகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகிறீர்கள். பெண்களுக்கென்று ஒரு பகுதி ஒதுக்கி அதில் கவனம் கொடுத்து தொடர் கட்டுரைகள் வெளியிடவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.