வினவு குழுவினருக்கு,
எனது தோழமை வணக்கங்கள். ஆறாம் ஆண்டு வாழ்த்துக்கள்.பல வாசகர்கள் வெளிப்படுத்திய உணர்வுகள் தான் என்னையும் எழுத தூண்டின. அவர்களுக்கு எனது நன்றிகள்.
புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் எனக்கு அறிமுகமான பொழுது அதன் காத்திரமான கட்டுரைகள் எனக்கு நல்ல சமூக புரிதலையும், அரசியலையும் உருவாக்கின. ஆனால், பல நடைமுறை விசயங்கள் குறித்து அறிய வேண்டுமென்றால், ஒரு மாதம் காத்திருக்க வேண்டும் என்பது பெரிய குறையாக இருந்தது. அதன் பக்க வரம்புக்குள் அடைபடாத பொழுது, பல விசயங்கள் விடுபட்டும் போயின. வினவு அந்த குறையை தீர்த்தது. தினந்தினம் எழும் பல நடப்பு நிகழ்வுகள் குறித்து அரசியல் புரிதலை மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள வசதியாய் இருக்கிறது. நாளும் எனது அரசியல் அறிவை வளர்த்துகொள்ள வினவு உதவுகிறது.
இணைய வெளியில் பெண்களின் செயல்பாடு ஒப்பீட்டளவில் குறைவு. அப்படி இயங்கும் பெண்கள் மீது ஆணாதிக்க தாக்குதல் நடக்கும் பொழுது வினவு தலையிட்டு அவர்களுக்கு ஆதரவாக உடன் நின்று இருக்கிறது. வினவின் பங்களிப்பில் இது முக்கியமானது என கருதுகிறேன்.
நாம் பலரையும் சந்தித்து பேசும் பொழுது, நாம் எங்கோயோ ஒரு லெவலில் நின்று பேசுகிறோம். மக்கள் எங்கேயோ இருக்கிறார்கள். அதனால், நாம் எளிமையாக, பாலிஷாக பேசவேண்டும் என சிலர் சொல்லும் பொழுது, குழம்பி போயிருக்கிறேன். வினவு தனது கருத்துக்களை காத்திரமாக முன்வைத்து, இப்பொழுது எதிர்நிலையில் இருந்த பல வாசகர்களை வென்றெடுத்ததை பார்க்கும் பொழுது, எனக்கு இருந்த குழப்பம் நீங்கியுள்ளது. சமரச மற்றும், உண்மைகளை அழுத்தி சொல்லும் பொழுது அது நிச்சயம் ஜெயிக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்.
வினவு தளம் அரசியல், பொருளாதாரம், பண்பாடு என அனைத்து துறை சார்ந்த அளவில் கட்டுரைகள் வெளியிடுவது மிக சிறப்பு. நமக்கு எழும் எந்த கேள்வி என்றாலும், வினவில் கேட்டு ஒரு தெளிவை அடையலாம் என்ற நிலையை எட்டியிருக்கிறது.
பெண்கள் சம்பந்தபட்ட கட்டுரைகள், கதைகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகிறீர்கள். பெண்களுக்கென்று ஒரு பகுதி ஒதுக்கி அதில் கவனம் கொடுத்து தொடர் கட்டுரைகள் வெளியிடவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.
No comments:
Post a Comment