Showing posts with label புரட்சிகர அமைப்பு செய்திகள். Show all posts
Showing posts with label புரட்சிகர அமைப்பு செய்திகள். Show all posts

Nov 24, 2015

ம.க.இ.கவின் அனைத்து பாடல்களும் அடங்கிய புதிய டிவிடி!

அசுரர்களின் குரல் கோவனுடையது....

புரட்சிகரப் பாடகர் கோவன் இதுவரை பாடிய பாடல்கள் அனைத்தையும் தொகுத்து இரு குறுந்தகடுகளாக வெளியிட்டிருக்கிது மக்கள் கலை இலக்கியக் கழகம். ‘அசுரகானம்’ என்னும் தலைப்பில் ஒரு தகடும், ‘ஊருக்கு ஊரு சாராயம்’ என்னும் தலைப்பில் இன்னொரு தகடுமாக வந்திருக்கிறது.

’இருண்ட காலம்’ ‘அசுரகானம்’ ’ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா?’ ’அடிமை சாசனம்’ ‘காவி இருள்’ என கடந்த கால் நூற்றாண்டுகால அரசியல், சமூக நிகழ்வுகளை ஒரு இயக்கமும், அதன் தெருப்பாடகனும் எப்படிக் கடந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள இந்த தொகுப்புகள் உதவும்...இசையை, மக்களை, அரசியலை நேசிக்கும் ஒவ்வொருவரும் அவசியம் வாங்க வேண்டிய தொகுப்புகள்....

வெளியீடு -
 மக்கள் கலை இலக்கியக் கழகம்,

தொடர்புக்கு :

கண்ணையன் ராமதாஸ்,
16,முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,அசோக் நகர், சென்னை -600083.
தொலைபேசி - 9941175876,
email - pukatn@gmail.com.

Sep 28, 2015

மதுவுக்கெதிராக போராடிய மாணவர்களின் சித்திரவதை நாட்கள்! வீடியோ!

மதுவுக்கு எதிராக பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் கல்லூரி அருகே இருந்த கடையை நொறுக்கினார்கள். கைது செய்யும் பொழுது காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தாக்கினார்கள். ஊடகங்கள் வழியே உலகமே பார்த்து காவல்துறையை காறித்துப்பியது!

கைது செய்து, நிராயதபாணியாக இருந்த மாணவர்களிடம், காவல்துறை வெறி அடங்காமல், சேத்துப்பட்டு காவல்நிலையத்திலும், சிறையிலும் சித்திரவதை செய்தது!

இதோ சம்பந்தபட்ட RSYF மாணவர்களே விளக்குகிறார்கள்! பாருங்கள்!

https://www.youtube.com/watch?v=60DN-n-cgog

சட்டமன்றத்தில் சாராயக்கடைகளை மூடமுடியாது! என திமிராக அறிவித்துள்ளார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். ’குடி’ மக்களை நேசிக்கும், ’திறமையான’ முதலமைச்சர், ரவுடிகளுடன் குலாவும், மக்கள் மீது மீது பாய்ந்து குதறும் காவல்துறை இருக்கும்வரை சாராயக்கடைகளை மூடமாட்டார்கள் தான்!

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் எங்கெல்லாம் மக்கள் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் எதிர்த்து நின்றார்களோ அங்கெல்லாம் இன்னும் அரசு சாராயக்கடையை திறக்கவில்லை. திறக்கமுடியவில்லை.

போராட்டங்கள் தான் தீர்வு! வேறு ஏதும் குறுக்குவழியில்லை!


Sep 12, 2015

டாஸ்மாக் எதிர்ப்பு போராளிகள் நீதிமன்றத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்!

 டாஸ்மாக் எதிர்ப்பு போராளிகள் சிறையிலிருந்து வெளியே கம்பீரமாய் முழக்கமிட்டு வந்துகொண்டிருக்கிறார்கள்!

38 நாட்கள் சிறையில் உறுதியாக இருந்து நீதிமன்றத்தின் யோக்கியதையையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்!

காட்சி 1

ஆக. 3ந்தேதி ஆயிரக்கணக்கான பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை அடித்துநொறுக்கினார்கள். சிதறி ஓடாமல், அரசை அம்பலப்படுத்தி முழக்கமிட்ட RSYF மாணவ தோழர்களை போலீசு தாக்கியது. ஊடகங்கள் வழியாக உலகமே பார்த்து போலீசை காறித்துப்பியது. வெறியுடன் காவல் நிலையத்திலும் தாக்கினார்கள். காயத்துடன் நின்ற மாணவர்களை பார்த்து ரிமாண்ட்டில் கையெழுத்திட்ட நீதிபதிக்கு எந்த பதைபதைப்பும் வரவில்லை. போலீசை கண்டிக்கவுமில்லை. போலீசை போலவே, மாணவர்களை “வா! போ” என ஒருமையில் அழைத்தார் நீதிபதி! நாம் கண்டித்தோம்.

காட்சி 2

சிறையில் நுழைந்ததும் நிராயுதபாணியான மாணவர்கள் போலீசால் தாக்கப்பட்டார்கள். அடுத்த நாளும் தாக்கப்பட்டார்கள். நாம் பதறிப் போய், மாணவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டுவா! என “ஆட்கொணர்வு” மனு தாக்கல் செய்தோம். அம்பலப்பட்டுவிடுவோம் என பயந்து, மாவட்ட நீதிபதி விசாரணை என நாடகமாடியது. எவ்வளவோ தகிடுத்தத்தங்கள் செய்தாலும் நீதிபதியும் வேறு வழியேயில்லாமல் அடித்தது உண்மை என அறிக்கை தாக்கல் செய்தார். இப்பொழுது விசாரணைக்கு எடுத்தால், அசிங்கப்பட்டுபோவோம் என நீதிமன்றம் ஜவ்வாய் இழுத்தடிக்கிறது!

காட்சி 3

பெண் மாணவிகளை சிறையில் உளவியல் ரீதியாக மிரட்டியது உளவுத்துறை ஆண் போலீசு. இதற்காகவும் “ஆட்கொணர்வு மனு” தாக்கல் செய்தோம். உளவுத்துறை ஆண் போலீசு சிறைக்கு போனது உண்மை. மாணவிகளை சந்திக்கவில்லை என கதைவிட்டது. பெண்கள் சிறையில் ஆணுக்கு என்ன வேலை? என்ற கேள்வியை நீதிமன்றம் கவனமாக தவிர்த்தது. “வீடியோ காட்சிகளை ஒப்படை” என்ற உத்தரவிற்கு, “கேமராவே அங்கு கிடையாது” என பசப்புகிறது!

காட்சி 4

பச்சைப்பா கல்லூரி மாணவர்கள் 15 நாட்கள் சிறை முடிந்து, போலீசு கேட்காமலேயே எழும்பூர் பெண் நீதிபதி இன்னொரு பதினைந்து நாள் நீடித்தார். நமது வழக்குரைஞர் காரணம் கேட்டால் பதிலே இல்லை. பாதிக்கப்பட்ட மாணவ தோழர்களே கேள்வி கேட்டார்கள். பேசக்கூடாது என்றார். உயர்நீதிமன்றத்தில் மீண்டும் பரிசீலிக்க கேட்டால், “நீடித்தது சரி தான்” என பதில் சொன்னது.

காட்சி 5

35 நாட்களுக்கு பிறகு பிணை கேட்டால், டெபாசிட் பணம், தொடர்ந்து கையெழுத்திடுவது, இரண்டு பேர் ஜாமீன் என பட்டியலிட்டது நீதிமன்றம். மாணவர்கள் பொதுநோக்கத்திற்காக போராடினார்கள். காவல் நிலையத்தில் வைத்து அடித்ததை, நீதிபதி பதிவு செய்திருக்கிறார். சிறையில் அடித்ததை மாவட்ட நீதிபதி பதிவு செய்துள்ளார். ஆகையால், இப்பொழுது போலீசும், சிறை போலீசும் தான் குற்றவாளிகள். அதற்காக நாங்கள் நீதியும், இழப்பீடும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். எந்த நிபந்தனையும் விதிக்ககூடாது என்றோம். ஒரு முதல் தகவலறிக்கைக்கு ரூ 50 கட்டலாமே! என கேட்டது. நாம் அதற்கும் மறுத்தபிறகு, மாணவர்களுக்கு நிபந்தனையின்றிம், நிர்வாகிகள் 4 பேருக்கு இரு வாரங்கள் சேத்துப்பட்டு காவல்நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என‌ பிணை தர பணிந்தது!

கவனியுங்கள். அரசின் அத்தனை ஒடுக்குமுறையையும் நீதிமன்றம் பச்சையாய் ஆதரித்து நிற்கிறது. இறுதியில் எந்தவித நிபந்தனையுமின்றி நீதிமன்றம் பணிந்து, பிணை தந்ததற்கு காரணங்கள்

தொடர்ச்சியான டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் போராட்டங்கள்!

மாணவர்களை நிபந்தனையுமின்றி விடுதலை செய்யவேண்டும்  என தொடர்ந்து நடைபெற்ற அனைத்து தரப்பு மக்களின் போராட்டங்கள்!

 சென்னை வழக்குரைஞர்கள் சங்கம் எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை
செய்யவேண்டும் என தீர்மானம் இயற்றியது!

சென்னை வழக்குரைஞர்கள் சங்க பிரதிநிதிகள், மூத்த வழக்குரைஞர்கள், பல வழக்குரைஞர்கள் உயர்நீதி மன்றத்தில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்!

அரசின் ஒடுக்குமுறையையும், நீதிபதிகளின் யோக்கியதையும் நாம் விமர்சனம் செய்து வெளியிட்ட பல ஆயிரம் பிரசுரங்கள் வழக்குரைஞர்கள் மத்தியில் விநியோகம் செய்தது!

இப்படி தொடர் போராட்டங்கள் செய்ததின் மூலம் தான் மாணவர்கள் இப்பொழுது பிணையில் வெளியேவந்திருக்கிறார்கள்!

உறுதியோடு போராடிய RSYF பச்சையப்பா கல்லூரி மாணவ தோழர்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

அரசு, நீதிமன்றம் எல்லாம் பெயரளவிலான ஜனநாயகத்தை கூட அனுமதிப்பதில்லை. பச்சையாய் அம்பலப்பட்டு நிற்கிறது.

போராட்டமின்றி வாழ்க்கையில்லை! போராடும் மக்களுக்கு நாம் என்றும் உறுதுணையாய் நிற்போம்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
9094666320

Sep 9, 2015

முன்பணம் கட்டுவதை தகர்த்தோம்! மக்களும், தோழர்களும் பிணையில் விடுதலை!


டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட“மக்கள் அதிகாரம்” அமைப்பைச் சேர்ந்த தோழர்களுக்கும், மக்களுக்கும் பிணை வழங்குவதற்கு நீதிபதி வைத்தியநாதன் விதித்த நிபந்தனைகள் குற்றவியல் நீதி வழங்கு நெறிகளுக்கே (criminal jurisprudence) எதிரானவை. பிணை தருவதற்கு மேலப்பாளையூர் விவசாயிகள் 10,000 ரூபாய் முன்பணம் (Deposit) கட்ட வேண்டுமென்றும், விருத்தாசலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவன் 50,000 ரூபாய் முன்பணம் கட்ட வேண்டுமென்றும், இந்தத் தொகையை புகார்தாரரான டாஸ்மாக் நிர்வாகத்திடம் இப்போதே கொடுத்துவிட வேண்டுமென்றும் உத்தரவிட்டிருந்தார் உயர்நீதி மன்ற நீதிபதி வைத்தியநாதன்.

குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றவாளிதானா என்பதும், இழப்பு என கூறப்படும் தொகை உண்மைதானா என்பதும் விசாரைணக்குப் பின்னர் தீர்ப்பில்தான் தெரியவரும். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நான்காண்டு சிறையும், 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு பத்து ரூபாய் கூட டெபாசிட் விதிக்காமல் பிணை தருகிறார் தலைமை நீதிபதி தத்து. 20,000 கோடி வரி ஏய்ப்பு செய்த நோக்கியா நிறுவனம் வெறும் 200 கோடியை டெபாசிட் செய்து விட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை வேலைநீக்கம் செய்து ஆலையை மூடுவதற்குத் தோதாக தீர்ப்பளிக்கிறார் நீதிபதி ராஜேந்திரன்.

ஆனால் சாராய பாட்டிலை உடைத்த குற்றம் நிரூபிக்கப் படுவதற்கு முன்னரே, அட்வான்சாக 50,000 ரூபாய் அபராதம் விதித்து ஒரு மாணவனுக்கு நீதி வழங்கப்படுகிறது. இது மனுநீதி அல்லாமல் வேறென்ன?
மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு போலீசு சொன்ன யோசனையை தான் நீதிமன்றமும் அப்படியே ஏற்று முன்பணம் கட்ட உத்தரவிட்டிருக்கிறது. முன்பணம் கட்டி வெளியே வந்தால், ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடும், இனி வருங்காலங்களிலும் இதையே அரசும், நீதிமன்றமும் கடைப்பிடிக்கும் என கருதி, சிறையில் உள்ள மக்கள் அதிகாரம் தோழர்களிடமும், மக்களிடமும் விவாதித்தோம். சிறையில் இருப்பது எங்களுக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. தொடர்ந்து போராடுங்கள் என நமக்கு தெரிவித்தார்கள்.

உடனடியாக நமது வழக்குரைஞர்கள் முன்பணத்தை ரத்து செய்ய சொல்லி வழக்கு தாக்கல் செய்தார்கள். மூத்த வழக்குரைஞர்களும் நமது கருத்துக்கு உடன்பட்டார்கள். நாம் சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தில் முன்வைத்ததும், சங்கமும் ”டாஸ்மாக் போராட்டம் நியாயமானது. கைதாகி ஒரு மாதம் ஆகியும் சிறையில் உள்ளவர்களை எவ்வித நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், உயர்நீதி மன்ற வளாகத்திலேயே நீதிமன்றத்தின் போக்கை கண்டிக்கும் விதமாக, திரளான வழக்குரைஞர்கள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

இப்படி தொடர் போராட்டத்தின் விளைவாக, நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது, மூத்த வழக்குரைஞர்கள் சங்கரசுப்பு, விஜயகுமார், செல்வராஜ் அவர்களும், நமது வழக்குரைஞர்களும், ஆதரவான வழக்குரைஞர்களும் ஒன்று சேர்ந்ததில், நீதிமன்றம் வேறுவழியின்றி பணிந்தது. கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்டுவதற்கு ஒரு முதல் தகவலறிக்கைக்கு (FIR) ரூ. 1000 பணம் கட்டவேண்டும் என கூறியிருக்கிறது! ஒரு மாதம் காலம் சிறையில் இருந்தாலும், உறுதியோடு இருந்த மக்களும், தோழர்களும், மற்றும் வழக்குரைஞர்களின் உழைப்பும், ஒத்துழைப்பும் தான் அரசின், நீதிமன்றன்றத்தின் ஒடுக்குமுறையை தகர்த்திருக்கிறது! இப்பொழுது மேலப்பாளையூர் மக்களோடு கைதான மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் இராஜூவும், விருத்தாச்சலம் மக்கள் அதிகாரம் தோழர்களும், கோவை மக்கள் அதிகாரம் தோழர்களும் பிணையில் விடுதலை ஆகிறார்கள்.

சிறையில் இருந்து மக்களையும், தோழர்களையும் வெளியில் கொண்டு வரும் முயற்சியில் பல மூத்த தோழர்களும், ஆதரவான வழக்குரைஞர்களும், உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கமும், நீதிமன்ற ஊழியர்களும் பல உதவிகளை செய்து, நம் தோள் கொடுத்து நின்றிருக்கிறார்கள். அனைவருக்கும் நமது நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.
வருகிற திங்கட்கிழமையன்று டாஸ்மாக் போராட்டத்தில் ஈடுபட்ட பச்சையப்பா கல்லூரி மாணவர்களின் பிணை வழக்கு வருகிறது! அதற்கான வேலைகளில் இப்பொழுது தயாராகி வருகிறோம்.


 மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
9094666320

05/09/2015

Aug 30, 2015

டாஸ்மாக் : பிணையை ஏற்கமுடியாது! உயர்நீதிமன்றமே! முன்பணத்தை ரத்து செய்


”முன்பணம் கட்டி பிணையை ஏற்கமுடியாது!
உயர்நீதிமன்றமே!
முன்பணம் கட்ட உத்தரவிட்டதை ரத்து செய்!”

டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பல பொய் வழக்குகளை போட்டு, தொடர்ந்து கீழமை நீதிமன்றங்களில் பிணை மறுத்தனர்.  நாம் தொடர்ச்சியாக உயர்நீதி மன்றத்தில் பிணைக்காக போராடி வந்தோம்.  கடந்த வெள்ளியன்று தலைக்கு ரூ. 5000 முன்பணம், மற்றும் இன்னுமொரு பிணை வழக்கில் நொறுக்கப்பட்ட அரசு சாராயத்தின் மதிப்பில் 50% முன்பணம் கட்டவேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

பல மாவட்டங்களில் உள்ள சிறைகளில் உள்ள தோழர்களிடம் முன்பணம் கட்ட சொல்லிய பிணை உத்தரவை தெரிவித்த பொழுது, “மக்களை காக்க வேண்டிய அரசு, சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்று, சீரழிக்கிறது. தினமும் பலரையும் கொன்று குவிக்கிறது!  சாராயத்தை தடுக்கவேண்டிய அரசின் வேலையை, நாங்கள் செய்துள்ளோம்.  ஆகையால், முன்பணம் கட்டி பிணை என்பதை ஏற்கமுடியாது.  முன்பணம் கட்டுவதை ரத்து செய்ய உயர்நீதி மன்றத்தில் போராடுங்கள்” என நம்மிடம் தெரிவித்துள்ளனர்.

ஆகையால், முன்பணம் கட்ட உத்தரவிட்டதை ரத்து செய்யக்கோரி, மீண்டும் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம். டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் போராட்டங்களை அரசு பலவிதத்திலும் சிந்தித்து, ஒடுக்கப் பார்க்கிறது. தோழர்கள் பல நாட்கள் சிறையில் இருந்தாலும், சிரமங்களை எதிர்கொண்டு, தங்களுடைய உறுதியால் அரசின் ஒடுக்குமுறையை ஒன்றுமில்லாமல் செய்கிறார்கள். அவர்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

கடந்த 3ந் தேதியன்று பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் துவங்கிய டாஸ்மாக் நொறுக்கிய போராட்டத்திலிருந்து, நமது வழக்குரைஞர்களும், நமக்கு ஆதரவான பல வழக்குரைஞர்களும் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து வழக்கு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகையால் வழக்குகளுக்காக நிறைய செலவுகள் செய்துகொண்டிருக்கிறோம்.

போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்த நீங்கள் நிதி அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Porkodi Vasudevan,
Bank of India,
A/c No: 800010100026977
Chennai Main Branch,
IFSC Code: BKID0008000
MICR Code: 600013009

நீங்கள் கொடுக்கும் தொகை எவ்வளவாக இருந்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சி தான்! இன்னும் கொஞ்சம் உற்சாகமாக வழக்குகளை முன்னெடுத்து செல்வோம்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
90946 66320

குடி கெடுக்கும் டாஸ்மாக்கை உடைத்தவர்களுக்கு முன்பணத்துடன் பிணை!

டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் போராட்டங்களுக்கு நாம் நடத்திய சட்டப் போராட்டத்தில்….

முன்பணம் கட்டினால் பிணை!

குடி கெடுக்கும் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டும், அடித்து நொறுக்கிய விருத்தாச்சலம் பகுதி வாழ்மக்களுக்கும், மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்த மக்களுக்கும், கோவை பகுதியை சேர்ந்த மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களுக்கும் தலைக்கு ரூ. 5000 எனவும், ஒரு வழக்கில் அடித்து நொறுக்கிய சரக்கு மதிப்பில் 50% என முன்பணம் கட்ட சொல்லி, பிணை தந்திருக்கிறது சென்னை உயர்நீதி மன்றம்!

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரான தோழர் இராஜூ மீது பல பொய் கேசுகளை போட்டு, தடுப்பு காவல் சட்டமான குண்டாஸ் வழக்கில் போட முனைந்தனர். நாம் நீதிமன்றத்தில், மணல் மாபியாக்கள், கல்வி மாபியாக்களை எதிர்த்து போராடியதால், பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என வாதாடி, குண்டாஸ் வழக்கு போட விடாமல் தடுத்தோம். இப்பொழுது அவருக்கும் பிணை கிடைத்திருக்கிறது!

டாஸ்மாக் சரக்கு பொது சொத்தாம். அதை சேதப்படுத்தியற்கு அபராதம் விதித்திருக்கிறார்கள். டாஸ்மாக் போராட்டங்களை நசுக்க தான், அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிற விதத்தில் நீதிமன்றமும் தன் பங்குக்கு முன்பணம் கட்ட சொல்லி உத்தரவிடுகிறது அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுதே, ஜெ. சொத்துக்குவிப்பில் சிறை தண்டனை என தீர்ப்பு வந்த பொழுது, அதிமுக காலிகள் எல்லாவிதமான காலித்தனங்களில் ஈடுபட்டார்கள். அவர்கள் மீதெல்லாம் ஒப்புக்காவது முதல் தகவல் அறிக்கை பதிந்தார்களா? பேருந்து மற்ற பொதுச்சொத்துக்களை கொளுத்தியதற்காக அபராதம் தான் விதித்தார்களா? அதிமுக காலிகள் கலவரம் செய்து கொண்டிருந்த பொழுது, சட்ட ஒழுங்கை உறுதிப்படுத்த நாம் வழக்கு தொடுத்த பொழுது, அரசாங்கம் ஒப்புக்கு இப்பொழுது எல்லாம் சரியாகிவிட்டது என சொன்னதை உயர்நீதி மன்றம் எத்தனை வழக்கு பதிந்தீர்கள் என கேட்டு அப்படியே அமுங்கிகொண்டுவிட்டது!

ஆட்சியாளருக்கு ஒத்தூதுகின்றன நீதிமன்றங்கள். இவர்களை ஜனநாயகத்தின் தூண்கள் என நம்புவோமாக! நாம் நடத்தி வரும் சட்ட போராட்டத்தில் நீதிமன்றம் தனது மக்கள் விரோத நடவடிக்கைகளின் மூலமாக நன்றாகவே அம்பலமாகி வருகிறது!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

சிறையின் கொடுமையை வெளியில் கொண்டு வந்த ஆட்கொணர்வு மனு!

பச்சையப்பா கல்லூரி மாணவர்களுக்காக நாம் நடத்திய சட்ட போராட்டத்தில்.....

சிறையின் கொடுமையை வெளியில் கொண்டு வந்த ஆட்கொணர்வு மனு

சிறைவைப்பு என்பது நீதிமன்ற பாதுகாப்பு. அங்கு அவர்களுக்கு ஏதாவது விபரீதம் நடந்தால், நிராயுதபாணியான அவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ளமுடியாது! வெளியில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கமுடியாது! சிறை சென்ற மாணவர்களை உள்ளே வைத்து அடிக்கிறார்கள், மிரட்டுகிறார்கள் என்றால், நீதிமன்றம் தானே பொறுப்பாக முடியும். அதனால், மாணவர்களின் உண்மைநிலையை அறிய, மாணவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துவரவேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையோடு ஆட்கொணர்வு மனு ஒன்றை உடனடியாக தாக்கல் செய்தோம். வழக்கு மதியம் ஒருமணிக்கு வரும் என எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, ஜெயா அரசு வழக்குரைஞருடன் தனிப்பட்ட முறையில் பேசி, எந்தவித சலனமும் இல்லாமல் அடுத்த நாளைக்கு தள்ளிவிட்டு, சீட்டை விட்டு எழுந்துபோய்விட்டார்.

அடுத்தநாள் வெள்ளிக்கிழமை விசாரணையின் பொழுதும் பிரமாண பத்திரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கையெழுத்திட்டிருந்தும், கையெழுத்து இல்லை என காரணம் காட்டி, திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர். சிறையில் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆனதோ என பதைபதைத்து ஆட்கொணர்வு மனு நாம் தாக்கல் செய்தால், நீதிபதிகளோ அடித்த காயம் ’ஆறுவதற்கும்’, அடித்தவர்களை காப்பாற்றுவதற்காக ஜெயா அரசு பதில் ’தயாரிப்பதற்கும்’ கால அவகாசத்தை உருவாக்கி தந்தனர். நீதிபதிகளின் அலட்சியமானது சிறையில் போலீசார் நடத்திய கொடூரமான தாக்குதலை நியாயப்படுத்துவதாகவும், போலீசின் அடாவடித்தனத்தை அங்கீகரிப்பதாகவும், அப்பட்டமாக தெரிகிறது. நீதி ‘எல்லோருக்கும் பொதுவானது’ நம்புவோமாக!

ஆட்கொணர்வு மனுவை ஜவ்வாக இழுத்தடித்து ஒருவழியாக விசாரணைக்கு வந்தது. காயம்பட்ட மாணவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டுவரவேண்டும் என வாதிட்டோம். நீதிபதிகளோ ஜெயா அரசுக்கு தர்ம சங்கடமாகிவிடும் என வழக்கை தள்ளுபடி செய்வதிலேயே கவனமாய் இருந்தனர். நாம் வாதங்களால் நெருக்கும் பொழுது, ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காக, மாவட்ட நீதிபதி ஒருவரை சிறைக்கு சென்று விசாரணை செய்து, ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்” என உத்தரவிட்டார்கள்.


மாவட்ட நீதிபதியும் சிறையில் விசாரணை செய்தார். வெளியிலேயே ஜனநாயகம் என்றால் என்ன விலை? என்று கேட்கும் போலீசை, அதன் கோட்டையாக இருக்கும் சிறையில்? அடிப்பதெல்லாம் அங்கு சர்வசாதாரணம் என்றாலும், கைதிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு சாட்சி சொல்லப்பட்டிருந்தாலும், மாணவர்களை அடித்ததை சாட்சி சொன்ன அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். நீதிபதியும் வேறு வழியின்றி அறிக்கையில் பதிவு செய்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.


 மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

Mar 2, 2015

டாஸ்மாக் ஒழிய அழிவிடைதாங்கி மக்கள் வழியை பின்பற்றுவோம்!





தமிழகத்தில் எல்லா ஆறுகளும் வற்றிக்கொண்டு இருக்க டாஸ்மாக் ஆறு மட்டும் வற்றாத ஜீவநதியை போல ஓடிக்கொண்டே இருக்கிறது!  பெரியவர் முதல் மாணவர் வரை போதையில் மிதக்கிறார்கள்.  சாலையில் சாக்கடையில் புரள்கிறார்கள்.  மெல்ல மெல்ல தனது ஆளுமையை இழக்கிறார்கள். நோயில் சிக்கி உயிர் துறக்கிறார்கள். குடும்பங்கள் சீரழிகின்றன. யார் குடி கெட்டால் என்ன? எனக்கு லாபம் வந்தால் போதும் என ஒரு கேடு கெட்ட முதலாளியை போல அரசு சிந்திக்கிறது.  ஒவ்வொர் ஆண்டும் கூச்சமே இல்லாமல் ஆயிரக்கணக்கான கோடிகளில் லாபம் என பெருமை பேசுகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் ஏகாதிபத்தியங்களின் நெருக்கடி, ஆளும் கட்சிகளின் அடிவருடித்தனம் காரணமாக வெறித்தனமாக அமுல்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். விளைவாக, விவசாய நாடான இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்குள் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இப்படி  வாழ்விழந்த மக்கள் நாடு முழுவதும் தன்னெழுச்சியாக போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.  ஒருபுறம் போராடுகிற மக்களை ஒடுக்க அரசு காவல்துறையை நவீனப்படுத்தியும், பலப்படுத்தியும் வருகிறது. சீனாவில் பிரித்தானிய அரசு அபினியை இறக்குமதி செய்து போதையில் தள்ளியதைபோல மறுபுறம் மக்களை போதையில் தள்ளுகிறார்கள்.

அதிமுக, திமுக தவிர பெரும்பான்மையான கட்சிகள் மதுவிலக்கை ஆதரிக்கிறார்கள்.  சிலர் காலில் விழுகிறார்கள். உண்ணாவிரதமிருக்கின்றனர். வைகோ மாரத்தான் போட்டி நடத்துகிறார். லட்சகணக்கில் அணிகளை வைத்திருப்பதாக சொல்லிக்கொள்கிற  கட்சிகள்கூட அடையாள போராட்டங்களை நடத்துகிறார்கள். இந்த கட்சிகளில் உள்ளவர்கள் தான் டாஸ்மாக் பார்களை நடத்தி கல்லாவும் கட்டுகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அழிவிடைத்தாங்கி கிராமத்தில் பள்ளிக்கருகே டாஸ்மாக் கடை திறந்தார்கள். அன்று தொடங்கி பெண்பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அழிவிடைத்தாங்கி மட்டுமல்ல, சுற்றியிருந்த ஆறு கிராமங்களும் மோசமாக பாதிக்கப்பட்டன.  கடந்த இரண்டு ஆண்டுகளில், கடையை அகற்ற எல்லாவித அறப்போராட்டங்களையும் செய்தார்கள். மூன்றுமுறை முற்றுகையிட்டார்கள்.  அரசு கஜானவை நிரப்ப என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற சாணக்கியவழி வந்தவர்கள்தானே ஆள்கிறார்கள்.  அசைந்துகொடுக்கவில்லை.

எல்லா வழிகளும் அடைபட்ட நிலையில், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சார்ந்த தோழர்கள் ஏழு கிராமத்திலும் பிரச்சாரம் செய்தார்கள். மீண்டும் முற்றுகையிட மக்களோடு பேசி நாளும் குறித்தார்கள்.  ஏழு கிராமங்களிலிருந்தும் குடும்பம் குடும்பமாய் பேரணியாய் திரண்டு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. வழக்கம் போல கத்தி கலைந்துவிடுவார்கள்  என காவல்துறை வேடிக்கைப் பார்த்தனர்.  தோழர்கள் மக்களைப் பார்த்துஇப்போது என்ன செய்வது? வழக்கம் போல கலைந்து செல்வதா? டாஸ்மாக் கடையை அழிக்கப்போகிறோமா?” என்றனர். பேசிக்கொண்டு இருக்கும் போதே ஒருவர் கடைக்குள்ளே போய் ஒரு கேசை தூக்கிப் போட்டு உடைக்க, அடுத்த நொடியில், மொத்த மக்களும் சாராயக்கடைக்குள் புகுந்து உடைக்க ஆரம்பிக்க, சிறுவர்களோ கால்களில் பாட்டில்கள் குத்தி ரத்தம் வந்தாலும் கடைக்குள் புகுந்து துவம்சம் செய்தனர்.

தோழர்களை மட்டும் கைது செய்ய முயன்ற போலீசை, மொத்த மக்களும் ”எங்களையும் கைது செய்! அல்லது அவர்களை விடுதலை செய்” என சொல்ல,  பணிந்த காவல்துறை தோழர்களை விடுதலை செய்தது.

மக்கள் கலைந்து சென்ற நேரம் பார்த்து, காவல்துறை தோழர்களையும், ஆதரவாய் பேசிய ஒரு அம்மாவையும் கைது செய்து, 14 கி.மீ தூரமுள்ள வேறு ஒரு காவல்நிலையம் கொண்டு சென்று 11 பிரிவுகளில் பொய் வழக்கு போட்டு, சிறையிலடைத்தனர்.

மக்கள் ஆதரவோடு தோழர்கள் விரைவில் வெளியே வந்துவிடுவார்கள். ”அழிவிடைதாங்கி மக்களைப்போல, நாங்களும் தயாராக இருக்கிறோம். எங்கள் பகுதிக்கு வாருங்கள் என தொலைபேசியில் மக்கள் பு.மா.இ.முவை உரிமையுடன் அழைக்கிறார்கள். சீனமக்கள் அபினி யுத்தத்தில் வெற்றி பெற்றதுபோல, நாமும் வெற்றி பெறுவோம்!

- குருத்து

Mar 1, 2014

மார்ச் 8 - உழைக்கும் பெண்கள் தினம் - சென்னையில் அரங்க கூட்டம்! - அனைவரும் வருக!



அரங்க கூட்டம்

மார்ச் 8 - மாலை 3 மணி

இடம் : S.D. திருமண மண்டபம், GST சாலை, குரோம்பேட்டை

நிகழ்ச்சி நிரல் :

தலைமை 
தோழர் அமிர்தா
மாவட்ட செயற்குழு உறுப்பினர்,
பெண்கள் விடுதலை முன்னணி.

போராளி கிளாரா ஜெட்கின் வாரிசுகளாக...
தோழர் உஷா
மாவட்ட செயலர்,
பெண்கள் விடுதலை முன்னணி.

”ஆணாதிக்கமும், பெண்ணடிமையும்
பெண்கள் விடுதலை தடை”
எழுத்தாளர் பிரியாதம்பி

சிறப்புரை :
தோழர் துரை சண்முகம்,
மக்கள் கலை இலக்கிய கழகம்,
தமிழ்நாடு.

நன்றியுரை :
தோழர் சாந்தி,
மாவட்ட செயற்குழு உறுப்பினர்,
பெண்கள் விடுதலை முன்னணி.

- பெண்கள் விடுதலை முன்னணி,
தொடர்புக்கு : 9841658457


Jan 10, 2014

விலைவாசி உயர்வை எதிர்த்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!

கண்டன ஆர்ப்பாட்டம்!

இடியாய் இறங்குகிறது
பெட்ரோல், கேஸ், பால்விலை உயர்வு!
இனியும் பொறுப்பது நமக்கு இழிவு!

தலைமை :
தோழர் சித்ரா, செயற்குழு உறுப்பினர்,

சிறப்புரை:

தோழர் ஆ. முகுந்தன், தலைவர்,
பு.ஜ.தொ.மு

நாள் : 11/01/2014

மாலை 5 மணி

இடம் : பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

பெட்ரோல்- டீசல் விலை உயர்வு!
மக்கள் கழுத்தில் சுருக்குக்கயிறு!

சமையல் எரிவாயு விலை உயர்வு!
கேட்டாலே பற்றி எரியுது மக்கள் வயிறு!

பால் விலை பலமடங்கு உயர்வு!
பச்சிளம் குழந்தைகள் பட்டினியாகுது!

விசம்போல் உயரும் விலைவாசி உயர்வுக்கு
தனியாமயமே காரணம் பாரு!

அம்பானி கும்பலின் கல்லா நிரப்ப
கிருஷ்ணா - கோதாவரி எண்ணெய்ப்படுக்கை!

சர்வதேச சந்தை விலையைக் காட்டி
எரிபொருட்களின் விலையைக் கூட்டி
அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும்
மத்திய - மாநில அரசுகளின்
மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிப்போம்!

பால்விலையை உயர்த்தி பச்சிளங் குழந்தைகளை
பட்டினியில் தள்ளுது பாசிச ஜெயா!
ரிலையன்ஸ் அம்பானியின் கொள்ளைக்கு
கிருஷ்ணா - கோதாவரி எண்ணெய்ப்படுக்கை!

இயற்கை எரிவாயுவை தானம் செய்த
காங்கிரசு - பி.ஜே.பி கும்பலை
மக்கள் மத்தியில் தோலுரிப்போம்!

உழைக்கும் மக்களை கண்காணிக்கும்
கைரேகை, கண்விழி பதிவு செய்யும்
ஆதார் அடையாள அட்டையைப் புறக்கணிப்போம்!

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு பிறகும்
ஆதார் அடையாள அட்டையை
வலியுறுத்தும் எண்ணெய் நிறுவனங்களின்
மக்கள் விரோத செயல்களை எதிர்ப்போம்!

பெட்ரோல், கேஸ், பால்விலை உயர்வு
மக்கள் மீதான தாக்குதலே!

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்கின்ற
மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்!

Aug 17, 2013

ஏழு கடல் ஏழு மலை தாண்டி!

உள்ளே நுழைந்ததும் குடும்பமே முகமலர்ச்சியோடு வரவேற்றது. தம்பி தண்ணீர் தந்தார்."சாப்பிடும்மா" என்றார் அம்மா. "என் பெரிய பொண்ணு போல இருக்கம்மா! எப்ப வேணுமில்லாமலும் வா! போ! இது உன்வீடு போல! ஆனால் என் சின்னப் பொண்ணை மட்டும் அமைப்பு வேலைகளுக்கு அனுப்ப சொல்லாதே!' என்றார் கனிவோடு அப்பா!

கணவர் குடிகாரர். பொறுப்பாக எந்த வேலையையும் செயவதில்லை. சமைத்து இரண்டு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி பத்து கி.மீ. பாரிசுக்கு போய் கடுமையான வேலை பார்த்து இரவு திரும்பி, சமைத்து தூங்கும் பொழுது இரவு 11 மணியை தாண்டிவிடும்! துவைப்பதிலும், வீட்டை சுத்தப்படுத்துவதிலும் ஞாயிறுகள் கட்ந்துபோகும். கடுமையான உழைப்பாளி, தைரியமானவர், அமைப்பின் வேலை செய்ய ஆர்வம் இருந்தாலும், சூழல் இடம் தருவதில்லை.

திருமணம் முடிந்தவுடன் அணுகினால், ஓரிரு மாதங்களில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று, கொஞ்சம் வளர்த்து, வேலை செய்ய துவங்க 4 வருடங்கள் ஓடிவிடும். 4 வருடம் தான் இரண்டாவது குழந்தைக்கும் சரியான இடைவெளி.  மீண்டும் சுழற்சி துவங்கிவிடும்!

பெரும்பாலான வீடுகளில் அமைப்பில் இயங்குவதற்கு ஆர்வம் உள்ள பெண்ணுக்கு, அம்மா/அப்பா/அண்ணன்/தம்பி/கணவன் தனியாகவோ அல்லது கூட்டாகவோ அனுப்ப தடைபோடுகிறார்கள். சில சமயங்களில் காதலன் கூட‌ உரிமையுடன் தடைபோடுகிறார்.

அமைப்புத் தோழர்கள் அமைப்பில் வேலை செய்ய வீட்டில் உள்ள பெண்களுக்கு உற்சாகம் ஊட்டுவார்கள். அவர்களில் சிலருக்கோ சுத்தமாக அரசியல், அமைப்பு ஆர்வம் இருக்காது.

வாக்குரசியல் நடத்தும் பல கட்சிகள் போராட்டங்களுக்கு வர பணம் தருகிறாரகள். பலர் சுய உதவி குழுக்களில் பணம் கொடுப்பதும், வட்டி வாங்குவதுமாய் மும்முரமாக ஈடுபடுகிறார்கள். அமைப்பு, அரசியல் பேசினால், "வருகிறேன். எவ்வளவு தருகிறீர்கள்? என கேள்வி எழுப்புகிறார்கள். "எந்த பலனும் இல்லாமலா இவ்வளவு சிரமப்படுகிறீர்கள்?" என நம் நேர்மையின் மீது சந்தேக்கிறார்கள்.

சமூக அவலம் அறிந்த நடுத்தர வர்க்க பெண்களோ, புரட்சிகர அரசியல், அமைப்பு பற்றி தெரிந்துகொண்டு, 'இழப்பதற்கு' தங்களுக்கு ஒரு வாழ்க்கை இருப்பதால், வேலை செய்ய தயக்கம் கொள்கிறார்கள். 

ஆணை அரசியல்படுத்த வீட்டைவிட்டு அழைத்துவந்தால் போதுமானதாக இருக்கிறது. பெண்ணை அரசியல்படுத்த குடும்பதோடு ஐக்கியமாகி குடும்பத்தையே  அரசியல்படுத்த வேண்டியிருக்கிறது.

குடும்பம், குழந்தை பராமரிப்பு, ஆணாதிக்கம், பாதுகாப்பான வாழ்க்கை என எத்தனையோ விசயங்கள் பெண்களை பின்னுக்கு இழுக்கிறது.

இருப்பினும், எல்லாவற்றையும் தாண்டி பிற்போக்கு அரசும், மறுகாலனியாதிக்க கொள்கைகளும் சமூக கொடுமைகளை பெருக்கி வைத்துள்ளன. நாம் அவற்றையெல்லாம் விளக்குவதற்கு முன்னால், அவர்கள் அந்த கொடுமைகளை நித்தமும் அனுவிப்பதால் அவர்களே பட்டியலிடுகிறார்கள். களத்தில் போராட நம்மோடு கைக்கோர்க்கிறார்கள்.

அதனால் தான், குடும்பங்களை சீரழிக்கிற, "டாஸ்மார்க் கடையை  இழுத்துமூடுவோம்"   என்ற பெண்கள் விடுதலை முன்னணியின் சமீபத்திய  போராட்டத்தில் கைக்குழந்தையோடும், சிறுவர், சிறுமிகளோடும் 80 பெண்களோடு அரசை எதிர்த்து எழுச்சியுடன் முழக்கமிட்டு கொண்டிருந்தோம்.

Jan 21, 2010

'கிரீன் ஹண்ட்' - எதிர்ப்பியக்க கருத்தரங்கம்!


பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீதான போர்தான்
அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!


கருத்தரங்கம்

நாள்: 23.01.2010
நேரம்: மாலை 4 மணி

இடம்:சைதை வர்த்தகசபை,
(சைதை காவல் நிலையம் பின் புறம்)
சைதாப்பேட்டை, சென்னை.

தலைமை:தோழர் வெங்கடேசன்
செயலர். ம.க.இ.க, சென்னை

உரையாற்றுவோர்:

திரு.எஸ்.எஸ். ராஜகோபாலன்
கல்வியியலாளர், சென்னை.

திரு.அரங்க.சம்பத்குமார்
வழக்குரைஞர், சென்னை உயர்நீதி மன்றம்.

திரு.த.வெள்ளையன்
தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை

தோழர் வெ.பழனிநாதன்
மாநில இணைச்செயலர்,
பு.ஜ.தொ.மு

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சி
நடைபெறும்.

அனைவரும் வருக‌
-
மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
-
தொடர்பு கொள்ள:

ம.க.இ.க : 94446 48879
பு.மா.இ.மு : 94451 12675
பு.ஜ.தொ.மு : 94448 34519
பெ.வி.மு : 98849 50952.

Oct 1, 2009

கோவை பிரிக்கால் ஆலைத் தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து!



- புதிய ஜனநாயக முன்னணி வெளியிட்ட துண்டறிக்கையிலிருந்து...

கோவை பிரிக்கால் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!

முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்!

அன்பார்ந்த தொழிலாளர்களே!

கடந்த செப். 21ந் தேதியன்று கோவை பிரிக்கால் ஆலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ராய் ஜே.ஜார்ஜ் என்பவன் தொழிலாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டான். இதைக் கண்டு முதலாளிகள் சங்கம் "வன்முறை - பேராபத்து" எனறு அலறுகிறது. ஊடகங்கள்: தொழிலாளர்களை பயங்கரவாதிகளாகவும், வன்முறையாளர்களாகவும் சித்தரிக்கின்றன.

அமைச்சர்களோ தொழிலாளர்களின் வன்முறைப் போக்கை நசுக்கப் போவதாக முதலாளிகளின் அடியாட்கள் போல பேசுகின்றனர். கோவை நகரமே கலவரபூமி போல போலீசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் பயங்கரவாதிகளா? முதலாளி வர்க்கம் தினந்தோறும் தொழிலாளர்கள் மீது ஏவி விடுகின்ற கொடூரங்களை அனுபவித்த எவரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள். கோவை பிரிக்கால் ஆலை நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறைகளை அறிந்த எவரும் தொழிலாளர்களை வ்னமுறையாளர்கள் என்று சொல்லமாட்டார்கள்.

பிரிக்கால் ஆலையில் ஏற்கனவே ஐந்து தொழிற்சங்கங்கள் இருந்தும் முதலாளி விஜய் மோகனின் அடக்குமுறைகளுக்கு அவை பணிந்து போயின. எனவே, 2007-ஆம் ஆண்டில் பெரும்பான்மை
தொழிலாள்ர்கள் ஒன்று சேர்ந்து புதிய தொழிற்சங்கத்தை துவங்கினர். அன்று முதல் அதிகரித்து வரும் கொடுமைகள் - அடக்குமுறைகள் - பழிவாங்கும் நடவடிக்கைகள் கொஞ்ச நஞ்சமல்ல. கொத்து கொத்தாய் வேலை நீக்கம், பணியிட மாற்றம் என்று விரட்டப்பட்டனர். தொழிலாளர் ஆணையர் துவங்கி உயர்நீதி மன்றம் - உச்சநீதி மன்றம் வரை போட்ட எல்லா உத்திரவுகளையும் பிரிக்கால் முதலாளி மயிருக்குச் சமமாக மதித்தான்.

ஜனநாயக அமைப்பில் தொழிலாளர்களின் வன்முறையை சகித்துக் கொள்ள முடியாது என்கிறார் துணை முதல்வர் ஸ்டாலின். இவரது அரசாங்கம் போட்ட அரசாணையைக் கூட கழிப்பறை காகிதமாக தூக்கி எறிந்தானே விஜய்மோகன்! அது சகித்துக் கொள்ளக்கூடிய ஜனநாயகமா? 300 தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் மாதக்கணக்கில் பட்டினி போட்டானே, அது சகித்துக் கொள்ளக்கூடிய ஜனநாயகப் போக்கா? பல மணி நேரம் நின்று கொண்டே வேலை செய்ய நிர்ப்பந்தம் செய்யப்பட்டதால் பல பெண் தொழிலாளர்களுக்கு கருப்பை நீக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டதே, அது போற்றத்தக்க ஜனநாயக மாண்பா?

தொழிலாளர்களையும், சங்க முன்னணியாளர்களையும் மிரட்டுவது, அடியாட்களை வைத்து தாக்குவது, கருங்காலிகளை உருவாக்கி ஒற்றுமையை சீர்குலைப்பது, வேலைநீக்கம் செய்தும், சம்பளத்தை மறுத்தும் பட்டின் போடுவது ஆகியவை செய்து வந்த பிரிக்கால் முதலாளியின் கொடூரங்களை தாங்காமல் தொழிலாளர்கள் திருப்பி தாக்கிவிட்டனர். இதில் முதலாளியின் அடியாளாக செயல்பட்ட அதிகாரி ராய். ஜே.ஜார்ஜ் பலியானான். இதில் வருத்தப்படவோ, அனுதாபப்படவோ, அச்சப்படவோ ஏதும் இல்லை.

வன்முறையில் ஈடுபடும் தொழிற்சங்கங்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலறுகிறது சென்னை "மெப்ஸ்" உற்பத்தியாளர்கள் (முதலாளிகள்) சங்கம். ஒரு அதிகாரி கொல்லப்பட்டதற்கே இப்படிப் பதறுகின்றனர். முதலாளித்துவ பயங்கரவாதம் தினந்தோறும் பலநூறு தொழிலாளர்களைக் கொல்கிறதே இவைகளை எத்தனை நாட்களுக்குத் தான் சகித்துகொள்வது?

தொழில அமைதி நிலவுகின்ற தமிழகத்தில் பிரிக்கால் தொழிலாளர்களின் வன்முறை ஒரு களங்கம் என்கின்றன, முதலாளி சங்கங்கள். எப்பேர்ப்பட்ட மோசடி! "அமைதி பூங்கா" தமிழகத்தில் எந்த ஆலையிலாவது சங்கம் அமைக்க முடிகிறதா? சட்டப்படியான ஊதியம் - வேலை ப் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை கேட்கமுடிகிறதா?

தொழிற்சங்கம் துவங்கியதற்காக 188 தொழிலாளர்களின் வேலையைப் பறித்ததே ஹூண்டாய் கார் கம்பெனி, இதுதான் தொழில் அமைதியா? நெல்காஸ்ட் ஆலைக்குள் விபத்தில் செத்துப்போன ஒரிசா மாநிலத் தொழிலாளியை அனாதைப் பிணமாக தூக்கியெறிய அனுமதிக்க மாட்டொம் என்று போராடியது, நிரந்தர தொழிலாளர் சங்கம். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 108 தற்காலிக தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்தியும், சங்க முன்னணியாளர்கள் 34 பேரை சஸ்பெண்ட் செய்தும் மிரட்டி வருகிறது நெல்காஸ்ட் நிர்வாகம். வேலை நீக்கத்தை தடை செய்து உயர்நீதி மன்றம் போட்ட உத்திரவைக் கூட நிர்வாகம் மதிக்கவில்லை. இதுதான் தொழில் அமைதியின் லட்சணம்.

தொழிலாளர்கள் போராடினால் களங்கமாம்! பெரியபாளையம் பகுதியில் உள்ள சுஜானா ஸ்டீல்ஸ் ஆலையில் சங்கம் துவக்கியதற்காக ஆந்திராவுக்கு மாற்றப்பட்டவர்களை எவ்வித பாதிப்பும் இன்றி உள்ளூரியிலேயே வேலை கொடுக்க உத்தரவிட்டது, உயர்நீதிமன்றம். இந்த உத்திரவையும் கழிப்பறைக் காகிதமாக்கிய முதலாளி வர்க்கம் தான், தொழிலாளர்கள் விழித்தெழுவதை களங்கம் என்கிறது.

பிரிக்கால் தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முழங்குகின்ற மு.க.ஸ்டாலின், சில நாள்களுக்கு முன்பாக கடலூரில் "கெம்பிளாஸ்ட் சன்மார்" என்கிற ஆலையை பெருமையுடன் திறந்து வைத்தார். இந்த சன்மார் முதலாளி தன்னுடைய போன்னேரி ஆலையில் சங்கம் துவக்கியதற்காக 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலையைப் பறித்து பல மாதங்களாகப் பட்டினி போட்டு வருகிறான். இவனை சவுக்கால் அடித்து தண்டிப்பாரா, ஸ்டாலின்?

ஆளும் கும்பல் பேசுகின்ற ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி எல்லாம் தொழிலாளர்களை மிரட்டவே செய்கிறது! முதலாளிகளுக்கோ சலுகைகள் - மானியங்கள் - சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு தந்து பாதசேவை செய்கிறது. அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தொழிலாளர்களை பயங்கரவாதிகள் - வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்துகிறது. ஆனால், லட்சக்கணக்கான தொழிலாளர்களை வேலை பறிப்பு - பட்டினி, வறுமை என்கிற பேரழிவு ஆயுதங்கள் கொண்டு சித்திரவதை செய்து வரும் முதலாளிகளின் இழப்புக்கோ ஒப்பாரி வைக்கிறது.

பிரிக்கால் தொழிலாளர்கள் மட்டுமல்ல; வேறு எந்த ஆலைத் தொழிலாளர்களும் கலம் செய்வதற்குரிய சூழ்நிலைகளை முதலாளிகளே தோற்றுவிக்கின்றனர். எனவே, இந்தப் பிரச்சனை ஏதோ ஒரு ஆலையின் தொழிலாளர்களது பிரச்சினை என்று நாம் ஒதுக்கிக் கொள்ள முடியாது. பிரிக்கால் தொழிலாள்ர்களின் போராட்டம் இந்த தருணத்தில் ஒடுக்கப்பட்டால் அடுத்து வரும் நாட்களில் எந்த தொழிலாளர் போராட்டமும் நசுக்கப்படும். எனவே, பிரிக்கால் தொழிலாளர்களது போராட்டங்களை ஆதரிப்பது வரலாற்றுக் கடமை என்பதை உணர்வோம். முதலாளித்துவ பயங்கரவாததுக்கு முடிவு கட்ட பாட்டாளி வர்க்கமாய் அணிதிரள்வோம்!
கோவை பிரிக்கால் ஆலை அதிகாரி ராய்.ஜே.ஜார்ஜ் தொழிலாளர்களால் அடித்துக்கொலை!

* அன்றாடம் தொழிலாளர் மீது
பயங்கரவாத முதலாளிகள் செய்துவரும்
சித்திரவதை கொடுமைகளின்
எதிர்விளைவே இது!

*தொழிலாளி வர்க்கம் வருத்தப்படவோ,
அனுதாபப்படவோ, அஞ்சவோ
தேவையில்லை.

* நாள்தோறும் சட்டவிரோதமாக
ஆயிரக்கணக்கான கொடுமைகளை
செய்துவரும் பயங்கரவாத
முதலாளிகளை கைது செய்!

*பிரிக்கால் ஆலைத் தொழிலாளர்களின்
நியாயமான போராட்டம் வெல்லட்டும்!
முதலாளித்துவ பயங்கரவாதத்தை
முறியடிக்க அணிதிரள்வோம்!

தொடர்புக்கு :

அ. முகுந்தன்,
110, 2வது மாடி,
மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 24
பேச : 94448 34519
- பு.ஜ.தொ.மு
(புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி)

தொடர்புடைய சுட்டிகள்

பிரிக்கால் ஆலை அதிகாரி கொலை
முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கான எதிர் விளைவு


பிரிக்கால் தொழிலாளர்களின் போராட்டம்