Oct 1, 2009

கோவை பிரிக்கால் ஆலைத் தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து!



- புதிய ஜனநாயக முன்னணி வெளியிட்ட துண்டறிக்கையிலிருந்து...

கோவை பிரிக்கால் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!

முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்!

அன்பார்ந்த தொழிலாளர்களே!

கடந்த செப். 21ந் தேதியன்று கோவை பிரிக்கால் ஆலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ராய் ஜே.ஜார்ஜ் என்பவன் தொழிலாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டான். இதைக் கண்டு முதலாளிகள் சங்கம் "வன்முறை - பேராபத்து" எனறு அலறுகிறது. ஊடகங்கள்: தொழிலாளர்களை பயங்கரவாதிகளாகவும், வன்முறையாளர்களாகவும் சித்தரிக்கின்றன.

அமைச்சர்களோ தொழிலாளர்களின் வன்முறைப் போக்கை நசுக்கப் போவதாக முதலாளிகளின் அடியாட்கள் போல பேசுகின்றனர். கோவை நகரமே கலவரபூமி போல போலீசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் பயங்கரவாதிகளா? முதலாளி வர்க்கம் தினந்தோறும் தொழிலாளர்கள் மீது ஏவி விடுகின்ற கொடூரங்களை அனுபவித்த எவரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள். கோவை பிரிக்கால் ஆலை நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறைகளை அறிந்த எவரும் தொழிலாளர்களை வ்னமுறையாளர்கள் என்று சொல்லமாட்டார்கள்.

பிரிக்கால் ஆலையில் ஏற்கனவே ஐந்து தொழிற்சங்கங்கள் இருந்தும் முதலாளி விஜய் மோகனின் அடக்குமுறைகளுக்கு அவை பணிந்து போயின. எனவே, 2007-ஆம் ஆண்டில் பெரும்பான்மை
தொழிலாள்ர்கள் ஒன்று சேர்ந்து புதிய தொழிற்சங்கத்தை துவங்கினர். அன்று முதல் அதிகரித்து வரும் கொடுமைகள் - அடக்குமுறைகள் - பழிவாங்கும் நடவடிக்கைகள் கொஞ்ச நஞ்சமல்ல. கொத்து கொத்தாய் வேலை நீக்கம், பணியிட மாற்றம் என்று விரட்டப்பட்டனர். தொழிலாளர் ஆணையர் துவங்கி உயர்நீதி மன்றம் - உச்சநீதி மன்றம் வரை போட்ட எல்லா உத்திரவுகளையும் பிரிக்கால் முதலாளி மயிருக்குச் சமமாக மதித்தான்.

ஜனநாயக அமைப்பில் தொழிலாளர்களின் வன்முறையை சகித்துக் கொள்ள முடியாது என்கிறார் துணை முதல்வர் ஸ்டாலின். இவரது அரசாங்கம் போட்ட அரசாணையைக் கூட கழிப்பறை காகிதமாக தூக்கி எறிந்தானே விஜய்மோகன்! அது சகித்துக் கொள்ளக்கூடிய ஜனநாயகமா? 300 தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் மாதக்கணக்கில் பட்டினி போட்டானே, அது சகித்துக் கொள்ளக்கூடிய ஜனநாயகப் போக்கா? பல மணி நேரம் நின்று கொண்டே வேலை செய்ய நிர்ப்பந்தம் செய்யப்பட்டதால் பல பெண் தொழிலாளர்களுக்கு கருப்பை நீக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டதே, அது போற்றத்தக்க ஜனநாயக மாண்பா?

தொழிலாளர்களையும், சங்க முன்னணியாளர்களையும் மிரட்டுவது, அடியாட்களை வைத்து தாக்குவது, கருங்காலிகளை உருவாக்கி ஒற்றுமையை சீர்குலைப்பது, வேலைநீக்கம் செய்தும், சம்பளத்தை மறுத்தும் பட்டின் போடுவது ஆகியவை செய்து வந்த பிரிக்கால் முதலாளியின் கொடூரங்களை தாங்காமல் தொழிலாளர்கள் திருப்பி தாக்கிவிட்டனர். இதில் முதலாளியின் அடியாளாக செயல்பட்ட அதிகாரி ராய். ஜே.ஜார்ஜ் பலியானான். இதில் வருத்தப்படவோ, அனுதாபப்படவோ, அச்சப்படவோ ஏதும் இல்லை.

வன்முறையில் ஈடுபடும் தொழிற்சங்கங்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலறுகிறது சென்னை "மெப்ஸ்" உற்பத்தியாளர்கள் (முதலாளிகள்) சங்கம். ஒரு அதிகாரி கொல்லப்பட்டதற்கே இப்படிப் பதறுகின்றனர். முதலாளித்துவ பயங்கரவாதம் தினந்தோறும் பலநூறு தொழிலாளர்களைக் கொல்கிறதே இவைகளை எத்தனை நாட்களுக்குத் தான் சகித்துகொள்வது?

தொழில அமைதி நிலவுகின்ற தமிழகத்தில் பிரிக்கால் தொழிலாளர்களின் வன்முறை ஒரு களங்கம் என்கின்றன, முதலாளி சங்கங்கள். எப்பேர்ப்பட்ட மோசடி! "அமைதி பூங்கா" தமிழகத்தில் எந்த ஆலையிலாவது சங்கம் அமைக்க முடிகிறதா? சட்டப்படியான ஊதியம் - வேலை ப் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை கேட்கமுடிகிறதா?

தொழிற்சங்கம் துவங்கியதற்காக 188 தொழிலாளர்களின் வேலையைப் பறித்ததே ஹூண்டாய் கார் கம்பெனி, இதுதான் தொழில் அமைதியா? நெல்காஸ்ட் ஆலைக்குள் விபத்தில் செத்துப்போன ஒரிசா மாநிலத் தொழிலாளியை அனாதைப் பிணமாக தூக்கியெறிய அனுமதிக்க மாட்டொம் என்று போராடியது, நிரந்தர தொழிலாளர் சங்கம். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 108 தற்காலிக தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்தியும், சங்க முன்னணியாளர்கள் 34 பேரை சஸ்பெண்ட் செய்தும் மிரட்டி வருகிறது நெல்காஸ்ட் நிர்வாகம். வேலை நீக்கத்தை தடை செய்து உயர்நீதி மன்றம் போட்ட உத்திரவைக் கூட நிர்வாகம் மதிக்கவில்லை. இதுதான் தொழில் அமைதியின் லட்சணம்.

தொழிலாளர்கள் போராடினால் களங்கமாம்! பெரியபாளையம் பகுதியில் உள்ள சுஜானா ஸ்டீல்ஸ் ஆலையில் சங்கம் துவக்கியதற்காக ஆந்திராவுக்கு மாற்றப்பட்டவர்களை எவ்வித பாதிப்பும் இன்றி உள்ளூரியிலேயே வேலை கொடுக்க உத்தரவிட்டது, உயர்நீதிமன்றம். இந்த உத்திரவையும் கழிப்பறைக் காகிதமாக்கிய முதலாளி வர்க்கம் தான், தொழிலாளர்கள் விழித்தெழுவதை களங்கம் என்கிறது.

பிரிக்கால் தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முழங்குகின்ற மு.க.ஸ்டாலின், சில நாள்களுக்கு முன்பாக கடலூரில் "கெம்பிளாஸ்ட் சன்மார்" என்கிற ஆலையை பெருமையுடன் திறந்து வைத்தார். இந்த சன்மார் முதலாளி தன்னுடைய போன்னேரி ஆலையில் சங்கம் துவக்கியதற்காக 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலையைப் பறித்து பல மாதங்களாகப் பட்டினி போட்டு வருகிறான். இவனை சவுக்கால் அடித்து தண்டிப்பாரா, ஸ்டாலின்?

ஆளும் கும்பல் பேசுகின்ற ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி எல்லாம் தொழிலாளர்களை மிரட்டவே செய்கிறது! முதலாளிகளுக்கோ சலுகைகள் - மானியங்கள் - சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு தந்து பாதசேவை செய்கிறது. அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தொழிலாளர்களை பயங்கரவாதிகள் - வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்துகிறது. ஆனால், லட்சக்கணக்கான தொழிலாளர்களை வேலை பறிப்பு - பட்டினி, வறுமை என்கிற பேரழிவு ஆயுதங்கள் கொண்டு சித்திரவதை செய்து வரும் முதலாளிகளின் இழப்புக்கோ ஒப்பாரி வைக்கிறது.

பிரிக்கால் தொழிலாளர்கள் மட்டுமல்ல; வேறு எந்த ஆலைத் தொழிலாளர்களும் கலம் செய்வதற்குரிய சூழ்நிலைகளை முதலாளிகளே தோற்றுவிக்கின்றனர். எனவே, இந்தப் பிரச்சனை ஏதோ ஒரு ஆலையின் தொழிலாளர்களது பிரச்சினை என்று நாம் ஒதுக்கிக் கொள்ள முடியாது. பிரிக்கால் தொழிலாள்ர்களின் போராட்டம் இந்த தருணத்தில் ஒடுக்கப்பட்டால் அடுத்து வரும் நாட்களில் எந்த தொழிலாளர் போராட்டமும் நசுக்கப்படும். எனவே, பிரிக்கால் தொழிலாளர்களது போராட்டங்களை ஆதரிப்பது வரலாற்றுக் கடமை என்பதை உணர்வோம். முதலாளித்துவ பயங்கரவாததுக்கு முடிவு கட்ட பாட்டாளி வர்க்கமாய் அணிதிரள்வோம்!
கோவை பிரிக்கால் ஆலை அதிகாரி ராய்.ஜே.ஜார்ஜ் தொழிலாளர்களால் அடித்துக்கொலை!

* அன்றாடம் தொழிலாளர் மீது
பயங்கரவாத முதலாளிகள் செய்துவரும்
சித்திரவதை கொடுமைகளின்
எதிர்விளைவே இது!

*தொழிலாளி வர்க்கம் வருத்தப்படவோ,
அனுதாபப்படவோ, அஞ்சவோ
தேவையில்லை.

* நாள்தோறும் சட்டவிரோதமாக
ஆயிரக்கணக்கான கொடுமைகளை
செய்துவரும் பயங்கரவாத
முதலாளிகளை கைது செய்!

*பிரிக்கால் ஆலைத் தொழிலாளர்களின்
நியாயமான போராட்டம் வெல்லட்டும்!
முதலாளித்துவ பயங்கரவாதத்தை
முறியடிக்க அணிதிரள்வோம்!

தொடர்புக்கு :

அ. முகுந்தன்,
110, 2வது மாடி,
மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 24
பேச : 94448 34519
- பு.ஜ.தொ.மு
(புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி)

தொடர்புடைய சுட்டிகள்

பிரிக்கால் ஆலை அதிகாரி கொலை
முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கான எதிர் விளைவு


பிரிக்கால் தொழிலாளர்களின் போராட்டம்

1 comment:

Anonymous said...

லஞ்சம் வாங்குபவர்கள் முகத்திரையை கிழிக்கும் ஒரு பதிவு.

http://ulalmannargal.blogspot.com/