Sep 25, 2018

The Post - பத்திரிக்கை சுதந்திரம்

1960-களில் அமெரிக்கா வியட்நாம் மீது ஆக்கிரமிப்பு போர் செய்து கொண்டிருந்தது. வியட்நாமிய போராளிகள் கொரில்லா போர் செய்து அமெரிக்க ராணுவத்தினரை சிதறடித்துக் கொண்டிருந்தார்கள்.

உச்சக்கட்ட போர் சமயத்தில் 60 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இறந்தும் காணாமலும் போயினர். அமெரிக்க அரசோ கெத்தாக போரில் முன்னேறி கொண்டிருப்பதாக கதை விட்டுக் கொண்டிருந்தது.

இராணுவ ஆய்வாளர் ஒருவர் உலகுக்கு உண்மையை சொல்ல நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஆதாரம் அளிக்கிறார். இதழில் வெளியானதும் நாடே கொந்தளிக்கிறது. அமெரிக்க அரசு ஆடிப்போய்விடுகிறது!

'நியூயார்க் டைம்ஸ்'க்கு போட்டி பத்திரிக்கையான 'வாஷிங்டன் போஸ்ட்' மேலும் வியட்நாமிய போர் தொடர்பான செய்திகளை தேடுகிறது. கண்டுபிடித்தும் விடுகிறது.

இதற்கிடையில் வாஷிங்டன் போஸ்ட் பொருளாதாரத்தில் தள்ளாடுகிறது. பொதுமக்களிடம் பங்குகளை வெளியிட்டு, தன்னைப் பலப்படுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்கிறது.

இதே சமயத்தில் நியூயார்க் டைம்ஸில் ஆதாரம் வெளியானதை ஒட்டி, அமெரிக்க அரசு சுதாரித்து மேற்கொண்டு ஆதாரங்களை வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி விடுகிறது.

கிடைத்த ஆதாரங்களை, தடையை மீறி வெளியிட்டால், வாஷிங்டன் போஸ்ட் இதழை இழுத்து மூடவேண்டி இருக்கும். பத்திரிகை ஆசிரியரும், அதன் மேலாண் இயக்குநரும் நிச்சயமாய் கைது செய்யப்படுவார்கள்.

அதனால் பத்திரிக்கையில் வெளியிட மற்ற இயக்குனர்கள் மறுக்கிறார்கள்.

எல்லாவற்றையும் மீறி மக்களுக்கு வாஷிங்டன் போஸ்ட் உண்மையை சொன்னார்களா என்பது முழு நீளக்கதை!
****

இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கு இரண்டு முகங்கள். ஜாஸ், ஜுராசிக் பார்க் , இண்டியனா ஜோன்ஸ் என ஒரு முகம். இன்னொரு முகம் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், அமிஸ்டாட், தி போஸ்ட்.

படத்தில் பத்திரிக்கை ஆசிரியராக வரும் டாம் ஹாங்க்ஸ், முதலாளியாக வரும் மெரில் ஸ்டிரிப் என எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சிறந்த திரைப்படம், இயக்குனர், நடிகர், நடிகை, திரைக்கதை, இசை என ஆறு வகைகளில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா உலகம் முழுவதிலும் போர் என்ற பெயரில் பல உயிர்களை கொன்று குவித்துள்ளது. வியட்நாமில் தோற்றுப் போவோம் என தெரிந்தே பல ஆயிரம் தனது சொந்த நாட்டு இளைஞர்களையே பலிகொடுத்தது.

படத்தில் ஒரு இடத்தில் சொல்லப்படும் செய்தி.

ஊடகம் ஆளப்படுகிறவர்களுக்கு தான் சேவை செய்ய வேண்டும். ஆள்பவருக்கு அல்ல!

இந்திய நிலைமைகளில் இதை யோசித்துப் பார்த்தால்... நிலைமை மிக மோசமாக இருக்கிறது. ஊடகங்கள் பச்சையாக மிரட்டப்படுகின்றன. நேர்மையான பத்திரிகையாளர்கள் வேலையில் இருந்து தூக்கி எறியப்படுகிறார்கள். மிக நெருக்கடியான கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

அவசியமான படம்! பாருங்கள்!

- குருத்து

Sep 14, 2018

உலகம் இரண்டு: சிறையும் இரண்டு!


நேற்று புழல் சிறையில் தண்டனை கைதிகளுக்கு நிறைய வண்ண தொலைக்காட்சிகள், வசதியான சொகுசு படுக்கை, வாய்க்கு ருசியான வகை வகையான சாப்பாடு என நிறைய படங்கள் வெளியாகியிருக்கின்றன. அதிர்ச்சி அடைந்தது போல ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

2009ல் லஞ்ச ஒழிப்புத்துறை மதியம் சிறையை சோதனை செய்ய அனுமதி கேட்ட பொழுது வேண்டுமென்றே அரை மணி நேரத்திற்கும் மேலாக இழுத்தடித்து தான் உள்ளே அனுமதித்தார்கள். அதற்கு பிறகும், துணை ஜெயிலர் அறையிலேயே 21 ஆபாச சிடிக்கள் கிடைத்தன. நான்கு கைதிகளின் அறையில் கேபிள் டிவி இணைப்புடன் தொலைக்காட்சிகள் இருந்திருக்கின்றன. இதையெல்லாம் அந்த அரை மணி நேரத்தில் அவர்களால் ஒளித்து வைக்கமுடியவில்லை.

இந்த சோதனைக்கு முதல்வாரம் தான் துறை வாரியான சோதனையின் பொழுதே... 30க்கும் மேற்பட்ட செல்போன்கள், 2 பென்டிரைவர்கள், 12 கிலோ கஞ்சா சிக்கியிருந்தன

வருடங்கள் உருண்டோட எல்லாமும் வளர்கின்றன.

1950களில் கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டு அரசால் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்ட காலம். சி.. பாலன் தனது சிறைவாழ்க்கையை#தூக்குமர நிழலில்என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
சிறைக்குள் ஐந்நூறு பீடிகளைக் கடத்திக்கொண்டு வந்துவிட்டால், அவற்றின் சொந்தக்காரனால், பல காரியங்களைச் சாதிக்கமுடியும். ஏனென்றால், சிறைச்சாலைக்குள் பண்டம் பரிவர்த்தனைக்காகப் பயன்படுத்தப்படும் நாணயம் பீடிதான். அன்று கோயமுத்தூர் ஜெயிலில் நிலவிய விலைவாசிப் புள்ளி விவரங்கள் கீழே தரப்படுகின்றன.

8 அவுன்ஸ் பால்                          - 4 பீடி
4 அவுன்ஸ் மாமிசம்                  - 5 பீடி
6 அவுன்ஸ் சோற்றுப்பட்டை - 6 பீடி
10 அவுன்ஸ்
நல்லெண்ணெய்                          - 4 பீடி
ஒரு மேல் சட்டையும்
ஒரு கால்சட்டையும்                – 25 பீடி

சிறையில் எளியவனுக்கு எந்த வசதியும் இல்லை. அவர்களின் குடும்பம் வாங்கிச் செல்கிற ஒரு ப்ரெட் பாக்கெட்டையோ, ஒரு பிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டையோ போலீசுகாரர்கள் பிதுக்கி பிதுக்கி பார்த்து நொந்து போக வைப்பார்கள்.

உலகம் ஏற்றத்தாழ்வுகளால் நிரம்பி வழிந்து, இரண்டு உலகமாக இயங்கும் பொழுது, சிறை மட்டும் ஒன்றாகவா இயங்கும்!

- குருத்து


Sep 6, 2018

தூறல் நின்னுப் போச்சு (1982) - சில குறிப்புகள்

கடந்த வாரத்தில் கே தொலைக்காட்சியில் பார்த்தேன். எப்பொழுதும் எந்த காட்சி பார்த்தாலும், படத்தின் இறுதிவரை நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் வசீகரம் கொண்டது! பாக்யராஜின் முதன்மையான படங்களில் இது முக்கியமான படம்.

2563 இருக்கைககள் கொண்ட ஆசியாவின் பிரமாண்டமான முதல் திரையரங்கான மதுரை தங்கம் திரையரங்கில் உலகம் சுற்றும் வாலிபனுக்கு பிறகு அரங்கு நிறைந்த காட்சிகளாக நூறு நாட்கள் ஓடிய படம்!

படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, தெலுங்கிலும், இந்தியிலும் கூட எடுத்தார்கள். அந்தந்த மொழி, கலாச்சாரத்திற்கு ஏற்ப சின்ன சின்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். என்னென்ன என்று கவனித்தால் சுவாரசியமாக இருக்கிறது. தெலுங்கில் விஜயசாந்தி நடித்திருக்கிறார். இந்தியில் அனில் கபூர் நடித்திருக்கிறார். தமிழில் நாயகியின் அப்பா சாகிறார் அல்லவா! தெலுங்கில் நாயகியை அரளி விதையை சாப்பிட வைத்து, பிழைக்க வைத்திருக்கிறார்கள். இந்தியில் நம்பியார் பாத்திரத்தில் 'சோலே' அம்ஜத்கான், கத்திக் குத்தை வாங்கிகொள்கிறார். 
இந்த படத்தின் பாதிப்பில் இன்றைக்கு வரைக்கும் படம் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அப்பாஸ் – சிம்ரன் நடித்த “பூச்சூடவா” படத்தை உற்றுப் பாருங்கள். தூ. நி. போச்சு படம் தான் என பளிச்சென தெரியும். செந்தாமரை கதாபாத்திரத்தை கிரிஷ் கார்னட் செய்திருப்பார். இப்பொழுது சசிக்குமார் மீண்டும் எடுக்கப்போவதாக சொல்கிறார்கள்.

செந்தாமரையும், நம்பியாரும் அருமையாக செய்திருப்பார்கள். செந்திலுக்கு இந்தப்படம் தான் திருப்புமுனை என்கிறார்கள்.

ஏற்பாடு திருமணத்தில் வரதட்சணை பேசுவது ஒரு வியாபாரம் பேசுவது போல மிக கறாராக பேசுவார்கள். இந்த படத்தில் அதை சரியாக காட்டியிருப்பார்கள். படத்தில் இறுதியில் ஆணாதிக்கத்தை நன்றாகவே சாடியிருப்பார்கள். அதையெல்லாம் கேட்டு திருந்துவார்களா என்பது தான் எனக்கு ஆச்சர்யம்.

ஆறெல்லாம் வறண்டு, ஆற்று மணலை எல்லாம் அரசே முன்நின்று சூறையாடிய வேளையில், ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க போவது போல இப்பொழுது காட்சி வைக்க முடியுமா?

படத்தின் பலத்தில் இளையராஜாவும் ஒருவர். எல்லா பாடல்களும் இனிமையானவை. பின்ணனி இசையும் அசத்தியிருப்பார்.

படத்தலைப்புகளை ரெம்பவும் பாந்தமாக, மங்களகரமாக பெயரிடுவார்கள். ”தூறல் நின்னுப் போச்சு” என நெகட்டிவாக தைரியமாகவே வைத்திருக்கிறார் பாக்யராஜ்!

Aug 30, 2018

1084ன் அம்மா (1997) - இந்தி

1084ன் அம்மா (1997) - வங்க நாவல், இந்திப்படம், தமிழ் நாடகம்

1970களில் நக்சல்பாரி (Naxalbadi) எழுச்சி நாடு முழுவதும் சமூக மாற்றத்தை விரும்பிய இளைஞர்களை ஈர்த்தது. போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்தது. ஆளும் மத்திய, மாநில அரசுகள் நக்சல் இளைஞர்களை வேட்டையாட துவங்கியது. வங்கத்தின் தெருக்களில் துரத்தி, துரத்தி சுட்டுக் கொல்லப்பட்ட, அடித்தே கொல்லப்பட்ட பலநூறு இளைஞர்களில் ஒருவர் தான் பிரதி (Brati).

பிரதியின் குடும்பம் மேட்டுக்குடி குடும்பம். நக்சல் இயக்கத்தில் இணைந்து போராடியது அவர்களுடைய ’தகுதிக்கு’ இழுக்காக படுகிறது. ஆகையால் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரதியினுடைய தடயங்களை அரசாங்க ஏடுகளில் இருந்து முற்றிலுமாய் அழித்துவிடுகின்றனர்.

தனது பிரியத்துக்குரிய மகனின் தடயங்களை தேடிச் செல்கிறார் அம்மா. அதன் வழியே தன் மகனின் கனவுகளை, லட்சியங்களை காணுகிறார். உலகம் இரண்டாக இருப்பது முகத்தில் அறைகிறது.
****

இந்த நாவலை எழுதியவர் மகாசுவேதா தேவி. வங்கத்தைச் சேர்ந்தவர். சமூக செயற்பட்டாளர். சமீபத்தில் தான் இறந்தார். இந்த நாவல் தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு என இந்தியாவின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாவலை என் நண்பர் ஒருவர் பரிசளித்தார்.

இந்தியில் முக்கியமான இயக்குநரான இயக்குநர் கோவிந்த் நிஹாலனி இயக்கி #Hazaar_Chaurasi_Ki_Maa என்ற பெயரில் 1997ல் வெளியே வந்தது. ஜெயா பச்சன் 18 வருட இடைவெளிக்கு பிறகு பிரதான கதாபாத்திரத்தில் நடித்தார். பிரதியின் காதலியாக நந்திதாதாஸ் நடித்தார். படம் தேசிய விருது வென்றது. இப்பொழுதும் யூடியூப் தளத்தில் கிடைக்கிறது.

கடந்த சனி, ஞாயிறு இரண்டு நாள்களில் சென்னையில் இந்த நாவலை நாடகமாக ஒரு குழு மேடையேற்றினார்கள். 1 மணி நேரம் 20 நிமிடம். ஒரு நாவல் படித்து பத்து ஆண்டுகள் ஆனபின்பும், சில காட்சிகள் மனதில் நிரந்தரமாக தங்கிவிடும் அல்லவா! அப்படிப்பட்ட சில காட்சிகளை அழுத்தம் திருத்தமாக நாடகத்தில் கொண்டு வந்திருந்தார்கள். பிரதான கதாபாத்திரமான அம்மா பாத்திரத்தில் நாடகத்துறை சார்ந்த மங்கை அருமையாக நடித்திருந்தார்.

போலீசாக நடித்தவரும், காதலியாக நடித்தவரும் பாத்திரத்தில் பொருந்தியிருந்தார்கள்.செப்டம்பர் மாதம் சென்னையில் மீண்டும் போடுவதாக அறிவித்தார்கள். வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக பாருங்கள்!
***

மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்தால், தேசிய பாதுகாப்பு சட்டம், தடுப்பு காவல் சட்டத்தை போட்டு, அரசு சிறையில் தள்ளுகிறது. மீண்டும் மீண்டும் போராடினால் போலி மோதல் கொலைகள் என இப்பொழுதும் இந்த நாவலில் எழுப்பப்படுகிற கேள்விகள் சமூக நிலைமைக்கு பொருந்தி போகிறது. சமூகத்தில் அநீதிகள் நீடிக்கும் வரை பிரதிகள் உருவாகிக்கொண்டே தான் இருப்பார்கள். இருக்கிறார்கள். அதனால், இன்றைக்கும் நக்சல்கள் என்றால்...ஆளும் வர்க்கங்கள் குலைநடுங்கி போகின்றன.

”மரம் அமைதியை விரும்பினாலும் காற்று விடுவதில்லை!” 

குருத்து

Aug 3, 2018

ஆண்பாவம் - சில குறிப்புகள்

கொஞ்சம் சோர்வாக இருக்கும் பொழுது, பார்க்ககூடிய படங்களில் ஆண் பாவமும் ஒன்று!

படம் வந்து 33 வருடங்களுக்கு பிறகு...சமீபத்தில் இந்த படம் குறித்து ஒரு கூட்டம் நடத்தியுள்ளார்கள். பாண்டியராஜன் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார். (உபயம் : யூடியூப். படமும் கிடைக்கிறது!)

முதல்படம் கன்னிராசி. இது இரண்டாவது படம். ஒரு நபரை தேர்வு செய்து வைத்து, பிறகு தானே நடித்துவிடலாம் என முடிவெடுத்துள்ளார்.
கதாநாயகனுக்கான லட்சணத்தை, பாரதிராஜா, அவருடைய திரை வாரிசுகள் உடைத்துக்கொண்டே வந்திருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் ரேவதி ரெம்ப பிஸி. ஐந்து நாட்கள் தேதி கொடுத்து...எல்லா காட்சிகளையும் எடுத்திருக்கிறார்கள். மருத்துவமனை காட்சிகளிலெல்லாம் முகத்தை காட்டவேயில்லை. சில இடங்களில் வேறு பெண்ணை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தில் எல்லோரும் அவரவர் சொந்த பெயரிலேயே நடித்திருப்பார்கள்.
பாண்டியன் சீதாவை பெண் பார்க்கும் பொழுது, உயரம் அளவிடும் பொழுது, குதிகாலை உயர்த்தி தன் பிரியத்தை காட்டும் காட்சி மிக அழகு! சொன்னவர் - விஜய்சேதுபதி!

பாண்டியராஜன் சைதைக்காரர் என்பது ஒரு ஆச்சர்யம். மொத்தப் படத்தையும் அதிகபட்சமாக 40 நாட்களுக்குள் எடுத்துமுடித்திருக்கிறார். படம் வெளியாகும் வரை இயக்குநருக்கே நம்பிக்கை இல்லை. ஆனால்.. 230 நாட்கள் ஓடியிருக்கிறது!

தனது பிஸியால், படம் எடுத்தபிறகு, பாடல்கள் தந்திருக்கிறார் இளையராஜா.
இளையராஜாவின் அருமையான பிஜிஎம் படங்களில் இந்தபடமும் முதல் வரிசையில் வந்துவிடும்! இளையராஜா எளிய தயாரிப்பாளர்களும் அணுகும்படி இருந்திருக்கிறார். இந்த படமும் ஒரு சான்று!

படத்தில் ரேவதி நடத்தும் டியூசன் மிகப்பிரபலம். இன்றைக்கும் "ஆண்பாவம் டியூசன் இல்லையே" என பேசிக்கொள்கிறார்கள். - தீபா - ஆண்பாவம் சிறப்பு கூட்டத்தில்.. "படத்தில் மனிதர்கள் நடித்திருக்கிறார்கள். சரி. ஆனால், சிஜி இல்லாத காலத்தில், இறுதி காட்சியில் அந்த ஈயை எப்படி நடிக்கவைத்தீர்கள்?" என பேச்சாளர் கேட்டதற்கு, இயக்குநர் பாண்டியராஜன் பதில் சொல்லவில்லை அல்லது யூடியூப்பில் இல்லை.

எங்கள் வீட்டிலும் அண்ணன், தம்பி இருவர். படத்தில் வரும் நாயகர்களைப் போலவே அத்தனை பிரியங்களும், சிறுவயது சண்டைகளும்! அப்பாவும் வி.கே. இராமசாமி தோற்றம் கொண்டவர் தான்!




- குருத்து

Jun 19, 2018

Eight below (2006) மரண போராட்டம்!



எங்கு பார்த்தாலும் உறைபனி சூழ்ந்திருக்கும் அண்டார்டிகா மலைப் பிரதேசம். அங்கு ஆராய்ச்சிக்கு வருபவர்களுக்கு, ஜெரி உதவுகிற வேலை. அங்கு போய்வர வண்டி எதுவும் பயன்படுத்த முடியாத நிலை. ஆகையால், ஜெரியால் பயிற்சி கொடுக்கப்பட்ட, சுறுசுறுப்பான எட்டு நாட்கள் போய்வர உதவுகின்றன.

மெர்க்குரியிலிருந்து விழுந்த கல்லைத்தேடி, ஆய்வுக்கு வருகிறார் ஒரு விஞ்ஞானி. காலநிலை சரியில்லை என ஜெரி தயங்குகிறான்.. நிர்வாகம் அழுத்தத்தால், வேறு வழியில்லாமல் அரைகுறை மனதோடு அழைத்து செல்கிறான். அந்த பயணத்தின் பொழுதே, புயல் வந்து கொண்டிருப்பதாகவும் உடனே திரும்பும்படியும் உத்தரவிடுகிறார்கள்.. ரிஸ்க் எடுக்காமல் எதுவுமில்லை என ஜெரியிடம் பேசி, அரைநாளில் கல்லைத் தேடி எடுத்துவிடுகிறார். இந்த பயணத்தில் இரண்டுமுறை விஞ்ஞானியின் உயிரை, ஜெரியும், நாய்களும் காப்பாற்றுகிறார்கள். தட்டுத்தடுமாறி வந்து சேருகிறார்கள். புயல் நெருங்கிவிட, அங்கிருந்த அத்தனை பேரையும் அழைத்துக்கொண்டு செல்ல விமானம் தயாராய் நிற்கிறது. நாய்களுக்கு விமானத்தில் இப்பொழுது இடமில்லை. பிறகு வந்து கூப்பிட்டுக்கொள்ளலாம் என ஆறுதல் சொல்கிறார்கள். நாய்களோடு தானும் அங்கிருப்பதாக சொல்கிறான். அது உயிருக்கு ஆபத்து என அவனை அழைத்து செல்கிறார்கள்.

இதுவரை வராத புயல் இப்பொழுது தாக்க, காலநிலை மிக மோசமடைகிறது. நாய்களை அழைத்துவர விமானம் கேட்கிறான். போய்வருவதற்கு சாத்தியமேயில்லை என சொல்லிவிடுகிறார்கள். நாய்களை காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சியில் நிம்மதியில்லாமல் அலைகிறான். மீட்டு வர பல்வேறு வகைகளில் முயன்றும். எதுவும் பலனனிக்க வில்லை. நாட்கள் மெல்ல மெல்ல நகருகின்றன. அந்த உறைபனி குளிரில், புயலில் நாய்கள் வாழ்வதற்காக போராடுகின்றன. 

அந்த நாய்கள் உயிர் பிழைத்தனவா? ஜெரி நாய்களை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெற்றானா என்பது மீதி முழுநீள கதை!

***
பாதிப்படத்திற்கு மேலாக பனிப்பிரதேசத்தில் தான். நம்மால் அந்த கடுங்குளிரை உணரமுடிகிறது. அந்த குளிரில் நாய்களின் உழைப்பு, போராட்டம் என மொத்த படத்தையும் அந்த எட்டு நாய்கள் தாங்கி நிற்கின்றன. ஜெரிக்கு அந்த நாய்களுடான பிணைப்பையும் அருமையாக நம்மால் உணரமுடிகிறது. 

அவர்கள் விட்டு சென்ற பிறகு, வீசும் காற்றில் அவர்களின் கொடி அறுந்து கீழே விழும். ஒரு நாய் ஓடி சென்று, அதை கடித்து குதறும். "உங்களுக்காக நாயா உழைச்சமே, அந்த நன்றி உணர்வு கொஞ்சம் கூட உங்களுக்கு இல்லையேன்னு!" சொல்வது போல தோன்றும்.

சிறு வயதில் பக்கத்துவீட்டில் ராணி என்றொரு அருமையான நாய் ஒன்று இருந்தது. என் மொத்த வாழ்விலும் அதோடு மட்டும் தான் எனக்கு நெருக்கம் இருந்ததாக உணர்கிறேன். மற்றபடி, நாய்கள் என்றால் எப்பொழுது எனக்கு பயம் உண்டு. காரணம். கடித்தால், வயிற்றைச்சுட்டி 16 ஊசி போடவேண்டும் என சுற்றி உள்ளவர்கள் எப்பொழுதும் பயமுறுத்திக்கொண்டே இருந்திருக்கிறார்கள். நமக்கு ஊசின்னா ரெம்ப பயம். 

எங்கள் வீட்டில் எப்பொழுதும் நாய் வளர்த்ததில்லை. அம்மாவிடம் ஆவலாய் எப்போதாவது சொன்னால், உங்களை வளர்க்கிறதே பெரும்பாடா இருக்கு! இதில் நாய் வேற! என்பார்.

இந்தப்படத்தைப் பற்றி நாய் வளர்ப்பவர்கள் எழுதியிருந்தால் இன்னும் உணர்வுபூர்வமாக எழுதியிருப்பார்கள் என நம்புகிறேன்.

இது உண்மையில் நடந்த கதை என்கிறார்கள். 1983-ல் அண்டார்டிகா என்ற பெயரில் ஜப்பானிய படம் ஒன்று வந்திருக்கிறது. அதுவும் இணையத்தில் கிடைக்கிறது. மற்றபடி அந்த படத்தில் இறுதியில் உயிரோடிருந்த நாய்களின் எண்ணிக்கையும், இந்த படத்தில் உயிரோடிருந்த நாய்களின் எண்ணிக்கையும் வித்தியாசப்படுகிறது.

நான் தமிழில் பார்த்தேன். குழந்தைகளோடு பார்க்ககூடிய படம். பாருங்கள்.

குருத்து