தமிழக வழக்கறிஞர்கள் மீதான அடக்குமுறை -பின்னணி-சதி- என்ன?
பகுதி-2
-----------
வழக்கறிஞர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன?
ஹெல்மெட் பிரச்சனைக்காக மதுரை வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராடினார்கள்.ஊர்வலம் சென்றார்கள்.நீதிபதியை விமர்சித்தார்கள். தீர்மானம் நிறைவேற்றினார்கள்.தென் மாவட்ட வழக்கறிஞர்கள் நீதித்துறை ஊழலுக்கு எதிராக ஊர்வலம் சென்றார்கள்; ஊழல் நீதிபதிகள் பட்டியல் வெளியிட்டார்கள்.நீதிபதிகளின் ஊழலை நோட்டீசாக அடித்து மக்களிடம் விநியோகித்தார்கள்.தமிழுக்காக தலைமை நீதிபதி அறையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள்; நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது நீதிமன்ற அறைக்கு வெளியே முழக்கம் எழுப்பினார்கள்;கவர்னரிடம் ஊழல் நீதிபதிகள் தொடர்பாகப் புகார் அளித்தார்கள்.
வழக்கறிஞர்களின் இச்செயல்கள் நீதிபரிபாலனத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இவை வழக்கறிஞர்களின் தொழில் நெறிமுறைகளுக்கு எதிரானது. எனவே நடவடிக்கை எடுத்து வழக்கறிஞர்களிடம் ஒழுங்கை நிலைநாட்டுகிறோம் என்கிறது நீதித்துறையும்,பார்கவுன்சிலும்.
வழக்கறிஞர்களின் மேற்கண்ட நடவடிக்கைகள் அத்து மீறியதா? இல்லையா? கடும் நடவடிக்கைக்கு உரியதா? இல்லையா? இதன் மூலம் வழக்கறிஞர் தொழிலில் உள்ள கிரிமினல்கள்-புரோக்கர்கள் அகற்றப்பட்டு வழக்கறிஞர் தொழிலில் ஒழுங்கு நிலைநாட்டப்படுமா?
*****
ஹெல்மெட் பிரச்சனை என்றால் என்ன?
இரண்டு சக்கர வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்து இருப்போர், குழந்தைகள் , பெண்கள் ஆகியோர் கட்டாயம் ஜீலை1,2015 முதல் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.இத்தீர்ப்புக்கு எதிராக மதுரை வழக்கறிஞர்கள் போராடினார்கள் என்பதே பிரச்சனையின் தொடக்கம்.
மதுரை வழக்கறிஞர்களின் இப்போராட்டங்கள் தொடர்பாக மூன்று வழக்குகள் மதுரை அண்ணாநகர் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடுத்து நடந்து வருகிறது.
உண்மையில் மதுரை வழக்கறிஞர்கள் மக்கள் யாரும் ஹெல்மெட் அணியக் கூடாது என்று சொல்லவில்லை. மாறாக நீதிபதி கிருபாகரன், ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனத்தை, லைசென்சை பறிமுதல் செய்யுங்கள் என்று சட்டத்திற்கு விரோதமாக, அராஜகமாக உத்தரவிட்டதை எதிர்த்தும், தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நகரெங்கும் போலீசு கல்லா கட்டுவது,மக்கள் தவிப்பது என்பதை பார்த்துக் கொதித்தெழுந்துதான் வழக்கறிஞர்கள் போராடினார்கள்.ஹெல்மெட்டை அரசு, விழிப்புணர்வு மூலம் அமல்படுத்த வேண்டும்,ஒரே நாளில் திணிக்கக் கூடாது என்றார்கள்.இது கடும் குற்றமா? ஆனால், நீதிமன்றம் என்ன தீர்ப்புக் கொடுத்தாலும், அத்தீர்ப்பு சட்டப்படியானதோ? இல்லையோ? மக்களைத் துன்புறுத்துமோ? இல்லையோ? அதை யாரும் விமர்சிக்க, எதிர்க்கக் கூடாது என்பதே நீதித்துறை- பார்கவுன்சில் நிலைப்பாடு.சட்டப்படியும்-நியாயப்படியும் இது சரியா? இதற்குமுன் நீதிமன்றத் தீர்ப்புகள் விமர்சிக்கப்பட்டதில்லையா?
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு எதிரான நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு அ.தி.மு.க. வினரால் படுகேவலமாக விமர்சிக்கப்பட்டு, ஏராளமான வன்முறைப் போராட்டங்களும் நடத்தப்பட்டன.தமிழ்நாடே முடக்கப்பட்டது.இதேபோல் நீதிபதி குமாரசாமியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பும் நாடு முழுவதும் கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இதற்கு முன்பாக காவிரி, முல்லைப்பெரியாறு தீர்ப்புகளை எதிர்த்து கர்நாடக, கேரள அரசியல்வாதிகள் போராடியபோதும் உச்சநீதிமன்றம் அமைதியாகத்தான் இருந்தது. சமீபத்தில் வந்த நீதிபதிகள் நியமன ஆணையத் தீர்ப்பை பா.ஜ.க வின் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ” தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் கொடுங்கோன்மை” என மிகக் கடுமையாக விமர்சித்தார். ஆக, நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது, எதிர்த்துப் போராடுவது புதிய ஒன்றோ, குற்றமோ அல்ல.அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமைக்கு உட்பட்டதுதான். கருத்துரிமையை அழிப்பது, அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதென்கிறார் டாக்டர் அம்பேத்கர்.தென்னாப்பிரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காந்தியே போராடியுள்ளார். வெள்ளையர்கள் காலத்தில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்பு நடந்துள்ளது.இதற்கும் மேலாக குற்ற வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு எனப் பல நடவடிக்கைகள் மதுரை வழக்கறிஞர்கள் மீது எடுக்கப்பட்டுவிட்டன எனும்போது சஸ்பெண்ட் நடவடிக்கை எதற்கு?
தொடரும்..
No comments:
Post a Comment