சென்னை மாநகராட்சிக்கு ஒரு பெற்றோரின் கடிதம்!
அனுப்புநர்
இலக்கியா,
5ம் வகுப்பு,
xxxx பள்ளி,
சென்னை
பெறுநர்
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்
அவர்கள்,
xxxx பள்ளி,
சென்னை
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம். சென்னை மாநகராட்சி பள்ளி
மாணவர்களிடம் சுய உறுதிமொழி படிவம் ஒன்றை தந்து, மாணவர்களும், பெற்றோர்களும்
வீட்டிலும், பொது இடங்களிலும் உள்ள சமுதாய கழிவறையை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என
கையெழுத்திட சொல்லி உறுதிமொழி கேட்டிருக்கிறது.
சென்னை மாநகராட்சி நடத்திவரும்
மாநகராட்சி பள்ளிகளில் சென்னையில் 10 மண்டலத்தில் 57 பள்ளிகள் இயங்கிவருகின்றன.
தமிழக அரசாணை எண் : 270ன் படி , 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பறை, 50
மாணவர்களுக்கு ஒரு மலக்கழிப்பறை, கழிப்பறைகள் தண்ணீர் வசதியுடன் இருக்கவேண்டும்
ஆனால், 57 பள்ளிகளில் பல பள்ளிகளில்
சிறுநீர் கழிப்பறைகள் இல்லை. மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப மல கழிப்பறைகள் இல்லாமல்,
மிக மிக குறைந்த அளவே உள்ளன. அதே போல தண்ணீர் வசதியும் போதுமானதாக இல்லை. ஒரு
பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருந்தாலும் ஒரே ஒரு துப்புரவு பணியாளர் மட்டுமே உள்ளார்.
உதாரணமாக சைதாப்பேட்டையில் உள்ள
எம்.ஜி.ஆர் மேல்நிலை பள்ளியில், 1500 மாணவர்கள் படிக்கின்றனர். சிறுநீர் கழிப்பறை
ஒன்று கூட இல்லை.
மலக்கழிப்பறை 8 மட்டுமே உள்ளன. துப்புரவு பணியாளர் ஒருவர் மட்டுமே.
இது தொடர்பாக புரட்சிகர மாணவர் இளைஞர்
முன்னணி மாணவர்களை திரட்டி போராடியதன் விளைவாக, மாநகரட்சி அதிகாரிகளுடன் சென்று
ஆய்வு செய்து, பள்ளி வாரியாக அறிக்கையை தயார் செய்தது. அந்த அறிக்கையின்
அடிப்படையில் அரசாணையின்படி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (எண் : W.P.11666/2014) தொடுத்தது. நீதிமன்றமும் மாநகராட்சி
நிர்வாகத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவு போட்டது. மாநகரட்சியோ கடந்த
இரண்டு ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தில் பல தவணைகளை கேட்டு, பள்ளிகளில் ஆமை வேகத்தில்
அடிப்படை வசதிகளை செய்து கொண்டிருக்கிறது.
சென்னை மாநகராட்சியின் நேரடி கண்காணிப்பில்
உள்ள மாணவர்கள்
படிக்கும் பள்ளிகளுக்கே இந்த கதி என்றால், பொது இடங்களில் பெரும்பாலான இடங்களில்
கழிப்பறை வசதி பற்றி சொல்லவே தேவையில்லை. ஒன்றரை கோடி பேர் வாழும் சென்னையில் பல
பொது இடங்களில் கழிப்பறை வசதியே இல்லை. அப்படியே ஒன்றிரண்டு இருந்தாலும் முறையான
பராமரிப்பு இல்லாமல் தான் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பலவித சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.
ஆகையால், சென்னை மாநகரட்சி
மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கழிப்பறை வசதிகளை ஏற்பாடு செய்து தந்துவிட்டு
இப்படி கையெழுத்து கேட்பது தான் நேர்மையானது என கருதுகிறோம். இந்த படிவத்தில்
கையெழுத்து போட்டால் அதற்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் ஆனால் அதை
கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு சமூக சூழ்நிலை நிலவுவதால் கையெழுத்து இட முடியாத
நிலையில் இருக்கிறோம். இந்த கடிதத்தை மாநகராட்சிக்கும் அனுப்பிவைக்கும்படி
பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி.
இப்படிக்கு,
பெற்றோர்.
No comments:
Post a Comment