ஆப்பிரிக்காவில் உள்ள கிழக்கு கேப் பகுதியில் காம்டூஸ் ஆற்றங்கரை ஓரம் உள்ள
ஒரு கிராமத்தில் 1789-ல் பிறந்தவர் சாரா பார்ட்மன்.
பிரிட்டிஷ்காரர்களால்
கருப்பினத்தவர்கள் அடிமையாக்கப்பட்டு, நிறவெறிக்கு ஆளாக்கப்பட்டதுடன், அந்த
இனத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கும்
ஆளாக்கப்பட்டார்கள். தென்னாப்பிரிக்கப் பழங்குடி இனமான கோய்ஸன் என்ற இனத்தைச் சேர்ந்த சாரா, சிறு வயது
முதல் கடுமையான உடலுழைப்புக்கு ஆட்படுத்தப்பட்டார். அவருக்கு 18 வயது
இருக்கும்போது தென்னாப்பிரிக்கா வந்த இங்கிலாந்து கப்பலின் மருத்துவர்
வில்லியம் டன்லப்பின் கண்களில் படுகிறார்.
வழக்கத்துக்கு மாறான உடல்
அமைப்பைக் கொண்ட சாராவைப் பார்த்ததும் அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி
வேலைக்காக இங்கிலாந்துக்குக் கப்பலில் அழைத்துச் செல்கிறார். அங்கே,
சொன்னபடி அவர் நடந்து கொள்ளவில்லை. சாராவை ஆடையின்றிக் காட்சிப்பொருளாக்கி,
ஊர் ஊராகக் கொண்டுசென்று கண்காட்சி நடத்திப் பணம் சம்பாதிக்கிறார். சாராவை
‘பூதாகரமான’பெண் என்று அவர் விளம்பரம் செய்தார். சாராவைப் பார்க்க மக்கள்
குவிந்தனர். ஈவிரக்கம் இல்லாமல் அவள் உடலைத் தீண்டிப்பார்த்தார்கள்.
நான்கு
ஆண்டுகளுக்குப் பின்னர் லண்டனிலிருந்து அவர் பிரான்ஸுக்குக்
கொண்டுசெல்லப்பட்டு, அங்கும் காட்சிப் பொருளாக்கப்பட்டார். பிரான்ஸின்
நகரங்கள் அனைத்துக்கும் கொண்டு செல்லப்பட்டார். இரக்கமற்றவர்கள் அவளைப்
பாலியல் தொழிலிலும் தள்ளினார்கள். கடுமையான பாலியல் நோயின் விளைவால் தனது
25-வது வயதில் (1815-ல்) சாரா மரணமடைந்தார்.
சாரா இறந்த பிறகும் அவரது உடல் முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லை. ஜார்ஜியஸ் குய்வர் என்ற அறிவியலாளர் சாரா உடலமைப்பின் மீது ‘ஆர்வம்’கொண்டு அவர் உடலை ஆராய்ச்சி செய்ய விரும்பினார். பிளாஸ்டர் காஸ்ட் முறையில் பொம்மைபோல வடித்தார். பிறகு, அவரது உடலிலிருந்து மூளை, அந்தரங்க பாகங்கள் போன்றவற்றை எடுத்து பாரிஸ் நகரில் உள்ள மியூசியத்தில் காட்சிக்கு வைத்தார்.
சாரா இறந்த பிறகு, ஏறக்குறைய 160 ஆண்டுகள் அவரது உடல் உறுப்புகள்
காட்சிப்பொருள்களாக இருந்தன. பலத்த எதிர்ப்பின் விளைவாக 1974-ம் ஆண்டில்
பொதுமக்கள் பார்வைக்குத் தடை விதிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்காவின் அதிபராக ஆன நெல்சன் மண்டேலா, சாராவின் உடல் கண்ணியமான
முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் உடலின் எஞ்சிய பகுதிகளைத்
தரும்படி 1994-ல் பிரான்ஸிடம் கோரிக்கை வைத்தார்.
ஆனால், தமது நாட்டுச்
சட்டப்படி அவ்வாறு தர இயலாது என பிரான்ஸ் கூறியது. ஏனென்றால், காலனி
ஆட்சியின்போது பல நாடுகளிலிருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட பாரம்பரியப்
புதையல்கள் ஏராளமாக பிரான்ஸ் வசம் இருந்தன. எனவே, அவற்றையெல்லாம்
அரசுடைமையாக்கி பிரான்ஸ், சட்டம் இயற்றியிருந்தது. மண்டேலா கோரியபடி
சாராவின் எஞ்சிய உடல் பாகங்களைத் திரும்பக் கொடுத்தால், மற்ற நாடுகளும் தம்
நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பாரம்பரியச் செல்வங்களைத் திரும்பக்
கேட்கலாம் என்று அஞ்சிய பிரான்ஸ் தர மறுத்துவிட்டது.
ஆனாலும் மண்டேலா
விடாமல் போராடியதாலும், மனித உரிமை அமைப்புகளும் பெண்கள் அமைப்புகளும்
மண்டேலாவுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்ததாலும் பிரான்ஸுக்கு நெருக்கடி
அதிகரித்தது. குறிப்பாக, கோய்ஸன் இனக் கவிஞரும், பெண் உரிமைச்
செயல்பாட்டாளருமான டயானா ஃபெர்ரஸ் சாரா பார்ட்மன் குறித்து 1988-ல் எழுதிய ‘பிறந்த நாட்டுக்குக் கண்ணியமாக அழைத்துச்
செல்வேன்’என்ற உருக்கமான கவிதை மனித உரிமையாளர்கள் மத்தியில் பெரும்
ஆதரவைத் திரட்டியது. அதனால், தென்னாப்பிரிக்கக் கோரிக்கைக்கு மட்டும்
விதிவிலக்கு அளித்து, புதிய சட்டம் இயற்றி பிரான்ஸ் அனுமதியளித்தது.
சாராவின் எஞ்சிய உடல் பாகங்கள் 2002-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா வந்து
சேர்ந்தது. அந்நாட்டின் பெண்கள் தினமான ஆகஸ்டு 9 அன்று அவரது எஞ்சிய உடல்
பாகங்கள் அடக்கம் செய்யப்பட்டன. அந்தக் கல்லறை தேசியச் சின்னம் என்று
மண்டேலா அன்றே அறிவித்தார். ஒரு மனித ஆயுட்காலத்தையும் கடந்து
அவமதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடல் இனியாவது அமைதியாக உறங்கட்டும்.
பா.ஜீவசுந்தரி,
எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர்,
தொடர்புக்கு: asixjeeko@gmail.com