Jun 21, 2015

யோகாவும் ஆர்.எஸ்.எஸ்.யும்!


மோடி அரசின் கோரிக்கையை ஐ.நா. அங்கீகரித்து ஜூன் 21-ஐ சர்வதேச யோகா தினம் என அறிவித்து இருக்கிறது. யோகாவை கல்லாக் கட்டும், கார்ப்பரேட் சாமியார்கள் எல்லாம் பம்பரம் போல சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள். வாழைப்பழத்திற்குள் மருந்தை வைத்து மாடுகளுக்கு தருவார்கள். அதுபோல இந்துத்துவவாதிகள் யோகாவிற்குள் இந்துத்துவ கருத்துக்களை வைத்து தந்துகொண்டிருக்கிறார்கள். இனியும் தருவார்கள்.

வீட்டிற்கு அருகில் உள்ள பார்க்கில் காலையில் இரண்டே இரண்டு ஆர்.எஸ்.எஸ் ஹெட்கேவரின் வாரிசுகள் ஏதோதோ புரியாத சமஸ்கிருத மந்திரங்களை சொல்லி, தரையில் எதையும் விரிக்காமல் மண் தரையிலேயே உருண்டு புரண்டு உடற்பயிற்சி செய்துகொண்டிருப்பார்கள். இன்று யோகா தினத்தை சாக்காக வைத்து 20 பேரை திரட்டியிருந்தார்கள்.

நான் யோகா எதிர்ப்பாளன் எல்லாம் கிடையாது. கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக யோகா வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 5.30 முதல் 6.30 வரை போய்க்கொண்டிருக்கிறேன். ஆஸ்துமா தொந்தரவு இருந்தபடியால், மூச்சுப்பயிற்சிக்காகவும், உடற்பயிற்சிக்காகவும் துவக்கத்தில் போனேன். 1 வருடத்தில் ஹோமியோபதி மருந்தினாலும், யோகாவின் உதவியினாலும், உணவுக் கட்டுப்பாட்டினாலும் ஆஸ்துமாவிலிருந்து விடுதலை பெற்றேன். இருப்பினும், மரபு வழியாக வந்த நோய் என்பதால், அதன் வேர் இன்னும் உடலில் இருப்பதால், தொடர்ந்து யோகாவை தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

யோகா செய்வதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கமுடியும். ஏதேனும் ஒரு நோயில் சிரமப்பட்டுக்கொண்டிப்பவர்கள் யோகாவை தொடரும் பட்சத்தில் அதை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளமுடியும். யோகா நல்லது என நல்லெண்ணத்தில் வருபவர்கள் வெகு சீக்கிரத்தில் நின்றுவிடுவார்கள். நாலுநாள், 10 நாள், 30 நாள், 6 மாதம் என நின்று போனவர்கள் அதிகம். பகுதியில் நான்கு வருடங்களில் பாதிபேரை யோகாவை வைத்தே பழக்கமாகியுள்ளேன்.

திருமணத்தில் ஐயர் ஓதுவது போல யோகா வாத்தியார்கள் அதன் செய்முறையில் புரியாத சமஸ்கிருத மந்திரங்களை சொல்வார்கள். மாணவர்களும் சொல்வார்கள். ஒருமுறை அர்த்தம் கேட்டபொழுது, இதெல்லாம் சொன்னால் ரெம்ப நல்லது என்றார். அர்த்தம் தெரியவில்லை என புரிந்துகொண்டேன். நான் மந்திரங்களை சொல்வதில்லை. அவர்களும் ஏன் சொல்லவில்லை என கேள்வியும் கேட்பதில்லை. இந்த நான்கு வருடங்களில் 7 வாத்தியார்கள் மாறியிருக்கிறார்கள். ஒரு சிலர் வகுப்பு முடிகிற தருவாயில், இந்துத்துவ கருத்துக்களை நைச்சியமாக பேசுவார்கள். நான் அதில் கேள்வி எழுப்புவதின் மூலம் அவர்களை இடைமறித்திருக்கிறேன். இப்பொழுது உள்ள வாத்தியார் கருத்துக்கள் பேசுவதில்லை. தொல்லையும் இல்லை. தொடருகிறேன்.

நான் யோகா சேரும் பொழுது ரூ. 350 இருந்தது. இப்பொழுது ரூ.600 வாங்குகிறார்கள். விசாரித்த பொழுது, பல இடங்களில் யோகாவை வைத்து நிறைய கல்லாக் கட்டுகிறார்கள் என தெரிய வந்தது. உடல் உழைப்பு செய்கிறவர்கள் வருவதில்லை என சொல்ல தேவையில்லை. உடல் உழைப்பிலிருந்து பிரிந்த நடுத்தர வர்க்கம் தான் பெரும்பாலும் யோகாவை நாடுகிறார்கள்.

நடுத்தரவர்க்கத்தில் பலர் தான் மோடி அப்படி, இப்படி என இல்லாத பில்டப் எல்லாம் கொடுத்தார்கள்.  அதனால் தான் மோடி அரசு யோகாவிற்கு ஒரு அமைச்சரவையை உருவாக்கி சுறு சுறுப்பாக வேலை செய்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் என் செல்பேசிக்கு யோகா நல்லது என நாலைந்து குறுஞ்செய்திகளை அரசு அனுப்பி வைத்திருக்கிறது!

ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு ஆள் பிடிக்க அவர்களுக்கு கோயில், கும்பாபிசேகம், கலவரம் என பலவற்றில் இப்பொழுது யோகாவும் சேர்ந்துள்ளது. யோகா நல்லது என நல்லெண்ணத்தில் வருபவர்களை ஆர்.எஸ். எஸ். சிறிது சிறிதாக தன் இந்துத்துவ வெறிக்கருத்துக்களை திணிக்கும். நாம் தாம் கவனமாய் இருக்கவேண்டும்!

நன்றி : சாக்ரடீஸ்

Jun 17, 2015

நினைவுகள் அழிவதில்லை!



"போராளியை கொல்லலாம்.
போராளியின் லட்சியத்தை?”

******
 
ஆசிரியர் : நிரஞ்சனா

இந்தப் பூமிப்பந்தில் பல கோடி மாந்தர்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர். ஆனால் சிலரது வாழ்க்கை மட்டுமே வரலாற்றில் இடம் பெறுகிறது. அவர்கள் தமக்கென மட்டுமே சுயநலத்துடன் வாழாமல், சக மனிதர்களுக்காகவும், சமூகத்திற்காகவும் வாழ்ந்து சென்றதே அதற்கான காரணம் ஆகும். அவர்களது வாழ்க்கையானது வரலாற்று வானில் சுடர்வீசும் நட்சத்திரமாகத் திகழ்ந்து வாழும் மக்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. அப்படிப்பட்டதொரு தியாக வாழ்க்கையில் ஒளிவீசிய நான்கு இளைஞர்களின் வாழ்க்கையை நமக்கு அறியத்தருகிறது இந்த நூல்.

அன்றைய பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் காலடியில் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் கிராமப் புறங்களில் நிலப்பிரபுக்கள் என்றழைக்கப்படும் பண்ணையார்கள் மற்றும் ஜமீன்தார்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. அவர்கள் வைத்ததே சட்டம் என்று குறுநில மன்னர்களைப் போல வாழ்ந்துவந்தனர். அவர்களது நிலங்களில் வேலைசெய்யும் ஏழைக் கூலித்தொழிலாளர்களுக்கு முறையான கூலி தரப்படுவதில்லை. பண்ணைகள் அவர்களைக் கொத்தடிமைகளாக நடத்தினர். வட்டிக்குப் பணம் கொடுத்து, ஏமாற்றி ஏழை விவசாயிகள் உழைத்துப் பிழைத்த சிறிய அளவு நிலங்களையும் பிடுங்கிக் கொண்டனர். இக்கொடியவர்கள் ஏழைவிவசாயிகளின் வீட்டுப் பெண்களையும் விட்டுவைப்பதில்லை. இப்படிப்பட்டதொரு நிலைதான் அன்றைய கேரளத்தின் மலபார் பகுதியிலிருந்த கையூர் கிராமத்திலும் இருந்தது.

ஏழை விவசாயக்குடும்பத்தில் பிறந்த அப்பு, சிறுகண்டன் ஆகிய இளைஞர்களுக்கு கையூர் நிலப்பிரபுவின் அக்கிரமங்கள் ஆத்திரமூட்டின. அவ்வூரிலிருந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் அவர்களுக்கு வழிகாட்டினார். மக்களை ஒன்றுதிரட்டிப் போராடமல் நிலப்பிரபுவின் கொடுமைகளை ஒழிக்க முடியாது என்கிற பொதுவுடைமைத் தத்துவத்தை அவர்களுக்கு விளக்கிக் கூறினார். தெளிவுபெற்ற இளைஞர்கள் ஏழை விவசாயிகளை அணிதிரட்டி அந்த ஊரில் விவசாய சங்கத்தை உருவாக்கினர். அதன்மூலமாக நிலப்பிரபுவின் கொடுமைகளை துணிச்சலாக எதிர்கொண்டு முறியடித்தனர். அவ்வூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வட்டார அளவிலான விவசாயிகளின் மாநாட்டிற்கான ஏற்பாடுகளின்போது நிகழ்ந்த சிறிய அசம்பாவிதத்தை முன்னிட்டு ஆளும் வர்க்கத்தின் ஏவல்நாயான அன்றைய மலபார் போலீசு கையூர் கிராம மக்களின் மீது கொடூரமான வன்முறைகளை அரங்கேற்றியது. நிலப்பிரபுவின் கொடுங்கோன்மைக்கெதிராக மக்களை அணிதிரட்டிப் போராடிய அப்பு, சிறுகண்டன், அபுபக்கர், குஞ்ஞம்பு ஆகிய நான்கு இளைஞர்களும் பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்டுத் தூக்கிலிடப்படுகின்றனர். மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தியாகிகளான இந்த வீரப்புதல்வர்களின் வாழ்க்கையை எளிய நடையில், படிப்பவர்களின் இதயத்தில் ஆழமாகப் பதியவைத்துள்ளார் இந்நூலாசிரியர்.

பள்ளி,கல்லூரிகளில் நமக்குச் சொல்லப்படும் வரலாறானது திரிக்கப்பட்ட,பொய்யான,ஆளும் வர்க்கங்களின் நோக்கத்திற்கேற்ப புனையப்பட்டதாகும். ஆனால், உண்மையான வரலாறு என்பது உழைக்கும் மக்களால் படைக்கப்படுவது. அம்மக்களே வரலாற்றின் நாயகர்கள் ஆவர். மனிதகுல மேம்பாட்டிற்காகப் போராடியவர்களே உண்மையான வரலாற்று நாயகர்கள். இந்நூலை நீங்களும் படித்துப் பாருங்கள். ஏழை விவசாயிகளின் பிள்ளைகளாகப் பிறந்து, சமூக மாற்றத்திற்காகப் போராடி வரலாறாக வாழும் இந்த இளைஞர்களின் வீர உணர்வு நம்மையும் பற்றிக்கொள்ளும்.

- மருதமுத்து