Mar 22, 2008
""இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை - பகத்சிங்
மார்ச் 23 - பகத்சிங்கும் அவருடைய தோழர்களும் தூக்கிலிடப்பட்ட நாள்.
'பகத்சிங்' - 'விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம்' என இந்த கட்டுரையில் சொல்லப்படுவது, வெறும் அலங்கார வார்த்தைகளல்ல! சத்தியமான வார்த்தைகள்.
பகத்சிங்கை வாசியுங்கள். பிறகு, நம் வீடு, நம் குடும்பம் என்று சிறு வட்டத்துக்குள் வாழ்க்கையை ஓட்ட உங்களால் முடியாது. உங்களிடத்தில் கொஞ்சமாய் ஒட்டிகொண்ட பகத்சிங்கும், சமூக அநீதிகள் கண்டு, உங்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க விடமாட்டான் - மகா
18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்புநிசாம், மருதுதொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் இந்த எல்லைக்கோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது.
எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாக அவற்றை நிறுவனமயமாக்கு வதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிடமுடியும் என்ற உத்தியை 1857 எழுச்சிக்குப் பின் அமலாக்கினார்கள் வெள்ளையர்கள். அதாவது துரோகிகளையே தியாகிகளாக சித்தரித்துக் காட்டுவதன் மூலம் அடிமைத்தனத்துக்குள்ளேயே "விடுதலையைக்' காணும்படி மக்களைப் பயிற்றுவிக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.
உண்மையான ஆட்சியதிகாரத்தைத் தம் கையில் வைத்துக் கொண்டு மன்னராட்சிக்குரிய அடையாளங்களை மட்டும் நீடிக்க அனுமதித்ததன் மூலம் துரோகிகளைத் திருப்திப்படுத்திய பிரிட்டிஷார், அதே உத்தியை மக்களுக்கும் விரிவுபடுத்தினார்கள். இதன் விளைவாக 18,19ஆம் நூற்றாண்டுகளில் துரோகிகள் எனக் கருதப்பட்டோரின் வழித்தோன்றல்கள், 20ஆம் நூற்றாண்டில் சமரசவாதிகளாக அவதரித்தார்கள்.
இந்தியர்களுடைய மனக்குறைகளை மேன்மை தங்கிய பிரிட்டிஷ் அரியணைக்கு மனுச் செய்து தெரிவிக்கும் நோக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் 1885இல் வெள்ளையர்களாலேயே உருவாக்கப்பட்டது. பாரம்பரியமிக்க பிரிட்டிஷ் அடிவருடிகளான நிலப்பிரபுக்களின் நலனை மட்டுமின்றி, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து ஆதாயமடைய விரும்பிய அனைத்திந்திய வர்க்கமான தரகு முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இத்தகையதொரு அரசியல் அமைப்பு தேவைப்பட்டது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் இந்தத் தரகுக் கும்பலின் முதலாளித்துவ வர்க்கப் பின்புலத்தையும், இவர்களுக்கிடையிலான உறவையும் புரிந்து கொள்ளாத எவரும் இந்திய விடுதலையின் மீது காங்கிரசும் காந்தியும் நிலைநாட்டி இருந்த ஏகபோகத்தை உடைக்க முடியாது என்ற நிலையும் தோன்றியது.
இந்திய விடுதலை இயக்கத்தினுள் காந்தி நுழைந்த பிறகு, அவருடைய அகிம்சை வழியிலான போராட்ட முறை மூலம்தான், இந்திய விடுதலை இயக்கம் உண்மையான மக்கள் திரள் இயக்கமாக மாறியது என்ற மிகப்பெரிய வரலாற்றுப் புரட்டு திட்டமிட்டே பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது. இது, இரண்டு நூற்றாண்டுகளாக ஆயுதம் தாங்கிப் போராடிய லட்சோப லட்சம் மக்களின் போராட்டங்களை இருட்டடிப்பு செய்யும் அயோக்கியத்தனம்.
""வன்முறைப்பாதையா, அகிம்சைப் பாதையா'' எனப் போராட்ட வழி முறைகளில்தான் விடுதலை இயக்கத்தில் வேறுபாடு நிலவியதைப் போலவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பொது நோக்கில் அனைவருக்கிடையிலும் ஒற்றுமை நிலவியதைப் போலவும் ஒரு பொய்ச்சித்திரத்தைப் பதிய வைத்திருக்கிறது நமது அதிகாரபூர்வ வரலாறு. உண்மையில், ஆங்கில ஏகாதிபத்தியத்தோடு சமரசம் செய்து கொண்ட காங்கிரசு, முசுலீம் லீக் ஆகிய தரகு முதலாளித்துவ அரசியல் சக்திகள் எவ்விதச் சமரசத்துக்கும் இடமின்றி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை சமருக்கிழுத்த தேசியவாத சக்திகள் என இரு போக்குகள்தான் 20ஆம் நூற்றாண்டின் விடுதலை இயக்க வரலாற்றில் களத்திலிருந்தன.
1921, 1930, 1942 என ஏறத்தாழ பத்தாண்டு இடைவெளிகளில் ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், "வெள்ளையனே வெளியேறு' இயக்கம் என மூன்று போராட்ட இயக்கங்கள் காந்தியின் சத்தியாக்கிரக முறையில் துவக்கி நடத்தப்பட்டன. போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் மக்கள் இயல்பாக போலீசின் தாக்குதல்களுக்கு எதிர்த் தாக்குதல் கொடுக்கத் துவங்கினால், அந்நிய ஆட்சியை தம் சொந்த நடவடிக்கையின் மூலம் தூக்கியெறிய முயன்றால், மறுகணமே காந்தி போராட்டத்தை நிறுத்துவார்.
காந்திக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுவதற்கு முன், அரசு அவரைக் கைது செய்து விடும். பிறகு, "சென்டிமென்ட் அலை' அடிக்கத் துவங்கி, இறுதியில் இந்திய விடுதலையை மறந்து காந்தி விடுதலையாவதே தேசத்தின் லட்சியமாகி விடும். இதுதான் தியாக வேடமணிந்த துரோகத்தின் சுருக்கமான வரலாறு.
இந்தத் துரோகத்துக்கு எதிராக, சமரசமற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பையும், உண்மையான நாட்டு விடுதலையையும் முன்வைத்துப் போராடிய தியாகம், பகத்சிங் என்ற இளைஞனின் வடிவில் விடுதலைப் போராட்ட அரங்கினுள் நுழைகிறது.
""...நாம் புகாமல் இருந்திருந்தால் புரட்சி நடவடிக்கை எதுவுமே ஆரம்பத்திராது என்று நீ கூறுகிறாயா? அப்படியென்றால், நீ நினைப்பது தவறு; சுற்றுச் சூழ்நிலையை மாற்றுவதில் பெருமளவிற்கு நாம் துணை புரிந்துள்ளோம் என்பது உண்மையானாலும் கூட நாம் நமது காலத்தினுடைய தேவையின் விளைவுதான்.'' — சிறையில் தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்ட நிலையில், சுகதேவ் எழுதிய ஒரு கடிதத்திற்கு, பகத்சிங் அளித்த பதில் இது. இத்தகையதொரு பதிலை 18,19ஆம் நூற்றாண்டுகளின் வீரர்கள் கூறியிருக்க முடியாது. முந்தைய நூற்றாண்டுகளில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிய திப்பு முதல் மருது வரையிலான வீரர்களோ, பல்லாயிரக் கணக்கில் போராடி உயிர் நீத்த விவசாயிகளோ, சிப்பாய்களோ, தமது வரலாற்றுப் பாத்திரத்தை உணர்ந்திருக்கவில்லை. அது சாத்தியமும் இல்லை.
தனது வரலாற்றுக் கடமையை அடக்கத்துடன் புரிந்து வைத்திருந்த ஒரு அரசியல் போராளியாக, ஆனால் தன்னை சமூகத்திற்கு மேல் நிறுத்திப் பார்த்துக் கொள்ளாத ஒரு வீரனாக, தனது தியாகத்தின் அரசியல் பயனைக்கூட ஆராய்ந்து புரிந்துகொள்ள முடிந்த அற்புதமாக பகத்சிங் இந்திய விடுதலைப் போராட்ட அரங்கினுள் நுழைகிறான்.
பகத்சிங்கை வெறுமனே நாட்டுக்காக தூக்குமேடையேறிய வீரராக மட்டும் சித்தரிப்பது அவரது வரலாற்றுப் பாத்திரத்தை மறுப்பதாகும். இளம் வயதில் மரணத்திற்கு அஞ்சாத உறுதியே வரலாற்று நோக்கில் ஒருவருக்கு சிறப்பிடத்தை தந்து விடாது. ஏனெனில் காந்தியைச் சுட்டுக் கொன்று தூக்குமேடையேறிய கோட்சேயும் கூட மரணத்திற்கு அஞ்சாத இளைஞன்தான். உயிரை துறப்பதாலல்ல, உயிரைத் துறப்பதற்கான நோக்கத்திலேதான் வீரமும், தியாகமும் அடங்கியிருக்கிறது. பகத்சிங்கின் நோக்கமும், லட்சியமும்தான் அவரது மரணத்தை வரலாறாக்கியது. இளைஞர்களை புரட்சிகர அரசியலுக்கு கவர்ந்திழுத்தது; இன்றளவும் கவர்ந்திழுக்கிறது.
பகத்சிங்கினுடைய காலத்தின் தேவைதான் என்ன?
1919ல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்திய மக்களிடத்தில், குறிப்பாக பஞ்சாப் மக்களிடத்தில் ஆறாத வடுவாகவும், சுதந்திரக் கனலை மூட்டி விடுவதாகவும் அமைந்தது. அப்போது சிறுவனாயிருந்த பகத்சிங்கின் உள்ளத்திலும் இப்படுகொலை ஆழமான காயத்தை உருவாக்கியிருந்தது. இதற்குப் பழி வாங்கும் விதத்தில் உத்தம் சிங் எனும் இளைஞர் 20 ஆண்டுகள் காத்திருந்து படுகொலைக்குப் பின்னணியிலிருந்த அப்போதைய பஞ்சாப் கவர்னர் ஜெனரல் ஓ டயரைச் சுட்டுக் கொன்றார்.
1921ல் காந்தி "ஓராண்டிற்குள் சுயாட்சி' என்ற முழக்கத்தோடு ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். அவ்வழைப்பை ஏற்று மாணவர்கள் தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் அணிதிரண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
1922 பிப்.5ஆம் தேதி உ.பியில் உள்ள சௌரி சௌரா எனும் இடத்தில் அமைதியாகப் போராடிய மக்கள் மீது போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் மடிந்தனர். வெகுண்டெழுந்த மக்கள் சௌரி சௌரா போலீசு நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தியதில் 22 போலீசுக்காரர்கள் கொல்லப்பட்டனர். உடனே ஒத்துழையாமை இயக்கம் காந்தியால் நிறுத்தப்பட்டது. காந்தியின் இந்த எதேச்சதிகாரமான முடிவுக்கு எதிராக காங்கிரசுக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினர் மீதும் அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. காங்கிரசு கை கட்டி வேடிக்கை பார்த்தது. ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு நம்பிக்கையின் மையும், சோர்வும் இந்திய அரசியல் வானை மூடின.
தேசப்பற்றுமிக்க இளைஞர்கள் புதிய நம்பிக்கைகளைத் தேடலாயினர். காந்தியத்தின் மீது துவக்கத்திலேயே விமரிசனம் கொண்டிருந்த பகத்சிங், சுகதேவ் போன்ற இளைஞர்கள் புரட்சிகர அமைப்புகளின் தொடர்பு கிடைக்கப் பெற்றனர். 1924ன் இறுதியில் சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் துவக்கப்பட்ட இந்துஸ்தான் குடியரசுக் கழகம் எனும் அமைப்பில் இணைந்தனர்.
இவ்வமைப்பின் அப்போதைய முன்னணியாளர்களான ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லஹிரி, அஷ்பகுல்லா கான், மன்மத்நாத் குப்தா, சந்திரசேகர் ஆசாத் போன்றோர், 1925 ஆகஸ்டு 9ந் தேதியன்று காக்கோரி எனும் இரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி, அரசு கஜானாவிற்கான பணத்தைக் கொள்ளையடித்தனர். இதனை அரசுக்கு நேர்ந்த சவாலாக உணர்ந்த ஆங்கிலேய அரசு, கடுமையான அடக்குமுறையை ஏவியது. 1926 இறுதியில் தலைமறைவான ஆசாத் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். இயக்கம் செயலற்று நின்றது.
இந்தத் தேக்க நிலையில், 1926இல் லாகூரில் பகத்சிங், பகவதிசரண் வோரா, சுகதேவ், யஷ்பால் முதலானோர் "நவஜவான் பாரத் சபா' எனும் இளைஞர் அமைப்பைத் தோற்றுவித்தனர். வெளிப்படையாக மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையைத் தூண்டும் கூட்டங்கள் இவ்வமைப்பினரால் நிகழ்த்தப்பட்டன.
1927 இறுதியில் ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லஹிரி, அஷ்பகுல்லா கான் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். பலர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இச்சூழ்நிலையில், தலைமறைவாயிருந்த ஆசாத்தோடு பகத்சிங் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பு இந்த இளம் தோழர்களின் தோளில் விழுந்தது.
1925லிருந்து 1927க்கும் இடைப்பட்ட இக்காலத்தில் இயக்கப் பணிகளினூடாக, 1917ன் ரசியப் புரட்சியின் விளைவாக, இந்தியாவில் பரவத் தொடங்கிய சோசலிசக் கருத்துக்களையும், இதர ஐரோப்பியக் கருத்துக்களையும் பகத்சிங்கும், அவரது தோழர்களும் கற்கத் துவங்கினர். பகத்சிங் சோசலிசக் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வதில் முன்ணணியில் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் உருப்பெற்ற அரசியல் கண்ணோட்டம்தான் அவருடைய வளர்ச்சி நிலைகளுக்கு அடிகோலியது. இச்சூழ்நிலையை "நான் நாத்திகன் ஏன்?' எனும் கட்டுரையில் அவர் விவரிக்கிறார்.
""அக்காலகட்டம் வரை நான் வெறுமனே ஒரு கற்பனாவாதப் புரட்சியாளனாகவே இருந்தேன். அது வரை நாங்கள் வெறுமனே பின்பற்றுபவர்களாக மட்டுமே இருந்தோம். இப்பொழுதோ முழுப்பொறுப்பையும் தோளில் சுமக்க வேண்டிய காலம் வந்தது. சில காலமாக ஏற்பட்ட தடுக்க முடியாத எதிர்ப்பால், கட்சி உயிரோடிருப்பதுகூட அசாத்திய மென்று தோன்றியது.... எங்களுடைய வேலைத்திட்டம் பிரயோசனமற்றதென பிற்காலத்தில் உணரக் கூடிய ஒருநாள் வரக் கூடுமோ என சில சமயங்களில் நான் பயந்ததுண்டு. எனது புரட்சிகர வாழ்க்கை யில் அது ஒரு திருப்புமுனையாகும். ""கற்றுணர்'' எனும் முழக்கமே என் மனத்தாழ்வாரங்களில் கணந்தோறும் எதிரொலித்தது...
""நான் கற்றுணரத் துவங்கினேன். என்னுடைய பழைய நம்பிக்கைகள் மாறுதலுக்குள்ளாகத் துவங்கின. எமது முந்தைய புரட்சியாளர்களிடம் பிரதானமாக விளங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான வழிமுறைகள், இப்பொழுது தெளிவான, உறுதியான கருத்துக்களால் நிரப்பப்பட்டன. மாயாவாதமோ, குருட்டு நம்பிக்கையோ அல்ல, மாறாக யதார்த்தவாதமே எங்கள் வழியாயிற்று. அத்தியாவசியத் தேவையையொட்டிய பலாத்காரப் பிரயோகமே நியாயமானதாகும். அனைத்து மக்கள் இயக்கங்களுக்கும் சாத்வீகம் ஒரு விதி என்ற அடிப்படையில் இன்றியமையாததாகும். மிக முக்கியமாக, எந்த லட்சியத்திற்காக நாம் போராடுகிறோம் என்பதைக் குறித்த தெளிவான புரிதலோடிருக்க வேண்டும்.
""களத்தில் முக்கியமான நடவடிக்கைகள் எதுவும் அப்போது இல்லாத காரணத்தால், உலகப் புரட்சி குறித்த பல்வேறு கருத்துக்களைப் படிப்பதற்கு நிறைய அவகாசம் கிடைத்தது. அராஜகவாதத் தலைவர் பக்குனினது எழுத்துக்களையும், கம்யூனிசத் தந்தை மார்க்சினது சில படைப்புக்களையும், அதிகமாகத் தமது நாட்டில் வெற்றிகரமாகப் புரட்சியை நிகழ்த்திக் காட்டிய லெனின், டிராட்ஸ்கி மற்றும் பிறரது கருத்துக்களையும் படித்தேன்.''
பகத்சிங்கிற்கு முந்தைய புரட்சிகர பயங்கரவாதிகள் ஆங்கிலேயர்களுக்கெதிராக வீரஞ்செறிந்த முறையில் போராடிய பொழுதிலும், அரசியல் ரீதியாகப் பின் தங்கியிருந்தனர். சுதந்திரத்திற்குப் பிறகான அரசமைப்பு குறித்தும் தெளிவற்றிருந்தனர். அதன் விளைவாக காந்தி, காங்கிரசின் செயல்பாடுகளை அரசியல்ரீதியில் முறியடிக்கவும், அம்பலப்படுத்த வேண்டிய அவசியத்தையும் உணராமலிருந்தனர். அவ்வகையில், ஒருபுறம் காந்தி, காங்கிரசின் அடிவருடித்தனத்திற்கும், மறுபுறம் புரட்சிகர பயங்கரவாதிகளின் ஆயுதவழிபாட்டு சாகசவாதத்திற்கு எதிராகவுமான ஒரு மாற்றை உருவாக்க பகத்சிங், பகவதிசரண் வோரா முதலான தோழர்கள் முயன்றனர்.
இதனடிப்படையில், 1928 செப்டம்பர் 9,10 தேதிகளில் டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் அதுவரை இந்துஸ்தான் குடியரசுக் கழகமாக இருந்த அமைப்பின் பெயர், இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கழகமாக (இ.சோ.கு.க) மாற்றப்பட்டது.
காந்தி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தன்னை புரட்சியாளர்களிடமிருந்து கவனமாகத் தூரப்படுத்திக் கொண்ட போதிலும், புரட்சியாளர்கள், காங்கிரசு நடத்திய மக்கள் போராட்டங்களிலிருந்து அவ்வாறு தம்மைத் தூரப்படுத்திக் கொள்ளவில்லை. நாட்டு விடுதலைக்கான அனைத்து முயற்சிகளிலும் அவை பலாத்கார முறைகளிலானாலும் சரி, சாத்வீக முறைகளிலானாலும் சரி புரட்சியாளர்கள் உத்வேகத்தோடு ஈடுபட்டனர். இவ்வகையிலேயே, 1928இல் சைமன் கமிஷன் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர்.
லாகூரில், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பிரதானமாக நவஜவான் பாரத் சபாவினால் ஏற்பாடு செய்யப்பட்டது. போலீசு விதித்த தடையை மீறி, அக்டோபர் 30ஆம் தேதியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலீசு தடியடி நடத்தியது. "பஞ்சாப் சிங்கம்' என்றழைக்கப்பட்ட லாலா லஜபதிராய் எனும் முதிய தலைவர் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இரண்டு வாரங்களில் அவர் உயிர் நீத்த பொழுது, வடஇந்தியாவே கொந்தளித்தது. லஜபதிராயின் இறுதி ஊர்வலத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.
மக்களிடம் எழுந்த ஆவேசத்திற்குச் செயல்வடிவம் கொடுக்க இ.சோ.கு.க தீர்மானித்தது. லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து டிச17 அன்று, அவர் மீது தடியடிப் பிரயோகம் நடத்திய சாண்டர்ஸ் எனும் போலீசு அதிகாரியை, போலீசு நிலைய வாசலிலேயே வைத்து ராஜகுருவும், பகத்சிங்கும் சுட்டுக் கொன்றனர். மறுநாள் லாகூர் முழுதும் சாண்டர்ஸை கொலை செய்ய நேர்ந்ததற்கான அவசியம் குறித்து இ.சோ.கு.க சுவரொட்டி ஒட்டியது. பகத்சிங்கும், இதர தோழர்களும் லாகூரை விட்டுத் தப்பிச் சென்றனர். இதற்கு முன்பு எத்தனையோ முறை ஆங்கிலேய அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டிருந்த போதிலும், சாண்டர்ஸ் படுகொலையின் அரசியல் முக்கியத்துவம் காரணமாக, புரட்சியா ளர்கள் நாடு முழுதும் போற்றப்பட்டனர்.
தலைமறைவான சூழலில் நாட்டின் அரசியல் சூழலை புரட்சியாளர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர். பகத்சிங்குடன் நவஜவான் பாரத் சபாவில் இணைந்து செயல்பட்ட தொழிலாளர்விவசாயிகள் கட்சியின் தலைவர் சோகன் சிங் ஜோஷ், 1928 சாண்டர்ஸ் கொலைக்குப் பிறகு கல்கத்தாவில் பகத்சிங்கைச் சந்தித்த பொழுது ""நீங்கள் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஒருங்கிணையுங் கள். நாங்கள் ஆங்கில அரசின் ஒருங்கிணைவை உடைத்தெறிகிறோம். நாம் இப்படி ஒரு வேலைப் பிரிவினையை ஏற்படுத்திக் கொள்வோம்'' என்று பகத்சிங் கூறியதாகப் பதிவு செய்துள்ளார். கம்யூனிசம் அவர்களை ஈர்த்த போதிலும், "மாபெரும் மக்கள் இயக்கத்தின் இராணுவமாக உருக் கொள்வதே' இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கழகத்தின் இலக்காக இருந்தது. எனினும், மாபெரும் மக்கள் இயக்கம் குறித்த அவர்களது கருத்து கற்பனையிலிருந்து உதித்த ஒன்றல்ல.
அன்றைய சூழலில், தொழிற்சங்க இயக்கம் நாட்டில் முன்னேறிக் கொண்டிருந்தது. 1928இல் வட மாநிலங்களில் பரவலாக தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் போர்க் குணத்தோடு நடைபெறலாயின. வளர்ந்து வரும் தொழிலாளர் இயக்கத்தைக் கடுமையாக ஒடுக்கும் முகமாக "தொழிற் தகராறு மசோதா'வை டெல்லி மத்திய சபையில், ஆங்கில அரசு கொண்டு வந்தது.
"தொழிற் தகராறு மசோதா' நிறைவேற்றப்படும் நாளன்று டெல்லி மத்திய சபையில் உயிர்ச்சேதமின்றி வெடிகுண்டு வீசுவதென்றும், தானாகவே கைதை ஏற்றுக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்காடுவதன் மூலம் ஆங்கில அரசின் அடக்குமுறைகளை அம்பலப்படுத்துவ தெனவுமான திட்டத்தை பகத்சிங் மத்தியக் கமிட்டியில் முன்வைத்தார். இவற்றை செய்து முடித்த பின்னால் ஒரு வேளை தப்ப முடியவில்லையென்றால், தூக்கு மேடை செல்லவும் தயாராக இருக்க வேண்டுமென்றார் பகத்சிங். அவர் முன் வைத்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
திட்டமிட்டபடி, 1929 ஏப்ரல் 8ஆம் தேதியன்று கேள்வி நேரத்தில் எதிர்பார்த்தபடியே வைஸ்ராயின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி "தொழிற் தகராறு மசோதா' நிறைவேறியதை அறிவிக்க ஜெனரல் சூஸ்டர் எழுந்தார். உடனடியாக பார்வையாளர் அரங்கிலிருந்த பகத்சிங்கும், பி.கே.தத்தும் வெடிகுண்டு களை காலி இருக்கைகளின் மீது வீசினார்கள். "செவிடர்களை கேட்கச் செய்வதற்கு வெடிகுண்டு முழக்கங்கள் அவசியமானவை' எனும் தலைப்பிலான சிவப்புத் துண்டறிக்கைகளை வீசியவாறு, "புரட்சி நீடுழி வாழ்க, ஏகாதிபத்தியம் ஒழிக, உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்' ஆகிய முழக்கங்களை உத்வேகத்தோடு எழுப்பினார்கள். நெடு நேரம் அவர்களை நெருங்கவும் தயங்கியவாறு போலீசார் நின்றனர். பின்னர் பகத்சிங் அவர்களை நோக்கி தாங்கள் கைதுக்குத் தயாராக இருப்பதாகவும், தங்களிடம் ஆயுதங்கள் இல்லையெனவும் உறுதியளித்த பின்னரே அந்த சூரப்புலிகள் அவர்களை நெருங்கி கைது செய்தனர்.
1929 ஜீன் 6ஆம் தேதியன்று பகத்சிங்கும், பி.கே.தத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை வரலாற்றுப் புகழ் பெற்றதாகும். வெடிகுண்டு வீசியதை ஏற்றுக்கொண்ட தோழர்கள், அதன் நோக்கம் உயிர்ப் பலியல்லவென்றும், அதன் அரசியல் நோக்கம் குறித்தும் வாதாடினர்.
""எங்களது ஒரே நோக்கம் "செவிடர்களைக் கேட்கச் செய்வதும்', செவிமடுக்காதவர்களுக்குத் தக்க எச்சரிக்கை வழங்குவதுமேயாகும். மிகப்பலரும் எங்களைப் போன்றே செய்ய விரும்பினர். வெளித் தோற்றத்தில் அமைதியாகக் காட்சியளிக்கும் இந்திய மக்கட் கடலிலிருந்து, ஒரு மாபெரும் சூறாவளி எழும்பவிருக்கிறது... கற்பனாவாத சாத்வீகத்தின் காலம் முடிந்து விட்டதைத் துளியும் சந்தேகத்திற்கிடமின்றி இளைய தலைமுறை ஏற்றுக் கொண்டு விட்டதை நாங்கள் அடையாளப்படுத்த மட்டுமே செய்துள்ளோம்.''
அன்று சர்வதேசப் பத்திரிக்கை களிலும், தேசபக்த உணர்வுமிக்க இந்தியப் பத்திரிக்கைகளிலும் விரிவாக வெளியிடப்பட்ட பகத்சிங்கின் அறிக்கைகள் மக்களால் பேரார்வத்தோடு வரவேற்கப்பட்டன. வழக்கை விரைந்து நடத்திய அரசு, 1929 ஜீன்12 அன்று பகத்சிங் மற்றும் பி.கே.தத் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.
சிறையிலடைக்கப்பட்ட தோழர்கள் அங்கேயும் தமது போராட்டத்தைத் தொடர்ந்தனர். அன்றைய சூழலில் அரசியல் கைதிகள் கிரிமினல் கைதிகளைப் போல நடத்தப்படுவதைக் கண்டித்தும், வெள்ளை அரசியல் கைதிகளுக்கு காட்டப்பட்ட பாரபட்சத்தைக் கண்டித்தும், பகத்சிங் லாகூர் சிறையிலிருந்தும், பி.கே.தத் மியான்வாலி சிறையிலிருந்தும் ஜூலை13ம் தேதியன்று உண்ணா விரதத்தை துவங்கினார்கள். கைது செய்யப்பட்ட பிற புரட்சியாளர்களும், பகத்சிங், தத்துடன் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். அவர்களுக்கு வலுக்கட்டாயமாக உணவு புகட்ட முயன்ற முயற்சிகளைக் கடுமையாக எதிர்த்தனர். 63 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு ஜதின்தாஸ் செப்டம்பர் 13ஆம் தேதியன்று உயிர் நீத்தார். அவரது உடல் லாகூர் சிறையிலிருந்து கல்கத்தா எடுத்துச் செல்லப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் 6 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.
சாண்டர்ஸ் கொலை வழக்கு இரண்டாம் லாகூர் சதி வழக்காக ஜீலை 10 முதல் துவங்கியது. பகத்சிங் இவ்வழக்கிலும் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். பகத்சிங்கும் தோழர்களும் வழக்கு மேடையின் நியாய வேடத்தைக் கேள்விக்குள்ளாக் கினர். லெனின் தினம் மற்றும் காக்கோரி தினம் நீதிமன்றத்திலேயே தோழர்களால் கொண்டாடப்பட்டது. பகத்சிங், மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு தங்களது வாழ்த்துத் தந்தியை அனுப்ப நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஒரு கட்டத்தில் இவ்வழக்கு விசாரணை, மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்குவதற்குப் பதிலாக புரட்சியாளர்களுக்குச் செல்வாக்கு உண்டாக்குவதை உணர்ந்த ஆங்கிலேய அரசு, 1930 மே 1 ஆம் தேதியன்று லாகூர் சதி வழக்கு சட்டவரைவின் மூலமாக வழக்கை விசேட நீதிமன்றத்திற்கு மாற்றியது. அதனடிப்படையில், அனைத்து நீதித்துறை விதிமுறைகளும் காற்றில் பறக்க விடப்பட்டு, ""குற்றம் சாட்டப்பட்டோர் இல்லாமலேயே விசாரணை நடைபெறலாம்'' என அறிவித்தது. பிறகு "தடங்கலின்றி' நடைபெற்ற விசாரணை நாடகம் அக்டோபர் 7ஆம் தேதியன்று பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்குத் தூக்கு தண்டனை விதித்தது.
1929 வரை பெயரளவு டொமினியன் அந்தஸ்தையே கோரி வந்த காங்கிரசுக் கட்சி, 1930ல் "பூரண சுதந்திர' கோரிக்கைக்கு மாறியதும், சட்ட மறுப்பு இயக்கத்தைத் துவக்கியதும், பகத்சிங் ஏற்படுத்திய புரட்சி அலை காங்கிரசைப் புரட்டி எடுத்ததன் விளைவேயாகும். இதனை 29.1.1931ல் "குடி அரசு' இதழில் பெரியார் குறிப்பிடுகின்றார்.
""..காந்தியவர்களே, இக்கிளர்ச்சி (சட்ட மறுப்பு இயக்கம்) ஆரம்பிப்பதற்கு முக்கியக் காரணம் பகத்சிங் போன்றவர்கள் செய்யும் காரியங்களைத் தடுப்பதற்கும், ஒழிப்பதற்குமே என்ற கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லியிருக்கின்றார்.''
சட்ட மறுப்பு இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில், வழக்கம் போல் சமரசப் பேச்சுவார்த்தைக்காக காந்தி மன்றாடினார். அதன் விளைவாக காந்தி இர்வின் பேச்சுவார்த்தை ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில், பகத்சிங்கையும், இதர தோழர்களையும் விடுதலை செய்யக் கோரும், குறைந்தபட்சம் அவர்கள் தண்டனையையேனும் குறைப்பதற்கான ஷரத்தைச் சேர்க்க வலியுறுத்தி நாடு முழுவதும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு உடன்பட மறுத்த காந்தி தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் அவர் என்ன செய்தார் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்து அரசுக்கு அன்றாடம் பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவிக்க கடமைப்பட்டிருந்த இர்வின், பேச்சுவார்த்தைக் குறிப்புகளை ஆவணப்படுத்தியுள்ளார்: ""முடிவில், அவர் (காந்தி) ....பகத்சிங் வழக்கு குறித்து குறிப்பிட்டார். அவர் (மரண) தண்டனையை நீக்கக் கோரவில்லை. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் தண்டனையைத் தள்ளி வைக்கக் கேட்டுக் கொண்டார்.''
(கோப்பு எண்: 545/19312, உள்துறை அமைச்சகம், தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள அரசியல் பிரிவு)
""அவர் (காந்தி) வெளியேறும் பொழுது, மார்ச்24ல் பகத்சிங் தூக்கிலிடப்பட இருப்பதாக பத்திரிக்கை களில் செய்தி படித்ததாகவும், துரதிர்ஷ்டவசமாக காங்கிரசின் புதிய தலைவர் கராச்சியில் வந்திறங்கும் நாளும் அதுவே எனக் குறிப்பிட்டு, அதனால், கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகும் எனவும் கூறினார். நான் இவ்வழக்கை மிகக் கவனத்தோடு பரிசீலித்திருப்பதாகவும், தண்டனையை குறைப்பதற்கான எனது மனசாட்சியை திருப்திப்படுத்தும் எந்த முகாந்திரத்தையும் காணவில்லையென்பதையும் தெரிவித்தேன்... அவர் இந்த வாதத்தின் வலிமையை அங்கீகத்தது போல் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.''
(மேற்குறிப்பிட்ட கோப்பு, பிப்ரவரி 19 தேதியிட்டது 1970 ஆகஸ்டு 15 மெயின்ஸ்ட்ரீம் இதழில் டி.பி.தாஸ் எழுதிய கட்டுரையிலிருந்து)
இதனிடையே, 1930 மே 28ஆம் தேதியன்று பகத்சிங்கைத் தப்புவிப்பதற் கான திட்டத்தின் அடிப்படையில், வெடிகுண்டைச் சோதித்த பொழுது ஏற்பட்ட விபத்தில் பகவதி சரண் வோரா வீரமரணம் அடைந்தார். பகத்சிங் சிறையிலிருந்த போது, காந்தியை அம்பலப்படுத்தியும், இளைஞர்களை உற்சாகமாக அணிதிரட்டியும் வந்த வோரா ஒரு விபத்தில் பலியானது துயரார்ந்ததே. மேலும், இ.சோ.கு.கவின் படைத்தலைவராக விளங்கிய ஆசாத் இறுதி வரை தமது பெயருக்கேற்றாற் போல் போலீசின் பிடிக்குள் அகப்படாமலிருந்து, 1931 பிப்ரவரி 27ல் போலீசாருடன் தன்னந்தனியாக நின்று வீரத்தோடு சண்டையிட்டு அலகாபாத் நகரிலிருந்த அன்றைய ஆல்ஃபிரெட் பூங்காவில் வீரமரணமடைந்தார்.
இந்தியச் சிறை வரலாற்றிலேயே முதல் முறையாக மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி காலை நேரத்திற்குப் பதிலாக, மார்ச்23,1931 அன்று இரவோடிரவாக மாலை 7.33 மணியளவில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு முதலானோர் தூக்கிலிடப்பட்டனர். சிறையிலிருந்த நேரடி சாட்சியங்களின்படி, பகத்சிங்கை தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல போலீசார் வந்த பொழுது அவர் லெனின் எழுதிய ஒரு நூலைப் படித்துக் கொண்டிருந்தார். "சிறிது நேரம் காத்திருங்கள், ஒரு புரட்சியாளன் இன்öàரு புரட்சியாளனிடம் பேசிக் கொண்டிருக்கிறான்' என்றார். அவர் குரலில் இருந்த ஏதோ ஒன்றினால் தடுக்கப்பட்ட அதிகாரிகளும் காத்திருந்தனர். சில நிமிடங்கள் கழித்து புத்தகத்தை உயர வீசிய அவர், "வாருங்கள், போகலாம்' எனக் கிளம்பினார். பின்னர், அவர், சுகதேவ், ராஜகுரு மூவரும், புரட்சிகரப் பாடல் வரிகளைப் பாடியவாறு தூக்குமேடைக்குச் சென்றனர். அங்கிருந்த மாஜிஸ்திரேட்டை நோக்கி, "இந்தியப் புரட்சியாளர்கள் எவ்வாறு மரணத்தை நோக்கி வீரநடை போட்டார்களென்பதைக் காணும் வாய்ப்பு பெற்ற நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்' எனக் கூறினார். அவர்களது பிணங்களை மக்களிடம் அளிப்பது கூட பேரபாயமாக உணர்ந்த அரசு, அவசர அவசரமாக அவர்களது உடல்களை சட்லெஜ் நதிக்கரையோரம் எரித்துப் போட்டது.
ஆங்கிலேயர்களும், காந்தியும் ஓரணியில் நின்று பகத்சிங்கைப் பல வகைகளில் இருட்டடிப்பு செய்ய முயன்ற போதும், உண்மையான தேசபக்தர்களும், மக்களும் அதனை ஏற்க மறுத்து, பகத்சிங்கை ஆதரித்தார்கள். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூவரும் 1931 கராச்சி காங்கிரஸ் மாநாடு துவங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக தூக்கிலிடப்பட்டவுடன் நாடே கொந்தளித்தது.
கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்த காந்திக்கு இளைஞர்கள் வழியெங்கும் கறுப்புக் கொடி காட்டினர். காங்கிரசின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டிற்கு மாறாக, வங்காள காங்கிரஸ் கமிட்டி புரட்சியாளர்களை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியது. ""அந்த நேரத்தில் பகத்சிங்கின் பெயர் இந்தியா முழுவதும் பரவலாக தெரிந்திருந்ததுடன், காந்தியின் அளவிற்குச் செல்வாக்குடனும் இருந்தது என்று கூறுவது மிகையாகாது.'' எனக் குறிப்பிடுகிறார் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை எழுதிய பட்டாபி சீத்தாராமையா.
"புரட்சி என்றாலே பகத்சிங் என்று தான் பொருள்' என்றார் சுபாஷ் சந்திர போஸ். உண்மைதான், நமது நாட்டின் அரசியல், வரலாற்றுப் பொருளில், பகத்சிங்தான் புரட்சியின் அடையாளம். இரண்டு நூற்றாண்டுக்காலமாக விடுதலை வீரர்கள் வென்றெடுக்க முயன்ற விடுதலையை, எதிரிகளிடம் யாசித்துப் பெற வேண்டிய பிச்சையாக மாற்றினார் காந்தி. அந்த விடுதலை வீரர்களின் மரபில் வந்த பகத்சிங்கோ, கம்யூனிசக் கருத்துக்கள் அளித்த ஒளியில் காந்தியக் காரிருளைக் கிழித்து புரட்சியை மீண்டும் நிகழ்ச்சிநிரலுக்குக் கொண்டுவந்தார்.
மைசூர், நெல்லை, வேலூர், மீரட், வங்காளம் என்று ஒவ்வொரு முறையும் எதிரிகள் புதைத்து நிமிர்ந்த மறுகணமே, இன்öàரு பகுதியில் வெடித்துக் கிளம்பிய விடுதலை வேட்கையைப் போல, சட்லெஜ் நதிக்கரையில் புதைக்கப்பட்ட அந்தப் புரட்சி, 1946ல் தெலிங்கானா விவசாயிகள் எழுச்சியாய் ஆந்திரத்தில் எழுந்து, மூன்றாவது சிப்பாய் எழுச்சியாய், மும்பையில் வெடித்தது. ""இதனை உடனே நசுக்கவில்லை என்றால் மேடையில் புதிய பாத்திரங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்'' என்று 1857இல் பெஞ்சமின் டிஸ்ரேலி விடுத்த எச்சரிக்கை ஆங்கிலேயப் பேரரசின் காதில் ஒலித்திருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு நசுக்கினால் எழக்கூடிய கம்யூனிசப் பேரலை ஏகாதிபத்தியவாதிகளின் கண்ணில் தெரிந்தது. காந்தி எனும் கைப்பாவையின் அவதாரம் கலைந்து கொண்டிருப்பதும் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது. துரோகிகளின் கைக்கு அதிகாரத்தை மாற்றிக் கொடுப்பதுதான் பேரரசைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எஞ்சி இருக்கும் ஒரே வழி என்பது எதிரிகளுக்குப் புரிந்ததால் அதிகார மாற்றம் நிகழ்ந்தது.
தியாகத்தின் மரபுகள் அனைத்தையும் பூசையறைப் படங்கள் ஆக்கிவிட்டு துரோகம் அதிகாரத்தில் அமர்ந்துவிட்ட போதிலும் விடுதலைப் போராட்டத்தின் வீரமரபு, 1967 நக்சல்பாரி எழுச்சியாய் வங்கத்தில் பிறப்பெடுத்தது. திப்பு முதல் பகத்சிங் வரையிலான விடுதலை மரபனைத்தையும் உட்செரித்துக் கொண்டு மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான போரில் களத்தில் நிற்கிறது.
இதோ, துணைப்படைத் திட்டத்தை அறிவிக்கிறார் ஜார்ஜ் வெல்லெஸ்லி புஷ். வாரிசிலிக் கொள்கையின் அடிப்படையில் பொதுத்துறைகளைக் கொடுத்துவிடச் சொல்கிறார் டல்ஹவுஸி சிதம்பரம். ""மகனே குறைந்தபட்சத் திட்டத்துக்கு மேல் எதையும் ஒத்துக் கொள்ளாதே'' என்று மரணப் படுக்கையில் முனகுகிறார் எச்சூரி நவாப். ""மகா பிரபுவே, ஆங்கிலேயக் கம்பெனியை நம்பியவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். எதிர்த்தவர்கள் யாரும் வாழ்ந்ததில்லை'' என்று ஆக்ஸ்ஃபோர்டில் உரையாற்றுகிறார் தொண்டைமான் சிங்.
கனவில் எழும்பும் தொடர்பற்ற காட்சிப் படிமங்கள் போல், முந்நூறு ஆண்டு வரலாற்றின் துரோகிகளும், எதிரிகளும் ஒரே நேரத்தில் பேசுகிறார்கள். கனவுப் பிம்பங்களின் அடையாளக் குழப்பம் ஏதுமின்றி, தெளிவாகத் தெரிகிறது அந்த முகம். மீசை அரும்பாத அந்த இளைஞனின் முகம். இந்தப் பேரிரைச்சலைக் கிழித்துக் கொண்டு தீர்மானமானமாக ஒலிக்கிறது அந்தக் குரல்: ""இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை..
.பால்ராஜ்
புதியகலாச்சார இதழிலிருந்து...
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சோதனை
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர்.பகத்சிங்கின் நினைவு நாளான இன்று இப்பதிவைப் பார்ப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி தோழர். தாங்கள் தொடர்ந்து நிறைய எழுதவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுடன்,
ஏகலைவன்.
http://yekalaivan.blogspot.com
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர்.பகத்சிங்கின் நினைவு நாளான இன்று இப்பதிவைப் பார்ப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி தோழர். தாங்கள் தொடர்ந்து நிறைய எழுதவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுடன்,
ஏகலைவன்.
http://yekalaivan.blogspot.com
Post a Comment