Oct 1, 2008

நீதி மறுக்கப்பட்டோர் தொடுத்தப் போர்!



தோழி ஒருத்திக்காக மடிப்பாக்கம் பகுதியில் வீடு தேட வேண்டிய சூழல் வந்தது. தெரிந்த ஒருவர் மூலமாக வீடு ஒன்று இருப்பது அறிந்து விசாரித்தோம்.

வீடு விடுவதற்கு முன் கேட்ட கேள்விகள் திருமணத்திற்காக வரன் தேடும் பொழுது கூட, அவ்வளவு கேள்விகள் கேட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் திரும்ப திரும்ப கேட்ட கேள்வி "அவர்கள் முஸ்லீம் இல்லையே?".

வெடிக்கிற ஒவ்வொரு குண்டும், இசுலாமிய மக்களை தனிமைப்படுத்துகிறது. இந்து மதவெறியர்கள் இதை சாகுபடி செய்கிறார்கள்.

இனி வருங்காலத்தில், விழாக் காலங்களில் பொது இடங்களுக்கு போகவே பயமாய் இருக்கும் சூழல் உருவாகி கொண்டேயிருக்கிறது.

இந்த கட்டுரை வெடிக்கிற குண்டுகளுக்குப் பின்பாக இருக்கிற அரசியலை தெளிவுப்படுத்துகிறது.

கொஞ்சம் நீளமான கட்டுரை. சிரமம் பார்க்காமல் படித்துவிடுங்கள். சமகால அவசிய கட்டுரை.


- மகா

கட்டுரையின் இறுதி பகுதி இப்படி முடிகிறது.

//இந்து மதவெறியர்களின் கலவரங்களினாலும், இசுலாமியத் தீவிரவாதத்தின் குண்டு வெடிப்பினாலும் இறுதியில் பாதிக்கப்படுவது அப்பாவி இசுலாமிய மக்கள்தான். அவர்கள் வீட்டுக்கதவை ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் அல்லது போலீசுக்காரர்கள் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கிடையில் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் அந்த மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். வெடிக்கும் ஒவ்வொரு குண்டும் அம்மக்களைத் தனிமைப்படுத்துவதையும், இந்துமதவெறியர்களின் கைகளை ஒங்கச்செய்வதையும்தான் சாதிக்கிறது. இசுலாமியத் தீவிரவாதம் இசுலாமிய மக்களைக் காப்பாற்றாது. பார்ப்பனியத்தால் இந்து எனும் பெயரில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒன்று சேர்த்து போராடும்போதுதான், இந்து மதவெறியை நாட்டிலிருந்து அகற்ற முடியும். இசுலாமிய தீவிரவாதம் இந்த முயற்சிக்கு தடை செய்கிறது. ஆயினும் இந்த தீவிரவாதம் நமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பாட்டு தோற்றுவிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டால், நிச்சயம் வழி பிறக்கும்//

*******

கட்டுரை தொடங்குகிறது.
****

ஜூலை 25, 2008 அன்று பெங்களூருவின் எட்டு ஒதுக்குப்புறமான இடங்களில் குறைந்த வீரியம் கொண்ட குண்டுகள் வெடித்தன. அதில் ஏழுபேர் காயமடைய, ஒருவர் கொல்லப்பட்டார். அதற்கு அடுத்த நாள் குஜராத்தின் சவுராஷ்ட்ரா பகுதியில் பொதுக்கூட்டமொன்றில் பேசிய நரேந்திர மோடி "ஜெய்ப்பூரிலும், பெங்களூருவிலும் குண்டுகள் வெடிக்கலாம், ஆனால், குஜராத்தின் மண்ணில் பயங்கரவாதிகள் அடியெடுத்து வைக்க முடியாது'' என்று முழங்கினார். அன்று மாலையே அகமதாபாத்தின் பல்வேறு இடங்களில் 21 தொடர் குண்டுகள் வெடித்தன. அதில் நான்கு இடங்கள் மோடியின் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவை.


2002 குஜராத் கலவரத்தின் எதிர்வினை எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மற்ற எவரையும் விட மோடிக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனாலும் பாசிஸ்ட்டுகள் தமது அதிகார பலத்தை மட்டுமே அபரிதமாக நம்புவார்களே ஒழிய, மற்றெதனையும் சட்டை செய்யமாட்டார்கள். மோடியின் மண்ணில் நடந்த குண்டு வெடிப்பில் 56 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும், 200க்கும் மேற்பட்டோர் காயமும் அடைந்தார்கள். அதற்கும் அடுத்த நாளே சூரத்தில் 17 இடங்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டன.


சூரத்தில் குண்டுகளை வைத்து பயங்காட்டியது மோடியின் கைவரிசை என்று பூரி சங்கரசாச்சாரியார் குற்றம் சாட்டியிருக்கிறார். தனது ஆசிரமத்தில் இரண்டு சிறுவர்களை நரபலி கொடுத்த ஆஸ்ரம் பாபு எனும் சாமியாருக்கு மோடி ஆதரவளிப்பதால், பூரி சாமியார் இப்படிச் சொல்லியிருப்பதாகக் கருதலாமென்றாலும் அகமதாபாத் குண்டுவெடிப்பிலிருந்து கவனத்தை திசைதிருப்பவே போலீசு டம்மி குண்டுகளை வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒரு வேளை இசுலாமியத் தீவிரவாதிகளே வைத்திருப்பார்கள் எனக் கருதினாலும், மொத்தத்தில் ஒரு பயபீதியை ஏற்படுத்தும் அவர்கள் நோக்கம் வெற்றியடைந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.


கோத்ரா இரயில் எரிப்புக்குப் பிந்தைய கலவரத்தில் ஈடுபட்டும், ஈடுபடாமல் தார்மீக ஆதரவளித்தும் வந்த நடுத்தர வர்க்கம் இப்போது அமைதிகாக்கிறது. உலக அளவில் வைரப்பட்டை தீட்டுவதற்குப் புகழ்பெற்ற சூரத் நகரின் முதலாளிகள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இந்து ராஷ்டிரத்தின் பரிசோதனைச் சாலையாக குஜராத்தை மாற்றியிருக்கும் மோடிக்கும் தற்போது உறைந்து போயிருக்கும் மக்கள் கோரும் மனநிம்மதியைத் தருவதுதான் பிரச்சினை! கோத்ராவின் போது வெறியூட்டிப் பேசிய மோடி தற்போது அடக்கி வாசிக்கிறார். ஆனாலும் குண்டுவெடிப்புகளிலிருந்து உத்திரவாதமான பாதுகாப்பை அவர் தர முடியாது என்பதை குஜராத் மக்களும் புரிந்திருக்கின்றனர். 2002இல் நடந்த முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை இப்போது நடைபெறாததன் சூட்சுமம் இதுதான்.


குண்டு வெடிப்புக்கள் 1993ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்தன என்றால் 2003ஆம் ஆண்டிற்கு பின்னர் மட்டும் வாரணாசி, மும்பைத் தொடர் வண்டி குண்டு வெடிப்பு, மாலேகான், பானிபட்டில் சம்ஜூதா விரைவு வண்டி, ஹைதராபாத் மக்கா மசூதிலும்பனி உணவகம், லக்னோவாரணாசி பைசாபாத் நீதிமன்றங்கள், ஜெய்ப்பூர், கடைசியாக பெங்களூரு, அகமதாபாத் வரை பல இடங்களில் நடந்திருக்கின்றன. ஒவ்வொரு குண்டு வெடிப்பும் திட்டமிட்ட முறையில், நவீனத் தொழில் நுட்ப வசதியுடன் இலக்குத் தவறாமல் வெடித்திருக்கின்றன. அகமதாபாத் குண்டு வெடிப்பில் கடைசி குண்டு பொது மருத்துவமனையில் வெடித்தது. முந்தைய குண்டு வெடிப்புக்களில் காயமடைந்தோர் மருத்துவமனைக்கு வரும் நேரம் பார்த்து வெடிக்குமாறு நேரம் குறிக்கப்பட்டிருந்தது.


இதில் குண்டுவெடிப்பில் காயமடைந்தோரை மருத்துவமனைக்கு தூக்கி வந்து உதவி செய்தவர்களில் சிலரும் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இத்தகைய சோகங்களை பட்டியலிட்ட பத்திரிக்கைகள் எதுவும் குண்டுகள் ஏன் வெடித்தன என்பதைப் பற்றிய விரிவான ஆய்வுக்குள் செல்லவில்லை. மாறாக இசுலாமியத் தீவிரவாதம், சிமி, லஷ்கர் இ தொய்பா, ஐ.எஸ்.ஐ. சதி என்ற வழக்கமான பெயர்களைப் பட்டியலிட்டதோடு, இவற்றை இரும்புக் கரம் கொண்டு மத்திய அரசு அடக்கவேண்டும் என்பதோடு முடித்துக்கொண்டன. "இந்தியா டுடே'' பத்திரிக்கையோ இசுலாமிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா சுரணையின்றி இருக்கிறது என்று வன்மத்துடன் எழுதியது.


இந்த குண்டு வெடிப்புக்களை வைத்து மதவெறி அரசியலைக் கிளப்பிப் பயன்படுத்திக் கொள்வதில் பா.ஜ.க தயாராக இருந்தாலும், மக்கள் தயாரில்லை. குண்டு வெடிப்புகள் தந்த பீதியும், சோர்வும், விரக்தியும் மக்களைக் கவ்வியிருப்பதால், அத்வானி சற்றே திகைத்துப் போயிருக்கிறார். ஆனாலும், பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும், இது போன்ற சட்டங்களைச் சட்டப்பேரவையில் இயற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியிருக்கும் குஜராத், ராஜஸ்தான் அரசுகளின் கோரிக்கைகள் ஏற்கப்படவேண்டும், அப்சல் குருவைத் தூக்கில் போடவேண்டும், இசுலாமியத் தீவிரவாதிகளை விசாரணையின்றித் தண்டிக்கவேண்டும் என்றெல்லாம் அத்வானி வழக்கமாக பேசும் விசயங்களை ஒப்புவித்திருக்கிறார். மன்மோகன் சிங்கும் தீவிரவாதிகளை மத்திய அரசு தண்டிக்கும் என்றும், இந்த பயங்கரவாதப் போரில் வெல்வோம் என்றெல்லாம் பேசியிருக்கிறார். தனியார் மயக் கொள்கைகளை வீச்சுடன் அமல்படுத்தும் நேரத்தில் வெடிக்கும் ஒவ்வொரு குண்டும் நாட்டின் நிகழ்ச்சிநிரலை திசை திருப்புவதால் மத்திய அரசைப் பொறுத்தவரை ஒரு வகையில் ஆதாயம்தான்.


பா.ஜ.கவின் இளைய பங்காளியான பாசிச ஜெயாவும் பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வந்து தீவிரவாதிகளைக் கடுமையாக தண்டிக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறார். இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம் என்பதுதான் சமீப காலமாக அதிகரித்து வரும் குண்டு வெடிப்புகள் நமக்கு உணர்த்தும் சேதி.


···


1993இல் நடந்த மும்பய் குண்டுவெடிப்பு, இசுலாமியத் தீவிரவாதத்தின் வருகையை நாட்டிற்கு அறிவித்துவிட்டது. அத்வானியின் இரத்த யாத்திரையும், பாபர் மசூதி இடிப்பையொட்டி மும்பயில் நூற்றுக்கணக்கான இசுலாமிய மக்கள் சிவசேனா ஆர்.எஸ்.எஸ் வெறியர்களால் வேட்டையாடப்பட்டதும் ஒரு சில இசுலாமிய இளைஞர்களை ஆத்திரம் கொள்ள வைத்தது. அந்த ஆத்திரத்தை அழித்திருக்க வேண்டுமென்றால், மும்பய்க் கலவரத்தின் சூத்திரதாரிகளான பால் தாக்கரேயும், போலீஸ் அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். இவர்களை குற்றவாளிகள் என்று ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிவித்த பிறகும், இன்றைக்கு பதினாறு ஆண்டுகளாகியும் தண்டிக்க முடியாத போது, தன் உற்றாரை இழந்த ஒரு இசுலாமிய இளைஞனின் மனது எப்படியெல்லாம் வதைபட்டிருக்கும்? மும்பய்க் குண்டுவெடிப்பின் குற்றவாளிகள் அதில் பலர் அப்பாவிகள் தண்டிக்கப்பட்டு, மும்பய்க் கலவரத்திற்கான குற்றவாளிகள் நிரபராதிகளாக உலாவரும் போது கோபம் கொள்ளும் ஒரு இளைஞனது மனம் எந்த நீதியைத் தேடும்?



இந்த சமூக அமைப்பில் நீதி சிறைபட்டிருக்கும் போது, ஆத்திரம் காரிய சாத்தியமான வழிகளைக் குறித்தே ஆலோசிக்கும். பம்பாய் குண்டுவெடிப்பில் மட்டுமல்ல, கோவை குண்டுவெடிப்பிலோ, தற்போதைய அகமதாபாத் குண்டுவெடிப்பிலோ வரலாறு இதைத்தான் மறுக்கமுடியாமல் நிரூபிக்கிறது. '98இல் நடந்த கோவை குண்டுவெடிப்பின் குற்றவாளிகள், விசாரணை நடந்து முடிந்து இன்று தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் பலர் அப்பாவிகள், பலர் வழங்கப்பட்ட தண்டனைக்காலத்தைவிடப் பல ஆண்டுகள் சிறையிலிருந்தவர்கள், மதானி போன்றவர்கள் நிரபராதி என்று நீதிமன்றம் விடுவித்தாலும், 9 ஆண்டுகள் சிறையிலிருந்தவர்கள். இந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களின் குடும்பங்கள் சிறைக்காலத்தில் வாழவழியின்றி தத்தளித்தன. பொடா சட்டம் வருவதற்கு முன்பு சாதாரண சட்டப்பிரிவுகளின் கீழ்தான் இந்த அடக்குமுறை நடந்திருக்கிறது. இவர்கள் யாருக்கும் தீர்ப்பு அளிக்கப்படும் வரை பிணை கிடைக்கவில்லை. ஆக, பொடா, தடா போன்ற காட்டுமிராண்டிச் சட்டங்கள் இல்லாமலேயே அப்பாவி இசுலாமியர்களை, அவர்கள் முசுலீமாகப் பிறந்த ஒரே காரணத்தால் இந்த நாட்டின் போலீசு நீதித்துறை தண்டிக்க முடியுமென்றால், அதை இந்தச் சமூக அமைப்பு அமைதியாக வேடிக்கை பார்ப்பதன் மூலம் ஆதரிக்க முடியுமென்றால், தீவிரவாதம் ஏன் துளிர்விடாது?


இத்தனைக்கும் மேல், '98 கோவை குண்டு வெடிப்புக்கு முன்பு நடந்த காவலர் செல்வராசு கொலையை ஒட்டி நடந்த கலவரத்தில் பல அப்பாவி முசுலீம் மக்கள் கொல்லப்பட்டது குறித்த வழக்கு இன்றும் முடியவில்லை, யாரும் தண்டிக்கப்படவுமில்லை, சிறையில் வாடவுமில்லை. இந்த அநீதி, இந்திய அரசியல் உலகில் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும்போது, இதன் எதிர் விளைவாகத் தோன்றும் தீவிரவாதம் யாருடைய அங்கீகாரத்தையும் பெற வேண்டிய அவசியமில்லையே? நீதி குறித்து இந்த சமூகம் எந்த அளவு பாராமுகமாக இருக்கிறதோ, அந்த அளவு தீவிரவாதமும் தனது செயல் குறித்து கவலைப்படாமல் ஈடுபடுகிறது.


கோத்ரா ரயில் பெட்டி எரிப்புக்குப் பிந்தைய 2002 குஜராத் கலவரங்கள் நாட்டிற்கு புதிய செய்திகள் பலவற்றை தெளிவுபடுத்தின. 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் ஆடுமாடுகளைப் போல, சொல்லப்போனால் அவற்றைவிடக் கேவலமாக, இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலையை விட முக்கியமானது, இந்தக் கலவரத்தை ஒரு முதலமைச்சரின் தலைமையில் அரசாங்கமும், இந்து மதவெறியர்களும் இணைந்து பெரும்பான்மை இந்துக்களின் பெயரில் நடத்தினர் என்பதே. தெகல்காவின் வீடியோ உள்ளிட்ட பல தரப்பினராலும் இவர்களது கோரமான இனப்படுகொலை நிரூபிக்கப்பட்டபோதும், மோடியும் அவரது தளபதிகளும் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்றதோடு, தத்தமது அரசு, கட்சிப் பதவிகளில் எவ்வித நெருக்கடியுமின்றி வேலை செய்கின்றனர். கோத்ரா எரிப்புச் சம்பவம் முசுலிம்களால் நடத்தப்படவில்லை என்ற போதிலும், அதற்காகக் குற்றம் சாட்டப்பட்ட பல இசுலாமிய அப்பாவிகள் சிறையில் பிணை மறுக்கப்பட்டு வாடுகின்றனர். இனப்படுகொலை செய்த சங்கப்பரிவார குண்டர்களோ சிலர் மட்டும் வழக்கில் சேர்க்கப்பட்டு, பிணை கிடைத்து வெளியில் இருக்கின்றனர்.


இத்தனைக்கும் பிறகும் கண்ணெதிரே தம் உறவினர்களை கொத்துக்கொத்தாகப் பலிகொடுத்த முசுலீம் இளைஞர்களில் சிலராவது தீவிரவாதத்திற்காகப் பலியாகாமால் போனால் தானே ஆச்சரியப்பட முடியும்? மோடி தலைமையிலான கும்பல் தூக்கிலேற்றப்பட்டிருந்தால், அகமதாபாத்தில் குண்டுகள் நிச்சயம் வெடித்திருக்காது. இனப்படுகொலையின்போது பெரும்பான்மை இந்துக்கள் இந்துமதவெறியர்களை எதிர்த்துப் போராடியிருந்தால், குண்டுகள் செயலிழந்து போயிருக்கும். நடுநிலை பிறழாதது என்று பதற்றப்படும் நீதித் துறையின் வழியாகக் கொஞ்சமாவது நீதி கிடைத்திருந்தால் கூட, அந்த இளைஞர்கள் தீவிரவாதம் எனும் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள். ஆயினும் வரலாறு தனது விளைவை உருவாக்கிக் கொண்டுதான் ஆக வேண்டும் என்பதனால், குண்டுகள் இப்போது அடிக்கடி வெடித்துக் கொண்டு இருப்பது மலிவாக மாறிவருகிறது.


···


அத்வானி வகையறாக்கள் கோருவது போல பொடா சட்டமோ, கடுமையான அடக்குமுறைகளோ இந்தத் தீவிரவாதத்தை வேரறுக்காது. ஆத்திரத்திலும், அவலத்திலும், கையறு நிலையிலும் மையம் கொண்டுள்ள இந்த வேர் ஆழமாகப் பரவியிருக்கிறது. அகமதாபாத் குண்டு வெடிப்பிற்கு பொறுப்பேற்றுக்கொண்ட "இந்தியன் முஜாகிதீன்கள்'' என்ற இயக்கம் ஊடகங்களுக்கு அனுப்பியிருக்கும் பதினைந்து பக்க மின்னஞ்சலில் அந்த வெறுப்பும், பழிவாங்கும் உணர்வும் கொப்பளிக்கிறது. இந்துக்களை அவர்களது எந்தக் கடவுளும் காப்பாற்றப் போவதில்லை எனவும், அவர்கள் மீது புனிதப்போர் தொடுக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் அந்தக் கடிதம் வெறுப்பை வெளிப்படுத்துகிறது. பெரும்பான்மை இசுலாமிய மக்களும், மதத் தலைவர்களும் இந்தப் புனிதப் போரை எதிர்த்த போதிலும், ஏற்றுக்கொள்ளாத போதிலும், இந்துக்களைப் பகைவர்களாகக் கருதாவிடினும், என்ன செய்வது என்ற பதிலில்லா கேள்வியை கேட்டுத் தீவிரவாதம் தன்போக்கில் சில இளைஞர்களை வென்றெடுக்கவே செய்கிறது.


அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த காலத்திலேயே குண்டுகள் வெடித்த வண்ணம்தான் இருந்தன. இப்போது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், மோடி போன்ற சர்வாதிகார ஆட்சி நிலவும் மண்ணில் கூட வெடிகுண்டுகள் பெரும் உயிரிழப்புக்களோடு வெடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இனி, குண்டுவெடிப்புக்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடவேண்டிய நேரத்தில், இந்து மதவெறியர்களே குண்டு வைப்பதைச் செய்யமுடியும். தானே, தென்காசி குண்டு வெடிப்புக்கள் அதற்கோர் எடுத்துக் காட்டு. மேலும் இசுலாமியத் தீவிரவாதிகள் போல சர்வ இரகசியமாக குண்டு தயாரிக்கும் வேலையை சங்கப் பரிவாரங்கள் செய்யவேண்டியதில்லை. குஜராத் கலவரத்தின் போது ஆயுதங்களும், துப்பாக்கிகளும், எரிபொருளும் அண்டை மாநிலங்களிலிருந்து வண்டி வண்டியாய் இறங்கின. இந்து மதவெறியர்கள் கலவரம் செய்தாலும், இசுலாமியத் தீவிரவாதத்தின் பெயரால் குண்டு வைத்தாலும் அவர்களுக்கு ஆதாயம்தான். இசுலாமிய மக்களைத் தேசவிரோதிகள் என்று சித்தரித்துக்கொண்டே, தனது இந்து ராட்டிரக் கனவை நிஜமாக்கும் முயற்சிக்கு அது அவசியம்.


சர்வதேச இசுலாமியத் தீவிரவாதம் இந்தியாவிற்கும் வந்துவிட்டதாக பா.ஜ.க, ஊடகங்கள் உள்ளிட்ட பலரும் தெரிவிக்கின்றனர். அல் காய்தாவும், ஐ.எஸ்.ஐ.யும் ஏதோ ஒரு செல்பேசி மூலம் இங்கே குண்டுகளை வெடிக்கச் செய்வது சாத்தியமா என்ன? குண்டுவைப்பதற்கு தேவைப்படும் பல ஏற்பாடுகளைச் செய்வதற்கு உள்ளூர்க்காரர்களின் ஒத்துழைப்பு அவசியம். அதுவும் தனது உயிரைப் பணயம் வைக்கும் சாகச உணர்வுடன் கருத்து ரீதியாக வென்றெடுக்கப்பட்டவர்கள் வேண்டும். அதற்கான சமூக நிலைமைகளை இந்து மதவெறியர்கள் உருவாக்கியிருக்கும் போது அதை அல்கய்தாவோ, ஐ.எஸ்.ஐ.யோ பயன்படுத்திக்கொள்ள முடியுமே? மேலும், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் முதல் இன்ன பிற மறுகாலனிய நடவடிக்கைகள் மூலமாக இந்திய அரசு அமெரிக்காவின் கையாளாக மாறி வரும் நிலையில், அமெரிக்காவை எதிர்த்துப் போராடும் அல் காய்தா இந்தியாவையும் குறி வைக்கத்தானே செய்யும்?


இதற்கெல்லாம் மேலாக சமீபத்திய குண்டுவெடிப்புக்களின் குற்றவாளிகள் என போலீசு கைது செய்திருப்பது அப்பாவிகளைத்தான். இந்தியா முழுவதும் விரிவான விசாரணை செய்து இந்த மோசடியை "தெகல்கா'' வார ஏடு அம்பலப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு குண்டு வெடிப்பின்போதும் குற்றவாளியின் படத்தைக் கணினி மூலம் வரைந்து வெளியிடுவதும், பாகிஸ்தான் காரணமென்று தெரிவிப்பதும், உள்ளூர் இளைஞர்கள் அங்கு சென்று பயிற்சி எடுத்திருப்பதாக அறிவிப்பதுமான இந்த போலீசு செய்திகளைத்தான் தரமான "ஃப்ரண்ட்லைன்'' முதல் தரம் தாழ்ந்த "தினமலர்'' வரை வெளியிடுகின்றன. தற்போது தமிழகத்தில் சென்னை அண்ணா மேம்பாலத்தை இசுலாமிய தீவிரவாதிகள் தகர்க்கப்போவதைத் தடுத்து நிறுத்தியதாக மார் தட்டும் போலீசின் நடவடிக்கை, தமிழ் சினிமாவைவிட கேவலமான கற்பனையாகும். "தெகல்கா''வின் புலனாய்வு இந்தப் பொய்யுரைகளைத் தகர்த்திருக்கிறது.


அத்வானி உள்துறை அமைச்சராக இருந்தபோது "சிமி'' (குஐMஐ) எனப்படும் இந்திய இசுலாமிய மாணவர் இயக்கம் 1967 சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் மூலம் தடைசெய்யப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இந்தத் தடை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடைகளுக்காக நியமிக்கப்பட்ட நடுவர் மன்றத்தில் ஒவ்வொரு முறையும் காரணங்களைத் தாக்கல் செய்த அரசு, எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. இதை தற்போதைய நீதிபதி கீதா மித்தல் அம்பலப்படுத்தி "சிமி'' மீதான தடையை இரத்து செய்தார். உடனே மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் "சிமி'' மீதான தடையை தொடருமாறு விலக்கு பெற்றது. இதற்கு முன் "சிமி'' இயக்கம் செய்த மேல்முறையீடுகளைப் பரிசீலிக்காத உச்சநீதி மன்றம், இப்போது நடுவர் மன்றத்தின் நியாயமான தீர்ப்பைத் தடுப்பதற்கு மட்டும் துடிக்கிறது.


"சிமி'' என்ற இயக்கம் இசுலாமிய வாழ்க்கைமுறைகளைத் தீவிரமாக பின்பற்றுதலை, அம்மத மாணவர்களிடையே பிரச்சாரம் செய்கின்ற இயக்கம். மேலும், உலகம் முழுவதும் இசுலாம் பரவவேண்டும் என்பதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தாலும், அதை ஜனநாயக வழிகளில் மட்டும் செயல் படுத்திய இயக்கம். பாபர் மசூதி இடிப்பை அடுத்து சங்கப்பரிவாரங்களை எதிர்த்தும், ஆப்கான் மீதான தாக்குதலை அடுத்து அமெரிக்காவை எதிர்த்தும் அரசியல் இயக்கத்தை சிமி தொடர்ந்து நடத்தியது. இதை வைத்தே சிமி தேச விரோத இயக்கம் என்று முத்திரை குத்தி, பா.ஜ.க., காங்கிரசு அரசுகள் தடை செய்து வருகின்றன. இந்த ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான இசுலாமிய இளைஞர்கள் பல ஆண்டுகள் எந்தக் குற்றமும் செய்யாமல் இந்தியச் சிறைகளில் கழித்திருக்கின்றனர். சிமி தடை செய்யப்பட்டபோது அதன் தலைவராக இருந்த ஃபலாகி பொய்க் குற்றச்சாட்டுக்களின் பெயரில் முப்பது மாதங்கள் சிறையில் கழித்தார்.


சிமி இளைஞர்கள் அரபு நாடுகளில் பணம் பெற்றுக் கொண்டு பாக்ஆப்கான் சென்று பயிற்சி எடுத்து இந்தியாவில் குண்டு வைப்பதாக ஆளும் வர்க்கம் தொடர்ந்து பொய்யுரைக்கிறது. இதை எதிர்த்துச் சட்டப்பூர்வமாக போராடும் சிமியின் முயற்சிகள் பாசிசத்தின் கைகளால் தடுக்கப்படுவது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஆக, ஜனநாயகப் பூர்வமான வழிகளில் கூட இசுலாமிய இளைஞர்கள் போராடக்கூடாது என்று இந்த அரசியல் அமைப்பு தடை விதிக்கும் போது, அந்த இளைஞர்களின் மனதில் என்ன தோன்றும்? இந்தியாவில் தீவிரவாதம் தோன்றிவிட்டது என்பதைவிட இந்தியாதான் இசுலாமியத் தீவிரவாதத்தைத் தோற்றுவிக்கிறது என்பதே சரி.


இந்து மதவெறியர்களின் கலவரங்களினாலும், இசுலாமியத் தீவிரவாதத்தின் குண்டு வெடிப்பினாலும் இறுதியில் பாதிக்கப்படுவது அப்பாவி இசுலாமிய மக்கள்தான். அவர்கள் வீட்டுக்கதவை ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் அல்லது போலீசுக்காரர்கள் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கிடையில் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் அந்த மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். வெடிக்கும் ஒவ்வொரு குண்டும் அம்மக்களைத் தனிமைப்படுத்துவதையும், இந்துமதவெறியர்களின் கைகளை ஒங்கச்செய்வதையும்தான் சாதிக்கிறது. இசுலாமியத் தீவிரவாதம் இசுலாமிய மக்களைக் காப்பாற்றாது. பார்ப்பனியத்தால் இந்து எனும் பெயரில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒன்று சேர்த்து போராடும்போதுதான், இந்து மதவெறியை நாட்டிலிருந்து அகற்ற முடியும். இசுலாமிய தீவிரவாதம் இந்த முயற்சிக்கு தடை செய்கிறது. ஆயினும் இந்த தீவிரவாதம் நமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பாட்டு தோற்றுவிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டால், நிச்சயம் வழி பிறக்கும்.

· அரசு

No comments: