Dec 4, 2010

பாபா சாகேப் அம்பேத்கர் - திரைப்படம்!


பல போராட்டங்களுக்கு பிறகு படம் வெளிவந்திருக்கிறது. படம் பார்த்த உணர்வில், உடனடியாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உங்களோடு சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

படம் அம்பேத்கர் வெளிநாட்டில் கல்வி கற்கும் காலத்திலிருந்து துவங்குகிறது. படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்.

எல்லா மக்கள் தலைவர்களையும் போலவே தன் சொந்த குடும்பத்தை கவனிக்காமல் இருக்கிறார். தன்னுடைய நான்கு குழந்தைகளையும் இழந்தது மிகப்பெரிய சோகம்.

தாழ்த்தப்பட்டவர்களை திரட்டி, பொதுக்குளத்தில் தண்ணீர் அருந்துவது, கோவில் நுழைவு போராட்டம், தேர் இழுக்கும் போராட்டம், புத்த மதத்தை தழுவுவது என நமக்கு அம்பேத்கரைப் பற்ற அறிந்த விஷயங்களின் தொகுப்பாக இருந்தாலும் படமாக்கிய விதம் நன்றாகவே இருந்தது.

காந்திக்கும், அம்பேத்கருக்கும் இருந்த முரணை நன்றாக படம் பிடித்து காட்டியிருக்கிறது படம்.

அம்பேத்கார் 'மகர்' (தாழ்த்தப்பட்ட) சாதியா? எனக்கு தெரியாதே! என காந்தி கூறுகிற பொழுது.. திரையரங்கில் கைத்தட்டு.

சில முக்கிய விஷயங்களை, மேலோட்டமாக சொல்லியிருப்பது போல் தோன்றுகிறது.

மொழிமாற்றுப் படம் என்றாலும், நிறைய அந்நியமாக தெரியவில்லை. ( பிடித்த அரசியல் ஆளுமை என்பதாலும் இருக்கலாம்.) டாகுமென்டரி போல இருந்துவிடுமோ என பயந்தேன். ஒரு படத்திற்குரிய அனைத்து தகுதிகளுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் எடுத்திருந்த 'பெரியார்' படத்தை விட மொழிமாற்றுப் படமான 'அம்பேத்கர்" சிறப்பாகவே இருந்தது.

மத்திய அரசின் சமூக நீதித்துறையும், தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும், மகாராஷ்டிர அரசும் சேர்ந்து எடுத்திருந்த படம் என்பதால், சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த கலை இயக்கம் என மூன்று தேசிய விருதுகளை தந்துவிட்டார்களோ என எண்ணினேன். படம் அந்த எண்ணத்தை மாற்றியது.மம்முட்டியின் நடிப்பு அருமை. கட்டபொம்மன் என்றால் சிவாஜி நினைவுக்கு வருவது போல, இனி அம்பேத்கர் என்றால் மம்முட்டி நினைவிற்கு வருவார்.

அம்பேத்கர் தன் கொண்டிருந்த கொள்கைக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடி இருக்கிறார் என்பதை படம் உணர்த்தியது. மொத்தத்தில் படம் எனக்கு பிடித்திருந்தது. கூடுதலாக அம்பேத்கர் பற்றி தேடிப்படிக்க வேண்டும் என்ற ஆவலையும் படம் தூண்டியது.

1 comment:

Anonymous said...

சோதனை