போலி ஏஜெண்டுகளிடம் சிக்கி வெளிநாட்டில் தவிக்கும் வீட்டு வேலைத் தொழிலாளர்கள்- தாய்நாட்டிற்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் அவலம்
போலி ஏஜெண்டுகள் மூலமாக வெளிநாட்டில் வீட்டு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் அங்கு பல்வேறு துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். தாய்நாட்டுக்கு திரும்பவும் வழியில்லாமல் தவித்து வருகிறார்கள்.
சவூதி , துபாய், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்குக் குறைந்த சம்பளத்தில் வீட்டு வேலை செய்வதற்காக பலர் போலி ஏஜெண்டுகளால் அழைத்துச் செல்லப்படுகி றார்கள். அவ்வாறு வேலைக்குச் செல்லும் பெரும்பாலான தொழிலாளர்கள் தமிழகம், ஆந்திரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்க ளாகவே உள்ளனர். இந்திய அரசின் சட்டத்தின் படி 30 வயதில் இருந்து 50 வயதுக்கு உட்பட்ட வர்கள் தான் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல முடியும். ஆனால் போலி ஏஜெண்டுகள், போலி பிறப்பு சான்றிதழ் மூலம் பலரையும் வேலைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
பல ஏஜெண்டுகள்
தமிழகத்தில் இருந்து வீட்டு வேலைக்கு தொழிலாளிகளை அழைத்துச் செல்லும் உள்ளூர் ஏஜெண்டுக்கும், வெளிநாட்டில் இருக்கும் ஏஜெண்ட்டுக்கும் இடையில் பல துணை ஏஜண்ட்டுகள் உள்ளனர். இதனால் தொழிலாளர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் கூடத் தங்களுடைய குடும்பத் தினருக்குத் தெரிவிக்க முடியாத நிலை உள்ளது.
குவைத் நாட்டில் வீட்டு வேலைக்குச் சென்று தப்பித்து வந்துள்ள பார்வதி சேகர் என்பவர் இதுகுறித்து ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
நான் புதுச்சேரியில் உள்ள கனகசெட்டிக்குளத்தில் வசித்து வந்தேன். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23 ம் தேதி அப்துல் என்பவர் வீட்டில் வேலை செய்வதற்காக குவைத்திற்கு சென்றேன். அங்குச் சென்றதும் நான் வேலை செய்ய வேண்டிய வீட்டின் முதலாளி அப்துல் என்னைக் காரில் ஏற்றிக் கொண்டு ஜமிலா என்பவருடைய வீட்டில் இறக்கிவிட்டார். பிறகு இதுதான் நான் வேலை செய்ய வேண்டிய வீடு என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
நான் வேலை செய்த வீட்டில் 12 அறைகள் இருந்தது. தினமும் அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய வேண்டும். உட்காரக்கூட நேரம் இருக்காது. இரவு 2 மணிக்குத் தூங்கி மீண்டும் 5 மணிக்குள் எழுந்துவிட வேண்டும். நேரத் திற்கு சாப்பிடக்கூட முடியாது. கழிவறையில் தான் சிறிது நேரம் ஓய்வு கூட எடுக்க முடியும்.
அங்கு வேலை செய்யும் போது காலில் அடிபட்டு விட்டது. காலில் அடிபட்டு விட்டதாலும், சம்பளம் தராததாலும் என்னை இந்தியாவிற்கு அனுப்பிவிடும் படி கேட்டேன். அதற்கு நம் நாட்டுப் பணத்தில் ரூ 67 ஆயிரம் செலுத்திவிட்டுப் போகும்படி கூறினார்கள். அதற்குச் சம்மதித்த பிறகு தான் என்னுடைய மகனுக்குப் போன் செய்துகொடுத்தார்கள். பணத்தை கொடுத்த பிறகே அங்கிருந்து வர முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார். “இவரைப்போல் சுமார் 7 லட்சம் தொழிலா ளர்கள் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் பலர் மீண்டும் தாய் நாட்டிற்கு வரமுடியாமல் தவிக்கின்றனர். இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள ஏஜெண்டுகளை முறைப்படுத்த வேண்டும்” என்று தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வளர்மதி கூறுகிறார்.
தேவயானி கோப்ரகடே தன்னிடம் வேலை செய்த வீட்டு வேலை தொழிலாளி சங்கீதாவிற்கு குறைந்த சம்பளம் அளித்தார் என்று அமெரிக்க காவல் துறை அவரை கைது செய்தது. இதனால் நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. தேவயானியைக் கைது செய்த விதத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாதோ அதே போல் குறைந்த கூலி கொடுத்ததையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு அதிகாரிக்காகக் குரல் கொடுக்கும் இந்திய அரசு அதே சமயம் பல லட்சம் தொழிலாளர்கள் குறைந்த கூலியில் வெளிநாடுகளில் வேலைக்கு அமர்த் தப்படுவதையும் தடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களுடைய கருத்தாக உள்ளது.
- நன்றி : தி இந்து
1 comment:
நீங்க சொன்னது மிக நியாயமுங்க.
வெளிநாட்டில் தவிக்கும் வீட்டு தொழிலாளிகளை இந்திய அரசு அவசியம் பாதுகாக்க வேணும்.
Post a Comment