May 5, 2015

அம்பேத்கார் சுடர் விருது : அருந்ததிராயின் உரை!



இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய்

அம்பேத்கர் சுடர்விருதைப் பெற்றுக்கொண்டு எழுத்தாளர் அருந்ததி ராய் ஆற்றிய ஏற்புரை

(
ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் - கவிதா முரளிதரன்)

அன்பிற்குரிய திருமாவளவன் அவர்களே! விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்களே!, நண்பர்களே! வணக்கம்!

அம்பேத்கர் விருது கொடுத்து என்னை கௌரவித்ததற்கு மிகுந்த நன்றி. குறிப்பாக பாசிசத்துக்கு எதிராக அரசியல் கூட்டணிகளைத் திரட்ட வேண்டிய அவசியமும் அவசரமும் உள்ள இந்த காலகட்டத்தில் இந்த விருதை எனக்கு வழங்குவதற்காகப் பாராட்டுகிறேன்.

வெட்கமே இல்லாமல் இந்தியாவை இந்து தேசம் என்று வாதாடிக்கொண்டிருப்பவர்களை இன்று இந்தியாவின் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள். அந்த குறிக்கோளை எட்டுவதற்காக சக்கரங்கள் சுழன்று கொண்டேயிருக்கின்றன - பொதுவெளியிலும் தனிப்பட்ட முறையிலும். பல்கலைக்கழக, பள்ளிக்கூட பாடத் திட்டங்கள் மாற்றப்படுகின்றன; வரலாறு மாற்றி எழுதப்படுகிறது (அது எழுதப்பட வேண்டும் ஆனால் இப்படி அல்ல), கற்றல் வழிமுறைகள் முழுமையாக மாற்றியமைக்கப்படுகின்றன; இந்துத்துவ குருமார்கள் நீதித்துறையிலும், காவல்த்துறையிலும், உளவுத்துறையிலும் ராணுவத்திலும் கூட அமர்த்தப்படுகிறார்கள்.

விஸ்வ இந்து பரிஷத்தும் பஜ்ரங் தளமும் நாடெங்கிலும் நடத்திக்கொண்டிருக்கும் இந்த வித்தியாசமான கர் வாப்ஸி (வீடு திரும்புதல்) பற்றித்தான் நான் உங்களுடன் இன்று பேச விரும்புகிறேன். முன்பெல்லாம் அது சுத்தி (தூய்மை) இயக்கம் என்றே அழைக்கப்பட்டது. அதாவது அசுத்தமானவர்களை தூய்மைப்படுத்தி அவர்களை மீண்டும் இந்த மதத்திற்கு திரும்பி அழைத்து வரும் செயல்பாடு. 150 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது அது. அதற்கும் மதத்திற்கும் உண்மையில் எந்தத் தொடர்பும் இல்லை. அது முழுக்க முழுக்க மக்கள் தொகை சம்பந்தப்பட்டது. இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டுவதற்கான முயற்சி அது. இன்று அதை வாக்கு வங்கி என்று நாம் அழைக்கிறோம்.

ஆனால் இந்து சமுதாயம் என்ற ஒன்று இருந்ததே இல்லை. அது சமீபத்தில் உருவான கருத்துரு. “இந்து சமூகம் என்பதே ஒரு புனைவுதான் என்று உணர்வதுதான் முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும். சிந்து சமவெளியின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர்களைத் தங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக முகமதியர்கள் கொடுத்த பெயர் அதுஎன்று பாபாசாகேப் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். .

நூறு வருடங்களுக்கும் முன்பு சாம்ராஜ்யங்கள் தேசங்களாக மாறிய போதும் மன்னர்களுக்குப் பதிலாக பிரதிநித்துவ அரசியல் உருவான போதும்தான் இந்த வாக்கு வங்கிகளை ஏற்படுத்தும் வழக்கம் உண்டானது. பிரதிநித்துவ அரசியல் எண்ணிக்கையைப் பற்றிய ஒரு புதிய கவலையை உருவாக்கியது. தாம்தான் பெரும்பான்மை என்பதை நிறுவ ஆதிக்க சாதிகள் மிகவும் பிரயத்தனப்பட்டன. இந்துக்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள் அதன் பிறகுதான் அவ்வாறு செய்யத் தொடங்கினார்கள். அது வரை சாதியே அவர்களது அடையாளமாக இருந்தது. மக்கள் தொகை பற்றிய கவலை உருவாகும் வரை, லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள், சாதியின் கொடுங்கரங்களிலிருந்து தங்களை காத்துக்கொள்ள இஸ்லாத்துக்கும், கிறிஸ்துவத்துக்கும், சீக்கிய மதத்திற்கும், பௌத்தத்திற்கும் மாறியது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

ஆனால் மக்கள்தொகை பற்றிய கவலை உண்டானவுடன், அவர்கள் யாருடைய தொடுதலை தவிர்த்தார்களோ, யாருடையஉணவை ஏற்றுக்கொள்ள மறுப்பார்களோ, யாருடைய வீடுகளுக்குச் செல்ல மாட்டார்களோ அந்த நாலரை கோடிதீண்டத்தகாதவர்களும்இந்துக்கள்தான் என்று முடிவு செய்துவிட்டார்கள். ஒரு பெரிய பிரச்சாரம் தொடங்கியது - சாதிஅமைப்புக்கு எதிராக அல்ல, அதன் சொத்து உரிமை பற்றி அல்ல ஆனால் தீண்டாமைக்கு எதிராக தொடங்கியது.தீண்டத்தகாதவர்களை இந்து மதத்திற்குள் வைத்துக்கொள்வதுதான் அதன் நோக்கம். பிறகு ஆரிய சமாஜ்தூய்மைஇயக்கத்தைத் தொடங்கியது. அதைத்தான் தற்போதைய அரசு மிகப்பெரிய அளவில் மறு அறிமுகம் செய்ய திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. சவர்ன பிரச்னை இதுதான்: பெரிய வீட்டுக்குள் அழைத்து வந்த பிறகு அவர்களை எப்படி தனிமைப்படுத்திவைப்பது? வேலைக்காரர்களுக்கான குடியிருப்பிலா? இந்து பெரும்பான்மையை உருவாக்கும் அதே நேரம் சாதித் தூய்மையை எப்படி பாதுகாப்பது? சாதி அமைப்பை தூக்கிப்பிடித்துக்கொண்டே தீண்டாமை பற்றி இவர்கள் வடிக்கும் முதலைக்கண்ணீரின் நோக்கத்தை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

நவீன அரசியல்வாதிகளில் மிகச் சிறந்தவர் என்று நான் நம்பும் பாபாசாகேப் அம்பேத்கர் இவற்றையெல்லாம் பல வருடங்களுக்கு முன்பே கண்டுணர்ந்து கோபத்தோடும் வெறுப்போடும் அறிவு வலிமையோடும் நிராகரித்தார். இது எல்லாம் அவருடைய எழுத்தில் இருக்கின்றன.

ஆனால் இன்று, பாஜக தலைவர்கள் வெட்கமே இல்லாமல் பாபாசாகேப் அம்பேத்கரின் படங்களையும் சிலைகளையும் தினமும் திறந்து கொண்டிருக்கிறார்கள். அவர் மீதான அன்பை வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் பத்திரிக்கையான ஆர்கனைசர் அவரை தனது முகப்பு அட்டையில் பிரசுரித்திருக்கிறது. அவரைத் தொழுவதாக ஏமாற்றும் அதே நேரம் பாபாசாகேபின் அரசியலை அடித்துக் கூழாக்கி அவரை இந்துவின் சின்னமாக கட்டமைக்கிறார்கள். கடும் பயத்தில் கிறிஸ்துவர்கள் வாழும் கந்தமால், பஸ்தர் போன்ற இடங்களில் கிறிஸ்துவ சமூகம் மீது அவர்கள் நடத்தும் கொலைவெறித் தாக்குதல்கள், தேவாலயங்களை எரிப்பது, கன்னியாஸ்திரிகளை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குவது எல்லாம் இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு மாறச் சொல்லி அம்பேத்கர் சொன்னதை செய்த தலித்துகள் மீதான தாக்குதலே.

இன்று கொடுமை என்னவென்றால் தலித் கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும்கர் வாப்சிநிகழ்வில் பங்கு கொள்ள அவர்கள் தரும் ஊக்கம், எதற்காக அம்பேத்கர் பாடுபட்டாரோ அந்த இட ஒதுக்கீடுதான். மதம் மாறியதால் இட ஒதுக்கீட்டுக்குத் தகுதியற்றவர்களாகிவிட்ட அவர்களை அந்த ஆசை வார்த்தையைச் சொல்லியே மீண்டும் இந்து மதத்திற்குள் அழைத்து வர முனைகிறார்கள். அம்பேத்கரின் சிந்தனைகளைத் திரித்து அவருக்கு எதிராக, அவர் நம்பியவற்றுக்கு எதிராக ஒரு கத்தியாக இன்று பயன்படுத்தப் பார்க்கிறார்கள்.அவரது மக்களின் வறுமையும் பாதுகாப்பற்ற நிலையும் அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்திய ஒரு வல்லரசு என்று நமது தலைவர்கள் சொல்கிறார்கள். இந்த வல்லரசில்தான் எண்பது கோடி மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவான பணத்தைக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பணத்தில் ஒரு கௌரவமான வாழ்க்கையை வாழ முடியுமா? நிறைய பேர் ஆப்ரிக்கா வறுமையான கண்டம் என்றும் இந்தியா பணக்கார நாடென்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆப்ரிக்காவிலுள்ள ஏழை நாடுகளின் ஒட்டுமொத்த ஏழை மக்களை கணக்கிட்டால்கூட அதை விட அதிகமான ஏழை மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். உலகின் மிக அதிகமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் வாழ்வது நமது நாட்டில்தான். அதே நேரம், விரல்விட்டு எண்ணக்கூடிய சில கோடீஸ்வர தொழிலதிபர்கள் லட்சக்கணக்கான ஏழைகளிடம் இருக்கும் பணத்தை விட அதிக சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். உலகின் மிக அவமானகரமான, சமநிலையேயில்லாத ஒரு சமுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மற்ற நாடுகளைப் போல அல்லாமல் நமது நாட்டில் இந்த வேறுபாடு, இந்து சமூகத்தின் புனிதமான அனுமதியோடு நிறுவனப்படுத்தப்பட்டிருக்கிறது.

நாள் ஒன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவான பணத்தில் வாழும் எண்பது கோடி பெரும்பான்மை மக்கள், அணைகள், சுரங்கங்கள், சிறப்பு மண்டலங்கள் போன்ற மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களால் தங்கள் வாழ்நிலங்களிலிருந்து துரத்தப்பட்ட லட்சக்கணக்கான பெரும்பான்மை மக்கள், ஊட்டசத்து குறைவுள்ள குழந்தைகளில் பெரும்பான்மையானவர்கள், நிலமற்ற தொழிலாளர்கள், வீடற்ற மக்கள், நகரங்களில் குடிசைப் பகுதிகளில் வாழ்பவர்கள், சிறைகளில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் எல்லோரும் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் இப்போது இஸ்லாமியர்கள். வன்முறை நிறைந்த நமது நாட்டில் கலவரங்களில் கொல்லப்படுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இவர்களே.

தேசிய குற்ற ஆவண மைய விவரங்களின் படி, தலித் அல்லாத ஒருவர் ஒவ்வொரு 16 நிமிடங்களுக்கும் ஒரு தலித் மீது வன்முறையை செலுத்துகிறார். ஒவ்வொரு வாரமும் 4 தலித் பெண்கள் பிற சாதியினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள், ஒவ்வொரு வாரமும் 13 தலித்துகள் கொல்லப்படுகிறார்கள். ஆறு தலித்துகள் கடத்தப்படுகிறார்கள்.
தில்லியின் கூட்டு பாலியல் வல்லுறவு கொலை சம்பவம் நிகழ்ந்த 2012ல் மட்டும் 1574 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். (தலித்துக்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கங்களிலும் மற்ற குற்றங்களிலும் வெறும் பத்துசதவிகிதம் மட்டுமே ரிப்போர்ட் செய்யப்படுகின்றன). 651 தலித்துகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அது பாலியல் குற்றம் மற்றும்கொலைகளின் எண்ணிக்கை மட்டுமே. நிர்வாணப்படுத்தி தெருக்களில் இழுத்துச் செல்வது, மலத்தைத் திணிப்பது, நிலத்தைஅபகரிப்பது, சமூக புறக்கணிப்பு, குடிநீர் தராமல் இருப்பது எல்லாம் இந்த எண்ணிக்கையில் அடங்காதவை.

பாபாசாகேப் அம்பேத்கர் சொன்னது போல: “தீண்டாதவர்களைப் பொறுத்தவரையில் இந்து மதம் கொடூரங்களின் கூடாரம்.”ஆனால் வன்முறை என்பது குற்ற செயல்களில் ஈடுபடும் கும்பல்களோடு நின்றுவிடுவதில்லை. அது இந்திய தேசம் என்கிற கற்பிதத்தில் இருக்கிறது.

கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதியன்று ஆந்திர மாநிலத்தின் சிறப்பு காவல்படை 20 பேரை ரத்த வெறியோடு கொன்றது. யாரும் கைது செய்யப்படவில்லை. ஹஷிம்புராவில் 42 இஸ்லாமியர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் காவல்துறையினர் விடுதலை செய்யப்பட்டது போல, கீழ்வெண்மணி போல, பிற தலித் படுகொலை வழக்குகள் போல அனேகமாக இந்தப் படுகொலைகளைச் செய்த சிறப்புக் காவல்படையினர் மீதும் எந்த நடவடிக்கையும் இருக்காது. அதே நாளில் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டு வாரங்கல்லிலிருந்து ஹைதரபாத்துக்கு அழைத்து வரப்பட்ட ஐந்து இஸ்லாமிய கைதிகளை சுட்டுக் கொன்றது காவல்துறை. பிறகு கொல்லப்பட்ட மக்களுக்கு எதிராக எஃப்..ஆர் பதிவு செய்யப்பட்டது!!

இந்தியா இறையாண்மை கொண்ட அரசாக மாறி கடந்திருக்கும் 67 வருடங்களில், உள்நாட்டில் அரசியல் பிரச்னைகளைக் கையாள இந்திய ராணுவம் அனுப்பபடாத வருடம் என்று ஒன்று கூட இல்லை. காஷ்மீர், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், ஹைதராபாத், கோவா, தெலுங்கானா, அசாம், பஞ்சாப், மேற்கு வங்கம் என்று பல மாநிலங்களுக்கும் ராணுவத்தினர் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இப்போது ஆதிவாசி மக்கள் வாழும் மத்திய இந்தியாவிற்கு நிலத்தை சுரங்க நிறுவனங்களுக்கும் கட்டுமான நிறுவனங்களுக்கும் கையளிக்க ராணுவம் அங்கு செல்ல தயாராக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், லட்சக்கணக்கானவர்கள் துன்புறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தேசத்தின் எதிரிகள் யார்? யோசித்துப் பாருங்கள். அவர்கள் இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், ஆதிவாசிகள், சீக்கியர்கள் மற்றும் தலித்துகள். எப்போதும் தனது சிறுபான்மையினரோடு அவர்னர்களோடு போர் புரிந்துகொண்டிருக்கும் ஒரு சவர்ன இந்து தேசத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் இந்தியா சிறுபான்மையினரின் தேசம் - இந்த மேட்டுக்குடி சிறுபான்மை (பார்ப்பனரும் பனியாக்களும் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் வெறும் 6 சதவிகிதம் மட்டுமே) எப்படி தங்களது சலுகைகளையும் அதிகாரத்தையும் நிலை நிறுத்திக்கொள்ள முடிகிறது? காலனிய ஆட்சியாளர்களைப்போல மக்களை ஒருவருக்கு எதிராக ஒருவரைத் திருப்பிவிடுவதன் மூலம்தான். காஷ்மீரில் சண்டையிட நாகாக்களை அனுப்புவதன் மூலம், காஷ்மீரிகளை சட்டிஸ்கருக்கு அனுப்புவதன் மூலம் தமிழர்களை அசாமுக்கு அனுப்புவதன் மூலம், இடைநிலைச் சாதியினரை தலித்துகளுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம், தலித்துகளை இஸ்லாமியர்களுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம்.

1960
களிலும் 70களிலும் உங்கள் கட்சியின் முன்னோடியானதலித் பாந்தர்கள்மற்றும் நக்சலைட்டுகள் போன்ற எதிர்ப்பியக்கங்கள் நீதி பற்றி புரட்சி பற்றி பேசினார்கள். அவர்கள் நில சீர்திருத்தங்களைக் கோரினார்கள். உழுபவருக்கே நிலம் என்பது அவர்களது கோஷமாயிருந்தது. இன்று நீதி என்னும் சிந்தனை நமது மனங்களிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது அதற்கு பதில் மிக குறுகிய கருத்தாக்கமான மனித உரிமை வந்தமர்ந்திருக்கிறது. கொஞ்ச நஞ்ச நில சீர்திருத்தங்களும் இப்போது திரும்பப் பெறப்படுகின்றன. மாவோயிஸ்டுகள் போல அதி தீவிர புரட்சிக் குழுக்கள் கூட மக்களிடம் பெரும்பாலும் ஆதிவாசிகளிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நிலமும் தனியார் நிறுவனங்களுக்கு போய்விட கூடாது என்றே காடுகளில் போராட வேண்டியிருக்கிறது. இன்று தலித் மக்களில் 70 சதவிகிதம் பேர் நிலமற்றவர்களாக இருக்கிறார்கள். பஞ்சாப், பீஹார், ஹரியானா, கேரளா போன்ற மாநிலங்களில் இது 90 சதவிகிதமாக இருக்கிறது. நிலமற்ற லட்சக்கணக்கான இந்த மக்கள் இன்று நாட்டில் நடக்கும் முற்போக்கான தீவிர விவாதங்களில்கூட பங்கேற்க முடிவதில்லை.
இன்று நமது நாட்டை தம் வசமாக்கியிருக்கும் நிறுவனங்கள் யாருக்கு சொந்தமானவை? நிலம் மட்டுமல்லாமல் காடுகள், மலைகள், ஆறுகள், நீர், மின்சார ஆற்றல் எல்லாம் அவர்களுக்கு சொந்தமாகியிருக்கிறது. கோடீஸ்வர தொழிலதிபர்களான - முகேஷ் அம்பானி (ரிலயன்ஸ் நிறுவனம்), லக்ஷ்மி மிட்டல் (ஏர்செலார் மிட்டல்) திலீப் சங்கவி (சன் பார்சமிடிக்கல் குழுமம்), ரூயா சகோதரர்கள் (ரூயா குழுமம்) கே.எம். பிர்லா (ஆதித்யா பிர்லா குழுமம்), சாவித்ரி தேவி ஜிண்டால் (ஜிண்டால் குழுமம்), கௌதம் அதானி (அதானி குழுமம்) சுனில் மிட்டல் (பாரதி ஏர்டெல்) ஆகியோர்தான் துறைமுகங்களை, சுரங்கங்களை, எண்ணை வயல்களை, எரிவாயு வயல்களை, கப்பல் நிறுவனங்களை, மருத்துவ நிறுவனங்களை, தொலைபேசி நிறுவனங்களை, பெட்ரொகெமிக்கல் ஆலைகளை, அலுமினிய ஆலைகளை, செல்பேசி நிறுவனங்களை, தொலைக்காட்சிகளை, காய்கறிக் கடைகளை, பள்ளிக்கூடங்களை, சினிமா கம்பெனிகளை, ஸ்டெம் செல் முறைகளை, மின்சார அமைப்புகளை, சிறப்பு பொருளாதார நிறுவனங்களை சொந்தமாக வைத்து நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்று பார்ப்பனர்களாகவோ அல்லது பனியாக்களாகவோ இருக்கிறார்கள்.

இன்று உலகெங்கிலும் பரபரப்பாக பேசப்படும் புத்தகமான Capital in the 21st Century என்கிற தனது புதிய புத்தகத்தில் ஃபிரெஞ்ச்எழுத்தாளரும் பேராசிரியருமான தாமஸ் பிகெட்டி அமெரிக்காவில்தங்க முலாம் யுகம்என அழைக்கப்பட்ட 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இருந்ததையொத்த பொருளாதார சமநிலையின்மை இப்போதும் உலகில் உருவாகி வருவதை சுட்டிக்காட்டியிருக்கிறார். வங்கிகளும்நிறுவனங்களும் கோலோச்சும் இந்த காலகட்டத்தில் கூட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சமமற்ற தன்மையை உருவாக்கும் எந்திரமாக இருப்பது குடும்ப சொத்துக்களும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு (வாரிசுகளுக்கு)அவை கை மாறுவதும் என்பதை வலுவான ஆதாரங்களோடு நிறுவியிருக்கிறார் பிகெட்டி. இதன் படி பார்த்தால் சொத்து, அறிவு,சலுகைகள் எல்லாம் வாரிசுரிமை அடிப்படையில்தான் என்கிற கோட்பாட்டைப் புனிதப்படுத்தியிருக்கும் இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய்.

மிகக் குறைந்த அளவிலெயே இருக்கும் சிறுபான்மையினரான பார்ப்பனர்களும் பனியாக்களும் எப்படி தங்களது சலுகைகளை நிலைநிறுத்திக்கொள்கிறார்கள் என்கிற கேள்விக்கு மீண்டும் வருவோம். முரட்டு அதிகாரம் என்பது ஒரு விஷயம்.

பெரும்பாலான பனியா குடும்ப நிறுவனங்கள்தான் இன்று பல ஊடக நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்களாகவும் அவற்றைக் கட்டுப்படுத்துபவர்களாகவும் இருக்கின்றன. எது செய்தி எது செய்தியில்லை என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். ஊடகத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், ஒரு தேசத்தின் சிந்தனையைக் கட்டுப்படுத்தி உருவாக்கவும் அவர்கள் முயற்சிக்கிறார்கள். நான்கு மிக முக்கியமான ஆங்கில நாளிதழ்களில் மூன்றை நடத்துவது வைசியர்கள். நான்காவது பார்ப்பன குடும்ப நிறுவனம். (டைம்ஸ் ஆஃப் இந்தியா, டைம்ஸ் நௌ போன்ற ஊடகங்களை நடத்தும் நிறுவனமான பெனட் கோல்மேன் நிறுவனம் ஒரு ஜெயின் குடும்பத்தால் (பனியா) நடத்தப்படுகிறது). இந்துஸ்தான் டைம்ஸை நடத்துவது பார்டியா (மார்வாரி பனியாக்கள்). இந்தியன் எக்ஸ்பிரசை நடத்துவதும் மார்வாரி பனியாக்களான கோயங்கா. தி இந்துவை நடத்துவது பார்ப்பன குடும்ப நிறுவனம். இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும்தைனிக் ஜாக்ரன்இந்தி நாளிதழை நடத்துவது (கிட்டத்தட்ட 55 மில்லியன் சர்க்குலேஷன்) கான்பூர் பனியாக்களான குப்தாக்கள். 17.5 மில்லியன் சர்குலேஷன் கொண்ட தைனிக் பாஸ்கர் என்கிற செல்வாக்கான ஊடகத்தை நடத்துவதும் அகர்வால்கள் என்கிற பனியாக்கள்தான். 27 முக்கியமான தேசிய மற்றும் பிராந்திய தொலைகாட்சிகளில் அதிகாரம் செலுத்துமளவுக்கு பங்குகளை வைத்துக்கொண்டிருக்கிறது முகேஷ் அம்பானி என்கிற குஜ்ராத்தி பனியா நடத்தும் ரிலையன்ஸ் நிர்வாகம். இந்தியாவின் மிக பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றானஸீதொலைக்காட்சியை நடத்துவதும் சுபாஷ் சந்திரா என்கிற பனியா.

பெரும்பாலான ஊடகங்கள் பார்ப்பனர்கள், பனியாக்கள் அல்லது பிற செல்வாக்கான சாதிகளிலிருந்தே செய்தியாளர்களை பணிக்கு அமர்த்துவதாக தரவுகள் சொல்கின்றன. வெகுஜன ஊடகங்களில் பணிபுரியும் இஸ்லாமிய செய்தியாளர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். தலித்துகளும் ஆதிவாசிகளும் அந்த எல்லைக்குள்ளேயே இல்லை.
இட ஒதுக்கீட்டின் கொள்கையை வேண்டுமென்றே திசைதிருப்பி, நீதித்துறை, அதிகார வர்க்கம், அறிவுத்துறை எல்லாவற்றிலும் இந்த நிலைமையை ஏற்படுத்திவிட்டார்கள். தலித்துகள் மிக அதிக அளவில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இடம், அரசாங்க நகராட்சிகள்தாம். பெருக்குபவர்களில் 90 சதவீதம் பேர், வால்மீகி சாதியைச் சேர்ந்தவர்கள். இந்த மிகப்பெரிய வல்லரசில்தான், இன்னமும் பதின்மூன்று லட்சம் பெண்கள் தங்களது தலைகளின் மீது மலக் கூடைகளை சுமந்து வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

ஜனநாயகமும் நவீன தாராள பொருளாதார சந்தையும் சாதியை நவீனமயப்படுத்தியிருப்பதோடு அல்லாமல் அதன் பிடியை மேலும் இறுக்கியிருக்கிறது. இருந்தாலும் இந்தியாவின் மிகச்சிறந்த அறிவுஜீவிகள், வரலாற்றாசிரியர்கள், வளர்ச்சிபர்றி ஆராயும் பொருளாதார நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அவர்களுடைய எழுத்துகளிலும் ஆய்வுகளிலும் ஒன்று சாதியை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கிறார்கள் அல்லது குறைந்த அளவில் எழுதுகிறார்கள். இது பார்க்காமல் தவிர்ப்பது என்கிற பெரிய திட்டம். திரைச்சீலைகளை விலக்கி இந்த பெரிய ஜனநாயகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உலகிற்கு காட்ட வேண்டியது நம் கடமை.

அடியில் தேங்கியிருக்கும் சாதி அமைப்பின் இரும்புப்பிடி குறித்து எப்போதாவது வெகுஜன ஊடகங்களும் அறிவுலகத்தினரும் உரக்க பேசுகிறார்கள் என்றால் அதுவும் மிக வித்தியாசமான வகையில் என்றால் அது தேர்தல்காலகட்டத்தில்தான். அப்போதுதான் எல்லா அரசியல் கட்சிகளும் அதன் சவர்ன தலைவர்களும் தலித் மற்றும் இடைச்சாதிகளின் வாக்குகளுக்கு போட்டியிடுகிறார்கள். தேர்தல் முடிந்தவுடன் சாதி பிரச்னை மீண்டும் அறிவுலக முட்டாள்தனங்களுக்கு அடியில் போய் தேங்கிக்கொள்கிறது. அம்பேத்கர் சாதியை எதிர்த்ததால் இயல்பாகவே அவர் இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானவர் என்று மிக சீரியசாக ஒரு வெகுஜன ஊடகவியலாளர் வாதிட்டு நான் கேட்டிருக்கிறேன்.

பொருளாதார ஊழல்கள் குறித்து பேசுவதும் அவற்றை பிரச்னையாக்குவதும் இப்போதெல்லாம் மிக நாகரீகமான ஒரு விஷயம். ஆனால் இந்தப் பிரச்னை குறித்து பெரும் கவலை கொள்ளும் பலர் அறிவுலக நேர்மையின்மை பற்றி கவலை கொள்வதில்லை. இந்த நாட்டில் பலர் தொடர்ந்து கடைபிடிக்கும் நினைத்துப் பார்க்க முடியாத தார்மீக ஊழல் பற்றி கவலைப்படுவதில்லை. நீதி, அடையாளம், சமூகம் பற்றி புத்தகங்களும் ஆய்வுகளும் எழுதும் மிகச்சிறந்த அறிவுஜீவிகளும் வரலாற்றாசிரியர்களும், மிகக் குரூரமான, ஒடுக்குமுறையை ஏவும் சமூகப் படிநிலையான சாதி என்கிற கேள்வியை முழுவதும் புறக்கணிக்கிறார்கள்.

வரலாற்றில் மிக மோசமான விந்தைகளில் ஒன்று என்னவென்றால் இந்த அறிவுலக நேர்மையின்மைதான். சாதி அமைப்பில் நம்பிக்கை கொண்ட, தொழிலாளர்களிடம், பெண்களிடம், ஆப்ரிக்க கறுப்பினத்தவரிடம் தொடர்ந்து மோசமாக நடந்து கொண்ட மோகன்தாஸ் காந்தியை உலகின் மிக உயர்ந்த மகானாகவும், ஏழைகளின் நண்பனாகவும், ஆப்ரிக்க அமெரிக்கர்களின்நாயகனாகவும், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோர்ஏற்றுக்கொண்ட தலைவராகவும் நமது தேசத்தின்தந்தையாகவும் மாற்றியிருக்கிறது. இப்படிப்பட்ட பொய்களின் மீது நமது நாட்டின் அடித்தளம் எழுப்பப்படுவதை நாம் அனுமதிக்கமுடியாது.
பாபாசாகேப் அம்பேத்கருக்கு மட்டுமே அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த போதும் காந்தியை எதிர்க்கும்துணிவும் அறிவு திண்மையும் இருந்தது. ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயப்பாடமாக்கப்பட்டிருக்க வேண்டிய அம்பேத்கர்காந்திவிவாதம் மிகத் திறமையாக மழுங்கடிக்கப்பட்டுவிட்டது. இப்போது தாராள அறிவுஜீவிகளும் வரலாற்றியலாளர்களும் அவர்கள்ஒருசேர பயணித்தவர்கள் என்றும் இடையிடையே நட்புரீதியான முரண்கள் இருந்தன என்றும் முன்னிறுத்த முனைகிறார்கள்.இது முழுக்க முழுக்க பொய்.அம்பேத்கரின் மரபு இப்படி பொய்மைப்படுத்தப்படுவதை உடனடியாகத் தடுக்க வேண்டியது நமது அவசர கடமையாகும்.

எனது உரையை முடிக்கும் முன்பு நான் சொல்ல விரும்புவதெல்லாம், சாதிக்கு எதிரான இந்த போராட்டத்தை நாம் தொடர வேண்டுமெனில் பார்ப்பனீயத்துக்கும், முதலாளித்துவத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் உள்ள தொடர்பை நாம் தொடர்ச்சியாகவும் அனுபவபூர்வமாகவும் நிறுவ வேண்டும். உலகெங்கிலும் அரசியல் கூட்டணிகளை உருவாக்க வேண்டும். வேறு எப்படி தென்னாப்பிரிக்காவில் நிற வெறுப்பு (பெயரளவிலாவது) முடிவுக்கு கொண்டு வரப்பட்டது? பாகுபாட்டின் மிக மோசமான வடிவத்தைப் பின்பற்றி வரும் இந்த சமூகத்தை முழுமையான வெறுப்புணர்வோடு உலகம் பார்க்க வேண்டும். இன்று இந்தியாவுக்கு வெளியே வாழும் பலருக்கு சாதி என்றால் என்னவென்று தெரியாது. அவர்களைப் பொறுத்தவரையில் அது இந்து மதத்தோடு, நாகரீகமான சைவ உணவுப் பழக்கத்தோடு, யோகாவோடு எல்லாவற்றுக்கும் மேலாக காந்தியிசத்தோடு புனிதமான தொடர்புடையது. சாதியை அழிக்கும் பணிக்கு நாம் ஒவ்வொருவரும் நமது திறமையையும் ஆற்றலையும் முழுமையாக அளிக்க வேண்டும்.

நமக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால் அரசியல் ரீதியான ஒற்றுமையைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் சாதிய வேறுபாடுகளை வலுப்படுத்திவிடாமல் எப்படி சாதியை எதிர்த்துப் போராடுவது என்பதுதான். இது மிகவும் சிக்கலான போராட்டம். தனிமைப்படுவதை ஊக்குவிக்கும், ஒற்றுமைக்கான சாத்தியங்களை உருக்குலைக்கும் சாதி எதிர்ப்புப் போராட்டத்தின் நோக்கத்தையே முறியடிக்கும் அதி தீவிர தோரணைகொண்ட நபர்களை நாம் பார்க்கலாம். இந்த போராட்டத்தில் உங்கள் நண்பர்கள் யார் உங்கள் எதிரிகள் யார் என்று கண்டடைவது மிக மிகக் கடினமான ஒரு விஷயம் என்பது என்னைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதைச் செய்ய வேண்டும். அதுதான் பாபாசாகேப் அம்பேத்கரின் மிகப்பெரிய ஆற்றல்களில் ஒன்று.

நாம் ஒரு இணைப்புச் சங்கிலியை உருவாக்கியாகவேண்டும். நிலங்களிலிருந்து, தொழிற்சாலைகளிலிருந்து, குடிசைப்பகுதிகளிலிருந்து, சிறு நகரங்களிலிருந்து, பள்ளி, பல்கலைக்கழகங்களிலிருந்து, பாடசாலைகளிலிருந்து, இலக்கியத்திலிருந்து சினிமாவிலிருந்து எழும் உடைக்கவியலாத சங்கிலியை நாம் உருவாக்க வேண்டும். விழிப்புணர்வு, புரிந்துணர்வு சோர்வடையாத செயல்பாடு என்னும் சங்கிலி அது.

இவ்வாறு என்னை கௌரவப்படுத்தியதற்கு மீண்டும் எனது நன்றி.

நன்றி : Joshua Issac Azad

1 comment:

Arulappa said...

தெளிவாக உரையை வெளியிட்டதற்கு நன்றிகள்...