Jul 17, 2015

குண்டர்களால் உதவி பேராசிரியர் தாக்கப்பட்டார்!

விஜயகாந்த் கல்லூரி உதவி பேராசிரியர் விக்ரம் மீது கல்லூரி நிர்வாகத்தின் கொலைவெறி தாக்குதல்!

செங்கல்பட்டு அருகே விஜயகாந்த்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு இரண்டு ஆண்டுகளாக பயோ டெக்னாலஜி துறையில் உதவி பேராசிரியராக வேலை செய்த விக்ரம் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்த குண்டர்களால் 15.07.15 அன்று கடுமையாகத் தாக்கப்பட்டார்.

தாக்குதலின் பின்னணி

கல்லூரியில் வேலை செய்துவரும் , பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை சம்பளம் தரப்படவில்லை. மேலும் பேராசிரியர்களும் , உதவி பேராசிரியர்களும் பாடம் நடத்துவதோடு, கல்லூரி நிர்வாகம் சொல்லும் எல்லா வேலைகளையும் கட்டாயம் செய்யவேண்டும் என நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது. உதாரணமாக மற்ற கல்லூரிகளுக்கு சென்று போட்டிகள் நடத்துகிறோம் என்ற பெயரில் பேராசிரியர்கள் தங்களது சொந்த செலவில் ஆள் பிடிக்கவேண்டும்.

இது இல்லாமல், இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக வீழ்ச்சி அடைந்ததை அடுத்து கோடை விடுமுறைக்கு பின் ஒவ்வொரு பேராசிரியரும் குறைந்தது இரண்டு மாணவர்களையாவது சேர்த்துவிடவேண்டும், இல்லையென்றால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு போங்கள் என கட்டளையிட்டது நிர்வாகம்.
இப்படிபட்ட கல்லூரியின் தொடர்ச்சியான அத்துமீறல்களை யாரும் கேட்க துணியாதபோது, விக்ரம் கேட்க துணிந்தார். அதனடிப்படையில் ஜீன் 27 ஆம் தேதி அன்று கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவின் போது இஸ்ரோவை சேர்ந்த மாதவன் நாயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அரங்கம் முழுவதும் மாணவர்களும், பேராசிரியர்களும், பெற்றோர்களும் நிரம்பி இருந்தனர். இந்த விழாவில் கல்லுாரி நிர்வாகம் சம்பளம் கொடுக்கவில்லை, மாணவர்களை அட்மிசனுக்கு ஆள் பிடிக்க சொல்கிறது என்பன போன்ற உண்மைகளை துண்டறிக்கையாக அச்சிட்டு வினியோகித்து எதிர்ப்பு குரல் எழுப்பினார் உதவி பேராசிரியர் விக்ரம். அன்றைக்கே அவரை தாக்குவதற்கான முயற்சிகள் நடந்தன. இருந்தும் விக்ரம் அன்று தப்பிவிட்டார். பீதி அடைந்த நிர்வாகம் அனைவருக்கும் சம்பளத்தை உடனே பட்டுவாடா செய்தது.

ஆனால் உதவிபேராசிரியர் விக்ரமை பணியை ராஜநாமா செய்து விட்டு போகும் படி பல முனைகளில் இருந்து நெருக்குதல் கொடுத்தது நிர்வாகம். இதன் விளைவாக ராஜநாமா செய்ய நேரிட்டது. பின்னர் 15.7.2015 அன்று தனது சான்றிதழ் போன்றவற்றை திரும்ப பெறுவதற்காக முதல்வரை சந்தித்தார். அப்போது முதல்வர், விக்ரமிடம் எங்கு தங்கியுள்ளார்? எந்த வழியில் போவார்? எந்த பேருந்தில் போவார்? போன்ற விவரங்களை நயமான முறையில் விசாரித்துள்ளார். பிறகு முதல்வரை சந்தித்துவிட்டு கல்லுாரி வளாகத்தில் இருந்து சுமார் மாலை 4 மணி அளவில் திடிரென 5 குண்டர்கள் விக்ரமை சூழ்ந்து கொண்டு தாக்கி கொண்டே ”என்னடா நினைத்துக் கொண்டாய், நிர்வாகத்திற்கெதிராக மாணவர்களை துாண்டிவிட்டுக் கொண்டிருக்கிறாய், இதோடு நிறுத்திக்கொள் ” என கூறி கீழே தள்ளி மிதித்துள்ளனர். இதனால் விக்ரமின் மூக்கு கண்ணாடி உடைந்ததோடு மூக்கு தண்டும் உடைபட்டு ரத்த காயம் ஏற்பட்டது.

இவர்களிடம் இருந்து தப்பி வெளியே வந்து மருத்துவ சிகிச்சை பெற்ற பின்னர் 16.7.2015 அன்று படாளம் காவல் நிலையத்தில் கல்லுாரி நிர்வாகத்திற்கு எதிராக புகார் கொடுத்துள்ளார் உதவி பேராசிரியர் விக்ரம்.
விஜயகாந்த் கல்லுாரி மட்டும் அல்ல. எல்லா தனியார் கல்லுாரிகளுமே கல்விக்கு சற்றும் தொடர்பில்லாத கிரிமினல் மாஃபியா கும்பல்களால் தான் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு பொறியியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டதால் பல கல்லுாரிகள் தங்கள் ஆசிரியர்களை புரோக்கர்களாக மாற்றி கல்வி சந்தையில் அலையவிட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்படும் ஆசிரியர்களில் விக்ரமைப் போன்று துணிச்சலுடன் குரல் எழுப்பியவர்கள் மிக குறைவு. தனியார் கல்லுாரி மாஃபியாக்கலுக்கு எதிராக துணிவுடன் போராடுமாறு ஆசிரியர்களையும், மாணவர்களையும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் கேட்டுக் கொள்கிறது. உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் துணை நிற்போம்.

கல்லுாரி முதல்வரையும் தாக்குதல் நடத்திய குண்டர்களையும் கைது செய்யும் வரை தொடர்ந்து போராடுவோம். தேமுதிக என்ற அரசியல் கட்சியை நடத்திவரும் விஜயகாந்த் தனது கல்லுாரியில் நடந்துள்ள இந்த சம்பவத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு
சு.மில்ட்டன், செயலாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்புமையம்,
9094666320

No comments: