அந்த போராட்டத்தில்… ஒரு நிகழ்வு!
பச்சையப்பா கல்லூரி RSYF மாணவ
தோழர்களை கைதாகும் பொழுது போலீசு கடுமையாக தாக்கியதை உலகமே பார்த்து காறித்துப்பியது. சட்டவிரோதமாக காவல்நிலையத்திலும் மணல் நிரப்பிய
பைப்பால் அடித்தது! அன்று இரவு மாணவர்களை ரிமாண்ட் செய்வதற்காக போலீசு நீதிபதி வீட்டிற்கு
அழைத்துவந்தது!
ஊர்
அடங்கியதும் இரவு 9.30 மணிக்கு நீதிபதியின் வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஏழு ஆண்டுகளுக்கு
குறைவான தண்டனை வழங்கும் வழக்கில் உரிய காரணங்கள் இல்லாமல் ரிமாண்ட் செய்யக்கூடாது
என உச்சநீதி மன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி வாதாடினோம். நீதிபதி அதை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை.
நீதிபதியிடம் கையெழுத்து வாங்கி, மாணவர்களை சிறையில் அடைப்பதிலேயே காவல்துறை கண்ணும்
கருத்துமாய் இருந்தது.
கைது
செய்த பொழுதும், காவல்நிலையத்திலும் காட்டுமிராண்டித்தனமாக அடித்ததை எடுத்து சொல்லியும்
நீதிபதிக்கு பதைபதைப்பு வரவில்லை. இவ்வளவு
மோசமாக தாக்கியிருக்கிறீர்களே என போலீசை நீதிபதி கண்டிக்கவுமில்லை. நின்றுகொண்டே பேசிக்கொண்டிருந்த
நீதிபதியை, காவல்நிலையத்தில் மாணவர்களை அடித்ததை
ஒவ்வொருவராக சொல்வதை உட்கார்ந்து விரிவாக பதிவு செய்யவேண்டும் என கோரினோம். “நானும்
மனுசன் தானே!” என சொல்லி, சீக்கிரம் முடிச்சுட்டு தூங்க போகணும் என ஒரு இயந்திரத்தை போல போலீசு கேட்ட கையெழுத்தை போட்டுவிட்டு கிளம்புவதிலேயே இருந்தார்.
காவல்நிலையத்தில் போலீசு அடிப்பதையெல்லாம் இவ்வளவு
பெரிதுபடுத்துகிறோம் என அசுவாரசியமாய் கேட்டு பதிவு செய்தார். அடித்ததை பதிவு செய்யும் பொழுது மாணவர்களை நீதிபதி
“வா! போ!” என ஒருமையில் அழைத்தார். பொது நோக்கத்திற்காக
போராடிய அந்த மாணவர்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. போலீசை போல ஏன்
நடந்துகொள்கிறீர்கள்? மரியாதையாக அழையுங்கள் என பல வழக்குரைஞர்களும் போராடிய பிறகுதான்,
ஏற்கனவே கேட்ட மருத்துவ சிகிச்சை மற்றும் உணவிற்கு அனுப்பிவைத்தார். எல்லா மாணவர்களுக்கும்
வெளிகாயங்களுக்கு மட்டும் பெயருக்கு டிஞ்சர் போட்டு, உள்நோயாளியாக அனுமதித்து விடக்கூடாது
என மருத்துவர்களை டீல் செய்து, திரும்ப அழைத்துவந்தார்கள்.
நீதிபதியின்
நடவடிக்கையை கவனித்த பொழுது, சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் மக்களை அடிக்கும் ஒவ்வொரு
போலீசுக்கும் ஐ.ஜி. நம்மள காப்பாத்துவார் என்பதை விட, “ஜட்ஜய்யா! நம்மள காப்பாத்துவார்”
என்ற நம்பிக்கை இருக்கும் என அப்பட்டமாக தெரிந்தது!
கொசுறு
செய்தி : இரவு 9.30 மணி அளவில் நீதிபதி வீட்டிற்கு மாணவ தோழர்களை அழைத்து வந்த பொழுது,
அரசை, போலீசை அம்பலப்படுத்தி முழக்கம் எழுப்பினார்கள். இதனால் பக்கத்து வீட்டில் தூக்கம் கலைந்த இன்னொரு
நீதிபதி வந்து மாணவர்களையும், நம்மையும் பார்த்து
“தூக்கம் கலைக்கிறீர்களே!” என விசனப்பட்டார்.
டாஸ்மாக் போராட்டம் அன்றைக்கு தமிழகம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்த பொழுது,
தூக்கம் கலைத்ததற்காக கவலைப்படுகிறார்! நாம் பலரின் ’தூக்கத்தை’ கலைக்க வேண்டியிருக்கிறது!
மக்கள்
உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
No comments:
Post a Comment