மிதிவண்டியில்
முன்னாடி அமர்ந்து பயணிப்பது மிகுந்த நெருக்கத்தை உணரமுடியும்!
அது நண்பனாலும், காதலியானாலும்!
***
ஒரு ஞாயிறு காலை. டீனேஜ் வயது. எங்கள் தெருவில் இருந்த ஈஸ்வரியை சைட் அடித்துக் கொண்டிருந்த காலம். பக்கத்து தெருவில் வண்டி பழகி கொண்டிருந்தாள்.
வண்டி பழகும் அழகை நானும் நண்பனும் கட்டிமுடிக்கப்படாத ஒரு கட்டிடத்தில் நின்று வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தோம். திடீரென எங்கள் இருவர் பக்கம் திரும்பி இங்கே வாருங்கள்! என அழைத்தாள். வேறு யாரையும் அழைக்கிறதா! என இருவரும் வேகமாய் திரும்பி பார்த்தோம். யாரும் இல்லை. நண்பன் வீட்டிற்கு பயந்து கொண்டு போகவில்லை. நான் தைரியமாய் போனேன்.
தம்பியாலும், தங்கையாலும் வண்டி ஓட்டும்பொழுது, வண்டியை பிடிக்கமுடியவில்லை. அதற்குத்தான் அழைத்திருக்கிறாள். ஈஸ்வரி வண்டியை ஓட்ட, நான் பிடித்துக்கொண்டேன். ஒரு மணி நேரம். கூச்சமாகவும், பதட்டமாகவும் இருந்தது.
அடுத்த நாள், என் அக்காவிடம் ஈஸ்வரிக்கு வண்டி ஓட்டக்கற்றுக்கொடுத்ததைப் பார்த்து வயித்தெரிச்சல் பட்டு, யாரோ போட்டுக்கொடுத்துவிட்டார்கள். "அந்த பொண்ணு யாருடா! நம்ம அத்தைப் பொண்ணா! மாமன் பொண்ணா! நீ சைக்கிள் சொல்லித்தர!" என ஒருமணி நேரம் திட்டு வாங்கியது தனிக்கதை!
***
16 வயதிலிருந்து
ஆடல், பாடல் நிகழ்ச்சி, பட்டிமன்றம்,
சொற்பொழிவு, நாடகம், திரைப்படம், கலைவிழா,
பொதுக்கூட்டம், விடிய விடிய நண்பர்களுடன்
விவாதம் என பல இரவுகள்
மதுரை தெருக்களில் சுற்றித் திரிந்த பயணம் எதுவும்
மிதிவண்டி இல்லாமல் சாத்தியமாயிருக்காது!
***
சமீபத்தில் ஒரு உறவினர் வீட்டுக்கு போயிருந்தேன். அவரின் 6ம் வகுப்பு படிக்கும் பையன் வரைந்த ஓவியங்களை காண்பித்தார்கள்.
அதில் ஒரு ஓவியம். ஒரு பரபரப்பான மாநகர சாலை. சுற்றிலும் நிறைய கான்கிரீட் கட்டிடங்கள். சாலையில் நிறைய கார்கள் பயணிக்கின்றன. அவ்வளவு தான். பகீரென்று இருந்தது.
"தம்பி! இன்றைக்கும் நிறைய மனிதர்கள் நடந்துபோகிறார்கள். மிதிவண்டியில் பயணிக்கிறார்கள். கூட்டம் கூட்டமாய் பறவைகள் பறக்கின்றன. சாலையின் ஓரங்களில் மரங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் சேர்த்தால் ஓவியம் இன்னும் அழகாக மாறிவிடும்" என்றேன்.
புன்னகைத்து சரி என்றான்.
***
20 வயதில்... கோடைகாலத்தில், நானும், நண்பனும் தேநீர் கடையில் உலகத்தைப் பற்றி கவலை கொண்டு பேசிக்கொண்டிருந்தோம். :)
அப்பொழுது எங்களை மிதிவண்டியில் இளம்பெண் தென்றலாய் கடந்து சென்றாள். சாலையின் வளைவில் மண்ணின் சதியால் தொபுக்கடீர் என தவறி விழுந்தாள். பதறிப்போன நாங்கள் ஓடிப்போய் உதவி செய்தோம். பிறகு அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டே வீடு வரைக்கும் போய் பாதுகாப்பாக விட்டு வந்தோம்.
***
1990-களில் சிடி, டிவிடி வருவதற்கு முன்பு, வீடியோ கேசட்தான் பிரபலம். பொருளாதாரத்தில் வசதியானவர்களின் வீட்டில் தொலைக்காட்சியே இருக்கும். இன்னும் சொற்பமான நபர்களிடம் தான் பிளேயர் இருக்கும். திரையரங்கை விட்டால், படம் பார்ப்பது என்பது மிகவும் சிரமம். வருடம் ஒருமுறை கோயில் திருவிழாக்களில் ஒரு சாமிபடம், இரண்டு சமூகபடங்கள் என திரையிடுவார்கள். பாய்விரித்து படுத்துக்கொண்டெல்லாம் ஜாலியாய் பார்ப்பார்கள்.
நண்பர்களிடையே வசூலைப் போட்டு, பிளேயரை வாடகைக்கு எடுத்து பிடித்த படங்கள் போட்டு பார்க்கலாம் என முடிவுசெய்தோம். வாடகைக்கு எடுத்துவருகிற பிளேயரும், வீடியோ கேசட்டும் இல்லாத அழிச்சாட்டியெல்லாம் செய்யும். ஒருவழியாக போராடி மூன்று படங்கள் பார்த்து நண்பர்கள் எல்லாம் தூங்கி போக, காலை 5 மணிக்கு வெளியே வந்து பார்த்தால், என் குதிரையை காணோம். அதுதாங்க என் மிதிவண்டி! தொலைந்து போனதில் எனக்கு கூட பெரிய வருத்தம் இல்லை.எங்கம்மா தான் 1000 ரூ. வண்டி போச்சே!ன்னு மூன்று நாள் சோகமா இருந்தார்.
***
1990களில்…மதுரை சோலைமலை திரையரங்கில்,
மிதிவண்டிக்கு தரும் டோக்கனுடன் ஒரு
டிக்கெட்டையும் தந்துவிடுவார்கள். வரிசையில் மல்லுக்கட்டும் சிரமத்தை தரமாட்டார்கள். ஆகையால், புதுப்படங்களுக்கும், சனி, ஞாயிறுகளிலும் மிதிவண்டி
இருந்தால் சோலைமலையை நம்பி படத்திற்கு போகலாம்!
மிதிவண்டிக்கு மரியாதை! :)
***
சென்னையில் வாடகைக்கு மிதிவண்டி தருவதை பார்க்கமுடியவில்லை. 1980 வாக்கில் எங்கள் ஊரில் மிதிவண்டியை வாடகைக்கு தருவார்கள். 1 மணி நேரத்திற்கு 2 ரூ. 15 வயதில் காசு தட்டுப்பாடு அதிகம்.
அதனால் ஒரு மிதிவண்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, எல்லோரும் ஒல்லி என்பதால் ஒரே வண்டியில் 5 பேர் ஜாலியாய் 4 கிமீ தள்ளி இருக்கிற ஒரு பச்சைக் கிணற்றில் குளிக்க போவோம்.
20 அடி உயரத்தில்
இருந்து தொபக்கடீர் என குளிர்ந்த நீருக்குள் குதித்து, 15 அடி ஆழம் வரை
போய், வெளியே வருவது ஆனந்தமோ ஆனந்தம். இப்படி 3 மணி நேரமாவது நீரில்
ஊறிக்கிடப்போம்! இப்படி அந்த ஆண்டு தண்ணீர் வற்றிய காலம்வரை, கிணற்றை
பாடாய்படுத்தினோம்.
***
அறிந்தவர்கள் அபூர்வமாய் மிதிவண்டி கொண்டு வந்தால், வாங்கி கொண்டு ஒரு ஜாலி ரவுண்டு போய்விட்டு தந்துவிடுகிறேன்.
கடைசியாய் கொடைக்கானலில் வாடகைக்கு மிதிவண்டி வாங்கி, மெல்லிய மழைச் சாரலில் என் பெண்ணுடன் பயணம் போனது இன்னும் நினைவில் நிற்கிறது!
Selvam Ramki
1 comment:
நல்ல ரசனையோடு எழுதி இருக்கிறீர்கள். நானும் ரசித்துப் படித்தேன்."வாடிக்கை மறந்ததும் ஏனோ"- என்று யாரும் பாடவில்லையா?
Post a Comment