தரமற்ற பெப்சியை ஆய்வு செய்து, பெப்சி நிறுவனத்தை பூட்டு போட்டது; தலைமை செயலர் வரை பதறிப்போய் சகாயத்துக்கு தொலைபேசியில் பேசியது; அரசு எந்த பத்திரிக்கைகளிலும் அந்த செய்தி வெளிவராமல் பார்த்துக்கொண்டது; உடனே வேறு ஊருக்கு தூக்கியடித்தது – இது ஒரு சம்பவம்!
கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பலை கைது செய்ய போய், மாவட்ட ஆட்சியரான சகாயத்தின் மீதே தனக்கு கீழ் உள்ள அலுவலரையே அடித்துவிட்டார் என பொய் வழக்கு போட்டது; சகாயம் சுதாரித்து அதை சாமர்த்தியமாய் எதிர்கொண்டது!- இது ஒரு சம்பவம்!
ஒரு கட்சிக்காரர் வீட்டுவசதிவாரியத்தின் கோடிக்கணக்கான மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறார். சகாயம் நடவடிக்கை எடுக்கிறார். உடனே கட்சிக்காரர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை வேறு ஊருக்கு மாற்றுகிறார்.
இப்படி பல சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகிறார். கூடுதலாக, முன்பெல்லாம் அரசு அலுவலர்கள் அடிப்படை தேவைகளுக்கு லஞ்சம் வாங்கியவர்கள் இப்பொழுது கூடுதலான நுகர்வு தேவைகளுக்கு லஞ்சம் வாங்குவதாக சொல்கிறார். இப்பொழுது பெரும்பாலும் லஞ்சம் வாங்குவதாக அவரே சொல்கிறார். இதிலிருந்து நமக்கு புரிவதெல்லாம், அரசும், அரசாங்கமும் லஞ்சத்தில் ஊறித்திளைக்கிறது. சகாயம் மாதிரி ஆட்கள் எல்லாம் லட்சத்தில் ஒருவர் என சொல்லிவிடலாம்.
என் 10 ஆண்டு கால அனுபவத்தில் 30 வருங்கால வைப்புநிதி (PF Enforcement officers) அதிகாரிகளை பார்த்திருப்பேன். ஒரு ஆள் கூட கை சுத்தமான ஆள் இல்லை. அதே போல இஎஸ்ஐ 30 அதிகாரிகளில் கை சுத்தமான அதிகாரி ஒருவரை மட்டுமே சந்தித்தேன். அவர் பெயர் துரைராஜ். அதே போல விற்பனை வரி துறையில் ஒரு நேர்மையான அதிகாரி கூட பார்த்ததில்லை. இதே போலவே கலால் வரி துறையிலும்!
இந்த அரசை ஆளும் வர்க்கம் .இயக்கிக்கொண்டிருக்கிறது என சொன்னால், அதன் நடைமுறை என்பது, தரகு முதலாளிகளும், நிலச்சுவாந்தாரர்களும் தங்களுக்கான வேலைகளை முடிக்க அரசையும், அரசாங்கத்தையும் லஞ்சத்தின் மூலமாக தான் காரியம் சாதித்துக்கொள்கிறார்கள். ஆக உடைமை சமுதாயம் நீடிக்கும் வரைக்கும் லஞ்சம் நீடிக்கும் என்பது தான் யதார்த்தம். அதாவது மூக்கு உள்ளவரை சளி இருக்கும் என்பது தான்!
ஆக, சகாயம் பக்கத்துக்கு பக்கம் சொல்கிறபடியே இந்த அரசும், அரசாங்கமும் மாற்றவே முடியாத அளவிற்கு புரையோடி போய்விட்டதையும், பெரும்பாலான மக்களுக்கு எதிராக நிற்பதையும்தான் நிரூபிக்கிறது. ஆனால், சகாயமோ இளைஞர்களை அணிதிரட்டி ’மக்கள் பாதை’ என்ற அமைப்பை உருவாக்கி, கடந்த சில ஆண்டுகளாக இந்த இத்துப்போன அரசமைப்பை மாற்றலாம் என நம்பிக்கை தந்து வழிநடத்திக்கொண்டிருக்கிறார். இதுதான் பெரிய நகைமுரண்.
மேலும், சகாயத்தின் பெற்றோர்களை அறிமுகப்படுத்தும் பொழுது, உபகாரம் பிள்ளை என குறிப்பிடப்பட்டுள்ளது. சகாயம் சொன்ன மாதிரி “ என்னோட ரோல் மாடல் எங்க சித்தப்பா அருளாந்து பிள்ளை” என எந்தவித தயக்கமில்லாமல் சொல்லியிருக்கிறார். சாதியக்கண்ணோட்டம் கோளாறு தான்!
- வெளியீடு : ஆனந்தவிகடன்
விலை ரூ. 95
பக்கங்கள் : 96
நூல் ஆசிரியர் : கே. ராஜா திருவேங்கடம்
- குருத்து
No comments:
Post a Comment