Jul 17, 2008

மகரஜோதி பொய்! - மருதையன்


""சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்'' என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் கோயிலின் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், ""வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு'' என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.


"இந்த அளவுக்கு குட்டு உடைந்த பிறகும் மார்க்சிஸ்டு அரசு மகரஜோதியைக் கொளுத்துமா?' என்ற கேள்விக்கு ""சபரிமலையில் மகரவிளக்கு வெளிச்சம் எப்படி உருவாகிறது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும். ஆனால் பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது'' என்று பதிலளித்திருக்கிறார் மார்க்சிஸ்டு முதல்வர் அச்சுதானந்தன். யாரை யார் விசாரிப்பது? பந்தம் பிடிப்பவனை பற்ற வைப்பவன் விசாரிப்பதா? ""தீவட்டியைத் தொடர்ந்து கொளுத்துவோம். தீவட்டிக் கொள்ளையைத் தொடர்ந்து நடத்துவோம்'' என்பதுதான் அச்சுதானந்தனுடைய கூற்றின் பொருள்.


மகரஜோதி அம்பலமாவது இது முதல் முறையல்ல. பந்தம் கொளுத்திய மின்வாரிய ஊழியர்களைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் கேரள மாநில பகுத்தறிவாளர் சங்கத்தினர். ""அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, அரசாங்க வருமானத்துக்கு ஆப்பு வைக்காதீங்கப்பா'' என்று அன்பு வேண்டுகோள் விடுத்து அன்று பகுத்தறிவாளர்களை அமுக்கினார் அந்நாள் மார்க்சிஸ்டு முதல்வர் ஈ.கே. நாயனார்.


கோயில் தந்திரி கண்டரரு மோகனரு, தனது லீலாவிநோதங்கள் மூலம் ஐயப்பன் மகிமையைக் கந்தலாக்கியது தனிக்கதை. அவருக்கு வேதம், மந்திரம் போன்ற வெங்காயம் எதுவும் தெரியாதென்பதும் விலைமாதர் வீட்டு முகவரிகள் மட்டுமே தெரியும் என்பதும் அவரிடம் நடந்த விசாரணையில் அம்பலமானது. இப்போது தலைமைத் தந்திரியின் ஒப்புதல் வாக்குமூலம் வந்திருக்கிறது.


தெற்கே தீவட்டி பிசினஸ்; வடக்கே பனிக்கட்டி பிசினஸ். காஷ்மீரில் அமர்நாத் எனுமிடத்தில் குளிர்காலத்தில் ஒரு குகைக்குள்ளே பெரிய "குச்சி ஐஸ்' வடிவத்தில் உருவாகும் பனிக்கட்டியைத் தரிசிப்பதற்கு ஆண்டுதோறும் 4 லட்சம் பக்தர்கள் அங்கே சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த பக்தர்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க 40,000 சிப்பாய்களை மாதக்கணக்கில் காவல் வைக்கிறது அரசு.


மேற்படி சிவலிங்கத்திற்கும் வந்தது சோதனை! ""முன்னர் சுமார் 12 அடி உயரம் இருந்த பகவான் தற்போது 6 அடிக்கும் கீழே போய்விட்டார். காரணம் புரியவில்லை'' என்று சென்ற ஆண்டு அபாயச்சங்கு ஊதினார் அந்தக் கோயிலின் நிர்வாக அதிகாரி. பகவானைக் கண்டு பக்தர்கள் உருகலாம், பக்தர்களைக் கண்டு பகவான் எப்படி உருகமுடியும்? ""பக்தர்கள் விடும் மூச்சுக்காற்றின் வெப்பத்தைப் பனீசுவர பகவானால் தாங்கமுடியவில்லை'' என்றன சில பத்திரிகைகள். பக்தர்களின் மூச்சை நிறுத்த முடியாதே! ""குகைக்கு அருகில் அடுப்பு பற்றவைத்து பக்தர்கள் சப்பாத்தி போடுகிறார்கள். சூடு தாங்கமுடியாமல்தான் பகவான் கசிந்துருகுகிறார்'' என்றன வேறு சில பத்திரிகைகள். புவி சூடேறுதல்தான் காரணம் என்றனர் வேறு சிலர்.


காரண காரியங்கள் குறித்த அறிவுப்பூர்வமான ஆய்வுகள் தொடர்வது ஆன்மீகத்துக்கு ஆபத்து என்பதால் குப்தா கமிசன் என்றொரு கமிசனைப் போட்டு ஆராயச் சொன்னது அரசு. பகவான் கரையாமலும், பக்தர்கள் கூட்டம் கலையாமலும் பாதுகாக்கும் பொருட்டு குகைக்கு குளிர் சாதன வசதி செய்து சிவபெருமானை ஸீரோ டிகிரியில் பாதுகாப்பது; பக்தர்கள் சப்பாத்தி போட 100 ஏக்கர் வனப்பகுதியைக் கோயிலுக்கு தானம் கொடுத்து அடுப்புச் சூட்டிலிருந்து ஆண்டவனைப் பாதுகாப்பது என்று முடிவு செய்தது அரசு. இந்த 100 ஏக்கர் தானத்துக்கு எதிராகக் காஷ்மீரே பற்றி எரியத் தொடங்கி, அதன் விளைவாக அம்மாநில காங்கிரசு அரசு இப்போது உருகிக் கொண்டிருக்கிறது.


எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, "அமர்நாத் பனிலிங்கம் செயற்கையானதல்ல' என்று கொட்டை எழுத்தில் செய்தி போடுகிறது தினமணி (24.6.08).


இயற்கையாக உருவான எல்லாம் வல்ல இறைவனை செயற்கையாகப் பாதுகாப்பது ஏன் என்ற கேள்விக்கு மட்டும் அவர்கள் பதில் சொல்லவில்லை.


"இராமன் பாலம் என்பது இயற்கையாக அமைந்த மணல்திட்டு' என்று சொன்னால், "இல்லையில்லை, அது இராமனால் கட்டப்பட்டது, செயற்கையானது எனவே தெய்வீகமானது' என்று கத்துகிறார் இராம. கோபாலன். "அமர் நாத் பனிலிங்கம் செயற்கையானது' என்று சொன்னால் "இல்லையில்லை, அது இயற்கையானது எனவே தெய்வீகமானது' என்கிறார்கள். வடக்கே இயற்கை தெய்வீகம்! தெற்கே செயற்கை தெய்வீகம்!


மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காக ஆளும் வர்க்கம் உருவாக்கிய மடமைகள் உடைபடும்போது மதவாதிகள் பதறுகிறார்கள்; அதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால் அற்புதம் என்றும் தெய்வீகம் என்றும் தாங்கள் இதுகாறும் நம்பிக் கொண்டிருந்தவை அயோக்கியத்தனமான மோசடிகள் என்று ஆதாரப்பூர்வமாகத் தெரியும்போது பக்தர்கள் பதறியிருக்க வேண்டாமா?


""கடன் பட்டதும், காவியணிந்ததும், மதுமாமிசம்மனைவியைத் துறந்ததும், காடு மலைகளில் நடையாய் நடந்ததும் கேவலம் ஒரு தீவட்டியைத் தரிசிக்கத்தானா?'' என்று குமுறியிருக்க வேண்டாமா? "அது தீவட்டியில்லை, தெய்வீகத் தீபம்தான். நாங்கள் நம்பமாட்டோம்' என்று நக்கீரனுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள் ஐயப்பசாமிகள். ""பகவானை எண்ணி பனியைச் சகித்ததும், பயங்கரவாதிகளை எண்ணிப் பயந்து செத்ததும், 12,000 அடி உயரம் மூச்சு வாங்க மலையேறியதும் ஒரு குச்சி ஐஸைத் தரிசிக்கத் தானா?'' என்று கொதித்திருக்க வேண்டாமா? அந்தக் குச்சி ஐஸைப் பாதுகாக்க பாரத் பந்த் நடத்துகிறது பாரதிய ஜனதா. அதற்கும் கூட்டம் சேருகிறது.


பகுத்தறிவின் ஒளி பட்டவுடனே மூடநம்பிக்கை இருள் அகலவில்லையே ஏன்? "மகரஜோதி பொய்' என்பதை அந்தக் கோயிலின் தந்திரியே பிரகடனம் செய்த பின்னரும் அய்யப்பன்மார்கள் திருந்தவில்லையே ஏன்? இந்த பக்தர்களை "மூட நம்பிக்கைக்குப் பலியானவர்கள்' என்று மட்டும் நாம் கருதமுடியுமா? என்ன வகை பக்தி இது?


மூடநம்பிக்கைபகுத்தறிவு, ஏமாற்றுபவன்ஏமாற்றப்படுபவன் என்ற வகைப்பாடுகளின் வரம்பைத்தாண்டி ஒரு விநோதக் கலவையாக உருப்பெற்று வருகிறது இந்த "பக்தி'. காமவெறி பிடித்த பித்தலாட்டக்காரனாக அர்ச்சகன், இந்தப் பித்தலாட்டத்துக்குப் பந்தம் பிடிக்கும் அரசு, அதற்குக் காவல் நிற்கும் போலீசு, ஐயப்ப சீசனில் திருடுவதற்காகவே மாலை போட்டுக் கொள்ளும் பிக்பாக்கெட்டுகள், டாஸ்மாக் கடைகளில் அய்யப்பன்மார்களுக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும் தனிக் கோப்பைகள், சுத்தம் கருதி சாக்கனாக் கடைகளில் அவர்களுக்கு மட்டும் இலை போட்டுப் பரிமாறப்படும் புரோட்டாக்கள்..! மோசடியும் சுயமோசடியும் சரிவிகிதத்தில் கலந்து உருவாகியிருக்கும் இந்தக் கூட்டுக் களவாணித்தனத்தில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார் என்று பிரித்தறிய முடியவில்லை.


புதுப்பட ரிலீஸ் அன்று கட் அவுட்டுக்குப் பால் அபிசேகம் செய்யும் ரசிகனின் பரவசம், நூறு ரூபாய்ஒரு குவாட்டர் என்று கறாராக ரேட் பேசிக் கொண்டு லாரியில் ஏறி வந்து "தலைவா' என்று உணர்ச்சி வசப்படும் தொண்டனின் மனக்கிளர்ச்சி, இலஞ்சத்தை அழுதுவிட்டு அப்புறமும் அதிகாரியிடம் "ங'ப் போல் வளையும்' நெளிவு சுளிவு, மொய் எழுதும் வயிற்றெரிச்சலை மறைத்தபடி திருமண வீட்டில் மலர்ந்து மணம் பரப்பும் புன்னகைகள்..! அன்றாட வாழ்வில் நாம் காணும் இந்த "உணர்ச்சிகள்' எல்லாம் அமர்நாத் யாத்ரீகர்களின் பரவசத்தையும் அய்யப்பன்மார்களின் மனக் கிளர்ச்சியையும் பிரதிபலிக்கவில்லையா?


இந்த மத உணர்ச்சி ஒரு மயக்கமென்றால், அது ஆட்படுத்தப்பட்ட மயக்கம் மட்டுமல்ல, விரும்பி ஆட்படும் மயக்கம். இது தெய்வீக அபினி மட்டுமல்ல, லவுதீக அபினியும் கூட. இது புனித யாத்திரை என்ற முகமூடி அணிந்த இன்பச் சுற்றுலா. இந்தப் போலி பக்தியை ஆன்மீக அனுபவமாக "உணர்ந்து' மயங்கும் பொருட்டு ஒரு "தெய்வீக கிளைமாக்ஸ்' பக்தனுக்கே தேவைப்படுகிறது.


எனவேதான் பக்தன் பதறுவதில்லை. சாம்சங் ரெப்ரிஜிரேட்டரையே கருவறையாக்கி, அதற்குள் பனி லிங்கம் ஒன்றை உறையவைத்து, ஆண்டுக்கு ஒரு முறை திறந்து காட்டினாலும் "ஹர ஹர மகாதேவா' என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள இந்த பக்தர்கள் தயார்! மகரஜோதிக்குப் பதில் சிலிண்டரை வைத்து "ஸ்பிக் ஜோதி'யைக் கொளுத்திக் காட்டினாலும் அதனைத் "தரிசிக்கும்' பொருட்டு விரதமிருக்கவும், இருமுடி சுமக்கவும் அய்யப்பன்மார்கள் தயார்!


"டென் கமாண்ட்மென்ட்ஸ்' என்ற திரைப்படத்தில் பார்த்த ஒரு காட்சி இங்கே நினைவுக்கு வருகிறது. பல வகையான விக்கிரக வழிபாடுகளில் மூழ்கியிருக்கும் யூத மக்களிடம் ""இவையெல்லாம் கடவுளல்ல, உண்மையான கடவுளின் செய்தியை நான் உங்களுக்குக் கொண்டுவருகிறேன்'' என்று கடவுளைத் தேடி மலைக்குச் செல்வார் மோசஸ். போனவர் திரும்புவதற்குத் தாமதமாகவே, ""ஒரு கடவுளில்லாமல் இன்னும் எத்தனை நாள்தான் நாம் காத்திருக்க முடியும்?'' என்று விசனப்பட்ட மக்கள் ஒரு எருமைக்கிடா பொம்மையைக் கடவுளாக்கி அதைத் தலையில் வைத்துக் கூத்தாடத் தொடங்குவார்கள்.


அந்தக் கூத்தும் இந்தக் கூத்தும் ஒன்று போலத் தோன்றினாலும் ஒன்றல்ல. அது அச்சத்திலும் மவுடீகத்திலும் மனிதகுலம் ஆழ்ந்திருந்த, அறிவியல் வளராத காலம். அது பல் முளைக்காத குழந்தையின் மழலை. இன்று நாம் காண்பதோ கிழவனின் மழலை. ""ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான்தான் என்று, அந்தப் பொய்யில் உயிர்வாழ்வேன்'' என்று மன்றாடும் காதலனைப் போல, "எங்களுக்கு ஒரு மாயையை வழங்கு' என்று இறைஞ்சுகிறார்கள் இந்த பக்தர்கள்.


சென்னை தீவுத்திடலில் அமர்நாத்தைப் போலவே பனிக்கட்டி லிங்கத்தை உருவாக்கி "சென்னையில் அமர்நாத்' என்று விளம்பரம் செய்யப்படுகிறது. ராட்டினம் ஏறப்போன பொருட்காட்சிக் கூட்டம் உடனே பக்தர்களாக உருமாறி அந்த செயற்கை லிங்கத்தைப் பரவசத்துடன் வழிபடுகிறது. திருப்பதி வரை சென்று தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக "சீனிவாச திருக்கல்யாணத்தை' சென் னையிலேயே நடத்தி, "சென்னையில் ஒரு திருப்பதி' என்று விளம்பரம் செய்கிறது திருப்பதி தேவஸ்தானம். "கோயிந்தா கோயிந்தா' என்று அங்கேயும் கூட்டம் அலைமோதுகிறது.


ஷாம்பு பாட்டில் வாங்கும் வசதியில்லாதவர்களுக்காக இப்போது சாஷேக்களில் தொங்குகிறார் கடவுள். நுகர்வு தரும் சிற்றின்பத்துக்கும் ஆன்மீகப் பேரின்பத்துக்கும் இடையில் நிலவுவதாகச் சொல்லப்படும் சீனப்பெருஞ்சுவர் மாயமாக மறைந்து விட்டது. இந்தப் பேரின்பமென்பது சிற்றின்பத்தின் வாலில் தடவப்பட்டிருக்கும் ஆன்மீக வாசனைத் தைலம். தமது இஷ்ட தெய்வங்கள் மீது இந்த பக்தர்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு, தமது இஷ்ட பிராண்டுகள் மீது நுகர்வோர் கொண்டிருக்கும் ஈடுபாட்டையே பெரிதும் ஒத்திருக்கிறது.


இது உத்திரவாதமில்லாத பரலோக இன்பவாழ்வை இலட்சியமாகக் கொண்டு இகலோகத் துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் இலக்கண வகைப்பட்ட ஆன்மீகமல்ல; உத்திரவாதமான இன்பத்துக்கான தேட்டம். "பக்தி' என்று புனைபெயர் சூட்டிக் கொண்ட பிழைப்புவாதம். ஜோதியோ, லிங்கமோ, பக்திப் பரவசமோ அனைத்தும் இங்கே பிஸ்கெட் பாக்கெட்டுகளின் பளபளப்பான மேலுறைகள் மட்டுமே.


கஞ்சாச் செடியின் போதையைத் தெய்வீகமென்றும் பேரின்பமென்றும் தவமென்றும் எண்ணிக் கொண்டிருந்த கருத்து மயக்கமல்ல இது. "கஞ்சாவே பேரின்பம்' என்று அறிவுப்பூர்வமாகத் தேர்ந்து தெளிந்த விழிப்பு நிலை. சொல்லப்போனால் இது வேறு ஒரு வகைப் பகுத்தறிவு. சுயநலத்துக்காகத் தெரிந்தே தன்னை மடமையில் ஆழ்த்திக் கொள்ளும் பகுத்தறிவு. கல்லையும் மரத்தையும் கண்டு அஞ்சி வணங்கிய மூடநம்பிக்கையைக் காட்டிலும் அபாயகரமான பகுத்தறிவு.


"மாலை போடுவது மடமை' என்று நீங்கள் சாடினால், "ஒரு மண்டலம் விரதமிருப்பதும், புலால் மறுப்பதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்' என்று அறிவியல் பூர்வமாக விளக்கி உங்களைத் திகைப்படையச் செய்வார்கள் இந்த பக்தர்கள். "பனிலிங்கம் பொய்' என்று நீங்கள் கூறினால், ""இந்த விசயம் உங்களுக்கு இப்போதுதான் தெரியுமா, எனக்கு ஏற்கெனவே தெரியும்'' என்று சொல்லி உங்களை அதிர்ச்சியில் உறைய வைப்பார்கள். நீங்கள் அறிந்திராத மேலும் இரண்டு ஆன்மீக மோசடிகளை உங்களுக்கு விளக்கி, தங்களது உலக ஞானத்தின் மேன்மையை உங்களுக்குக் குறிப்பாலுணர்த்துவார்கள்.


அல்லது ""மகரஜோதியும் பனிலிங்கமும் மட்டுமா, உலகமே மோசடிகளால்தான் நிறைந்து இருக்கிறது'' என்று தத்துவஞானத்தின் தளத்துக்கு விவாதத்தை தள்ளிச் செல்லுவார்கள். லஞ்சம், வரதட்சிணை, சாதி, வாஸ்து, சாமியார்கள், ராசிக்கல் என நியாயப்படுத்த முடியாத எல்லா அயோக்கியத்தனங்களையும் கொள்கையளவில் மறுப்பதற்கும், நடைமுறையில் அவற்றுடன் அனுசரித்துச் செல்வதற்கும் என்ன விதமான நியாயப்படுத்தல்களை சமூக வாழ்வில் நாம் எதிர்கொள்கிறோமோ, அவற்றைத்தான் பக்தர்களும் பயன்படுத்துகிறார்கள். பிழைப்புவாதமும் காரியசாத்தியவாதமும் பழகிவிட்டதால், அந்த வாதங்கள் அனைத்தையும், "பழகிய சைக்கிளை பழகிய ரோட்டில் ஓட்டும் இலாவகத்துடன்' பயன்படுத்தி பகுத்தறிவை முறியடிக்கிறார்கள் இந்த பக்தர்கள்.


"டபுள்யூ.டபுள்யூ.எஃப்' என் றொரு அமெரிக்க மல்யுத்தத்தைத் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் இரண்டு மாமிசமலைகள் மோதிக்கொள்வார்கள். நாக்கூசும் வார்த்தைகளால் ஏசிக் கொள்வார்கள். கொலைவெறியுடன் கட்டிப் புரளுவார்கள். எனினும் அது உண்மையான சண்டையல்ல. யார் வெல்ல வேண்டும் யார் தோற்க வேண்டும் என்பதை முன்னரே தீர்மானித்து நிகழ்ச்சியை நடத்தும் முதலாளிகள் காட்சிப்படுத்தும் நாடகம் அது. இரசிகர்களுக்கும் இது தெரியும். இருந்தாலும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி சண்டையை ரசிக்கிறார்கள். "குத்து.. கொல்லு' என்று வெறிகொண்டு கூச்சலிடுகிறார்கள்.


இந்த நிகழ்ச்சியில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார்? நடிகன் யார், ரசிகன் யார்? தீவட்டி கொளுத்துபவன் யார், கன்னத்தில் போட்டுக் கொள்பவன் யார்? கண்டரரு யார், காணதவரு யார்? குருசாமி யார், கன்னிச்சாமி யார்?


இது ஒரு வகைப் "பகுத்தறிவு'. இதுதான் நம் முன் பக்திவேடம் பூண்டு ஆடுகிறது. வெறும் கருத்துப் போராட்டத்தால் இதனை வீழ்த்த முடியாது. இதன் இதயம் ஆன்மீகத்தில் இல்லை ; லௌகீகத்தில் இருக்கிறது சமூக வாழ்க்கையின் எல்லாப் பரப்புகளிலும் வேர் பரப்பியிருக்கும் இந்தப் "பகுத்தறிவை' எதிர்த்துப் போராடுவதென்பது "ஒரிஜினல் மூடநம்பிக்கையை' எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் கடினமானது.

மருதையன்

- புதிய கலாச்சாரம் ‍ ஜூலை 2008 இதழில் வெளிவந்தது
http://www.tamilcircle.net/index.php?view=article&id=2143%3A2008-07-15-20-09-19&option=com_content&Itemid=83

May 22, 2008

உயரும் விலைவாசியும், அதற்கான காரணகர்த்தாக்களும்!

கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக நீறுபூத்த நெருப்பாக இருந்துவந்த விலைவாசி உயர்வு, இப்பொழுது எரிமலையைப் போல வெடித்திருக்கிறது. அரிசி, கோதுமை, சோளம், சமையல் எண்ணெய், பால் போன்ற உணவுப் பொருட்கள் தொடங்கி, இரும்பு, நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற மூலப்பொருட்கள் வரை அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி தாறுமாறாக உயர்ந்து வருகின்றன.

இந்தியா மட்டுமின்றி, ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த அனைத்து ஏழை நாடுகளும் இவ்விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன.


சென்னையைச் சேர்ந்த சுமதி, மூன்றுநான்கு வீடுகளில் வேலை பார்ப்பதன் மூலம் மாதம் ரூ. 3,000 வரை கூலி பெறுகிறார். ""தனது மாதாந்திர வருமானம் உயராதபொழுது, விலைவாசி மட்டும் உயர்ந்து கொண்டே செல்வதாக''க் கவலைப்படும் சுமதி, ""இவ்விலை உயர்வைச் சமாளிக்கத் தனது குடும்பத்தின் உணவுத் தேவைகளைச் சுருங்கிக் கொண்டதாக''க் கூறுகிறார்.


வங்காள தேசத்தில், ஒரு கூலித் தொழிலாளி உணவுக்காக இரண்டு கிலோ அரிசி வாங்க வேண்டும் என்றால், தனது தினக்கூலியில் சரிபாதியை அரிசிக்கு மட்டுமே ஒதுக்க வேண்டிய அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளது.

ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள ஏழைநாடான ஏமனில், ஒரு ""லோஃப்'' ரொட்டியின் விலை, தொழிலாளர்களின் தினக்கூலியில் கால் பாகத்தை முழுங்கி விடுகிறது.

இந்த விலை உயர்வினால், பல்வேறு ஏழை நாடுகளைச் சேர்ந்த 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்படுவார்கள் என உலக வங்கியே எச்சரித்திருக்கிறது.

எனினும் மன்மோகன் சிங்ப.சிதம்பரம் கும்பலைப் பொருத்தவரை விலைவாசி உயர்வு என்பது ஒரு பிரச்சினையே அல்ல. ""பொருளாதார வளர்ச்சி இருக்கும்பொழுது, விலைவாசி உயரத்தான் செய்யும்'' என்ற பொருளாதார சூத்திரத்தைக் கூறி அவர்கள் இக்கொள்ளைநோயை நியாயப்படுத்தியும் வருகிறார்கள். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என அவர்களும், தரகு முதலாளிகளும் பீதியூட்டுகிறார்கள்.

மேலும், ""மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாகி, அவர்கள் பொருட்களை வாங்கிக் குவிப்பதால்தான், (அதிக கிராக்கி, குறைந்த வரத்து என்ற அடிப்படையில்) அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வதாக''க் கூறி, பழியை மக்களின் தலையில் சுமத்துகிறார்கள். விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், ""தென்னிந்திய மக்கள் அதிகமாக சப்பாத்தி சாப்பிடத் தொடங்கியதையடுத்துதான், கோதுமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக''க் கூறியிருக்கிறார்.


அமைப்பு சாராத் தொழிலாளர்களின் வேலை மற்றும் வாழ்க்கை நிலைகளைப் பற்றி ஆராய்வதற்காக அரசால் நியமிக்கப்பட்ட அர்ஜுன் சென்குப்தா கமிட்டி, ""77 சதவீத இந்தியக் குடும்பங்கள், நாளொன்றுக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான கூலியைக் கொண்டே பிழைப்பதாக''த் தெரிவித்திருக்கிறது. இந்த இருபது ரூபாய், ஒரு குடும்பத்தின் ஒருநாள் உணவுத் தேவையைக் கூட ஈடுகட்டப் போதாது என்பதை நிரூபிக்க பெரிய ஆராய்ச்சி எதுவும் நடத்த வேண்டிய அவசியமில்லை.

இந்தியாவில் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சரிபாதி குழந்தைகள் சத்தான உணவு கிடைக்காமல் சவலைக் குழந்தைகளாக இருப்பதாக இன்னொரு புள்ளி விவரம் கூறுகிறது.

இந்த உண்மைகளை இருட்டடிப்பு செய்துவிட்டு, இந்திய மக்கள் அனைவரும் புளித்த ஏப்பக்காரனைப் போல வாழ்வதாகவும், தாராளமான பணப்புழக்கத்தால் நுகர்பொருள் மோகம் கொண்டு அலைவதாகவும் சித்தரிப்பது, மன்மோகன் சிங் கும்பலின் அயோக்கியத்தனத்தையும், மேட்டுக்குடி வக்கிரத்தையும் தான் வெளிப்படுத்துகிறது.

""சாதாரண மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால், விலைவாசி உயர்வு சுமையாக இருக்காது'' என்றொரு அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார், தமிழக முதல்வர் மு.க. ஆனால், முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களோ, ""வாங்கும் சக்தி அதிகரித்தால், அதற்கேற்ப விலைவாசியும் உயர்ந்துவிடும்'' எனப் பீதியூட்டுகிறார்கள். "கொழுத்த சம்பளம்' தரும் ""பி.பி.ஓ.'' நிறுவனங்கள் பெருத்தபிறகுதான், சென்னையில் நடுத்தர வர்க்கத்தினரைக்கூடப் பதம் பார்க்கும் அளவிற்கு வீட்டு வாடகை எகிறிப் பாய்ந்தது என்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.

பொருட்கள் விலை மலிவாகக் கிடைக்க வேண்டும் என்றால், தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்க வேண்டும் என்பதுதான் தனியார்மயத்தின் விதி. குறைந்தபட்ச கூலி என அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அடிப்படை சம்பளத்தை ஒழித்துவிட வேண்டும் என்பதுதான் தரகு முதலாளிகளின் விருப்பம்.

இதுவொருபுறமிருக்க, சாதாரண மக்களை விட வாங்கும்திறன் அதிகம் கொண்ட மாதச் சம்பளக்காரர்களால்கூட இவ்விலைவாசி உயர்வைத் தாங்க முடியவில்லை என்பதல்லவா உண்மை! எனவே மு.க.வின் ""வாங்கும் சக்தி உயர்ந்தால்...'' என்ற ஆலோசனையை, சோகப்படத்தில் சேர்க்கப்படும் மலினமான நகைச்சுவை காட்சியோடுதான் ஒப்பிடமுடியும்.

உணவுப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற ஆலோசனையை முதலாளித்துவப் பத்திரிகைகள் அனைத்தும் வாரி வழங்கியுள்ளன. இந்தியாவில் விவசாய உற்பத்தி வளர்ச்சி அடையாமல், தேங்கிப் போய்விட்டது என்பது உண்மைதான். ஆனாலும், தற்போதைய விலையேற்றத்துக்கு உற்பத்தித் தேக்கத்தை முக்கியக் காரணமாகக் கூறிவிட முடியாது. விவசாய உற்பத்தியைத் தீர்மானிப்பதிலும், விவசாய உற்பத்திப் பொருட்களைக் கொள்முதல் செய்வதிலும், விநியோகிப்பதிலும் அரசு படிப்படியாகக் கழன்று கொண்டு, அப்பொறுப்பை மெல்ல மெல்லத் தனியார்மயப்படுத்தி வருவதுதான் இந்த விலையேற்றத்துக்குப் பின்னுள்ள அடிப்படையான காரணம்.

உணவுப் பொருள் விலையேற்றத்துக்கு காரணங்களாகச் சொல்லப்படும் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள வறட்சியும்; கச்சா எண்ணெய் விலை உயர்வும்; உயிரிஎரிபொருள் தயாரிக்க உணவுப் பொருட்கள் ஒதுக்கப்படுவதும் இரண்டாம்பட்சமானவைதான். விலைவாசி உயர்வுக்கும் தனியார்மயத்துக்கும் இடையேயுள்ள உறவை மூடி மறைப்பதற்காகவே, இந்த இரண்டாம்பட்ச காரணங்களை ஓட்டுக்கட்சிகளும், முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களும் ஊதிப் பெருக்குகின்றனர்.

தனியார்மயம் தாராளமயத்திற்கு முன்பு, உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதை இந்திய அரசு கொள்கை அளவிலாவது ஏற்றுக் கொண்டு இருந்தது. உலகமயத்திற்குப் பிறகோ, விவசாய உற்பத்திக்கு முன்னுரிமை தரப்படும் கொள்கை கைவிடப்பட்டு, தேவையென்றால், உணவுப் பொருட்களை அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம்; அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அரசின் நிலைப்பாடாகிவிட்டது.

இப்படிப்பட்ட கொள்கையைக் கொண்ட அரசாங்கம், விவசாய உற்பத்தியைப் பெருக்கி, உணவுப் பொருள் தட்டுப்பாட்டையும், விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்தி விடும் எனப் பகற்கனவு காண்பவர்களால்தான் நம்ப முடியும்.


தேவைக்கேற்ப உற்பத்தி இருந்தால், விலைவாசி கட்டுக்குள் இருக்கும் என்பது உண்மையானால், சர்க்கரை, சிமெண்ட், இரும்புக் கம்பிகளின் விலைகள் உயர்ந்திருக்கக் கூடாது. ஆனால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வெளிச்சந்தையில் ரூ. 13க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை இன்று ரூ. 17/ ஆக அதிகரித்து விட்டது. கடந்த ஆண்டு பட்ஜெட்டின் பொழுது ரூ. 190200/ ஆக இருந்த சிமெண்ட் மூட்டை ஒன்றின் விலை, தற்பொழுது, ரூ. 250/ஐத் தாண்டிவிட்டது. கடந்த மூன்றே மாதங்களுக்குள் கட்டுமானக் கம்பிகளின் விலை 20 முதல் 24 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது.

எனவே, உற்பத்திப் பெருகுவதற்கும் சில்லறை விற்பனை விலைக்கும் நேரடித் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது. மாறாக, உற்பத்தியிலும், விநியோகத்திலும் எந்தளவிற்குத் தனியார் முதலாளிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்படுகிறதோ, அந்தளவிற்குத்தான் விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதே உண்மை.

···

சிதறுண்டும், நலிவடைந்தும் இருக்கும் இந்திய விவசாயத்தை, விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட கூட்டுப் பண்ணைகளாக அமைத்து, நவீன வேளாண் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாய உற்பத்தியைப் பெருக்குவதுதான் மக்கள் நலன்சார்ந்த வழிமுறை. ஆனால், அரசோ, நெல், கோதுமை உள்ளிட்ட அனைத்து விவசாயப் பொருட்களுக்கும் கட்டுப்படியாகக் கூடிய விலையை நிர்ணயிக்க மறுப்பதன் மூலம் விவசாயிகளைப் போண்டியாக்கி, அவர்கள் நிலத்தில் இருந்து வெளியேறுவதைத் துரிப்படுத்துகிறது.

போண்டியாகி நிற்கும் விவசாயிகளை ""ஒப்பந்த விவசாயம்'' என்ற திட்டத்தின் மூலம் தரகு முதலாளித்துவ / பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்ற முயலுகிறது. தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் விவசாயத்தில் முதலாளித்துவ நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த வழி ஏற்படுத்தித் தருகிறது;

பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்காமல் அழிய விடுவதன் மூலமும், காப்புரிமை என்ற பெயரிலும் விவசாயிகளை விதைகளுக்குப் பன்னாட்டு நிறுவனங்களை அண்டிப் பிழைக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி வருகிறது.

விவசாய உற்பத்தியில் திணிக்கப்படும் இத்தனியார்மயத்திற்கு இணையாக உணவுப் பொருள் விநியோகமும் முதலாளித்துவ நிறுவனங்களிடம் தாரை வார்க்கப்படுகிறது. பொது விநியோக முறையைப் பலப்படுத்துவதன் மூலம்தான் உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்க முடியும்.

ஆனால், அரசோ, உணவு மானியத்தைக் குறைப்பதன் மூலம் உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்வதைப் படிப்படியாகக் கைவிடுவது; அதில் தனியாரை அனுமதிப்பது; உணவுப் பொருள் வணிகத்தில் இணைய தள வர்த்தகத்தை அனுமதிப்பது ஆகிய ""சீர்திருத்தங்களின்'' மூலம், உணவுப் பொருள் விநியோகத்தைச் சூதாட்டமாக மாற்றி வருகிறது.

உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, அரசு நடத்தும் நெல், கோதுமை கொள்முதலை 1.5 கோடி டன்னில் இருந்து 4 கோடி டன்னாக அதிகரிக்க வேண்டும்'' என்கிறார், அனைத்திந்திய விவசாயிகள் சங்கத்தின் தமிழகத் தலைவர் கே.பாலகிருஷ்ணன்.

ஆனால், தி.மு.க. அரசோ, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கைவிடப்பட்ட நெல் கொள்முதலை மீண்டும் தொடங்க மறுக்கிறது. அரசியலில் எலியும் பூனையுமாக இருக்கும் மு.க.வும், ஜெயாவும் உலக வங்கியின் கட்டளையை நிறைவேற்றுவதில் பங்காளிகளாக இருப்பதற்கு இதுவொரு சான்று.


மைய அரசோ, 1.5 கோடி டன்னுக்கு மேல் ஒரு மணிகூட கூடுதலாகக் கொள்முதல் செய்ய முடியாது என அடம் பிடிக்கிறது. ரேசன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வதை அனைத்து மக்களுக்கும் விரிவாக்க முடியாது; வறுமைக் கோட்டுக்குக் கீழே / மேலே எனப் பொது விநியோகம் பிரிக்கப்பட்டுள்ளதைக் கைவிட முடியாது என உணவு அமைச்சர் சரத்பவார் அறிவிக்கிறார். 200404இல் 1.68 கோடி டன், 200506இல் 1.48 கோடி டன், 200607இல் 92 இலட்சம் டன் என கோதுமை கொள்முதல் படிப்படியாகக் குறைந்து வருவதை இந்த அறிவிப்போடு இணைத்துப் பார்க்க வேண்டும்.

அதேசமயம், இந்தப் பற்றாக்குறை கொள்முதலைக் காரணமாகக் காட்டி, 2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில், 75 இலட்சம் டன் கோதுமை அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஒரு குவிண்டால் கோதுமையை ரூ. 1,000/ கொடுத்து உள்நாட்டு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய (அப்பொழுது) மறுத்த மைய அரசு, அதைவிட ஒன்றரை மடங்கு அதிகவிலையில் புளுத்த கோதுமையைப் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்தது.

காங்கிரசிற்கு முன்பு ஆண்ட பா.ஜ.க.வின் ஆட்சியில் 2.2 கோடி டன் கோதுமை ரேசன் விலையைவிட மலிவாக, ஐரோப்பிய பன்றிகளுக்குத் தீவனமாக ஏற்றுமதி செய்யப்பட்டது.

பா.ஜ.க. காங். அரசுகளின் இந்த இரண்டு நடவடிக்கைகளும், பன்னாட்டு உணவுக் கழகங்களின் நலனுக்கு ஏற்ப, இந்தியாவின் பொது விநியோகமுறை மாற்றியமைக்கப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள். இதற்கு இணையாகவே, தரகு முதலாளித்துவ நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் நெல்கோதுமை போன்ற உணவுப் பொருட்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யவும்; பல சரக்கு சில்லறை வியாபாரத்தில் இறங்கவும் அனுமதிக்கப்பட்டன.

இத்தனியார்மய நடவடிக்கைகளுக்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல, கடந்த ஐம்பது ஆண்டு காலமாக முன்பேர வர்த்தகத்துக்கு இருந்துவந்த தடை, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின் இறுதியில் (2003ஆம் ஆண்டில்) முற்றிலுமாக நீக்கப்பட்டது. அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் உள்ளிட்டு 103 பொருட்கள், முன்பேர இணைய தள வர்த்தகம் மூலம் வியாபாரம் செய்வதற்கு அனுமதியும் கொடுத்தது.

பா.ஜ.க. அடுத்து வந்த காங். கூட்டணி ஆட்சி, உலகமயக் காலக் கட்டத்தில் முன்பேர வர்த்தகத்தைத் தவிர்க்க முடியாது எனக் கூறி, அச்சூதாட்டத்தைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தது. கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகே 2006ஆம் ஆண்டில் அரிசி, கோதுமை, பருப்பு வகைகளுக்கு மட்டும் இணைய தள வர்த்தகத்தில் தடை விதிக்கப்பட்டது.

முன்பேர வர்த்தகம், உணவுப் பொருள் கொள்முதலில் தனியாருக்கு அனுமதி, சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களும் தரகு முதலாளிகளும் கூட்டுச் சேர்ந்து நுழைய அனுமதி ஆகிய இந்தத் தனித்தனியான இழைகளை இணைத்துப் பார்த்தால்தான், உணவுப் பொருள் விநியோகம் முன்பு போலன்றி, முதலாளித்துவ நிறுவனங்களின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள அபாயத்தின் பரிணாமம் விளங்கும்.
மக்காச் சோளம் முன்பேர வர்த்தகத்தில் நுழைக்கப்பட்ட பிறகு, ஒரு கிலோ மக்காச்சோளத்தின் விலை

ரூ. 5/ லிருந்து ரூ. 9/ ஆக அதிகரித்துவிட்டதாகக் குறிப்பிடும் தேசிய முட்டை உற்பத்தியாளர் சங்கம், ""முன்பேர வர்த்தகத்தில் இருந்து மக்கா சோளத்தை நீக்க வேண்டும்; இல்லையென்றால் அதில் இருந்து தயாரிக்கப்படும் கோழித் தீவணத்தின் விலை உயர்ந்து அடுத்த ஓரிரு மாதங்களில் ஒரு முட்டையின் விலை ரூ. 3 ஆக உயர்ந்துவிடும்'' என எச்சரித்துள்ளது. முன்பேர வர்த்தகத்தின் பாதிப்புகள் பற்றி ஆராய மைய அரசால் நியமிக்கப்பட்டுள்ள அபிஜித் சென் கமிட்டி, ""விலை உயர்வுக்கும் முன்பேர வர்த்தகத்துக்கும் இடையே தொடர்பு இருப்பதனைக் கண்டறிந்துள்ளதாக'' முதலாளித்துவப் பத்திரிகைகளே ஒப்புக் கொள்கின்றன.

அமெரிக்கப் பொருளாதார மந்தம், அமெரிக்க டாலர் சரிவு, பங்குச் சந்தை வீழ்ச்சி இவற்றால் வர்த்தகச் சூதாடிகளுக்கு இப்பொழுது உணவுப் பொருள் முன்பேர வர்த்தகம்தான் கொழுத்த இலாபம் தரும் சூதாட்டமாக மாறிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முன்பேர வர்த்தகம்தான் காரணம் என வெனிசுலா நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சர் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியுள்ளார். பங்குச் சந்தைக்குள் பாய்ந்து வந்த வங்கிகளின் கடன் மூலதனம், இப்பொழுது முன்பேர வர்த்தகத்தில் பாய்கிறது.

பாண்டிச்சேரியில் சமீபத்தில் கடத்தல் அரிசி பிடிபட்டபொழுது, அக்கடத்தல் வியாபாரத்துக்கு இந்தியாவின் தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடன் வழங்கியிருந்தது அம்பலமானது. இத்தனியார்மய நடவடிக்கைகள், பழைய பதுக்கல் வியாபாரிகளின் இடத்தில், ஐ.டி.சி., கார்கில், ஏ.டபிள்யூ.பி.இந்தியா, பிரிட்டானியா, ரிலையன்ஸ் போன்ற பன்னாட்டு / தரகு முதலாளித்துவ நிறுவனங்களைக் கொண்டு வந்து அமர்த்தியிருக்கிறது.

அதனால்தான் நாடாளுமன்ற நிலைக்குழு 25 விவசாய விளைபொருட்களை முன்பேர வர்த்தகப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் எனக் கூறிய பிறகும், மன்மோகன் சிங் கும்பல் அந்த ஆலோசனையைக் காதில் போட்டுக் கொள்ளவே மறுக்கிறது.

இரும்பு உருக்காலை அதிபர்களுக்கும், கட்டுமானக் கம்பிகளின் விலை உயர்வுக்கும் தொடர்பில்லை என அத்துறையின் அமைச்சரே சான்றிதழ் அளிக்கிறார்; வர்த்தக அமைச்சர் கமல்நாத், விலை உயர்வைக் காட்டி ஏற்றுமதிக்குத் தடை போடக்கூடாது என முட்டுக்கட்டை போடுகிறார்; நிதியமைச்சர் ப.சிதம்பரமோ விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது என்ற போர்வையில் உணவுப் பொருட்களின் தாராள இறக்குமதிக்கு அனுமதி கொடுக்கும் சதித்தனத்தில் இறங்கிவிட்டார்.

இவையாவும் விலை உயர்வுக்குக் காரணமான தனியார்மயத்தைக் கைவிடவோ, அல்லது குறைந்தபட்சம் தனியார்மயத்தைக் கட்டுப்படுத்தவோ கூட காங்.கூட்டணி ஆட்சி தயாராக இல்லை என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.

கடந்த பதினெட்டு வருடங்களில் உணவு தானியத்திற்கான நிலம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 0.26 சதவீதம் குறைந்து கொண்டே வருவதற்குக் காரணம் தனியார்மயம்தான். 197374இல் சராசரியாக ஆண்டொன்றுக்கு ஒரு இந்தியக் குடிமகனுக்குச் சாப்பிடக் கிடைத்த தானியத்தின் அளவு 154.24 கிலோ.

அது, 200405இல் 132.58 கிலோவாக வீழ்ச்சியடைந்திருப்பதற்குக் காரணம் தனியார்மயம்தான். உணவுப் பொருளைப் பதுக்கும் பேர்வழிகளைத் தண்டிக்கும் சட்டம், ரிலையன்ஸ் ஃபிரஷ் மீதோ, பிக் பஜார் மீதோ, ஹெரிடேஜ் பிரஷ் மீதோ பாய மறுப்பதற்குக் காரணம் தனியார்மயம்தான். மூலப்பொருட்களின் விலை உயர்வினால் சிறுதொழில்கள் முடங்கி கோவையில் மட்டும் 15 ஆயிரம் சிறு தொழில்கூடங்களில் 40 சதவீத ஆலைகள் உற்பத்தியை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது தொழிலாளர்கள் வேலையிழந்து வருவதற்குக் காரணம் தனியார்மயம் தான்.

இத்தனியார்மயத் தாக்குதலைத் தேர்தல்கள் மூலம் வீழ்த்துவிட முடியாது. அப்படிச் சொல்லி ஓட்டுப் பொறுக்கிவரும் போலி கம்யூனிஸ்டுகளை விட, உலகமகா மோசடிப் பேர்வழிகள் வேறு யாரும் இருக்கவும் முடியாது!


· செல்வம் - புதியஜனநாயகம் இதழ்

நன்றி : தமிழரங்கம்