Aug 9, 2015

ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது PRPC சென்னைக் கிளை!



நேற்று தான் கிளை துவங்கியது போல இருக்கிறது. அதற்குள் ஆறு ஆண்டுகளை கடந்து வந்துவிட்டோம்!

உழைக்கும் மக்கள் உரிமைகளுக்கான தொடர்போராட்டத்தில்…
அடிப்படை உரிமைக்களுக்கான பகுதி வாழ் மக்களுடன் இணைந்து நின்ற போராட்டங்கள்!

சமச்சீர் கல்வி, இலவச கல்வி, அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்கள்!
மனித உரிமை மீறல்களை கண்டித்த போராட்டங்கள்!
உச்சநீதி மன்றம் வரை சென்று நடத்திய பல பொது நலவழக்குகள்!

- என கடந்து வந்த போராட்ட பாதையை நினைத்துப் பார்க்கும் பொழுது, சந்தோசமாக உணர்கிறோம்.

இந்த போராட்ட பயணத்தில் எங்களுக்கு பல உதவிகள் செய்த மூத்த வழக்குரைஞர்கள், சக வழக்குரைஞர்கள், நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள், நண்பர்கள், தோழர்கள் என பலரையும் நன்றிகளுடன் நினைத்து பார்க்கிறோம்.

உலகமயமாக்க சூழலில் சமூகத்தில் மனித உரிமை மீறல்கள் மலிந்து வரும் வேளையில், நாம் செய்யவேண்டிய பணிகள் விரிவடைந்து கொண்டே வருகின்றன. சமூக அநீதிகளை எதிர்த்து போராடும் மக்களை காக்க இப்பொழுது செயல்படுவதை விட, இன்னும் உற்சாகமாகவும், உறுதியாகவும் இயங்க இந்நாளில் உறுதியேற்கிறோம்.

எங்களுடன் இணைந்து போராட உங்களையும் உரிமையுடன் அழைக்கிறோம்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
9094666320

இன்னும் இரண்டு மாசம் கூட சிறையில் இருக்கட்டும்! டாஸ்மாக் கடை ஒழிஞ்சா போதும்!


அரசு சாராயக் கடையை நொறுக்கி கைதான பச்சையப்பா மாணவர்களை காவல் நிலையத்தில் வைத்து காவல்துறை மோசமாக தாக்கியது. சிறைக்குள் போன பிறகும், சிறை காவல்துறையும் தாக்கியது!

இதில் காயம்பட்ட மாணவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை தரவில்லை. காயம்பட்ட மாணவர்களின் உண்மை நிலை அறிய, கைதானவர்களில் ஒருவரான சாரதி அவர்களின் தாயார் சுலோசனா அவர்களின் பெயரில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தோம்.

அந்த தாயாரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, ”என் பையன் சிறையிலிருந்து எப்பம்மா வருவான்?” என்றார்.

அந்த தாயாரின் மனம் வருந்த கூடாது என்பதற்காக “வெளியே கொண்டு வருவதற்காக எல்லா வேலைகளையும் செய்து வருகிறோம். எல்லோரும் சீக்கிரம் வெளியே வந்திருவாங்கம்மா!” என்றோம்.

“பல குடும்பங்களை சீரழிக்கிற சாராயக் கடைகளை மொத்தமா ஒழிக்கணும்! அதுக்காக இன்னும் இரண்டு மாசம் கூட என் பையன் உள்ளே இருக்கட்டும்மா! பரவாயில்லை!” என்றார்.

அந்த தாய்க்கு ஆறுதல் சொல்லப்போய், இன்னும் உற்சாகமாய் செயல்படுவதற்கு அந்த தாய் தான் எங்களுக்கு உற்சாகம் தந்தார்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை