Apr 18, 2016

தனியாரும் அரசு பேருந்தும்!

தனியார் 4 பேருந்து வைத்திருந்தாலும் ஒரு தரமான தளத்தை (web site) பராமரிக்கிறார்கள். அரசு நாலாயிரம் பேருந்து வைத்திருந்தாலும் ஒரு மொக்கை தளத்தை இயக்கி வருகிறார்கள்.

தனியார் வலைத்தளத்தில் பெண் ஒருவர் இருக்கையை பதிவு செய்தால்,  அது பெண்ணிற்கான இருக்கை என காட்டும்.  பக்கத்து சீட்டில் பெண் ஒருவர் தான் முன்பதிவு செய்யமுடியும்.

அரசு வலைத்தளத்தில் அப்படி ஒரு வசதியும் இல்லை. நான் சென்ற பேருந்தில் பெண் ஒருவர் 17வது இருக்கையை முன்பதிவு செய்திருக்கிறார். அருகே உள்ள 18வது இருக்கையை ஆண் ஒருவர் பதிவு செய்திருக்கிறார். 

ஆண் அருகே பயணிப்பதில் பெண்ணுக்கு சங்கடம். ஆண் பயணிக்கு  நடத்துநர் வேறொரு சீட்டை மாற்றித்தர வேண்டிய நிர்ப்பந்தம். இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை.  ஆகையால், எல்லா இருக்கைகளும் நிரம்பி, கடைசி வரிசையில் மட்டுமே இடம் இருக்கிறது.  அந்த பயணி கடைசி வரிசையில் அமரமுடியாது என்கிறார்.

15 நிமிடம் பஞ்சாயத்து நடந்து, பிறகு  நடத்துநர் தனது செல்வாக்கில் வேறோரு பேருந்தில் இருக்கை ஏற்பாடு செய்ததும் சுபம். 

இது மாதிரி சொல்லிக்கொண்டே போகலாம். அரசு தளங்களில் வெளியிடப்பட்டிருக்கும் தொலைபேசி எண்கள் வேலை செய்யாது. அப்படியே வேலை செய்தாலும், தொலைபேசியை மதித்து எடுக்க ஆள் இருக்காது.

திட்டமிட்டே அரசு துறையை இப்படி சிதைக்கிறார்கள். பிறகு, மக்களையே தனியார் தான் சிறந்தது என பேச வைத்து அரசு துறையை ஊத்தி மூடுவதற்கான எல்லா வேலைகளையும் நகர்த்துவார்கள்!

போராட்டமின்றி எதையும் பாதுகாக்க முடியாது!

Apr 15, 2016

விலையில்லா பொருட்கள் - சாதனையா? வேதனையா?


எல்லா பகுதிகளிலும் விலையில்லா பொருட்கள் கொடுத்து கொண்டிருப்பதை கேள்விப்பட்டு, பொறுத்து பொறுத்துப் பார்த்து, பிறகு செம கடுப்பாகி எங்கள் பகுதியில் யாரோ சிலர் அரசை கண்டித்து சுவரொட்டி ஒட்டியதும். கடந்த மாதம் அதிமுககாரர்கள் தலைமையில் ஜெ.வே தன் சொத்தில் இருந்து கொடுக்கும் பில்டப்போடு கொடுத்தார்கள்.

பக்கத்துவீட்டு வயதான அம்மா பொருட்களை வாங்க சென்ற பொழுது கிரைண்டரை தூக்க சிரமமாக இருக்கிறது என்று ஒருவரிடம் உதவி கேட்டு இருக்கிறார். அவர் எடுத்துக்கொண்டு அப்படியே ஓடியேவிட்டார்.

வீட்டிற்கு வந்து மிச்சமிருந்த மிக்ஸியை பார்த்தால், உள்ளே பிளைடே இல்லை. மின்விசிறியை பிரித்துப் பார்த்தால் அதன் உதிரி பாகங்கள் நாலைந்து உள்ளேயே கலைந்துகிடந்தன. ஓடுகிறதா என சோதித்துப் பார்த்தால், ஓடவில்லை. மோசமானவைகளை கொடுத்து ஏமாத்திட்டங்கப்பா! என புலம்பினார். இதே தரத்தில் தான் பலருக்கும் கொடுத்து இருக்கிறார்கள் என அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் தெரிவித்ததை பார்த்து பாட்டி நம்மளை மட்டும் ஏமாத்தலை என ஆறுதல் அடைந்தார்.

இன்றைக்கு பழைய பொருட்கள் வாங்கும் கடைக்கு போன பொழுது, அங்கு ஒரு புத்தம்புது விலையில்லா மின்விசிறி ஜெ. படத்துடன் என்னைப் பார்த்து சிரித்தது.

விலையில்லா பொருட்கள் கொடுத்ததை எல்லாம் மக்களுக்கு சாதனை என நினைவுப்படுத்தினால், வெளுத்து வாங்கும் கொடை வெயிலில் மக்களுக்கு கூடுதலாக காதில் புகைவருவது சர்வநிச்சயம்!  :)