May 6, 2016

கட்டுப்படியான விலையில் உணவகம் அபூர்வம்!

என் எதிரே அமர்ந்தவரிடம் ’என்ன வேண்டும்?’ என கேட்டான் 18 வயதுள்ள‌ சர்வர் பையன். ’இரண்டு இட்லி’ என்றார். ‘நாலு இட்லி வாங்கிங்க’ என்றான் உரிமையுடன். ’சரி’ என்றார். சில நொடிகளில் ஒரு அக்கா வந்து, மீண்டும் முதலிலிருந்து ‘என்ன வேண்டும்’ என்றார். ஏற்கனவே ஆர்டர் சொல்லிவிட்டேன் என சொல்லாமல், அவரும் முதலிலிருந்து ‘இரண்டு இட்லி’ என்றார். கொஞ்ச நேரத்தில் நாலு இட்லிகளை வந்து தந்தான். (அக்காகிட்ட சொன்னது என்ன ஆச்சு?) இரண்டு வகை சட்னி இருந்தாலும், சாம்பார் தருவது மிக குறைவு. சர்வர் பற்றாக்குறை வேறு. மீண்டும் சாம்பார் என கேட்டால், தருவதற்கு நிறைய நேரம் இழுத்தார்கள். அவர் காத்திருந்து காத்திருந்து 'சர்வீஸ் சரியில்லைங்க' என என்னிடம் நொந்துகொண்டார்.

எதிரே அமர்ந்தவருக்கு ஏற்பட்ட நிலையை கண்டு சுதாரித்து, இரண்டு இட்லி, ஒரு தோசை என்றேன். வழக்கமாக உணவகங்களில் இட்லிகளை தான் முதலில் கொண்டு வருவார்கள். அப்படியே எதிர்ப்பார்த்திருந்தால்,  முதலில் தோசையை தந்தான். நன்றாக இருந்தது. இட்லியை சாப்பிடுவதற்கு வடகறியை ஆர்டர் செய்து வாங்கினேன். வடகறியோடு இட்லியை முழுங்க ரெம்பவும் சிரமப்பட்டேன். வடகறியின் சுவை எனக்கு பிடிக்கலை.

ஒருவழியாக சாப்பிட்டுவிட்டு வந்தால், கேசியரை சீட்டில் காணோம். ஆள் பற்றாக்குறையால், கேசியர் அக்கா பார்சல் கட்டிக்கொண்டிருந்தார். அக்கா வந்து பணம் வாங்கிக்க! என குரல் கொடுத்தான்.

ஆர்டர் எடுக்கும் பொழுது பொறுப்பாக ஒரு பெரிய நோட்டில் குறித்துக்கொண்டான் பையன். ஆனால், சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்கும் பொழுது ”நான் மறந்துட்டேன். என்ன சாப்பிட்டீங்க?” என்று திரும்பவும் என்னைக் கேட்டான். சிரித்துவிட்டேன்.

கடை துவங்கி சில காலம் ஆகியிருந்தாலும், இன்னும் இவ்வளவு குறைகள் இருப்பது ஆச்சர்யம் தான்! இன்னொருமுறை வெங்காய ரவா தோசை சாப்பிட்டேன். சுவையாக இருந்தது.

இப்படி சில குறைபாடுகள் இருந்தாலும், கோதுமை, ராகி, ரவா, நெய் தோசை என நிறைய வெரைட்டி வைத்திருக்கிறார்கள். சென்னையில் நமக்கு சுவையும், கட்டுப்படியான விலையும் அமைவது அபூர்வம் தான். இங்கு வடை ரூ.6. தோசை ரூ. 25 என விலையும் இருப்பது மகிழ்ச்சி! :)

May 5, 2016

களம் – ஒரு பார்வை!


சமீபத்திய கடுப்பேத்தும் ’பேய்’ படங்களின் வரிசையில் கடுப்பேற்றாத படம். ரியல் எஸ்டேட் தாதா ஒரு வீட்டை வளைத்துப் போட்டு, தன் மகனுக்கு பரிசாக தருகிறார். அந்த வீட்டில் சில அமானுஷ்ய செயல்கள் தொடர்ந்து பயமுறுத்துகின்றன. அதற்கான காரணத்தை சொல்லி படத்தை முடிக்கிறார்கள்.

நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, கலை என 'மாயா' படத்திற்குரிய அத்தனை நேர்த்திகளும் இந்த படத்தில் இருந்தாலும், திரைக்கதை நொண்டியடிக்கிறது. அமானுஷ்ய செயல்களுக்கு அடிப்படையான அந்த பிளாஷ்பேக் காட்சி அறிவுபூர்வமாக சொல்ல முயன்றதை இன்னும் அழுத்தமாய், உணர்வுபூர்வமாக சொல்லப்பட்டிருக்கவேண்டும். அதனாலேயே சப்பென்று படம் முடிந்துவிடுகிறது.

இயக்குநரே கதை, திரைக்கதை, வசனம் எழுதும் நெருக்கடியை பாக்யராஜ் துவங்கி வைத்தார். சமீபத்திய படங்கள் அதை கொஞ்சம் மாற்ற முயல்கின்றன. அதற்கு இந்த படமும் உதாரணம். நல்ல முன்னேற்றம் தான்!