Aug 14, 2008

உத்தம்சிங் என்றொரு மாவீரன்!

உத்தம் சிங் பகத்சிங்கை போலவே, 1919ம் ஆண்டு நடத்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையால் கோபம் கொண்டவன்.

படுகொலைக்கு காரணமானவர்களை பழிவாங்க புறப்பட்டு, பல சிரமங்களை எதிர்கொண்டு, பல நாடுகள் கடந்து, சமயம் பார்த்து காத்திருந்து 21 ஆண்டுகள் கழித்து அவர்களுடைய சொந்த மண்ணான இங்கிலாந்திலேயே பழிவாங்கியவன் இந்த உத்தம்சிங்.

இந்த அரசு, ஆட்சியாள‌ர்க‌ள் செய்த‌ ப‌ல‌ ப‌டுகொலைக‌ளை மற‌ந்து, 61ம் ஆண்டு சுத‌ந்திர‌ தின‌த்தை ம‌க்க‌ளும் கொண்டாடி கொண்டு இருக்கிறார்க‌ள்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ‍ கொள்கைகளால் இந்தியா மீண்டும் அடிமையாகி கொண்டு வ‌ருகிற‌து.
அத‌ன் பாதிப்புக‌ளை ம‌க்க‌ள் தின‌ந்தோறும் ப‌ல‌ அவ‌ல‌ங்க‌ளை ச‌ந்தித்து வ‌ருகிறார்க‌ள்.

மீண்டும் ஒரு சுத‌ந்திர‌ போரைத் துவ‌ங்க வேண்டிய‌ த‌ருண‌ம் இது. 21 ஆண்டுக‌ள் க‌ழிந்த‌ பின்பும் அந்த‌ கொடூர‌காரர்க‌ளை கொன்றானே உத்த‌ம்சிங். அவ‌னை நாம் ந‌ம்முடைய‌ நினைவில் ஏந்துவோம் இந்நாளில்.

கட்டுரை தொடர்கிறது.

*******
உத்தம்சிங் நூற்றாண்டு விழா:

இறுதியாக மரண தண்டனைத் தீர்ப்பை வாசித்து, பேனா முனையை உடைத்தான் வெள்ளைக்கார நீதிபதி.

“என் தாய் நாட்டுக்காகச் சாவதை விட வேறென்ன பெருமை எனக்குக் கிட்ட முடியும்” என்று அந்த வழக்கு மன்றமே அதிரும் வண்ணம் முழங்கினான் ராம் முகம்மது சிங் ஆசாத்.

ராம் முகம்மது சிங் ஆசாத் என்கிற அந்தப் பெயரே விசித்திரமாக இல்லையா!

உத்தம்சிங் என்பது அவனது பெற்றோர் வைத பெயர்! அவன் தனக்குத் தானே, தனது அடையாளமாக, தனது இலட்சியப் பயணத்திற்காகச் சூட்டிய பெயர்தான் ராம் முகம்மது சிங் ஆசாத்!

இந்த இரண்டாயிரமாவது ஆண்டு அவனது நூற்றாண்டு. ஒருபுறம் புரட்சிகரக் கொலையாளியாகவும் தியாகியாகவும் மறுபுறம் சித்தபிரமை பிடித்தவன் - பயங்கரவாதியாகவும் வரலாறு அவனைப் பதிவு செய்திருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் முழுவதும் அவன் நாட்டுப்புற வீரதீர நாயகனாகவும், தேசபக்த விடுதலைப் போராளியாகவும் போற்றப்படுகிறான்.

இந்து மதவெறிப் பாசிஸ்டுகள் உட்பட இந்திய தேசிய வாதிகளும் சீக்கியத் தீவிரவாதிகளும், போலிக் கம்யூனிஸ்டுகளும், போலி சோசலிஸ்டுகளும் கூட அவனுடைய பாரம்பரியத்துக்கு உரிமைக் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் உத்தம்சிங் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட ராம் முகம்மது சிங் ஆசாத் என்கிற பெயரும் தேசிய விடுதலைக்கு அவன் தெரிந்தெடுத்துக் கொண்ட புரட்சிப்பாதையும் புரட்சிகர நடவடிக்கையும் அவர்களது உரிமைக் கோரல்களை உதறி எறிகின்றன. அவன் உண்மையான, நாட்டுப் பற்றுமிக்க பொதுவுடைமைப் புரட்சிப் போராளி என்பதையே நிறுவுகின்றன.

அவன் நினைவை, இலட்சியத்தைப் போற்றும் முகமாக “ராம்முகம்மது சிங் ஆசத் என்கிற உத்தம்சிங்” என்கிற திரைப்படம் இப்போது வெளிவந்துள்ளது.

இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் ரௌலட் சட்டத்தை எதிர்த்து, 1919 பைசாகி பண்டிகை நாளன்று, பஞ்சாபின் அமர்தசரசு நகரின், நாற்புறமும் மதில்கள் சூழ்ந்த ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர். அதன் ஒரே நுழைவாயிலை அடைத்துக் கொண்டு நின்ற 90 போலீசுகாரன்களையும் குண்டுகள் தீரும்வரை சுடும்படி உத்தரவிட்டான் வெள்ளைக்காரத் தளபதி ஜெனரல் டயர்.

“துப்பாக்கி ரவைதீரும்வரை சுடும்படி உத்தரவிட்டேன். இன்னும் குண்டுகள் இருந்திருந்தால் மேலும் சுட்டிருப்போம். பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் கதி என்று பாடம் புகட்டவே அப்படிச் செய்தேன்” என்று திமிரோடு விசாரணை மன்றத்தில் சொன்னான் ஜெனரல் டயர்.

“அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்ட அதிகாரியாக ஜெனரல் டயர் தன் கடமையை நிறைவேற்றினார். எனவே அவர்மீது பழிபோட்டுத் தண்டிப்பதை நான் விரும்பவில்லை” என்று ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வக்காலத்து வாங்கியவர்தான் இன்று தேச பிதாவாகப் போற்றப்படுகிறார்.

அன்று ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் தன் கண்முன்னால் கண்டு துடித்தவன் தான் உத்தம்சிங் என்ற 19 வயது இளைஞன். அன்று 300 பேர் கொல்லப்பட்டதாகப் பத்திரிகைகள் எழுதின. 2000 பேராவது இருக்கும் என்பது தான் மக்களின் நினைவில் நிற்கிறது.

இந்தப் படுகொலைக்கு நேரடிக் காரணமானவர்கள் இருவர். ஒருவன், கொலைப்படைக்குத் தலைமையேற்ற தளபதி டயர். மற்றவன் அதற்கு உத்தரவிட்ட பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ. டயர். இவ்விருவரையும் கொன்று பழிதீர்ப்பது என்று சபதம் மேற்கொண்டான் உத்தம்சிங். நீதி, சமத்துவம் பல்வேறு மதத்தவர்களிடையே சகோதரத்துவம் ஆகியவற்றை இலட்சியமாகக் கொண்ட உத்தம்சிங் அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்த இந்தியர்களால் துவங்கப்பட்ட இந்திய கேதார் கட்சி (இந்திய புரட்சிக் கட்சி)யில் இணைந்தான்.

இந்து- இசுலாமிய - சீக்கிய ஒற்றுமை விடுதலையைக் குறிக்கும் வகையில் ராம்முகம்மது சிங் ஆசாத் என்று பெயர் சூட்டிக்கொண்டான். “மதத்தின் பெயரால் என்மக்களிடம் என்னைப் பிரிப்பது என்னையே துண்டுத் துண்டாக வெட்டுவதாகும்” என்று சொன்னான். தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா வழியாகப் பயணமான அவன் 1933 -ல் பிரிட்டனுக்கு போய்ச் சேர்ந்தான்.

உத்தம்சிங்கின் இலக்குகளில் ஒருவனான ஜெனரல் டயர் காந்தியின் வக்காலத்து, காலனிய அரசின் பாராட்டு- பரிசு பெற்று பதவி உயர்வு பெற்று லண்டன் திரும்பி, பின்னர் வாத நோயால் இறந்தான். இன்னொரு இலக்கான பஞ்சாப் ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ.டயர் பதவி ஓய்வு பெற்றிருந்தான். உத்தம்சிங் அவனது மாளிகையில் பணியாளாகா சேர்ந்தான். இரகசியமாகப் பலிவாங்கினால் எஜமான் -பணியாள் தகராறாகக் கருதப்படும். அரசியல் காரணம் மறைக்கப்படும் என்பதால் தகுந்த தருணத்திற்குக் காத்திருந்தான்.

அந்நாட்களில் இலண்டன் நகரம் நாஜி விமானப் படையினால் எப்போதும் தாக்கப்படும் என்ற அச்சத்தால் இராணுவக் கெடுபிடியில் நிறைந்திருந்தது. அத்தனையையும் மீறி பக்கிங்காம் அரண்மனைக்கு மிக அருகே இருந்த அரங்கத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த உத்தம்சிங் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் ஓ.டயரைச் சுட்டு வீழ்த்தினான்.

“நீண்ட 21 ஆண்டுகளாக இப்படிப் பழிதீர்க்க முயன்று வருகிறேன். என்பணி நிறைவேறியதற்காக நான் ஆனந்தமடைகிறேன். இது என் கடமை” என்று முழங்கினான். கதிகலங்கிப்போனது ஆங்கிலேயக் காலனி அரசு.

சுபாஷ் சந்திரபோஸ், உத்தம்சிங்கைப் பாராட்டினார். பின்னாளில் இந்தியாவில் தனது பரம்பரை ஆட்சியை நிறுவிய நேரு வருத்தம் தெரிவித்தார். இன்று தேசபிதா மகாத்மா என்றெல்லாம் போற்றப்படும் காந்தி தீர்மானமாகக் கண்டித்தார்.

பீகார், சௌரிசௌரவில் போலீசு நிலையத்தைத் தாக்கி, 22 போலீசுக்காரர்களைக் கொன்ற விவசாயிகளின் வீர எழுச்சி உட்பட பல ஆங்கில எதிர்ப்புப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்த தேசத்துரோகி காந்தியிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களின் தியாகப் பாரம்பரியத்தில் ஊறிப் போனவன் உத்த்ம்சிங். காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் போது பகத்சிங், ராஜகுரு, சுகதேவைத் தூக்கிலிட சம்மதம் தெரிவித்தவர் காந்தி. “அந்தப் பையன்களைத் தூக்கிலிடுவதாக இருந்தால் கராச்சி காங்கிரசு மாநாட்டுக்கு முன்னரே தூக்கிலிடுவதுதான் நல்லது” என்று இர்வின் பிரபுவுக்கு கடிதம் எழுதினார் காந்தி. ஆங்கிலேய அரசு அதை ஏற்று நிறைவேற்றிய பிறகு, கராச்சி மாநாட்டுக்கு வந்த காந்தி, பட்டேலை எதிர்த்து, “பகத்சிங்கைக் கொன்றவரே திரும்பிப்போ” என்று ஆத்திரத்துடன் பொங்கி எழுந்தனர், மக்கள்.

அப்படிப்பட்ட காங்கிரசு வீரதீரச் செயலை எப்படி வரவேற்கும்? நேருவின் நெருங்கிய அந்தரங்கத் தரகன் கிருஷ்ணமேனன், தன்னை ஒரு கம்யூனிச அனுதாபியாகக் காட்டிக்கொண்டு கம்யூனிசத்தையே கொச்சைப்படுத்தியவன். “அறியாமல் - மனபேதலிப்பால் செய்துவிட்டேன்” என்று முறையிடும் படி உத்தம்சிங்க்கு யோசனை கூறினார் இந்த கிருஷ்ணமேனன். மன்னிப்புக் கேட்டு தூக்குத் தண்டனையில் இருந்து தப்பிக்கும் யோசனையைக் கோபாவேகத்துடன் நிராகரித்தான், உத்தம்சிங்.

இவ்வாறுதான் பகத்சிங் பாரம்பரியத்தில் பஞ்சாப் முழுவதும் ஒரு வீரதீர நாயகனாகவும் தியாகியாகவும் உருவானான். அவன் இங்கிலாந்தில் தூக்கிலிடப்பட்டு பெண்டான்வில்லா சிறையில் புதைக்கப்பட்டான்.

முப்பது ஆண்டுகளுக்குப்பின் அவனது உடல் தோண்டி எடுக்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் முழுவதும் மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவனது சவப்பெட்டி, உத்தம்சிங் பிறந்த சுனாம் கிராமத்தில் புதைக்கப்பட்டு அவனது தியாகத்தைப் போற்றும் நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டுள்ளது.

“இது ஒரு பழிவாங்கும் சித்திரம் அலல. எந்த வகை ஒடுக்குமுறையானாலும் அதை எதிர்த்துப் போராடுவது பற்றிய ஒரு திரைப்படம்” என்கிறார் அதன் இயக்குநர் சித்தார்த்.

உத்தம்சிங் ஒரு பயங்கரவாதி அல்ல. சம்பந்தமில்லாத, அப்பாவி மக்களின் உயிருக்கு அவமரியாதை செய்வதுதான் பயங்கரவாதம். உத்தம்சிங்கும், பகத்சிங்கும் இலக்கை நோக்கிய, வரம்புக்குட்பட்ட வன்முறையை நம்பிய அதேசமயம் பரந்துப்பட்ட மக்களைத் திரட்டுவதை முக்கியமாகக் கொண்டிருந்தனர்.

தியாகி பகத்சிங்கின் பெயரை சீக்கிய - காலிஸ்தானி பயங்கரவாதிகள் கேடாகப் பயன்படுத்துவதற்கு எதிராகச் செய்திப் படமொன்றை ஏற்கனவே ஆனந்தபட்வர்த்தன் எடுத்திருந்தார். தியாகி உத்தம்சிங்கின் புகழையும் அவர்கள் கேடாகப் பயன்படுத்துவதை எதிர்த்திட இத்திரைப்படம் உதவும் என்கிறார் இதன் திரைக்கதை- உரையாடல் ஆசிரியர்.

இந்தியத் திரைப்படங்கள், குறிப்பாக இந்தி சினிமாக்கள், தனிநபர் காரணங்களுக்காக வெறுமனே வெறியும் ஆத்திரமும் பொங்கும் இளைஞனைக் கதாநாயகனாகச் சித்தரிக்கின்றன. குரூரமான காட்சிகள், வன்முறைக்காக வன்முறை என்பதே சினிமா வியாபாரிகளின் கரு.

ஆனால் உத்தம்சிங்கின் கதையோ, நாட்டின் மாறுபட்ட பண்பாடுகளை மத நம்பிக்கைகளையும் மதிக்கும் அதே சமயம் நாட்டு விடுதலை சமத்துவம் என்கிற தியாக உணர்வு மிக்க விடுதலைப் போராளியின் உண்மை வரலாறு. ஆக்கப்பூர்வமான சமுதாய மாற்றத்திற்கும், நீதி நிலைநாட்டுவதற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வன்முறை நியாயமானது, அவசியமானது என்று வாழ்ந்து காட்டினார் உத்தம்சிங்.

பகத்சிங், உத்தம்சிங் போன்ற போராளிகளின் புரட்சிப் போராட்டங்களால் நிறைந்ததுதான் இந்தியப் விடுதலைப் போராட்ட வரலாறு. சிப்பாய்க் கலகம் எனப்படும் முதல் இந்திய சுதந்திரப் போர், சௌரிசௌரா உழவர்களின் பேரெழுச்சி, சிட்டகாங் ஆயுதக் கிடங்குச் சூறையாடல், பகத்சிங், குதிராம் போஸ், உத்தம்சிங் போன்றவர்களின் புரட்சிகர சாகசங்கள் முதல், தபால்- தந்தி ஊழியர்கள் மற்றும் மாபெரும் கடற்படை எழுச்சி என்று இலட்சக்கணக்கான மக்களின் இரத்தத்தால் சிவந்ததுதான் இந்திய விடுதலைப் போராட்டப் பாதை.

ஆனால் “கத்தியின்றி இரத்தமின்றி” காந்தியின் சத்தியாகிரகமும் அகிம்சையும் நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்ததாக ஏறக்குறைய எண்பது ஆண்டுகளாகப் பொய்ப்பிரச்சாரம் நடக்கிறது. பகத்சிங், உத்தம்சிங் போன்றவர்கள் புரட்சிப் போராளிகளாக வாழ்ந்தபோது அவர்களை இழித்தும் பழித்தும் பேசி, காட்டிக் கொடுத்தும், அவர்களைத் தூக்கிலிட ஆதரவு தெரிவித்தும் துரோகம் செய்தவர்கள்தாம் காந்திய தேசியவாதிகள். ஆனால் இன்றோ அவர்களை பூசை அறைத் தெய்வங்களாக்கி “தேச பக்தி”ப்பாயிரம் பாடுகிறார்கள்.

பகத்சிங்- உத்தம்சிங் போன்றவர்கள் மதச்சார்பற்ற, பொதுவுடமைப் புரட்சியாளர்களாக வாழ்ந்தார்கள் என்கிற உண்மையை மூடிமறைத்து அவர்களுக்குக் குடுமியும் நாமமும் சாத்தி இந்துத்துவ தேசியவாதிகளைப் போல அவர்களைச் சித்தரிக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் பாசிச மத வெறியர்கள்.

வெள்ளையரின் நேரடி ஆட்சியின் போது இருந்ததைப் போலத்தான் இன்றும் ஆயுதமேந்தாமலும், புரட்சிகர வன்முறையில் இறங்காமலும் உழைக்கும் மக்கள் தமக்குரிய நியாயத்தையும் வாழ்வுரிமையையும் நிலைநாட்டவே முடியாது. வேலை வாய்ப்பு கேட்டுப் போராடிய பார்வையற்ற பட்டதாரி இளைஞர்கள் மீது சுட போலீசை ஏவி தடியடி நடத்துகிறது அரசு. ஒன்பது, பத்து வயது சிறுவர்கள் மீதும் 65 வயதுக்கும் மேலான மூதாட்டி மீதும் கூட “தடா” எனப்படும் ஆள்தூக்கிச் சட்டத்தை ஏவி சிறையிலடைக்கிறது, அரசு.

“இன்னொரு ஜாலியன்வாலாபாக்” என்று எத்தனை மக்கள் திரள் படுகொலைகளைத்தான் சொல்வது? பீகாரில் ஆர்வால் நகர மைதானத்தில் கூடிய கூலி ஏழை விவசாயிகளைச் சூழ்ந்துக் கொண்டு தோட்டா தீரும் வரை சுட்டுப் பொசுக்கினர். நாகபுரியில் மந்திரியிடம் மனுக்கொடுக்கப்போன ஆதிவாசிகளை முற்றுகையிட்டு தடியடி நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டவரைக் கொன்றனர். பம்பாயில் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவமரியாதை செய்ததை எதிர்த்து மறியலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்டவர்களைக் கண்மண் தெரியாமல் சுட்டுக் கொன்றனர். உத்திரப்பிரதேசத்தில் சிமெண்ட் ஆலைகளைத் தனியார்மயமாக்குவதை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்கள் பெருந்திரளாகக் கொல்லப்பட்டனர். இதோ, நெல்லையில் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்கப்போன மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை அடித்து நொறுக்கி தப்பி ஒட வழியின்றி தாமிரவருணி ஆற்றில் தள்ளி பெண்கள், குழந்தை உட்பட 17 பேரைக் கொன்றனர்.

இந்த “ஜாலியன்வாலாபாக்” படுகொலைகளுக்கு நியாயம் பெறவேண்டாமா? இதற்கெல்லாம் பகத்சிங், உத்தம்சிங் பாதையில் பயணப்படுவதா? இல்லை, விசாரணைக்கமிசன் கண்துடைப்புகளை ஏற்பதா? சத்தியாகிரகம், அகிம்சை வழி என்று ஏமாந்து நிற்பதா?

சத்தியாகிரகம், அகிம்சை என்பதெல்லாம் உண்மையில் பத்தாம்பசலித்தனமான பம்மாத்து. இந்தச் சமுதாயத்தின் சட்டப்பூர்வமான, அதிகாரப்பூர்வமான ஒழுங்குமுறையே ஆயுதந்தாங்கிய, பயிற்சி பெற்ற, வன்முறை - பயங்கரவாத நிறுவனங்களால்தான் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. சாதி, மத, இன, மொழி, வர்க்க ஒடுக்குமுறைச் சுரண்டலுக்கு எதிராகக் கேள்விகேட்டு தனிநபராகவோ, குழுவாகவோ பெருந்திரளாகவோ மக்கள் எழுந்தபோதெல்லாம் அந்த அரசு வ்ன்முறை ஏவிவிடப்பட்டு பயபீதி விதைக்கப்பட்டிருக்கிறது.

அதிகாரி, போலீசுக்காரன், நீதிபதி, இராணுவச் சிப்பாய் எல்லாருமே நடை, உடை, பாவனை, தோற்றம், பேச்சு, செயல் எல்லாவற்றிலும் சாதாரணமக்களிடமிருந்து அந்நியப்பட்டு, அச்சுறுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப் பட்டிருக்கின்றனர். இப்படி ஒட்டுமொத்த அரசு அமைப்பே வன்முறையாக வடிவம் எடுத்துள்ள அதேசமயம், அதற்கெதிராக உணர்ச்சிவசப்பட்டுஒரு குடிமகன் நியாயங்கேட்டு சுட்டு விரலை உயர்த்தினால் கூட பயங்கரவாத, தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு, கேள்விமுறையின்றி கொல்லப்படுகிறான்.

“பகத்சிங், உத்தம்சிங் வாழ்ந்த காலம் அந்நியர் ஆட்சி இருந்தது. ரௌலட் சட்டம் போன்ற கொடிய ஆள்தூக்கிச் சட்டங்கள் இருந்தன. அவர்கள் ஆயுதம் ஏந்தினர்; எதிரிகளைப் பழிதீர்த்துத் தியாகிகளாயினர். இன்று ஆயுதந்தூக்கவோ, வன்முறையில் ஈடுபடவோ அவசியமில்லை. மக்கள் ஜனநாயக பூர்வமாகவே தமது கோரிக்கைகளை அடையலாம். ஆகவே, அகிம்சைவழியும் சத்தியாகிரகமுமே சரியானது” என்று பத்தாம்பசலிகள் போதிக்கின்றனர்.

பகத்சிங், உத்தம்சிங் வழியிலேபோய் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்துவிடக்கூடாது என்றுதான் காந்தி- நேரு - ஜின்னாக்கள் ஆங்கிலேயக் காலனிய ஆட்சியாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதிகாரத்தைக் கைமாற்றிக் கொண்டு போலி சுதந்திரத்தைப் பெற்றார்கள். அதனால்தான் இருநாடுகளின் மீதும் ஏகாதிபத்தியச் சுரண்டலும் ஒடுக்குமுறையும் தொடர்கிறது. அவர்களின் வாரிசுகள் நாட்டை மறுகாலனியாக்கும் துரோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அன்று ஒரு ரௌலட் சட்டம்தான் இருந்தது. இன்று “தடா”, “பொடா”, “மிசா”, “மினிமிசா”, தேசியப் பாதுகாப்புச் சட்டம், அரசு துரோகச் சட்டம் என்று பல கருப்புச் சட்டங்களும் “ஜாலியன் வாலாபாக் படுகொலை”யைப் போன்ற பல மக்கள் திரள் படுகொலைகளும் நீடிக்கின்றன. அன்று பகத்சிங்குகளும், உத்தம்சிங்குகளும் சட்டப்படியாவது விசாரித்துத் தூக்கிலிடப்பட்டனர். இன்றோ, போலீசுடன் மோதல் என்கிற பெயரில் கேள்விமுறையின்றி நேரடியாகவே போராளிகள் படுகொலை செய்யப்படுகின்றனர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் மூலம், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவரைத் தூக்கிலிட்டதன் மூலம் விடுதலைத் தீயை அனைத்துவிடலாம் என்று ஆங்கிலேயர்கள் கனவு கண்டனர். ஆனால் உத்தம்சிங்குகள் உதித்தனர். அதுபோலவே புதிய ஜனநாயகப் புரட்சிக்காகவும், தேசிய இனவிடுதலைக்காகவும் ஆயுதம் ஏந்தியுள்ள போராளிகளைப் படுகொலை செய்வதன் மூலம் விடுதலை- புரட்சித் தீயை அணைத்துவிட ஆளுவோர் எத்தனிக்கின்றனர். ஆனால் போராளிகள் மடிந்து கொண்டும் புதிதுபுதிதாக பிறந்து கொண்டும் இருக்கிறார்கள். இறுதி இலட்சியம் ஈடேறும்வரை இந்த வரலாறு நீடிக்கும்.

நன்றி : புதிய கலாச்சாரம்

Jul 17, 2008

மகரஜோதி பொய்! - மருதையன்


""சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்'' என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் கோயிலின் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், ""வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு'' என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.


"இந்த அளவுக்கு குட்டு உடைந்த பிறகும் மார்க்சிஸ்டு அரசு மகரஜோதியைக் கொளுத்துமா?' என்ற கேள்விக்கு ""சபரிமலையில் மகரவிளக்கு வெளிச்சம் எப்படி உருவாகிறது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும். ஆனால் பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது'' என்று பதிலளித்திருக்கிறார் மார்க்சிஸ்டு முதல்வர் அச்சுதானந்தன். யாரை யார் விசாரிப்பது? பந்தம் பிடிப்பவனை பற்ற வைப்பவன் விசாரிப்பதா? ""தீவட்டியைத் தொடர்ந்து கொளுத்துவோம். தீவட்டிக் கொள்ளையைத் தொடர்ந்து நடத்துவோம்'' என்பதுதான் அச்சுதானந்தனுடைய கூற்றின் பொருள்.


மகரஜோதி அம்பலமாவது இது முதல் முறையல்ல. பந்தம் கொளுத்திய மின்வாரிய ஊழியர்களைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் கேரள மாநில பகுத்தறிவாளர் சங்கத்தினர். ""அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, அரசாங்க வருமானத்துக்கு ஆப்பு வைக்காதீங்கப்பா'' என்று அன்பு வேண்டுகோள் விடுத்து அன்று பகுத்தறிவாளர்களை அமுக்கினார் அந்நாள் மார்க்சிஸ்டு முதல்வர் ஈ.கே. நாயனார்.


கோயில் தந்திரி கண்டரரு மோகனரு, தனது லீலாவிநோதங்கள் மூலம் ஐயப்பன் மகிமையைக் கந்தலாக்கியது தனிக்கதை. அவருக்கு வேதம், மந்திரம் போன்ற வெங்காயம் எதுவும் தெரியாதென்பதும் விலைமாதர் வீட்டு முகவரிகள் மட்டுமே தெரியும் என்பதும் அவரிடம் நடந்த விசாரணையில் அம்பலமானது. இப்போது தலைமைத் தந்திரியின் ஒப்புதல் வாக்குமூலம் வந்திருக்கிறது.


தெற்கே தீவட்டி பிசினஸ்; வடக்கே பனிக்கட்டி பிசினஸ். காஷ்மீரில் அமர்நாத் எனுமிடத்தில் குளிர்காலத்தில் ஒரு குகைக்குள்ளே பெரிய "குச்சி ஐஸ்' வடிவத்தில் உருவாகும் பனிக்கட்டியைத் தரிசிப்பதற்கு ஆண்டுதோறும் 4 லட்சம் பக்தர்கள் அங்கே சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த பக்தர்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க 40,000 சிப்பாய்களை மாதக்கணக்கில் காவல் வைக்கிறது அரசு.


மேற்படி சிவலிங்கத்திற்கும் வந்தது சோதனை! ""முன்னர் சுமார் 12 அடி உயரம் இருந்த பகவான் தற்போது 6 அடிக்கும் கீழே போய்விட்டார். காரணம் புரியவில்லை'' என்று சென்ற ஆண்டு அபாயச்சங்கு ஊதினார் அந்தக் கோயிலின் நிர்வாக அதிகாரி. பகவானைக் கண்டு பக்தர்கள் உருகலாம், பக்தர்களைக் கண்டு பகவான் எப்படி உருகமுடியும்? ""பக்தர்கள் விடும் மூச்சுக்காற்றின் வெப்பத்தைப் பனீசுவர பகவானால் தாங்கமுடியவில்லை'' என்றன சில பத்திரிகைகள். பக்தர்களின் மூச்சை நிறுத்த முடியாதே! ""குகைக்கு அருகில் அடுப்பு பற்றவைத்து பக்தர்கள் சப்பாத்தி போடுகிறார்கள். சூடு தாங்கமுடியாமல்தான் பகவான் கசிந்துருகுகிறார்'' என்றன வேறு சில பத்திரிகைகள். புவி சூடேறுதல்தான் காரணம் என்றனர் வேறு சிலர்.


காரண காரியங்கள் குறித்த அறிவுப்பூர்வமான ஆய்வுகள் தொடர்வது ஆன்மீகத்துக்கு ஆபத்து என்பதால் குப்தா கமிசன் என்றொரு கமிசனைப் போட்டு ஆராயச் சொன்னது அரசு. பகவான் கரையாமலும், பக்தர்கள் கூட்டம் கலையாமலும் பாதுகாக்கும் பொருட்டு குகைக்கு குளிர் சாதன வசதி செய்து சிவபெருமானை ஸீரோ டிகிரியில் பாதுகாப்பது; பக்தர்கள் சப்பாத்தி போட 100 ஏக்கர் வனப்பகுதியைக் கோயிலுக்கு தானம் கொடுத்து அடுப்புச் சூட்டிலிருந்து ஆண்டவனைப் பாதுகாப்பது என்று முடிவு செய்தது அரசு. இந்த 100 ஏக்கர் தானத்துக்கு எதிராகக் காஷ்மீரே பற்றி எரியத் தொடங்கி, அதன் விளைவாக அம்மாநில காங்கிரசு அரசு இப்போது உருகிக் கொண்டிருக்கிறது.


எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, "அமர்நாத் பனிலிங்கம் செயற்கையானதல்ல' என்று கொட்டை எழுத்தில் செய்தி போடுகிறது தினமணி (24.6.08).


இயற்கையாக உருவான எல்லாம் வல்ல இறைவனை செயற்கையாகப் பாதுகாப்பது ஏன் என்ற கேள்விக்கு மட்டும் அவர்கள் பதில் சொல்லவில்லை.


"இராமன் பாலம் என்பது இயற்கையாக அமைந்த மணல்திட்டு' என்று சொன்னால், "இல்லையில்லை, அது இராமனால் கட்டப்பட்டது, செயற்கையானது எனவே தெய்வீகமானது' என்று கத்துகிறார் இராம. கோபாலன். "அமர் நாத் பனிலிங்கம் செயற்கையானது' என்று சொன்னால் "இல்லையில்லை, அது இயற்கையானது எனவே தெய்வீகமானது' என்கிறார்கள். வடக்கே இயற்கை தெய்வீகம்! தெற்கே செயற்கை தெய்வீகம்!


மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காக ஆளும் வர்க்கம் உருவாக்கிய மடமைகள் உடைபடும்போது மதவாதிகள் பதறுகிறார்கள்; அதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால் அற்புதம் என்றும் தெய்வீகம் என்றும் தாங்கள் இதுகாறும் நம்பிக் கொண்டிருந்தவை அயோக்கியத்தனமான மோசடிகள் என்று ஆதாரப்பூர்வமாகத் தெரியும்போது பக்தர்கள் பதறியிருக்க வேண்டாமா?


""கடன் பட்டதும், காவியணிந்ததும், மதுமாமிசம்மனைவியைத் துறந்ததும், காடு மலைகளில் நடையாய் நடந்ததும் கேவலம் ஒரு தீவட்டியைத் தரிசிக்கத்தானா?'' என்று குமுறியிருக்க வேண்டாமா? "அது தீவட்டியில்லை, தெய்வீகத் தீபம்தான். நாங்கள் நம்பமாட்டோம்' என்று நக்கீரனுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள் ஐயப்பசாமிகள். ""பகவானை எண்ணி பனியைச் சகித்ததும், பயங்கரவாதிகளை எண்ணிப் பயந்து செத்ததும், 12,000 அடி உயரம் மூச்சு வாங்க மலையேறியதும் ஒரு குச்சி ஐஸைத் தரிசிக்கத் தானா?'' என்று கொதித்திருக்க வேண்டாமா? அந்தக் குச்சி ஐஸைப் பாதுகாக்க பாரத் பந்த் நடத்துகிறது பாரதிய ஜனதா. அதற்கும் கூட்டம் சேருகிறது.


பகுத்தறிவின் ஒளி பட்டவுடனே மூடநம்பிக்கை இருள் அகலவில்லையே ஏன்? "மகரஜோதி பொய்' என்பதை அந்தக் கோயிலின் தந்திரியே பிரகடனம் செய்த பின்னரும் அய்யப்பன்மார்கள் திருந்தவில்லையே ஏன்? இந்த பக்தர்களை "மூட நம்பிக்கைக்குப் பலியானவர்கள்' என்று மட்டும் நாம் கருதமுடியுமா? என்ன வகை பக்தி இது?


மூடநம்பிக்கைபகுத்தறிவு, ஏமாற்றுபவன்ஏமாற்றப்படுபவன் என்ற வகைப்பாடுகளின் வரம்பைத்தாண்டி ஒரு விநோதக் கலவையாக உருப்பெற்று வருகிறது இந்த "பக்தி'. காமவெறி பிடித்த பித்தலாட்டக்காரனாக அர்ச்சகன், இந்தப் பித்தலாட்டத்துக்குப் பந்தம் பிடிக்கும் அரசு, அதற்குக் காவல் நிற்கும் போலீசு, ஐயப்ப சீசனில் திருடுவதற்காகவே மாலை போட்டுக் கொள்ளும் பிக்பாக்கெட்டுகள், டாஸ்மாக் கடைகளில் அய்யப்பன்மார்களுக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும் தனிக் கோப்பைகள், சுத்தம் கருதி சாக்கனாக் கடைகளில் அவர்களுக்கு மட்டும் இலை போட்டுப் பரிமாறப்படும் புரோட்டாக்கள்..! மோசடியும் சுயமோசடியும் சரிவிகிதத்தில் கலந்து உருவாகியிருக்கும் இந்தக் கூட்டுக் களவாணித்தனத்தில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார் என்று பிரித்தறிய முடியவில்லை.


புதுப்பட ரிலீஸ் அன்று கட் அவுட்டுக்குப் பால் அபிசேகம் செய்யும் ரசிகனின் பரவசம், நூறு ரூபாய்ஒரு குவாட்டர் என்று கறாராக ரேட் பேசிக் கொண்டு லாரியில் ஏறி வந்து "தலைவா' என்று உணர்ச்சி வசப்படும் தொண்டனின் மனக்கிளர்ச்சி, இலஞ்சத்தை அழுதுவிட்டு அப்புறமும் அதிகாரியிடம் "ங'ப் போல் வளையும்' நெளிவு சுளிவு, மொய் எழுதும் வயிற்றெரிச்சலை மறைத்தபடி திருமண வீட்டில் மலர்ந்து மணம் பரப்பும் புன்னகைகள்..! அன்றாட வாழ்வில் நாம் காணும் இந்த "உணர்ச்சிகள்' எல்லாம் அமர்நாத் யாத்ரீகர்களின் பரவசத்தையும் அய்யப்பன்மார்களின் மனக் கிளர்ச்சியையும் பிரதிபலிக்கவில்லையா?


இந்த மத உணர்ச்சி ஒரு மயக்கமென்றால், அது ஆட்படுத்தப்பட்ட மயக்கம் மட்டுமல்ல, விரும்பி ஆட்படும் மயக்கம். இது தெய்வீக அபினி மட்டுமல்ல, லவுதீக அபினியும் கூட. இது புனித யாத்திரை என்ற முகமூடி அணிந்த இன்பச் சுற்றுலா. இந்தப் போலி பக்தியை ஆன்மீக அனுபவமாக "உணர்ந்து' மயங்கும் பொருட்டு ஒரு "தெய்வீக கிளைமாக்ஸ்' பக்தனுக்கே தேவைப்படுகிறது.


எனவேதான் பக்தன் பதறுவதில்லை. சாம்சங் ரெப்ரிஜிரேட்டரையே கருவறையாக்கி, அதற்குள் பனி லிங்கம் ஒன்றை உறையவைத்து, ஆண்டுக்கு ஒரு முறை திறந்து காட்டினாலும் "ஹர ஹர மகாதேவா' என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள இந்த பக்தர்கள் தயார்! மகரஜோதிக்குப் பதில் சிலிண்டரை வைத்து "ஸ்பிக் ஜோதி'யைக் கொளுத்திக் காட்டினாலும் அதனைத் "தரிசிக்கும்' பொருட்டு விரதமிருக்கவும், இருமுடி சுமக்கவும் அய்யப்பன்மார்கள் தயார்!


"டென் கமாண்ட்மென்ட்ஸ்' என்ற திரைப்படத்தில் பார்த்த ஒரு காட்சி இங்கே நினைவுக்கு வருகிறது. பல வகையான விக்கிரக வழிபாடுகளில் மூழ்கியிருக்கும் யூத மக்களிடம் ""இவையெல்லாம் கடவுளல்ல, உண்மையான கடவுளின் செய்தியை நான் உங்களுக்குக் கொண்டுவருகிறேன்'' என்று கடவுளைத் தேடி மலைக்குச் செல்வார் மோசஸ். போனவர் திரும்புவதற்குத் தாமதமாகவே, ""ஒரு கடவுளில்லாமல் இன்னும் எத்தனை நாள்தான் நாம் காத்திருக்க முடியும்?'' என்று விசனப்பட்ட மக்கள் ஒரு எருமைக்கிடா பொம்மையைக் கடவுளாக்கி அதைத் தலையில் வைத்துக் கூத்தாடத் தொடங்குவார்கள்.


அந்தக் கூத்தும் இந்தக் கூத்தும் ஒன்று போலத் தோன்றினாலும் ஒன்றல்ல. அது அச்சத்திலும் மவுடீகத்திலும் மனிதகுலம் ஆழ்ந்திருந்த, அறிவியல் வளராத காலம். அது பல் முளைக்காத குழந்தையின் மழலை. இன்று நாம் காண்பதோ கிழவனின் மழலை. ""ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான்தான் என்று, அந்தப் பொய்யில் உயிர்வாழ்வேன்'' என்று மன்றாடும் காதலனைப் போல, "எங்களுக்கு ஒரு மாயையை வழங்கு' என்று இறைஞ்சுகிறார்கள் இந்த பக்தர்கள்.


சென்னை தீவுத்திடலில் அமர்நாத்தைப் போலவே பனிக்கட்டி லிங்கத்தை உருவாக்கி "சென்னையில் அமர்நாத்' என்று விளம்பரம் செய்யப்படுகிறது. ராட்டினம் ஏறப்போன பொருட்காட்சிக் கூட்டம் உடனே பக்தர்களாக உருமாறி அந்த செயற்கை லிங்கத்தைப் பரவசத்துடன் வழிபடுகிறது. திருப்பதி வரை சென்று தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக "சீனிவாச திருக்கல்யாணத்தை' சென் னையிலேயே நடத்தி, "சென்னையில் ஒரு திருப்பதி' என்று விளம்பரம் செய்கிறது திருப்பதி தேவஸ்தானம். "கோயிந்தா கோயிந்தா' என்று அங்கேயும் கூட்டம் அலைமோதுகிறது.


ஷாம்பு பாட்டில் வாங்கும் வசதியில்லாதவர்களுக்காக இப்போது சாஷேக்களில் தொங்குகிறார் கடவுள். நுகர்வு தரும் சிற்றின்பத்துக்கும் ஆன்மீகப் பேரின்பத்துக்கும் இடையில் நிலவுவதாகச் சொல்லப்படும் சீனப்பெருஞ்சுவர் மாயமாக மறைந்து விட்டது. இந்தப் பேரின்பமென்பது சிற்றின்பத்தின் வாலில் தடவப்பட்டிருக்கும் ஆன்மீக வாசனைத் தைலம். தமது இஷ்ட தெய்வங்கள் மீது இந்த பக்தர்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு, தமது இஷ்ட பிராண்டுகள் மீது நுகர்வோர் கொண்டிருக்கும் ஈடுபாட்டையே பெரிதும் ஒத்திருக்கிறது.


இது உத்திரவாதமில்லாத பரலோக இன்பவாழ்வை இலட்சியமாகக் கொண்டு இகலோகத் துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் இலக்கண வகைப்பட்ட ஆன்மீகமல்ல; உத்திரவாதமான இன்பத்துக்கான தேட்டம். "பக்தி' என்று புனைபெயர் சூட்டிக் கொண்ட பிழைப்புவாதம். ஜோதியோ, லிங்கமோ, பக்திப் பரவசமோ அனைத்தும் இங்கே பிஸ்கெட் பாக்கெட்டுகளின் பளபளப்பான மேலுறைகள் மட்டுமே.


கஞ்சாச் செடியின் போதையைத் தெய்வீகமென்றும் பேரின்பமென்றும் தவமென்றும் எண்ணிக் கொண்டிருந்த கருத்து மயக்கமல்ல இது. "கஞ்சாவே பேரின்பம்' என்று அறிவுப்பூர்வமாகத் தேர்ந்து தெளிந்த விழிப்பு நிலை. சொல்லப்போனால் இது வேறு ஒரு வகைப் பகுத்தறிவு. சுயநலத்துக்காகத் தெரிந்தே தன்னை மடமையில் ஆழ்த்திக் கொள்ளும் பகுத்தறிவு. கல்லையும் மரத்தையும் கண்டு அஞ்சி வணங்கிய மூடநம்பிக்கையைக் காட்டிலும் அபாயகரமான பகுத்தறிவு.


"மாலை போடுவது மடமை' என்று நீங்கள் சாடினால், "ஒரு மண்டலம் விரதமிருப்பதும், புலால் மறுப்பதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்' என்று அறிவியல் பூர்வமாக விளக்கி உங்களைத் திகைப்படையச் செய்வார்கள் இந்த பக்தர்கள். "பனிலிங்கம் பொய்' என்று நீங்கள் கூறினால், ""இந்த விசயம் உங்களுக்கு இப்போதுதான் தெரியுமா, எனக்கு ஏற்கெனவே தெரியும்'' என்று சொல்லி உங்களை அதிர்ச்சியில் உறைய வைப்பார்கள். நீங்கள் அறிந்திராத மேலும் இரண்டு ஆன்மீக மோசடிகளை உங்களுக்கு விளக்கி, தங்களது உலக ஞானத்தின் மேன்மையை உங்களுக்குக் குறிப்பாலுணர்த்துவார்கள்.


அல்லது ""மகரஜோதியும் பனிலிங்கமும் மட்டுமா, உலகமே மோசடிகளால்தான் நிறைந்து இருக்கிறது'' என்று தத்துவஞானத்தின் தளத்துக்கு விவாதத்தை தள்ளிச் செல்லுவார்கள். லஞ்சம், வரதட்சிணை, சாதி, வாஸ்து, சாமியார்கள், ராசிக்கல் என நியாயப்படுத்த முடியாத எல்லா அயோக்கியத்தனங்களையும் கொள்கையளவில் மறுப்பதற்கும், நடைமுறையில் அவற்றுடன் அனுசரித்துச் செல்வதற்கும் என்ன விதமான நியாயப்படுத்தல்களை சமூக வாழ்வில் நாம் எதிர்கொள்கிறோமோ, அவற்றைத்தான் பக்தர்களும் பயன்படுத்துகிறார்கள். பிழைப்புவாதமும் காரியசாத்தியவாதமும் பழகிவிட்டதால், அந்த வாதங்கள் அனைத்தையும், "பழகிய சைக்கிளை பழகிய ரோட்டில் ஓட்டும் இலாவகத்துடன்' பயன்படுத்தி பகுத்தறிவை முறியடிக்கிறார்கள் இந்த பக்தர்கள்.


"டபுள்யூ.டபுள்யூ.எஃப்' என் றொரு அமெரிக்க மல்யுத்தத்தைத் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் இரண்டு மாமிசமலைகள் மோதிக்கொள்வார்கள். நாக்கூசும் வார்த்தைகளால் ஏசிக் கொள்வார்கள். கொலைவெறியுடன் கட்டிப் புரளுவார்கள். எனினும் அது உண்மையான சண்டையல்ல. யார் வெல்ல வேண்டும் யார் தோற்க வேண்டும் என்பதை முன்னரே தீர்மானித்து நிகழ்ச்சியை நடத்தும் முதலாளிகள் காட்சிப்படுத்தும் நாடகம் அது. இரசிகர்களுக்கும் இது தெரியும். இருந்தாலும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி சண்டையை ரசிக்கிறார்கள். "குத்து.. கொல்லு' என்று வெறிகொண்டு கூச்சலிடுகிறார்கள்.


இந்த நிகழ்ச்சியில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார்? நடிகன் யார், ரசிகன் யார்? தீவட்டி கொளுத்துபவன் யார், கன்னத்தில் போட்டுக் கொள்பவன் யார்? கண்டரரு யார், காணதவரு யார்? குருசாமி யார், கன்னிச்சாமி யார்?


இது ஒரு வகைப் "பகுத்தறிவு'. இதுதான் நம் முன் பக்திவேடம் பூண்டு ஆடுகிறது. வெறும் கருத்துப் போராட்டத்தால் இதனை வீழ்த்த முடியாது. இதன் இதயம் ஆன்மீகத்தில் இல்லை ; லௌகீகத்தில் இருக்கிறது சமூக வாழ்க்கையின் எல்லாப் பரப்புகளிலும் வேர் பரப்பியிருக்கும் இந்தப் "பகுத்தறிவை' எதிர்த்துப் போராடுவதென்பது "ஒரிஜினல் மூடநம்பிக்கையை' எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் கடினமானது.

மருதையன்

- புதிய கலாச்சாரம் ‍ ஜூலை 2008 இதழில் வெளிவந்தது
http://www.tamilcircle.net/index.php?view=article&id=2143%3A2008-07-15-20-09-19&option=com_content&Itemid=83