வீரம் விளைந்தது - நாவல் அறிமுகம்!
மனித
வாழ்வின் வசந்தகாலம் என்று இளமைப்பருவத்தை வருணிப்பதுண்டு. எதிர்காலம் குறித்த கனவுகளும்,
நம்பிக்கையும், புதுமையின்மீது ஆர்வமும், செயல்துடிப்பும் பொங்கித் ததும்பும் காலம்
அது. வாழ்க்கையின் சுக, துக்கங்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, மனித வாழ்வின் இந்தப்
பொன்னான தருணத்தை தனது தாய்நாட்டு விடுதலைக்காக அர்ப்பணித்து இளமைக்குப் புதுப் பொலிவு
சேர்த்த ஒரு மாவீரனின் வாழ்க்கைப் பயணமே இந்த நாவல்.
அன்றைய
ரஷ்யாவில் ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டுக்கிடந்த ஏழை, எளிய மக்களும், விவசாயிகளும்,
தொழிலாளர்களும் கம்யூனிஸ்டுக் கட்சியின் கீழ் அணிதிரண்டு கொடுங்கோலன் ஜார் மன்னனின்
ஆட்சியைத் தூக்கியெறிந்தனர். 1917-ல், பூமிப்பந்தின் ஆறில் ஒரு பகுதியில் பொதுவுடைமை
ஆட்சி மலர்ந்தது. ஆயினும், நாட்டின் உட்பகுதிகளிலும், கிராமப் புறங்களிலும் நிலப்பிரபுக்களும்,
பண்ணையார்களும் அடங்கிய பிற்போக்கு சக்திகள்
கொட்டமடித்து வந்தனர். புதிதாக ஆட்சியிலமர்ந்த பாட்டாளிவர்க்கத்தின் செஞ்சேனை வீரர்கள்
அவர்களை அடக்கி, ஒடுக்குவதற்கான ஒரு கடுமையான உள்நாட்டுப் போரை நடத்திக்கொண்டிருந்தனர்.
வறிய,
ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன் பாவெல் கர்ச்சாகின். துடுக்குத்தனமும், பிடிவாதமும் அவனை
ஆரம்பப் பள்ளியைத் தாண்டவிடவில்லை. ஆனால்
கடின உழைப்பாளி. நேர்மையும், நெஞ்சுரமும் கொண்டவன்; அநீதிகளைக் கண்டு பொங்கி எழும்
குணம் படைத்தவன். எனவே, ஏழைகளைக் கசக்கிப் பிழிந்து உல்லாசமாக வாழும் ஊதாரிகளான பணக்கார
வர்க்கத்தை இயல்பாகவே வெறுத்தான். பணக்கார வர்க்கத்தின் கொள்ளைக்கூட்டப் படைகள் அவனது
ஊரையும் சீரழித்துச் சின்னாபின்னமாக்கியிருந்தன. கொதித்துக் கொண்டிருந்த அவ்விளைஞனை
செஞ்சேனை அரவணைத்துக்கொண்டது. தாய்நாட்டைக் கொள்ளையர்களிடமிருந்து விடுவிக்கும் பணியே
முதன்மையானது என்பதை உணர்ந்துகொண்டு தனது முழு ஆற்றலையும் மக்களின் எதிரிகளை வீழ்த்தும்
போரில் ஈடுபடுத்தினான். துப்பாக்கிக் குண்டுகள் அவனது உடலைத் துளைத்தன; பீரங்கிக் குண்டுத்
தாக்குதல் அவனை மரணத்தின் வாயிலில் கொண்டு நிறுத்தியது. ஆனால், இலட்சியத்தில் உறுதியும்,
போராட்டக் குணமும் கொண்ட அவ்விளைஞனை சாவின் கைகள் தொட மறுத்தன. புத்துயிர் பெற்ற போர்வீரனாக
மீண்டும் போர்க்களத்திற்குத் திரும்பினான்.
ஆயினும்,
போரில் ஏற்பட்ட காயங்களால் பாதிக்கப்பட்ட உடல் அவனது மனோ வேகத்திற்கு ஈடுகொடுக்க மறுத்தது.
கடுமையான உடல்வலியிலும், வேதனையிலும்கூட ஓய்வை நாடுவதை அவன் மனது வெறுத்தது. புதிய
சமூகத்தை நிர்மாணிக்கும் வேலையில் கடுமையாக ஈடுபட்டான். ஆனாலும் படிப்படியாக அவனது
உடல் செயலிழந்து கொண்டு வந்தது. இறுதியில்
கண்பார்வையையும் இழக்க நேரிட்டது. எத்தகைய அசாதாரண மன உறுதி படைத்த மனிதனையும்
வீழ்த்திவிடும் அந்த இக்கட்டான நிலையையும் பாவெல் துணிச்சலுடன் எதிர்கொண்டான். உடல்
உறுப்புக்கள் செயலிழந்து கண்பார்வையும் பறிபோன அந்த நிலையில் அவனது இலக்கிய மனம் விழித்துக்கொண்டது.
இந்த நாவல் பிறந்தது. ஆம்! இது கதையல்ல; தனது இளமையை, தனது வாழ்வை தாய்நாட்டின் சேவைக்கு அர்ப்பணித்த ஒரு மாவீரனின்
வாழ்க்கை.
மண்ணின்
ஈரமும், மக்களை நேசிப்பவர்களின் வீரமும்தான் இன்னும் இவ்வுலகில் உயிர்களைக் காத்துக்கொண்டிருக்கின்றன.
இந்த வீர உணர்வுதான் பகத்சிங்கையும், அவரது தோழர்களையும் வெள்ளையனுக்கெதிராகப் போராடத்
தூண்டியது. இரண்டாம் உலகப் போரில் கொடுங்கோலன் ஹிட்லரை வீழ்த்தி பாசிசத்தின் கோரப்பிடியிலிருந்து
உலகைக் காத்தது பொதுவுடைமைப் போர்வீர்ர்கள் கொண்டிருந்த மண்ணின், மக்களின் மீதான நேசம். .இன்றைய சூழலில்
பன்னாட்டு நிறுவனங்களாலும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளாலும் சூறையாடப்பட்டு தமது வாழ்க்கையை
இழந்து நிற்கும் மக்களும், தனது வளங்களை இழந்துகொண்டிருக்கும் நம் தேசமும் நம்மிடம்
கோரி நிற்பது இந்த உணர்வுகளையன்றி, வேறென்ன?
ஆசிரியர்
- நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி
கிடைக்குமிடம்
:
கீழைக்காற்று
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
044-28412367 10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
3 comments:
நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி...
அப்படியே அதன் விலையையும் குறிப்பிட்டு இருந்தா... உதவியாக இருந்திருக்கும்..ம்..
கருத்து தெரிவித்த திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி.
தோழர் வலிப்போக்கன்,
வீரம் விளைந்தது பதிப்பை வேறு வேறு பதிப்பகத்தினர் வெளியிடுகிறார்கள். நான் ரூ. 100 சில மாதங்களுக்கு முன்பு வாங்கினேன். வேறு ஒரு தோழர் கனமான அட்டை பைண்டிங் போட்ட புத்தகத்தை ரூ. 250க்கு வாங்கியதாக தெரிவித்தார். குழப்பமாக இருந்ததால் குறிப்பிடவில்லை.
Post a Comment