Jul 25, 2015

தொடரும் பள்ளி வாகன விபத்துக்களும், அருகமை பள்ளியும்!


(படம் : 1. விபத்துக்குள்ளான செட்டிநாடு பள்ளியின் பேருந்து!
2. இறந்து போன வேலம்மாள் பள்ளி மாணவன் திவாகர்!)

குறிப்பு : பள்ளி வாகனங்களை ஓட்டும் வாகன ஓட்டிகள் வேகமாகவும், குடித்துவிட்டும் பொறுப்பில்லாமல் ஓட்டுகிறார்கள். வாகன ஓட்டிகளை தனியார் பள்ளிகள் பொறுப்போடு தேர்ந்தெடுப்பதில்லை. அதனால், அரசு இதில் அக்கறை செலுத்தவேண்டும் என கீழே உள்ள கட்டுரையில் கோரிக்கை வைக்கிறார்.
கட்டுரையில் வரும் முதல் விபத்தில் திருப்பத்தூர் மானகிரியிலிருந்து கிளம்பிய பள்ளி பேருந்து சிங்கம்புனரிக்கு செல்லும் வழியில் விபத்து நடந்திருக்கிறது. இந்த இரண்டு ஊருக்கும் தொலைவு 50 கி.மீ. இவ்வளவு தூரம் பிள்ளைகள் தினமும் போய் வந்தால், குழந்தையின் உடல்நிலை என்னவாவது?

சில மாதங்களுக்கு முன்பு, நாலாவது படிக்கும் திவாகர் திருவள்ளூர் மாவட்டம் மதனஞ்சேரியிலிருந்து பொன்னேரி வேலம்மாள் பள்ளிக்கு தினமும் 55 கி.மீ தூரம் அதிகாலை 4.30க்கு கிளம்பி, இரவு 7.30 க்கு வீட்டுக்கு திரும்ப வருவான். அசதியில் பேருந்தில் தூங்குவது வழக்கம். அன்றைக்கும் தூங்கிய பொழுது, பள்ளத்தில் வேன் தடுமாறிய பொழுது, திவாகரின் கழுத்து வேனில் இருந்து வெளியே வந்த பொழுது, எதிரே வந்த இன்னொரு வண்டியில் இடித்து இறந்துபோனான். இதை விபத்து என்பீர்களா? தனியார்மய கல்வியால் நடந்த கொலை என்பது தான் சரி!

இன்னும் எத்தனை திவாகர்களை நாம் பலி கொடுக்கப் போகிறோமோ? அருகமை பள்ளி, தரமான பள்ளி, அரசு இலவச கல்வி என்ற கோரிக்கைகள் வலுப்பெறவேண்டும். இந்த திசை வழியில் நமது போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை

*******

போதையில் பறக்கும் பள்ளி வாகனங்கள்: பதறி தவிக்கும் குழந்தைகள்!
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று காசை பார்க்காமல் பெற்றோர்கள், பள்ளி வாகனத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், தற்போது பள்ளி வாகனங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருவது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பள்ளி வாகனங்களுக்காக தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், அரசு அதிகாரிகள் பள்ளி வாகன விசயத்தில் தொடர்ந்து காட்டி வரும் அலட்சியம்தான், இன்று பள்ளி வாகனங்களின் தொடர் விபத்துகளுக்கு காரணமாக அமைந்து வருகின்றன. கடந்த வாரம் மட்டும் காரைக்குடியில் பள்ளி வாகன விபத்தும், அதற்கு மறுதினம் பெரம்பலூரில் பள்ளி வாகன விபத்தும் நடந்து இருப்பது பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி அருகே உள்ள மானகிரியில் செயல்படும் 'செட்டிநாடு இண்டர்நேஷனல் பள்ளி'யில் பயிலும் மாணவர்களை ஏற்றிக் கொண்டு, சிங்கம்புனாரி என்ற ஊருக்கு அந்த பள்ளி வாகனம் சென்று கொண்டு இருந்தது. பள்ளி வாகனத்தை ரத்ன குமார் என்பவர் ஓட்டினார். பள்ளி வாகனத்தில் மொத்தம் முப்பத்தி ஐந்து குழந்தைகள் இருந்துள்ளனர்.
திருபத்துாரில் இருந்து சிங்கம்புனாரி செல்லும் வழியில் காரையூர் என்ற இடத்தில் அதிவேகமாக சென்ற பள்ளி வேன், கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அருகில் இருந்த மரத்தில் மோதி பலத்த சேதம் அடைந்தது. சம்பவ இடத்திலே ஓட்டுனர் ரத்னகுமார் மரணம் அடைந்தார். அந்த சம்பவத்தில் இருபத்தி ஐந்து குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அதில் நான்கு குழந்தைகள் நிலை இன்று வரை பரிதாபமாக உள்ளது. அதேபோல் அதற்கு மறுதினமே பெரம்பலுாரில் தனலெட்சுமி சீனிவாசன் பள்ளி வாகனம் சாலையில் கவிழ்து விபத்திற்குள்ளானது. அதுவும் அதிவேகமாக சென்றாதால்தான் இந்த விபத்து நிகழந்துள்ளது.

அதிவேகமாக பள்ளி வாகனங்களை இயக்கியதுதான் பெரிய தவறு என்று கூறப்பட்டாலும், காரையூர் விபத்தில் பள்ளி வாகன ஒட்டுனர் மது அருந்தி இருந்தது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளியில் மதிய ஒய்வு நேரத்தில் மது அருந்தி தூங்கியுள்ள ஓட்டுனர், அந்த போதையில்தான் வாகனத்தை இயக்கி, பிஞ்சு குழந்தைகளின் உயிரோடு விளையாடியுள்ளார். அதற்கு பின்தான் பள்ளி வாகன ஓட்டுனர்களை பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் உத்தரவிட்டனர்.
இ்ந்நிலையில், காரைக்குடியில் உள்ள லீடர்ஸ் பள்ளியின் வாகனம் ஒன்று நேற்று காரைக்குடி நகர் பகுதியில் அதிவேகமாக சென்றுள்ளது. சிக்னலில் கூட நிற்காமல் மாணவர்களை ஏற்றி கொண்டு சென்ற அந்த வானத்தை பார்த்த போக்குவரத்து காவல்துறையினர், அதனை விரட்டி பிடித்து ஓட்டுனரிடம் விசாரணை செய்ததில், அந்த ஓட்டுனர் மது அருந்தி இருப்பது தெரியவந்துள்ளது.

ராமு என்ற அந்த ஓட்டுனர் சில நாட்களுக்கு முன்தான் அந்த பள்ளியில் ஓட்டுனராக பணிக்கு சேர்ந்துள்ளார். அதற்கு முன்பு ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார். மதியம் ஓய்வாக இருந்த நேரத்தில் பள்ளி வாகனத்திலேயே மது அருந்திவிட்டு, மாலை அந்த வாகனத்தில் மாணவர்களை ஏற்றி வந்துள்ளார். அந்த ஒட்டுனரை கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். காவல்துறையினர் அந்த வாகனத்தை மடக்கி பிடித்த பொழுது, அந்த வாகனத்தில் பத்துக்கும் அதிகமான பள்ளி குழந்தைகள் இருந்துள்ளனர்.

பள்ளி வாகனங்களுக்கு ஓட்டுனர்களை நியமிக்கும் பொழுது அந்த ஓட்டுனர்களின் நன்னடத்தையை நிர்வாகம் பார்ப்பது இல்லை. அதோடு இளவயதுடைய ஓட்டுனர்களை நியமித்தால் அவர்கள் வேகத்தை கட்டுப்படுத்த விரும்புவதில்லை.பல பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுபாட்டு கருவியே செயல்படாமல் உள்ளது. அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அதன் விளைவாகத்தான் பள்ளி வாகனங்களின் விபத்து தற்பொழுது அதிகரித்து வர காரணமாகி வருகிறது.
இனிமேலும், அரசு அக்கறை காட்டாவிட்டால் இதனால் ஏற்படும் விபரீதம் காலத்தால் அழியாத சுவட்டை அரசுக்கு ஏற்படுத்திவிடும் என்பது மட்டும் நிதர்சனம்.

 - விகடன் - 21/07/2015

1 comment:

வலிப்போக்கன் said...


இன்னும் பல திவாகர்களை பலியாவதை தடுக்க வேண்டும் என்றால் அருகமை பள்ளி, தரமான பள்ளி, அரசு இலவச கல்வி - இவைதான் நிரந்தர தீர்வு!