Jun 27, 2014

மேரியம்மா!



புதுக்கோட்டை அருகே ஒரு கிராமம். சென்னையில் 2 பஸ் வைத்து பங்குதாரருடன் இணைந்து தொழில் செய்தவரை திருமணம் முடித்து சென்னைக்கு வந்த பொழுது மேரியம்மாவிற்கு வயது 19.

பணப்புழக்கம் இருந்ததால், தினமும் குடி, வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. வந்தால் திட்டு அடி.

10 வருடங்களில் இரண்டிரண்டு வயது வித்தியாசத்தில் இரண்டு பெண் பிள்ளைகள். ஒரு பையன். குடி உடம்பை உருக்கி 10வது ஆண்டின் முடிவில் நோய்வாய்ப்பட்டு இறந்தே போனான் கணவன்.

உலகம் தெரியாது. என்ன செய்வதென்றே தெரியாமல், மூன்று குழந்தைகளோடு தனியாளாய் நின்றார் மேரி.

தட்டுத்தடுமாறி நிற்கும் பொழுது ஒரு அம்மா ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விட்டார். 12 மணி நேரம் வேலை. ஒரு நாளைக்கு சமைத்தால் மூன்று நாளைக்கு வைத்துக் கொள்வார்கள் சில நாட்கள் பட்டினி என நகர்ந்தது வாழ்க்கை.

ஏற்றுமதி நிறுவனத்திலிருந்து விலகி,வீட்டு வேலைகள் செய்ய ஆரம்பித்தார். முதல் பெண் பத்தாவது படிப்பதை நிறுத்தி வேலைக்கு சென்ற பிறகு தான் மூன்று வேளை சாப்பாடே கிடைத்தது!

இரண்டு வருடங்கள் கழித்து சின்ன பெண்ணை படிப்பிலிருந்து நிறுத்தி ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் 12 மணி நேர வேலை சிறுக சிறுக சேர்த்து மூத்தப் பெண்ணை திருமணம் முடித்துக்கொடுத்தனர்.  மேரி அம்மாவும், சின்ன பொண்ணும் வேலைப் பார்த்து, கடைசி பையனை படிக்க வைத்து வருகின்றனர்.

ஊருக்கு சென்ற பொழுது, பெண்பிள்ளைகளை வேலைக்கு அனுப்பி பிழைச்சுட்டு இருக்கா! என யாரோ ஒரு உறவு காதுபட பேச, அழுது அழுது அந்தம்மாவிற்கு கண்ணீர் வற்றிப்போய்விட்டது!

ஆண் சம்பாதிக்கனும் பெண் வீட்டைலிருந்து வேண்டிய ’பணிவிடைகளை’ செய்யனும் என்று சமூகம் சொல்கிறது. ஒரு வேளை புருஷன் ஓடி போய்விட்டால், இல்லை செத்து போய்விட்டால், ஊதாரியாக இருந்தால் அங்கு தான் மேரி அம்மாக்கள் உருவாகிறார்கள். மேரியம்மா வைராக்கியமாக இருந்ததால் போராடி வந்திருக்காங்க, வாழ்க்கையில் ஒரு இடத்தில் மனம் சோர்ந்திருந்தாலும்   குடும்பத்தோடு தற்கொலை செய்திருப்பார்கள். ஆணாதிக்கமும், பெண்ணடிமைத்தனமும் இருக்கும் வரை மேரி அம்மாக்கள் உருவாவதை தடுக்க முடியாது. சமூக விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுத்து அதனோடு ஆணாதிக்கத்தையும் எதிர்த்து போராடுவது தான் இதற்கு தீர்வு.

Mar 17, 2014

வெளிநாட்டில் தவிக்கும் வீட்டு தொழிலாளிகள்!

போலி ஏஜெண்டுகளிடம் சிக்கி வெளிநாட்டில் தவிக்கும் வீட்டு வேலைத் தொழிலாளர்கள்- தாய்நாட்டிற்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் அவலம்

போலி ஏஜெண்டுகள் மூலமாக வெளிநாட்டில் வீட்டு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் அங்கு பல்வேறு துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். தாய்நாட்டுக்கு திரும்பவும் வழியில்லாமல் தவித்து வருகிறார்கள்.

சவூதி , துபாய், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்குக் குறைந்த சம்பளத்தில் வீட்டு வேலை செய்வதற்காக பலர் போலி ஏஜெண்டுகளால் அழைத்துச் செல்லப்படுகி றார்கள். அவ்வாறு வேலைக்குச் செல்லும் பெரும்பாலான தொழிலாளர்கள் தமிழகம், ஆந்திரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்க ளாகவே உள்ளனர். இந்திய அரசின் சட்டத்தின் படி 30 வயதில் இருந்து 50 வயதுக்கு உட்பட்ட வர்கள் தான் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல முடியும். ஆனால் போலி ஏஜெண்டுகள், போலி பிறப்பு சான்றிதழ் மூலம் பலரையும் வேலைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

பல ஏஜெண்டுகள்

தமிழகத்தில் இருந்து வீட்டு வேலைக்கு தொழிலாளிகளை அழைத்துச் செல்லும் உள்ளூர் ஏஜெண்டுக்கும், வெளிநாட்டில் இருக்கும் ஏஜெண்ட்டுக்கும் இடையில் பல துணை ஏஜண்ட்டுகள் உள்ளனர். இதனால் தொழிலாளர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் கூடத் தங்களுடைய குடும்பத் தினருக்குத் தெரிவிக்க முடியாத நிலை உள்ளது.
குவைத் நாட்டில் வீட்டு வேலைக்குச் சென்று தப்பித்து வந்துள்ள பார்வதி சேகர் என்பவர் இதுகுறித்து ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
நான் புதுச்சேரியில் உள்ள கனகசெட்டிக்குளத்தில் வசித்து வந்தேன். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23 ம் தேதி அப்துல் என்பவர் வீட்டில் வேலை செய்வதற்காக குவைத்திற்கு சென்றேன். அங்குச் சென்றதும் நான் வேலை செய்ய வேண்டிய வீட்டின் முதலாளி அப்துல் என்னைக் காரில் ஏற்றிக் கொண்டு ஜமிலா என்பவருடைய வீட்டில் இறக்கிவிட்டார். பிறகு இதுதான் நான் வேலை செய்ய வேண்டிய வீடு என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
நான் வேலை செய்த வீட்டில் 12 அறைகள் இருந்தது. தினமும் அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய வேண்டும். உட்காரக்கூட நேரம் இருக்காது. இரவு 2 மணிக்குத் தூங்கி மீண்டும் 5 மணிக்குள் எழுந்துவிட வேண்டும். நேரத் திற்கு சாப்பிடக்கூட முடியாது. கழிவறையில் தான் சிறிது நேரம் ஓய்வு கூட எடுக்க முடியும்.

அங்கு வேலை செய்யும் போது காலில் அடிபட்டு விட்டது. காலில் அடிபட்டு விட்டதாலும், சம்பளம் தராததாலும் என்னை இந்தியாவிற்கு அனுப்பிவிடும் படி கேட்டேன். அதற்கு நம் நாட்டுப் பணத்தில் ரூ 67 ஆயிரம் செலுத்திவிட்டுப் போகும்படி கூறினார்கள். அதற்குச் சம்மதித்த பிறகு தான் என்னுடைய மகனுக்குப் போன் செய்துகொடுத்தார்கள். பணத்தை கொடுத்த பிறகே அங்கிருந்து வர முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார். “இவரைப்போல் சுமார் 7 லட்சம் தொழிலா ளர்கள் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் பலர் மீண்டும் தாய் நாட்டிற்கு வரமுடியாமல் தவிக்கின்றனர். இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள ஏஜெண்டுகளை முறைப்படுத்த வேண்டும்” என்று தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வளர்மதி கூறுகிறார்.

தேவயானி கோப்ரகடே தன்னிடம் வேலை செய்த வீட்டு வேலை தொழிலாளி சங்கீதாவிற்கு குறைந்த சம்பளம் அளித்தார் என்று அமெரிக்க காவல் துறை அவரை கைது செய்தது. இதனால் நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. தேவயானியைக் கைது செய்த விதத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாதோ அதே போல் குறைந்த கூலி கொடுத்ததையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு அதிகாரிக்காகக் குரல் கொடுக்கும் இந்திய அரசு அதே சமயம் பல லட்சம் தொழிலாளர்கள் குறைந்த கூலியில் வெளிநாடுகளில் வேலைக்கு அமர்த் தப்படுவதையும் தடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களுடைய கருத்தாக உள்ளது.

- நன்றி : தி இந்து