Aug 30, 2015

சிறையின் கொடுமையை வெளியில் கொண்டு வந்த ஆட்கொணர்வு மனு!

பச்சையப்பா கல்லூரி மாணவர்களுக்காக நாம் நடத்திய சட்ட போராட்டத்தில்.....

சிறையின் கொடுமையை வெளியில் கொண்டு வந்த ஆட்கொணர்வு மனு

சிறைவைப்பு என்பது நீதிமன்ற பாதுகாப்பு. அங்கு அவர்களுக்கு ஏதாவது விபரீதம் நடந்தால், நிராயுதபாணியான அவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ளமுடியாது! வெளியில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கமுடியாது! சிறை சென்ற மாணவர்களை உள்ளே வைத்து அடிக்கிறார்கள், மிரட்டுகிறார்கள் என்றால், நீதிமன்றம் தானே பொறுப்பாக முடியும். அதனால், மாணவர்களின் உண்மைநிலையை அறிய, மாணவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துவரவேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையோடு ஆட்கொணர்வு மனு ஒன்றை உடனடியாக தாக்கல் செய்தோம். வழக்கு மதியம் ஒருமணிக்கு வரும் என எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, ஜெயா அரசு வழக்குரைஞருடன் தனிப்பட்ட முறையில் பேசி, எந்தவித சலனமும் இல்லாமல் அடுத்த நாளைக்கு தள்ளிவிட்டு, சீட்டை விட்டு எழுந்துபோய்விட்டார்.

அடுத்தநாள் வெள்ளிக்கிழமை விசாரணையின் பொழுதும் பிரமாண பத்திரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கையெழுத்திட்டிருந்தும், கையெழுத்து இல்லை என காரணம் காட்டி, திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர். சிறையில் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆனதோ என பதைபதைத்து ஆட்கொணர்வு மனு நாம் தாக்கல் செய்தால், நீதிபதிகளோ அடித்த காயம் ’ஆறுவதற்கும்’, அடித்தவர்களை காப்பாற்றுவதற்காக ஜெயா அரசு பதில் ’தயாரிப்பதற்கும்’ கால அவகாசத்தை உருவாக்கி தந்தனர். நீதிபதிகளின் அலட்சியமானது சிறையில் போலீசார் நடத்திய கொடூரமான தாக்குதலை நியாயப்படுத்துவதாகவும், போலீசின் அடாவடித்தனத்தை அங்கீகரிப்பதாகவும், அப்பட்டமாக தெரிகிறது. நீதி ‘எல்லோருக்கும் பொதுவானது’ நம்புவோமாக!

ஆட்கொணர்வு மனுவை ஜவ்வாக இழுத்தடித்து ஒருவழியாக விசாரணைக்கு வந்தது. காயம்பட்ட மாணவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டுவரவேண்டும் என வாதிட்டோம். நீதிபதிகளோ ஜெயா அரசுக்கு தர்ம சங்கடமாகிவிடும் என வழக்கை தள்ளுபடி செய்வதிலேயே கவனமாய் இருந்தனர். நாம் வாதங்களால் நெருக்கும் பொழுது, ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காக, மாவட்ட நீதிபதி ஒருவரை சிறைக்கு சென்று விசாரணை செய்து, ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்” என உத்தரவிட்டார்கள்.


மாவட்ட நீதிபதியும் சிறையில் விசாரணை செய்தார். வெளியிலேயே ஜனநாயகம் என்றால் என்ன விலை? என்று கேட்கும் போலீசை, அதன் கோட்டையாக இருக்கும் சிறையில்? அடிப்பதெல்லாம் அங்கு சர்வசாதாரணம் என்றாலும், கைதிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு சாட்சி சொல்லப்பட்டிருந்தாலும், மாணவர்களை அடித்ததை சாட்சி சொன்ன அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். நீதிபதியும் வேறு வழியின்றி அறிக்கையில் பதிவு செய்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.


 மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

Aug 27, 2015

”ஜட்ஜய்யா நம்மள காப்பாத்துவார்”




டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் கைதான பச்சையப்பா கல்லூரி மாணவ தோழர்கள், கோவை, கடலூர், விருத்தாச்சலம், ஓசூர் என பல பகுதிகளில் கைதான மக்களுக்கும் தோழர்களுக்கு பெயில் எடுப்பதற்கான தொடர் முயற்சிகளில் நமது வழக்குரைஞர்கள் தோழர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த போராட்டத்தில்… ஒரு நிகழ்வு!

பச்சையப்பா கல்லூரி RSYF மாணவ தோழர்களை கைதாகும் பொழுது போலீசு கடுமையாக தாக்கியதை உலகமே பார்த்து காறித்துப்பியது.  சட்டவிரோதமாக காவல்நிலையத்திலும் மணல் நிரப்பிய பைப்பால் அடித்தது! அன்று இரவு மாணவர்களை ரிமாண்ட் செய்வதற்காக போலீசு நீதிபதி வீட்டிற்கு அழைத்துவந்தது!

ஊர் அடங்கியதும் இரவு 9.30 மணிக்கு நீதிபதியின் வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஏழு ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை வழங்கும் வழக்கில் உரிய காரணங்கள் இல்லாமல் ரிமாண்ட் செய்யக்கூடாது என உச்சநீதி மன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி வாதாடினோம். நீதிபதி அதை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. நீதிபதியிடம் கையெழுத்து வாங்கி, மாணவர்களை சிறையில் அடைப்பதிலேயே காவல்துறை கண்ணும் கருத்துமாய் இருந்தது. 


கைது செய்த பொழுதும், காவல்நிலையத்திலும் காட்டுமிராண்டித்தனமாக அடித்ததை எடுத்து சொல்லியும் நீதிபதிக்கு பதைபதைப்பு வரவில்லை.  இவ்வளவு மோசமாக தாக்கியிருக்கிறீர்களே என போலீசை நீதிபதி கண்டிக்கவுமில்லை. நின்றுகொண்டே பேசிக்கொண்டிருந்த நீதிபதியை, காவல்நிலையத்தில்  மாணவர்களை அடித்ததை ஒவ்வொருவராக சொல்வதை உட்கார்ந்து விரிவாக பதிவு செய்யவேண்டும் என கோரினோம். “நானும் மனுசன் தானே!” என சொல்லி, சீக்கிரம் முடிச்சுட்டு தூங்க போகணும் என  ஒரு இயந்திரத்தை போல போலீசு கேட்ட  கையெழுத்தை போட்டுவிட்டு கிளம்புவதிலேயே இருந்தார்.   

காவல்நிலையத்தில் போலீசு அடிப்பதையெல்லாம் இவ்வளவு பெரிதுபடுத்துகிறோம் என அசுவாரசியமாய் கேட்டு பதிவு செய்தார்.  அடித்ததை பதிவு செய்யும் பொழுது மாணவர்களை நீதிபதி “வா! போ!” என ஒருமையில் அழைத்தார்.  பொது நோக்கத்திற்காக போராடிய அந்த மாணவர்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. போலீசை போல ஏன் நடந்துகொள்கிறீர்கள்? மரியாதையாக அழையுங்கள் என பல வழக்குரைஞர்களும் போராடிய பிறகுதான், ஏற்கனவே கேட்ட மருத்துவ சிகிச்சை மற்றும் உணவிற்கு அனுப்பிவைத்தார். எல்லா மாணவர்களுக்கும் வெளிகாயங்களுக்கு மட்டும் பெயருக்கு டிஞ்சர் போட்டு, உள்நோயாளியாக அனுமதித்து விடக்கூடாது என மருத்துவர்களை டீல் செய்து, திரும்ப அழைத்துவந்தார்கள்.

நீதிபதியின் நடவடிக்கையை கவனித்த பொழுது, சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் மக்களை அடிக்கும் ஒவ்வொரு போலீசுக்கும் ஐ.ஜி. நம்மள காப்பாத்துவார் என்பதை விட, “ஜட்ஜய்யா! நம்மள காப்பாத்துவார்” என்ற நம்பிக்கை இருக்கும் என அப்பட்டமாக தெரிந்தது!
 
கொசுறு செய்தி : இரவு 9.30 மணி அளவில் நீதிபதி வீட்டிற்கு மாணவ தோழர்களை அழைத்து வந்த பொழுது, அரசை, போலீசை அம்பலப்படுத்தி முழக்கம் எழுப்பினார்கள்.  இதனால் பக்கத்து வீட்டில் தூக்கம் கலைந்த இன்னொரு நீதிபதி  வந்து மாணவர்களையும், நம்மையும் பார்த்து “தூக்கம் கலைக்கிறீர்களே!” என  விசனப்பட்டார். டாஸ்மாக் போராட்டம் அன்றைக்கு தமிழகம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்த பொழுது, தூக்கம் கலைத்ததற்காக கவலைப்படுகிறார்! நாம் பலரின் ’தூக்கத்தை’ கலைக்க வேண்டியிருக்கிறது!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை