Jun 8, 2007

இளமையின் கீதம் - நாவல் அறிமுகம்
நான் படித்த நூல்களில், சிறந்த புத்தகங்கள் என பத்து தேர்ந்தெடுத்தால், அந்த வரிசையில் இந்த புத்தகம் நிச்சயம் இடம் பெறும். இது கற்பனை நாவல் அல்ல. ரத்தமும், சதையுமான விடுதலைப் போராட்ட வரலாற்று நாவல்.

1930-களில் காலனிய நாடுகளில் அடிமைப்பட்டு கிடந்த மக்கள் தங்கள் மண்ணின் விடுதலைக்காக, ஏகாதிபத்திய நாடுகளை எதிர்த்து, போராடிக் கொண்டிருந்த காலம்.

நம் நாட்டில் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக, நாம் போராடிக் கொண்டிருந்த பொழுது, அதே காலக்கட்டத்தில் சீனாவில் ஜப்பான் ஆக்கிரமிப்பை எதிர்த்தும், நிலவிய மக்கள் விரோத அரசான கோமிண்டாங் ஆட்சியை எதிர்த்தும், விவசாயிகள், தொழிலாளர்கள், அறிவுஜீவிகள் பலரும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் எழுச்சியுடன் போராடிக்கொண்டிருந்தனர்.

சீன மாணவர்கள் எழுச்சியுடன் போராடிய போராட்டங்களில் நாவல் பயணிக்கிறது.

கதையின் நாயகி - டாவோசிங். நிலப்பிரபுத்துவ சமூகத்தால் பாதிக்கப்பட்டு, தற்கொலை வரைக்கும் சென்று, யதேச்சையாய் கம்யுனிஸ்டுகளிடம் அறிமுகம் கிடைத்து, கம்யூனிசத்தின்பால் ஈர்ப்பு ஏற்படுகிறது.

இடையிடையே கட்சியின் தொடர்புக்கான தொடர்ச்சியான போராட்டம். தவறான புரிதல்கள். நடைமுறை போராட்டங்களில் தெளிதல். இறுதியில், ஒரு பல்கலை கழக மாணவர் அமைப்பில், தலைமைக் குழுவில் பங்கு பெறுதல் - என்ற நகர்தலில்...

ஒரு தொடக்க நிலையில் புழு, அதன் பரிணாம வளர்ச்சியில் வண்ணங்களில் மிளிர்கிற, சுதந்திரமாய் வானில் பறக்கிற பட்டாம்பூச்சியாய் நிகழ்கிற நிகழ்வு டாவோசிங் வாழ்விலும் நிகழ்கிறது. சாதாரண பெண்ணாய், துயரங்களில் உழல்கிற பெண்ணாய் தொடக்கத்தில் இருக்கிற பெண்ணான டாவோசிங், பின்னாளில் துணிச்சலான, தியாக உணர்வு கொண்ட கம்யுனிஸ்ட் போராளியாய் மிளிர்கிறார்.

நாவல், பெண்களுக்கு சமூக விழிப்புணர்வு கிடையாது. நாட்டுப்பற்று கிடையாது. போராடும் ஆண்களையும் பின்னுக்கு இழுப்பவள் என்கிற தப்பான அபிப்ராயங்களை களைகிறது.

அன்று நிலவிய சீன சமூக நிலைமைக்கும், இந்திய சமூக நிலைமைக்கும் பெரிய வித்தியாசமில்லை. பெயர்கள் தான் வித்தியாசப்படுகிறது. நாவலில் வருகிற மனிதர்கள் நம் மனிதர்களாக தெரிகிறார்கள். நம் நாட்டில் நடக்கிற போராட்டம் என்ற உணர்வுதான் ஏற்படுகிறது. மொழிபெயர்ப்பு நாவல் என்ற உணர்வு வராத அளவிற்கு, மயிலை பாலு சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.

இவ்வாறு, 1949-ல் மாவோ தலைமையில், கம்யூனிஸ்டு கட்சியின் வழிகாட்டலில் விவசாயிகள், தொழிலாளர்கள், அறிவுஜீவிகள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்து மக்களும் போராடி, சீனா சுதந்திர மக்கள் சீனமாய் மலர்ந்தது.

நம் இந்தியாவில் 1947-ல் அகிம்சாமூர்த்தியின் தலைமையில், வெள்ளைக்காரன் தொடங்கி வைத்த காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டலில், அனைத்து தரப்பினரும் போராடி, சுதந்திர அடிமை இந்தியாவாக உருவானது.

இப்பொழுது, மீண்டும் முதலாளித்துவ சேறுக்குள் சீனா விழுந்துவிட்டது. மீண்டும் எழும். அபினி போதையில் பல நூற்றாண்டுகளாக கிறங்கி கிடந்தவர்களை மீட்டுக்கொண்டு வந்தவர்கள் தானே கம்யூனிஸ்டுகள். முதலாளித்துவ பாதையிலிருந்தும் மீட்டுவிடுவார்கள்.

நம்மை நினைத்தால் தான், கவலை பீறிடுகிறது. நிலவுகிற சட்டமன்றம், பாராளுமன்றம், நீதிமன்றம் நமக்கானது. மக்களாட்சிதான் நிலவுகிறது என்ற போதையிலிருந்து நாம் எப்பொழுது மீளப்போகிறோம்?


ஆசிரியர் - யாங்மோ

740 பக்கங்கள்

விலை - ரூ. 300/-

வெளியீடு


அலைகள் வெளியீட்டகம்,
25, தெற்கு சிவன் கோவில் தெரு,
கோடம்பாக்கம்,
சென்னை - 600 024.
பேச : 24815474