Jul 1, 2014

'தோல்' - நாவல் - ஒரு பார்வை!பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கையை பேசிய தொ.மு.சி. ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் துயர வாழ்க்கையைப் பேசிய டேனியலின் ’எரியும் பனிக்காடு’, உப்பளக வாழ்க்கைத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பகிர்ந்த ஸ்ரீதர கணேசனின் ‘உப்பு வயல்’,  திரையரங்கில் வேலை செய்யும் உதிரி பாட்டாளிகளான இளைஞர்களின் வாழ்க்கையைப் பகிர்ந்த பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’ என தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பேசிய தமிழ் நாவல்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதன் தொடர்ச்சியில் தோல் தொழிலாளர்களின் வாழ்க்கையை, இலக்கிய வரலாற்றில் ,முதன்முதலாகவும், அழுத்தமாகவும் பேசும் நாவல் செல்வராஜின் ’தோல் நாவல்’!

பர்ஸ், செருப்பு என தோலால் செய்த பொருட்கள் நம் எல்லோருக்கும் பிடித்தமானவை. காரணம் அவைகள் மிருதுவானவை. ஆனால், தோல் தொழிற்சாலையும், அதில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் மிக மிக கடினமானவை! துயரமானவை!

நாவல் சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் (1940 -1950) திண்டுக்கல்லை களமாக கொண்டு பயணிக்கிறது! தோல் தொழிற்சாலையில் தோல்களின் குடலைப் புரட்டும் நாற்றம்; சுண்ணாம்பு குழிக்குள் தோல்களை முக்கி நனைத்தெடுக்கும் பலமணி நேர வேலை; குறைவான கூலி! தொழிலாளர்கள் குறிப்பாக அருந்ததியர்களும், பறையர்களும் என தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதால், ஆண் தொழிலாளர்களுக்கு அடியும் உதையும், பெண் தொழிலாளர்களுக்கு  கூடுதலாக பாலியல் தொல்லைகளும், வன்முறைகளும் என நோய்களும், சாவுகளும், ஒடுக்குமுறைகளும் மிக மலிந்த வேலை! தொழிலாளர்களைப் பாதுகாக்க தொழிற்சங்கம் உருவாகிறது! முதலாளிகள் இன்னும் மோசமான ஒடுக்குமுறையை தொழிலாளர்கள் மீது ஏவுகிறார்கள்.

நடக்கும் வர்க்கப் போராட்டத்தில் தொழிலாளர்களுடன் இணைந்து போராடுகிற ஒவ்வொருவரும் வேறொரு வார்ப்பிற்கு ஆச்சர்யத்தக்க கையில் உருமாறுகிறார்கள். கந்துவட்டிக்காரனால் நடுத்தெருவில் அம்மணமாக்கப்படுகிற வீராயி, பின்னாளில் தொழிலாளிகளின் அணிக்கு தலைமை தாங்குகிறவராக மாறுகிறார். தொழிற்சங்க தலைவரை கொலை செய்ய அனுப்பப்படுகிற முதலாளியின் அடியாள் சந்தனத்தேவன் தொழிலாளர்களைப் பாதுகாக்கிற காவலராகிவிடுகிறார். பார்த்த பெண்களையெல்லாம் சூறையாடுகிற மேற்பார்வையாளன் முஸ்தபாவை அடித்து துவைக்கும் தொழிலாளி மாடத்தி!. தவறாக நடக்க முயன்ற முஸ்தாபாவை கொலை செய்துவிடுகிற தொழிலாளி சிட்டம்மா யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து நகர்ந்துவிடுகிறார். இந்த கொலையை தொழிற்சங்கவாதிகளை பழிவாங்க காவல்துறை முயலும் பொழுது, அவர்களை காப்பாற்றுவதற்காக தான் செய்த கொலையை ஒப்புக்கொள்கிற சிட்டம்மா!

மறுகாலனியாதிக்க சூழலில், மூலதனம் முன்பை விட மூர்க்கத்தனமாக தனது சுரண்டலை செய்துவருகிறது. தொழிலாளர்கள் சமரசமற்று போராடுகிற புரட்சிகர தொழிற்சங்கங்களில் இணைந்து போராடவேண்டிய நேரமிது! இந்த நாவல் வர்க்கப்போராட்டத்தின் பலன்களை நேர்மறையில் கற்றுத்தருகிறது! நம்பிக்கையை தருகிறது. நாவலில் நீதிமன்றம், நீதிபதிகள் குறித்து ஒரு நம்பிக்கையை ஆசிரியர் தருகிறார். கடந்த இருபது வருடங்களில் தொழிலாளர் விரோத, சமூக விரோத தீர்ப்புகளைத் தந்து நீதிமன்றங்கள் அந்த நம்பிக்கையை களைந்திருக்கிறார்கள்!

நாவலின் வடிவத்தை பொருத்தவரையில், பொதுவுடைமை இலக்கியவாதிகளின் பிரச்சார நெடிப்பற்றிய பிற இஸத்துக்காரர்கள் ‘கவலையை’ ஆசிரியர் தனது எழுத்தாற்றலால் போக்கியிருக்கிறார். நாவல் தொடங்கும் பொழுதே எத்தனை கதாபாத்திரங்கள், என்ன பாத்திரம் என வகைப்படுத்தி தந்திருக்கிறார். இவ்வளவு பெரிய நாவலில் ஓரிடத்தில் கூட புரிந்துகொள்வதில் எந்த சிக்கலும் இல்லை! நாவல் 2012ல் சாகித்திய அகாடமி விருதை வென்றிருக்கிறது! 

ஆசிரியருக்கு நமது வாழ்த்துக்கள்!

695 பக்கங்கள் 

விலை ரூ. 400 

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,