Dec 15, 2009

நானும் நீயும்!


நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்று கொண்டிருப்பாய் நீ

உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல் தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலோழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப்பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை.

- ஜெயபாஸ்கரன்

குறிப்பு : ஆனந்த விகடன் (20/05/2001)ல் வெளிவந்த இந்த கவிதை பிடித்து.. ஜெயபாஸ்கரனின் கவிதை தொகுப்பை வாங்கி ஆர்வமாய் படித்தேன். மற்ற கவிதைகள் வழா வழா!. இந்த ஒரு கவிதை மட்டும் தான் எனக்கு பிடித்திருந்தது.

Oct 30, 2009

பத்து வருடங்களாகப் போராடும் ஐரோம் சர்மிளா!



நன்றி : போராட்டம்

வரும் நவம்பர் 2, 2009 அன்று, மணிப்பூரைச் சேர்ந்த கவிஞரும், செயல் வீரருமான ஐரோம் சர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டத்தின் பத்தாவது ஆண்டு துவங்குகிறது. இந்திய அரசின் ஆயுத படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் (AFSPA) திரும்பப் பெறக் கோரி, அவர் கடந்த பத்தாண்டுகளாக போராடி வருகிறார்.

1958-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சட்டத்தின்படி, வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும், எவரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களது வீடுகளில் புகவும், சந்தேகத்தின் பேரிலேயே கூட சுட்டுக் கொலை செய்யவும் இந்திய இராணுவத்திற்கு அதிகாரம் உண்டு. இதற்கெதிராக சட்டப்பூர்வமாக கூட இராணுவத்தை தண்டிக்க முடியாது.

இந்திய இராணுவப் படைகள், இச் சட்டத்தின் அரவணைப்பில், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், கொலைகள், கட்டாய ஆட்கடத்தல்கள் என அட்டூழியம் செய்து வருகின்றன. இதன் மூலம் நாட்டிற்கே தலைகுனிவையும், மணிப்பூர் மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தையும் கொடுத்து வருகின்றன. “இச்சட்டம் ஒடுக்குமுறையின் சின்னமாக மாறி விட்டது. மக்களின் வெறுப்பிற்குரிய சட்டமாகவும், எதேச்சதிகாரம் மற்றும் பாகுபாட்டின் கருவியாகவும் விளங்குகிறது” என அரசாங்கம் நியமித்த ஜீவன் ரெட்டி கமிசனே கூறியுள்ளது. இனப் பாகுபாட்டிற்கான ஐ.நா கமிட்டி இச்சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

நவம்பர் 2, 2000 அன்று, மணிப்பூரிலுள்ள மாலோம் எனும் இடத்தில் பத்து குடிமக்களை, இந்திய இராணுவம் படுகொலை செய்ததைக் கண்டித்து, கவிஞர் ஐரோம் சர்மிளா தனது உண்ணாவிரதத்தைத் துவங்கினார். இந்தியக் குற்றவியல் சட்டம் 307-ன் படி அவர் தற்கொலை செய்ய முயன்றார் என நான்கு நாட்களில் அவரை கைது செய்தது இந்திய அரசு. இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்தது. அவர் சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க மறுத்து விட்டார்.

நவம்பர் 21, 2000 அன்று, அவரது மூக்கில் பிளாஸ்டிக் குழாய் சொருகப்பட்டு, அவரது உடலில் திரவ உணவு வலுக்கட்டாயமாக செலுத்தப்பட்டது. கடந்தப் பத்தாண்டுகளாக இந்தத் திரவ உணவின் மூலமாகவும், உச்சகட்ட பாதுகாப்புடன் தனிமைச் சிறையில் வைத்து அவரது உயிரை இந்திய அரசு கையில் பிடித்து வைத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் அவர் விடுதலை செய்யப்படுவதும், உடனடியாக மீண்டும் கைது செய்யப்படுவதும் என தொடர் நிகழ்வாகியுள்ளது.

அவரது இடையறாத போராட்டத்திற்கு ஆதரவாக மணிப்பூர் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், கடந்த டிசம்பர் 10, 2008 முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவரது உறுதிமிக்க போராட்டத்தின் பத்தாண்டு துவக்கத்தை, “நம்பிக்கை, நீதி மற்றும் அமைதியின் திருவிழா” என மக்கள் மத்தியில் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளனர். எனவே, அமைதியிலும், நீதியிலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் அவரது போராட்டத்திற்கு ஆதரவளிப்பது அவசியமானதாகும்.

(‘மணிப்பூர் சுதந்திரம்’ இணையத் தளத்தில் வெளியாகியுள்ள அறைகூவலின் அடிப்படையில்)

தொடர்புடைய பதிவுகள்

மணிப்பூர் : வீரத்தின் விளைநிலம்

இப்படித்தான் நடக்கின்றன என்கவுன்டர்கள் - நன்றி - தெகல்கா

Oct 12, 2009

தீபாவளி - தமிழர்களின் திருவிழா அல்ல! இந்துக்களின் திருவிழா!



முன்குறிப்பு : தீபாவளியை கொண்டாட தமிழ்நாடு தயாராகி வருகிறது. துணிக்கடைகளில் கூட்டம் பிதுங்கி வழிவதும், எந்த பக்கம் திரும்பினாலும், முதலாளிகள் தங்கள் பொருளை விற்று தீர்ப்பதற்கு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ரயில்களிலும், பேருந்துகளிலும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிரம்பிவிட்டன. இடம் கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிறார்கள். ஆங்காங்கே தீபாவளிக்காக வாங்கப்படும் வெடிகள் பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன. நிற்க.

தீபாவளி - தமிழர்களின் திருவிழா அல்ல! 'இந்துக்களின்' திருவிழா.

பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் மகாவீரர் இறந்ததை தான், நரகாசுரன் அழிந்ததாக கொண்டாடப்படுகிறது என வரலாற்று வழி ஆதாரங்கள் மற்றும் மரபு வழிப்பட்டும் விளக்குகிறார்

- பண்பாட்டு துறை ஆய்வாளர் தொ. பரமசிவன், இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தார், பிறகு, திருநெல்வேலியில் உள்ள மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியராகவும், பதிவாளராகவும் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். (தற்பொழுது எதுவும் பணியில் இருக்கிறாரா என தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்)

****

தீபாவளி

இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, என்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் 'தேசிய திருவிழா' போலக் காட்டப்படுகிறது. ஆயினும் தைப்பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்குகளோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை. தைப்பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா. இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவே தான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில் கூடத் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல் 'இந்து'க்களின் திருவிழாவாக அமைகிறது.

தமிழர் திருவிழா - இந்துக்களின் திருவிழா என்ற வேறுபாட்டினை எவ்வாறு பிரித்தறிவது? பழைய வழிபாட்டு முறைகளோடு கூடிய தொல் சமய வழிபாடுகள், இவற்றின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த சைவம், வைணவம் ஆகியவையே தமிழர்கைன் பழைய மதங்களாகும். இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகைத் திருவிழா, திருவாதிரைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி எனப்படும் சிவராத்திரித் திருவிழா, பங்குனி உத்திரம், சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ஆகியன சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக நிலைபெறுவதற்கு முன்னரே தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்களாகும். பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் இவை சைவ வைணவ மதங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தீபாவளி, தமிழ்நாட்டின் மரபுவழிப் பொருளாதாரத்தோடும் பருவ நிலைகளோடும் சடங்குகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழா. பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. தீபாவளியின் அடையாளமான வெடி, அதன் மூலப்பொருளான வெடிமருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்குப் பதினைந்தாம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீப+ஆவளீ) என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை. தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருகார்த்திகைத் திருவிழாவே.

நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும். இந்த நாளே பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் இருபத்து நாலாம்
தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த (இறந்த) நாளாகும். தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுகொண்டார். ஆகவே, பிராமணீய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மாகாவீரர் இறந்த நாளையே அக்கும். விசயநகரப் பேரரசான, 'இந்து சம்ராஜ்ஜியம்', தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தக் காரணம் பற்றியே தமிழ்ப் பிராமணர்களைவிட, தமிழ்நாட்டில் உள்ள தெலுங்குப் பிராமணர்களே தீபாவளியைப் 'பக்தி சிரத்தை'யுடன் கொண்டாடுகின்றனர். வடநாட்டு இந்துக்களிடமும் சமணர்களிடமும் இல்லாதபடி தமிழ்நாட்டில் இத்திருவிழா நாளன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது தமிழ்நாட்டில் நீத்தார் நினைவில் இறுதி நாளைக் குறிக்கும் சடங்காகும். தமிழ்நாட்டுப் பிராமணர்களும் இத்திருவிழாவை இறந்தார் இறுதிச் சடங்கு போல 'கங்கா ஸ்நானம்' செய்து கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. ஆகவே உண்மையில் இத்திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.

'நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா' என்று பாரதி தாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.

- தொ.பரமசிவன் எழுதிய பண்பாட்டு அசைவுகள்' லிருந்து. பக்.58, 59

****

மேலும் சில தகவல்கள்

தீபாவளி பற்றிய இன்னபிற கதைகள் - தமிழ்ச் சமணம்

தொ.பரமசிவன் எழுதிய நூல்கள் குறித்த தகவல்

தேவையில்லாத தாலியும், சில உருப்படியான தகவல்களும் - தொ.பரமசிவன் - நந்தவனம்

தமிழ் - தொ. பரமசிவன் எழுதிய நூல் அறிமுகம்

"தெய்வம் என்பதோர்" - தொ. ப. எழுதிய கட்டுரை தொகுதி குறித்த ஒரு பார்வை

நன்றி - குருத்து

Oct 1, 2009

கோவை பிரிக்கால் ஆலைத் தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து!



- புதிய ஜனநாயக முன்னணி வெளியிட்ட துண்டறிக்கையிலிருந்து...

கோவை பிரிக்கால் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!

முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்!

அன்பார்ந்த தொழிலாளர்களே!

கடந்த செப். 21ந் தேதியன்று கோவை பிரிக்கால் ஆலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ராய் ஜே.ஜார்ஜ் என்பவன் தொழிலாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டான். இதைக் கண்டு முதலாளிகள் சங்கம் "வன்முறை - பேராபத்து" எனறு அலறுகிறது. ஊடகங்கள்: தொழிலாளர்களை பயங்கரவாதிகளாகவும், வன்முறையாளர்களாகவும் சித்தரிக்கின்றன.

அமைச்சர்களோ தொழிலாளர்களின் வன்முறைப் போக்கை நசுக்கப் போவதாக முதலாளிகளின் அடியாட்கள் போல பேசுகின்றனர். கோவை நகரமே கலவரபூமி போல போலீசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் பயங்கரவாதிகளா? முதலாளி வர்க்கம் தினந்தோறும் தொழிலாளர்கள் மீது ஏவி விடுகின்ற கொடூரங்களை அனுபவித்த எவரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள். கோவை பிரிக்கால் ஆலை நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறைகளை அறிந்த எவரும் தொழிலாளர்களை வ்னமுறையாளர்கள் என்று சொல்லமாட்டார்கள்.

பிரிக்கால் ஆலையில் ஏற்கனவே ஐந்து தொழிற்சங்கங்கள் இருந்தும் முதலாளி விஜய் மோகனின் அடக்குமுறைகளுக்கு அவை பணிந்து போயின. எனவே, 2007-ஆம் ஆண்டில் பெரும்பான்மை
தொழிலாள்ர்கள் ஒன்று சேர்ந்து புதிய தொழிற்சங்கத்தை துவங்கினர். அன்று முதல் அதிகரித்து வரும் கொடுமைகள் - அடக்குமுறைகள் - பழிவாங்கும் நடவடிக்கைகள் கொஞ்ச நஞ்சமல்ல. கொத்து கொத்தாய் வேலை நீக்கம், பணியிட மாற்றம் என்று விரட்டப்பட்டனர். தொழிலாளர் ஆணையர் துவங்கி உயர்நீதி மன்றம் - உச்சநீதி மன்றம் வரை போட்ட எல்லா உத்திரவுகளையும் பிரிக்கால் முதலாளி மயிருக்குச் சமமாக மதித்தான்.

ஜனநாயக அமைப்பில் தொழிலாளர்களின் வன்முறையை சகித்துக் கொள்ள முடியாது என்கிறார் துணை முதல்வர் ஸ்டாலின். இவரது அரசாங்கம் போட்ட அரசாணையைக் கூட கழிப்பறை காகிதமாக தூக்கி எறிந்தானே விஜய்மோகன்! அது சகித்துக் கொள்ளக்கூடிய ஜனநாயகமா? 300 தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் மாதக்கணக்கில் பட்டினி போட்டானே, அது சகித்துக் கொள்ளக்கூடிய ஜனநாயகப் போக்கா? பல மணி நேரம் நின்று கொண்டே வேலை செய்ய நிர்ப்பந்தம் செய்யப்பட்டதால் பல பெண் தொழிலாளர்களுக்கு கருப்பை நீக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டதே, அது போற்றத்தக்க ஜனநாயக மாண்பா?

தொழிலாளர்களையும், சங்க முன்னணியாளர்களையும் மிரட்டுவது, அடியாட்களை வைத்து தாக்குவது, கருங்காலிகளை உருவாக்கி ஒற்றுமையை சீர்குலைப்பது, வேலைநீக்கம் செய்தும், சம்பளத்தை மறுத்தும் பட்டின் போடுவது ஆகியவை செய்து வந்த பிரிக்கால் முதலாளியின் கொடூரங்களை தாங்காமல் தொழிலாளர்கள் திருப்பி தாக்கிவிட்டனர். இதில் முதலாளியின் அடியாளாக செயல்பட்ட அதிகாரி ராய். ஜே.ஜார்ஜ் பலியானான். இதில் வருத்தப்படவோ, அனுதாபப்படவோ, அச்சப்படவோ ஏதும் இல்லை.

வன்முறையில் ஈடுபடும் தொழிற்சங்கங்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலறுகிறது சென்னை "மெப்ஸ்" உற்பத்தியாளர்கள் (முதலாளிகள்) சங்கம். ஒரு அதிகாரி கொல்லப்பட்டதற்கே இப்படிப் பதறுகின்றனர். முதலாளித்துவ பயங்கரவாதம் தினந்தோறும் பலநூறு தொழிலாளர்களைக் கொல்கிறதே இவைகளை எத்தனை நாட்களுக்குத் தான் சகித்துகொள்வது?

தொழில அமைதி நிலவுகின்ற தமிழகத்தில் பிரிக்கால் தொழிலாளர்களின் வன்முறை ஒரு களங்கம் என்கின்றன, முதலாளி சங்கங்கள். எப்பேர்ப்பட்ட மோசடி! "அமைதி பூங்கா" தமிழகத்தில் எந்த ஆலையிலாவது சங்கம் அமைக்க முடிகிறதா? சட்டப்படியான ஊதியம் - வேலை ப் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை கேட்கமுடிகிறதா?

தொழிற்சங்கம் துவங்கியதற்காக 188 தொழிலாளர்களின் வேலையைப் பறித்ததே ஹூண்டாய் கார் கம்பெனி, இதுதான் தொழில் அமைதியா? நெல்காஸ்ட் ஆலைக்குள் விபத்தில் செத்துப்போன ஒரிசா மாநிலத் தொழிலாளியை அனாதைப் பிணமாக தூக்கியெறிய அனுமதிக்க மாட்டொம் என்று போராடியது, நிரந்தர தொழிலாளர் சங்கம். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 108 தற்காலிக தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்தியும், சங்க முன்னணியாளர்கள் 34 பேரை சஸ்பெண்ட் செய்தும் மிரட்டி வருகிறது நெல்காஸ்ட் நிர்வாகம். வேலை நீக்கத்தை தடை செய்து உயர்நீதி மன்றம் போட்ட உத்திரவைக் கூட நிர்வாகம் மதிக்கவில்லை. இதுதான் தொழில் அமைதியின் லட்சணம்.

தொழிலாளர்கள் போராடினால் களங்கமாம்! பெரியபாளையம் பகுதியில் உள்ள சுஜானா ஸ்டீல்ஸ் ஆலையில் சங்கம் துவக்கியதற்காக ஆந்திராவுக்கு மாற்றப்பட்டவர்களை எவ்வித பாதிப்பும் இன்றி உள்ளூரியிலேயே வேலை கொடுக்க உத்தரவிட்டது, உயர்நீதிமன்றம். இந்த உத்திரவையும் கழிப்பறைக் காகிதமாக்கிய முதலாளி வர்க்கம் தான், தொழிலாளர்கள் விழித்தெழுவதை களங்கம் என்கிறது.

பிரிக்கால் தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முழங்குகின்ற மு.க.ஸ்டாலின், சில நாள்களுக்கு முன்பாக கடலூரில் "கெம்பிளாஸ்ட் சன்மார்" என்கிற ஆலையை பெருமையுடன் திறந்து வைத்தார். இந்த சன்மார் முதலாளி தன்னுடைய போன்னேரி ஆலையில் சங்கம் துவக்கியதற்காக 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலையைப் பறித்து பல மாதங்களாகப் பட்டினி போட்டு வருகிறான். இவனை சவுக்கால் அடித்து தண்டிப்பாரா, ஸ்டாலின்?

ஆளும் கும்பல் பேசுகின்ற ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி எல்லாம் தொழிலாளர்களை மிரட்டவே செய்கிறது! முதலாளிகளுக்கோ சலுகைகள் - மானியங்கள் - சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு தந்து பாதசேவை செய்கிறது. அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தொழிலாளர்களை பயங்கரவாதிகள் - வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்துகிறது. ஆனால், லட்சக்கணக்கான தொழிலாளர்களை வேலை பறிப்பு - பட்டினி, வறுமை என்கிற பேரழிவு ஆயுதங்கள் கொண்டு சித்திரவதை செய்து வரும் முதலாளிகளின் இழப்புக்கோ ஒப்பாரி வைக்கிறது.

பிரிக்கால் தொழிலாளர்கள் மட்டுமல்ல; வேறு எந்த ஆலைத் தொழிலாளர்களும் கலம் செய்வதற்குரிய சூழ்நிலைகளை முதலாளிகளே தோற்றுவிக்கின்றனர். எனவே, இந்தப் பிரச்சனை ஏதோ ஒரு ஆலையின் தொழிலாளர்களது பிரச்சினை என்று நாம் ஒதுக்கிக் கொள்ள முடியாது. பிரிக்கால் தொழிலாள்ர்களின் போராட்டம் இந்த தருணத்தில் ஒடுக்கப்பட்டால் அடுத்து வரும் நாட்களில் எந்த தொழிலாளர் போராட்டமும் நசுக்கப்படும். எனவே, பிரிக்கால் தொழிலாளர்களது போராட்டங்களை ஆதரிப்பது வரலாற்றுக் கடமை என்பதை உணர்வோம். முதலாளித்துவ பயங்கரவாததுக்கு முடிவு கட்ட பாட்டாளி வர்க்கமாய் அணிதிரள்வோம்!
கோவை பிரிக்கால் ஆலை அதிகாரி ராய்.ஜே.ஜார்ஜ் தொழிலாளர்களால் அடித்துக்கொலை!

* அன்றாடம் தொழிலாளர் மீது
பயங்கரவாத முதலாளிகள் செய்துவரும்
சித்திரவதை கொடுமைகளின்
எதிர்விளைவே இது!

*தொழிலாளி வர்க்கம் வருத்தப்படவோ,
அனுதாபப்படவோ, அஞ்சவோ
தேவையில்லை.

* நாள்தோறும் சட்டவிரோதமாக
ஆயிரக்கணக்கான கொடுமைகளை
செய்துவரும் பயங்கரவாத
முதலாளிகளை கைது செய்!

*பிரிக்கால் ஆலைத் தொழிலாளர்களின்
நியாயமான போராட்டம் வெல்லட்டும்!
முதலாளித்துவ பயங்கரவாதத்தை
முறியடிக்க அணிதிரள்வோம்!

தொடர்புக்கு :

அ. முகுந்தன்,
110, 2வது மாடி,
மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 24
பேச : 94448 34519
- பு.ஜ.தொ.மு
(புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி)

தொடர்புடைய சுட்டிகள்

பிரிக்கால் ஆலை அதிகாரி கொலை
முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கான எதிர் விளைவு


பிரிக்கால் தொழிலாளர்களின் போராட்டம்

Sep 17, 2009

நேபாள புதிய ஜனநாயகப் புரட்சி எதிர்கொள்ளும் சவால்கள்!


அரங்கக் கூட்டம்

செப்டம்பர் – 19 சனிக்கிழமை – மாலை 5 மணி

இடம்: தென்னிந்திய நடிகர் சங்கம்,
அபிபுல்லா ரோடு,
வள்ளுவர் கோட்டம் அருகில், தி.நகர்

தலைமை:

தோழர் அ. முகுந்தன்,
தலைவர் - பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு

சிறப்புரை:

தோழர் பசந்தா
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,
நேபாள ஐக்கியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலம் மன்னராட்சியை அகற்றிய நேபாள மாவோயிஸ்ட் கட்சி தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் ஆட்சியிலிருந்து விலகியது ஏன்?

புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கான தடைகள் என்ன?

கூட்ட ஏற்பாடு:


இந்திய – நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்

தொடர்புக்கு:

அ.முகுந்தன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
110, 2வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம்,
சென்னை-24
தொலைபேசி: 94448 34519

புதிய கலாச்சாரம் – 99411 75876

வினவு – 97100 82506

Aug 7, 2009

மனித உரிமை பாதுகாப்பு மையம் - சென்னை கிளை துவக்கவிழா!


நிகழ்ச்சி நிரல் :

நாள் : 08.08.2009, சனிக்கிழமை.

நேரம் : மாலை 5 முதல் 8.

இடம் : AK நாயக் பவன், 3வது தளம், 2வது லேன், பீச் ரோடு, GPO பின்புறம், சென்னை-1.

வரவேற்புரை :

தோழர் பொற்க்கொடி, வழக்குரைஞர் – சென்னை உயர்நீதிமன்றம்.

தலைமை உரை :

தோழர் ராஜு, வழக்குரைஞர் - விருத்தாச்சலம், மாநில ஒருங்கினைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம் (HRPC), தமிழ்நாடு.

சிறப்புரை :

தோழர் திருமலைராசன், வழக்குரைஞர் - ஈரோடு, முன்னாள் தலைவர் – தமிழ்நாடு புதுச்சேரி கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.

தோழர் சு.ப.தங்கராசு, பொதுச்செயலாளர் – புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி (NDLF), தமிழ்நாடு.

வாழ்த்துரை :

தோழர் துரை.சண்முகம், கவிஞர்,
மக்கள் கலை இலக்கிய கழகம் (PALA).

திரு மருதன், எழுத்தாளர்

திரு A.நடராசன், மூத்த வழக்குரைஞர்
சென்னை உயர்நீதிமன்றம்.
தோழர் சங்கரசுப்பு , வழக்குரைஞர்
சென்னை உயர்நீதிமன்றம்,
தமிழ் மாநில தலைவர்,
இந்திய மக்கள் வழக்குரைஞர் கழகம்.

திரு சகாதேவன், வழக்குரைஞர்,
சென்னை உயர்நீதிமன்றம்.

நன்றியுரை :


தோழர் கா.சுரேஷ், வழக்குரைஞர்,
சென்னை உயர்நீதிமன்றம்,
செயலாளர் – மனித உரிமை பாதுகாப்பு மையம் (HRPC),
சென்னை கிளை.

தொடர்புக்கு :

தோழர் கா.சுரேஷ், வழக்குரைஞர் ,
5/7, 2வது தெரு, ராஜாஜி நகர்,
வில்லிவாக்கம்,
சென்னை – 49.
அலைபேசி : 98844 55494


அனைவரும் வருக!!!

Apr 29, 2009

மே தினம் - பேரணி, பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நிரல்!



மேதினம் - நிகழ்ச்சி நிரல்

நாள் : 01.05.2009 (வெள்ளிக்கிழமை)

நேரம் : காலை 8 மணி

இடம் : திருவள்ளுவர் திடல், தஞ்சை

நிகழ்ச்சி : கொடிஏற்றுதல்

கொடி ஏற்றுபவர் :

தோழர் அ.முகுந்தன், தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி


காலை 9 மணி

ஓவியக்கண்காட்சி

திறந்து வைப்பவர் :

தோழர் துரை சண்முகம்,
மக்கள் கலை இலக்கிய கழகம்

பேரணி

மாலை 4 மணி

துவங்கும் இடம் : தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து.

முடியும் இடம் : திருவள்ளுவர் திடல், தஞ்சை.


பொதுக்கூட்டம்

மாலை 6 மணி

தலைமை :

தோழர் பரமானந்தன், ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

சிறப்புரை :

தோழர் சுப. தங்கராசு, பொதுச்செயலர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

தோழர் காளியப்பன், இணைச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்

புரட்சிகர கலை நிகழ்ச்சி :

மக்கள் கலை இலக்கிய கலைக்குழு

நன்றியுரை :

தோழர் நிர்மலா,
பெண்கள் விடுதலை முன்னணி

அனைவரும் வருக!

நிகழ்ச்சி ஏற்பாடு:

மக்கள் கலை இலக்கிய கழகம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.

மே தினம் - பேரணி, பொதுக்கூட்டம்!



அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

சிங்கள இனவெறி அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத்தமிழ் மக்கள் மீது இந்திய அரசு தொடுத்து வரும் மேலாதிக்கப் போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு உங்களை அறைகூவுகிறோம்.

இது ஒரு போலி ஜனநாயகத் தேர்தல் மட்டுமல்ல, ஈழத்தமிழ் மக்களின் பிணங்களைக் காட்டி பதவி வேட்டையாடும் பிணந்தின்னிகள் மொய்க்கின்ற அருவெறுப்பான தேர்தல்.

நாம் வழங்கிய அதிகாரத்தை வைத்தே ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்துவிட்டு, அந்த இரத்தம் தோய்ந்த கைகளை மறைத்துக் கொண்டு இந்திய ஆளும் வர்க்கம் நடத்தும் நயவஞ்சகத் தேர்தல்.

இந்தத் தேர்தலில் வாக்களித்தால் இந்திய அரசின் துணையுடன் ஈழத்தில் நடந்து வரும் இன அழிப்புப் போருக்கு நாம் ஒப்புதல் கொடுத்தவர்கள் ஆவோம். அல்லது ஈழப்பிரச்சினையைக் காட்டி ஓட்டுக் கட்சிப் பச்சோந்திகள் நடத்திவரும் பித்தலாட்டத்துக்குப் பலியான ஏமாளிகள் ஆவோம்.

“போலி ஜனநாயகத் தேர்லைப் புறக்கணிப்போம் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்! என்று நாங்கள் எப்போதுமே முழங்கி வந்திருக்கிறோம். இப்போதும் கூறுகிறோம். இத்தேர்தல் ஈழப்பிரச்சினையைத் தீர்ப்பது இருக்கட்டும், இது இந்திய மக்களுடைய எந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கிறது? ஓட்டுப் போடும் மக்களுக்கு நிலம், வீடு, கல்வி, வேலை, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள் எதையும் இந்த “ஜனநாயகம்” வழங்கியதில்லை. ஓட்டே போடாத அம்பானியையும் டாடாவையும்தான் இது உலகப் பணக்காரர்கள் ஆக்கியிருக்கிறது. இது பணநாயகம். நிலப்பிரபுக்களும் தரகு முதலாளிகளும் நம் மீது செலுத்தி வரும் சர்வாதிகாரம். எனவேதான் “எதிரிகளின் சர்வாதிகாரத்துக்கு வாக்களிக்காதீர்கள்” என்று நாங்கள் கூறுகிறோம்.

ஒவ்வொரு தேர்தலிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்கள் பொம்மையாக அமர்ந்திருக்க, மக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்படாத அதிகார வர்க்கம்தான் உண்மையில் ஆட்சி நடத்துகிறது. காட் ஒப்பந்தம் முதல் அணுசக்தி ஒப்பந்தம் வரை நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் அனைத்தையும் அதிகாரவர்க்கம்தான் தீர்மானிக்கிறது. “இந்த இரட்டை ஆட்சி மோசடிக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும்” என்று நாங்கள் கேட்கிறோம்.

இந்தப் போலி ஜனநாயகம் நமது நாட்டின் பெயரளவு இறையாண்மையையும் காவு கொடுத்திருக்கிறது. ஏகாதிபத்தியங்களின் ஆணைக்கிணங்க தனியார்மய தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தி, மறுகாலனியாக்க அடிமைத்தனத்துக்கு வழிவகுத்திருக்கிறது. சாதி மதவெறியை ஒழிக்கவோ, அத்தகைய வெறியர்களைத் தண்டிக்கவோ இந்தப் போலி ஜனநாயகத்தால் முடிந்ததே இல்லை. மாறாக, இந்து மதவெறி பாசிஸ்டு கொலைகாரர்களை ஆட்சியில் அமர்த்தி மதச்சார்பின்மையைக் குழி தோண்டிப் புதைத்திருக்கிறது. எனவேதான், “இந்த மோசடி ஜனநாயகத்துக்கு மயங்காதீர்கள்” என்று மக்களை எச்சரிக்கிறோம்.

இந்திய மக்களின் எந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் இந்தப் போலி ஜனநாயகத் தேர்தல் பயன்பட்டதில்லை. அவ்வாறு தீர்க்கப் போவதாகச் சவடால் அடித்து மக்களை ஏய்க்கவும், பதவிக்கு வந்து கொள்ளையடிக்கவும் ஓட்டுக் கட்சிகளுக்குத்தான் இந்தத் தேர்தல் பயன்பட்டு வருகிறது. அதோடு, இந்தத் தேர்தலில் ஈழப்பிரச்சினை இவர்களுடைய பதவி வேட்டைக்கு அதிருஷ்டப் பரிசாக அகப்பட்டிருக்கிறது.

எண்ணிப்பார்க்கவே மனம் கூசுகிறது. பீரங்கித் தாக்குதலுக்கும், விமானக் குண்டு வீச்சுக்கும் இரையாகி, அன்றாடம் நாடோடியாய் ஓடிக்கொண்டிருக்கும் மக்களின் பரிதவிப்பை, கூச்சமே இல்லாமல் தங்களுடைய பதவி பேரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகள்.

“ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப் போரை நிறுத்து! சிங்கள இனவெறி அரசுக்கு இராணுவ உதவிகளை நிறுத்து!” என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழக மக்கள் போராடத் தொடங்கியவுடனேயே ஓட்டுப் பொறுக்கிகளுக்கு மூக்கு வியர்க்கத் தொடங்கிவிட்டது.

மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம், சாலை மறியல், இராணுவப் பயிற்சி நிலையங்கள் முன் மறியல், மாணவர் போராட்டம், வழக்குரைஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு, தமிழகம் தழுவிய கதவடைப்பு, முத்துக்குமரன் போன்ற இளைஞர்களின் தீக்குளிப்புகள்..! கடந்த 6 மாதங்களாக தம்மால் இயன்ற எல்லா வடிவங்களிலும் தமிழக மக்கள் போராடினார்கள். ஆனால் தனது ஒரு மயிரைக் கூட அசைக்கவில்லை இந்திய அரசு.

தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருந்த போது, இந்திய அரசு தமிழகம் வழியாகவே இலங்கைக்கு ஆயுதங்கள் அனுப்பியது. சிங்கள இராணுவத்துக்கு சென்னையிலேயே பயிற்சியும் அளித்தது. “இந்தப் போரை வழிநடத்திக் கொண்டிருப்பது இந்திய இராணுவம்தான்; ஈழத்தமிழ் மக்களையும் புலிகளையும் துடைத்தொழிப்பதென்பது, ராஜபக்ஷே அரசின் கொள்கையாக மட்டும் இல்லை. இந்திய அரசின் கொள்கையும் அதுதான்” என்பது அம்பலமானது.

தமிழகமெங்கும் சோனியா, மன்மோகன் கொடும்பாவிகள் எரிந்தன. காங்கிரசார் விரட்டியடிக்கப்பட்டார்கள். உடனே, சொக்கத்தங்கம் சோனியாவின் அண்ணன் கருணாநிதிஜி வெறி கொண்டு பாய்ந்தார். பேசினால் ராஜத்துரோகம், படத்தை எரித்தால் தேசியப் பாதுகாப்பு சட்டம் என்று போலீசு இராச்சியத்தைக் கட்டவிழ்த்து விட்டார். அதன் உச்சகட்டமாக அரங்கேறியது சென்னை உயர்நீதி மன்ற போலீசு கொலைவெறியாட்டம்.

உங்களுக்கு நினைவிருக்கிறதா? 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜிநாமா செய்வோமென அன்று சவடால் அடித்தார்கள் தமிழகத்தின் ஓட்டுக் கட்சிகள். செய்தார்களா? சவடால்களையெல்லாம் இன்று கமுக்கமாக மறைத்து விட்டார்கள். ஈழத்தில் சண்டை ஓயவில்லை. ஆனால் இங்கே நாற்காலிகளுக்கான நாய்ச்சண்டை தொடங்கிவிட்டது. ஈழத்தமிழ் மக்களின் பிணம் இவர்களது பதவிச் சூதாட்டத்தின் பகடைக்காயாகிவிட்டது.

தனது வாரிசுகளின் தொழில் சாம்ராச்சியத்தையும் அவர்களது அரசியல் எதிர்காலத்தையும் உத்திரவாதப்படுத்திக் கொள்வதற்காக ஆட்சியையும் காங்கிரசுடனான கூட்டணியையும் இறுகப் பற்றிக் கொண்டு ஈழத்தின் இன அழிப்புப் போருக்கு விசுவாசம் காட்டுகிறார் கருணாநிதி. பதவிதான் அவரது உயிர் மூச்சு. “அமைதி வழியில் ஈழம் அமைந்தால் நான் அகமகிழ்வேன்” என்ற அறிக்கையெல்லாம் வெறும் பேச்சு. இதைவிட நயவஞ்சகமான பேச்சை நீங்கள் கேட்டதுண்டா?

போர் நிறுத்தத்தை வலியுறுத்துவதற்காக அன்புமணியைப் பதவி விலகச் சொன்னால் கடைசி இரண்டு மாதக் கல்லாப் பணத்தை அநாவசியமாகத் “தியாகம்” செய்ய நேரிடும் என்பதால், அன்புச் சகோதரியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு அதன் பின் கனத்த இதயத்துடனும் சூட்கேஸுடனும் மன்மோகன்சிங்கிடமிருந்து விடை பெற்றிருக்கிறார் மருத்துவர் அய்யா. “இனி நான் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தால் அது தாயுடன் உறவு கொள்வதற்குச் சமம்” என்று முன்னர் அறிவித்த இந்த அய்யா, இன்று கூச்சமே இல்லாமல் அம்மாவுடன் நின்று பல்லிளிக்கிறாரே, இவரைவிட இழிந்த பிழைப்புவாதியை உங்களால் காட்ட முடியுமா?

“போரென்றால் மக்கள் சாவது சகஜம்தான்” என்று கூறி ராஜ பக்ஷேவுக்கு ஜெயா வக்காலத்து வாங்கியபோது துடிக்காத வைகோவின் மீசை, நாற்காலி எண்ணிக்கையை ஜெ குறைத்தவுடன் துடிக்கின்றதே, இந்த “ஈன”மான உணர்வுக்கு எந்த அகராதியிலாவது விளக்கம் இருக்கிறதா?

இனப்படுகொலைக்குத் துணைநிற்கும் காங்கிரசை எதிர்த்து திருமாவளவன் திமிறி எழவில்லை, திருப்பி அடிக்கவில்லை, அத்துமீறவுமில்லை. இரண்டு நாற்காலிகள் கிடைத்தவுடன் தங்கபாலுவை சந்தித்து வருத்தம் தெரிவித்து அடங்கிவிட்டார் இந்த “தமிழ்நாட்டுப் பிரபாகரன்”! இவரது அடக்கத்தை விஞ்சவும் இங்கே ஆள் இருக்கிறதா?

யு.சி.பி.ஐ என்ற காங்கிரசு எடுபிடிக் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு ராஜீவின் இலங்கை ஆக்கிரமிப்புக்குக் கூஜா தூக்கிய தாவன்னா. பாண்டியன், போயஸ் தோட்டத்துக்குத் தாவினாரே, அவரது ஈழ ஆதரவு அவதாரத்தின் நோக்கமே இதுதான் என்று ஆறுமாதங்களுக்கு முன் நீங்கள் ஊகிக்க முடிந்ததா?

பல கட்சிகள் கொள்கைகளைத் துறந்தோடிய போதிலும், மார்க்சிஸ்டுகள் மட்டும்தான் ஈழப்பிரச்சினையில் ஜெயலலிதாவுடன் “கொள்கைபூர்வமான” கூட்டணியை அமைத்திருக்கிறார்கள் என்ற உண்மை உங்களுக்குக் கசக்கிறதா, இனிக்கிறதா?

மாமி ஜெயலலிதா, ஈழப்போரைத் தடுக்கத் தவறிய குற்றத்துக்காக முன்னர் கருணாநிதியைச் சாடியதும், பின்னர் போரை ஆதரித்ததும், காங்கிரசுக்குத் தூது விட்டு பேரம் படியாதென்று தெரிந்தபின் கூட்டணிக் கூஜாக்களின் ஆலோசனையின் பேரில் உண்ணாவிரதக் காட்சியில் நடித்ததும்… இந்தக் கேலிக்கூத்தெல்லாம் வேறெந்த நாட்டிலேனும் நடக்கக்கூடுமா?

ஈழத்தமிழர்க்கு ஆதரவாக அத்வானியை அறிக்கை விடவைக்கிறார் வைகோ. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவையில் பாரதிய ஜனதாவும் உறுப்பினராம்! தமிழ் விரோத பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு தமிழ்மக்கள் மத்தியிலேயே அங்கீகாரம் தேடித்தரும் பணியை யாரேனும் இதைவிட எளிதாக்க முடியுமா?

“முடியும்” என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். “ஈழ மக்களைக் கொன்று குவிக்கத் துணைபோகும் காங்கிரசை, நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்போம்” என்று கூறிக்கொண்டு, அத்வானியையும் ஜெயலலிதாவையும் ஆட்சியில் அமர்த்தும் ஆழ்வார் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் சில ஈழ ஆதரவாளர்கள்.

ஈழப்பிரச்சினையில் சுப்பிரமணியசாமி, சோவின் கொள்கைதான் பா.ஜ.க., அ.தி.மு.க.வின் கொள்கை. இது உலகத்துக்கே தெரியும். இந்த ஈழ ஆதரவாளர்களுக்குத் தெரியாது போலும்! வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது, “யாழ் கோட்டையில் சிக்கிக் கொண்ட 20,000 சிங்கள சிப்பாய்களை விடுவிக்காவிட்டால், இந்திய விமானப்படையை அனுப்புவோம்” என்று புலிகளை மிரட்டியது பா.ஜ.க அரசு. “அதே பாரதிய ஜனதாக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாளை ராஜபக்சேவை மிரட்டும்” என்று நம்மை இவர்கள் நம்பச் சொல்கிறார்கள். ராஜபக்ஷேவை மிரட்டுவது இருக்கட்டும், “காவிரித் தீர்ப்புக்குக் கட்டுப்படுமாறு” கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை அத்வானி கொஞ்சம் மிரட்டிக் காட்டுவாரா?

ஈழம், சேதுக்கால்வாய், காவிரி, ஒகேனக்கல், முல்லைப் பெரியார், மீனவர் படுகொலை.. என அனைத்துப் பிரச்சினைகளிலும் தமிழகத்துக்கு எதிரானதுதான், காங்கிர”, பா.ஜனதா மற்றும் போலி கம்யூனிஸ்டுகளின் நிலை. அதற்குத் துணை போவதுதான் பிற கட்சிகளின் நிலை. தீர்மானமான முடிவில் இவர்கள் ஒருபோதும் நின்றதில்லை.

ராஜ பக்ஷேவுக்கு துணை நிற்கும் காங்கிரசுடன் ராமதா”க்கும் திருமாவளவனுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லையாம்! வைக்கோவுக்கோ, ராஜ பக்ஷேயின் அக்கா ஜெயலலிதாவுடன் பிரச்சினையே இல்லை. ஆனால் இவர்கள் மூவரும்தான் ஈழத் தமிழர்களின் “காவல் தெய்வங்களாம்”! வெட்கக்கேடு!!

இந்தத் தேர்தல் முடியட்டும். இதில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், காங்கிரசு அல்லது பா.ஜ.க. அல்லது ஏதாவதொரு சந்தர்ப்பவாதக் கூட்டணிக்கு இவர்கள் சோரம் போவார்கள். ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்கவும் துணை நிற்பார்கள். இதுவரை நடந்து வருவதும் இனி நடக்கப் போவதும் இதுதான்.

இருந்தாலும் என்ன? டில்லியில் அதிகாரத்திலிருக்கும் கட்சிகளிடம் காவடி எடுத்து கருணை மனுக் கொடுப்பதன் மூலம் ஈழப்பிரச்சினையைத் தீர்த்துவிட முடியும் என்று நம்புகிறார்கள், ஈழ ஆதரவாளர்கள். டில்லி மனது வைத்தால் ஈழம் அமைந்து விடும் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.

தமிழகமே எதிர்த்தபோதும் இன்று சிங்கள அரசுக்கு இந்தியா துணை நிற்பது ஏன்? இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியல், பொருளாதார, இராணுவ ஆதிக்கத்தின் கீழ் இலங்கையை வைத்திருப்பதுதான் இந்திய அரசின் நோக்கம். உலகமயமாக்கத்தின் ஆதாயங்களால் முன்னிலும் பன்மடங்கு கொழுத்துவிட்ட அம்பானி, டாடா, பிர்லா, மித்தல், மகிந்திரா போன்ற தரகு முதலாளிகள் இலங்கையின் சந்தை முழுவதையும் கைப்பற்ற விரும்புகிறார்கள். தெற்காசியா முழுவதற்கும் ரூபாயை நாணயமாக்கி தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் துடிக்கிறார்கள். அவர்களுக்குத் தேவைப்படுவது போராளிகளும் போராட்டங்களும் இல்லாத அமைதியான இலங்கை. அந்த சுடுகாட்டு அமைதியை நிலைநாட்டத்தான் ராஜபக்ஷேவுக்குத் துணை நிற்கிறது இந்திய அரசு.

இந்திய ஆளும்வர்க்கம் விரும்பாத எதையும் எந்தக் கட்சியின் ஆட்சியும் செய்யப்போவதில்லை. இந்திய மண்ணை பன்னாட்டு முதலாளிகளுக்குப் பிடுங்கிக் கொடுக்கும் இந்த ஓட்டுப் பொறுக்கிகளா, ஈழத்தமிழர்களின் உரிமைக்காக இந்தியத் தரகு முதலாளிகளின் நலனை விட்டுக் கொடுப்பார்கள்?

தெற்காசியப் பகுதியில் தமது செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆயுதமும் நிதிஉதவியும் அளித்து வரும் இன்றைய சூழலில், ராஜபக்சேவை அரவணைக்காமல், ஈழத்தமிழ் மக்களை அத்வானி ஆதரிப்பார் என்று நம்புவது முட்டாள்தனமில்லையா?

“ஒரே இந்தியா ஒரே சந்தை” என்று பார்ப்பன இந்து தேசியத்தால் இந்தியாவின் எல்லா தேசிய இனங்களையும் ஒடுக்கிவரும் இந்திய அரசு, காஷ்மீர் வடகிழக்கிந்திய மக்களைப் பல பத்தாண்டுகளாய் துப்பாக்கி முனையில் நசுக்கி வரும் இந்திய அரசு, ஈழப் போராளிகள் மீது கருணை காட்டும் என்று மக்களை நம்பவைப்பது அயோக்கியத்தனமில்லையா?

காங்கிரசு தோற்றாலென்ன, எத்தகைய தோல்வியும் காங்கிரசுக்குப் பாடம் புகட்டாது. “ஆட்சியை இழந்தாலும் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவேன்” என்று மார்க்சிஸ்டுகளுக்கு சமீபத்தில்தான் பாடம் புகட்டினார் மன்மோகன் சிங். ஈழ ஆதரவாளர்கள் மறந்துவிட்டார்கள் போலும்! எத்தகைய தேர்தல் வெற்றியும் அகண்டபாரத வெறி பிடித்த அத்வானியையும் ஈழ ஆதரவாளராக உருமாற்றிவிடாது.

இலங்கையின் மீது இந்திய ஆளும் வர்க்கத்தின் பிடி அகல வேண்டுமானால், அதன் காலடி நிலம் சரிய வேண்டும். இலங்கைக்கு ஆசைப்பட்டால், தமிழகத்தை இழக்க வேண்டியிருக்கும் என்ற அச்சத்தை இந்திய ஆளும் வர்க்கத்துக்கு நாம் ஏற்படுத்த வேண்டும். இந்து இந்தி இந்தியா என்ற பார்ப்பன தேசியம் உடைத்தெறியப்பட வேண்டும். தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் வீழ்த்தப்படவேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது என்பது இந்தப் போராட்டத்தின் ஒரு படி. ஈழமக்களுக்காகத் தமிழகம் விடுத்த ஒருமனதான கோரிக்கையை நிராகரித்த இந்திய அரசை, நிராகரிக்கிறார்கள் தமிழ் மக்கள் என்று உணர்த்தும் ஒரு அடி.

இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணித்து, புதிய ஜனநாயகப் புரட்சிக்கு மக்களைத் திரண்டெழச் செய்வதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும், ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் நாம் கொடுக்கக் கூடிய முடிவான பதிலடி!

இந்த கட்டுரையை பரவலாக அனைத்து பிரிவினரிடத்திலும் கொண்டு சேர்க்குமாரு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த பிரசுரத்தின் PDF கோப்புக்கு இங்கே சொடுக்கவும்

ஈழத்தின் மீதான இந்தியாவின்
மேலாதிக்கப் போருக்கு
பதிலடி கொடுப்போம்!
தேர்தலைப் புறக்கணிப்போம்!
ஈழத்தமிழ் மக்களின்
குலையறுக்கும் காங்கிரசு தி.மு.க…
தலையறுக்கும் பா.ஜ.க. அ.தி.மு.க…
ஈழத்தமிழர் பிணத்தைக் காட்டி
பதவி வேட்டையாடும்
பச்சோந்திகளுக்குப்
பாடம் புகட்டுவோம்!
மே 1, 2009

பேரணி
பொதுக்கூட்டம்
திருவள்ளுவர் திடல், தஞ்சை
மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.

மேலும் விவரங்களுக்கு : வினவு (91) 97100 82506

நன்றி :

http://vinavu.wordpress.com/2009/04/04/eelam32/

Apr 1, 2009

இலங்கை இனப்படுகொலை எதிரான அருந்ததிராயின் குரல்!


நன்றி : சுகுணாதிவாகர்

குறிப்பு : அருந்ததிராய் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழில் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. ‘இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட அணிதிரட்டும் குழு’வினரால் அச்சடித்து வினியோகிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பாக மார்ச் 30, 2009 அன்று மாலை லயோலா கல்லூரியில் இலங்கை இனப்படுகொலைக்கு எதிரான கருத்தரங்கமும் நடத்தப்பட்டது. தோழர்.அ.மார்க்ஸ், இலங்கை அய்க்கிய சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜெயசூர்யா, டெல்லி பத்திரிகையாளர் சத்தியா சிவராமன், தமிழீழப் போராட்டக்குழுவைச் சேர்ந்த சுதாகாந்தி ஆகியோர் பேசினர். அருந்ததிராய் கட்டுரையின் ஆங்கில மூலத்தைத் தோழர் வ.கீதா வாசித்தார். சத்தியா சிவராமனின் பேச்சைப் பேராசிரியர் சிவக்குமாரும் ஜெயசூர்யாவின் பேச்சைத் தோழர் தியாகுவும் தமிழில் மொழிபெயர்த்தனர். ஏப்ரல் 8 அன்று சென்னை உள்ளிட்ட உலகின் முக்கிய நகரங்களில் இந்த அமைப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளது.

***

இலங்கையில் இன்று பெருகி வரும் பயங்கரத்தை அதைச் சுற்றியுள்ள மௌனமே சாத்தியப்படுத்துகிறது. மய்ய நீரோட்ட ஊடகங்கள் பெரும்பாலும் இதுகுறித்து செய்திகளைப் பிரசுரிப்பதில்லை. உண்மையில் அங்கே என்ன நடக்கிறது என்பது பற்றி சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வருவதில்லை. ஏன் இப்படி நடக்கிறது என்பது ரொம்பவும் கவலைக்குரிய ஒன்றாகவே உள்ளது. கொஞ்சநஞ்சமாய்க் கசிந்துவரும் செய்திகளிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவெனில் ’பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்’ என்கிற பிரச்சாரத்தை இலங்கை அரசு தன் அம்மணத்தை மறைத்துக்கொள்ள கோவணத்துணியாகப் பயன்படுத்திக்கொள்கிறது என்பதுதான். அந்த நாட்டில் எஞ்சியுள்ள கொஞ்சநஞ்ச ஜனநாயகத்தையும் இன்று அழித்து தமிழ் மக்களின் மீது சொல்லொணாக்குற்றங்களைப் புரிவதற்கு இந்தப் பிரச்சாரத்தை அது பயன்படுத்திக்கொள்கிறது. ஒவ்வொரு தமிழரும் தன்னை வேறுவகையில் நிறுவிக்கொள்ளாதவரை ஒரு பயங்கரவாதியாகவே கருதப்படவேண்டும் என்கிற ‘கொள்கை’யுடன் செயல்படும் இலங்கை அரசு குடிமக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகள், பாதுகாப்பு வதிவிடங்கள் ஆகிய எல்லாவற்றின் மீதும் குண்டுகளைப் பொழிந்து அவற்றையும் போர்க்களமாக மாற்றியுள்ளது. நம்பத்தகுந்த மதிப்பீடுகளின்படி இன்று போர்க்களத்தில் சிக்கியுள்ள அப்பாவி மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்திற்கும் மேலுள்ளது. டாங்குகள், போர்விமானங்கள் சகிதம் இன்று இலங்கை ராணுவம் முன்னேறிக்கொண்டுள்ளது.

இதற்கிடையில் இடம் பெயர்க்கப்பட்ட தமிழர்களைப் பாதுகாப்பாக குடியமர்த்துவதற்கென வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் பல ’பொதுநலக் கிராமங்களை’ நிறுவியிருப்பதாக அரசுத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ’டெய்லி டெலிகிராப்’ நாளிதழில் வந்துள்ள ஒரு செய்தியின்படி (பிப் 14, 2009) ‘‘போரிலிருந்து தப்பி ஓடிவரும் பொதுமக்களைக் கட்டாயமாகப் பிடித்து வைக்கும் மய்யங்களாக’’ இந்த கிராமங்கள் செயல்படுமாம், அரசுக்குப் பிடித்தவர்களை ஒதுக்கிக் குடியமர்த்தும் சிறைமுகாம்களுக்கான இன்னொரு பெயரா இது? இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ’டெய்லி டெலிகிராப்’ நாளிதழிடம் பேசும்போது, ‘பாதுகாப்பிற்கு ஆபத்து என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன் இலங்கை அரசு கொழும்பிலுள்ள தமிழர்கள் எல்லோரையும் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டது. 1930களில் நாஜிகள் செய்தத்துபோல் இதுவும்கூட வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். அடிப்படையில் அவர்கள் எல்லாத் தமிழ்மக்களையும் சாத்தியமான பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்போகிறார்கள்’’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளைத் ‘துடைத்தெறிவது’ என அது அறிவித்துக்கொண்டுள்ள குறிக்கோளின் அடிப்படையில் இவ்வாறு பொதுமக்களையும் ‘பயங்கரவாதிகளையும்’ ஒன்றாக்கும் இச்சதியின் மூலம் இறுதியில் இனப்படுகொலையாக முடியக்கூடிய ஒரு செயலைச் செய்து முடிக்கும் எல்லைக்கே இலங்கை அரசு சென்றுவிட்டதாகத் தெரிகிறது. ஐ.நா அவையின் மதிப்பீடு ஒன்றின்படி ஏற்கனவே அங்கு பல்லாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டனர். இன்றும் பல்லாயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். நேரடியாகப் பார்த்த சிலரின் கூற்றுகள் நரகத்திலிருந்து எழுகின்ற ஒரு கொடுங்கனவின் விவரணமாக அமைந்துள்ளன. இலங்கையில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற, ஆனால் ரொம்பவும் வெற்றிகரமாய் பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்படுகின்ற இக்கொடுமைகளை அப்பட்டமான, வெளிப்படையான இனவாதப் போர் எனச் சொல்லலாமா? எந்தவிதமான கண்டனங்களுக்கும் ஆட்படாமல் இலங்கை அரசு இந்தக்கொடுமைகளைச் செய்துவர முடிந்துள்ள நிலை அதனுள் ஆழமாகப் பதிந்துள்ள இனவாதப்பார்வையைத்தான் வெளிப்படுத்துகிறது. இதுவே இலங்கைத்தமிழ் மக்கள் அன்னியப்பட நேர்ந்ததற்கும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டதற்கும் தொடக்கமாக அமைந்தது. சமூகவிலக்கு, பொருளாதாரத்தடை, படுகொலைகள், சித்திரவதைகள் என இந்த இனவாதத்திற்கு ஒரு ஒரு நீண்ட வரலாறுண்டு. அமைதியான, வன்முறையற்ற போராட்டமாகத் தொடங்கிய ஒன்று கொடூரமான பண்புகளுடன் கூடிய ஒரு நீண்ட சிவில் யுத்தமாக மாறியதன் வேர்கள் இங்குதான் உள்ளன.

ஏனிந்த மவுனம்? இன்றைய இலங்கையில் சுதந்திரமான ஊடகம் என ஒன்று இல்லை என இன்னொரு நேர்காணலில் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

சமூகத்தை ‘அச்சத்தில்’ உறைய வைத்துள்ள கொலைப்படைகள் குறித்தும் ’வெள்ளைவேன் கடத்தல்கள்’ குறித்தும்கூட சமரவீர கூறியுள்ளார். பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு எதிர்ப்புக்குரலை ஒலித்த பலர், கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்களின் வாயை அடைப்பதற்கு பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்கள், காணாமல் போகடித்தல், படுகொலைகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகப் பயன்படுத்துவதை ’பன்னாட்டுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு’ வன்மையாகக் கண்டித்துள்ளது.

மனித சமூகத்திற்கு எதிரான இந்தக் கொடுமைகளில் இலங்கை அரசுக்குப் பொருளாதார ரீதியிலான உதவிகளையும், பக்க ஆதரவுகளையும் இந்திய அரசு வழங்கி வருவது குறித்து வேதனைக்குரிய ஆனால் உறுதி செய்யப்பட இயலாத தகவல்கள் நிலவுகின்றன. உண்மையாயின் இது மிகவும் மூர்க்கத்தனமான கொடுமை. மற்ற அரசுகளின் நிலை என்ன? பாகிஸ்தான்? சீனா? இந்த நிலையை மட்டுப்படுத்தவோ அதிகரிக்கவோ அவை என்ன செய்கின்றன?

இலங்கையில் நடைபெறும் இந்தப் போரினால் தூண்டப்பட்ட உணர்வெழுச்சிகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் தங்களைத் தீயில் மாய்த்துக்கொண்டுள்ளனர். பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த கோபமும் துயரும் இன்று ஒரு தேர்தல் பிரச்சினை ஆக்கப்பட்டுள்ளது. இந்தக் கோபம், துயர் ஆகியவற்றில் பெரும்பகுதி உண்மையில் தன்னிச்சையாக உருவானவை என்றபோதிலும் ஒருபகுதி தந்திரமான அரசியல் நோக்கங்களுக்காகத் தூண்டப்பட்டதாகும்.

எனினும் இந்தக் கவலை இந்தியாவின் பிற பகுதிகளைச் சென்றடையாதது வியப்பூட்டுகிறது. ஏன் இங்கு இந்த மௌனம்? இந்தப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் நிச்சயமான இங்கே ‘வெள்ளை வேன் கடத்தல்கள்’ இல்லை. இலங்கையில் நடைபெறும் வன்முறைகளின் அளவை வைத்துப் பார்க்கும்போது இந்த மவுனம் மன்னிக்கக்கூடியதல்ல. முதலில் ஒரு தரப்பை ஆதரிப்பது, அப்புறம் இன்னொரு தரப்பை ஆதரிப்பது என்கிற வகையில் இந்தப் பிரச்சினையில் இந்திய அரசு கடைப்பிடிக்கும் பொறுப்பற்ற தலையீடுகளின் நீண்ட வரலாறு இதில் பெரும் பங்கு வகிக்கிறது. முன்னதாகவே பேசியிருக்க வேண்டிய நான் உட்பட எங்களில் பலர் அப்படிச் செய்யாமல் போனதற்குக் காரணம் இந்தப் போர் குறித்த முழுத்தகவல்களும் எங்களுக்குக் கிடைக்காமல் போனதே.

ஆக படுகொலைகள் தொடர்ந்துகொண்டுள்ள நிலையில், பத்தாயிரக்கணக்கானோர் சிறைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பசியை எதிர்கொண்டுள்ள நிலையில் ஒரு இன அழிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலையில் இந்த நாட்டில் (இந்தியாவில்) ஒரு மரண அமைதி நிலவுகிறது. இது ஒரு மாபெரும் மனிதசோகம். உலகம் இதில் தலையிட வேண்டும். இப்போதே....எல்லாம் முடிந்து போவதற்கு முன்பே.

Mar 27, 2009

ஈழம் - பொதுக்கூட்டம் -அருந்ததிராய் சென்னையில் பேசுகிறார்!

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மயிலையில் நடத்திய பொதுக்கூட்டத்தின் பொழுது, ஒரு துண்டுப்பிரசுரத்தை விநியோகித்து கொண்டிருந்தார்கள்.

'இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட அணிதிரட்டும் குழு' ஒன்று

இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்வதை நிறுத்த... எனும் தலைப்பில்

கண்டனப் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது.

நாள் : 30/03/2009

நேரம் : மாலை 5.30 மணி

இடம் : திறந்த வெளி அரங்கு, லயோலா கல்லூரி, சென்னை

கண்டன உரை

தலைமை : பேரா. அ. மார்க்ஸ்

உரைவீச்சு :

அருந்ததிராய் - எழுத்தாளர்

சிறிதுங்க ஜெயசூர்யா, பொ.செ.
ஐக்கிய சோசலிச கட்சி, இலங்கை

சத்திய சிவராமன்,
பத்த்ரிக்கையாளர் டெல்லி

மற்றும் சிலர்.

மேற்கொண்டு ஏதும் விவரம் தெரிய வேண்டுமாயின், கீழ்கண்ட தொலைபேசி எண்-ஐ தொடர்புகொள்ளுங்கள். (அந்த பிரசுரத்திலேயே இருந்தது)

9444120582

Mar 20, 2009

பொதுக்கூட்டம் - அறிவிப்பு!

அன்பார்ந்த பதிவர்களே!

உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மீதான காவல்துறையின் வெறிகொண்ட தாக்குதலுக்கு பிறகு, வழக்கறிஞர்களின் தொடர் போராட்டத்தை நசுக்க அரசும், பல பார்ப்பன பத்திரிக்கைகளும் வழக்கறிஞர்களை பொதுமக்கள் மத்தியில் வில்லனாக்க முயற்சி செய்தன. இந்த போராட்டத்தை ஆதரிக்கும் நாம், இந்த போராட்டத்தின் அவசியம், காவல்துறையின் அட்டூழியத்தையும் மக்களிடத்தில் அம்பலப்படுத்த பொதுக்கூட்டம் நடத்த 10.03.2009 அன்று அனுமதி கேட்டால், தேர்தலை காரணம் காட்டி அனுமதி தர காவல்துறை மறுத்துவிட்டது.

நீதிமன்றத்திலும் அனுமதி வாங்க முடியாத நிலை. பிறகு, இந்த அனுமதி மறுத்ததை புரட்சிகர அமைப்புகள் சுவரொட்டி மூலம், அம்பலப்படுத்திய பிறகு, மீண்டும் அனுமதி தர முன்வந்தார்கள். பிறகு, மீண்டும் மனது மாறி மறுத்துவிட்டார்கள். ஜனநாயக முறைப்படி ஒரு பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை காவல்துறையின் "மூடு" தான் தீர்மானிக்கிறது.

இப்பொழுது, மீண்டும் அனுமதி தந்திருக்கிறார்கள். இறுதி நேரத்திலும் ஏதாவது அனுமதி மறுக்கலாம். நமக்கு போராட்டம் தவிர, வேறு குறுக்குவழிகள் இல்லை.

போராடுவோம்!


பொதுக்கூட்டம்

நாள் : 25.03.2009 (புதன்கிழமை)

நேரம் : மாலை 6 மணி

இடம் : எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட்

தலைமை :

தோழர் அ.முகுந்தன், தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

சிறப்புரை :


தோழர் மருதையன், பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்.

உரையாற்றுவோர் :

தோழர் பி. திருமலைராசன்,
முன்னாள் தலைவர்,
கீழமை நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கக்கூட்டமைப்பு,
தமிழ்நாடு-புதுச்சேரி

தோழர் சி. ராஜு,
ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

தோழர் ஆர். சங்கரசுப்பு,
தலைவர்,
அனைத்திந்திய மக்கள் வழக்குரைஞர்கள் சங்கம்


புரட்சிகர கலை நிகழ்ச்சி :


மக்கள் கலை இலக்கிய கலைக்குழு

அனைவரும் வருக!

நிகழ்ச்சி ஏற்பாடு:

மக்கள் கலை இலக்கிய கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.

பின்குறிப்பு : இதில் கடைசி நேர மாறுதல் ஏதும் மாற்றம் இருப்பின் வினவு தளத்தில் வெளியாகலாம்.

Mar 9, 2009

பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு அறிவிப்பு


அன்பார்ந்த பதிவர்களே!

இன்று நடக்க இருந்த பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. உயர்நீதி மன்றத்தில் அனுமதி வாங்க முயற்சி நடைபெறுகிறது.

ஆகையால், இன்றைக்கு நடக்க இருந்த பொதுக்கூட்டம் பிறிதொரு நாளில் நடத்தப்படும். இது தொடர்பான விரிவான செய்திகள் வினவு தளத்தில் இன்று வெளியாகலாம். பார்த்துக்கொள்ளுங்கள்.

****


இது போலீஸ் - வக்கீல் பிரச்சனை அல்ல!
போராடும் மக்கள் அனைவரின் பிரச்சனை!

உயர்நீதிமன்றத் தாக்குதல்:
வழக்குரைஞர்களின் போராட்டத்தை ஆதரித்து...

பொதுக்கூட்டம் நாள் : 10.03.2009 (செவ்வாய்க்கிழமை)

நேரம் : மாலை 6 மணி

இடம் : எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட்

தலைமை : தோழர் அ.முகுந்தன்,
தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

சிறப்புரை : தோழர் மருதையன்,
பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்

மற்றும்

சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள்,
மனித உரிமை அமைப்பினர்

புரட்சிகர கலை நிகழ்ச்சி
மக்கள் கலை இலக்கிய கலைக்குழு

அனைவரும் வருக!

நிகழ்ச்சி ஏற்பாடு:

மக்கள் கலை இலக்கிய கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விடுதலை முன்னணி, சென்னை.

Mar 6, 2009

மகளிர் தினம் - அரங்கக் கூட்டம்!



மகளிர் தினம் - மார்ச் 8, 2009 - அரங்க கூட்டம்

உழைக்கும் பெண்களாய் ஒன்றிணைவோம்!

சிதைந்து வரும் நம் வாழ்வைச் சீரமைப்போம்!

சர்வதேச மகளிர் தினத்தில் உறுதியேற்போம்!



நாள் :

மார்ச் 8 - மாலை 3 மணி,

இடம் :

துர்கா நகர்,
செல்லியம்மன் (கோவில் அருகே),
குரோம்பேட்டை, சென்னை

தலைமை :

தோழர் உஷா,
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை


சிறப்புரை :

தோழர் துரை சண்முகம்,
மக்கள் கலை இலக்கிய கழகம், சென்னை.

அன்பார்ந்த உழைக்கும் பெண்களே!

மார்ச் 8 என்றாலே மகளிர் தினம், வருடத்திற்கு ஒருமுறை வந்து போகும் இந்த தினத்தைப் பற்றி மெத்த படித்த மேதாவிகள், மேட்டுக்குடி சீமாட்டிகள், அரசு மற்றும் முதலாளித்துவ நிறுவனங்களில் பணிபுரியும் நடுத்தர வர்க்கப் பெண்கள் மட்டுமே தெரிந்து வைத்திருப்பார்கள்.

அதையும், அதன் (சர்வதேச மகளிர் தினத்தின்) உண்மையான அர்த்தத்தில் தெரிந்து வைத்திருப்பார்களாயென்று தெரியாது. அதிலும் அன்றாடம் உழைத்து, உழைத்து வாழ்வை சிதைத்துக் கொண்டுவரும் எழுத படிக்கத் தெரியாத மற்றும் ஓரளவு படிக்கத் தெரிந்த உழைக்கும் பென்களுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கடுமையான போராட்டங்களை விடாப்பிடியாக, தொடர்ச்சியாக நடத்தி பெண்களுக்கான வாக்குரிமை, சொத்துரிமை, விவாகரத்து உரிமை போன்ற ஜனநாயக உரிமைகளைச் சாதித்துக் கொடுத்த தினம் தான் சர்வதேச மகளிர் தினம்.

இப்படிப்பட்ட தினத்தை இன்று தொண்டு நிறுவனங்களும், விளம்பர நிறுவனங்களும், பிழைப்புவாதச் சங்கங்களும், அரசு நிறுவனங்களும் அவரவர் தகுதிக்கேற்ப ஆபாசக் கூத்துக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தி அரட்டை அடிக்கும் தினமாக மாற்றி வருகின்றன. இதன் மூலம், அதன் போர்க்குணத்தையும் தியாகத்தையும் இழிவுப்படுத்தி வருகின்றன.

சுய உதவிக் குழுக்கள், என்.ஜி.ஓ.க்கள், சமூக நல மன்றங்கள் அனனத்தும் அரசு அறிவிக்கும் சீர்திருத்தச் சட்டங்கள் மூலம் உரிமைகளைப் பெற்றுவிடமுடியும் என்ற மாயையை உழைக்கும் பெண்களிடம் உருவாக்கி, அவர்களின் போராட்ட உணர்வையும் முடக்கி வருகின்றன. மேலும், உழைக்கும் பெண்களின் வறுமையை பயன்படுத்தி அரசு வங்கிகளில் கடன் வாங்கிக் கொடுத்து நிரந்தர கடனாளியாக்கி உரிமைக்காகப் போராடும் வர்க்க உணர்வுகளையும் அடக்கிவிடுகின்றன.

இவைகள் உருவாக்கி வரும் இழிவுகளை, சதிகளை முறியடிக்க, 8 மணி நேரம் உழைப்புக்கான உரிமைப் போரில் பெண்களின் முன்னோடியாகத் திகழ்ந்த தோழர் கிளாரா ஜெட்கின் தியாகத்தை நெஞ்சில் ஏந்தி பயணத்தை தொடருவோம்.

இந்தப் பயணம் வாக்களிப்பதற்கோ, விரலில் மை வைத்துக் கொள்வதற்கோ, வெட்டியாகப் பொழுதைக் கழிப்பதற்கோ அல்ல. பெண்களின் மீதான பாலியல் வன்முறை, வரதட்சணைக் கொடுமை, உழைப்புச் சுரண்டல் போன்ற எண்ணற்றக் கொடுமைகளுக்கு சவக்குழி அமைக்கும் போராட்டப் பயணமாக மாற்றியமைப்போம்.

மேலும், சர்வதேச மகளிர் தினத்தை, உலக உழைக்கும் பெண்கள் தினமாக வளர்த்தெடுக்கவும், உழைக்கும் மக்களின் விடுதலையே பெண்களின் உண்மையான விடுதலை என்பதை வார்த்தெடுக்கவும் உறுதியேற்போம்.

இதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது என்னவெனில், நம்மை முடக்கி வரும் பல்வேறு மூட நம்பிக்கைகளில் இருந்து விடுபடுவதே.

பிறந்ததில் இருந்தே வாழ்வின் பெரும் பகுதியை குடும்பத்திற்காக உழைத்த நாம், சற்று, நம்மை போன்ற உழைக்கும் பெண்களுக்காக உழைக்க முன்வருவோம். சிதைந்து வரும் நம் வாழ்வைச் சீரமைப்போம். படிப்படியாக சமூக மாற்றத்தை நிகழ்த்தவும் இதர உழைக்கும் வர்க்கத்தோடு அணிவகுப்போம்.

அழகுப் பதுமைகளாக வலம் வருவதை வக்கிரமென ஒதுக்குவோம்!

• போராளிகளாகக் களம் இறங்குவதை கெளவரமாக கருதுவோம்!

• சாதி – மத வேற்றுமைகளை களைந்து வர்க்கமாக ஒன்றிணைவோம்!

• பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்!

• பணி இடங்களில் இழிவாக நடத்தப்படுவதை முறியடிப்போம்!

• இரவு நேரப் பணிகளே பெண்களுக்கு இல்லாமல் செய்வோம்!
-

- பெண்கள் விடுதலை முன்னணி,

தொடர்புக்கு :

தோழர் உஷா,
எண் : 29, இந்திரா நகர் 16 வது குறுக்குத் தெரு,
குரோம்பேட்டை, சென்னை - 44
பேச : 98849 50952

Mar 5, 2009

உயர்நீதிமன்றத் தாக்குதல் - பொதுக்கூட்டம்!


அன்பார்ந்த பதிவர்களே!

இது போலீஸ் - வக்கீல் பிரச்சனை அல்ல!
போராடும் மக்கள் அனைவரின் பிரச்சனை
!

உயர்நீதிமன்றத் தாக்குதல்:
வழக்குரைஞர்களின் போராட்டத்தை ஆதரித்து...


பொதுக்கூட்டம்

நாள் : 10.03.2009 (செவ்வாய்க்கிழமை)

நேரம் : மாலை 6 மணி

இடம் : எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட்

தலைமை :

தோழர் அ.முகுந்தன்,
தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

சிறப்புரை :


தோழர் மருதையன்,
பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்

மற்றும்

சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள்,
மனித உரிமை அமைப்பினர்

புரட்சிகர கலை நிகழ்ச்சி

மக்கள் கலை இலக்கிய கலைக்குழு

அனைவரும் வருக!

நிகழ்ச்சி ஏற்பாடு:

மக்கள் கலை இலக்கிய கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை.

நன்றி : வினவு

(வெறிநாய் போலீஸ் படத்திற்காக)

Feb 21, 2009

தீட்சிதர் ஆதிக்கம் தகர்த்தோம்! தில்லை கோயிலை மீட்டோம்!

தீட்சிதர் ஆதிக்கம் தகர்த்தோம்!
தில்லை கோயிலை மீட்டோம்!


தமிழக அரசே!

* அரசாணைப் பிறப்பித்து தில்லைக் கோயிலை அறநிலையத் துறையின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வா!

* நகை களவு, நிதி கையாடல், கோயில் நில விற்பனை, கொலை முதலான குற்றங்கள் புரிந்த தீட்சிதர்களை கைது செய்!

* நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்திருக்கும் தீண்டாமைச் சுவரை தகர்த்தெறி!

***

பேரணி

நாள் : 21.02.2009 சனிக்கிழமை

மாலை 4 மணி

துவங்கும் இடம்

பெரியார் திடல், மேலவீதி, சிதம்பரம்

பேரணி தலைமை :

தோழர் அம்பேத்கார்,
மாவட்ட அமைப்பாளர்,
வி.வி.மு. விழுப்புரம் மாவட்டம்


பொதுக்கூட்டம்

மாலை 6 மணி

இடம்: பெரியார் திட‌ல், மேல‌ வீதி,
சித‌ம்ப‌ர‌ம்

தலைமை

வழக்கறிஞர் சி. ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்


முன்னிலை

சிவ‌ன‌டியார் ஆறுமுக‌ச்சாமி,
நால்வர் மடம், குமுடிமூலை, புவனகிரி

உரை நிகழ்த்துவோர்
சிற‌ப்புரை


தோழ‌ர் ம‌ருதைய‌ன்
பொதுச்செய‌லாளர்,
ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்.

பேராசிரிய‌ர் பெரியார்தாச‌ன்.

மற்றும்

திரு. வி.எம்.எஸ். சந்திரபாண்டியன்,
மாநில துணைத்தலைவர்,
பாட்டாளி மக்கள் கட்சி, சிதம்பரம்

தோழர் காளியப்பன்,
மாநில இணைப் பொது செயலாளர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்,
தஞ்சாவூர்.


திரு. காவியச்செல்வன்,
மாநில துணை செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி

மற்றும் தோழமை அமைப்புகள்.

புரட்சிக‌ர‌ க‌லை நிக‌ழ்ச்சி



ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌த்தின் மையக்குழுவின்
புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்..

ப‌ங்கேற்போர்:

ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்
விவ‌சாயிக‌ள் விடுத‌லை முன்ன‌ணி
புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் இளைஞ‌ர் முன்ன‌ணி
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌த்தொழிலாள‌ர் முன்ன‌ணி
விடுதைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி
பாட்ட‌ளி ம‌க்க‌ள் க‌ட்சி
மற்றும் சில அமைப்புகள்

நிக‌ழ்ச்சி ஒருங்கிணைப்பு:

மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்
க‌ட‌லூர் மாவ‌ட்ட‌ம்.

மூன்று கோரிக்கைகளோடு இந்த பேரணி, பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

1. தற்பொழுது போடப்பட்டிருக்கும் அறநிலையத்துறை உத்தரவின் படி கோவிலின் நிர்வாக அதிகாரிக்கு தீட்சிதரின் எடுபிடி என்ற அளவுக்கு தான் அதிகாரம் உள்ளது. இந்நிலை மாற தனிச்சிறப்பான அரசாணை மூலம் இக்கோவிலை அறநிலையத்துறை மேற்கொள்ளவேண்டும். இதன் மூலம் தீட்சிதர்கள் அர்ச்சகர் என்ற நிலைக்கு கட்டுப்படுத்தப்படுவர்.

2. தீட்சிதர்கள் மேல் நகைக்களவு, மோசடியான நிதி நிர்வாகம் (ஆண்டுக்கு மொத்த வருமானமே ரூ. 37,199 தானாம்), இன்னபிற குற்றச்சாட்டுகளை இந்து அறநிலையத்துறை விசாரிக்காமல் வைத்திருக்கிறது.

இது தவிர கோவிலில் நடந்த கொலை மற்றும் பல கிரிமினல் குற்றங்களை காவல்துறை பதிய மறுத்து, ம.உ.பா.மையம் உயர்நீதி மன்றத்தில் முறையிட்டிருக்கிறது.

இது தவிர அரசு இப்பொழுது தான் கோவிலின் சொத்து விவரங்களை திரட்டி கொண்டிருக்கிறது. பக்தர்கள் தானமாக கொடுத்துள்ள நிலம் மற்றும் வீடுகளை விற்று தீட்சிதர்கள் ஏப்பம் விட்டிருக்கிறார்கள்.

இப்படி தீட்சிதர்கள் மீதுள்ள எல்லா குற்ற வழக்குகளுக்காக கைது செய்து, விசாரிக்கப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

3. நந்தன் நுழைந்த தெற்கு வாயிலில் எழுப்பப்பட்டிருக்கும் தீண்டாமைச் சுவர் உடனே இடிக்கப்பட வேண்டும்.

ஆகையால், இந்த பேரணி, பொதுக்கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி, பலரும் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

Feb 20, 2009

தில்லை போராட்டம் – வரலாற்று தடங்கள் 3


குறிப்பு : தில்லையில் தொடர் போராட்டத்தில் கிடைத்த முதல் வெற்றி: தீட்சிதர்களுக்கு கிடைத்த முதல் தோல்வி.

சிற்றம்பல மேடையில் தமிழ் பாட அனுமதி வழங்கி அரசு ஆணை பிறப்பித்தது. இப்படி சொல்வது சரியல்ல! நமது தொடர் போராட்டத்தின் மூலம் அரசை ஆணை பிறப்பிக்க வைத்தோம்!

அந்த காலக்கட்டத்தில் நடந்த பல்வேறு போராட்டங்களையும், அனுபவங்களையும் இந்த கட்டுரை விவரிக்கிறது!

தில்லை போராட்டத்தின் தொடர்ச்சியாக, மூன்று முக்கிய கோரிக்கைகளோடு (பார்க்க : குருத்து பதிவு) நாளை சிதம்பரத்தில் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற இருக்கிறது. அனைவரும் தவறாது கலந்து கொள்ளுங்கள்.

****

தில்லை சிற்றம்பலம் ஏறியது தமிழ்! ஆலயத் தீண்டாமை அகலும் வரை ஓயாது எமது சமர்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

தில்லை நடராசன் கோயிலின் திருச்சிற்றம்பல மேடையில் மார்ச் 2ஆம் நாள் காலையில் தமிழ் ஒலித்தது. "சிற்றம்பல மேடையில் நின்று தமிழ் பாடக்கூடாது, தமிழன் பாடக்கூடாது' என்று தீட்சிதப் பார்ப்பனர்கள் அந்தக் கோயிலில் நிலைநாட்டி வந்த மொழித் தீண்டாமை வீழ்ந்தது.

இது ஒரு வரலாற்றுச் சாதனை! நந்தனையும் பெற்றான் சாம்பானையும் பலி கொண்ட தீட்சிதர்கள், வள்ளலாரையும் முத்துத்தாண்டவரையும் "ஜோதி'யில் கலக்க வைத்த தீட்சிதர்கள், தேவாரத்தை முடக்கி வைத்து, மன்னன் இராசராசனுக்கே சவால் விட்ட தீட்சிதர்கள், பிரதமர்கள் முதல் நீதிபதிகள் வரை அனைவரையும் தமது குடுமியில் முடிந்து வைத்துக் கொண்டு, அக்கோயிலையே தமது பூர்வீகச் சொத்தென்று உரிமை கொண்டாடும் தீட்சிதர்கள், சிற்றம்பல மேடையை சீட்டுக்கட்டு மேடையாகவும், ஆயிரங்கால் மண்டபத்தை மதுபான விடுதியாகவும், கோயில் திருக்குளத்தைப் பிணம் மறைக்கும் கொலைக்களமாகவும், ராஜ கோபுரத்தை காமக்களியாட்ட மன்றமாகவும் மாற்றிவிட்டு, மயிரளவும் அச்சமின்றி மதர்ப்புடன் திரிந்து வந்த தீட்சிதர்கள்...

மார்ச் 2ஆம் நாளன்று முதன் முறையாக வீழ்த்தப்பட்டார்கள்.
தேவாரம் பாடிய "குற்றத்துக்காக' 8 ஆண்டுகளுக்கு முன் இதே சிற்றம்பல மேடையிலிருந்து சிவனடியார் ஆறுமுகசாமியின் கையை உடைத்துத் தூக்கி வீசினார்கள் தீட்சிதர்கள். இன்று தனது 79 வயதில் கண்கள் மங்கி கால்கள் தள்ளாடிய போதிலும், மனதில் சுயமரியாதை உணர்வு குன்றாத அந்தச் சிவனடியாரை, யானை மீதேற்றி அதே சிற்றம்பல மேடையில் கொண்டு வந்து இறக்கினார்கள், செஞ்சட்டையணிந்த எமது தோழர்கள்.

"சிற்றம்பல மேடையில் பக்தர்கள் அனைவரும் தேவாரம் பாடலாம்' என்று பிப்.29ஆம் தேதியன்று ஆணை பிறப்பித்து விட்டது அரசு. எனினும், தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்கள் அதனை மதிக்கவில்லை. ஆறுமுகசாமி பாடத் தொடங்கியவுடன் கருவறையை மூடினார்கள்; நடராசனுக்குக் குறுக்கே நந்தியாய் மறைத்து நின்றார்கள். சூத்திரன் வாயிலிருந்து வரும் நீச பாஷையான தமிழ், இறைவனின் காதில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக ஊளையிட்டார்கள், ஆறுமுகசாமியை அடித்தார்கள்; அரசு ஆணையை அமல்படுத்த வந்த போலீசு அதிகாரிகளையும் தாக்கினார்கள். ஆயிரமாண்டுகளாய் இந்த மண்ணைப் பிடித்தாட்டி வரும் சாதிப்பேய் மலையேற மறுத்து "ஊழிக்கூத்து' ஆடியதை அன்று நாடே கண்டது; நடராசனும் கண்டான். இந்தப் பார்ப்பன வெறிக்கூத்தை வென்றடக்கிய பின்னர்தான் அம்பலத்தில் ஏறியது தமிழ்!

இது நெடியதொரு போராட்டம், சிற்றம்பல மேடையேறித் தேவாரம் பாடப் பலமுறை மு
யன்றிருக்கிறார் ஆறுமுகசாமி. ஒவ்வொரு முறையும் அவரைத் துரத்தியிருக்கிறார்கள் தீட்சிதர்கள். ""தேவாரம் மீட்கப்பட்ட ஆலயத்திலேயே தேவாரம் பாடத் தடையா, இந்த அநீதியைக் கேட்பாரில்லையா?'' என்று துண்டறிக்கைகளை அச்சிட்டுத் தனியொரு மனிதனாக நின்று சிதம்பரம் கோயிலுக்கு வருகின்ற பக்தர்களிடமெல்லாம் விநியோகித்திருக்கிறார். பயன் ஏதும் விளையவில்லை.

8.5.2000 அன்று தன்னந்தனியனாகச் சிற்றம்பல மேடை ஏறிப் பாடத் தொடங்கினார் ஆறுமுகசாமி. வாய் திறந்து அடியெடுத்த மறுகணமே அவரை அடித்து வீசினார்கள் தீட்சிதக் காலிகள். ஆடல்வல்லான் சாட்சியாக நடந்தது இந்த அட்டூழியம். ஆனால் கேட்பார் யாருமில்லை. முறிந்த கையுடன் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார் ஆறுமுகசாமி.
ஒப்புக்கு ஒரு வழக்கு பதிவு செய்தது போலீசு. "சாட்சியில்லை' என்று தீட்சிதர்களை விடுவித்தது நீதிமன்றம். வழக்காடக் காசில்லாமல், இலவசமாய் வாதாட ஒரு வக்கீலைத் தேடி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் ராஜுவிடம் வந்து சேர்ந்தார் ஆறுமுகசாமி. ""இது வெறும் மனித உரிமை வழக்கல்ல; மக்களை நசுக்கிக் கொண்டிருக்கும் பார்ப்பனியச் சழக்கு'' என்பதால், ஆறுமுகசாமியை ம.க.இ.க.வின் தமிழ் மக்கள் இசைவிழா மேடைக்கு அழைத்து வந்தார் வழக்குரைஞர் ராஜு. ""தீட்சிதர்களின் கொட்டத்தை ஒடுக்குவோம்! தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழை அரங்கேற்றுவோம்!'' என ஆயிரக்கணக்கான மக்கள்முன் அன்று அறிவித்தோம்.

கடந்த 4 ஆண்டுகளில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் முன்முயற்சியில், சிதம்பரம் நகரின் விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., தி.க. போன்ற அமைப்புகளின் பங்களிப்புடன் சிதம்பரத்தில் எண்ணற்ற பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் போன்றோர் இம்முயற்சிக்கு துணை நின்றிருக்கின்றனர். நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வழியாக இப்பிரச்சினையை நாடே அறிந்திருக்கிறது. எமது தோழர்களும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் இளம் வழக்குரைஞர்களும் இரவு பகலாக இதற்குப் பாடுபட்டிருக்கிறார்கள். எல்லா முயற்சிகளையும் நீதிமன்றத்தின் துணை கொண்டும், அதிகாரத் தாழ்வாரங்களில் அவர்கள் பெற்றிருக்கும் செல்வாக்கைக் கொண்டும் முடக்கி வந்திருக்கிறார்கள் தீட்சிதர்கள்.

"சிற்றம்பலத்தில் தேவாரம் பாடலாம்' என்ற இந்த அரசாணை தானாக வந்துவிடவில்லை; பல்வேறு சதிகளையும் மீறி அரசாங்கத்தின் வாயிலிருந்து இந்த அரசாணையை நாங்கள் வரவழைத்திருக்கிறோம். அரசாணை வந்த பிறகும் தமிழை அம்பலத்தில் ஏற்றுவதற்காக அக்கோயில் வாசலிலே அன்று தடியடி பட்டு இரத்தம் சிந்தியிருக்கிறார்கள் எமது தோழர்கள். மார்ச் 2ஆம் நாள் மாலை ஆறுமுகசாமியும் எமது தோழர்களும் சிறைப்படுத்தப்பட்டனர். அடுத்தநாள் "சிற்றம்பல மேடையேறித் தமிழ் பாட யாரேனும் ஒரு சிவனடியார் வருவார்' என்று நாங்கள் காத்திருந்தோம். அடியார்கள் இல்லை, ஓதுவார்கள் இல்லை, தமிழ் ஆர்வலர்கள் இல்லை, ஒருவரும் வரவில்லை. இந்த அடிமைத்தனத்தையும் கோழைத்தனத்தையும் கண்டு மனம் நொந்து எமது தோழர்களே சிற்றம்பலம் ஏறிப் பாடினார்கள். அங்கே நாங்கள் நடத்தியது வழிபாடு அல்ல; இழி மொழி என்று தமிழையும், சூத்திரர்பஞ்சமர் என்று உழைக்கும் மக்களையும் இழிவுபடுத்தும் பார்ப்பனக் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டம்!

""அப்பாவி சிவனடியாரைப் பயன்படுத்திக் கொண்டு, ஆத்திகர்களின் பிரச்சினையில் நாத்திகர்களான நக்சலைட்டுகள் புகுந்து ஆதாயம் தேடுகிறார்கள்'' என்று அலறுகிறது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல். மணல் திட்டை இடித்தால் இந்துக்களின் மனம் புண்படும் என்று கூறும் பா.ஜனதா, சு.சாமி, ஜெயலலிதா கும்பல் தேவாரத்துக்காகக் குரல் கொடுப்பதை நாங்களா தடுத்தோம்? சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறுவதையும், கருவறைக்குள் பார்ப்பனரல்லாதார் நுழைவதையும் சகிக்கவொண்ணாத இந்தச் சாதிவெறியர்கள், இதை ஆத்திகர் நாத்திகர் பிரச்சினையென்று திசைதிருப்புகிறார்கள்.

அன்று அப்பாவி சிவனடியாரை அடித்து வீழ்த்திய தீட்சிதர்கள் ஆத்திகர்கள்தான். தில்லையைச் சுற்றியிருக்கும் திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற ஆதீனங்கள் அனைவரும் ஆத்திகர்கள்தான். சைவமும் தமிழும் பிசைந்து வயிறு வளர்த்த இந்தத் துறவிகளோ, பட்டங்களும் விருதுகளும் சூடிய சைவ அறிஞர்களோ திருச்சிற்றம்பல மேடையேறுவதை நாங்களா தடுத்தோம்? ஆதீனங்களாலும் ஆன்மீகவாதிகளாலும் ஏளனம் செய்து புறக்கணிக்கப்பட்ட பிறகுதான், ஆண்டவனை மறுக்கும் கம்யூனிஸ்டுகளான எங்களைத் தேடி வந்தார் ஆறுமுகசாமி.

சைவ மெய்யன்பர்களெல்லாம் பதவியும் பவிசும் பெறுவதற்காக பார்ப்பனக் கும்பலுடன் கள்ள உறவு வைத்திருப்பதனால்தான் சிற்றம்பல மேடையில் தமிழன் ஏற முடியவில்லை. தமிழைத் தம் பிழைப்புக்கான கருவியாக மாற்றிக் கொண்ட கட்சிகளும் அமைப்புகளும் செய்துவரும் துரோகத்தினால்தான் ஏழைத் தமிழ் அம்பலமேற முடியவில்லை. இல்லையென்றால் தேவாரத்தை மீட்டெடுத்த தில்லைக் கோயிலிலேயே அதனைப் புதைப்பதற்கு தீட்சிதர்களால் இயன்றிருக்குமா?

சிற்றம்பலத்தில் தமிழை ஏற்ற, தாய்மொழியில் இறைவனைப் போற்ற பக்தனுக்கு அரசாணையின் துணை எதற்கு? போலீசின் துணை எதற்கு?

சட்டம் உரிமையை வழங்கத்தான் முடியும். அந்த உரிமையைப் பயன்படுத்தும் உணர்வை வழங்க முடியாது. அந்த உணர்வென்பது பக்தி உணர்வல்ல. பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரான சுயமரியாதை உணர்வு. சாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிரான சமத்துவ உணர்வு. சமஸ்கிருத ஆதிக்கத்துக்கு எதிரான தமிழ் உணர்வு.

தில்லையில் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி ஒரு துவக்கப்புள்ளி. தீட்சிதர்கள் சரணடையவுமில்லை, சாதி ஆதிக்கத்தை விடவுமில்லை. நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பியுள்ள தீண்டாமைச் சுவர் ஒரு அவமானச் சின்னமாக இன்னும் நின்று கொண்டிருக்கிறது. அது தகர்க்கப்பட வேண்டும். தீட்சிதர்கள் திருடிக் கொண்ட தில்லைக் கோயிலை அறநிலைய ஆட்சித்துறை கைப்பற்ற வேண்டும்.

சமஸ்கிருத வழிபாட்டை அகற்றுதல், தமிழ் வழிபாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல்... என நீண்டதொரு போராட்டத்தை நாம் நடத்த வேண்டியிருக்கிறது. நடத்துவோம்!

வர்க்கம், சாதி, இனம், மொழி, பாலினம் போன்ற ஒவ்வொரு துறையிலும் நிலவும் ஆதிக்கத்தை எதிர்த்து கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் போராடுவோம்! அன்று, பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து திருவரங்கம் கருவறைக்குள் நுழைந்து அரங்கநாதனைத் தீண்டினோம்! இன்று, சிற்றம்பலத்தைத் தீண்டியிருக்கிறது தமிழ்! எல்லா வகைத் தீண்டாமைகளையும் ஆதிக்கங்களையும் எதிர்த்துப் போராடுவோம்!
உங்கள் துணையுடன் வெற்றியும் பெறுவோம்!

நன்றி – தமிழ்சர்க்கிள்

புதிய கலாச்சார இதழில் வெளிவந்தது.

Feb 18, 2009

தில்லை போராட்டம் - வரலாற்று தடங்கள் 2


குறிப்பு : தொடர்ச்சியான தில்லைப் போராட்டதில், ஆகஸ்ட் 2006-ல் அடுத்தக்கட்ட போராட்டம் தொடர்ந்தது.

தீட்சிதர்கள் தான், சாதித்திமிர்த்தனமாக தங்களைத் தவிர வேறு யாரும் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடக்கூடாது என்று சொன்னால், நீதிமன்றமும் அதே கருத்தை தீர்ப்பாக சொன்னது.

இப்படி அநீதியான தீர்ப்பால், மக்கள் மன்றத்தில் நீதிமன்றம் தீட்சிதர்களோடு அம்பலப்பட்டுத்தான் போனது. கூட்டமைப்பு, மக்கள் மத்தியில் தீவிரமாக பிரச்சாரம் செய்த வேலைகளை இந்த கட்டுரை விரிவாக பேசுகிறது.

இப்பொழுது, தீட்சிதர்கள் தில்லை கோவிலை தங்களுக்குத்தான் சொந்தம் என உரிமை கொண்டாடுகிறார்கள். உண்மையில், இந்த கோவில் யாருக்கு சொந்தம் என்பதையும் இந்த கட்டுரை விவரிக்கிறது.
***

கட்டுரையிலிருந்து... சில பகுதிகள்

//ஆகஸ்டு 5 அன்று, சிதம்பரம் மேலவீதியில் உள்ள பெரியார் திடலில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.//

//இப்பிரச்சினையை விளக்கி சிதம்பரம் நகரின் முக்கிய இடங்களிலும் மற்றும் அண்ணாமலை நகர், குமுடிமூலை, கீரப்பாளையம், புத்தூர், காட்டுமன்னார் கோயில், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன//

//பொதுமக்கள் மத்தியில் 25,000 துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன; 1,000க்கும் அதிகமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.//

//ஆறுமுகசாமி தேவாரம் பாட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்; வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் எனக் கோரியும் 28.7.06 அன்று நீதிமன்றத்தின் முன் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது//

//பத்து நாட்களில் ஒரு இலட்சம் கையெழுத்துப் பெற்று, அந்த மனுவை தமிழக முதல்வரிடம் கொடுப்பது என்ற இலக்கோடு, இந்தக் கையெழுத்து இயக்கம் வீச்சாக நடைபெற்று வருகிறது.//

****

திருச்சிற்றம்பலத்தில் தேவாரம் திருவாசகம் பாடத்தடை - மனுநீதி தீர்ப்பு

சிதம்பரம் நடராஜர் கோவில் கருவறையின் எதிரே அமைந்துள்ள திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடுவதை தில்லைவாழ் தீட்சிதர்கள், சாதிவெறி கொண்டு தடுத்து வருவதையும்; அப்பார்ப்பனக் கும்பலின் விருப்பத்துக்கு ஏற்ப சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றம், சிவனடியார் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையேறித் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு இடைக்கால தடை விதித்திருந்ததையும்; அத்தடையை மீறி ஆறுமுகசாமி பாடச் சென்ற பொழுது, அவரையும், அவருக்கு ஆதரவாகச் சென்றவர்களையும் கோவில் வாசலைக்கூட நெருங்க விடாமல் தடுத்து போலீசார் கைது செய்ததையும் கடந்த இதழில் விரிவாக எழுதியிருந்தோம். தமிழ் மொழியின் சுயமரியாதையைக் காக்க, சிறு பொறியாக எழுந்த அந்தப் போராட்டம், இப்பொழுது மக்கள் இயக்கமாக வளர்ந்து வருகிறது.


போலீசையும், நீதிமன்றத்தையும் கைத்தடியாக வைத்துக் கொண்டு பீதியூட்டினால், போராட்டம் பிசுபிசுத்துப் போய்விடும் என தீட்சிதர் கும்பல் கனவு கண்டது. ஆனால், தமிழுக்காகப் போராடுபவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும்; நீதிமன்றம் போலீசின் பார்ப்பனக் கைக்கூலித்தனத்தை அம்பலப்படுத்தியும் உடனடியாக எடுக்கப்பட்ட சுவரொட்டி இயக்கமும்; அதனைத் தொடர்ந்து நடந்த தெருமுனைப் பிரச்சாரம், கண்டனப் பொதுக்கூட்டம் ஆகியவையும் தீட்சிதர்களின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டன.

சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடச் சென்ற சிவனடியார் ஆறுமுகசாமியைத் தாக்கியும் தடுத்தும் வெறியாட்டம் போடும் தீட்சிதர் பார்ப்பனர்களைக் கண்டித்து, ஆகஸ்டு 5 அன்று, சிதம்பரம் மேலவீதியில் உள்ள பெரியார் திடலில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்பாக, இப்பிரச்சினையை விளக்கி சிதம்பரம் நகரின் முக்கிய இடங்களிலும் மற்றும் அண்ணாமலை நகர், குமுடிமூலை, கீரப்பாளையம், புத்தூர், காட்டுமன்னார் கோயில், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

மனித உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைத்து நடத்திய இத்தெருமுனைக் கூட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், சி.பி.எம்., வி.வி.மு., பு.ஜ.தொ.மு., ஆகிய அமைப்புகளும்; வழக்குரைஞர்கள் திருமார்பன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இத்தெருமுனைக் கூட்டங்களில், தமிழையும், தமிழனையும் இழிவுபடுத்தும் தீட்சிதர்களின் சாதித் திமிரும்; அக்கும்பல் தங்களின் காமவெறி களியாட்டங்களுக்கு நடராஜர் கோவிலைக் கேடாகப் பயன்படுத்தி வருவதும் அம்பலப்படுத்தப்பட்டது.

கண்டனப் பொதுக்கூட்டத்தின் அவசியத்தை விளக்கி கடலூர் மாவட்டம் முழுவதும் பேருந்துப் பிரச்சாரம் செய்யப்பட்டதோடு, பொதுமக்கள் மத்தியில் 25,000 துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன; 1,000க்கும் அதிகமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

சிவனடியார் ஆறுமுகசாமி முன்னிலை வகிக்க, மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் இராசு தலைமையில் ஆகஸ்ட் 5 அன்று நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில், முன்னாள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. வீ.வீ.சுவாமிநாதன்; பா.ம.க.வின் மாநிலத் துணைத் தலைவர் திரு. வீ.எம்.எஸ்.சந்திரபாண்டியன்; பா.ம.கவின் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. வேல்முருகன்; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் தோழர் பால்கி; சி.பி.எம்.இன் கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் செ.தனசேகரன்; சி.பி.ஐ.இன் கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் மணிவாசகம்; விடுதலைச் சிறுத்தைகள் இணைப் பொதுச் செயலாளர் தோழர் மா.செ.சிந்தனைச் செல்வன்; திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் தோழர் துரை சந்திரசேகரன்; விடுதலைச் சிறுத்தைகள் கடலூர் மாவட்டச் செயலர் தோழர் இரா. காவியச் செல்வன்; கடலூர் நகரத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேரா. இரா.ச.குழந்தைவேலனார் மற்றும் ம.க.இ.க. மாநில இணைப் பொதுச்செயலாளர் தோழர் காளியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

""சிவனடியார் ஆறுமுகசாமி தனியொரு ஆளில்லை; அவருக்குப் பின்னே தமிழ் ஆர்வலர்கள் திரண்டுள்ளனர்'' எனச் சுட்டிக் காட்டப்பட்ட இப்பொதுக்கூட்டத்தில், ""சிதம்பரம் நடராஜர்
கோவிலை தீட்சிதர்களின் கைகளில் இருந்து பிடுங்கி மக்கள் சொத்தாக மாற்ற வேண்டும்; ஆலயத்தை முற்றுகையிடும் மக்கள் போராட்டத்தை நடத்த வேண்டும்'' என்ற கருத்துகளும் வலியுறுத்தப்பட்டன. 2,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தன்னார்வத்தோடு திரண்டு வந்து பங்கேற்ற இக்கண்டனப் பொதுக்கூட்டத்தில், ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.


""திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாட வேண்டும்'' என்ற ஆறுமுகசாமியின் கோரிக்கைக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகுவதைக் கண்டு ஆடிப் போன தீட்சிதர் கும்பல், தில்லை திருமறைக் கழகம், அர்த்தஜாம சிவபுராணக்குழு போன்ற ""லெட்டர் பேடு'' அமைப்புகளில் புகுந்து கொண்டு, ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை சிதம்பரத்தில் நடத்தியது. தீட்சிதர்களே பசை வாளியைத் தூக்கிக் கொண்டு போஸ்டர் ஒட்டி நடத்திய இக்கலந்துரையாடல் கூட்டத்தில், பார்ப்பன பாதந்தாங்கிகளைத் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை. ""தேவாரம் பாட வேண்டும் என வீண் விவகாரம் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்'' எனப் பேசி வன்முறையைத் தூண்டி விட இக்கலந்துரையாடலைப் பயன்படுத்திக் கொண்டது. தீட்சிதர் கும்பல்.

இதுவொருபுறமிருக்க, ஆறுமுகசாமிக்கு எதிராக தீட்சிதர்கள் தொடுத்த வழக்கை, ஊறப் போடும் விதத்தில் நீதிமன்றம் மெத்தனமாக நடந்து கொண்டது. இதனைக் கண்டித்தும், ஆறுமுகசாமி தேவாரம் பாட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்; வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் எனக் கோரியும் 28.7.06 அன்று நீதிமன்றத்தின் முன் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வழக்கு விசாரணையின் பொழுது, ""ஆறுமுகசாமி கால பூஜை நேரத்தில் தேவாரம் திருவாசகம் பாடப் போவதாகக் கூறுகிறார். அதனால்தான், அவர் பாடத் தடை விதிக்கக் கோருகிறோமேயன்றி, எங்களுக்கு வேறு உள்நோக்கம் இல்லை'' என தீட்சிதர் கும்பல் நியாயவான்களைப் போல வாதாடினர். இதற்குப் பதில் அளித்த ஆறுமுகசாமி தரப்பு வழக்குரைஞர்கள், ""பூஜை நேரத்தில் தேவாரம் திருவாசகம் பாடக் கோரமாட்டோம் என இங்கேயே எழுதித் தந்து விடுகிறோம். மற்ற நேரங்களில் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையேறிப் பாடுவதைத் தடுக்கக் கூடாது'' எனக் கூறி, தீட்சிதர்களின் பாசாங்கை அம்பலப்படுத்தினர்.

ஆனால், ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையேறித் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை, நிரந்தரத் தடையாக மாற்றி வெளிவந்திருக்கும் உரிமையியல் நீதிமன்றத் தீர்ப்போ, எவ்விதப் பாசாங்கும் இன்றி அப்பட்டமாகத் தீண்டாமையைத் தூக்கிப் பிடிக்கிறது.

""தீட்சிதர்களைத் தவிர்த்து மற்றவர்களையும் பாட அனுமதித்தால் அந்தத் திருக்கோயிலின் புனிதத் தன்மை கெட்டு விடும்; கோயிலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பும், நட்டமும் ஏற்படும். எதிர்மனுதாரர் ஆறுமுகசாமியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் திருச்சிற்றம்பல மேடையில் கலவரம் ஏற்பட வாய்ப்புண்டு. கனகசபை மீது ஏறி நின்று பாடுவதற்கு தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஐதீக நடைமுறை, பழக்க வழக்கம் தடையாக உள்ளது. அப்படி பாட முற்பட்டால் அது கோயிலின் நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறிய செயலாகும்.''


""மீண்டும் மீண்டும் அவர் திருச்சபையில் பாடவேண்டும் என்று பலருடைய கெட்ட துர்போதனைகளின் மூலமாகச் செயல்பட்டு வருவது நன்கு தெரிகிறது. கடலூர் மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மைய நிர்வாகிகள் தூண்டுதலின் பேரில் இந்த எதிர்மனுதாரர் செயல்பட்டு வருகிறார்'' எனப் பார்ப்பனக் கும்பலே அதிசயிக்கும்படி தீண்டாமை விஷம் தீர்ப்பில் கக்கப்பட்டுள்ளது.

தீட்சிதர்களைத் தவிர்த்து மற்றவர்களைப் பாட அனுமதித்தால், அந்தத் திருக்கோயிலின் புனிதத்தன்மை கெட்டு விடும் என்பதற்கு, தீண்டாமை சாதிப் பாகுபாட்டைத் தவிர வேறென்ன பொருள் கொள்ள முடியும்?

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, 8.5.2000 அன்று ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையேறிப் பாட முயன்றபொழுது, தீட்சிதர்கள் கோயிலுக்குள்ளேயே, பக்தர்களின் கண் முன்னாலேயே ஆறுமுகசாமியைக் கொடூரமாகத் தாக்கி, கையை முறித்து, கோவிலுக்கு வெளியே வீசியெறிந்தனர். அதனால்தான், ஆறுமுகசாமி, தான் திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாடுவதற்கு போலீசு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்திருந்தார். இதன்படி பார்த்தால், தீட்சிதர்களைத்தான் வன்முறையாளர்களாகக் குற்றம் சாட்டியிருக்க வேண்டும். ஆனால், தீர்ப்போ, மற்றவர்களை (பார்ப்பனர் அல்லாதவர்களை) வன்முறையாளர்களாக, அபாண்டமாகப் பழி சுமத்துகிது.

ஆறுமுகசாமி பாடுவதற்குத் தடை கேட்டு தீட்சிதர்கள் கொடுத்திருந்த மனுவில், கோவிலில் விலையுயர்ந்த நகைகள் இருப்பதை ஒரு காரணமாகக் காட்டியிருந்தனர். தீட்சிதர்களின் இந்த வாதத்தைதான், ""மற்றவர்களைப் பாட அனுமதித்தால் கோயிலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பும், நட்டமும் ஏற்படும்'' எனத் தீர்ப்பு வாந்தியெடுத்துள்ளது.

கோயிலுக்கு வரும் வருமானம் பற்றி முறையாகக் கணக்குக் காட்ட மறுக்கும் தீட்சிதர்கள்; அந்த ஆலயத்தின் நிர்வாகத்தைக் கண்காணிக்க அரசு அதிகாரி நியமிக்கப்படுவதை எதிர்க்கும் தீட்சிதர்கள் கோயில் நகைகள் பற்றி ஒப்பாரி வைப்பது மோசடித்தனமானது. மேலும், ஏற்கெனவே கோயில் நகைகள் காணாமல் போனதற்கும், தீட்சிதர்களுக்கும் தொடர்புண்டு என்பது ஊரறிந்த உண்மையாக இருக்கிறது.

""இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக, 1000 ஏக்கர் நிலமுள்ளது; உண்டியல் வைக்காமல், பக்தர்களிடமிருந்து தீட்சிதர்களே நேரடியாகப் பணம் பெறுகிறார்கள். நகைகள் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் காரணங்களால் இக்கோவிலில் அரசு நிர்வாக அதிகாரியை நியமிப்பது சரி'' என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வெங்கடாசலய்யா 1997இல் தீர்ப்பளித்திருக்கிறார்.

மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியன், விஜய நகரப் பேரரசன் கிருஷ்ண தேவராயன், பல்லவ மன்னன் சிங்க தேவன் ஆகிய மன்னர்களால் கட்டப்பட்டது சிதம்பரம் நடராஜர் கோயில் என்பதுதான் வரலாறு. சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரத்தில் தற்பொழுது வசித்து வரும் வீரப்ப சோழனார் என்ற முன்னாள் ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர்களிடம்தான் நடராஜர் கோவிலின் நிர்வாகம் இருந்து வந்தது. இரவில் கோவில் நடையை மூடிய பிறகு, கோவில் சாவியைப் பல்லக்கில் வைத்து பிச்சாவரம் சோழனார் ஜமீன்தார் வீட்டில் ஒப்படைக்க வேண்டும். காலையில் போய் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் மரபாக இருந்து வந்தது. அந்த ஜமீன்தார் குடும்பத்தை ஏமாற்றி, கோவில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள் என்பது உலகமே அறிந்த உண்மை. வடநாட்டில் இருந்து ஓட்டி வரப்பட்டு சிதம்பரத்தில் குடியமர்த்தப்பட்ட தீட்சிதர்கள், இப்பொழுது சிதம்பரம் கோயில் தொன்று தொட்டே தங்களுக்குச் சொந்தமாக இருந்து வருவதாக வரலாற்றையே திரித்து விட்டார்கள்.

இப்படிப்பட்ட நிலையில், முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த கதையாக, தீட்சிதர்களை யோக்கியவான்களாகவும், மற்றவர்களைத் திருடர்கள் போலவும் தீர்ப்பு அபாண்டமாகப் பழி போடுகிறது.

ஐதீகம் மரபைக் காட்டி, திருச்சிற்றம்பல மேடையில் தீட்சிதர்கள்தான் தேவாரம்திருவாசகம் பாட உரிமை படைத்தவர்கள் என்கிறது தீர்ப்பு. ஆனால், 1987க்கு முன்பு வரை, தீட்சிதர்கள் கூட திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம் பாடியது கிடையாது. திருச்சிற்றம்பல மேடைக்குக் கீழிருக்கும் மகாமண்டபத்தைத் தாண்டி தேவாரம் திருவாசகம் வருவதற்கு தீட்சிதர்கள் அனுமதித்ததேயில்லை. இத்தீண்டாமைக்கு எதிராக தமிழ் அறிஞர்கள் நடத்திய போராட்டத்தாலும்; 1987இல் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த வீ.வீ. சுவாமிநாதன் கொடுத்த நெருக்குதலாலும், தீட்சிதர்கள் தாங்களே திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம் பாடுவதாகச் சமரசம் செய்து கொண்டார்கள்.

1999இல் கடலூர் மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படி, சிவனடியார் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடை ஏறி, தேவாரம் திருவாசகம் பாடி நடராஜனை வழிபட்டுள்ளார். இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தவுடன், மற்றவர்களும் திருச்சிற்றம்பல மேடை ஏறிப் பாடி விடுவார்களோ என அரண்டு போன தீட்சிதர் கும்பல், தங்களுக்கு மட்டுமே அந்த உரிமையுண்டு எனப் புளுகத் தொடங்கியது. தங்கள் சுய இலாபத்திற்காக ஐதீகம் மரபுகளை உடைப்பதும், உருவாக்குவதும் பார்ப்பனர்களுக்குக் கைவந்த கலையல்லவா!

எல்லாவற்றுக்கும் மேலாக, ஏழாம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு வரை தமிழகக் கோயில்களில் தேவார திருவாசகமும், நாலாயிர திவ்ய பிரபந்தங்களும் ஓதப்பட்டதற்கான கல்வெட்டுச் சான்றுகள் ஏராளமாக உள்ளன. பார்ப்பனர்களைப் போலவே, தீர்ப்பும் இந்த வரலாற்று உண்மைகளைக் குழி தோண்டி புதைத்து விட்டு, தமிழுக்கும், தமிழனுக்கும் தடை போடுகிறது, சிதம்பரம் கோயிலில் விற்கப்படும் ""ஸ்தல புராணம்'' என்ற புத்தகத்தில் (இதுதான் தீட்சிதர்கள் கொடுத்த வரலாற்று ஆதாரமும்கூட) கூறப்படும் ""வரலாற்று''ப் பிதற்றல்களை ஆதாரமாகக் காட்டும் இந்தத் தீர்ப்பை, அறிவும், மானமும் உள்ள எவரேனும் ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஆறுமுகசாமியை மனித உரிமை பாதுகாப்பு மையம் தூண்டி விடுவதாகப் புலனாய்வு செய்திருக்கிறது தீர்ப்பு. 1999இல், திருச்சிற்றம்பல மேடை ஏறிப் பாட முயன்ற ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் தடுத்தபொழுது, ஆறுமுகசாமி கடலூர் மாவட்ட நீதிபதியிடம் தனது வழிபாட்டு உரிமைக்காக மனு கொடுத்தார். அப்பொழுது அந்த உரிமைக்காக அவரைத் தூண்டிவிட்டது யார் என்றும் புலனாய்வு செய்திருந்தால், தீர்ப்பு இன்னும் தெளிவாக இருந்திருக்கும்.


""நந்தன் முக்தியடைந்த இடம் தான் சிதம்பரம் நடராஜர் கோவில்'' என்ற பார்ப்பனப் புளுகை, வரலாற்று மோசடியை மேற்கோள் காட்டும் தீர்ப்பில், உண்மையையும், நியாயத்தையும் முட்டாள்கூடத் தேட மாட்டான்.

நியாயமாகப் பார்த்தால் தமிழர்களைத் தீண்டத்தகாதவர்களாகவும், திருடர்களாகவும், வன்முறையாளர்களாகவும் சித்தரித்துத் தீர்ப்பை எழுதிய நீதிபதி அம்பேத்கரைப் பதவி நீக்கம் செய்து, அவரை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்க வேண்டும். ஆனால், சூத்திரர்களின் ஆட்சி எனச் சொல்லிக் கொள்ளப்படும் கருணாநிதி அரசின் கீழ் இருக்கும் போலீசோ, நீதிபதி அம்பேத்கரைக் கண்டித்து சுவரொட்டி இயக்கம் எடுத்த வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு. ஆகிய பரட்சிகர அமைப்புகள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

இத்தீர்ப்பை பல்வேறு சனநாயக அமைப்புகளும், தமிழின அமைப்புகளும் கண்டித்துள்ளன. மேலும், இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக ஆறுமுகசாமி தரப்பு வழக்குரைஞர்கள் கூறியுள்ளனர்.


இது ஒருபுறமிருக்க, வீட்டுத் தரகர் ராயர், மூர்த்தி தீட்சிதர், செல்வராஜ் ஆகியோர் சிதம்பரம் கோயிலில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு இறந்து கிடந்ததைப் பற்றி விசாரிக்க வேண்டும் என முன்னாள் ஆடூர் ஊராட்சி மன்றத் தலைவர் என்.இளங்கோவன் கொடுத்த புகாரை விசாரிக்காமல் போலீசார் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இப்புகார் தொடர்பாக, முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் வீ.வீ. சாமிநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம்பசிவம் ஆகியோர் அனுப்பியுள்ள நினைவூட்டல் கடிதங்களையும் அதிகார வர்க்கம் கண்டு கொள்ளவேயில்லை.

இந்நிலையில் இப்புகார் மீது உடனடியாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடுத்த வழக்கை ஏற்றுக் கொண்டுள்ள உயர்நீதி மன்றம், இது தொடர்பாக பதில் அளிக்கக் கோரி தமிழக அரசுக்கு ""நோட்டீஸ்'' அனுப்பியிருக்கிறது.

சிதம்பரம் கோயிலுக்குள் நுழைய விடாமல் ஆறுமுகசாமி கைது செய்யப்பட்ட விவகாரம் சட்டசபையில் எழுப்பப்பட்ட பொழுது, ""இந்தச் சட்டப் பிரச்சினை குறித்து மூத்த வழக்கறிஞர்களுடன் ஆராய்ந்து பார்த்து, இதை எப்படி எதிர் கொள்ளலாம் என அரசு முடிவு செய்யும்'' என்று தமிழக முதல்வர் கருணாநிதி உறுதியளித்தார். இதனை நினைவூட்டியும்; ""மற்றவர்கள்'' திருச்சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம் திருவாசகம் பாடத் தடை செய்து தீர்ப்பு வந்துள்ள நிலையில், தமிழக அரசு இனியும் மெத்தனமாக இல்லாமல், இப்பிரச்சினையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும் கையெழுத்து இயக்கமொன்றை, சிதம்பரம் நகர் பகுதியில் மனித உரிமை பாதுகாப்பு மையம், தி.க., பா.ம.க., சி.பி.ஐ., சி.பி.எம்., வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தி வருகின்றன.


பத்து நாட்களில் ஒரு இலட்சம் கையெழுத்துப் பெற்று, அந்த மனுவை தமிழக முதல்வரிடம் கொடுப்பது என்ற இலக்கோடு, இந்தக் கையெழுத்து இயக்கம் வீச்சாக நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நகரப் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான சாவடியில் ஆறுமுகசாமி தங்கியிருந்து இப்பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளித்து வருகிறார். கையெழுத்து இயக்கம் தொடங்கிய முதல் மூன்று நாட்களுக்குள்ளாகவே, ஏறத்தாழ 10,000 பேர் தாமாகவே சாவடிக்கு வந்து, இப்போராட்டத்திற்கு ஆதரவாகக் கையெழுத்திட்டுள்ளதோடு, ""ஒருவருக்கு ஒரு ரூபாய்'' என்ற போராட்ட நிதியினையும் வழங்கி வருகின்றனர். பல இளைஞர்களும், மாணவர்களும் அடுத்த கட்ட போராட்டத்திற்குத் தங்களையும் அழைக்கக் கோரி, பெயரையும், முகவரியையும் கொடுத்துச் சென்றுள்ளனர்.

பார்ப்பனர்களும், நீதிமன்றமும் தமிழ் வழிபாட்டு உரிமைக்கு குறுக்கே நந்தியாக நின்றாலும், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பக்தர்கள் இக்கோரிக்கைக்கு ஆதரவாக நிற்பதற்கு இதுவே சாட்சி. இவர்களை அமைப்பாக அணிதிரட்டிப் போராட்டத்தில் இறங்கச் செய்வதன் மூலம்தான், கோவில்களில் தமிழுக்கும், தமிழனுக்கும் எதிராகப் பார்ப்பனர்கள் கடைபிடிக்கும் தீண்டாமையை ஒழித்துக் கட்ட முடியும்.

மனித உரிமை பாதுகாப்பு மையம்,
கடலூர் மாவட்டம்.

திருட்டு தீட்சிதரே


பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற கதையாக, சிதம்பரம் நகரில் மிதிவண்டிகளைத் திருடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் ராமராஜ் தீட்சிதர் என்ற திருட்டுப் பார்ப்பானை, அவன் 10.8.2006 அன்று ஒரு மிதிவண்டியைத் திருடிச் செல்லும் பொழுது பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தீட்சிதர் கும்பலோ, ராமராஜ் தீட்சிதர் மனநிலை சரியில்லாதவர் என்ற பொய்யைக் கூறி அவனை விடுவிக்க முயன்றது.

எனினும், பத்திரிகையாளர்கள் இத்திருட்டைப் புகைப்படம் எடுத்துவிட்டதன் விளைவாகவும்; மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தந்தி கொடுத்ததோடு, அத்திருட்டுப் பார்ப்பானைக் கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்ததன் விளைவாகவும், சிதம்பரம் நகர போலீசார் வேறு வழியின்றி, ராமராஜ் தீட்சிதரைக் கைது செய்ததோடு, அவன் ஏற்கெனவே திருடி மறைத்து வைத்திருந்த ஐந்து மிதிவண்டிகளையும் கைப்பற்றினர்.

ஊரான் வீட்டு மிதிவண்டிகளையே அமுக்கப் பார்க்கும் தீட்சிதர் கும்பல், நடராசர் கோவில் சொத்தைப் புறங்கையால் நக்காமல் விட்டு வைத்திருப்பார்களா? சிவன் சொத்து குலநாசம் என்பதெல்லாம் ""மற்றவர்களுக்கு''த் தான் போலும்!

நன்றி : தமிழ்சர்க்கிள்

இந்த கட்டுரை செப்டம்பர் 2006ல் புதிய ஜனநாயகத்தில் வெளிவந்தது.