Mar 15, 2011

கம்யூனிசமும் குடும்பமும்' -புத்தக அறிமுகம்!


- ஆசிரியர் அலெக்சான்ட்ரா கொலந்தாய்

மார்ச் 8. உழைக்கும் பெண்கள் தினம். இந்த தினத்திற்கு வரலாற்று முக்கியத்துவம் இருக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரையிலான சமூக பாதுகாப்பு, சமூக, பொருளாதார, அரசியல் சுதந்திரத்திற்கான உரிமை என தங்களுடைய அடிப்படை கோரிக்கைகளுக்காக பெண்கள் போராடும் தினமாக இருக்கிறது. முதலாளித்துவம் தன் சரக்குகளை விற்றுத்தீர்ப்பதற்காக பல நாள்களை புதிது புதிதாக உருவாக்கி கொண்டே இருக்கிறது. அதில், "மகளிர் தினத்தை' யும் மாற்றுவதில் முனைப்போடு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் 'கம்யூனிசமும், குடும்பமும்' என்ற ஒரு சிறந்த புத்தகம் சமீபத்தில் வெளிவந்துள்ளது. லெனின் காலத்து ரஷ்ய கம்யூனிச கட்சியின் தலைவர்களில் ஒருவரும், சோவியத் அரசின் சமூகநலத்துறை அமைச்சராக பணியாற்றியவருமான பெண் போராளி தான் அலெக்சான்ட்ரா கொலந்தாய். இவர் 1920-ல் ஆண்டில் எழுதிய ஒரு கட்ரையின் ("Communism and the family" ) தமிழாக்கமே இந்தப் புத்தகம்.

1917 -ல் நடைபெற்ற ரசிய புரட்சிக்கு பிறகு, பாட்டாளி வர்க்க பண்பாட்டில் குடும்பம், பெண்களின் பிரச்சனைகள் என பல கேள்விகளுக்கு தீர்வாக பல விசயங்களை ஆசிரியர் முன்வைக்கிறார்.

ஆசியா போன்ற நாடுகளில் பல குடும்பங்களில் பெண்கள் இன்னும் வீட்டை விட்டு வெளியேறவில்லை. பெண் பெற்றோரையோ அல்லது கணவனையோ அல்லது பிள்ளைகளைத் தான் வாழ்நாள் முழுவதும் சார்ந்து வாழ வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

"ஒரு பெண் சமூகத்தைச் சார்ந்திருக்க வேண்டுமேயன்றி ஒரு தனி மனிதனை அல்ல என்பதை பெண்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை" என்கிறார் ஆசிரியர்.

அப்படியே வீட்டை விட்டு, வெளியில் வந்து வேலை செய்யும் பெண்களுக்கோ, இது ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் பயணிக்கும் சாகச பயணமாகிவிடுகிறது. இந்த பயணத்தில் எங்கு சோர்ந்தாலும், வீட்டில் அடைப்பட்டு விடுகிற அவல நிலை இருக்கிறது.

"முதலாளித்துவமானது பெண்களால் தாங்க முடியாத பாரத்தை அவர்கள் மேல் சுமத்தியிருக்கிறது. அவரது வீட்டு வேலைகளை குறைக்காமலேயே அவரைக் கூலித் தொழிலாளியாக்கியிருக்கிறது" என்கிறார் ஆசிரியர்.

குழந்தை வளர்ப்பு என்பது பெண்கள் சார்ந்த ஒன்றாக தான் இன்றும் தொடர்கிறது. வேலைக்கு செல்லும் பெண்களோ, குழந்தைகளோடு நேரம் செலவழிக்க முடியாமல் திணறுகிறார்கள். குற்ற உணர்வு கொள்கிறார்கள்.

"புரட்சிக்கு முன்னர் பெற்றோர்கள் ஏற்றிருந்த பொறுப்பை எல்லாம், இனி கம்யூனிச சமூகம் ஏற்றுக்கொள்ளும். ஆகவே, பெற்றோர்கள் நிம்மதியாக இருக்கலாம்"

- புரட்சிக்கு பிறகு, மக்கள் நல சோவியத் அரசு, பெண்களின் பிரச்சனையை நடைமுறை வாழ்வில் எப்படி எதிர்கொண்டது? என்பதை சோவியத் அனுபவம் வாயிலாக விரிவாக விளக்கியிருக்கிறார். அனைவரும் படிக்க வேண்டிய அருமையான புத்தகம்.

விலை ரூ. 20/- பக்கங்கள் 24

வெளியீடு :
பெண்கள் விடுதலை முன்னணி,
41, பிள்ளையார் கோவில் தெரு,
மதுரவாயல், சென்னை - 600 095.
தொடர்பு கொள்ள : 98849 50952
கிடைக்குமிடம் : கீழைக்காற்று பதிப்பகம், சென்னை - 044-28412367