Jan 28, 2016

காந்தி தப்பித்துவிட்டார்!

இன்றைய தமிழ் இந்து நாளிதழில் கட்டுரையாளர் சமஸ் சாதிய விசயத்தில் காநதியின் நடத்தை குறித்து நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார்.  இதற்கு சரியான எதிர்வினைகளை இடதுசாரி தரப்பிலிருந்து யாராவது அழுத்தமாக எழுதுவார்கள் என எதிர்பார்க்கிறேன்!

இந்த கட்டுரையைப் படித்து தோழர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது ”காந்தி” சம்பந்தமாக சமீபத்திய ஒரு காவல் நிலையம்  தொடர்பான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்!

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்கள் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. இடையில்  காந்தியவாதி சசிபெருமாள் மரணத்திற்கு பிறகு, பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் கடையை நொறுக்கியதும், தமிழ்நாடு தழுவிய அளவில் கடைகளை தன்னெழுச்சியாகவும், அமைப்பு ரீதியாகவும் பலரும் கடையை அடித்து நொறுக்கினார்கள்.  அதில் மக்கள் அதிகாரம் தோழர்கள் முன்னணியில் நின்றார்கள் என்பது அனைவரும் அறிந்த விசயம். வருகிற பிப்ரவரியில் கூட டாஸ்மாக்கை எதிர்த்து திருச்சியில் சிறப்பு மாநாடு வேலைகளில் பரபரவென இருக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியில், தென் தமிழகத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஒரு பகுதியில் மக்கள் மத்தியில் தொடர்ந்து டாஸ்மாக் எதிர்ப்பு பிரச்சாரம், கடையில் சாணியடிப்பது, கடையை நொறுக்குவது என போய்க்கொண்டிருந்த பொழுது, போலீசு இரண்டு தோழர்களை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளது.  தொடர்ந்து குடைச்சல் தருகிறார்களே என்ற கடுப்பில், ”நம்ம நீதியரசர்கள்” பாணியில் காந்தியின் அகிம்சை குறித்து தங்களுக்கு தெரிந்த அரைகுறை விசயங்களுடன் தோழருக்கு ”போதித்திருக்கிறார்கள்”. அதிகபட்சமாக போய், காந்தி குறித்து இரண்டு பக்க அளவில் எழுதி தர கேட்டிருக்கிறார்கள். (மனசில ஆழப்பதியனுமாம்!)   ”காந்தி பற்றி எழுதி கேட்பதற்கெல்லாம் உங்களுக்கு உரிமையில்லை. இருப்பினும் நீங்கள் ”மிகவும் விருப்பப்பட்டு” கேட்பதால் எழுதி தருகிறோம்.  அதற்கு பிறகு மனம் புண்பட்டுவிட்டது என சொல்லக்கூடாது!” என பதிலளித்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் வழக்குரைஞர் வந்துவிட, பேச்சு வேறு திசையில் திரும்பிவிட்டது. தோழர்களிடமிருந்து ”காந்தி தப்பிவிட்டார்”. :)

Jan 22, 2016

மறந்து போச்சு!

நல்ல தமிழ்படங்கள் பார்த்த நேரம் போக, வேற்றுமொழி படங்களும் பார்ப்பது வழக்கம்! பிற மொழிப்படங்களின் தரத்தை உரசிப் பார்க்க சமீப காலங்களில் IMDB உதவுகிறது.  10க்கு 7 மார்க் வாங்கினால், மினிமம் கேரண்டி கிடைக்கிறது. சில சமயங்களில் சொதப்பவும் செய்கிறது!

அப்படித்தான் நானி நடத்த தெலுங்கு படமான Bhale Bhale Magadivoy (You are a strange man) பார்த்தேன்.  நகைச்சுவை காதல் படம் என வகைப்படுத்தலாம்.

சிறு வயதிலிருந்தே நாயகனுக்கு மறதி ஒரு பெரும் பிரச்சனை.  ஒரு வேலையில் ஈடுபடும் பொழுது, வேறு ஒரு வேலை குறுக்கிட்டால் அதிலேயே மூழ்கிப்போவது!  உதாரணத்துக்கு உங்களுக்கும் சேர்த்து ஒரு படத்துக்கு டிக்கெட் எடுத்துவிட்டு,  வேறு வேலையில் மூழ்கி வராமல் போனால், திரையரங்கு வாயிலில் காத்திருக்கும் உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்?

திருமணம் என வரும் பொழுது சிக்கலாகிறது. அவமானப்படுத்தப்படுகிறான்.  இதற்கிடையில் காதலில் விழுகிறான். காதலியிடம் தனது பிரச்சனையை சொல்லாமல், மறைத்து தான் சொதப்பும் பொழுதெல்லாம் கதை சொல்லி தப்பித்து, இறுதியில் மாட்டி, அவனுடைய இயல்பான நல்ல குணத்தால் காதல் கல்யாணத்தில் முடிகிறது!

கொஞ்சம் மிகையாக தெரிந்தாலும், கற்பனையான பிரச்சனையல்ல!  ஒரு நேரத்தில் ஒரு வேலை செய்கிற நபர்களை சந்தித்திருக்கிறேன். இன்னொரு வேலை வந்தால், அதையும் திட்டமிட்டு நகர்த்தாமல், இரண்டு வேலைகளையும் குழப்பிக்கொள்கிற ஆட்கள் இருக்கிறார்கள். மருத்துவரீதியாக இது என்ன பிரச்சனை? எப்படி கையாள்வது என்பதை கொஞ்சம் விளக்கியிருக்கலாம். எதுவும் இல்லை!  நகர்த்தும் காட்சிகளில் கூட அத்தனை புதுமையில்லை. இந்தாலும் நானி ான் பத்ங்குகிறார்.

நீங்கள் இது மாதிரி ஆட்களை பார்த்திருக்கிறீர்களா? தெலுங்கில் நன்றாக ஓடிய படம் என்கிறார்கள்

Jan 7, 2016

நினைவுகள் தொலைகிற பொழுது!



உறவினர் ஒருவர் சிங்கப்பூர் நிறுவனத்தில் முதன்மை கண்காணிப்பாளராக (Chief Supervisor) சில ஆண்டுகளாக பணிபுரிகிறார்.  சென்னையை விட பல மடங்கு பரபரப்பான ஊர் சிங்கப்பூர்.   அவருக்கான வேலை கூட பத்து மணி நேரத்திற்கும் மேலே!  அவருக்கு கீழே பல பணியாளர்களை கண்காணிக்கிற வேலை!  எல்லாமும் சேர்ந்து ஒரு நாள் காலையில், வேலைக்கு கிளம்பும் பொழுது, மயங்கிவிழுகிறார்.  நினைவு திரும்பும் பொழுது, தன் துணைவியாரையே அடையாளம் தெரியவில்லை.   சிங்கப்பூரில் தங்க வைக்க அனுமதி, படிக்க வைக்க, பராமரிக்க என எல்லா சிரமங்களும் சேர்ந்து, அவருடைய எட்டு வயது பையனை தாத்தா பாட்டி தான் வளர்த்து வருகிறார்கள்.  சட்டென தனது பையன் நினைவுக்கு வந்து, ஊருக்கு போய் உடனே பார்க்கவேண்டும் என பரபரக்கிறார்.  பிள்ளையை பிரிந்து இருக்கும் ஏக்கம் நினைவு அடுக்குகளில் இருந்து மேலே வந்துவிட்டது!

மருத்துவமனையில் சேர்த்து சில நாட்கள் இருந்தார்.  ஊரில் இருக்கும் பரபரப்பு சிங்கப்பூர் மருத்துவத்தில்  இல்லை.  விமான பயணத்தில் ஏதும் பயமில்லை என மருத்துவரின் ஆலோசனை பெற்று சென்னைக்கு கடந்த ஞாயிறு வந்து சேர்ந்தார்.  மருத்துவர் சத்யாவிடம் இந்த பிரச்சனை குறித்து ஆலோசனை கேட்டதற்கு, சென்னை பொது மருத்துவமனை, வேலூரி சிஎம்சி, பாண்டிச்சேரி ஜிப்மர் என பரிந்துரைத்தார்.  உறவினரின் நண்பர்களோ  அப்பல்லோவை பரிந்துரைத்து, சேர்த்து நேற்றுவரை அங்குதான் இருந்தார்.

ஒருநாள் மருத்துவர் நயந்தாரா புகைப்படத்தை காட்டி யாரென கேட்கும் பொழுது, “இவளை நல்லா தெரியுமே! ரெம்ப பிடிக்குமே!” என சொல்கிறார். ஆனால் பெயர் நினைவுக்கு வரவில்லை. அடுத்தநாள், டி.ராஜேந்தர் புகைப்படத்தை காண்பிக்கும் பொழுது, “டி.ராஜேந்தர்” என நொடி கூட தாமதிக்காமல் சொல்லிவிடுகிறார். என்ன ஒரு சோகம் இது! நயந்தரா பெயர் மறந்துவிடுகிறது! டி.ராஜேந்தர் பெயர் நினைவில் நிற்கிறது.

பல விசயங்களையும், செய்திகளையும் சொல்லி அவரிடம் நிறைய விவாதிக்கவேண்டும் என மருத்துவர் ஆலோசனை சொல்லியிருக்கிறார். அவரின் இயல்போ பேசுவதை விட, செயல்படுவதில் தான்  ஆர்வமாய் உள்ளவர். முரண் தான்!

நினைவுகள் தான் வாழ்க்கை.  நினைவுகள் மூளையில் ஒரு மூளையில் ஒளிந்து கொள்கிற பொழுதோ, தொலைந்து போகிற பொழுதோ, முதலில் இருந்து துவங்க வேண்டுமோ?!

-    - குருத்து