Nov 25, 2015

அப்போ வக்கீல்னா எது வேணா செய்யலாமா? - பதில்

வழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்குப் பதில்! – 6

 அப்போ வக்கீல்னா எது வேணா செய்யலாமா? ‘ஒன்வே’ யில் போகலாம். ‘நோ பார்க்கிங்’ கில் நிறுத்தலாம். ஹெல்மெட் போடாமல் போகலாம். அவுங்க மேல நடவடிக்கை எடுக்க கூடாது அப்படித்தானே?

இது வழக்கறிஞர்களைப் பற்றி ஊடங்களில் வேண்டுமென்றே செய்யப்படும் பொய்ப் பிரச்சாரம். மதுரை வக்கீல்கள் தலைக்கவசம் போடாமல் சென்றதை ஒரு போராட்டமாகத்தான செய்தார்கள். ”வக்கீல்கள் ஹெல்மெட் போட வேண்டியதில்லை. நாங்கள் கேட்க மாட்டோம். போராட்டத்தை கைவிடுங்கள்” என்று மதுரை காவல்துறை அதிகாரிகள் கூறினர். “ இது மக்கள் பிரச்சினை என்ற அடிப்படையில்தான் போராடுகிறோமேயன்றி எங்களுக்கு சிறப்பு சலுகை கோருவதற்காக அல்ல” என்று கூறி மதுரை வழக்கறிஞர்கள் இதனை நிராகரித்து விட்டனர். இது நடந்த உண்மை.

“அட்வகேட்” என்று வண்டியில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு அடாவடித்தனம் செய்பவர்களே இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறார்கள். அத்தகையோர் எல்லாப் பிரிவினர் மத்தியிலும்தான் இருக்கிறார்கள். அவர்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும்.

ஆனால் போராட்டம் வேறு, அதிகார துஷ்பிரயோகம் வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக்கும் விசமத்தனமான பிரச்சாரத்தை ஊடகங்கள் செய்கின்றன. “காவல் துறை, தமிழ்நாடு அரசு, இந்திய அரசு, இந்தியன் ஆர்மி” என்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு அதிகார வர்க்கத்தினர் அடாவடி செய்வதும், அரசு வாகனங்களை தம் குடும்ப வாகனமாகப் பயன்படுத்துவதும் அன்றாடம் நடக்கும் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகங்கள்.

உரிமைகளுக்குப் போராடும் வழக்கறிஞர்கள் ஒரு போதும் இத்தகைய முறைகேடுகளிலோ, காலித்தனங்களிலோ ஈடுபடுவதில்லை. உண்மையில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் போலீசுடன் அங்காளி பங்காளியாக இருக்கும் வழக்கறிஞர்கள்தான். அத்தகையவர்களைப் பற்றி போலீசு ஒருபோதும் புகார் சொல்வதில்லை.

 - ”அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள்!” – மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு வெளியிட்ட சிறு வெளியீட்டிலிருந்து....

Nov 24, 2015

ம.க.இ.கவின் அனைத்து பாடல்களும் அடங்கிய புதிய டிவிடி!

அசுரர்களின் குரல் கோவனுடையது....

புரட்சிகரப் பாடகர் கோவன் இதுவரை பாடிய பாடல்கள் அனைத்தையும் தொகுத்து இரு குறுந்தகடுகளாக வெளியிட்டிருக்கிது மக்கள் கலை இலக்கியக் கழகம். ‘அசுரகானம்’ என்னும் தலைப்பில் ஒரு தகடும், ‘ஊருக்கு ஊரு சாராயம்’ என்னும் தலைப்பில் இன்னொரு தகடுமாக வந்திருக்கிறது.

’இருண்ட காலம்’ ‘அசுரகானம்’ ’ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா?’ ’அடிமை சாசனம்’ ‘காவி இருள்’ என கடந்த கால் நூற்றாண்டுகால அரசியல், சமூக நிகழ்வுகளை ஒரு இயக்கமும், அதன் தெருப்பாடகனும் எப்படிக் கடந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள இந்த தொகுப்புகள் உதவும்...இசையை, மக்களை, அரசியலை நேசிக்கும் ஒவ்வொருவரும் அவசியம் வாங்க வேண்டிய தொகுப்புகள்....

வெளியீடு -
 மக்கள் கலை இலக்கியக் கழகம்,

தொடர்புக்கு :

கண்ணையன் ராமதாஸ்,
16,முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,அசோக் நகர், சென்னை -600083.
தொலைபேசி - 9941175876,
email - pukatn@gmail.com.

Nov 23, 2015

போராட்டமென்றாலும் நீதிமன்றத்தின் மாண்பைக் குறைப்பதாக இருக்க கூடாதல்லவா? - பதில்

வழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்குப் பதில்! – 5

போராட்டம் நடத்தினாலும் அது நீதிமன்றத்தின் மாண்பைக் குறைப்பதாக இருக்க கூடாதல்லவா? வாயில் கருப்புத்துணி கட்டிக் கொண்டு நீதிமன்ற அறையில் அமர்வதும் தாழ்வாரத்தில் முழக்கம் போடுவது சரியா?
ஒரு பிரச்சனையின் தீவிரம் என்ன என்பதும், அதற்காகப் போராடுபவர்கள் அதில் கொண்டுள்ள ஈடுபாடும், போராட்டம் நடக்கும் சூழ்நிலையும்தான் போராட்ட வடிவத்தை தீர்மானிக்கின்றன.

போலிசை எப்படியாவது தடியடி நடத்த வைக்க வேண்டும் என்றோ துப்பாக்கி சூடு நடத்தி யாரையாவது சாகக்கொடுக்க வேண்டும் என்றோ எண்ணி யாரும் போராடுவதில்லை. தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் தத்தம் வழியில் முயற்சிக்கிறார்கள். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை நொறுக்கி, தடியடிப்பட்டு சிறை சென்றார்கள். சசிபெருமாள் அமைதி வழியில் தன்னை அழித்துக்கொண்டார்,
சமீபத்தில் , போலி கல்வி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு எத்தனை முறை போராடியும் செவி சாய்க்கவே மறுக்கும் விழுப்புரம் கலெக்டரின் அலுவலக வாயிலில் அமர்ந்து எலி மருந்து குடித்தார்கள் மாணவர்கள். விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் முதல் வரிசையில் ஒரு விவாசாயியை பிணம் போல் அலங்கரித்து உட்காரவைத்து கலெக்டருக்குத் தங்கள் நிலையை உணர்த்தினார்கள். விவசாயிகள் தற்கொலை பற்றிக் கவலைப்படாத அரசு அதிகாரிகளுக்கு இந்த அவமதிப்பை பொறுக்க முடியவில்லையாம்.

“கோரிக்கை நியாயம்தான், ஆனால் போராட்ட முறை தவறு” என்று அறிவுரை சொல்பவர்கள், கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய மாற்றுப் போராட்ட முறை என்ன என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். மனநிலை பிறழ்ந்தவர்கள், நோக்கமே இல்லாமல் கரெண்டு கம்பத்தை சுற்றுவது போல, மக்கள் முடிவே இல்லாமல், கலெக்டர் ஆபீசையோ, நீதிமன்றத்தையோ சுற்றிக் கொண்டிருக்க முடியுமா?

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கும் கோரிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்காகப் பல ஆண்டுகளாகப் போராட்டம் நடந்து வருகிறது இந்தி பேசும் மாநில உயர் நீதிமன்றங்களில் இந்தி வழக்காடு மொழியாக இருக்கும் போது தமிழ்நாட்டில் தமிழும், கேரளத்தில் மலையாளமும் இன்ன பிற மாநிலங்களில் அவர்களது மொழியும் வழக்காடு மொழியாக ஏன் அங்கீகரிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு இதுவரை அரசோ நீதிமன்றமோ யோக்கியமாக எந்தப் பதிலும் கூறவில்லை.

தாய் மொழியில் வழக்காடும் உரிமையை மறுப்பது என்பது மக்களின் வழக்காடும் உரிமையை மறுப்பதாகும். தமிழில் விசாரணை நடக்குமானால், தனது வழக்கில் என்ன நடக்கிறது என்பதைக் தெரிந்து கொள்ள இயலாமல் மக்கள் வாயைப் பிளந்து கொண்டு நிற்கவேண்டிய தேவை இல்லை. கோயிலில் சமஸ்கிருத மந்திரம் போல, கோர்டில் ஆங்கிலம்! இது வக்கீல் தொழிலை உயர்சாதி மேட்டுக்குடி மட்டும் கைப்பற்றி வைத்துக் கொள்வதற்கான தந்திரம்.

உயர்நீதிமன்றத்தில் வேண்டுமென்றே தலைமை நீதிபதியாக வேறு மாநிலத்தவரை நியமிக்கிறார்கள். பிறகு அவருக்கு தமிழ் தெரியாது என்கிறார்கள். டீக்கடை வேலைக்கு வரும் பீகார் தொழிலாளி தமிழ் கற்றுக் கொள்ளும்போது நீதிபதி கற்றுக்கொள்ள முடியாதா?நீதிபதிக்காக மக்களா, மக்களுக்கா நீதிபதியா?

ஒரே ஒரு நாள் பத்து பேர் வாயைத் திறக்காமல் நீதிமன்ற அறையில் உட்கார்ந்திருந்தால் நீதிமன்றத்தின் மாண்பு போய் விட்டதாக கூறுகிறார்களே, தன்னுடைய வழக்கில் என்ன விவாதிக்கப்படுகிறது என்றே புரியாத நிலையிலும், இந்த நீதிமன்றதின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடக்கிறார்களே மக்கள், அவர்களுக்கு மட்டும் மாண்பு கிடையாதா?

என்ன பொல்லாத மாண்பு? சட்ட மன்றம் நாடாளுமன்றத்துக்கு மாண்பு கிடையாதா? அங்கே தினமும் கூச்சல் போடுகிறார்கள், ஏன் என்று கேட்டால் எங்களை பேச அனுமதிக்கவில்லை, அதனால்தான் முழக்கம் போடுகிறோம் என்று விளக்கம் சொல்கிறார்கள். நீதிமன்றத்தில் நடந்ததும் அதுதானே!
நீதிமன்றத்துக்குள் தமிழை விடவில்லை. எதிர்ப்பு தெரிவித்தார்கள். 16 ஆம் தேதியன்று அவமதிப்பு விசாரணை நடக்கும் நீதிமன்ற அறைக்குள் வழக்கறிஞர்களை அனுமதிக்கவில்லை. வழக்கறிஞர்கள் எதிர்த்து முழக்கம் போட்டார்கள்.

தமிழையும் வழக்கறிஞர்களையும் நீதிமன்றத்துக்கு வெளியே நிறுத்தியது சரியா என்ற கேள்விக்கு பதிலளிப்பதை விட்டுவிட்டு, நீதிமன்றத்தின் மாண்பை பாதுகாக்க சி.ஐ.எஸ்.எஃப்-ஐ கொண்டு வருகிறேன் என்கிறார் தலைமை நீதிபதி.

தலைமை நீதிபதியின் அறைக்குள்ளேயே நுழைந்து சத்தம் போட்டிருக்கிறார் ஒரு நீதிபதி. சேம்பரில் மது அருந்தும் நீதிபதிகள், ஊழியர் நியமனத்தில் ஊழல் செய்யும் நீதிபதிகள், சாதி உணர்வுடன் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள், காசு வராத வழக்குகளில் வாய்தா போடும் நீதிபதிகள்-இவர்களையெல்லாம் தடுத்தாட்கொண்டு நீதிமன்றத்தின் மாண்பை இவர்களுக்கு உணர்த்தப் போவது யார்?

பிறந்த வீட்டுப் பெருமையை உடன் பிறந்தவனிடம் அளந்த கதையாக, நீதிமன்றத்தின் மாண்பைப் பற்றி வழக்கறிஞர்களிடம் கதையளப்பதா?

 - ”அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள்!” – மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு வெளியிட்ட  புத்தகத்திலிருந்து...

தலைக்கவசம் போடாமல் ஊர்வலம் போவதெல்லாம் நீதிமன்றத்தை அவமதிப்பதாகாதா? - பதில்

வழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்குப் பதில்! – 4

ஒரு தீர்ப்பு சட்டப்படி தவறு என்றால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதுதானே முறை? தீர்ப்பை மீறி தலைக்கவசம் போடாமல் ஊர்வலம் போவதெல்லாம் நீதிமன்றத்தை அவமதிப்பதாகாதா?

வழக்கறிஞர்களில் சிலரே கூட இப்படித்தான் கருதுகிறார்கள். இந்த பிரச்சனையை வேறு விதமாக அணுகிப் பார்ப்போம். ஒரு வேளை கட்டாய ஹெல்மெட் என்பதை தமிழக சட்டமன்றம் ஒரு சட்டமாக கொண்டு வந்திருந்தால், அந்த சட்டத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகளும் மக்களும் போராட்டம் நடத்தியிருப்பார்களா இல்லையா? மோடி அரசு கொண்டு வந்த நிலப்பறி(அவசரச்) சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடவில்லையா?

“தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சட்டம் இயற்றுகிறார்கள் அதை எதிர்த்து போராடுவது, ஜனநாயகத்தையே அவமதிப்பாகும்” என்று சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா? தேர்ந்தெடுக்கப்படாத நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து போராடுவது மட்டும் எப்படி அவமதிப்பாக முடியும்?

மகாராட்டிர அரசு, ஜைன பண்டிகை ஒன்றுக்காக நான்கு நாட்களுக்கு மாநிலம் முழுவதும் எல்லா விதமான அசைவ உணவுக்கும் தடை விதித்தது. கறிக்கடை உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்தனர். தடையை நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. ஒருவேளை தடை சரிதான் என்று நீதிமன்றம் சொல்லி இருந்தால்? விரதம் இருக்க வேண்டியது தானா?

சமீபத்தில் நெய்வேலி தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தங்களுடைய வேலைநிறுத்த உரிமையில் அத்துமீறித் தலையிடும் நீதிமன்றத் தீர்ப்பை தொழிற்சங்கங்கள் மதிக்கவில்லை . வேலை நிறுத்தம் தொடர்ந்தது. இது நீதிமன்ற அவமதிப்பு என்று நிர்வாகம் கூச்சலிட்டது. தொழிலாளர்கள் அதனைப் பொருட்படுத்தவே இல்லை. மக்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பது அரசாங்கமாக இருந்தால் என்ன நீதிமன்றமாக இருந்தால் என்ன? இதில் முன் விட்டைக்கும் பின் விட்டைக்கும் என்ன வேறுபாடு?

- ”அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள்!” – மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு வெளியிட்ட சிறு வெளியீட்டிலிருந்து....

Nov 22, 2015

சிவப்பு பலூன் நண்பன்! – மிகச் சிறந்த படம்!


பாரிஸ். பள்ளி செல்லும் வழியில், ஒரு கம்பத்தில் சிக்கித் தவிக்கிறது ஒரு அழகான சிவப்பு பலூன். காப்பாற்றுகிறான்.

பலூனோடு பேருந்தில் ஏற அனுமதி மறுக்கிறார்கள்.  பலூனை கைவிட மனசே இல்லாமல், ஓடியே பள்ளியை அடைகிறான்.   மழையிலிருந்தும், பனியிலிருந்தும் பாதுகாத்து வீடு வந்துசேர்கிறான்.  அம்மாவும் வீட்டில் அனுமதிக்க மறுத்து, பலூனை வெளியே துரத்தி விடுகிறார்.

அந்த நிமிடத்திலிருந்து பலூனுக்கு ’உயிர்’ வந்துவிடுகிறது.  மறுநாள் பள்ளி கிளம்பும் பொழுது பலூனும் பள்ளித் தோழனை போல சேர்ந்து கிளம்புகிறது.  பேருந்தில் பையன் போகும் பொழுது, ஒரு பறவையை போல பின்தொடர்கிறது.  போகிற வழியில் ஒரு சிறுமி நீலவண்ண பலூனோடு செல்கிறாள்.  சிறிது நேரம் இரண்டு பலூன்களும் விளையாடுகிறது. பிறகு பையனோடு கிளம்புகிறது.

பையனோடு வகுப்பறைக்கும் வந்துவிடுகிறது. மாணவர்கள் குதூகலிக்கிறார்கள்.  நம் பள்ளி முதல்வர்கள் எல்லாம் மிகவும் கண்டிப்பானவர்கள் அல்லவா!  அந்த பையனை தனியாக ஒரு அறையில் பூட்டுகிறார்.  பலூன் கோபம் கொண்டு, முதல்வரை துரத்தி துரத்தி தொந்தரவு செய்கிறது. வேறு வழியில்லாமல் பையனை விடுவிக்கிறார்.

மகிழ்ச்சியுடன் இருவரும் வீடு வரும் வழியில், பகுதியில் வாழும் குறும்பு சிறுவர்கள் சிவப்பு பலூனை சிறைபிடிக்க விடாது துரத்துகிறார்கள்.  இறுதியில் பலூனை பிடித்து, உடைத்தும் விடுகிறார்கள்.  மெல்ல மெல்ல மடியும் பொழுது உற்ற நண்பன் இறப்பது போல மிகவும் வருந்துகிறோம்.

இதைக் கேள்விப்பட்டதும், அவனுக்கு ஆறுதல் சொல்ல பாரிஸில் உள்ள எல்லா பலூன்களும் கூட்டமாக பறந்து வந்து அந்த பையனிடம் சேர்கின்றன. குதூகலமடைகின்றான். அவனை அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வானத்தில் உற்சாகமாய் பறக்கின்றன. 
***
1956ம் ஆண்டு.  பிரெஞ்சு மொழி.  35 நிமிடம்.  ஆஸ்கார் வென்றிருக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பார்க்கவேண்டிய படம். யூ டியூப்பில் கிடைக்கிறது.
****

https://www.youtube.com/watch?v=e2Y1tRBOXfA

குருத்து

Nov 19, 2015

நான் நாத்திகன் - ஏன்? - பகத்சிங்


மனிதன் ஒரு சிந்திக்கத் தெரிந்த விலங்கு. சிந்திப்பதால் நாம் மனிதர்கள். சிந்தனை மனித இனத்தின் சிறப்பம்சம். சிந்தனையின் நீட்சி மாற்றத்திற்கு இட்டுச்செல்கிறது.

காடு, மலைகளில் இரை தேடி வாழ்ந்த ஆதி மனிதன் தன்னைச் சுற்றி நடப்பவற்றை உற்றுப் பார்த்துக் கற்றுக்கொள்ளத் தொடங்கியதிலிருந்து, இன்று அயல் கிரகங்களில் உயிர் வாழ்க்கைக்கான தேடல் வரை மனிதனின் சிந்தனை - தேடல், கற்றல், அனுபவம், அறிவு - படிப்படியாக வளர்ந்து இன்று பிரமிப்பூட்டும் உயரத்தில் உள்ளது.

ஆனால், மனித குலத்தின் இந்த அறிவு வளர்ச்சி அனைத்து மனிதர்களிடத்தும் சமமான அளவில் இல்லை; ஆதிக்க சக்திகளின் குரூர நோக்கங்களால் அறிவு அனைவருக்கும் பொதுவானதாக ஆக்கப்படவில்லை, அன்றிலிருந்து இன்றுவரை. பெரும்பான்மை மக்களை அறியாமை இருளில் அமிழ்த்தி வைத்திருப்பதில்தான் தங்களது வாழ்க்கையின் பிரகாசம் அடங்கியுள்ளது என்பதைப் புரிந்துகொண்ட ஆண்டைகளும், நிலப்பிரபுக்களும், முதலாளிகளும் காலங்காலமாக ஏழை, எளிய உழைக்கும் மக்களின் அறிவுக்கண்களை கனத்த திரையிட்டு மூடி மறைத்தே வந்துள்ளனர். கடவுள், மதம், சடங்குகள், சம்பிரதாயங்கள், கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம், கட்டுப்பாடு. .. ... இன்னும் பலவிதமாய், பல வண்ணங்களில், வடிவங்களில் தோன்றி, வளர்ந்து, நீடிக்கின்றன இத்திரைகள்... கால, தேச, வர்த்தமானங்களுக்கேற்றபடி.
********************************************

தேடல் வாழ்வின் உந்துசக்தி. சுகவாழ்வுக்கான நாட்டம் எல்லோருக்கும், எப்போதும் உண்டு. தேடல் புரிதலுக்கும், போராட்டத்திற்கும் வழிவகுக்கிறது; மாற்றத்தை இழுத்து வருகிறது.

வெள்ளையரின் கொள்ளை ஆட்சியின் கீழ் தன் நாட்டு மக்கள் படும் இன்னல் கண்டு, அவர்களின் அறியாமை, அடிமைத்தனம், கையறுநிலை கண்டு வேதனையில் துடித்தது பகத்சிங் எனும் இளைஞனின் இதயம். அவர்களின் விடுதலைக்கான தேடல் அவ்விளைஞனைப் போராட்டப்பாதைக்கு இட்டுச்சென்றது. வஞ்சிக்கப்பட்டு, வாழ்விழந்து, வறுமையில் உழலும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் விடியலைக்காண விழைந்த அவ்விளைஞனைப் புடம் போட்டு, புதிய மனிதனாக வார்த்தெடுத்தது போர்க்களம். அப்போராட்டப் பாதையில் தான் பெற்ற அறிவு வெளிச்சத்தை நமக்கு சிறு நூலாகத் தந்துள்ளார் தோழர் பகத்சிங்.. அதுவே இந்நூல் - நான் நாத்திகன், ஏன்?

தேடல்.. நிகழ்வுகளை உற்றுநோக்கி ஆராயச்சொல்கிறது; உண்மையை உணரவைக்கிறது. உண்மையின் பேரொளியில் மங்கி, மடிகிறது பொய்மை எனும் காரிருள்.

மதம் பிடித்த சமூகத்தின் பிறவிப் பெருஞ்சுமையாய் தொட்டுத்தொடரும் கடவுள் நம்பிக்கையை, மத மூடத்தனங்களைச் சுட்டுப் பொசுக்குகின்றன பகத்சிங்கின் தர்க்க வாதங்கள். அங்கிங்கெணாதபடி எங்கும் நிறைந்து, இறைநம்பிக்கையெனும் பெயரில் மனிதரின் அறிவுக்கண்களை மறைக்கும் சர்வவியாபக அறியாமை இருட்திரை கிழிக்கும் போர்வாளாகத் திகழ்கிறது இந்நூல்.
உழைக்கும் மக்களை ஒட்டச்சுரண்டி, கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, தனது பேராசையால் இவ்வுலகையே சூறையாடி அழித்துக்கொண்டிருக்கும் கும்பல் ஒருபக்கம்; அடக்கி, ஒடுக்கி சுரண்டப்பட்டு, மாடாக உழைத்து ஓடாகத்தேய்ந்தபின்னும் உண்ண உணவின்றி, வாழ வழியின்றி பஞ்சம், பசி. பட்டினியில் வாடி, ஆதிக்கப் போரில், கொள்ளை நோயில் மாண்டு, மடியும் கோடிக்கணக்கானோர் மறுபக்கம்.. என்பதாக இவ்வுலகைப் படைத்து, இரட்சித்து, மறுமைநாளில் பரலோகத்தில் தீர்ப்பெழுதுபவனைக் கடவுள் என்று கூற முடியுமா? இது கடவுளின் தீராத விளையாட்டு என்றால், ரோமாபுரி தீப்பற்றியெரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னனைவிடவும், போர் எனும் பெயரில் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்த செங்கிஸ்கானை விடவும் குரூர மனம் படைத்த கொடியவனல்லவா, இந்தக் கடவுள்? அப்படிப்பட்ட கடவுள் நமக்குத் தேவையா? வீழ்த்துங்கள் அவனை.. என்று அறைகூவுகிறார் புரட்சியாளர் பகத்சிங்.
**************************************

நாத்திகம்..
பகுத்தறிவின் விளைபொருள்.
அறியாமை இருள் அகற்றும் பகலவன்.
அது, வெறும் கடவுள்மறுப்புத் தத்துவம் மட்டுமல்ல. உண்மையின் ஒளியில் யதார்த்தத்தைப் பரிசீலிக்க உதவும் சுடர்விளக்கு.
நீங்கள் காண மறுத்தாலும் உங்களை உற்றுப்பார்த்துக்கொண்டுதானிருக்கின்றன உண்மைகள்.
இயற்கையின் புதிர் விளங்கா ஆதிமனிதனின் எளிய நம்பிக்கையாக முளைத்த ஆன்மிகம் இன்று சீமைக்கருவேலமரமாகக் கால்பரப்பி வீசும் காற்றில் கலந்த விசமாக மாறியுள்ளது.

இறைவணக்கத்திற்கான அடிப்படை நம்பிக்கை; அச்சத்தில் குடிகொண்டுள்ளது நம்பிக்கையின் வேர். கடவுளை அடிப்படையாகக் கொண்டவை மதங்கள். கடவுள்களின் மீதான மக்களின் எளிய நம்பிக்கைகளை மூலதனமாகக் கொண்டு கடை விரித்த மத பீடங்கள் இன்று மனித உயிர்களை அறுவடை செய்துகொண்டிருக்கின்றன. அன்பை, இரக்கத்தை, கருணையைப் போதிக்கும் மதங்கள் கொலைவெறிபிடித்தாடுகின்றன இன்று.

விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் ஆட்டங்காணத்தொடங்கிவிட்ட ஆன்மிகம் இன்று புதிது புதிதாய் வெளித்தள்ளுகிறது அவதாரங்களை. சாயிபாபா, நித்தியானந்தா, அஸ்ரம் பாபு, அமிர்தானந்தமயி, ராதாமாதே, ராம்தேவ், பங்காரு, கங்காரு .. ... கணக்கின்றி நீள்கிறது அவதாரங்களின் பட்டியல். காம வெறியர்களும், கருப்புப் பணத்தைப் பதுக்குகின்றவர்களும், கொலை, கொள்ளைக்கஞ்சாத பஞ்சமாபாதகர்களும் இன்று அவதார புருஷர்களாய் வலம் வருகின்றனர், ஆன்மிகத்தின் ஒளியில்.
மதங்கள் மனிதத்தை வளர்க்கவில்லை; மதவெறியைத்தான் வளர்க்கின்றன. ஆயிரக்கணக்கில் பிணந்தின்றும் அடங்காத கொலைவெறியுடன் திரிந்துகொண்டிருக்கின்றன மதம்பிடித்த கடவுள்கள்.

2002-ல் குஜராத் படுகொலைகள்; அவ்வப்போது அரங்கேற்றப்படும் மதக்கலவரங்கள் என்று கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுகிறார்கள் இசுலாமிய மக்கள், இந்து மதவெறியர்களால். கடவுளை, மதத்தை விமர்சிப்பவர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாக நீள்கிறது. பெருங்கருணை கொண்ட அல்லாவின் பெயரால் அரங்கேற்றப்படுகின்றன மனித குலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் படுகொலைகள், இசுலாமிய மண்ணிலும். சிலுவைப் போர்க் காலந்தொட்டு இம்மண்ணில் சிந்திக்கொண்டே இருக்கிறது மனித இரத்தம், மதங்களின் பெயரால்.
கோடிக்கணக்கான மக்களின் அவலமான வாழ்க்கைக்குக் காரணம், மனித உழைப்பையும், உலக வளங்களையும் ஒட்டச்சுரண்டும் முதலாளித்துவக் கும்பல்தான் என்பதைப் பெரும்பான்மை மக்கள் அறிந்துகொள்ள முடியாத வகையில் மதபோதையூட்டி அவர்களின் அறிவுக்குத் திரையிட்டு மறைக்கும் திருப்பணியைத்தான் அனைத்து மதங்களும் சிரமேற்கொண்டு செய்து வருகின்றன.

**********************************

அச்சமே இறை நம்பிக்கைக்கு அடிப்படை. நமது அறியாமையில்தான் வேர்விட்டு நிற்கின்றன அனைத்து மதங்களும்.
நம்முடைய வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தடையாயுள்ள அனைத்தையும் தூக்கியெறியச் சொல்கிறார், மாவீரன் பகத்சிங்.
இல்லாத கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி, மனித அறிவைப் பாழ்படுத்தி, நமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுகின்றன மதங்கள். எத்தனை காலம்தான் சுமந்துகொண்டிருப்பது .. .. ... தூக்கியெறியுங்கள் இந்தச் சனியனை.

-மருதமுத்து,
பொதுக்குழு உறுப்பினர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

வெளியீடு: கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை - 2.
விலை. ரூ.15/-

Nov 18, 2015

நீதிமன்றத் தீர்ப்பை வழக்கறிஞர்களே விமர்சிக்கலாமா? - பதில்

வழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்குப் பதில்! – 3

நீதிமன்றத் தீர்ப்பை வழக்கறிஞர்களே விமர்சிக்கலாமா?

நீதிமன்றத் தீர்ப்பை யாரும் விமர்சிக்கக் கூடாது என்பதே தவறான கருத்து. இப்படி ஒரு கருத்தை ஊடகங்களும் ஊழல் அரசியல்வாதிகளும் மக்களிடம் பரப்பி விட்டனர். ஊழல் குற்றச்சாட்டு பற்றி கேள்வி கேட்டால், “பிரச்சனை நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் நான் கருத்து சொல்லக்கூடாது” என்று சமாளிப்பார்கள். தண்டனை விதித்து தீர்ப்பு வந்துவிட்டால் “தீர்ப்பை பற்றி விமர்சிக்க கூடாது. நான் மேல்முறையீடு செய்யப்போகிறேன்” என்பார்கள்.
ஹெல்மெட் பிரச்சினையை விவாதிக்கும் ஊடக அறிவுக்கொழுந்துகளோ, “அதெப்படி வக்கீலாக இருந்துகொண்டு நீங்கள் தீர்ப்பை விமர்சிக்கலாம்” என்று சொல்லி கேட்கிறார்கள். “நாலும் மூணும் எட்டு” என்று குமாரசாமி போட்ட கூட்டல் கணக்கும், “பத்து சதவீதம் ஊழல் செய்யலாம்” என்று அவரது தீர்ப்பு வழங்கிய அனுமதியும் விமர்சனத்துக்கு உள்ளாகவில்லையா? தீர்ப்பை எல்லோரும் விமர்சிக்கலாம். சட்டம் தெரிந்த வழக்கறிஞர்கள்தான் தீர்ப்பைக் கூர்மையாக விமர்சிக்க முடியும். எனவே அவர்கள்தான் முதலில் விமர்சிக்க வேண்டும்.

தீர்ப்பு வழங்கப்பட்ட பின் அதன் அமலாக்கத்துக்கு நிர்வாக எந்திரம்தான் பொறுப்பு. ஒவ்வொரு தீர்ப்பும் அமலாகிறதா என்று நீதிமன்றம் கண்காணிப்பதில்லை. ஆனால் ஹெல்மட் தீர்ப்பின் அமலாக்கத்தை நீதிபதி கண்காணிக்கிறார். எத்தனை வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன என்று நீதிமன்றத்தில் புள்ளி விவரம் கொடுக்கிறது போலீசு. ஹெல்மெட் தீர்ப்பைக் கண்காணிக்கும் நீதிமன்றம், சட்ட விரோத டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு தான் அளித்த தீர்ப்புகள் அமலாகியிருக்கிறதா என்பதைக் கண்காணித்து அகற்றியிருந்தால், சசிபெருமாள் இறந்திருக்க தேவையில்லையே! இது விமர்சனத்துக்குரியது இல்லையா?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அருந்ததிராய்க்கு உச்சநீதிமன்றம் ஒரு நாள் சிறைத்தண்டனை விதித்த போது, “இந்த அரசமைப்பில் எஞ்சியிருக்கும் கடைசிப் புனிதப் பசுவான நீதித்துறையின் அச்சுறுத்தலை எதிர்த்து நாம் அனைவரும் பேச வேண்டும். நீதிமன்றத்தை இழிவுபடுத்திய குற்றத்துக்காக எல்லோரையும் சிறைக்கு அனுப்பட்டும்” என்று நீதிமன்றத்தை சாடினார் மறைந்த அவுட்லுக் பத்திரிக்கை ஆசிரியர் வினோத் மேத்தா.


தெல்லாம் இருக்கட்டும். இலக்கியமோ, திரைப்படங்களோ விமரிசனத்தை எதிர்கொண்டுதானே வளர்கின்றன். மக்கள் நம்பிக் கொண்டிருந்த சாதி ஆதிக்கம் முதல் புராணக் கதைகள் வரையிலான அனைத்தையும் அம்பேதக்ரும் பெரியாரும் விமரிசனத்துக்கு உள்ளாக்கவில்லையா? அவர்களைத் தாக்கினார்கள். எங்கள் மத உணர்வு புண்படுகிறது என்று வழக்கு தொடுத்தார்கள். இவற்றுக்கெல்லாம் அஞ்சாமல் அவர்கள் விமரிசித்த காரணத்தினால்தான், அடிமைத்தனத்துக்கு எதிரான விழிப்புணர்வு வந்தது.

ஒரு தீர்ப்பை விமர்சிப்பது என்பதன் பொருள் நீதிபதிகளின் கருத்தை மட்டுமல்ல, நீதிபதிகளையும் மக்களின் கண்காணிப்புக்கு உட்படுத்துவது என்பதாகும். அத்தகைய கண்காணிப்பும் கடுமையான விமரினமும் இல்லாத காரணத்தினால்தான், கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் கொள்ளையர்களுக்கு ஆதரவான தீர்ப்புகளை துணிச்சலாக நீதிபதிகள் வழங்க முடிந்திருக்கிறது. விமர்சனத்தின் மூலம் நீதிபதிகளின் இந்தத் ”துணிச்சலை” நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

- ”அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள்!” –  
 மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு வெளியிட்ட சிறு வெளியீட்டிலிருந்து....

Nov 17, 2015

எப்படி இருந்தாலும் நீதிபதி நல்லதுக்குத்தானே சொன்னார்? - பதில்

வழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்குப் பதில்! – 2

எப்படி இருந்தாலும் நீதிபதி நல்லதுக்குத்தானே சொன்னார்?

தீர்ப்பின்(கட்டாய ஹெல்மட்) நோக்கத்தைப் பார்க்க வேண்டாமா?

தீர்வு சரியானதுதானா, நடைமுறை சாத்தியமானதா என்றெல்லாம் பார்க்க வேண்டாமா? “ யானை வாங்க காசிருக்கு அங்குசம் வாங்க காசில்லையா” என்று கிண்டலாகக் கேட்கிறார் நீதிபதி. இந்தியாவிலேயே இரு சக்கர வாகனங்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு. தொழிலாளிகள், சிறு வியாபாரிகளூக்கு ஒரு டி.வி.எஸ் எக்செல் என்பது பிழைப்புக்கான ஆதாரம். நகர்ப்புறத்தில் ஒரு வண்டியில் கணவன் மனைவியுடன் இரண்டு பிள்ளைகள் போகும் காட்சி சகஜமானது. இவர்கள் எல்லோரும் தலைக்கவசம் அணிவது சாத்தியமா?

“விபத்துகளில் தலையில் அடிப்பட்டு மரணம் ஏற்படுவது அதிகமாக இருப்பதால் தலைக்கவசம் அணிய வேண்டும்” என்கிறார் நீதிபதி. “விபத்தில் கை-கால் முறிவதால் அதற்கு கைக்கவசம், கால் கவசம், வாகனப் புகையால் நுரையீரல் நோய் வருவதால் மூக்குக் கவசம்” என்று அடுத்தடுத்து தீர்ப்புகள் வந்தால், நீதிபதிகளின் நல்ல நோக்கத்தை யாராவது பாராட்டுவார்களா?
விபத்துகளால் ஏற்படும் மரணம் குறித்து அக்கறைப்படும் நீதிபதி, விபத்துக்கான அடிப்படைக் காரணம் எது என்றல்லவா ஆராய வேண்டும்? சாலைகள் பராமரிப்பே இல்லை. 45% கமிசன் கேட்கும் அதிகாரிகள் படத்தை போட்டு காண்டிராக்டர்கள் தலைமைச் செயலகத்தின் வாசலிலேயே டிஜிட்டல் பாணர் வைக்கிறார்கள். இது நீதிபதியின் கண்ணுக்குத் தெரியவில்லை. நம் நாட்டு சாலைகளின் தரத்துக்குப் பொருத்தமற்ற, அதிவேக கார்களையும், ரேஸ் பைக்குகளையும் புதிது புதிதாக அறிமுகப்படுத்தி, இளைஞர்களுக்கு வெறியூட்டுகின்றன ஆட்டோமொபைல் கம்பெனிகள். இது அவருக்குப் பிரச்சினையாகத் தெரியவில்லை. சாலை விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாக இருப்பது டாஸ்மாக் தான் என்பதும் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. விபத்தில் இறந்தவர்கள் ஹெல்மட் அணியாமலிருப்பது மட்டுமே சாவுக்கு காரணம் என்று கருதுகிறார் நீதிபதி.

இதை அப்படியே சாராய சாவுகளுக்குப் பொருத்திப் பாருங்கள். டாஸ்மாக் கடை அப்படியே இருக்க, சாராயச் சாவை தடுக்கும் பொருட்டு, குடிகாரர்கள் எல்லோரும் ஆண்டுக்கு ஒருமுறை கல்லீரலை ஸ்கேன் செய்து போலீசிடம் ரசீதைக் காட்ட வேண்டும் என்று கூட நீதியரசர்கள் தீர்ப்பளிப்பார்கள்.
ஹெல்மட் விசயத்தில் மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான வன்முறை விசயத்திலும் நீதிபதி கிருபாகரனின் கண்ணோட்டம் இப்படித்தான் இருக்கிறது. 2013-இல் பெண்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்துப் உரையாற்றிய இவர், டெல்லி நிர்பயா வல்லுறவு கொலை பற்றி கருத்து கூறியிருக்கிறார். “வல்லுறவுக்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. பிரச்சனை வரும் என் தெரிந்தும் ஏன் அந்த பெண் இரவு நேரத்தில் வெளியே போகிறாள்” என்று கேட்டிருக்கிறார். டெல்லி குற்றவாளியின் வழக்கறிஞர், இதே கண்ணோட்டத்தில்தான் பி.பி.சி ஆவணப்படத்தில் கருத்து கூறியிருந்தார்.

29.8.2013 இந்து நாளேட்டில் நீதிபதி கிருபாகரனின் உரையைப் படித்த உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், அவருடைய ஆணாதிக்க மனோபவத்தையும், அரசியல் சட்டம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கும் சம உரிமையையே அங்கீகரிக்காத அவரது கண்ணோட்டத்தையும் கண்டித்து அவர் மீது உரிய நடவடிக்க எடுக்குமாறு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்; இத்தகைய ஆணாதிக்க கண்ணோட்டம் கொண்டவர்கள் நீதிபதிகளாக இருந்தால், அவர்களது கருத்துகள் தனிப்பட்ட கருத்துகளாக மட்டும் இருக்காது. அவை அவர்களது தீர்ப்புகளிலும் பிரதிபலிக்கும் அபாயம் உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

1972-இல் மதுரா என்ற பெண் போலீசு நிலையத்தில் வைத்து வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் அந்த பெண் உடலுறவுக்குப் பழகியவள் என்பதால், அது வல்லுறவாக இருக்க முடியாது எந்று தீர்ப்பளித்தது. அதற்கு எதிராக நாடு முழுவதும் எழுந்த கண்டனம்தான் வல்லுறவுக் குற்றம் தொடர்பான சட்டத் திருத்துக்கே வழி வகுத்தது.

“சாலையும் டாஸ்மாக்கும் அப்படியே தான் இருக்கும், நீதான் பாதுகப்பாக ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும்” என்று கூறும் நீதிபதியின் கண்னோட்டத்துக்கும், ஆண்கள் அப்படி இப்படித்தான் இருப்பார்கள், பொம்பிளைதான் பாதுகாப்பாக பர்தா அணிந்து செல்ல வேண்டும் என்று கூறும் இசுலாமிய மதவாதிகளுக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? நீதிபதி நல்லதுக்குத்தானே சொல்கிறார் என்று இதை விட்டுவிடவா முடியும்.

- ”அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள்!” - மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு வெளியிட்ட‌ சிறு வெளியீட்டிலிருந்து....

Nov 14, 2015

ஒரு ஹெல்மெட் தீர்ப்புக்காக இவ்வளவு பிரச்சனை,போராட்டம் தேவையா? - பதில்

வழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்குப் பதில் - 1

கேள்வி : ஒரு ஹெல்மெட் தீர்ப்புக்காக இவ்வளவு பிரச்சனை,போராட்டம் தேவையா?

தீர்ப்புதான் பிரச்சினையே ஓழிய வழக்கறிஞர்களின் போராட்டம் அல்ல. கட்டாய ஹெல்மெட் தீர்ப்பு என்பது மக்களுக்குப் பெரும் தொந்தரவு தருவதாக இருந்த போதிலும், நீதிபதி மக்கள் நலனில் அக்கறையுடனும் கண்டிப்புடனும் நடந்து கொண்டிருப்பதாகப் பாராட்டப்படுகிறார். அதே நேரத்தில் இதனை எதிர்த்துப் போராடிய வழக்கறிஞர்களும் மக்கள் நலனில் கொண்ட அக்கறை காரணமாகத்தான் போராடினார்கள். அவர்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. இந்தப் போராட்டத்தினால் அவர்களுக்குத் தனிப்பட்ட ஆதாயமும் இல்லை. பிரச்சினையை உருவாக்கியது தீர்ப்பு - அதன் எதிர்வினைதான் போராட்டம்.


தலைகவசம் அணியத் தவறினால் முதல் முறை 100 ரூபாயும், இரண்டாவது முறை 300 ரூபாயும், அபராதம் என்று கூறுகிறது தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம். சிக்னலை மதிக்காமல் வண்டி ஓட்டுவது போன்ற விபத்தை தோற்றுவிக்கும் தவறுகளுக்குக் கூட இதே அளவு அபராதம் அந்த சட்டத்தில் இடமில்லை. நீதிமன்றத்துக்கு அதிகாரமும் இல்லை.

ஒப்பீட்டளவில் பார்த்தால் சிக்னலை மீறுவதும், கைபேசியில் பேசியபடி வண்டி ஓட்டுவதும் மற்றவர்களுக்கு விபத்தை ஏற்படுத்தக் கூடிய குற்றங்கள். தலைக்கவசம் அணியாமலிருப்பதோ சம்மந்தப்பட்ட நபரை மட்டுமே பாதிக்கின்ற தவறு. இதைப் புரிந்து கொண்டால், இந்த தீர்ப்பு எவ்வளவு அபத்தமானது என்று தெரியும்.

தண்டிக்கப்பட்ட ஊழல் குற்றவாளிகள் சொத்துகளைக் கூடப் பறிமுதல் செய்ய துப்பில்லாத நீதிமன்றம், தலைக்கவசம் வாங்காதவரின் வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடுவது சாதாரணத் தவறல்ல. இது மக்களைக் கிள்ளுக்கீரையாக கருதும் ஆணவமாகும்.

ஒரு வாகனத்தில் செல்லும் கணவன், மணைவி, பிள்ளை எல்லோரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது நீதிபதி கிருபாகரன் அளித்துள்ள தீர்ப்பு. ஜூலை 1 அன்று போதிய தலைக்கவசங்கள் சந்தையில் இல்லை. இந்த தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நகரெங்கும் போலிசு கல்லா கட்டுவதையும் மக்கள் தவிப்பதையும் பார்த்துக் கொதித்துப் போய்தான் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

 இன்றுவரை, தமிழ்நாட்டில் எங்கேயாவது தீர்ப்பில் கூறியிருப்பது போல, மனைவி குழந்தைகளுடன் எல்லோரும் தலைக்கவசம் அணிந்து செல்வதை யாராவது பார்த்திருக்கிறீர்களா? இந்த நிமிடம் வரை சிறுவர்களுக்கான ஹெல்மெட்டே சந்தையில் இல்லாத போது, தீர்ப்பை மறுபரிசீலனை செய்திருந்தால் போராட்டமே தேவைப்பட்டிருக்காது. தவறு நீதிமன்றத்துடையதுதானே தவிர வழக்கறிஞர்களுடையது அல்ல.

 ”அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள்!” - சிறு வெளியீட்டிலிருந்து....

 -மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

வரலாறு காணாத மழை என தப்பித்துக்கொள்கிறார்கள்!



நமது தெருக்களை காணவில்லை.
உணவிற்காகவும்,உடைக்காகவும் அல்லாடுகிறோம்.
திருமண மண்படங்களும், பள்ளிக்கூடங்களும்
நமது தற்காலிக கூடுகளாகியிருக்கின்றன.

நமது வீடுகள் நீரில் மிதக்கின்றன.

’வரலாறு காணாத மழை’ என சொல்லி
தமது குற்றங்களை ஒளித்துக்கொள்கிறார்கள்.
தேர்தல் நெருங்குவதால்
ஆளுங்கட்சியும், எதிர்கட்சிகளும்
கொஞ்சம் சுறுசுறுப்பாக இயங்குவதாக நடிக்கிறார்கள்.

நேற்று
நீருக்காக ஏங்கிநின்றோம்.
இன்று
மழை பெய்ததற்காக வருந்திநிற்கிறோம்.
நாளை மெல்ல மெல்ல மழை நீர் வடியும்.
அத்தோடு நமது கோபங்களும்!
அவர்கள் ’அதைத்தான்’ நம்மிடமிருந்து
எதிர்ப்பார்க்கிறார்கள்.