Nov 23, 2015

போராட்டமென்றாலும் நீதிமன்றத்தின் மாண்பைக் குறைப்பதாக இருக்க கூடாதல்லவா? - பதில்

வழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்குப் பதில்! – 5

போராட்டம் நடத்தினாலும் அது நீதிமன்றத்தின் மாண்பைக் குறைப்பதாக இருக்க கூடாதல்லவா? வாயில் கருப்புத்துணி கட்டிக் கொண்டு நீதிமன்ற அறையில் அமர்வதும் தாழ்வாரத்தில் முழக்கம் போடுவது சரியா?
ஒரு பிரச்சனையின் தீவிரம் என்ன என்பதும், அதற்காகப் போராடுபவர்கள் அதில் கொண்டுள்ள ஈடுபாடும், போராட்டம் நடக்கும் சூழ்நிலையும்தான் போராட்ட வடிவத்தை தீர்மானிக்கின்றன.

போலிசை எப்படியாவது தடியடி நடத்த வைக்க வேண்டும் என்றோ துப்பாக்கி சூடு நடத்தி யாரையாவது சாகக்கொடுக்க வேண்டும் என்றோ எண்ணி யாரும் போராடுவதில்லை. தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் தத்தம் வழியில் முயற்சிக்கிறார்கள். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை நொறுக்கி, தடியடிப்பட்டு சிறை சென்றார்கள். சசிபெருமாள் அமைதி வழியில் தன்னை அழித்துக்கொண்டார்,
சமீபத்தில் , போலி கல்வி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு எத்தனை முறை போராடியும் செவி சாய்க்கவே மறுக்கும் விழுப்புரம் கலெக்டரின் அலுவலக வாயிலில் அமர்ந்து எலி மருந்து குடித்தார்கள் மாணவர்கள். விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் முதல் வரிசையில் ஒரு விவாசாயியை பிணம் போல் அலங்கரித்து உட்காரவைத்து கலெக்டருக்குத் தங்கள் நிலையை உணர்த்தினார்கள். விவசாயிகள் தற்கொலை பற்றிக் கவலைப்படாத அரசு அதிகாரிகளுக்கு இந்த அவமதிப்பை பொறுக்க முடியவில்லையாம்.

“கோரிக்கை நியாயம்தான், ஆனால் போராட்ட முறை தவறு” என்று அறிவுரை சொல்பவர்கள், கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய மாற்றுப் போராட்ட முறை என்ன என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். மனநிலை பிறழ்ந்தவர்கள், நோக்கமே இல்லாமல் கரெண்டு கம்பத்தை சுற்றுவது போல, மக்கள் முடிவே இல்லாமல், கலெக்டர் ஆபீசையோ, நீதிமன்றத்தையோ சுற்றிக் கொண்டிருக்க முடியுமா?

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கும் கோரிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்காகப் பல ஆண்டுகளாகப் போராட்டம் நடந்து வருகிறது இந்தி பேசும் மாநில உயர் நீதிமன்றங்களில் இந்தி வழக்காடு மொழியாக இருக்கும் போது தமிழ்நாட்டில் தமிழும், கேரளத்தில் மலையாளமும் இன்ன பிற மாநிலங்களில் அவர்களது மொழியும் வழக்காடு மொழியாக ஏன் அங்கீகரிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு இதுவரை அரசோ நீதிமன்றமோ யோக்கியமாக எந்தப் பதிலும் கூறவில்லை.

தாய் மொழியில் வழக்காடும் உரிமையை மறுப்பது என்பது மக்களின் வழக்காடும் உரிமையை மறுப்பதாகும். தமிழில் விசாரணை நடக்குமானால், தனது வழக்கில் என்ன நடக்கிறது என்பதைக் தெரிந்து கொள்ள இயலாமல் மக்கள் வாயைப் பிளந்து கொண்டு நிற்கவேண்டிய தேவை இல்லை. கோயிலில் சமஸ்கிருத மந்திரம் போல, கோர்டில் ஆங்கிலம்! இது வக்கீல் தொழிலை உயர்சாதி மேட்டுக்குடி மட்டும் கைப்பற்றி வைத்துக் கொள்வதற்கான தந்திரம்.

உயர்நீதிமன்றத்தில் வேண்டுமென்றே தலைமை நீதிபதியாக வேறு மாநிலத்தவரை நியமிக்கிறார்கள். பிறகு அவருக்கு தமிழ் தெரியாது என்கிறார்கள். டீக்கடை வேலைக்கு வரும் பீகார் தொழிலாளி தமிழ் கற்றுக் கொள்ளும்போது நீதிபதி கற்றுக்கொள்ள முடியாதா?நீதிபதிக்காக மக்களா, மக்களுக்கா நீதிபதியா?

ஒரே ஒரு நாள் பத்து பேர் வாயைத் திறக்காமல் நீதிமன்ற அறையில் உட்கார்ந்திருந்தால் நீதிமன்றத்தின் மாண்பு போய் விட்டதாக கூறுகிறார்களே, தன்னுடைய வழக்கில் என்ன விவாதிக்கப்படுகிறது என்றே புரியாத நிலையிலும், இந்த நீதிமன்றதின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடக்கிறார்களே மக்கள், அவர்களுக்கு மட்டும் மாண்பு கிடையாதா?

என்ன பொல்லாத மாண்பு? சட்ட மன்றம் நாடாளுமன்றத்துக்கு மாண்பு கிடையாதா? அங்கே தினமும் கூச்சல் போடுகிறார்கள், ஏன் என்று கேட்டால் எங்களை பேச அனுமதிக்கவில்லை, அதனால்தான் முழக்கம் போடுகிறோம் என்று விளக்கம் சொல்கிறார்கள். நீதிமன்றத்தில் நடந்ததும் அதுதானே!
நீதிமன்றத்துக்குள் தமிழை விடவில்லை. எதிர்ப்பு தெரிவித்தார்கள். 16 ஆம் தேதியன்று அவமதிப்பு விசாரணை நடக்கும் நீதிமன்ற அறைக்குள் வழக்கறிஞர்களை அனுமதிக்கவில்லை. வழக்கறிஞர்கள் எதிர்த்து முழக்கம் போட்டார்கள்.

தமிழையும் வழக்கறிஞர்களையும் நீதிமன்றத்துக்கு வெளியே நிறுத்தியது சரியா என்ற கேள்விக்கு பதிலளிப்பதை விட்டுவிட்டு, நீதிமன்றத்தின் மாண்பை பாதுகாக்க சி.ஐ.எஸ்.எஃப்-ஐ கொண்டு வருகிறேன் என்கிறார் தலைமை நீதிபதி.

தலைமை நீதிபதியின் அறைக்குள்ளேயே நுழைந்து சத்தம் போட்டிருக்கிறார் ஒரு நீதிபதி. சேம்பரில் மது அருந்தும் நீதிபதிகள், ஊழியர் நியமனத்தில் ஊழல் செய்யும் நீதிபதிகள், சாதி உணர்வுடன் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள், காசு வராத வழக்குகளில் வாய்தா போடும் நீதிபதிகள்-இவர்களையெல்லாம் தடுத்தாட்கொண்டு நீதிமன்றத்தின் மாண்பை இவர்களுக்கு உணர்த்தப் போவது யார்?

பிறந்த வீட்டுப் பெருமையை உடன் பிறந்தவனிடம் அளந்த கதையாக, நீதிமன்றத்தின் மாண்பைப் பற்றி வழக்கறிஞர்களிடம் கதையளப்பதா?

 - ”அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள்!” – மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு வெளியிட்ட  புத்தகத்திலிருந்து...

No comments: