Dec 6, 2007

சாயம் பூசப்பட்ட குழந்தைகள் - விமர்சனம் - பாகம் 2"படம் முடிந்துவிட்டது. இனி, இந்தியாவிற்கு வருவோம். இன்னும் பாதி விமர்சனம் இருக்கிறது. நாளை மீண்டும் தொடர்கிறேன்".
கடந்த பதிவின் தொடர்ச்சி இந்த பதிவு. இதைப் படித்தாலே விசயம் புரியும். ஆனால், அழுத்தம் உணரமுடியாது. ஆகவே, கொஞ்சம் சிரமம் பாராமல் கடந்த பதிவை படித்துவிட்டு, படித்தால் நலம்.

'அமெரிக்கத் தரம்' இல்லையென்றாலும், இந்திய கான்வென்டு பள்ளிகளில் மேற்கின் வார்ப்பில் நிறையவே அழகிப் போட்டிகள் நடக்கின்றன. இன்னும் இந்தி, தமிழ்ச் சினிமாக்களின் கொச்சை நடனங்கள் பள்ளி ஆண்டு விழாக்களை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன. ஏறக்குறைய அவிழ்த்துப் போட்டு தொப்புள் டான்ஸ் ஆடும் தமது குழந்தைகளை, அனைத்துப் பெற்றோர்களும் மெச்சிக் கொள்கின்றனர். இவர்களுடைய உலகிலிருந்து தான் குழந்தைகள் பற்றிய கவலையும் விதவிதமாக வெளிப்படுகிறது.

பாராளுமன்றம், பத்திரிக்கை, தொலைக்காட்சி, திரையுலகம், கல்வி நிறுவனங்கள் கவலைப்படும் இந்தியக் குழந்தைகளின் பிரச்சனைகள் பல. போலியோ சொட்டு மருந்து, சிவகாசி, மத்தாப்புக் குழந்தைகள், பீடி, தீப்பெட்டி - கைத்தறிக் குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தை விபச்சாரம்...என்று நீளுகிறது. மேலும், பீகாரின் நக்சல்பாரிக் கட்சி, ஈழத்து விடுதலைப் புலிகள் முதல் உலக நாடுகளின் பல்வேறு போராளிக்குழுக்கள் வரை - சிறுவர்களை போரில் ஈடுபடுத்திக் கொலை வெறியை வளர்க்கின்றனர் என்பதும் ஒரு முக்கியக் கவலை.

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்வோம். தீக்குச்சியை அடுக்க்ப் பீடி சுற்றி, துப்பாக்கியை ஏந்துவதற்குக் காரணம், அக்குழந்தைகளின் பெற்றோரோ, குறிப்பிட்ட சமூகமோ அல்ல. பொருளியலிலும், அரசியலிலும் அச்சமூகப் பிரிவினரை ஆதிக்கம் செய்கின்ற சக்திகளே அந்த குழந்தைகளின் வாழ்க்கையைப் பறித்தவர்கள். உலகின் பெரும்பான்மை நாடுகளும் மக்களும் ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கும் பொழுது, அம்மக்களின் குழந்தைகள் மட்டும் வயிறார உண்டு, கல்வி கற்பது எப்படி முடியும்? அடிமைத்தனத்தில் உழலும் ஒரு சமுகத்தின் குழந்தைகள் மட்டும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியுமா? கட்டுண்டு கிடக்கும் மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், குழந்தைகளுக்காக மட்டும் கண்ணீர்விடுவது அயோக்கியத்தனம்.

சிவகாசிக் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய குறும்படம் ஒன்றில் "பள்ளிக்குச் செல்லும் வயதில், பட்டாசுத் தொழிலுக்குச் செல்வது சரியா?" என்று ஒரு சிறுவனிடம் பேட்டியாளர் கேட்கிறார். "பட்டாசு செய்வதால் தான் ஒரு வேளையாவது பசியாற முடிகிறது" என்று பதிலளிக்கிறான் அச்சிறுவன். ஆசியாவைப் போன்ற சிறுமிகளோ, "நிறையப் பணம் வேணும்" என்பதற்காக அழகுப் போட்டிகளில் கலந்துகொள்கின்றனர்.

மேலும், "நிறையப் பணம் வேணும்" என்ற வெறிதான் பின்னாளில் கிரிமனல்களை உருவாக்குகிறது. பணம் குவிக்க எப்படியும் வாழலாம், என்ன வேலையும் செய்யலாம், எதையும் அவிழ்க்கலாம் என்பது அழகுப் போட்டிச் சிறுமிகள் கற்கும் அடிப்படைப் பாடம். ஆனால் துப்பாக்கி ஏந்தும் ஈழத்துச் சிறுவனுக்கு அமைதிப்படையின் ஆறாத வடுக்கள் காரணமாக இருக்கலாம். தன் மக்களைக் கொன்று குவிக்கும் ரன்வீர் சேனாவின் கொடுமை கண்டு ஒரு பீகார் சிறுவன் அரிவாளைக் தூக்கலாம். சிறுவயதானாலும், தன் மக்களின் அவலம் கண்டு ஆயுதம் தூக்கும் இவர்களிடம் கொலைவெறி வருவதில்லை. அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடும் விடுதலை உணர்வும் சமூகப் பற்றுமே ததும்பி நிற்கும். ஆனால் செலவழிக்கப் பணம் திருடும் மேட்டுக்குடிச் சிறுவர்கள் தான் கொடூரமாக கொலைகளைச் செய்கிறார்கள். இலட்சகணக்கிலும், கோடிக்கணக்கிலும் பரிசுத் தொகை கொண்டிருக்கும் பெரிய - சிறிய அழகுப் போட்டிகளில் வென்றவர் - தோற்றவர் மனநிலையும், குறுக்கு வழியில் முன்னேறத் துடிக்கும் ஒரு கிரிமினலின் மனநிலையும் ஒன்றுதான்.

தெருமுனையில் வித்தைக் காட்டும் கழைக்கூத்தாடி, தனது மகளுக்குப் பெண்கள் அணிவது போல மார்புக் கச்சையை அணிவித்து வேடிக்கை காட்டுகிறான். எவருக்கும் முதல் பார்வையிலேயே ஏனென்று விளக்காமலேயே இக்காட்சி கொடூரமாக இருக்கும். சிறுமியைக் கவர்ச்சிக் கன்னியாக உருவகப்படுத்தும் கழைக்கூத்தாடி, தனது வயிற்றுப்பாற்றுக்காக அப்படிச் செய்கிறான். அவளை வைத்துக் கோடம்பாக்கத்தையே ஒரு கலக்குக் கலக்கி கோடிசுவரனாக மாற வேண்டும் என்பதற்காக அல்ல. அந்தச் சிறுமிக்கும், ஆண்களை வீழ்த்தி, பிரபல நடிகையாக ஒரு சுற்று வரவேண்டும் என்ற கனவெல்லாம் கிடையாது. இரவு ஒரு வாய்க் கஞ்சி கிடைத்தால் பெரிய விசயம். ஆனால் தனது குழந்தைகள் மேடையில் ஆடை அவிழ்ப்பதையும், ஆபாச சினிமா நடனங்கள் ஆடுவதையும் கண்டு நடுத்தர வர்க்கம் பெருமிதம் கொள்கிறது. காரணம் அஸ்வர்யாராய்க் கனவுதான்.

பருவம் அடைந்த பெண்கள் ஒரு ஆணைக் கவருவதற்கான நடை, உடை, முகபாவனை, உடல் அளவு, காதல் குறித்த பொது அறிவு இவைதான் அனைத்து அழகுப் போட்டிகளுக்கும் அடிப்படை விதிகள். சிறுமிகளுக்கான போட்டியும் இதற்கு விதிவிலக்கு அல்ல - "ஆண்களைக் கவரும் கனவுக் கன்னி" என்ற ஒரு பாடலுக்கு ஆசியாவும், ப்ரூக்கியும் முகபாவனை செய்கிறார்கள்.

ஏற்கனவே இந்திய சமூகம் பெண் குழந்தைகளுக்கு நாணத்தையும், செப்பு வைத்துச் சமைப்பதையும், சிறுவயதிலேயே சேலை கட்டுவதிலிருந்து சமைப்பது வரை அனைத்து அடிமைத்தனங்களையும் நுணுக்கமாகக் கற்றுக் கொடுத்து வருகிறது. இப்போது மேற்கிலிருந்து வேறு வடிவில் அழகு, கவர்ச்சி, வியாபாரம், ஆதாயம் அனைத்தும் சுதந்திரமாய் வந்திருக்கிறது. தனது குழந்தையை சமூகத்திற்குப் பொறுப்புள்ள குடிமகனாய் வளர்க்க விரும்பும் பெற்றவர்கள் சிந்திக்கட்டும்.

- வேல்ராசன், புதியகலாச்சாரம்

Dec 5, 2007

'சாயம் பூசப்பட்ட குழந்தைகள்' - விமர்சனம்
சமீபத்தில், புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த திரை விமர்சனங்களை தொகுத்து, "சினிமா திரை விலகும் பொழுது" - என்ற புத்தகமாய் வெளியிட்டு இருந்ததை, படித்தேன். நல்ல தொகுப்பு.

அந்த தொகுப்பில், ஒரு விமர்சனம் தான் இந்த பதிவு. படித்ததை, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பி.பி.சி. செய்திப்படம் : "சாயம் பூசப்பட்ட குழந்தைகள்" - பிஞ்சுக் குமரிகள்

"சிவகாசி மழலையர் வாழ்வைப் பறிக்கும் பட்டாசுகளைக் கொளுத்தாதீர்கள்" என விழாக் காலங்களில் தன்னார்வக் குழுக்கள் ஊர்வலம் நடத்துகின்றன. நகரத்துக் குப்பைகளில் மக்காச் சோளத்தைப் பொறுக்கும் ஆப்பிரிக்க எலும்புக் குழந்தைகளைக் காண்பித்து இ.நா. யுனிசெப் நிறுவனம் இவர்களின் பசியைத் தணிக்க நன்கொடை திரட்டுகிறது. நமது நாட்டு ஏழைக் குழந்தைகளைப் பற்றி இவர்கள் அடையும் கவலைகள் ஒருபுறமிருக்கட்டும். மத்தாப்பூ தயாரிக்கும் ஏழ்மையோ, மக்காச்சோளம் பொறுக்கும் அவலமோ இல்லாத இவர்களுடைய அமெரிக்கக் குழந்தைகளைப் பற்றி நாம் கவலைப்படுவோம்.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரத்தில் சிறுமிகளுக்காக நடத்தப்படும் அழகிப் போட்டி ஒன்றைப் பற்றி, செய்தி படமொன்றை பி.பி.சி. ஒளிபரப்பியது. ஜேனே ட்ரேஸ் தயாரித்திருக்கும் இக்குறும்படத்தின் பெயர் "பெயின்டட் பேபீஸ்" (Painted Babies - சாயம் பூசப்பட்ட குழந்தைகள்).

பாடிக்கொண்டே, சுறுசுறுப்பாய் மூன்று சக்கர சைக்கிளை ஓட்டும் ஆசியா ஒரு 5 வயது சிறுமி. அட்லாண்டாவில், சதர்ன் சார்ம் நிறுவனம் நடத்தும் அழகிப்போட்டிக்குப் பயிற்சி எடுக்கும் அவளுக்கு இப்படி விளையாடுவதற்கான நேரம் கிடைப்பதே அரிது. அவள் மட்டுமல்ல மொத்த குடும்பமும் போட்டிக்கான ஆயத்தங்களில் மூழ்கியிருக்கிறது. சிறுமியின் பாட்டி மேரி பழைய பத்திரிக்கையின் அழகுக் குறிப்புகளைச் சேகரிக்க, தாய் கிம் மான்சூர் (முன்னாள் விளம்பர நடிகை)ஆடை ஆபரணங்களைச் சரிபார்க்க, இருவருக்கும் தந்தை ஃபூ மான்சூர் உதவி செய்கிறார். தேர்வுக்குக் கண்விழித்துப் படிக்கும் குழந்தைகளுக்கு, கண் விழித்து ஹார்லிக்ஸ் கொடுக்கும் நம்மூர் ஹார்லிக்ஸ் பெற்றோரை விட இக்குடும்பத்தின் 'தியாகம்' அளப்பரியது.

அன்ன நடைக்கான பயிற்சி, முகபாவனை, சிரிப்பு, பாட்டு என ஆசியாவின் ஒருநாள் என்பதே பல பயிற்சிகளின் அட்டவணை. ஊண், உறக்கம் மறந்து மகளுக்காக அம்மா படும் அவஸ்தையை என்னவென்பது? சாப்பாட்டு மேசையிலும் மகளுக்குப் பாட்டுப் பயிற்சியை நடத்தும் கிம் மான்சூரின் கண்களில் தெரியும் அந்த லட்சிய வெறி, நமக்குத் திகிலூட்டுகிறது. சிறுமி ஆசியாவிடம் பேட்டியாளர் கேட்கிறார், "நீ எதற்காகப் போட்டியில் கலந்து கொள்கிறாய், எதிர்காலத் திட்டம் என்ன? "நிறைய பணம் வேணும், கார் வேணும், பங்களா வேணும், இன்னும் நிறைய நிறைய பணம், அவ்வளவுதான்" ஒரு ஹாலிவுட் நடிகையைப் போல வேக வேகமாகப் பேசி முகமசைத்துக் கைவிரிக்கிறாள் அந்தச் சிறுமி.

ப்ருக்கி, ஆசியாவுடன் போட்டி போடும் மற்றொரு சிறுமி, ஏற்கனவே உள்ளூர்ப் போட்டியில் நான்கு இலட்சம் ரூபாய் வென்றவள், தேசியப் போட்டிக்குத் தயாராகிறாள். பாட்டி பாம் ப்ரட் வெல் நடத்தும் அழகு நிலையத்திலேயே பேத்தியும் அமெரிக்க பார்பி பொம்மையைப் போல மெருகேற்றப்படுகிறாள். மகளுக்குத் தெற்றுப்பல். அதனால் பல்லைக் காட்டாமலேயே இளிப்பதற்கு தாய் பயிற்சி கொடுக்கிறாள். பாடல் பயிற்சிக்காக மட்டும் வாரம் ஒருமுறை 500 கி.மீ. தொலைவில் உள்ள பாடல் ஆசிரியையிடம் பயிற்சி எடுக்கிறாள் ப்ரூக்கி.

போட்டிக்கு இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் தினசரி மூன்றுமுறை சகல பயிற்சிகளையும் செய்கிறாள். பதிவு செய்த வீடியோ கேசட் மூலம் திருத்தங்கள் செய்யப்படுகிறது. தோட்டத்தில் நீர் பாய்ச்சும் ப்ரூக்கியின் தந்தை, தனது சேமிப்புப் பணத்தை மகளின் கல்விக்காகச் செலவிட விரும்புகிறார். போட்டிக்கான உடையை மட்டும் 40,000 ருபாயில் தயாரித்திருக்கும் தாய், சேமிப்பை அழகுப் போட்டிகளுக்காகச் செலவிட விரும்புகிறார். பாட்டி, அம்மாவுடன் அட்லாண்டாவை நோக்கி விமானத்தில் பறக்கிறாள் ப்ருக்கி.

இப்படிக் கனவுகளோடும், குழந்தைகளோடும் அட்லாண்டாவில் வந்திறங்கும் தாய்மார்கள் பல விடுதிகளில் தங்குகின்றனர். வந்திருக்கும் பல அம்மாக்கள் போட்டி நடக்கும் மூன்று நாட்களிலும் பதட்டத்தோடு இருக்கின்றனர். போட்டி தவிர்த்த நேரங்களில் அழுகை, கோபம், விளையாட்டு, சாக்லெட் என்று குழந்தைகள் குழந்தைகளாக இருக்கின்றனர். ஒரு குழந்தைக்கு 15,000 ரூபாய் வசூலிக்கும் முகப்பூச்சுக் கலைஞர், போட்டிகளுக்கு இளம்பெண்களாகவே நடத்தி நிகழ்ச்சிகளைத் தொகுத்துரைக்கும் பாடகர் டிம்வெட்மர், போட்டியை நடத்தும் சதர்ன் சார்ம் நிறுவனத்தின் தலைவி... மொத்தத்தில் போட்டி தீவிரமடைகிறது.

ஆடை, அலங்காரத்தோடு, தோற்றத்தை மதிப்பிடும் அழகுப் பிரிவு, 'ஆண்களின் கனவுக்கன்னி' எனும் பாடலுக்கேற்ப அபிநயம் பிடிக்கும் 'கனவுக்கன்னி' பிரிவு, பாடல் பிரிவு, நீச்சல் உடை - நாகரீக உடை அணிவகுப்பு... அனைத்துப் போட்டிகளிலும் மேடையில் சிறுமிகள் செய்வதை, கீழே உள்ள தாய்மார்கள் கூடவே செய்து காட்டுகிறார்கள். ஆ...ஊ என கத்தி உற்சாகப்படுத்துகிறார்கள். பாடி முடித்து, 'நன்றி சீமான்களே, சீமாட்டிகளே' என்று பெரியவர்களின் தோரணையில் பேசி புன்னகைக்கிறாள் ப்ரூக்கி. கெளபாய் உடையில் நடக்கச் சிரமப்படுகிறாள் ஆசியா. கேள்விகளுகு ஒற்றை வார்த்தையில் திருத்தமாகப் பதிலளிக்கும் ப்ருக்கி போட்டி இடைவெளியில் கோபமாக இருக்கிறாள். சரளமாய்ப் பேசும் ஆசியா, வெறுத்துப்போன அன்றாட அழகுப் பயிற்சி அட்டவணையை மாற்றுமாறு தாயிடம் முணுகுகிறாள். ஒருவழியாய் போட்டி முடிந்து, அந்த ஆண்டின் பேரரசி யாரென அறிவிக்கும் தருணமும் வருகிறது.

தாய்மார்கள் பதட்டத்தின் உச்சியில் நகத்தைக் கடித்து, கைகளைப் பிசைந்து, கண்களை மூடுகின்றனர். முதல் மூன்று இடங்களுக்கான தகுதியை ஆசியாவும், ப்ருக்கியும் அடைகிறார்கள். முடிவில் ப்ருக்கி பேரழகியாக அறிவிக்கப்படுகிறாள். ஆசியாவுக்கு மூன்றாவது இடம் கிடைக்கிறது. பேரழகியின் தாய் ஆனந்தத்தில் கதறுகிறார். ஆசியாவின் தாய் அதிர்ச்சியில் கண்கள் பனிக்கிறார். வென்றவர்களும், தோற்றவர்களும் மீண்டும் அடுத்த ஆண்டு போட்டிக்கு வருவோம் என்கின்றனர். கவர்ச்சியான எதிர்காலக் கனவுகளோடு, அடுத்த ஆண்டு மட்டுமல்ல வாழ்க்கை முழுவதும் குழந்தைகளாய், தாய்களாய், பாட்டிகளாய் இறப்புவரை அவர்கள், வந்து கொண்டே இருப்பார்கள்.

*****

படம் முடிந்துவிட்டது. இனி, இந்தியாவிற்கு வருவோம். இன்னும் பாதி விமர்சனம் இருக்கிறது. நாளை மீண்டும் தொடர்கிறேன்.

Sep 16, 2007

விநாயகர் ஊர்வலம் - உஷார்! உஷார்!விநாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டது. இனி தேதி வாரியாக, இந்துத்துவ வெறியைத் தூண்டும் இயக்கங்கள் வரிசையாக விநாயகர் ஊர்வலம் நடத்துவார்கள்.

பின்வருகிற ஆர்.எஸ்.எஸ் எழுப்பும் இந்த கேள்வியும், பின் வருகிற ம.க.இ.க வினரின் பதிலும், விநாயகர் ஊர்வலத்தின் அர்த்தம் நன்றாக உணர்த்தும். கவனமாய் இருங்கள்.

மசூதிமுன் ஊர்வலம் நடப்பதேயில்லலயா?

"நாடு முழுவதிலும் எங்கெல்லாம் ஒரு மசூதி அல்லது ஒரு முசுலீம் பேட்டை இருக்கின்றதோ, அந்தப் பகுதியை உண்மையில் தமக்கே சொந்தமான சுதந்திரமான பிரதேசமாக முசுலீம்கள் கருதுகின்றனர். ஹிந்துக்களின் ஊர்வலம் இசைக்கருவிகளுடனும், பாட்டுகளுடனும் அவ்வழியே சென்றால், அவர்கள் தமது மத உணர்ச்சிகள் புண்படுத்தப்பட்டதாகக் கடுங்கோபம் கொள்கின்றனர்.

இனிய இசையைக் கேட்டுப் புண்படும் அளவிற்கு, அவர்களுடைய சமய உணர்ச்சி தொட்டால் சிணுங்கியாக இருக்குமானால் தமது மசூதிகளைக் காடுகளுக்கு மாற்றி அமைத்துக்கொண்டு அங்கு மெளனமாகத் தொழுகை நடத்தக் கூடாதா? சாலை ஓரத்தில் ஒரு கல்லை நட்டு அதற்கு வெள்ளையடித்து, அதனைத் தொழுகைத் தலம் என்று அறிவித்துவிட்டு, அங்கு இசை பாடப்படுவது தமது தொழுகையைக் கலைப்பதாகும் எனக் கூப்பாடு போடுவானேன்?"

- ஆர்.எஸ்.எஸ் - இன் இரண்டாவது தலைவர் கோல்வால்கர்,
('ஞானகங்கை'- இரண்டாம் பாகம் - பக். 170)


மசூதிக்கு முன்னால் நடக்கவோ, பாடவோ, மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்துமத வெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம். மசூதிகளின் தொழுகைக் காலத்தோடு பிரச்சனை இல்லாமல், நல்லிணக்கத்தோடு இயங்கி வந்த மக்களிடையே - இல்லாத ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி, முசுலீம் எதிர்ப்புக் கலவரம் நடத்துவதே அவர்கள் நோக்கம். அதைப் பல இடங்களில் ஆண்டுதோறும் செய்தும் வருகிறார்கள்.

முதலில் மசூதிகள் பிரபலமான, பரபரப்பான தெருக்களிலும், சந்தைகளிலும், வணிக முக்கியத்துவம் மிகுந்த இடங்களில் இருப்பது உண்மைதான். காரணம், அவ்வட்டாரத்தில் கணிசமான முசுலீம்கள் வாழ்வதும், அதிலும் வணிகர்களாக இருப்பதும், தமது வேலை நேரத்தில் குறிப்பாக வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்துபோக வசதியாக இருக்கவும்தான் அப்படி கட்டப்படுகின்றன. வேறு எந்த நோக்கமும் இல்லை.

அதே சமயம் மசூதிகள் முன்பு மாணவர்கள், தொழிலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் ஊர்வலமாய்ப் போகிறார்கள். ஏன், கோவில் திருவிழாக்கள் கூட இடையூரின்றிச் செல்லுகின்றன. மசூதி அருகே பொதுக்கூட்டங்கள் நடப்பதும், பாங்கு ஓதும் நேரம் ஓரிரு நிமிடம் அமைதி காப்பதும் தமிழகத்தில் இயல்பான காட்சிகள்தான். இதனாலெல்லாம் எங்கும் கலவரம் ஏற்பட்டதில்லை.

1980-களில் தோன்றிய இந்து முன்னணி, மசூதி முன்பு விநாயகர் ஊர்வலத்தை வம்படியாக நடத்திய போதுதான், இக்கலவரங்கள் ஆரம்பித்தன. சரியானத் தொழுகை நேரத்தில் ஊர்வலம் நடத்துவது, "துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியைக் கட்டு, அல்லாவுக்குக் குல்லா போட்டு அரேபியாவுக்கு அடிச்சுத் துரத்து, இந்த நாடு இந்து நாடு இல்லேங்கிற துலுக்கன் யாரு" போன்ற 'இனிய இசை மொழிகளை'க் கூவுவது இவற்றினால்தான் தகராறுகல் ஆரம்பித்துக் கலவரங்களாய் முடிகின்றன.

பம்பாய், ஹைதாரபாத், சென்னை மூன்று நகரங்களிலும் ஆர்.எஸ்.எஸ். வானரங்கள் நடத்த்டும் விநாயகர் ஊர்வலங்கள் மசூதி வழியாகச் சென்று முசுலீம் மக்களைத் தாக்குவதற்கான அவலங்களாய் மாறிவிட்டன. தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் இந்த நோய் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. எனவே, மசூதி முன்பு ஊர்வலம் நடத்தும் இந்து மதவெறி அமைப்புக்களை முழுமையாகத் தடை செய்யும் போதுதான் இந்த அராஜகங்களுக்கு முடிவு கட்ட முடியும்.

பெரும்பான்மை இந்துக்களின் ஏகபோகப் பிரதிநிதிகள் என உரிமை கொண்டாடும் சிறு கும்பலான பார்ப்பன-இந்து மதவெறி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி முறியடிப்பது உழைக்கும் மக்களின் கடமையாகும்.

மசூதியை வைத்து உரிமைக்குரல் எழுப்பும் இவர்கள்தான் அக்கிரகாரம், ஊர், தேரோட்டம் போன்றவற்றில் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கிறார்கள். கேவலம், தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து தேரை இழுக்க முடியாது என கண்ட தேவியில் சில ஆண்டுகளாய் நிறுத்தப்பட்டிருக்கும் மரத்தேர் இந்த மரமண்டைகளின் யோக்கியதைக்குச் நல்ல சான்று.

******

சமீபத்தில், "கண்ணை மறைக்கும் காவிபுழுதி" என்றொரு புத்தகத்தை, மக்கள் கலை இலக்கிய கழகம் வெளியிட்ட புத்தகத்தை மீண்டும் வாசித்தேன். அதில், விநாயகர் ஊர்வலம் தொடர்பாக ஒரு கட்டுரை சிறப்பாக இருந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Sep 14, 2007

கலைஞர் டிவி - ஆரம்பமே 'அசத்தலா' இருக்கே!
நாளை முதல், இந்திய சானல்களில் (பில்டப் அதிகமா இருக்கோ!) தமிழ்சானல் ஒன்று ஆர்ப்பாட்டமாய் தன் ஒளிபரப்பைத் தொடங்க இருக்கிறது.

காலை முதல் இரவு வரைக்கும் திரை நட்சத்திரங்கள் தங்கள் வியர்வை சிந்தி உழைத்த நேரங்களை, நம்மோடு பகிர்ந்து கொள்ள இருப்பதை, இன்றைக்கே டிரைலர் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். நாளை முதல், தமிழனின் வாழ்வு ஒருபடி உயரப்போகிறது(!).

திராவிட வெகுஜனக் கட்சிகளில், திமுகவின் தலைவர் கலைஞர் தான், இன்றைக்கும் அவ்வப்பொழுது பகுத்தறிவு பேசி, இந்துத்துவ ஆட்களிடம் திட்டு வாங்கிக்கொண்டு இருக்கிறார். இது நாடறியும்.

ஆனால், அப்படிப்பட்ட கலைஞரின் பெயரில், தொடங்குகிற சானலை, இரண்டு நாட்களுக்கு முன்பாக அண்ணாவின் பிறந்த நாளில் தொடங்கியிருக்கலாம். அல்லது, இன்னும் மூன்று நாளில், செம்டம்பர் 17 ந்தேதியன்று பெரியாரின் பிறந்த நாள் வருகிறது அன்றைக்கு தொடங்கியிருக்கலாம்.

இப்படிப்பட்ட சிறப்பான நாட்களை விட்டு விட்டு, ஏன் விநாயகர் சதுர்த்தியன்று தொடங்குகிறார்கள்?

கலைஞருக்கு பிடிக்காத நபர் யாராவது இப்படி இந்த நாளில், சானல் தொடங்குவதைப் பற்றி, கேள்வி கேட்டிருந்தால், கலைஞர் என்ன பதில் சொல்லியிருப்பார்.

"ஒரு தடவை சிவபெருமான் கையாலயத்தில் தியானத்தில் ஆழ்ந்துவிட, தனிமையில் விடப்பட்ட பார்வதி தன் மீது அன்பு செலுத்தவும் தன்னை பாதுகாக்கவும் வேண்டி தன் உடல் அழுக்கை உருட்டி இளைஞன் ஒருவனை உருவாக்கினாள். அவனைக் காவலாளாக நியமித்து யாரையும் அனுமதிக்க வேண்டாமென்று கட்டளையிட்டு, குளிக்க செல்கிறாள்.

இதற்கிடையில், சிவன் தியானத்திலிருந்து விடுபட்டு, பார்வதியின் அந்தப்புரத்திற்குள் சிவன் நுழைய, காவலுக்கு நின்ற அவன் அனுமதி மறுக்க, சிவன் கோபப்பட்டு, தலையை வெட்டிவிடுகிறார். பிறகு, அழுது வடிந்த பார்வதியை சமாதனப்படுத்த, வடதிசையில் கண்ணில்பட்ட ஒரு யானையின் தலையை வெட்டி வந்து ஒட்ட வைக்கிறார்கள். இப்படித்தான், யானை முகம் கொண்ட விநாயகர் தோன்றினார்".

இதிலிருந்து நாம் பெறுகிற செய்தியாவது, அழுக்கில் உருவானவர் விநாயகர். இந்த நாளில் தொடங்கப்படுகிற சானலின் தரமும் இப்படி அழுக்காகத்தான் இருக்கும்"


இது சிரிப்பதற்காக, சொல்கிற செய்தி அல்ல! திமுகவின் கொள்கைகளும், இந்துத்துவ கொள்கைகளும் இருவேறு துருவங்கள் என்று நினைப்பவர்கள், இப்படி இரண்டும் இணைகிற இந்த புள்ளியைப் பார்த்தாவது, புரிந்து கொண்டால் சரி.

திமுகவில் இருக்கும் பலரிடம் இந்துத்துவ கருத்தியல் நன்றாகவே இருக்கிறது. அதிமுகவுக்கும், திமுகவிற்கும் சிலர் அடிக்கடி கட்சி மாறுகிறார்களே! நாளை, பி.ஜே.பி.க்கும் கூட எந்தவித உறுத்தலும் இல்லாமலும், இயல்பாய் இவர்கள் மாறுவார்கள். அதற்கு ஒரு நல்ல உதாரணம் - முன்னாள் அதிமுக அமைச்சரும், இன்றைய பாரதிய ஜனதாவில் இருக்கும் திருநாவுக்கரசு.

from socratesjr2007.blogspot.com

Aug 25, 2007

இவர்தான் பத்திரிக்கையாளர்! - சாய்நாத்தனது டெஸ்க்கை விட்டு நகர மறுக்கிற, அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் தரும் செய்திகளை, கொஞ்சம்கூட உறுதிப்படுத்தாமல், அப்படியே வாந்தி எடுக்கிற பத்திரிக்கையாளர்கள் இங்கு அதிகம்.

மக்களூடைய ஜீவாதாரமான பிரச்சனைகளை, அதன் காரண, காரியங்களை அலச, ஆராய விரும்பாத, ஆனால் பிரேமனந்தா, கன்னடபிரசாத், பத்மா - போன்ற 'செக்ஸ்' சம்பந்தமான விசயங்களை அலசி ஆராய்ந்து, தன் கற்பனை எல்லாம் கலந்து, சுவையாக, கிளுகிளுப்பாக தருகிற பத்திரிக்கையாளர்களும் இங்கு அதிகம்.

இந்தியாவில், நாலாவது தூண் பல பத்திரிக்கையாளர்களால் நிறைய அசிங்கப்பட்டு போயிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், 'சாய்நாத்' என்றொரு பத்திரிக்கையாளர் 'தி இந்து' (THE HINDU) நாளிதழில் 'கிராமப்புற செய்தி' (Rural affiars) சேகரிப்பாளராக, எடிட்டராக இருக்கிறார்.

புள்ளிவிவரங்களை சொல்லியே, இந்தியா முன்னேறுகிறது என்று பல அமைச்சர்கள் நம்மை குழப்பி, நம்ப வைக்க முயல்கிறார்கள்.'இந்தியா ஒளிர்கிறது', வருங்காலத்தில் வல்லரசாகப் போகிறது என்பவர்களின் முகத்தில் காறித்துப்புகிறது இவரது கட்டுரைகள் வெளிப்படுத்தும் உண்மைகள்.

பத்திரிக்கையாளர் சாய்நாத் அவர்கள் இந்தியாவின் பின்தங்கிய பல மாவட்டங்களுக்கு நேரிடையாக சென்று, விவசாயிகளின் வாழ்க்கையை, அவர்களின் பரிதாபமான தற்கொலைகளை, அதற்கான காரணங்களை ஆய்ந்து, சேகரித்து உலகுக்கு வெளிப்படுத்துகிறார்.

சமீபத்தில், அவருடைய மகத்தான சேவையை பாராட்டி, அவருக்கு 'மகசேசே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே பி.டி. கோயங்கா விருது, பிரேம் பாட்டியா இதழியல் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

அவருக்கு உழைக்கும் மக்களின் சார்பாக, நாமும் நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.

பின்குறிப்பு : சமூகத்தை, அதன் உண்மை நிலையை அறிய சாய்நாத் அவர்களின் கட்டுரையைத் தேடி படியுங்கள்.

நன்றி : குருத்து

'முன்னேறுகிறது இந்தியா' - சாய்நாத்

30 ரூபாய் கூலிக்காக நாளொன்றுக்கு 150 கீ.மீ ரயில் பயணம்:
முன்னேறுகிறது இந்தியா


ரேவண்டாபாய் காம்ளே தனது ஆறு வயது மகனோடு பேசிப் பல மாதங்களாகி விட்டது. ஒரே வீட்டில்தான் இருக்கிறார்கள், ஆனால் இப்படியொரு நிலைமை. பூரிபாய் நாக்புரேவுக்கும் அப்படித்தான் சில சமயம் பெரிய மகனோடு பேச நேரம் கிடைக்கும், அதுவும் அவன் விழித்துக் கொண்டிருந்தால்.

மகாராஷ்டிரா மாநிலம், கோண்டியா மாவட்டம், திரோடா என்ற சிற்×ரில் ரேவண்டாபாய், பூரிபாய் போலவேதான் நூற்றுக்கணக்கான பெண்களின் அன்றாட வாழ்க்கை இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் அவர்கள் நான்கே மணி நேரம்தான் வீட்டில் ஓய்வெடுக்க முடியும் (அது ஓய்வா உறக்கமா?) இப்படி வயிற்றுப்பாடுக்காக நாள்தோறும் போக, வர சுமார் 150 கி.மீ. பயணப்பட்டு அல்லல்படும் அவர்களுக்குக் கிடைக்கும் சொற்பக்கூலி வெறும் முப்பது ரூபாய்.

விடியற்காலை 6 மணி நாங்கள் அவர்களோடு சேர்ந்து ரயிலுக்குப் புறப்பட்ட நேரம் அது. அவர்கள் அதற்கு இரண்டு மணி நேரம் முன்பு எழுந்திருந்தால்தான் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு கிளம்ப முடியும்.

"சாப்பாடு செய்து முடிச்சு, துவைத்து, பெருக்கி, சுத்தம் செய்து, கழுவி எல்லா வேலையும் முடித்து விட்டேன்'' பூரிபாயின் குரலில் ஒரு நிறைவு "இப்ப நாம எவ்வளவு வேணும்னாலும் பேசலாம்'', என்றார். அந்த நேரத்தில் அவர் வீட்டில் எல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். ""பாவம், பொழுதுக்கும் வேல செஞ்சி சோர்ந்து போயிடுதுங்க'' என்றார் பூரிபாய்.

"நீங்க சோர்ந்து போவலியா?'' என்ற என் கேள்விக்கு

அவர் சொன்ன பதில்: ""இல்லாம? வேறென்ன செய்ய? வேற வழியில்லே.''

ரயில் நிலையம் சென்றபோது பூரிபாய் போலவே வேறு வழியில்லாத ஏராளமான பெண்கள் ரயிலுக்குக் காத்துக் கொண்டிருந்தார்கள். அது எனக்கு விசித்திரமாகத் தோன்றியது. அவர்களில் யாருமே வேலைதேடி கிராமத்திலிருந்து நகரங்களுக்கு ஓடவில்லை; மாறாக, சிறு நகரத்திலிருந்து கிராமம் நோக்கி வேலை தேடிப் போகும் அவர்கள் நாடோடிக் கூலிகள்.

ஒவ்வொரு நாளும் கிராமத்தில் விவசாயக் கூலி வேலை செய்ய வேண்டும். வார விடுமுறை என்ற பேச்சே இல்லை. திரோடாவில் எந்த வேலைகளும் கிடையாது.

கோண்டியாவில் உள்ள "கிசான்சபா'வின் (விவசாயச் சங்கம்) செயலர் மகேந்திர வால்டே சொன்னார்: ""இந்த வட்டாரத்தில் பீடித் தொழில் அழிஞ்சபிறகு இங்க ஒரு வேலையும் இல்லே.''

அக்கம் பக்கத்திலிருந்து 5,6 கி.மீ. நடந்துதான் தினமும் அவர்கள் ரயில் நிலையத்துக்கு வரவேண்டும். "விடியக் காலமே 4 மணிக்கு எழுந்திருச்சி, வேல எல்லாம் முடிச்சு ஸ்டேசனுக்கு நடந்தமுன்னா போய்ச் சேர 7 மணி ஆயிடும்.'அடிச்சுப் பிடிச்சு வண்டிக்குள் ஏறினா, கூட்டத்தோட கூட்டமா சால்வா கிராமத்துக்குப் பயணம் போக 2 மணி நேரம் பிடிக்கும்.

அந்தப் பெண்களின் கண்களில் சோர்வு, முகங்களில் கனத்த களைப்பு, பசி, அரைத்தூக்கம். அமர்ந்து ஓய்வாகப் பயணம் செய்யலாம் என்றால் இடமும் கிடைக்காது. அப்படி அப்படியே தரையில் உட்கார்ந்தவாறும், ரயில் பெட்டிகளின் உள் சுவரில் சாய்ந்தவாறும் அந்த இரண்டு மணி நேரத்துக்குள் அவரவர் வேலை செய்யும் இடம் வருவதற்குள் முடிந்தவரை குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டே வந்தார்கள்.

"திரும்ப வீடு போய்ச் சேர ராவுலே 11 மணி ஆயிரும். தலையச் சாச்சுப் படுக்கறதுக்குள்ளாற நடுநிசி ஆயிரும். மறுபடி அடுத்தநாள் காலையில 4 மணிக்கு முழிக்கணும்'' என்று விவரித்த ரேவண்டா பாய் ""என்னோட சின்னப் பையன் முழிச்சிருந்து பாத்துப்பேசி ரொம்ப நாளாயிடுச்சி'' என்று சொல்லிச் சிரித்தார். சிரிப்பு வருத்தத்தில் நனைந்திருந்தது —

"அப்படி என்னைக்காவது ஒரு நா, பசங்க அவுங்கவுங்க பெத்தவங்களப் பாத்தாக்க அவுங்கதான் அம்மாவான்னு தோணிரும்'' என்றார் அவர்.

நிறைய பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகாம பாதியிலேயே நின்று போகும் படிக்க வைக்க வசதி கிடையாது; அப்படியும் போகிற பிள்ளைகள் நன்றாகப் படிக்காது. ""வீட்டுல இருந்து கவனிக்க, படிச்சியான்னு கேக்க, கொள்ள ஆளு கிடையாது'' என்றார் பூரிபாய். சில பிள்ளைகள் கிடைக்கிற வேலையச் செய்யப் போவதும் உண்டு.

திரோடா பள்ளி ஆசிரியர் லதா பாபங்கர் சொல்வதுபோல, "அவங்க நல்லா படிக்க மாட்டாங்க. அதுக்கு அவுங்கள குத்தம் சொல்ல முடியாது.'மகாராஷ்டிர அரசாங்கத்தைத்தான் குறை சொல்ல வேணடும்; இந்தப் பிள்ளைகள் சரியாகப் படிக்கவில்லை என்றால், பள்ளிக்கூடம் சரியாகச் செயல்படவில்லை என்று காட்டி அரசாங்கமே உதவிகளை நிறுத்தி விடுகிறது;

மாணவர்களுக்குத் தங்களால் முடிந்த உதவிகளை ஆசிரியர்கள் செய்தாலும், தேர்வுகளில் தேர்வு விகிதம் சரியில்லை என்று அந்த ஆசிரியர்களையே அரசாங்கம் தண்டிக்கிறது. இதனாலும் கூட மாணவர்கள் பள்ளிக்கூடம் போவது மெல்ல மெல்ல குறைந்து நின்றும் போகிறது.

ரயில் ஓட்டத்தோடு குலுங்கும் தரையில் உட்கார்ந்திருந்த சகுந்தலா பாய் அகோஷே கடந்த 15 வருடமாக இப்படித்தான் வேலைக்குப் போய் வருவதாகச் சொன்னார். பண்டிகைகள் ஏதாவது வந்தாலோ, மழை வந்தாலோதான் இடையில் அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்.

"ரொம்ப அபூர்வமாக ஒருநாளைக்கு 50 ரூபாய் கிடைக்கும். மத்தப்படி எல்லா நாளுலயும் இருபத்தஞ்சுலேர்ந்து முப்பது ரூபாதான் கூலி'' என்றார் சகுந்தலா பாய். வெளி வேலையை விட்டால் உள்ளூரிலேயே செய்வதற்கு எந்த ஒரு வேலையும் இல்லை.

சிறு நகரங்களிலிருந்து இப்போதெல்லாம் பணம் பெரு நகரங்களுக்கு நகர்ந்து விட்டது. இங்கிருந்த மிச்ச மீதி சிறு தொழில் நிறுவனங்களும் முடங்கிப் போய் மூடப்பட்டு விட்டன. சிறு நகரங்கள் கண் எதிரே அழிகின்றன. அனேகமாக, பயணம் செய்து கொண்டிருக்கும் அத்தனைப் பெண்களும் முன்பு பீடி சுற்றிக் கொண்டிருந்தவர்கள். "பீடித் தொழில் நசிஞ்சவுடனே எல்லாமே அத்துப் போச்சி'' என்றார் பூரிபாய்.

"பீடித் தொழிலே சிறு தொழில்தான். எங்கே மலிவான உழைப்பு கிடைக்கிறதோ அந்த இடத்துக்கு பீடித் தொழில் நகர்ந்துவிடும்'' என்கிறார் கே.நாகராஜ் என்கிற "மிட்ஸ்' (வளர்ச்சி பற்றிய ஆய்வு நிறுவனம், சென்னை) நிறுவன ஆய்வாளர்.

அவரது ஆய்வின்படி, "பீடித்தொழில் வெகுவேகமாக இடம் மாறிவிடும். இதனால் கூலிகள் படுகிற பாடு சொல்லிமாளாது. கடந்த 15 வருடங்களில் நிலைமை படுமோசமாகி விட்டது.''

கிசான் சபாவைச் சேர்ந்த பிரதீப் கூற்றுப்படி, ""கோண்டியா பகுதியின் பீடித்தொழில் உத்தரப்பிரதேசத்துக்கும் சட்டீஸ்கருக்கும் இடம் பெயர்ந்து விட்டது.''

ஒரு பெண் ரயிலில் தினமும் நடக்கிற ஒரு வேடிக்கையான அவலத்தை விவரித்தார். அவர்கள் யாருமே பயணச்சீட்டு வாங்குவதில்லை. சீட்டு வாங்குவதானால் வாங்கும் கூலி இதற்கே காணாது. அதனால், அவர்களாகவே ஒரு "சிம்பிள் வழி' கண்டுபிடித்தார்கள்.

டிக்கட் பரிசோதகர் வந்தால் ஆளுக்கு 5 ரூபா லஞ்சம் கொடுத்து விடுவார்கள். ரயில் பயணச்சீட்டு இப்படியும் தனியார்மயமாகி விட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த 5 ரூபா கூட அவர்களின் உழைப்பை, கூலியை வைத்து ஒப்பிட்டால் பெரிய தொகைதான்; ஆனால் பரிசோதகர்கள் சும்மா விட்டுவிடுவதில்லை, மிரட்டிப் பறித்து விடுவார்கள்.

"என்னோட பெரிய பையன் சில சமயம் சைக்கிளில் கொண்டு போய் ரயில்வே ஸ்டேசனுக்கு விடுவான். அன்றைக்கெல்லாம் அங்கேயே இருந்து கொண்டு ஏதோ கொஞ்சம் கூலிக்கு வேல கிடைச்சாலும் தேடிப் பிடிப்பான். என்னோட பொண்ணு வீட்டுல சமைக்கும். அடுத்தவன் அண்ணனுக்குச் சோறு கொண்டு போய்க் கொடுப்பான்'' என்று தன் குடும்பத்தின் பாடுகளைச் சொன்னார் பூரிபாய்.

இதையே வேறு வார்த்தைகளில் சொன்னார் கிசான்சபா செயலர் வால்டே: "ஒருத்தர் கூலிக்கு மூணு பேர் உழைக்கிறாங்க பாருங்க.'' பூரிபாயின் கணவர் ஏதாவது வேலை கிடைத்துப் போனால், அதையும் சேர்த்து, ஒரு நாளைக்கு அந்தக் குடும்பத்திற்கு 100 ரூபாய் கிடைப்பதே பெரிசு. சில நாட்களில் பெரியவனுக்கும் சரி, தந்தைக்கும் சரி இரண்டு பேருக்கும் வேலை கிடைக்காமல் போய் விடும். ரேசன் கார்டு கூட இல்லாத அந்தக் குடும்பம் அப்படிப்பட்ட நாட்களில் தவித்துப் போகும்.

பயணத்தில் வழியேற ரயில் நிலையங்களில் கான்டிராக்டர்கள் மலிவான கூலிக்கு உழைப்பாளிகளைப் பிடிக்க, கழுகுபோலக் காத்திருந்தார்கள்.

···
பூரிபாய், ரேவண்டா பாயோடு பயணம் செய்த நாங்கள் சால்வா நிலையத்துக்குப் போய்ச் சேர காலை 9 மணி ஆகிவிட்டது. அங்கிருந்து வேலை நடந்த கிராமம் ஒரு கி.மீ. தொலைவு; பிறகு வயல்களை நோக்கிப் போக கூடுதலாக ஒரு 3 கி.மீ. அந்த 3 கி.மீ. தொலைவும் தலையில் தண்ணீர்ப் பானையைச் சுமந்து கொண்டு பூரிபாய் போட்ட நடையோடு எங்களால் போட்டி போட முடியவில்லை.

அற்பக்கூலிக்கு அவர்கள் வேலை செய்த நிலத்தின் சொந்தக்காரர் பிரபாகர் வஞ்சாரேவுக்கும் போதாத காலம்தான். விவசாய நெருக்கடி அவரையும் பதம் பார்த்துவிட்டது. அவருக்குச் சொந்தமாக 3 ஏக்கர் நிலம் இருந்தது; தவிர அவர் 10 ஏக்கரா குத்தகைக்கு எடுத்திருந்தார்.

"கட்டுப்படியாகாத விற்பனை விலை எங்களையும் வயிற்றில் அடிக்கிறது'' என்றார் பிரபாகர். ""கிராமப்புற வறுமையைச் சமாளிக்க முடியாத பாரம்பரியக் குடிகளும் எங்கெங்கோ இடம் பெயர்ந்து விட்டதால்தான் திரோடாவிலிருந்து பொம்பிளை ஆட்களைக் கூலிக்கு வைக்கிறோம்'' என்றார் அவர்.

இந்தக் கிராமம் உள்ள இடம் கிழக்கு விதர்பா தற்கொலைகள் பெருகி அழிந்து கொண்டிருக்கும் பிரச்சினைக்குரிய பருத்தி விளையும் பகுதியிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது இப்பகுதி. வஞ்சாரே நெல் பயிரிடுகிறார். மிளகாய் போல வேறு சில பயிர்களும் போடுகிறார். தற்சமயம் அதற்குத்தான் ஆட்கள் வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும்வேலை முடிவதற்குள் பொழுது சாய்ந்துவிடும். பிறகு ஆட்கள் ரயிலடியை நோக்கி நடப்பார்கள் அதற்கு ஒரு மணி நேரம் பிடிக்கும்.

அதற்குப் பிறகும் ஊர் திரும்பும் ரயில் வருவதற்காக ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வேண்டும். இரவு 8 மணிக்குத்தான் ரயில். திரோடா போய்ச்சேர 10 மணியாகும், அதற்குள் உறவுகள் உறங்கிப் போகும். விடியலில் வேலைக்கு அவர்கள் கிளம்பும் போதும் குடும்பம் உறங்கிக் கொண்டுதான் இருக்கும். "இதுல எங்களுக்கு என்ன குடும்பம், என்ன வாழ்க்க, சொல்லுங்க'' என்று கேட்டார் ரேவண்டா பாய்.

காலையில் வீட்டிலிருந்து கிளம்பி, இரவு திரும்பி வந்து சேருவதற்குள்ளாக அவர்கள் சுமார் 170 கி.மீ. தூரம் பயணம் முடிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும், வாரம் முழுக்க, ஒரு 30 ரூபாய் கூலிக்காக.

"11 மணிக்கு வீடு திரும்புவோம். சாப்புடுவோம், தூங்குவோம்'' பூரிபாய் விவரித்தார். இதோ, இன்னமும் நான்கே மணிநேரம்தான் மறுபடி அவர்கள் எழுந்திருக்க வேண்டும். மறுபடி ஓடத் தொடங்கி விடவேண்டும்.

கட்டுரையாளர்: பி. சாய்நாத்.
மூலம்: தி இந்து, 24.1.2007.
மொழியாக்கம்: பஷீர்.

நன்றி : புதிய கலாச்சாரம், பிப். 2007
http://www.tamilcircle.net

Jul 11, 2007

சிவாஜி - த லூஸு தமிழனத்தின் விடிவெள்ளி?...அன்பர்களே,

உலகத்துல மூலை முடுக்குன்னு பாக்காம எல்லா பகுதில இருக்கிற தமிழர்கள் எல்லோருக்கும் ஒரே நேரத்துல பைத்தியம் பிடிக்குமா? அந்த அதிசயம் நடந்துச்சு.. போன ஜூன் 15ஆம் தேதிக்கு.. இன்னும் சில பேருக்கு அது தெளியவேயில்லை.

தமிழ்நாட்டிலும், மற்றும் உலகத்துல எங்கெங்கோ இருக்கிற தமிழர்கள் எல்லோருக்கும் ஒரே பிரச்சினை..ஒரே கேள்வி.. சிவாஜி பார்த்தாச்சா? படம் எப்படி? . - இப்படி தான் நம்ம டி.வி. பேப்பர், நெட் எல்லம் பாத்தா யோசிக்க தோணுது..

ரஜினி ரஜினி மாதிரியெ இல்லையாம் (குரங்க மனுசனா மாத்தி விட்ட மாதிரியோ..?)அவ்வளவு அழகா இருக்காராம்..இன்னாள் முதல்வர் குடும்பத்தோட பார்க்கிராறாம்.. அடுத்ததா முன்னாள் முதல்வரும் பார்க்கிராறாம்... பத்தாததுக்கு ஆந்திரா முன்னாள் முதல்வர் வேற பாத்துட்டு அவங்க கட்சி காரவுக எல்லாம் கண்டிப்பா பாக்கணுமுன்னு கட்டளை போட்டுருக்காராம்..

நம்ம ஒயிட் ஹவுஸ் தாதா ஜார்ஜ் புஷ்ஷு கூட இராக்குல இருக்கிற பஞ்சாயத்தெல்லாம் சட்டு புட்டுனு முடிச்சுப்பிட்டு சிவாஜி பாககலாம்னு இருக்காராம்..

என்ன நடக்குது இங்க? ஒரு படத்துக்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்.. ரஜினி ரசிகன்னு சொல்ற ஆளுங்கள விடுங்க.. நம்ம சராசரி ஆளுங்களுக்கே இந்த பில்டப்புகள பார்த்து ஒரு உறுத்தலும் இல்லையே?.. அப்படின்னு பல கேள்விகள்..

உண்மையில இதன் பின்னணி என்னங்கிறத எல்லாம் ஒரு பொதுவான ஆளு கேக்கிற கேள்விகளில் இருந்து புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.. இனி அது மாதிரியான கேள்விகளும் அதுக்கான பதில்களும் ( நான் புரிந்து கொண்ட வரைக்கும்...)

"இப்ப சிவாஜி படத்துக்கு பண்ற அத்தனை களேபரமும், ரஜினியா பண்றாரு? அவங்க ரசிகர்கள்னு சொல்லிகிட்டு தானே பண்றாங்க.. இதுக்கு போய் எல்லோரும் ரஜினியை ஏன் திட்டுறாங்க.. என்னங்க நியாயம் இது?"

உண்மைதான்..பொதுவா இப்பல்லாம் ரஜினி படத்துக்கெல்லாம் படம் தயாரிக்கிற ஆளுங்க விளம்பரம் பண்ண வேண்டியதில்லை.. சும்மா ஒரு பிட்டு போட்டா போதும்.. எல்லாத்தையும் மீடியாவே பார்த்துக்குறாங்க.. அதிலயும் இந்த ரசிகர்கள் ஒரு படம் வர்ரதுக்கு கட் அவுட் பாலாபிஷேகம் பண்றதும், காவடி தூக்கிறதும் பார்க்கிறப்போ கூடிய சீக்கிரமே நம்ம அப்துல் கலாம் சொல்ற மாதிரி இந்தியா வல்லரசாகிடுமோன்னு தான் தோணுது.

ஆனா உங்கள் கேள்விப்படி ரசிகர்கள் செய்யுற சேட்டைகளுக்கும், அதிகப்பிரசிங்கித்தனதுக்கும் ரசிகன் மட்டுமே காரணம்...ரஜினி ஒரு அப்பாவி..பாவம் அவருக்கு எதுவுமே தெரியாதுன்ற மாதிரி இருக்கிறது..இது உண்மையா?

எங்கியோ இமயமலையில இந்தியால நூறு கோடி பேருக்கும், அத்தனை பத்திரிகை, டிவிக்கும் தெரியாம 2000 வருசமா ஒளிஞ்சிகிட்டு இருந்த பாபாவை கண்டு பிடிச்சி சொன்னவருக்கு இங்க நம்ம ஊருல நடக்கிற விசய்ம் தெரியாதா?அவருக்கு தெரியும்.. இப்படியெல்லாம் நடந்தா தான் அவர் படத்துக்கு விளம்பரம் இருக்கும்னு …கூட்டம் வரும்னு..அதுவுமில்லாம ஒவ்வொரு படத்துலயும் நம்மாளுக்கு "உன் வாழ்க்கை உன் கையில்"னு அட்வைஸ் பன்றவர்க்கு இப்ப ரசிகன் சொந்த வேலைய விட்டுட்டு இப்படி தன்னோட படத்துக்கு வெட்டியா காவடி தூக்குறதுதப்புன்னு.. எல்லாம் தெரிஞ்சும் சும்மா அமைதியா இருக்குறது எதுக்கு?..

சரி ரசிகன் தானா வந்து ஏமாளியா இருக்கான்.. அதுக்கு ரஜினி என்ன பண்ணுவாருன்னு நீங்க கேக்கிறது புரியுது..ஒரு உதாரணத்துக்கு நிறைய போலி சாமியார் கதை படிதிருப்பீங்கல்ல..
(சாமியார்னாலே போலி தானே, அதுல என்ன நல்ல சாமியார், போலி சாமியாருன்னு என்பது வேறு விசயம், அதை அப்புறம பார்த்துக்கலாம்).

எந்த சாமியாராவது பக்தனிடம் அடிச்சு பிடுங்கியிருக்கிறார்களா? எல்லாமே பக்தனை பக்தி மயக்கத்தில் வச்சுக்கிட்டே நம்மாளு அடிக்கிறது தான்.. பிரேமானந்தாவையெல்லாம் இப்பவும் ஜெயில்ல வந்து பக்தர்கள் பாக்குறாங்களாம்..நம்ம ஜெகத்துகுரு சங்கராச்சி கூட வெளில வந்து ஜெகஜோதியா கல்லா கட்டிட்டு தான் இருக்கார். இன்னமும் இவனுகள சில பேரு நம்பிகிட்டு தான் இருக்காங்க..இப்ப உங்களுக்கு பக்தன் மேல் வருகிற அதே கோபம் சாமியார் மேலும் வர வேண்டும்.. அது தான் நியாயம்..

இன்னும் சொல்லப் போனா ரஜினிக்கு தெரியாதா.. இப்போ தமிழ் நாட்டில் எத்தனை பேர் படம் பார்ப்பார்கள் அதில் எத்தனை பேர் தியெட்டருக்கு வந்து படம் பார்ப்பார்கள் என்று.. அப்புறமும் இத்தனை கோடி போட்டு தியேட்டர் முதலாளி படப்பெட்டி வாங்கினால் அவன் நியாயமான தியேட்டர் கட்டணம் வைத்தால் போட்ட பணத்தை எடுக்க முடியாதுன்னு..

அப்ப யாருக்கு மொட்டை அடிக்கலாம்.. வேற யாரு.. நம்ம ரசிக மக ஜனங்களை தான்.. ஒவ்வொரு டிக்கெட்டும் 500 ரூபாய் 1000 ரூபாய் என்று செய்திகள் வருகின்றன. (ஏறக்குறைய எல்லா பத்திரிக்கையிலும் செய்தி வருகிறது, சிவாஜி பட டிக்கெட் கட்டணத்தை பற்றி... ஆனா அரசு தரப்பில இது பத்தி ஒரு நடவடிக்கையும் இல்லையே.. கலைஞருக்கும் ரஜினிக்கும் உள்ள உள்குத்து என்னன்னு விளங்குதா?..) இப்படி மக்களை (அதுவும் சொந்த ரசிகனையே) கொள்ளை அடிக்கிற கூட்டணியின் காரணகர்த்தாவை, தலைவனை எப்படி அடிப்படையில் அப்பாவி என்றும் யோக்கியன் என்றும் சொல்ல முடியும்? எனக்கு புரியலையே சாமி..

"அதெல்லாம் சரி..ரஜினி அவர் சொந்த உழைப்பால் இந்த உயரத்துக்கு வந்திருக்கிறார்.. அவருக்குன்னு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கு.. அவருக்கு நல்ல மார்க்கெட்டு இருக்கு..அவர் கோடி கோடியா சம்பாதிக்கிறார்..உங்களுக்கு ஏன் வயித்தெரிச்சல்?.."

ரஜினி என்ன உழைக்கிறாருங்கிரது இருக்கட்டும்..பொதுவா ஆரம்பத்துல கஷ்டப் பட்டு தான் எல்லோரும் எந்த தொழிலிலும் முன்னுக்கு வருகிறார்கள். ஆனால் இங்க எந்த உயரதுக்கு அப்படிங்கிறதில தான் பிரச்சினையே இருக்கு..எந்த அளவுக்கு?... இவ்வளவு தூரம் தெரிந்தே நம்மை சுரண்டுவதையும் நாம் அதை அங்கீகரிக்கிற அளவுக்கும்...வேறொண்ணும் வேணாம்..

பஸ்ஸுல பிக்பாக்கெட்அடிக்கிறவன் திறமைய கூட யோசிச்சு பாருங்க.. ந்ல்ல கூட்டமான பஸ்ஸ தேர்ந்தெடுக்கணும்.. அத்தனை பெரிய கூட்டத்துல யார்கிட்ட பர்சுல கணம் இருக்குன்னு கண்டு பிடிக்கணும் அப்புறம் அத்தனை கூட்டத்திலயும் யாருக்கும் தெரியாம பர்சை உருவனும்..கொஞ்சம் எவனுக்கும் தெரிஞ்சாலும் உதார் விட்டு தப்பிக்கணும்.. ( கொஞ்சம் அசந்தாலும் மக்கள்கிட்ட சிக்கினா சிதறு தேங்காய் தான்..) பின்னாடி கூட்டாளி கிட்ட கை மாத்தி விடணும்.. அப்புறம ஓடுற பஸ்ஸுல இருந்து இறங்கி எஸ்ஸாகனும்.. எல்லாம் முடிச்சுட்டு கூட்டாளியோட கூடி பிரச்சினை இல்லாம பங்கு போடணும்..

இப்படி எவ்வளவு திறமை வேண்டி இருக்கு ..இப்ப நீங்க பிக் பாக்கெட் அடிக்கிறவன் மேல கோபப் படுவீங்களா.. இல்லை அவனோட திறமைய மெச்சுவீங்களா? இல்ல பர்ஸை பறிகொடுத்த ஆளு மேல பாய்வீங்களா? பொதுவா ஒரு வசனம் சொல்லுவாங்க .. ஒரு மனுசன் பட்டினியோட இருக்கிறதை விட அவன் பட்டினிக்கு என்ன, யாரு காரணம்னு தெரியாம இருக்கிறது தான் கொடுமைன்னு. அது மாதிரி ஒரு மனுஷன் தன்னை அறியாம தன்னை சுரண்ட அனுமதிக்கிறதுவும் தான் கொடுமை..

"நீங்க என்ன சொன்னாலும் எத்தனை பேரு ரஜினிய பாராட்டுறாங்க.. அவங்கெல்லாம் முட்டாளா? எல்லா மீடியாவும் தான் சிவாஜி பத்தி பேசுறாங்க.."

இது ஒரு பெரிய கூட்டணி.. ரஜினிக்கு சிவாஜிய வியாபாரம் செய்ய (விளம்பரப்படுத்த) ஊடகங்கள் எந்த அளவு தேவையோ அந்த அளவுக்கு ஊடகங்களுக்கும் அவங்க வியாபாரத்துக்கும் ரஜினி மாதிரி ஒரு பிம்பம் தேவை.. இப்ப "சிவாஜி ரஜினி மொட்டை அசத்தல்" அப்படின்னு குங்குமமோ இல்ல "சிவாஜி-வெளி வராத ரகசியங்கள்" அப்படின்னு ஆனந்த விகடனோ ஒரு செய்தி போட்டா உடனே பத்திரிகை விற்பனை எகிருதில்லை.. அதுக்காகவேணும் போட்டி போட்டு ஒருதருகொருத்தர் பரபரப்பு பண்ணி பில்டப்பு கொடுப்பார்கள். அது போக நம்ம படிச்சதுகள் கூட இலவசமா விளம்பரம் செய்யுதுகள்.. புதுசா புதுசா சிவாஜி ஸ்டில்ஸ், வீடியோன்னு இலவசமா மெயில்ல சுற்றுக்கு விட்டு ..

"பெரிய தலைகளெல்லாம் கூட சிவாஜி படம் பார்த்துட்டு வந்து கருத்து சொல்றதும் அது பேப்பர்ல வர்றதுமா இருக்கே..(கருணா நிதி, ஜெயலலிதா, சந்திர பாபு நாயுடு, அப்புறம் திரையுலகத்துல எல்லோரும்) அவங்களுக்கு கூடவா தெரியாது?.."

நம்ம திரையுலகத்துல தெரியும்.. அரசியல்ல இருக்கிறத விட மோசமான சொறிஞ்சு விடுற கூட்டம் நிறைய உண்டு.. (அதுதான் இன்னும் டி ஆர் மாதிரி ஆளுங்க எல்லாம் கொஞ்சமும் வெட்கம், கூச்சம் இல்லாம கலர் டை அடிச்சுட்டு ஹீரோவா நடிக்கிறார், கூட இருக்கிற யாரும் சொல்றதில்ல யோவ் இது கேவலமா இருக்குன்னு)

அதுனால திரையுலகத்துல இருக்கிறவங்க சொல்றதை விட்டுரலாம்..அது ரஜினிக்கு சொறிஞ்சு விடுற வேலை. கருணாநிதியோ, ஜெயலலிதாவோ , சந்திரபாபு நாயுடுவோ படம் பார்த்து கருத்து சொல்லுறது விளம்பரம் கொடுக்கிறது எல்லாம் அவங்க சொந்த நலனுக்காகவும் தான்..யாரு வேணாலும் தான் படம் பார்க்கலாம்.. நீங்களும், நானும் படம் பாக்கிறோம் அது மாதிரி அவங்களும் மனுசங்க தானே.. அவங்களும் படம் பார்க்கட்டும். தப்பில்லை...

இங்க வித்தியாசம் என்னன்னா அவங்களுக்கு சிறப்பு காட்சின்னு போட்டு அதை மீடியாவுக்கு சொல்றதும், அப்புறம் நிருபர்கள் எல்லாம் வந்து படம் எப்படின்னு கருத்து கேட்டு அத பேப்பர்ல போடுறதுன்னு நாடகம் எல்லாம் எதுக்கு? ரஜினிக்கும், AVMக்கும் சிவாஜிக்கான விளம்பரம் .. மு.க.வுக்கும் ஜெ.ஜெ.க்கும் ரஜினி கூட எங்க ஆளுன்னு காமிக்கணும்.. ( அதிலயும் சிவாஜி படம் என்னமோ கருப்பு பணத்தை பத்தியாமுல்ல.. மு.க., ஜெ.ஜெ. கிட்ட இல்லாத கருப்பு பணமா.. நம்மள பத்தி எதுவும் படத்துல போட்டு கொடுத்துட்டானுங்களோன்னு செக் பண்ண வந்திருப்பாங்களோ..) அதிலும் நம்ம சந்திர பாபு நாயுடு ஒரு படி மேல போயி ரஜினி மூணாவது அணியில சேரணும்னு ஒரு கோரிக்கை வேற.. கெரகம்டா சாமி...

"என்ன தான் இருந்தாலும் ரஜினி படம் பாக்கிறவன் அவனவன் சந்தோசத்துக்காக ஒரு தடவை பிளாக்குல டிக்கெட் எடுத்து படம் பார்த்துட்டு தான் போகட்டுமே..அதிலென்ன தப்பு?.. இதுக்கு போய் ஏன் இவ்வளவு பிரச்சினை பண்றீங்க?.."

இதுக்கு நம்ம சங்கர் படத்துல இருந்தே ஒரு வசனம் சொல்றேன்..

அஞ்சு பைசா திருடுனா தப்பா?...
இல்லை..
அஞ்சு அஞ்சு பைசாவா அஞ்சு வருசத்துக்கு அஞ்சு கோடி பேருகிட்ட திருடுனா தப்பா?...
ம்ம்ம்ம்ம்..??
( ஆனா இங்க சிவாஜி டிக்கெட் போன விலையெல்லாம் தமிழ் நாட்டுல பல பேரோட அரை மாச சம்பளம்..)

அது சரி எல்லாம் கோளாறு சொல்றீங்களே..படத்தோட கதைய பத்தி ஒண்ணும் சொல்லலையேன்னு கேக்கிறீங்களா.. ஸாரி.. நான் அம்புலி மாமா, காமிக்ஸ் கதையெல்லாம் படிக்கிறதை விட்டு ரொம்ப வருசமாச்சு...

சிவாஜி பில்டப்புக்கு சில உதாரணங்கள்..

* சிவாஜி படத்தை செல் போனில் படம் பிடித்த 3 ரசிகர்கள் கைது - பத்திரிகை செய்தி .. ( செல் போன்ல படம் பிடிசு திருட்டு VCD போட்டு வித்துடுவங்களோ.. )

* ரஜினி மொட்டை கெட்டப்புல வருகிற போட்டோவை அனுமதியில்லாம பிரசுரம் செய்த பதிரிகைகளுக்கு சங்கர் வக்கீல் நோட்டீஸ்.(என்ன கொடுமை சரவணன் இது?...)

* படத்தில் 5 நிமிடம் வரும் ஒரு கூடை சன் லைட் பாட்டில் ரஜினி வெள்ளைக் காரன் போல் தோன்றுவதற்கு ஒரு பெரிய சாப்ட்வேர் டீம் ஒரு வருசம் வேலை செய்து கொண்டிருந்தார்கள்( இது டூ மச்சு.. த்ரீ மச்சு .. ஃபோர் மச்சு....)

* இப்ப எம்ஜியார், சிவாஜி எல்லாமே ரஜினி தான். அவர் தமிழ் நாட்டு சூப்பர் ஸ்டார் இல்லை.. இப்ப சர்வதேச சூப்பர் ஸ்டார் ஆக முன்னேறியுள்ளார் - கே. பாலசந்தர் ( ஆமாய்யா.. நேத்து தான் ரசியால கூட தஸ்தரோய்க்கி ரஜினி ரசிகர் மன்றம் ஆரம்பிசிருக்காங்க.. தஸ்தரோய்க்கின்னா ரசிய மொழியில அதிரடி மன்னன்னு அர்த்தமாமுல்ல?)

* சென்னையில முதல் 3 மாசத்துக்கு தியேட்டர் எல்லாம் டிக்கெட் புக்கிங் முடிஞ்சு போச்சு - ண்DTV செய்தி ( தியேட்டருக்கு 4 ஷோன்னு கணக்கு பண்ணாலே சராசரியா ஒரு 50 லட்சம் டிக்கெட் புக் பண்ணியிருக்கணுமேய்யா சென்னையில மட்டும்.. சொல்லுங்க...)

* ரஜினி 25 வருசதுக்கு முன்னாடி எப்படி இருந்தாரோ அதை விட இளமையா சிவாஜி படத்தில் இருக்கிறார் - ஒரு பேட்டியில் சிவாஜியின் தொழில் நுட்ப கலைஞர்...( அய்யோ போதும்டா சாமி...)


a

எப்படி இருந்த நான்...
இப்படி ஆகிட்டேன்?......

மேக்-அப் கலைஞருக்கு ஒரு பெரிய "ஓ" போடுங்க...

நன்றி - பால்வெளி

from http://paalveli.blogspot.com

Jun 8, 2007

இளமையின் கீதம் - நாவல் அறிமுகம்
நான் படித்த நூல்களில், சிறந்த புத்தகங்கள் என பத்து தேர்ந்தெடுத்தால், அந்த வரிசையில் இந்த புத்தகம் நிச்சயம் இடம் பெறும். இது கற்பனை நாவல் அல்ல. ரத்தமும், சதையுமான விடுதலைப் போராட்ட வரலாற்று நாவல்.

1930-களில் காலனிய நாடுகளில் அடிமைப்பட்டு கிடந்த மக்கள் தங்கள் மண்ணின் விடுதலைக்காக, ஏகாதிபத்திய நாடுகளை எதிர்த்து, போராடிக் கொண்டிருந்த காலம்.

நம் நாட்டில் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக, நாம் போராடிக் கொண்டிருந்த பொழுது, அதே காலக்கட்டத்தில் சீனாவில் ஜப்பான் ஆக்கிரமிப்பை எதிர்த்தும், நிலவிய மக்கள் விரோத அரசான கோமிண்டாங் ஆட்சியை எதிர்த்தும், விவசாயிகள், தொழிலாளர்கள், அறிவுஜீவிகள் பலரும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் எழுச்சியுடன் போராடிக்கொண்டிருந்தனர்.

சீன மாணவர்கள் எழுச்சியுடன் போராடிய போராட்டங்களில் நாவல் பயணிக்கிறது.

கதையின் நாயகி - டாவோசிங். நிலப்பிரபுத்துவ சமூகத்தால் பாதிக்கப்பட்டு, தற்கொலை வரைக்கும் சென்று, யதேச்சையாய் கம்யுனிஸ்டுகளிடம் அறிமுகம் கிடைத்து, கம்யூனிசத்தின்பால் ஈர்ப்பு ஏற்படுகிறது.

இடையிடையே கட்சியின் தொடர்புக்கான தொடர்ச்சியான போராட்டம். தவறான புரிதல்கள். நடைமுறை போராட்டங்களில் தெளிதல். இறுதியில், ஒரு பல்கலை கழக மாணவர் அமைப்பில், தலைமைக் குழுவில் பங்கு பெறுதல் - என்ற நகர்தலில்...

ஒரு தொடக்க நிலையில் புழு, அதன் பரிணாம வளர்ச்சியில் வண்ணங்களில் மிளிர்கிற, சுதந்திரமாய் வானில் பறக்கிற பட்டாம்பூச்சியாய் நிகழ்கிற நிகழ்வு டாவோசிங் வாழ்விலும் நிகழ்கிறது. சாதாரண பெண்ணாய், துயரங்களில் உழல்கிற பெண்ணாய் தொடக்கத்தில் இருக்கிற பெண்ணான டாவோசிங், பின்னாளில் துணிச்சலான, தியாக உணர்வு கொண்ட கம்யுனிஸ்ட் போராளியாய் மிளிர்கிறார்.

நாவல், பெண்களுக்கு சமூக விழிப்புணர்வு கிடையாது. நாட்டுப்பற்று கிடையாது. போராடும் ஆண்களையும் பின்னுக்கு இழுப்பவள் என்கிற தப்பான அபிப்ராயங்களை களைகிறது.

அன்று நிலவிய சீன சமூக நிலைமைக்கும், இந்திய சமூக நிலைமைக்கும் பெரிய வித்தியாசமில்லை. பெயர்கள் தான் வித்தியாசப்படுகிறது. நாவலில் வருகிற மனிதர்கள் நம் மனிதர்களாக தெரிகிறார்கள். நம் நாட்டில் நடக்கிற போராட்டம் என்ற உணர்வுதான் ஏற்படுகிறது. மொழிபெயர்ப்பு நாவல் என்ற உணர்வு வராத அளவிற்கு, மயிலை பாலு சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.

இவ்வாறு, 1949-ல் மாவோ தலைமையில், கம்யூனிஸ்டு கட்சியின் வழிகாட்டலில் விவசாயிகள், தொழிலாளர்கள், அறிவுஜீவிகள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்து மக்களும் போராடி, சீனா சுதந்திர மக்கள் சீனமாய் மலர்ந்தது.

நம் இந்தியாவில் 1947-ல் அகிம்சாமூர்த்தியின் தலைமையில், வெள்ளைக்காரன் தொடங்கி வைத்த காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டலில், அனைத்து தரப்பினரும் போராடி, சுதந்திர அடிமை இந்தியாவாக உருவானது.

இப்பொழுது, மீண்டும் முதலாளித்துவ சேறுக்குள் சீனா விழுந்துவிட்டது. மீண்டும் எழும். அபினி போதையில் பல நூற்றாண்டுகளாக கிறங்கி கிடந்தவர்களை மீட்டுக்கொண்டு வந்தவர்கள் தானே கம்யூனிஸ்டுகள். முதலாளித்துவ பாதையிலிருந்தும் மீட்டுவிடுவார்கள்.

நம்மை நினைத்தால் தான், கவலை பீறிடுகிறது. நிலவுகிற சட்டமன்றம், பாராளுமன்றம், நீதிமன்றம் நமக்கானது. மக்களாட்சிதான் நிலவுகிறது என்ற போதையிலிருந்து நாம் எப்பொழுது மீளப்போகிறோம்?


ஆசிரியர் - யாங்மோ

740 பக்கங்கள்

விலை - ரூ. 300/-

வெளியீடு


அலைகள் வெளியீட்டகம்,
25, தெற்கு சிவன் கோவில் தெரு,
கோடம்பாக்கம்,
சென்னை - 600 024.
பேச : 24815474

May 31, 2007

சிவாஜி - The Boss! - பராக்! பராக்!சிவாஜி - The Boss!

சொல்லும்பொழுதே அதிருதுல்ல!


'யோக்கியன் வர்றான்
செம்பெடுத்து உள்ளே வையுங்க!'

ரூ 200, 300 என அசந்தால்
உங்கள் பையிலிருந்து
அபகரித்துக்கொள்வான்.

அன்பானவன்
ஏழை ரசிக கண்மணிகளிடம் கூட
ரூ 500, 600 - அன்பாய்
சுட்டுவிடுவான்

வித்தியாசமானவன்
தாத்தா ஆனபிறகும்
இளம் நாயகிகளோடு
கொஞ்சி திரிபவன்

ரஜினி ஒரு செமி
ஷங்கர் ஒரு செமி - நிச்சயமாய்
படம் வரும் முழுசாய்

மூளையை கழட்டி வைத்து
காத்திருங்கள்
விரைவில் வருகிறான்
திரையரங்குகளில்

- நன்றி - குருத்து பிளாக்கிலிருந்து

கட்டாய ஹெல்மெட் - சில கேள்விகள்மகன், மகள்
பேரன், பேத்திகளுக்கு அப்பால்
'மக்கள்' உயிரின் மீதும் கரிசனம்
நம் மாண்புமிகு முதல்வருக்கு.

ஹெல்மெட் முதலாளிகள்
முடியில்லாத தலைக்கு
வைரம் பதித்த
தங்க ஹெல்மெட் தந்திருப்பார்களோ!

விசுவாசமான காவல்துறைக்கு
'புதிய போனசு'
அறிவிப்போ?

'வாக்கு வங்கி'
வாழ்ந்தால்தான்
நாமும், நம் சந்ததியினரும்
வாழமுடியும் என்ற
தொலைதூர சிந்தனையோ?


- நன்றி - குருத்து பிளாக்கிலிருந்து

May 27, 2007

பால் வெள்ளைக் காகிதம் - குட்டிக்கதை

காலைப் பனிப்போல் தூய்மையாக இருந்த ஒரு வெள்ளைக் காகிதம் 'நான் ரொம்ப சுத்தமானவனாக்கும்' என்று அலட்டிக்கொண்டது.

'நான் பிறக்கும்பொழுதே தூய்மையாகப் பிறந்தேன். காலம் முழுவதும், நான் நான் இவ்வாறே தூய்மையாக இருப்பேன்; என்னை எரித்துச் சாம்பலாக்கினாலும் பரவாயில்லை, பொறுத்துக் கொள்வேன். ஆனால் கறுமையின் இருள் கைகள் என்னைத் தொட அனுமதிக்கமாட்டேன், தூய்மையற்றவர்கள் யாரும் என் பக்கத்தில்கூட வரமுடியாது'.

இந்தப் பேச்சைக் கேட்ட மைப்புட்டி, குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது. அந்தக் காகிதத்தின் பக்கத்திலேயே செல்வதில்லை என்று முடிவுகட்டிக் கொண்டது.

பல வண்ண பென்சில்களும் இதைக் கேட்டன. அவையும், அந்தக் காகிதத்தை நெருங்கவில்லை.

ஆகவே, அந்த பால் வெள்ளைக் காகிதம், அதன் ஆசைப்படி, என்றென்றும் தூய்மையோடும், கற்போடும் வாழ்ந்தது.

வெறுமையாகவும்.

- கலீல் ஜிப்ரான் - மிட்டாய் கதைகளிலிருந்து

May 24, 2007

வாழ்க்கை - கவிதை


பரமபதமாகி விட்டது
வாழ்க்கை

கவனமாய்
மெல்ல மெல்ல
நகர்கிறேன்

கிடைத்த சிறு ஏணியில்
உற்சாகமாய்
மேலே ஏறுகிறேன்

நகரும் பாதையில்
ஏணியை விட
பெரிய பாம்பு கொத்தி
துவங்கிய புள்ளியிலேயே
துவண்டு விழுகிறேன்

வயதுகள் கடக்கின்றன
பொறுப்புகள் பெருகுகின்றன
சுமைகள் அழுத்துகின்றன

மீண்டும் நகர்கிறேன்
நம்பிக்கையுடன்

தூரத்தில் சில
ஏணிகள் தென்படுகின்றன

தெரிந்தும் வசதியாய்
மறந்துவிடுகிறேன்
தூரத்தில் தெரியும்
ஏணியைவிட பெரிதான
சில பாம்புகளை

May 23, 2007

கருணாநிதி சொந்த பந்தங்கள் பட்டியல் - வரைபடம்


மதுரை தினகரன் அலுவலகம் சமீபத்தில் அழகிரியால் தாக்கப்பட்ட பொழுது, என்னிடம் என் அம்மா 'கருணாநிதி குடும்பத்தில், யார்? யார்?' எனக் கேட்ட பொழுது, வரிசைக்கிரமமாக சொல்வதில் நிறைய குழப்பம்.

அந்த பெரிய குடும்பத்தின் சொந்த பந்தங்களை எளிய முறையில் புரியும்படி வரைபடம் போட்டு, இன்றைக்கு என் நண்பர் மெயிலில் அனுப்பி இருந்தார்.

தமிழகத்தையே, இப்பொழுது இந்தியாவையும் ஆட்டி படைக்கும் ஒரு குடும்பம் பற்றி அனைவரும் அறிய வேண்டும் அல்லவா! அதனால் உங்கள் பார்வைக்கும்.

பின்குறிப்பு : இதுபோக இன்னும் இந்த குடும்பத்தில் சில குடும்பங்கள் இருக்கலாம். அதுபற்றி எதும் தகவல்கள் தெரிந்தாலும், தயவு செய்து உலகத்திற்கு சொல்ல வேண்டாம். இருக்கிற வாரிசுகளின் தொல்லையே தாங்க முடியவில்லை.

வரைபடம் தெளிவாக பார்க்க - படத்தின் மீது, ஒரு 'க்ளிக்' செய்யுங்கள்.

நன்றி - குருத்து - socratesjr2007@blogspot.com

May 21, 2007

நீ வருவாய் என - கவிதை

சத்தங்களை வடிகட்டி
நுட்பமாய்
உன் கொலுசு இசையை
பதிவு செய்திருக்கின்றன
என் காதுகள்.

சலனங்களைத் தவிர்த்து
கவனமாய்
உன் ஒவ்வொரு அசைவையும்
படம் பிடித்திருக்கின்றன
என் கண்கள்.

உன் மெளனத்தைக்கூட
மொழி பெயர்க்க
கற்றிருக்கிறது
என் மனசு.

நீயில்லாத நாள்களால்
வெற்றுத்தாள்களாய்
நகருகிறது
என் நாட்குறிப்பு.

கனவுகளில் மட்டும்
தாலாட்டிப் போகிறாய்.

முளரி மொட்டு
என் கவிதைகள்
பால் நிலா
நாட்குறிப்பு - எல்லாம்
என்னோடு
உன் வருகைக்காக
காத்திருக்கின்றன.

எப்பொழுது வருகிறாய்
இங்கு
நிஜத்தில் நீ

- சாக்ரடீஸ்.

May 16, 2007

தேவையில்லாத தாலியும், உருப்படியான தகவல்களும் - கட்டுரைதாலி - என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை.

நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியம், சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.

தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954-ல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இதைத் தொடங்கி வைத்தவர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் ம.பொ.சி மட்டுமே!

'கி.பி. 10-ம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலிப் பேச்சே கிடையாது' - வரலாற்று ஆய்வறிஞர் அப்பாத்துரையார்.

'பழந்தமிழர்களிடத்தில் தாலி வழக்கு இல்லவே இல்லை' - பெரும்புலவர் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனார்.

கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பேச்சே கிடையாது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.

கி.பி. 10ம் நூற்றாண்டிற்கு பிறகே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாக கொள்ளலாம்.

இந்திய சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும், எழுதவும் துவங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின.

பின்னர், 1968-ல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லா திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.

- தொ. பரமசிவன், தமிழ்துறைத் தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம்,
எழுதிய பண்பாட்டு அசைவுகள் புத்தகத்திலிருந்து.

கனா - கவிதை

தேவைகளின் சுழிப்பில்
சிக்கி சுழல்கிறேன்

நல்லெண்ணங்களின் வனப்பில்
சொக்கி கிடக்கிறேன்

கனவுகளின் பள்ளதாக்குகளில்
வீழ்ந்து
வானம் வெறிக்கிறேன்

முடிவுகளின் தயக்கத்தில்
கலங்கிய குட்டையாகிறேன்

குடித்து குடித்து
வயிறு புடைத்து
விரும்பி நகர்கிறேன்
சவக்குழி நோக்கி

திடுக்கிட்டு
விழித்துப் பார்க்கிறேன்
'நிஜத்திலும் அப்படியே!'

- சாக்ரடீஸ்

May 10, 2007

திருமணம் - சிறுகதை/கவிதை

திருமணம்

இளம் மாலைப்பொழுது
குழந்தைக்ளோடு குழந்தையாய் மாறி
விளையாடிக் கொண்டிருந்தாள்
அவள்.
நண்பன் அறிமுகப்படுத்தினான்.

மூன்று வருடங்களில்...
ஆரோக்கியமாய் இடைவெளி நிர்வகித்து
மனதில் நெருங்கினோம்.
நிறையவற்றில் ஒன்றுபட்டோம்
கருத்து வேறுபாடுகள் எழுந்த பொழுது
களைந்து கொண்டோம்.

எனக்கு பெண்ணும்
அவளுக்கு மாப்பிள்ளையுமாய்
அவரவர் வீட்டில்
வலைவீசிக் கொண்டிருந்தார்கள்
இருவரில் யார் கேட்டிருந்தாலும்
மற்றவர் மறுத்திருக்க மாட்டோம்
ஆனால் மெளனம் காத்தோம்.

'இந்த பெண் எப்படி?'
அம்மாதான் ஆரம்பித்தாள்
படம் பார்க்காமலேயே...
'முகம், மனம்
அறியா பெண்ணுடன் எப்படியம்மா?' என்றேன்.
அதெல்லாம் சொல்லாதே! ஊர் வாழலை?
இந்த நொண்டி சாக்கெல்லாம் வேண்டாம்.

அவளை அறிந்திருந்ததால்
'வேறு சாதிப்பெண்ணை
திருமணம் செய்யலாம் என
கனவில்கூட நினையாதே
சாதி சனம் எல்லாம் எச்சில் துப்பிவிடும்
என் உயிர் போய்விடும் - என்றாள்.
தொடர்ந்து புலம்பினாள்.

சுற்றம் மொத்தமாய்
என்மேல் விழுந்து
மூட்டை மூட்டையாய்
அறிவுரைகளை வைத்தார்கள்
மீண்டும் மெளனமானேன்
திருமணம் நடந்தேறியது.

முதல்நாள் இரவில்
இருவரும் அறிமுகமாகி
ஏதோ மனதில் நெருட
சுற்றிலும் இருள் படர்ந்தது.

வந்த நாட்களில்
அம்மாவின் பழமையும்
அவளின் நடைமுறையும்
கடுமையாய் மோதிக்கொள்ள
நடுவில் நான்.
நான்கே மாதங்களில்
தனிக்குடித்தனம்.

கனவுகளைத் தவிர்த்து
மண்ணில் அழுந்த நடப்பவன்
நான்
கனவுகளில் வாழ்ந்து
அபூர்வமாய்
தரைக்கு இறங்கி வருகிறவள்
அவள்.

ரசனை, நுகர்வு
அனைத்திலும்
எதிரும், புதிருமாய்.

இரண்டு மனதும்
இரண்டு உடலும்
இணைந்தால் தான்
'மழலை' என்றில்லையே!
பனிப்போர் தொடரும் வேளையில்
மண்ணில் வந்திருங்கினான்.

துடுப்பும், படகுமாய்
ஒரு திசை வழி செல்ல வேண்டியவர்கள்
வெவ்வேறு இலக்கு பயணப்படும்
இரூ படகுகளாய் நாங்கள்

சரியாய் இரண்டு வருடங்கள்
இருவரும் முடிவெடுத்தோம்
இனி இணைந்து வாழ்வது அபத்தம்
பிரிந்துவிடுவோம்.

உன் கனவுகளின் வாழ்க்கைக்கு
மழலை தடையாய் இருப்பான் - என்றேன்
சிறிது யோசித்து புன்னகையுடன்
வைத்துக்கொள் - என்றாள்

இடைக்காலங்களில்
'என் வாழ்க்கை
நோயின் தீவிரம்' இரண்டும்
அம்மாவின் உயிரை
சரிபாதியாய் எடுத்துக்கொண்டன.

இப்பொழுது அனாதையாய்
நானும், எனது மகனும்
ஒரு துருவத்தில்.
அவள் ஒரு துருவத்தில்
சுற்றம் அனைத்தும்
'ச்சூ! ச்சூ!' என
நாயை அழைத்தார்கள்

அவள்மீது எனக்கு துளியும்
வருத்தமில்லை
என் கோபம் அனைத்தும்
என் மெளனங்களின் மீதும்,
என் தாயின் சாதியப்பிடிப்பின் மீதும்.

இன்று
வாழ்க்கை மரத்தின்கீழ்
ஞானோதயம் பிறக்கிறது
அன்று
நல்ல மகனாய் இருந்திருப்பதைவிட
சுய சிந்தனை கொண்ட
நல்ல மனிதனாய் இருந்திருக்கலாம்

- சாக்ரடீஸ்

May 9, 2007

நானும் நீயும் - கவிதை

நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்.
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்று கொண்டிருப்பாய் நீ.

உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல்
தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ.

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ.

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழ வைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை.

- செயபாசுகரன்

May 8, 2007

சுதந்திரம் இன்னும் தொலைவில் இல்லை - கவிதை

பொய்களின் கைப்பிடித்து
நெடுந்தொலைவு
வந்துவிட்டோம்.

ஒவ்வொரு மைல்கல்லிலும்
சுமைகளென
நம் செல்வங்கள்
அனைத்தையும்
இறக்கி வைத்துவிட்டோம்.

இலவசமாய் கிடைத்ததென
ப்ல வண்ணப் பந்தல்களில்
நிறைய மூடநம்பிக்கைகளை வாங்கி
வயிறு முட்ட குடித்துவிட்டோம்.

பொய்கள்
கொழுத்துப்போய்விட்டன.
நாம் நிறைய
இளைத்து போய்விட்டோம்.

பொய்கள் அழைத்து செல்வது
மகிழ்ச்சியின் தேசத்திற்கு அல்ல!
மரணக்குழிக்குத்தான்!
உண்மை எச்சரித்துக்கொண்டே
உடன் வருகிறது.

பொய்கள் இதுவரை
உண்மையின் ஆடைகளை
உடுத்தியிருந்தன.

இப்பொழுது
தன் மூகமூடிகள்
உண்மையின் ஆடைகள்
எல்லாவற்றையும் களைந்தெறிந்து
தன்னை எவர் ஜெயிக்கமுடியும்
கோரப்பற்களைக் காட்டி
எக்காளச் சிரிப்புடன்
உண்மையைப் பார்த்து
கேலி செய்கிறது.

சாவின் விளிம்பிற்கு
வந்துவிட்டோம்.
இப்பொழுதாவது
உண்மையின் கைப்பிடிப்போம்.
கரங்களை ஒன்றிணைப்போம்.

உற்றுப்பாருங்கள்
சாவின் முகத்தில்
சவக்களை.

சுதந்திரம்... இன்னும்
தொலைவில் இல்லை

பெருநகர பயணம் - கவிதை


விரைவாய் அதிவிரைவாய்
எல்லா வாகனங்களும்
முகத்தில் புகையைத் துப்பி
முன்னேறி செல்கின்றன.

பச்சைசிக்னல் விழுவதற்கு முன்
விர்ரெனப் பறக்கின்றன.
சிவப்புசிக்னல் விழுந்தபின்பு - இன்னும்
விரைவாய் பறக்கின்றன.

ஓட்டுகிற முகங்களில்
இறுக்கம் நிலவுகின்றன.

எல்லா வாகனங்களிலும்
கோரமான கீறல்கள்
கண்ணை உறுத்துகின்றன.

பயணிக்கையில்தான்
எல்லா கவலைகளும்
மேலெழும்புகின்றன.

பயணச் சாவுகளை
தினமும்
செய்திகள் தெரிவிக்கின்றன.

உயில் எழுதவேண்டும்
விரைவில்.
யாருக்கு எவ்வளவு தரவேண்டும்?
பட்டியல் தயாரிக்க வேண்டும்
தர யாருமில்லை! - இருப்பினும்
நாணயஸ்தனாய் சாகவேண்டும்.


காலை 11.45 மணி - 29.03.2007.

Apr 25, 2007

குழந்தை வளர்ப்பு - புத்தகம்


குழந்தை வளர்ப்பு - ஆசிரியர் டாக்டர் திருஞானம்

ஓர் ஆண்டுக்கு முன்பு இந்த புத்தகத்தின் அருமை பெருமைகளை கேள்விப்பட்டேன். பாப்பா பிறந்த நேரத்தில் தேட முயற்சிக்கிற பொழுது, நண்பர் ஹோமியோபதி மருத்துவர் இராமசாமி பரிசாக தந்தார்.

"எங்கள் கிராமத்தில் ஒரு குழந்தையை அந்த தெருவில் உள்ள எல்லா மக்களும் வாஞ்சையுடன் பார்த்துக்கொள்வார்கள்" என என் தோழி சொன்னாள். சென்னை மாதிரி பெருநகர சூழலில், தாய்தான் வளர்க்க வேண்டிய நிலை.

கடந்த ஆறு மாதங்களில், பாப்பாவைக் கையாள்வதில் எனக்கு சந்தேகம் எழும் பொழுதெல்லாம் இந்த புத்தகத்தை நான் ஒரு அகராதியைப் போல பயன்படுத்தி தெளிவு பெறுகிறேன். சகலருக்கும் இந்த புத்தகத்தை தெரியப்படுத்த ஒரு எளிய அறிமுகம்.

நம் நாட்டில் கல்வி அறிவும், விழிப்புணர்வும் மிக குறைவு. குழந்தை பிறப்பிலிருந்து அதன் வளர்ப்பின் பல்வேறு சமயங்களிலும் தப்பெண்ணங்கள், மூட நம்பிக்கைகள், முன்முடிவுகள் நிறைய வெளிப்படுகின்றன.

இன்றைக்கு அலுவலகத்தில், குழந்தை பிறந்ததை சொல்லி இனிப்பு கொடுத்துக் கொண்டே 'இன்றைக்கு நல்ல நாளில் நல்ல நேரத்தில் பிறந்ததாய்' மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

"குழந்தை பிறந்த நேரம் சரியில்லை. அதனால் கடுமையான வறுமை" என இரண்டு நாள்களுக்கு முன்பு, சென்னையில் ஒரு தாய் தன் பிள்ளையை கொன்றுவிட்டார். மூடநம்பிக்கைகள் உயிர்களைப் பறிக்கின்றன.

குழந்தைக்காக பக்குவம் சொல்லும் பொழுது உண்மையை போல ஆயிரத்தெட்டு சொல்கிறார்கள். பாதிக்கும் மேல் உண்மைக்கு மாறாக இருக்கிறது.

'குழந்தையை வெந்நீரில் குளிப்பாட்ட வேண்டும்' என்கிறார்கள். 'பிறந்ததிலிருந்து இரண்டு மாதம் மட்டும் வெந்நீர். கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துவிட வேண்டும்' என்கிறார்.சேலையில் தொட்டில் கட்டுவது தவறு. காற்று வராமல் குழந்தை சிரமப்படும்' என்கிறார்.

'பாசத்தில் குழந்தைக்கு தொடர்ந்து ஊட்டி விடுவது தவறு. உங்களுடன் சரிசமமாக உணவு உண்ண பழக்குங்கள்' என்கிறார். "உங்கள் அன்பும், அரவணைப்பும் குழந்தைக்கு அதிகமாகத் தேவை. அன்புடன் கொஞ்சுங்கள். நாள் முழுவதும் கொஞ்சுங்கள்" என்கிறார்.

நுட்பமான விளக்கங்களுக்குள் செல்லாமல், விஞ்ஞான ரீதியில் எது செய்ய வேண்டும்? எது செய்யக்கூடாது என்பதை எளிய நடையில் எழுதியுள்ளார். படிக்க தெரிந்திருந்தால் போதும். பயன்படுத்திக் கொள்ளலாம்.

உணவு, உடை, நோய், மருத்துவம், குழந்தைகளின் மனநிலை என குழந்தை பிறந்ததிலிருந்து, ஆறு வயது வரை விவரித்து சொல்கிறார்.

அரசுப் புத்தகங்கள் மாதிரியான வடிவத்தில், எழுத்து கொஞ்சம் பெரிதாக படிக்க வசதியாக இருக்கிறது. 1975-ம் ஆண்டு சிறந்த நூலாக தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஆசிரியர் டாக்டர் திருஞானத்துக்கு குழந்தை வைத்தியத்தில் 42 ஆண்டுகள் அனுபவம். மருத்துவம் தொடர்பாக பல நாடுகள் பயணித்திருக்கிறார். 1976-77-ம் ஆண்டில், இந்திய மருத்துவக் கழகத்தின் (Inidan Medical Association) தமிழ்நாடு பிரிவின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

என் மகள் இலக்கியாவை பார்க்க வந்தவர்களில் 50 பேருக்கும் மேல் வண்ண வண்ணமாய் ஆடை எடுத்து வந்தார்கள் . புத்தகம் கொடுத்தவர் ஒருவர் மட்டுமே. புத்தகங்கள் கொடுத்துப் பழகுங்கள். ஆரோக்கியமான பலனைத் தரும். அதற்கு இந்த பதிவே ஆதாரம்.

விலை : ரூ. 150/- 409 பக்கங்கள்

வெளியீட்டவர்கள் -

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 600 098.
பேச : 26258410, 26251968

Apr 18, 2007

எங்கள் தெரு - கவிதை

பத்தாண்டுகளுக்கு முன்பு

சூரியனுக்கு முந்தி
நாலு முப்பதுக்கே
சுறுசுறுப்பாய் எழும்.

தீப்பொறிகள் தெறிக்க
நெருப்பில் கருவிகள் செய்யும்
பூமாரியின் குடும்பம்.

கழணி தண்ணி
வீடு வீடாய் சேகரித்து
புண்ணாக்கு கரைத்து
அம்பாரமாய் வைக்கோல் கொணர்ந்து
கறவை மாடுகளோடு வாழும்
பால்வாடை கமழும்
பல குடும்பங்கள்.

சாணி சேகரித்து
வட்ட வட்டமாய் - அழகாய்
எரு தட்டி பிணம் எரிக்க
சுடுகாட்டுக்கு விற்கும்
பாலா குடும்பம்.

அம்பது பைசாவிற்கு
ஆவி பறக்க இட்லி விற்கும்
பார்வதியம்மாள்.

திறந்தவெளி தொழிற்சாலை
எங்கள் தெரு.

ஒரு காம்பவுண்டிற்குள் பத்து வீடுகள்.
கொழம்பிலிருந்து சீம்பால் வரை
பரிமாறி கொள்ளப்படும்.

பூட்டுக்களைப் பார்த்ததில்லை
வீட்டின் கதவுகள்.
களவு எப்பொழுதும் போனதில்லை.

உழைப்பில் ஈடுபடுகிற அழகான மனிதர்கள்.
நாகரிக மனிதர்கள் வர தயங்கும்
'அசுத்தமான' தெரு.

இப்பொழுது

சோம்பலாய் ஏழு மணிக்கு எழுகிறது.
எழுந்ததும் நிறுத்திய வண்டி நிற்கிறதா
சரிபார்க்கிறார்கள்.

காம்பவுண்டு வீடுகளை
கந்து வட்டி குடும்பங்கள் கையகப்படுத்தி
மாடி வீடுகளாய் மாறிப்போனது.
ஆளுயர கேட் முன்நிற்கிறது.
தாண்டினால் நாய் இரைகிறது.

அழைப்பு மணி அழுத்தினால்
திருடனா?
சரி பார்த்தபின்பு
கதவு திறக்கப்படுகிறது.

தீப்பொறிகள் பறப்பதில்லை.
மாடுகள் வழிமறிப்பதில்லை.
எரு நினைவில் மட்டும் நிற்கிறது.
ஆவி பறக்கும் இட்லி இல்லை.
செம்மண் சாலை போய்
தார் சாலையாகிப் போனது.

பூமாரி, பாலா - என
எல்லா குடும்பங்களும்
சிதறடிக்கப்பட்டுவிட்டன.
ஒப்புக்குக்கூட புன்னகைக்க மறுக்கிறார்கள்
புதிய மனிதர்கள்.
உழைக்க மறுக்கும் அவலமான மனிதர்கள்.
நாகரிக மனிதர்கள்
வர விரும்பும்
'அழகான தெரு'.

தெருவில் நுழையும்பொழுதெல்லாம்
எண்ணம் எழுகிறது.
'சுத்தமான தெரு'வுக்கு பதிலாக
'அசுத்தமான தெரு'வாகவே இருந்திருக்கலாம்.


பின்குறிப்பு - நகரத்தில் பிறந்து, நகரத்தில் வளர்ந்தேன். எங்கள் வீடு என சொல்வதனால்
எங்கள் தெருதான் எங்கள் வீடாய் இருந்தது

Apr 4, 2007

குழந்தைகள் - கவிதை


மகிழ்ச்சியெனில்
மத்தாப்பாய் சிரிக்கிற
துன்பமெனில்
அடைமழையாய்
கொட்டித்தீர்க்கிற
மழலை மனசு வேண்டும்.

அம்மாவின் அதட்டல்களை மீறி
புழுதிப் பறக்க
தெருவில் விளையாடி
தூக்கம் வெறுக்கிற
பிள்ளையின் சுறுசுறுப்பு வேண்டும்.

கோபமெனில் - உடனே
சண்டை பிடிக்கிற
மறுநிமிடம் மறந்து கூடுகிற
பிள்ளையின் மறதி வேண்டும்.

புதிய பொருளெனில்
விழிகள் விரிய
வியந்து பார்க்கும்
குடைந்து குடைந்து
ஆயிரம் கேள்விகள் கேட்கும்
பிள்ளையின் ஞானம் வேண்டும்.

இறந்த கால நினைவுகளில்
எதிர்கால திட்டங்களில்
நிகழ்காலத்தை தொலைக்காத
பிள்ளையின் வாழ்வு வேண்டும்.

குழந்தைகளை நேசிக்காத
சமூகம்
தற்கொலையின் விளிம்பில்.

குழந்தைகளிடமிருந்து - முதலில்
கற்றுக்கொள்வோம்.
சாதி, மதம்,
சடங்கு குப்பைகளை - பிறகு
கற்றுக்கொடுப்போம்.

- சாக்ரடீஸ்

Apr 2, 2007

பெருநகரமும் செல்பேசியும்!


பல உறவுகள்
செல்லில்
எண்களாக வாழ்கிறார்கள்.
சிலர்
குரல்களாக மட்டும்.

எங்கிருக்கிறாய்?
எப்பொழுது வருவாய்?
பொண்டாட்டிகள்
தொல்லை செய்கிறார்கள்.

பேசிக்கொண்டே
சாகசமாய்
வாகனம் ஓட்டுகிறார்கள்.
ரயில் கிராஸிங்கில்
செத்தும் போகிறார்கள்.

'அதிகம் பேசுங்கள்'
ஆஃபர் தரும்பொழுதெல்லாம்
அறுவைக்காரர்கள்
அழ வைக்கிறார்கள்.

முன்பெல்லாம்
தனியாய் பேசுபவர்களை
காணமுடியும்.
இப்பொழுது கண்டுபிடிக்க
முடிவதில்லை.

03.04.2007 - காலை 11.25

உனக்கும் எனக்கும் - கவிதை


அவசர அவசியமாய் தின்று
ஓடியாடி உழைத்து
உடல் களைத்துப் போகையில்
இரவு உனக்காய் படுக்கை விரித்துவிடும்.
பதினைந்து நாட்களிலேயே
பற்றாக்குறை கடன்களை பெற்றெடுக்கும்.

பொய்கள் சொல்லி பொருட்கள் விற்று
ஆசை ஆசையாய் வாங்கி ஏமாந்து
சக மனிதன் மீது நம்பிக்கை இழக்கையில்
உள்ளம் கனத்துப் போகும்.

காதலாய் பழகியவர்களிடம் நட்பை வலுப்படுத்தி
நட்பாய் பழகியவர்களிடம் காதலை வெளிப்படுத்தி
இறுதியில்
முகமறியா நபருடன் வாழ்க்கை பயணிக்கும்.

ஓடுகிற ஓட்டத்தில்
ஆபூர்வமாய் திரும்பி பார்க்கையில்
வெறுமை நிலவி கண்கள் பனிக்கும்.

உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லை.

நீ ஏழு வயதில்
கண்ணாடி அணிந்திருப்பாய்.
நான் இருபத்தேழு வயதில்.

உன் அப்பா ஆலையிலிருந்து
ஏழு நாட்களுக்கு முன்
வெளியேற்றப்பட்டிருப்பார்.
என் அப்பா
ஏழு ஆண்டுகளுக்குமுன்.

உனக்கும் எனக்கும் வித்தியாசம்
உருவத்தில் மட்டுமே!
உள்ளடக்கத்தில் ஒன்றாய்.

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
உன் கனவில் கவிபாரதி வந்திருப்பான்,
வேறு வார்த்தைகள் கொண்டு
என் கனவில் பாரதிதாசன்.

ஆளுக்கொரு சாதி சொல்லி
தனித்தனியாய் கனவுகள் கண்டு
இத்தனை காலம்
சிங்கங்களுக்கும் நரிகளுக்கும்
இரையாகிப்போனோம்.

கரங்களை ஒண்றிணைப்போம்.
கனவுகளுக்கு ஆக்கம் கொடுப்போம்.
பணிவதைவிட நிமிர்வது உயர்வானது.

- சாக்ரடீஸ்

Mar 31, 2007

என் பெயர் R.S.S. - கவிதை

என் பெயர் R.S.S.

பிறக்கும் பொழுது
எல்லாக் குழந்தைகளும்
நல்ல குழந்தைகள். அப்படியா?
நான் அந்த ரகம் இல்லை.
நஞ்சு கொண்டுநான் பிறந்தேன்.

நான்
செம்டம்பர் 27, 1925
விஜயதசமி நாளில்
உயர்குடியில்
வீர சிவாஜி பிறந்த
மராட்டிய மண்ணில்
பிறந்தவன்.

என் அப்பா கேசவ பல்ராம் கெட்கேவர்
இனம் - இட்லர் இன்மான ஆரிய இனம்
சாதி - சித்பவன் பார்ப்பான் சாதி.

'இந்துயிசமே எங்கள் தேசியம்' - என
கொள்கை வழி பிறந்தவன் நான்.
இதில் எந்தவித சம்ரசமற்றவன்.

காந்தியைக் கொன்ற
நாதுராம் கோட்சே
என்னைத் தூக்கி வளர்த்தவர்.

அறியாமை இருள்
எங்கெல்லாம் இருந்ததோ
அங்கெல்லாம் தழைத்து வளர்ந்தேன்.
சாதி, மதம் எவ்விடத்தில் இருந்ததோ
அவ்விடத்தில்
காட்டுத் தீயாய்ப் பற்றிக் கொண்டேன்.

எனக்கு உணவு குருதி.
இரத்தம் குடிக்காமல்
என்னால்உயிர் வாழமுடியாது.
இள ரத்தமெனில்
இன்னும் ருசி.

நான் எந்த மண்ணில்
தவழ்ந்தேனோ, வளர்ந்தேனோ
அந்த மண் கலவர பூமியானது.
எனக்கு மறதி அதிகம்.
நான் குடித்தஉயிர்களின்
எண்ணிக்கையைக்
கணக்கு வைத்துக்கொள்ளவில்லை.
ஏனென்றால்
கணக்கிடலங்காது.

கடந்த 82 ஆண்டுகளில்
பெரிய மரமாய், மண்ணில்
ஆழப் பதிந்து நிற்கிறேன்.
உலகமெங்கும், இன்னும்
என் வேர்களை
விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.

இந்து முன்ணணி, இந்து மஸ்தூர் சங்,
பஜ்ரங்தள், A.B.V.P.,
விஸ்வ இந்து பரிசத் - என
என் விழுதுகள் என்னைப்
பலப்படுத்துகின்றன.

எனக்கு விரோதிகள் உண்டு.

முதல் விரோதி - கம்யுனிஸ்ட்,
2வது விரோதி - முஸ்லீம்.
3வது விரோதி - கிறித்துவன்.
4வது விரோதி - ஜனநாயகவாதி.

எனக்கு வலிமையான மகன் உண்டு.
பெயர் - பாரதீய ஜனதா.
எனக்கு ஆபத்து வருகிற பொழுதெல்லாம்
துடித்து, காப்பாற்றுவன் அவனே.

என்னை அழிக்கும் முயற்சியில்
தோற்றுப் போனவர்கள் ஏராளம்.

தமிழகத்தில்
என் தளபதிகள்
மடாதிபதி சங்கராச்சாரியா,
வீரத்துறவி இராமகோபலன்,
அறிவுசீவி துக்ளக் சோ,
பா.ஜ.க பிரமுகர் இல. கணேசன்.

உங்களிடத்திலும் சாதி, மதம்
இருக்கிறதா?
எனக்கு பசிக்கிறது.
ரத்தம் வேண்டும்.
இளரத்தம் வேண்டும்.
இதோஎன் படை பரிவாரங்களோடு
புறப்பட்டுவிட்டேன்.
முடிந்தால்,
என் முதல் எதிரியான கம்யுனிஸ்களிடம்
அடைக்கலம் தேடிக் கொள்ளுங்கள்.

பின்குறிப்பு :
கம்யுனிஸ்டுகள் என்றால்
C.P.I., C.P.I (M) என அப்பாவித்தனமாய்
நினைக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.
நான் சொல்வது நக்சல்பாரிகளை.
என்னை அழிக்கும் சக்தி
அவர்களுக்கு மட்டுமே உண்டு.

Mar 28, 2007

நீ வருவாய் என!

சத்தங்களை வடிகட்டி
நுட்பமாய்
உன் கொலுசு இசையை
பதிவு செய்திருக்கின்றன
என் காதுகள்.

சலனங்களைத் தவிர்த்து
கவனமாய்
உன் ஒவ்வொரு அசைவையும்
படம் பிடித்திருக்கின்றன
என் கண்கள்.

உன் மெளனத்தைக்கூட
மொழி பெயர்க்க
கற்றிருக்கிறது
என் மனசு.

நீயில்லாத நாள்களால்
வெற்றுத்தாள்களாய்
நகருகிறது
என் நாட்குறிப்பு.

கனவுகளில் மட்டும்
தாலாட்டிப் போகிறாய்.

முளரி மொட்டு
என் கவிதைகள்
பால் நிலா
நாட்குறிப்பு - எல்லாம்
என்னோடு
உன் வருகைக்காக
காத்திருக்கின்றன.

எப்பொழுது வருகிறாய்
இங்கு
நிஜத்தில் நீ - சாக்ரடீசு.

கவிதை!

வற்றிப் போவதானாலும்
எனக்கு
என் ஓடையே போதும்.
உன் கண்னாடித்
தொட்டியில்
நீயே இரு - யாரோ.

எளிய அறிமுகம்

நண்பர்களுக்கு!

வணக்கம். கணிப்பொறி எனக்கு நிறைய அன்னியம். இன்றைக்கும் குழந்தையை போல் தான் கையாள்கிறேன். ஆர்வமாய் இருக்கும் குழந்தை சிரமப்பட்டாவது கற்றுக்கொள்ளும். அப்படித்தான் நானும் ஒரு ப்ளாக் தொடங்கிவிட்டேன்.

நான் படித்ததில் பிடித்த கவிதைகள், கட்டுரைகள், செய்திகள், புத்தகங்கள் பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்வேன்.

நேரம் கிடைக்கிற பொழுது, சொந்தமாய் நானும் கட்டுரை, கவிதை எழுதுவேன்.

வேறு வழியில்லை. இனி யாரும் தப்பிக்க முடியாது.

அன்புடன்

மகா.

Mar 27, 2007

கரம் நீட்டுகிறேன்!

அன்பு நண்பர்களே!

கணிப்பொறி எனக்கு நிறைய அன்னியம். இன்றைக்கும் குழந்தையை போல் தான் கையாள்கிறேன். ஆர்வமாய் இருக்கும் குழந்தை சிரமப்பட்டாவது கற்றுக்கொள்ளும். அப்படித்தான் நானும் ஒரு ப்ளாக் தொடங்கிவிட்டேன்.

வேறு வழியில்லை. இனி யாரும் தப்பிக்க முடியாது.

அன்புடன்

மகா.