Dec 20, 2014

இனியொரு ஜெயஸ்ரீ உருவாகிவிடக்கூடாது அக்கா!



ஜெயஸ்ரீ

அன்று சகதோழர் ஒருவர் மூலமாக செய்தி அறிந்து, மருத்துவமனைக்கு சென்ற பொழுது, ஜெயஸ்ரீயின் உடல் மார்ச்சுவரியில் இருந்தது.  காதுகளில் காயம், இரு கைகளிலும் இறுக்கமாய் கட்டப்பட்டிருந்த கயிறால் தடமாய் பதிந்திருந்தன.  உடல் முழுவதுமே அங்காங்கே காயங்கள். பாலியல் வெறிபிடித்த மிருகங்கள் அந்த பெண்ணை மோசமாக குதறியிருந்தார்கள்.  அந்த பெண்ணின் அக்கா “பிறப்புறுப்பையே சிதைந்திருந்தார்கள்” என  அழுதுகொண்டே சொன்ன பொழுது, என்னையறியாமல் கண்ணீர் வந்துகொண்டேயிருந்தது. அதற்கு பிறகு ஒரு நிமிடம் கூட அங்கு நிற்கமுடியவில்லை.
****

ஜெயஸ்ரீ. 21 வயது. கலகலப்பான பெண். எல்லோரிடமும் சகஜமாக பேசக்கூடிய பெண். சென்னை பாரிஸ், யானை கவுனி அருகே ஒரு சிறு பட்டறையில் வேலை செய்திருக்கிறாள்.  ஆணுக்கு நிகராய் அத்தனை வேலைகளையும் செய்யக்கூடியவள்.

காதல் என்ற வலையில் வீழ்த்தி அந்த பெண்ணை சென்னையை விட்டு வெளியூருக்கு அழைத்துபோயிருக்கிறான் ஒருவன்.  ஆனால், அங்கே பல வெறிபிடித்த மிருகங்கள் பல நாட்கள் அந்த இளம்பெண்ணை சிதைத்திருக்கிறார்கள்.

சாலை மறியலின் பொழுது
காணாமல் போன நாளிலிருந்து காவல்துறையிடம் தொடர்ந்து முறையிட்டிருக்கிறார்கள். காவல்துறையோ மிக அலட்சியமாகவும், மெத்தனமாகவும், அதிகாரத்திமிருடனும் நடந்திருக்கிறார்கள்.  கள்ளக்குறிச்சியில் தனியாக ஜெயஸ்ரீ நின்று கொண்டிருப்பதாகவும், அழைத்து செல்ல ஒருவர்  தகவல் சொல்லும் பொழுதும், அங்கு போய் இரு காவல்துறையினர் அழைத்து வந்த பொழுதும் எந்த விசாரணையும் விரிவாக மேற்கொள்ளவில்லை. அரை மயக்கநிலையில் ஜெயஸ்ரீயை அழைத்து வந்த பிறகும், அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்தால், ஊடகங்களில் செய்தி வந்து மானம் போய்விடும் என தனியார் மருத்துவனைக்கு அழைத்து செல்ல தவறாக வழிகாட்டியிருக்கிறார்கள். இரண்டாம் நாள் மிகவும் சீரியசாகி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டது. உறவினர்களும், பொதுமக்களும் சாலை மறியல் உட்பட பலவழிகளில் போராடியதால் தான், பல்வேறு இழுத்தடிப்புக்கு பிறகு வழக்கையே பதிவு செய்திருக்கிறார்கள். காவல்துறையின் அத்தனை நடவடிக்கைகளிலும் குற்றவாளிகள் யாரென்று தெரிந்து தப்பவிடுவதற்காக செயல்பட்டது பச்சையாக தெரிந்தது.

ஒரு பெண். ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்தவள். ஏழைப் பெண் என்றால் இத்தனை இளக்காராமா? எந்த ஓட்டுக் கட்சியும், தலித்களுக்காக போராடக்கூடிய தலித் அமைப்புகளும் எட்டிக்கூட பார்க்கவில்லை.

பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சார்ந்த தோழர்களும் பாதிக்கப்பட்டவர்களோடு நின்று உறுதியாக போராடவில்லையென்றால், ஜெயஸ்ரீ காதல் தோல்வியில் தற்கொலை செய்துகொண்டாள் என்று சத்தமேயில்லாமல் முடித்திருப்பார்கள்.

பாலியல் வன்கொடுமை பற்றி பேசும்பொழுதெல்லாம் சட்டங்களை கடுமையாக்கவேண்டும் என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன. சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே குற்றவாளிகளை பாதுகாக்குகிற வேலைகளை செய்யும் பொழுது சட்டங்களை கடுமையாக்கி என்ன செய்ய?
****
புகைப்படத்தில் இருக்கும் ஜெயஸ்ரீயின் மலர்ந்த புன்னகையும், மார்ச்சுவரியில் ரணமாக இருந்த சலனமற்ற உடலும் “மீண்டும் ஒரு ஜெயஸ்ரீயை உருவாக்க விட்டு விடாதீர்கள் அக்கா” என மீண்டும் மீண்டும் அவளின் குரல் நினைவலைகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது!
****

Dec 5, 2014

தமிழ்மணம் நிர்வாகி அவர்களுக்கு – ஒரு வேண்டுகோள்!



தமிழ்மணம் நிர்வாகி அவர்களுக்கு,

வணக்கம். என் தளத்தின் பெயர் குருத்து (Socratesjr2007.blogspot.in). கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக தமிழ்மணத்தில் இணைந்து பயணம் செய்திருக்கிறேன். இப்பொழுது, திடீரென என் பதிவை தமிழ்மணத்தில் இணைக்கமுடியவில்லை. ஏதோ வயலட் செய்துவிட்டதாய் குறிப்பு சொல்கிறது! என்ன பிரச்சனை என்று சொன்னால் புரிந்துகொள்வேன். விரைவில் இணைப்பதற்கு ஏற்பாடு செய்யவும்.
நன்றி.

தோழமையுடன்,
சாக்ரடீஸ்

குறிப்பு : இந்த கடிதத்தை உங்களுடைய admin@thamizmanam.com  தமிழ்மணம் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு, நவம்பர் 21ந் தேதி ஒரு கடிதமும், அதற்கு பிறகு நவம்பர் 23ந் தேதி ஒரு நினைவூட்டல் கடிதமும் அனுப்பினேன். இரண்டுக்குமே பதிலில்லை. அதனால், சக பதிவர் ஒருவரின் உதவிக்கேட்டு இந்த பதிவை இடுகிறேன். 

உதவிய அமிர்தா தோழருக்கு நன்றி.

Nov 23, 2014

புறக்கணிப்பின் ‘வலி’



சமீபத்தில் ‘வலி’ என்றொரு அருமையானதொரு குறும்படம் பார்த்தேன்.  ஒரு உணவகம். ஒரு காபி ஆர்டர் பண்ணி திருநங்கை காத்திருக்கிறார்.  அடுத்தடுத்து அங்கு வரும் ஆண், பெண், காதலர்கள் என எல்லோரும் அவர் அருகே அமர்வதை தவிர்க்கின்றனர். சக மனிதர்களின் புறக்கணிப்பு தந்த வலியால் மனம் உடைந்து அழுகிறார். தேவதை போல வரும் ஒரு பெண் குழந்தை, அவரை சக மனுசியாக பார்த்து சிநேகத்துடன் நடந்துகொள்கிறாள். நெகிழ்ந்து, கண்ணீர் வருவதுடன் படம் முடிகிறது!

படத்தின் இறுதிக்காட்சியில் நானும் அழுதேன். நம்மை போன்ற சக மனுசியான திருநங்கைகளை வீடும், சமூகமும் புறக்கணித்தால் அவர்கள் என்னதான் செய்வார்கள்? சம காலங்களில் திருநங்கை குறித்த நல்லவிதமான புரிதல்கள் ஏற்பட்டு வருவதை பார்க்கிறேன். இந்த படமும் அதற்கு உதவி செய்திருக்கிறது.

படத்தில் திருநங்கையாக நடித்தவர் பிரதீப். எங்கள் நண்பர்கள் குழாமில் அவரும் ஒருவர். ஏற்றுக்கொண்ட பாத்திரத்தின் உணர்வுகளை நன்றாக உள்வாங்கி நடித்துள்ளார்.  படத்தின் இயக்குநர் விக்டரை சந்தித்த பொழுது, “இது ஒரு உண்மைக்கதை.  ஒரு உணவகத்தில், நகர்ந்து போனவர்களில் நானும் ஒருவன். என் செய்கையின் நெருடலில் தான் இந்த படத்தை எடுத்தேன்” என்றார்.

படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

 படத்திற்கான சுட்டிக் கீழே!

https://www.youtube.com/watch?v=6WNPf5I6I_w 

நன்றி : குருத்து

ஒரு மருத்துவரின் மனப் போராட்டம்!



முன்னொரு காலத்தில் மக்களின் உயிர்காக்க தன்னலமற்று வேலை செய்த ஒரு மருத்துவ குழுவின் பெயர் தான் Apothecary.  ஆனால், முழுக்க முழுக்க கல்லா கட்டுவதிலேயே கவனமாய் இருக்கும் ரமணா டைப் மருத்துவமனைக்கு இந்த பெயரை வைத்திருக்கிறார்கள். படத்தின் பெயரும் அதுவே!

இந்த மருத்துவமனையில் சீனியர் நரம்பியல் மருத்துவராக பணிபுரிகிறார் சுரேஷ் கோபி. நல்லவர்.  நிர்வாகம் கொடுக்கும் தொடர் நெருக்கடியில் சில நோயாளிகளை வைத்து சிக்கலான ‘சில ஆய்வுகள்’ செய்ய ஒத்துழைக்கிறார்.  அந்த ஆய்வுகளின் விளைவாக சிலர் இறக்கிறார்கள். சிலர் நடைபிணமாகின்றனர்.

நாளாக, நாளாக மருத்துவருக்கு மன உளைச்சல் அதிகமாகிறது.  இறந்து போனவர்களும், உயிரோடிருப்பவர்களும் இவருடைய கண்களுக்கு மட்டும் தெரிந்து “தலைவலி எங்களை சித்திரவதை செய்கிறது. எங்களை கொன்றுவிடுங்கள் என கெஞ்சுகிறார்கள்”. இதன் தொடர்ச்சியில், ஒரு சாலை விபத்தில் சிக்கி கோமாவில் விழுகிறார்.

கனவில் ’ஆய்வில்’ இறந்து போனவர்கள் அவர்கள் தங்கள் உலகத்துக்கு மருத்துவரை தள்ளிக்கொண்டு போக பார்க்கிறார்கள். :) மருத்துவரால் உயிர் பிழைத்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, வாதாடி அவரை விடுவிக்கிறார்கள். மருத்துவர் கோமாவிலிருந்து விடுபடுகிறார்.

உடல் நலம் தேறிவந்து, நிர்வாகம் கோரும் பழைய ’ஒத்துழைப்பை’ தர மறுக்கிறார். நேர்மையாய் வாழ்வது தான் சிறந்தது என வாதாடி விடைபெறுகிறார்.
****

நமது ”மக்கள் நல அரசு” மக்களுக்கு சுகாதாரம் தருவது தனது கடமை இல்லை என கழட்டிவிட்டபிறகு, கடந்த 20 ஆண்டுகளில் புற்றீசல் போல நகர்ப்புறங்களில் மருத்துவமனைகள் பெருகிவிட்டன.

மதுரையில் மருத்துவர் ஒருவர் தற்கொலை முயற்சியில் விசம் குடித்து வரும் நோயாளிகளை தைரியமாக டீல் செய்வார். நிறைய மருந்து மாத்திரைகளை எழுதி வாங்கிக்கொண்டு,  காப்பாற்றிய பிறகோ அல்லது இறந்த பிறகோ மீதி இருக்கும் நிறைய மருந்துகளை மருந்து கடையில் கொடுத்து பணம் வாங்கிக்கொள்வார். மருந்து கடையில் வேலை செய்த என் தோழி இதை சொன்னார்.

இன்னொரு தோழி ஒருவர் மதுரையில் புகழ்பெற்ற ஸ்கேன் மையத்தில் வேலை செய்தார். அங்கு ஒரு ஸ்கேனுக்கு 5000 பணம் வாங்கினால், எழுதிக்கொடுத்த மருத்துவருக்கு ரூ. 2500யை கமிசனாக கொடுத்துவிடுவார்கள்.  இந்த கமிசன் குறித்து பேசி மருத்துவர்களை ஸ்கேன் எடுக்க சொல்லி அனுப்புவதற்கும், ஸ்கேன் எடுத்த பிறகு மாதம் ஒருமுறை பல ஆயிரங்கள் சேர்ந்த கமிசனை போய்க்கொடுப்பதற்கும் நிறைய பி.ஆர்.ஓக்கள் வேலை செய்தார்கள். அங்கு வேலை செய்த ஒரு மருத்துவர் இதையெல்லாம் பார்த்து மனம் வெறுத்து போய் எந்த நாட்டில் மருத்துவ துறையில் லஞ்சம் இல்லை என தேடினார்.  லண்டனில் போய் செட்டிலாகிவிட்டார். லண்டனில் அரசு இலவச மருத்துவம் தருகிறது.

மேலும், நம்மை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் தான் வளர்ந்த நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் நிறைய மருத்துவ ஆய்வுகளை செய்கிறார்கள். நம்மை சோதனை எலிகளாக பயன்படுத்துகிறார்கள். இதை அவர்கள் வெளிப்படையாக சொல்லி செய்கிறார்கள். கொடுமை.

படத்தில் காட்டப்படுகிற சுரேஷ்கோபி போன்ற நல்ல மருத்துவர்கள் அபூர்வமாகிவருகிறார்கள் என்பது யதார்த்த உண்மை.

சொர்க்க நாடாக சிலர் கருதும் அமெரிக்காவில் மருத்துவம் முழுக்க தனியார்மயம் தான். 2008ல் மிகப்பெரிய பொருளாதார மந்தம் ஏற்பட்ட பொழுது, 15% பேருக்கு வேலையில்லை. மொத்த மக்கள் தொகையான 30 கோடியில் 15 கோடி பேர் வேலை செய்கிறார்கள் என்றால் 15% என்றால் 2 கோடி பேருக்கு மேல் வேலையில்லை. அங்கு வேலை செய்கிற நிறுவனத்தினர் தான் இன்சூரன்ஸ் எடுத்து தருவார்கள். 2 கோடி பேருக்கு வேலை இல்லை. அப்படியென்றால், அடுத்து அவர்களுக்கு நோய் வந்தால் என்ன ஆவார்கள்? அவர்களின் கதி அதோ கதி தான். இதனால் தான் ஒபாமா பதவி ஏற்ற பொழுது வெளிப்படையாக ”நம் நாட்டில் மருத்துவம் என்பது எப்பொழுது வேண்டுமென்றாலும் வெடிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது” என்றார்.

இன்னும் மருத்துவத்துறை சீர்கேடுகளையும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். லாபம் என்று ஆனபிறகு, எல்லா கோளாறுகளும் தானாய் வந்துவிடும்.  கியூபா, கனடா, லண்டன் என இன்னும் சில நாடுகளில் இருப்பது போல அரசே மருத்துவம் தந்தால் தான், இந்த பிரச்சனைகளை தீர்க்கமுடியும்.
****

படத்தைப் பொறுத்தவரையில், இரண்டு மருத்துவர்கள் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அதற்காகவே பாராட்டலாம்.

எடுத்துக்கொண்ட தலைப்பில் சின்சியராக படம் எடுத்திருக்கிறார்கள். பாடல், சண்டை என்கிற வணிக அம்சங்கள் இல்லை.  படம் மெதுவாக நகருவது ஒரு குறை. தெளிவான ஒளிப்பதிவு.
மற்றபடி படத்தில் எல்லோரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
****

Nov 22, 2014

திரையரங்கிற்கு வராதே! டிவிடியில் பார்!



நேற்று வழக்கம் போல டிவிடி கடைக்கு போயிருந்தேன்.  எப்பொழுதும் டிவிடிக்களை வெளியே வைத்திருப்பவர்கள், உள்ளே வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். தெரிந்த பையன் என்பதால், ரைய்டா என்றேன். ஆமாம் என்றான்.

சமீபத்தில் விஷாலும், பார்த்திபனும் தங்கள் படங்கள் வெளியான பொழுது, அரசை நம்பாமல், அவர்களே தெருவில் இறங்கி டிவிடி விற்ற கடைகளில் ரைய்டு நடத்தி பிரச்சனை செய்தார்கள்.  இதனை தொடர்ந்து, திரையுலகமும் தங்கள் தொழில் நசிவதால், டிவிடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசை நிர்ப்பந்தித்து போராட இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார்கள்.

என்னைக் கேட்டால், திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பதை தடுப்பதே திரையுலகம் சார்ந்தவர்கள் தான் என்பேன். கடந்த கருணாநிதி ஆட்சியின் பொழுது, படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தாலே வரிவிலக்கு என அறிவித்தார்.  ஏற்கனவே திரையுலகம் கருப்பு பணத்தால் மூழ்கி திளைக்கும் பொழுது, இந்த வரிவிலக்கு எல்லாம் ரெம்ப அதீதம். 

இதில் இந்த வரிவிலக்கு சலுகைகளையெல்லாம் பொதுமக்களுக்கு கண்ணிலேயே காட்டுவதில்லை. இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் புதுமைப் பெண் போன்ற சில படங்கள் வரும் பொழுது, மக்கள் நிறைய பேர் பார்க்கவேண்டும் என்று அரசு வரிவிலக்கு தருவார்கள். 5ரூ டிக்கெட் விலை என்றால், வரிவிலக்கு படங்களுக்கு 1ரூ தான் விலை. மக்களும் கூட்டம் கூட்டமாக போய் பார்த்தார்கள் என என் அண்ணன் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்.

ஆனால், இப்பொழுது வரிவிலக்கு தந்தால், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு சார்ந்த ஆட்களே தின்று செரித்துவிடுகிறார்கள்.  இதைவிடக்கொடுமை என்னவென்றால், ரஜினி, கமல், விஜய் படங்கள் வெளியானால் விலையை கூடுதலாக வைத்தும் கொள்ளையடிக்கிறார்கள்.  திருட்டு டிவிடியினால் தாங்கள் பாதிக்கப்படுகிறோம் என பேசுபவர்கள் இதைப் பற்றியெல்லாம் வாயைத் திறப்பதில்லை.

மேலும் இப்பொழுதெல்லாம், பல திரையரங்குகளில் வெளியில் வாங்கும் தின்பண்டங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. ஆட்களை போட்டு, நன்றாக சோதனையிடுகிறார்கள். (இது குறித்து அரசின் வழிகாட்டுதல் இருக்கிறதா என தெரியவில்லை.  விவரம் அறிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்) ஆனால், உள்ளே அவர்கள் இரண்டு மடங்கு விலை வைத்து விற்கிறார்கள். ஒரு சின்ன பாட்டில் தண்ணீரின் விலை ரூ. 10 என்றால், சங்கம் திரையரங்கில் ரூ. 30 என விற்கிறார்கள். 200 % லாபம். இதை வியாபாரம் என சொல்லமுடியுமா? படம் பார்க்க வருகிறவர்களிடம் பணம் பறிப்பது என்று தான் சொல்லமுடியும்.

ஆக ஒரு குடும்பம் ஒரு படத்தை பார்க்க போனால், டிக்கெட் விலை, பார்க்கிங், ஸ்நாக்ஸ் என எல்லாவற்றையும் கணக்குப் பார்த்தால், ரூ1000 த்தை தொட்டுவிடுகிறது. அடுத்தப்படம் அடுத்த இரண்டு மாதத்திற்கு கிடையாது. விளைவு திருட்டு டிவிடியைத் தான் மக்கள் வாங்கிப் பார்க்கிறார்கள்.

நேற்று ஒரு நடுத்தர வயது அம்மா, மலையாளம், தமிழ் என ஒரே நேரத்தில் 6 டிவிடிக்கள் வாங்கினார்கள். எல்லாம் ரூ. 180 மட்டுமே.

ஆக, திரையுலகம் சார்ந்தவர்களால் தான் திரைத்தொழில் அழிக்கப்படுகிறது! அவர்கள் தங்கள் கொள்ளையை விடாதவரை, மக்கள் டிவிடியைத் தான் நாடுவார்கள் என்பது யதார்த்தம்.