Apr 25, 2007

குழந்தை வளர்ப்பு - புத்தகம்


குழந்தை வளர்ப்பு - ஆசிரியர் டாக்டர் திருஞானம்

ஓர் ஆண்டுக்கு முன்பு இந்த புத்தகத்தின் அருமை பெருமைகளை கேள்விப்பட்டேன். பாப்பா பிறந்த நேரத்தில் தேட முயற்சிக்கிற பொழுது, நண்பர் ஹோமியோபதி மருத்துவர் இராமசாமி பரிசாக தந்தார்.

"எங்கள் கிராமத்தில் ஒரு குழந்தையை அந்த தெருவில் உள்ள எல்லா மக்களும் வாஞ்சையுடன் பார்த்துக்கொள்வார்கள்" என என் தோழி சொன்னாள். சென்னை மாதிரி பெருநகர சூழலில், தாய்தான் வளர்க்க வேண்டிய நிலை.

கடந்த ஆறு மாதங்களில், பாப்பாவைக் கையாள்வதில் எனக்கு சந்தேகம் எழும் பொழுதெல்லாம் இந்த புத்தகத்தை நான் ஒரு அகராதியைப் போல பயன்படுத்தி தெளிவு பெறுகிறேன். சகலருக்கும் இந்த புத்தகத்தை தெரியப்படுத்த ஒரு எளிய அறிமுகம்.

நம் நாட்டில் கல்வி அறிவும், விழிப்புணர்வும் மிக குறைவு. குழந்தை பிறப்பிலிருந்து அதன் வளர்ப்பின் பல்வேறு சமயங்களிலும் தப்பெண்ணங்கள், மூட நம்பிக்கைகள், முன்முடிவுகள் நிறைய வெளிப்படுகின்றன.

இன்றைக்கு அலுவலகத்தில், குழந்தை பிறந்ததை சொல்லி இனிப்பு கொடுத்துக் கொண்டே 'இன்றைக்கு நல்ல நாளில் நல்ல நேரத்தில் பிறந்ததாய்' மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

"குழந்தை பிறந்த நேரம் சரியில்லை. அதனால் கடுமையான வறுமை" என இரண்டு நாள்களுக்கு முன்பு, சென்னையில் ஒரு தாய் தன் பிள்ளையை கொன்றுவிட்டார். மூடநம்பிக்கைகள் உயிர்களைப் பறிக்கின்றன.

குழந்தைக்காக பக்குவம் சொல்லும் பொழுது உண்மையை போல ஆயிரத்தெட்டு சொல்கிறார்கள். பாதிக்கும் மேல் உண்மைக்கு மாறாக இருக்கிறது.

'குழந்தையை வெந்நீரில் குளிப்பாட்ட வேண்டும்' என்கிறார்கள். 'பிறந்ததிலிருந்து இரண்டு மாதம் மட்டும் வெந்நீர். கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துவிட வேண்டும்' என்கிறார்.சேலையில் தொட்டில் கட்டுவது தவறு. காற்று வராமல் குழந்தை சிரமப்படும்' என்கிறார்.

'பாசத்தில் குழந்தைக்கு தொடர்ந்து ஊட்டி விடுவது தவறு. உங்களுடன் சரிசமமாக உணவு உண்ண பழக்குங்கள்' என்கிறார். "உங்கள் அன்பும், அரவணைப்பும் குழந்தைக்கு அதிகமாகத் தேவை. அன்புடன் கொஞ்சுங்கள். நாள் முழுவதும் கொஞ்சுங்கள்" என்கிறார்.

நுட்பமான விளக்கங்களுக்குள் செல்லாமல், விஞ்ஞான ரீதியில் எது செய்ய வேண்டும்? எது செய்யக்கூடாது என்பதை எளிய நடையில் எழுதியுள்ளார். படிக்க தெரிந்திருந்தால் போதும். பயன்படுத்திக் கொள்ளலாம்.

உணவு, உடை, நோய், மருத்துவம், குழந்தைகளின் மனநிலை என குழந்தை பிறந்ததிலிருந்து, ஆறு வயது வரை விவரித்து சொல்கிறார்.

அரசுப் புத்தகங்கள் மாதிரியான வடிவத்தில், எழுத்து கொஞ்சம் பெரிதாக படிக்க வசதியாக இருக்கிறது. 1975-ம் ஆண்டு சிறந்த நூலாக தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஆசிரியர் டாக்டர் திருஞானத்துக்கு குழந்தை வைத்தியத்தில் 42 ஆண்டுகள் அனுபவம். மருத்துவம் தொடர்பாக பல நாடுகள் பயணித்திருக்கிறார். 1976-77-ம் ஆண்டில், இந்திய மருத்துவக் கழகத்தின் (Inidan Medical Association) தமிழ்நாடு பிரிவின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

என் மகள் இலக்கியாவை பார்க்க வந்தவர்களில் 50 பேருக்கும் மேல் வண்ண வண்ணமாய் ஆடை எடுத்து வந்தார்கள் . புத்தகம் கொடுத்தவர் ஒருவர் மட்டுமே. புத்தகங்கள் கொடுத்துப் பழகுங்கள். ஆரோக்கியமான பலனைத் தரும். அதற்கு இந்த பதிவே ஆதாரம்.

விலை : ரூ. 150/- 409 பக்கங்கள்

வெளியீட்டவர்கள் -

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 600 098.
பேச : 26258410, 26251968

Apr 18, 2007

எங்கள் தெரு - கவிதை

பத்தாண்டுகளுக்கு முன்பு

சூரியனுக்கு முந்தி
நாலு முப்பதுக்கே
சுறுசுறுப்பாய் எழும்.

தீப்பொறிகள் தெறிக்க
நெருப்பில் கருவிகள் செய்யும்
பூமாரியின் குடும்பம்.

கழணி தண்ணி
வீடு வீடாய் சேகரித்து
புண்ணாக்கு கரைத்து
அம்பாரமாய் வைக்கோல் கொணர்ந்து
கறவை மாடுகளோடு வாழும்
பால்வாடை கமழும்
பல குடும்பங்கள்.

சாணி சேகரித்து
வட்ட வட்டமாய் - அழகாய்
எரு தட்டி பிணம் எரிக்க
சுடுகாட்டுக்கு விற்கும்
பாலா குடும்பம்.

அம்பது பைசாவிற்கு
ஆவி பறக்க இட்லி விற்கும்
பார்வதியம்மாள்.

திறந்தவெளி தொழிற்சாலை
எங்கள் தெரு.

ஒரு காம்பவுண்டிற்குள் பத்து வீடுகள்.
கொழம்பிலிருந்து சீம்பால் வரை
பரிமாறி கொள்ளப்படும்.

பூட்டுக்களைப் பார்த்ததில்லை
வீட்டின் கதவுகள்.
களவு எப்பொழுதும் போனதில்லை.

உழைப்பில் ஈடுபடுகிற அழகான மனிதர்கள்.
நாகரிக மனிதர்கள் வர தயங்கும்
'அசுத்தமான' தெரு.

இப்பொழுது

சோம்பலாய் ஏழு மணிக்கு எழுகிறது.
எழுந்ததும் நிறுத்திய வண்டி நிற்கிறதா
சரிபார்க்கிறார்கள்.

காம்பவுண்டு வீடுகளை
கந்து வட்டி குடும்பங்கள் கையகப்படுத்தி
மாடி வீடுகளாய் மாறிப்போனது.
ஆளுயர கேட் முன்நிற்கிறது.
தாண்டினால் நாய் இரைகிறது.

அழைப்பு மணி அழுத்தினால்
திருடனா?
சரி பார்த்தபின்பு
கதவு திறக்கப்படுகிறது.

தீப்பொறிகள் பறப்பதில்லை.
மாடுகள் வழிமறிப்பதில்லை.
எரு நினைவில் மட்டும் நிற்கிறது.
ஆவி பறக்கும் இட்லி இல்லை.
செம்மண் சாலை போய்
தார் சாலையாகிப் போனது.

பூமாரி, பாலா - என
எல்லா குடும்பங்களும்
சிதறடிக்கப்பட்டுவிட்டன.
ஒப்புக்குக்கூட புன்னகைக்க மறுக்கிறார்கள்
புதிய மனிதர்கள்.
உழைக்க மறுக்கும் அவலமான மனிதர்கள்.
நாகரிக மனிதர்கள்
வர விரும்பும்
'அழகான தெரு'.

தெருவில் நுழையும்பொழுதெல்லாம்
எண்ணம் எழுகிறது.
'சுத்தமான தெரு'வுக்கு பதிலாக
'அசுத்தமான தெரு'வாகவே இருந்திருக்கலாம்.


பின்குறிப்பு - நகரத்தில் பிறந்து, நகரத்தில் வளர்ந்தேன். எங்கள் வீடு என சொல்வதனால்
எங்கள் தெருதான் எங்கள் வீடாய் இருந்தது

Apr 4, 2007

குழந்தைகள் - கவிதை


மகிழ்ச்சியெனில்
மத்தாப்பாய் சிரிக்கிற
துன்பமெனில்
அடைமழையாய்
கொட்டித்தீர்க்கிற
மழலை மனசு வேண்டும்.

அம்மாவின் அதட்டல்களை மீறி
புழுதிப் பறக்க
தெருவில் விளையாடி
தூக்கம் வெறுக்கிற
பிள்ளையின் சுறுசுறுப்பு வேண்டும்.

கோபமெனில் - உடனே
சண்டை பிடிக்கிற
மறுநிமிடம் மறந்து கூடுகிற
பிள்ளையின் மறதி வேண்டும்.

புதிய பொருளெனில்
விழிகள் விரிய
வியந்து பார்க்கும்
குடைந்து குடைந்து
ஆயிரம் கேள்விகள் கேட்கும்
பிள்ளையின் ஞானம் வேண்டும்.

இறந்த கால நினைவுகளில்
எதிர்கால திட்டங்களில்
நிகழ்காலத்தை தொலைக்காத
பிள்ளையின் வாழ்வு வேண்டும்.

குழந்தைகளை நேசிக்காத
சமூகம்
தற்கொலையின் விளிம்பில்.

குழந்தைகளிடமிருந்து - முதலில்
கற்றுக்கொள்வோம்.
சாதி, மதம்,
சடங்கு குப்பைகளை - பிறகு
கற்றுக்கொடுப்போம்.

- சாக்ரடீஸ்

Apr 2, 2007

பெருநகரமும் செல்பேசியும்!


பல உறவுகள்
செல்லில்
எண்களாக வாழ்கிறார்கள்.
சிலர்
குரல்களாக மட்டும்.

எங்கிருக்கிறாய்?
எப்பொழுது வருவாய்?
பொண்டாட்டிகள்
தொல்லை செய்கிறார்கள்.

பேசிக்கொண்டே
சாகசமாய்
வாகனம் ஓட்டுகிறார்கள்.
ரயில் கிராஸிங்கில்
செத்தும் போகிறார்கள்.

'அதிகம் பேசுங்கள்'
ஆஃபர் தரும்பொழுதெல்லாம்
அறுவைக்காரர்கள்
அழ வைக்கிறார்கள்.

முன்பெல்லாம்
தனியாய் பேசுபவர்களை
காணமுடியும்.
இப்பொழுது கண்டுபிடிக்க
முடிவதில்லை.

03.04.2007 - காலை 11.25

உனக்கும் எனக்கும் - கவிதை


அவசர அவசியமாய் தின்று
ஓடியாடி உழைத்து
உடல் களைத்துப் போகையில்
இரவு உனக்காய் படுக்கை விரித்துவிடும்.
பதினைந்து நாட்களிலேயே
பற்றாக்குறை கடன்களை பெற்றெடுக்கும்.

பொய்கள் சொல்லி பொருட்கள் விற்று
ஆசை ஆசையாய் வாங்கி ஏமாந்து
சக மனிதன் மீது நம்பிக்கை இழக்கையில்
உள்ளம் கனத்துப் போகும்.

காதலாய் பழகியவர்களிடம் நட்பை வலுப்படுத்தி
நட்பாய் பழகியவர்களிடம் காதலை வெளிப்படுத்தி
இறுதியில்
முகமறியா நபருடன் வாழ்க்கை பயணிக்கும்.

ஓடுகிற ஓட்டத்தில்
ஆபூர்வமாய் திரும்பி பார்க்கையில்
வெறுமை நிலவி கண்கள் பனிக்கும்.

உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லை.

நீ ஏழு வயதில்
கண்ணாடி அணிந்திருப்பாய்.
நான் இருபத்தேழு வயதில்.

உன் அப்பா ஆலையிலிருந்து
ஏழு நாட்களுக்கு முன்
வெளியேற்றப்பட்டிருப்பார்.
என் அப்பா
ஏழு ஆண்டுகளுக்குமுன்.

உனக்கும் எனக்கும் வித்தியாசம்
உருவத்தில் மட்டுமே!
உள்ளடக்கத்தில் ஒன்றாய்.

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
உன் கனவில் கவிபாரதி வந்திருப்பான்,
வேறு வார்த்தைகள் கொண்டு
என் கனவில் பாரதிதாசன்.

ஆளுக்கொரு சாதி சொல்லி
தனித்தனியாய் கனவுகள் கண்டு
இத்தனை காலம்
சிங்கங்களுக்கும் நரிகளுக்கும்
இரையாகிப்போனோம்.

கரங்களை ஒண்றிணைப்போம்.
கனவுகளுக்கு ஆக்கம் கொடுப்போம்.
பணிவதைவிட நிமிர்வது உயர்வானது.

- சாக்ரடீஸ்