குழந்தை வளர்ப்பு - ஆசிரியர் டாக்டர் திருஞானம்
ஓர் ஆண்டுக்கு முன்பு இந்த புத்தகத்தின் அருமை பெருமைகளை கேள்விப்பட்டேன். பாப்பா பிறந்த நேரத்தில் தேட முயற்சிக்கிற பொழுது, நண்பர் ஹோமியோபதி மருத்துவர் இராமசாமி பரிசாக தந்தார்.
"எங்கள் கிராமத்தில் ஒரு குழந்தையை அந்த தெருவில் உள்ள எல்லா மக்களும் வாஞ்சையுடன் பார்த்துக்கொள்வார்கள்" என என் தோழி சொன்னாள். சென்னை மாதிரி பெருநகர சூழலில், தாய்தான் வளர்க்க வேண்டிய நிலை.
கடந்த ஆறு மாதங்களில், பாப்பாவைக் கையாள்வதில் எனக்கு சந்தேகம் எழும் பொழுதெல்லாம் இந்த புத்தகத்தை நான் ஒரு அகராதியைப் போல பயன்படுத்தி தெளிவு பெறுகிறேன். சகலருக்கும் இந்த புத்தகத்தை தெரியப்படுத்த ஒரு எளிய அறிமுகம்.
நம் நாட்டில் கல்வி அறிவும், விழிப்புணர்வும் மிக குறைவு. குழந்தை பிறப்பிலிருந்து அதன் வளர்ப்பின் பல்வேறு சமயங்களிலும் தப்பெண்ணங்கள், மூட நம்பிக்கைகள், முன்முடிவுகள் நிறைய வெளிப்படுகின்றன.
இன்றைக்கு அலுவலகத்தில், குழந்தை பிறந்ததை சொல்லி இனிப்பு கொடுத்துக் கொண்டே 'இன்றைக்கு நல்ல நாளில் நல்ல நேரத்தில் பிறந்ததாய்' மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
"குழந்தை பிறந்த நேரம் சரியில்லை. அதனால் கடுமையான வறுமை" என இரண்டு நாள்களுக்கு முன்பு, சென்னையில் ஒரு தாய் தன் பிள்ளையை கொன்றுவிட்டார். மூடநம்பிக்கைகள் உயிர்களைப் பறிக்கின்றன.
குழந்தைக்காக பக்குவம் சொல்லும் பொழுது உண்மையை போல ஆயிரத்தெட்டு சொல்கிறார்கள். பாதிக்கும் மேல் உண்மைக்கு மாறாக இருக்கிறது.
'குழந்தையை வெந்நீரில் குளிப்பாட்ட வேண்டும்' என்கிறார்கள். 'பிறந்ததிலிருந்து இரண்டு மாதம் மட்டும் வெந்நீர். கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துவிட வேண்டும்' என்கிறார்.சேலையில் தொட்டில் கட்டுவது தவறு. காற்று வராமல் குழந்தை சிரமப்படும்' என்கிறார்.
'பாசத்தில் குழந்தைக்கு தொடர்ந்து ஊட்டி விடுவது தவறு. உங்களுடன் சரிசமமாக உணவு உண்ண பழக்குங்கள்' என்கிறார். "உங்கள் அன்பும், அரவணைப்பும் குழந்தைக்கு அதிகமாகத் தேவை. அன்புடன் கொஞ்சுங்கள். நாள் முழுவதும் கொஞ்சுங்கள்" என்கிறார்.
நுட்பமான விளக்கங்களுக்குள் செல்லாமல், விஞ்ஞான ரீதியில் எது செய்ய வேண்டும்? எது செய்யக்கூடாது என்பதை எளிய நடையில் எழுதியுள்ளார். படிக்க தெரிந்திருந்தால் போதும். பயன்படுத்திக் கொள்ளலாம்.
உணவு, உடை, நோய், மருத்துவம், குழந்தைகளின் மனநிலை என குழந்தை பிறந்ததிலிருந்து, ஆறு வயது வரை விவரித்து சொல்கிறார்.
அரசுப் புத்தகங்கள் மாதிரியான வடிவத்தில், எழுத்து கொஞ்சம் பெரிதாக படிக்க வசதியாக இருக்கிறது. 1975-ம் ஆண்டு சிறந்த நூலாக தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு அளிக்கப்பட்டு இருக்கிறது.
ஆசிரியர் டாக்டர் திருஞானத்துக்கு குழந்தை வைத்தியத்தில் 42 ஆண்டுகள் அனுபவம். மருத்துவம் தொடர்பாக பல நாடுகள் பயணித்திருக்கிறார். 1976-77-ம் ஆண்டில், இந்திய மருத்துவக் கழகத்தின் (Inidan Medical Association) தமிழ்நாடு பிரிவின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
என் மகள் இலக்கியாவை பார்க்க வந்தவர்களில் 50 பேருக்கும் மேல் வண்ண வண்ணமாய் ஆடை எடுத்து வந்தார்கள் . புத்தகம் கொடுத்தவர் ஒருவர் மட்டுமே. புத்தகங்கள் கொடுத்துப் பழகுங்கள். ஆரோக்கியமான பலனைத் தரும். அதற்கு இந்த பதிவே ஆதாரம்.
விலை : ரூ. 150/- 409 பக்கங்கள்
வெளியீட்டவர்கள் -
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 600 098.
பேச : 26258410, 26251968
6 comments:
நல்ல பதிவு.. அழகான விமர்சனம் :))
மற்றும் இது என் முதல் வரவு..
பின்னூட்ட பெட்டி தனி பாப் அப் விண்டோவில் திறக்கிறது. அதிலேயே திறக்குமாறு வழி செய்யவும்.
பின்னூட்டத்தை பற்றி கவலைப்படாமல் பதிவுகளை எழுதவும். சிறந்த படைப்புகள் சற்று தாமதமாகத்தான் வரவேற்பு கிடைக்கும் :(
டெல்லியிலிருந்து
சென்ஷி
வாழ்த்துகளுக்கு நன்றி.
//பின்னூட்ட பெட்டி தனி பாப் அப் விண்டோவில் திறக்கிறது.//
சரி செய்துவிட்டேன். நன்றி சென்ஷி.
சரி செய்தமைக்கு நன்றி :))
//புத்தகம் கொடுத்தவர் ஒருவர் மட்டுமே. புத்தகங்கள் கொடுத்துப் பழகுங்கள். ஆரோக்கியமான பலனைத் தரும். // உண்மைதான் மகா. எனக்கும் அப்படி ஒரு புத்தகம் கிடைத்தது. 'My First Step in Arabia' என்று அது குழந்தை வளர்ப்பு பற்றியல்ல மாறாக குழந்தையின் ஒவ்வொரு செயலையும், முக்கிய விஷயங்களையும் குறித்து வைக்கும் 'டைரி' போன்றது ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது. அதனை என் அக்கா குழந்தைகள் பார்க்கும் போதெல்லாம் என் அம்மா என்னைப் பற்றி இப்படிலாம் குறிக்கவில்லையே என்று பொறாமைப்படும் அளவுக்கு காப்பாற்றி வருகிறேன்.
நல்ல எழுதியிருக்கீங்க. தொடர்ந்து நிறைய எழுதுங்க. வாழ்த்துகள்!
வாழ்த்துகளுக்கு நன்றி ஜெஸிலா. நான் சென்னையில் வாழும் ஒரு ஊடகக்காரி.
6 மாதமே ஆன என் மகள் இலக்கியா என் 24 மணி நேரத்தையும் உரிமையாய் எடுத்துக்கொள்கிறாள். பணிக்கு திரும்ப இன்னும் மூன்று மாதம் காலங்களாகும்
எழுதுவது என்பது சமீப காலங்களில் தான். தொடர்ச்சியாய் எழுத முயற்சிக்கிறேன்.
Hai madam,i buy the book last monday.Thank you for your information bye...by Thiru.
Post a Comment